மாதவராஜ் பக்கங்கள் - 30



சொந்த வேலைகள், தொழிற்சங்கப் பணிகள், பயணம் என நாட்கள் கடந்த வண்ணமிருக்கின்றன. முன்னைப் போல வலைப்பக்கத்தில் அவ்வளவாக லாந்த முடியவில்லை.  பத்திரிகைகளும், சில புத்தகங்களும் படித்தேன்.  எழுதுவதற்கு நிறைய இருந்தாலும், அதற்கென்று நேரம் வாய்க்க வேண்டும்.   கூகிள் ரீடர் நிரம்பி வழிகிறது.  படிக்க வேண்டும்.  அதில் அற்புதங்களும், பொக்கிஷங்களும் இருக்கக் கூடும்.

ண்பர் மணிமாறன்  ‘தீராத பக்கங்களில்’எழுதிவரும்  ‘பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகளை’  மிகக்குறைந்த சிலரே படிக்கிறார்கள். மிக மிகக்குறைவாகவே கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஜ்யோவ்ராம் சுந்தரின் கூகிள் பஸ்ஸைப் படித்து, சூடாகி எழுதிய ‘சாரு நிவேதிதா’ குறித்த பதிவுக்கு ஹிட்ஸ்களும், பின்னூட்டங்களும் குவிகின்றன. இந்த கொடுமையை என்னவென்பது. அதுகுறித்து  தொடர்ந்து  எழுத வேண்டும் என வந்த துடிப்பையெல்லாம் அடக்கிக் கொண்டேன்.

குறிப்பிட்ட சில எழுத்தாளர்களைத்  தவிர்த்து தமிழ் இலக்கியமென பேசவும், எழுதவும் யாருமில்லையென்பது போல, அவர்களைப் பற்றிய செய்திகளும், விவாதங்களுமே நிரம்பி வழிகின்றன இணையத்தில்.  இதேக் காலக்கட்டத்தில் எந்த முஸ்தீபுகளும் இல்லாமல் பலர் எழுதிக்கொண்டு இருக்கின்றனர்.  அந்தரத்துக்  கனிகளைப் பறிக்காமல்,  சமகாலத்தின் பிரச்சினைகளை நம் வேர்களிலிருந்து  சொல்லிக்கொண்டு வருகின்றனர்.  காதலைப் பற்றி ஒரு கதையும் எழுதாமல் இங்கு, காமுத்துரை என்பவர் மூன்று சிறுகதைத் தொகுப்புகள் கொண்டு வந்திருக்கிறார். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இதனை விமர்சனமாகவும், ஆச்சரியமாகவும் சொல்கிறார். எத்தனை பேர் அவரைப் படித்திருப்பார்கள், அவரைப் பற்றி பேசியிருப்பார்கள்!  கீரனூர் ஜாகீர் ராஜாவின் சமீபத்திய நாவல்கள் குறித்து யார் இங்கு  பேசுகிறார்கள்.  பல்ப் ஃபிக்‌ஷன் தொட்டு உலக இலக்கியம்  பேசவும், குழந்தைகளுக்கான இலக்கியம் படைக்கவும் செய்கிற இரா.நடராஜனை யார்    எழுதுகிறார்கள், விமர்சிக்கிறார்கள்?  பலரும்  இயங்குகிற வெளியில் ஒரு சிலரே பீடங்களில் வீற்றிருப்பதாய்ப் படுகிறது.  இந்த எளிய எழுத்தாளர்களுக்கு  கொள்கை பரப்புச் செயலாளர்களோ,  பி.ஆர்.ஓக்களோ, பெரும் ரசிகக்கண்மனிகளோ  கிடையாது. அவர்களை   அடையாளம் காணவோ,  அந்த எழுத்துக்களை அறியவோ,  நம் இலக்கிய நுண்ணறிவாளர்கள் பலருக்கு விருப்பமோ, சிரத்தையோ, ஆர்வமோ  இல்லை போலும்.  தாங்கள் படித்ததில், தாங்கள் ரசித்ததில் இருந்தே மகோன்னதம் காண்கிறார்கள். ஆனால் உலகம் பரந்துபட்டதாகவே எப்போதும் இருக்கிறது.

கொஞ்ச காலத்துக்குப் பிறகு கோர்ட்டுக்கு  சங்க வேலையாய்ச் செல்ல வேண்டியிருந்தது. வக்கீல் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதுதான் கவனித்தேன். வளாகத்துக்குள் நிறைய பெண்கள் இருந்தார்கள்.   விசாரித்தபோது அந்த வக்கீல் சொன்னார், ‘எல்லாம் விவாகரத்து வழக்குகள்’ என்று.  என் ஆச்சரியத்தை உணர்ந்தவர் மேலும் , “இப்போல்லாம் வக்கீல்களுக்கு ஆக்ஸிடெண்ட், இப்படியான மெய்ண்ட்டனன்ஸ் கேஸ்லதான் வருமானம்” என்றார் . “ஜனவரி பிறந்து எத்தனை நாளாகியிருக்கும். அதுக்குள்ள எனக்கே ரெண்டு கேஸ் வந்துருக்கு” என அவருடைய மொழியில்  சொல்லிக்கொண்டே இருந்தார்.  நான் அந்தப் பெண்களைப் பார்த்தேன். யாரும் தலை குனிந்திருக்கவில்லை.  

சாத்தூரிலும் காலை நேரம் மெயின் ரோடு  கடும் நெரிசலோடும், சந்தடிகளோடும் ஆகிவிட்டது. குழந்தைகளை அள்ளிக்கொண்டு, ஹாரன் சத்தங்களோடு வாகனங்கள் பறக்கத்தான் செய்கின்றன. சில நாட்களுக்கு முன்பு அப்படியொரு வேளையில், மனைவியையும், பையனையும் பைக்கில் அழைத்துச் சென்று கொண்டு இருந்தபோது, எங்களையொட்டி ஒரு நாயும் கடும் வேகத்தோடு ஓடிக்கொண்டு  இருந்தது.  “இதென்ன ஸ்கூலுக்காப் போகுது? என்னமோ பஸ்ஸையோ, ரெயிலையோப் பிடிக்கிற மாதிரி இப்படிக் கிடந்து ஓடி வருது” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். பின்னால் உட்கார்ந்திருந்த மனைவி, “அந்த நாய்க்கு என்ன அவசரமோ? இப்படி விழுந்தடிச்சு ஒடிக்கிட்டு இருக்குற நம்மைப் பார்த்தால் அதுக்கு எப்படி இருக்குமோ, யார் கண்டார்கள்?” என்றாள். நான் வாய் திறக்கவில்லை. எப்போதோ பார்த்த “ஜூ” என்னும் குறும்படம்  நினைவுத் திரையில் ஓட ஆரம்பித்தது.

கருத்துகள்

11 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நல்ல எழுத்தாளர்கள் பலர் வெளிச்சமின்றியே எழுதிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர நம்மைச் சுற்றியிருக்கும் இருட்டு அகற்றப் பட வேண்டும். படும்.

    பதிலளிநீக்கு
  2. மாதவராஜ் .. தங்களது மகேந்திரன் அவர்கள் பற்றிய ஆவணப்படத்திற்காய் காத்திருக்கிறேன்.

    அதன் வேலைகள் எந்த அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்றறிய ஆவல். எப்போது வெளியிடப்படும் என்று தெரிந்து கொள்ளவும் ஆசை.

    தெரியப்படுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  3. அண்ணா...
    உங்கள் கூற்று உண்மைதான்...நல்ல எழுத்தாளர்கள் பலர் வெளிச்சமின்றியே எழுதிக்கொண்டிருக்கின்றனர், அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர பிரபலம் என்ற இருட்டு விலக வேண்டும். அந்தப் பணியை பதிவர்க்ள செய்யலாம்.
    விவாகரத்துக்கள் பெருகிவருவது கலாச்சாரத்தின் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. மாதவ் ஜீ,
    இந்த வருத்தம் எனக்குமுண்டு. சினிமா மற்றும் சண்டைதான் தமிழர்களின்
    நீண்ட கால ஃபேவரைட் :(

    //லாந்த முடியவில்லை//
    உலாத்துவதை 'லாத்துறது' என்போம் நாங்கள். அதைத்தான் குறிப்பிடுகிறீர்க ளோ.

    நாயின் ஓட்டம் நல்ல நகைப்பைக் கொடுத்தது.
    தேர்தல் காலமல்லவா, பிரியாணியின் மோப்பம் பிடித்திருக்கும் :)

    பதிலளிநீக்கு
  5. // நான் அந்தப் பெண்களைப் பார்த்தேன். யாரும் தலை குனிந்திருக்கவில்லை.// -மனிதன் நிமிர்ந்து நடக்கத் தொடங்கியபின் ஏற்பட்ட மாற்றம் என் நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  6. Hi Madhav,

    Mr. Jayaganthan has told that we are living in Golden era (TN under MR. Karunanithi CM of TN Rule)

    Your Comment please

    பதிலளிநீக்கு
  7. அண்மையில் நடந்த தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழாவில், திரு ஜெயகாந்தன் அவர்கள் "திமுக ஆட்சி தமிழர்களுக்கு ஒரு பொற்காலம்" என்று கூறினார். இதை பற்றிய உங்களது கருத்தை பதியவும்........

    பதிலளிநீக்கு
  8. மாதவராஜ் கூறியபடி சென்னை உயர் நீதிமன்ற குடும்ப கோர்ட்டில் சுடிதார் போட்ட அழகான சின்ன வயசு பெண்கள் ஒருபுறமும்,மறுபுறம் சின்ன வயது இளைஞர்கள் விவாகரத்து வழக்கிற்காக காத்திருப்பது கண்டு மனது கஷ்டமாக் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  9. மாதவராஜ் கூறியபடி சென்னை உயர் நீதிமன்ற குடும்ப கோர்ட்டில் சுடிதார் போட்ட அழகான சின்ன வயசு பெண்கள் ஒருபுறமும்,மறுபுறம் சின்ன வயது இளைஞர்கள் விவாகரத்து வழக்கிற்காக காத்திருப்பது கண்டு மனது கஷ்டமாக் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  10. My Dear Mathavaraj,

    This is Balu, your college-mate. I am so excited and thrilled to discover you (after 30 years!!)through your website. I must thank Youtube for this sheer coincidence. Yesterday, I was downloading some of my favourite songs. As I was searching for 'Katrin Mozhiye from Mozhi' I noticed the author was Mathavaraj. I became curious ... my God. I could not resist myself to follow the link to Mathavaraj Pakkangal. There you are. I have spent more than three hours in viewing your profile, album, various articles, comments.. I am so moved to note your revolutionary journalism, your contribution to Tamil and tamil society, your associates and friends. My hearty congratulations to you and your team! I wish to write more and more. May be, more regularly through this medium.

    Vazhga Valamudan,

    Anbudan - Balu

    பதிலளிநீக்கு
  11. பாலு!
    ஆதித்தனார் கல்லூரியில் என்னோடு பி,பி.ஏ படித்த அந்த பாலுவா! உன் இ-மெயில் முகவரி தா!

    என்னுடையது
    jothi.mraj@gmail.com

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!