சினிமாவும் மழையும்!




தமிழ்ச்சினிமாவில் எவ்வளவு மழைகளைப் பார்த்திருக்கிறோம். எத்தனை இயக்குனர்கள் மழை பெய்யச் செய்திருக்கிறார்கள். எத்தனை நாயகர்களும், நாயகிகளும் மழையில் நனைந்திருக்கிறார்கள். எந்த மழை பார்வையாளனை நனைத்தது என்று ஒன்றிலிருந்து ஒன்றாய் யோசிக்க நேரிடுகிறது. ‘மாற்றுவெளி ஆய்விதழலில்’ ப்ரீதம்.கே.சக்கிரவர்த்தி எழுதிய கட்டுரையின் இந்தப் பகுதியை தீக்கதிர் பத்திரிகையில் படித்துதும் சட்டென  சிரிப்பு வந்தாலும், நம் சினிமா குறித்த பார்வையை மேலும் கூர் படுத்துகிறது.  இதனை ஒரு முன்னுரையாக வைத்து,  சினிமா குறித்த ஞானமும், அக்கறையுமுள்ள  பதிவர்கள் மேலும் விளக்கமாக எழுதலாமே!
*

தண்ணீருக்கும், மழைக்கும் திரையியலைப் பொருத்த வரை உலக அளவில் சில அர்த்தங்கள் உண்டு. சுத்தி கரிப்பு, மறுபிறப்பு, பெண்மை ஆகியவற்றுக்கு இவ்விரண்டையும் கற்பனையுடன் பயன்படுத்திய திரைப்படங்களில் சட்டென நினைவுக்கு வருபவை: சிங்கிங் இன் த ரெயின் (1952), காட் ஒன் தெ ஹாட்டின் ரூஃப் (1958), ஸ்ட்ரே டாக் (1949), 7 சமுராய் (1954), பதேர் பான்சாலி (1955), மதர் இந்தியா (1957), ஷஷான்க் ரிடெம்ஷன் (1994), ரோட் டு பார்டிஷன் (2002) எனக்கு மிகவும் பிடித்தது ராஷோமான் (1950) - பளீர் என்ற வெளிச்சமும், இடைவிடாத மழையும் மாறி மாறி விளையாடி, உண்மை, பெண் உடல், காதல், வன்புணர்ச்சி, இச்சை, நம்பிக்கை என்று பல விஷயங்களை ஆராயும் திரைப்படம்.

காதலை வெளிப்படுத்த, வெளியிட முடியாத உண்மையைக் கூற, கிராமத்தைச் சூறையாட, கோடையின் வெக்கையை வெளிப்படுத்த, அடிபட்ட குடும்பத்தை மேலும் காயப்படுத்த, பழிவாங்க, விடுதலையைத் தேட என அடுக்கி கொண்டே போகலாம். காதல் என்று சொல்லும் பொழுது எல்லையில்லா மகிழ்ச்சியை மட்டும் நான் இங்கு குறிப்பிடவில்லை. காஸபிளான்காவில் (1942) ஆழமான உறவின் முடிவையும் சேஸிங் ஏமியில் (1997) இயலா காதலை வெளிப்படுத்தவும் கூட இயன்றுள்ளது.

ஏனோ இந்திய சினிமாவிற்கு மட்டும் கற்பனை பற்றாக்குறை வந்து விடுகிறது இந்த விஷயத்தில். இராமநாராயணன் தனது நாயகியுடன், நளினியுடன் தொடங்கி வைத்த பாணியில் இன்றும் கதாநாயகியை, வெள்ளை புடவை, ரவிக்கையில், உள்ளே கறுப்பு பிரா பட்டை பளிச்சென்று தெரிய, மழையிலோ, நீர்வீழ்ச்சியிலோ ஆடவைக்க மட்டுமே விருப்பம் காட்டுகிறது இத்துறை. இந்தக் கண்டுபிடிப்பை ஒரேயடியாக இராம நாராயணனுக்கு மட்டுமே ஒப்புவிப்பது தவறு; அவர் இந்த முறையை அதிகமாகப் பயன்படுத்தியவர், அவ்வளவே.

ஆராதனா (1969) காலகட்டத்தில் மழைக்கு இன்னமும் ஒரு நூதன பயன் ஆரம்பித்தது. இதற்கு நான்கு வருடங்கள் முன்பு திரைக்கு வந்து உலக அளவில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடல் ஐ எம் 16 கோயிங் ஆன் 17. அதன் பல இந்திய பதிவுகளின் முதல் பதிவுதான் ரூப்பு தெரா மஸ்தானா என்ற மெட்டு. ஏதோ ஒரு காரணத்திற்காகக் காட்டிற்கு போகும் இளம் காதலர்கள் மழையில் மாட்டி கொள்கிறார்கள். வேறு வழியில்லாமல் காட்டு பங்களாவில் அன்று இரவைக் கழிக்கிறார்கள். தெப்பமாக நனைந்து இருக்கும் நாயகி, குளிரினால் நடுங்குகிறாள். (மாறுதலுக்கு, நாயகன் என்றும் வைத்துக் கொள்ளலாம், தவறில்லை) வேறு வழி தெரியாத காதலன், இருவரின் ஆடைகளையும் களைந்துவிட்டு, அவளை அணைத்து கொள்கிறான். அடுத்த காட்சியில், நாயகி வாந்தி எடுப்பாள். கர்ப்பம்!

உங்களுக்கு ஒரு போட்டி. இதே காட்சியை பார்த்த ஐந்து திரைப்படங்களின் பெயர்களைச் சொல்லுங்கள். அவை எந்த இந்திய மொழி படமாக இருந்தாலும் பரவாயில்லை.

பூவா தலையாவில் (1969) தொடங்கி, புன்னகை மன்னன் (1986) வரையில் கே. பாலச்சந்தர் புதிய உறவில் இருக்கும் நாயகியைக் காட்டவே அருவியையோ, மழையையோ பயன்படுத்தி உள்ளார். உதாரணம்: வான் மேகம். மணிரத்தினத்திற்கோ, இவை இரண்டும் தனது கன்னி கழியாத நாயகியை அறிமுகப்படுத்தவே தேவைப்பட்டது. இதயத்தை திருடாதேவில் (1989) வரும் ஆத்தாடி அம்மாடி. அஞ்சலி (1990) தொடக்க காட்சி மட்டுமே இதற்கு விதிவிலக்கு. உதாரணம்: அதில் மழை இனி வரபோகும் ரகசிய வாழ்விற்கு ஒரு அறிகுறியாகும்.

மழையையும் நீரையும் ஒரு கதாபாத்திரமாகவே பயன்படுத்திய படமாக எனக்கு நினைவிற்கு வரும் ஒரே திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் (1975) புயல் அடிக்கும் ஒரு மாலை வேளை, பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டு இருக்கும் கங்கா என்ற ஒரு இளம் கல்லூரி மாணவியை தனது காரில் ஏற்றிக் கொள்கிறான் ஒரு இளைஞன். காருக்குள் இருவருக்கும் உடலுறவு ஏற்படுகிறது. முதலில் இணங்கும் கங்கா, பிறகு தான் கற்பழிக்கப்பட்டதாக அதை புரிந்து கொள்கிறாள். நேரம் கடந்து வீட்டிற்கு வரும் கங்கா நடந்ததை தனது விதவை அம்மாவிடம் கூறுகிறாள். அதிர்ந்து போகும் தாய் அவளைத் தரதரவென்று இழுத்துச் சென்று கிணற்றடியில் அமரச் செய்து, குடம்குடமாகத் தண்ணீரை அவள் தலையில் கொட்டி, ‘‘நீ சுத்தமாயிட்டேடீ, சுத்தமாயிட்டே’’ என்று கதறுகிறாள். திரைப்படம் தொடங்கி பத்து நிமிடத்திற்குள் நீருக்கு இரண்டு பயன்பாடுகள். ஒன்று கங்காவை அசுத்தப்படுத்த மற்றொன்று, அவளை சுத்தப்படுத்த. ஜெயகாந்தனின் படைப்பில், பீம்சிங்கின் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் முப்பத்தைந்து வருடங்கள் கடந்தும் அழியாமல் இருப்பதற்கு இந்தக் கற்பனாசக்தியே காரணம்.

பெண் உடலுடன் சம்பந்தப்படாத வேறு எந்தப் பயன்பாடும் இந்திய திரைப்படத்தைப் பொறுத்தரையில் சண்டை காட்சிகள் மட்டும் தான். இது ரத்த வெறியை கோடிட்டுக்காட்ட உதவியுள்ளதே தவிர வேறு எதற்கும் பயன்படவில்லை.

மழைநீரை சேமியுங்கள் என்று ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு, இப்படி நீரை வீண் அடிக்கலாமா?

வாருங்கள் நாம் அனைவருமாகச் சேர்ந்து யோசித்து, திரைப்படத்துறைக்கு மழையின் மாற்று பயன்பாடுகளுக்கு யுக்திகள் சொல்வோம். காரணம் 99 விழுக்காடு இந்தியத் திரைப்படங்கள் ஆண்மையப்பட்டவைதான்.

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அன்பு மாதவராஜ்,

    மழையும் சினிமாவும்... மணிரத்னத்தின் பாம்பே படத்தில்... பருவமழை ஒரு கதாபாத்திரமாய் காட்டப்பட்டிருக்கும்... நீல பில்டர் உபயோகித்த கடற்கரை கிராமத்தின் காட்சிகள்... அழுத்தமான சூழ்நிலையில் நடைபெறும் கதைக்கு... மழையும், கடலும், காற்றும் ஒரு கதாபாத்திரமாய் படமெங்கும்... முன்பாதி ஒரு வர்ணத்திலும், பின்பாதி ஒரு வர்ணத்திலும்... மழை இரண்டு மாதிரி இருக்கும் பாம்பேயில்...

    “One day it started raining, and it didn’t quit for four months. We been through every kind of rain there is. Little bitty stingin’ rain … and big ol’ fat rain. Rain that flew in sideways. And sometimes rain even seemed to come straight up from underneath. And then one day it just stopped.”

    பாரஸ்ட் கம்ப்பில் வரும் இந்த அற்புதமான வசனம், மழை பற்றிய பாரஸ்ட் கம்ப்பின் பார்வை...ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கும்.

    சிங்கிங்க் இன் த ரெய்ன் படத்தில் டான் லாக்வுட்டின் நடனம்...மறக்க முடியுமா உங்களால்... என் மனைவிக்கு பிடித்த பாடல், நடனம் இது.

    இன்னும் கோஸ்ட் கார்ட், த கார்டியன், ஸ்பிரிங்க்-சம்மர், பால், விண்டர் அண்ட் ஸ்பிரிங்கில் பெய்யும் மழை... இன்னும் நிறைய இருக்கிறது... மாதவராஜ்.

    த டியர் ஹண்டர், சேவிங் பிரைவேட் ரயன் என்று தொடரும் பெரிய பட்டியல் உண்டு...

    அலைபாயுதேவில் கூட மழை அழகாய் இருக்கும்... மணிரத்னம்... ஜானியில் மஹேந்திரனின் மழை...

    பாலுமஹேந்திராவின்... மூன்றாம்பிறை மழை... மறுபக்கத்தில் பெய்யும் மழை... ஸ்வாதி திருநாள் மழை... ஆவாரம்பூவில் மழை... அழகியில் மழை... மழை எங்கும் நிறைந்து யாவுமாய் நிற்கும் காளி...

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  2. மழையை வைத்து எடுக்கப்படும் காட்சிகள் எப்படியோ ஆனால் மழையை வைத்து எடுக்கப்படும் பாடல்கள் பெரும்பாலும் ஹிட் பாடல்களாகவே இருந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!