பத்தாண்டு கால நாவல்கள் குறித்த வாசகக் குறிப்புகள் – 14

 

kanni_cover

ழுத்தில் இறுதி செய்யப்பட்டிருக்கிற இலக்கியப் பிரதிக்குள் இயக்கம் பெற்றிருக்கும் உணர்வுகளின் தன்மைகளை தன் உள்உணர்வோடு பரவ விடுகிற வாசகன் அவற்றின் மூலமாக புத்தகத்துடன் நெருங்கிச்செல்வதோ அல்லது விலகிச் செல்வதோ நிகழ்கிறது. கவிதைகள், காவியங்கள், கதைகள் என யாவற்றின் பாடுபொருளாக காதல் காலாதிகாலத்திற்குமாக நீடித்து நிலைபெற்றிருக்கிறது. காதலை விலக்கி வைத்து விட்டால் உலகின் இலக்கியப் பிரதிகளின் எண்ணிக் கையை கைவிரல்களுக்குள் அடக்கி விடலாம் போல. அதனால் தான் காதல் எனும் உணர்விற்கு வாசக மனம் அடைகிற மனவெழுச்சி கொஞ்சம் மிகைபட்டுத் தெரிகிறது. காதலும், காமமும் சந்தித்துக் கொள்ளும் நுட்பமான மன எல்லைகளை எழுதிப் பார்ப்பது எழுத்தாளர்களுக்கு ஆகப் பெரிய சவாலாகும். இந்த சவாலை பிரான்ஸிஸ் கிருபா தன்னுடைய “கன்னி” எனும் பெரும் படைப்பின் வழியாக எதிர் கொள்கிறார்.

நாவல் கடற்புரத்தில் காலூன்றியிருக்கிற கிறிஸ்தவப் பின்புலத்தில் இயங்குகிறது. ஞானஸ்நானம், புது நன்மை, உறுதி பூணுதல், பச்சாதாபம், திருமணம் அல்லது குருத்துவம் என இவற்றில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்தல் என்கிற கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் இயங்குகிற பாண்டியன் காதலின் ஆழத்தையும், அதன் மூலமாக கிறிஸ்தவத்தின் சில அடிப்படைகளின் மீதான எளிய கேள்விகளையும் முன் வைக்கிறான். “காதல் என்பது இறையனுபவம், காதலுக்கு காலம் கிடையாது. எந்தச் சொற்களிலும் உணர்த்திட முடியாதது அது. காதல் மட்டுமே காதலை அறியும்” என்கிற தேவதேவனின் கவிதைகளின் வழியாக நாவல் கடல்கோளில் திறவு பெறுகிறது. கடல்கோளில் துவங்கி சுனை, அருவி, காட்டாறு, கார்முகிலென கிளம்பி மழையாகப் பொழிகிறது நானூறுக்கும் அதிகமான பக்கங்களில்.

நாவலுக்குள் விரவிக் கிடக்கும் அசாத்தியமான மன உணர்வுகளை வாசகன் வாசித்து மட்டுமே உணர முடியும். பிரான்சிஸ் கிருபா மட்டுமல்ல. எழுபதுகளில் இருந்து தன்னுடைய வாழ் வனுபவங்களையே படைப்பாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எழுத்தாளர்கள். கிட்டத்தட்ட தமிழ்மொழியின் மகத்தான நாவல்கள் எல்லாம் “ Auto fictional writing” - ஆகத்தான் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தன்னுடைய அசலான வாழ்வை பக்கத்திற்குப் பக்கம் அப்படி அப்படியே எழுதிப் பார்ப்பதையே நாம் தன் வரலாற்று நாவல்கள் என்று மதிப்பிடுகிறோம். அப்படியான தன் வரலாற்றுப் பிரதிக்குள் படைப்பாளி எழுதி இயக்கிய புனைவெனும் மாயமும் கலந்து நாவலை Auto fiction எனும் நிலைக்கு உருமாற்றம் பெறச்செய்கிறது.

கன்னியின் உள்ளுறைந்து கிடக்கும் கதையென ஒன்றை மட்டும் சொல்லி விட முடியாது என்று நினைக்கிறேன். பாண்டி எனும் கவிஞனின் அகமனச் சிக்கலை அது குறித்த தேடலை நாவலுக்குள் கதையாக்கிப் பார்த்திருக்கிறார் என்று சொல்லிப் பார்க்கலாமா? அல்லது கிறிஸ்தவ தொன்ம நம்பிக்கைக்கு கட்டுப்பட்டு கன்னியாஸ்திரியான அமலாவின் கதையை பாண்டி எழுதிப்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வதா? வாழ்வில் எந்த நிமிடத்திலும் காதலில் விழுந்து விடக்கூடாது என வைராக்கியம் கொண்டிருந்த பிரான்சிஸ் சந்தான பாண்டியன், சாரோன் எனும் காதல் கவிஞனாகி சாராவை தன் பிரியத்திற்குரியவளாக வருவித்துக் கொண்ட நாட்களிலும், அவளும் கூட கன்னியாஸ்திரியாகப் படித்துக் கொண்டிருப்பவள் தான் என அறிந்து மனப்பிறழ்வுக்கு ஆளாகிப் போவதால், இது கிறிஸ்தவத்தில் இருக்கிற துறவு குறித்த விசயங்களை அதன் அடி அழம் வரை ஊடுருவிச் சென்று பார்க்கும் பிரதி எனக் கொள்வதா? என்று நான் யோசிக்கிறேன். இவையெல்லாம் இந்த நாவலுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த போதும் கூட இது போல் எந்த ஒற்றை மதிப்பீட்டிற்குள்ளும் அடக்கிட முடியாத தனித்துவமான படைப்பே “கன்னி”. 

நாவலெங்கும் பாண்டி அலைந்து திரிந்த கடல் அலைகளும், அவற்றில் துள்ளிக் குதித்த மீன்களும் அதிலும் குறிப்பாக கன்னியாகுமரியில் கோயில் கொண்டிருக்கும் கன்னியின் கோவிலுக்கு கொடையென கடல் நீரில் படைத்த செந்நிற வளையல்களுக்குள் தாவிக் குதிக்கும் மீனின் நிறமும் கூட செந்நிறமாகிடுமா எனத் தவிப்பதுமாக பாண்டியின் பித்த நிலையே வாசகனுக்குள் நகர்கிறது. பித்த நிலை குறித்த எழுத்துக்களை அதனைக் கவனித்து ஒருவர் படைப்பாக்கியிருப்பார். அது வாசகனிடம் இரக்கத்தை பெறுவதாக மட்டுமே தவிர்க்க இயலாமல் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் ஆனால் கன்னியின் “கடல்கோள்” எனும் பகுதிக்குள் மனப்பிறழ்விற்குள்ளான பாண்டியின் உள்மன உரையாடலாகவே பதிவுறுத்தப்பட்டிருக்கும் பகுதிகள் வாசகனை மட்டுமல்ல எழுத்தாளனையும் கூட நிலை குலையச் செய்யும் பகுதியாகும்.

பாண்டி தன் அடியாழ மனதிற்குள் கடவுள் என நம்பப்படுகிறவள் குறித்த வியப்பையும், பரிகாசத்தையுமே கண்டடைகிறான். வாசகனுக்குள்ளும் அதே உணர்வு வாசித்துக் கடக்கும்போது ஏற்படத்தான் செய்கிறது.

நாவலுக்குள் புனையப்பட்டுள்ள வசீகரமான புனைவு கடல் கடவுளாகிய தாடிக்காரனிடம் வைக்கும் கோரிக்கைதான். நீராலான கடல் கண்ணாடி உடலுடைய கன்னியாகிறாள். “சுவாமி நீங்கள் தானே தண்ணீரை ரசமாக்கினீர்கள். கடைசிப் பந்தியில் அந்த திராட்சை ரசம் புகழப்பட்டதைக் கேட்டபோது எனக்கு எச்சில் ஊறுகிறது. என் மீது மனமிரங்கி குனிந்து என் உதடுகளை முத்தமிட்டு இரண்டே இரண்டு அலைகளை மட்டும் இனிப்புச் சுவையுடையதான திராட்சை ரஸத்தால் நிரப்பும் என்கிறாள். ‘‘முத்தமிட்டு அலைகளை இன்பமூட்டியவள் கையோடு கடலையே சுருட்டி எடுத்துக் கொண்டு போய் விட்டாளே என்று சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பாண்டி தனக்குள் தடுமாறுகிறான் கடலும், காதலும் அவனுக்குள் ஏற்படுத்திய பித்த நிலையை நாவலெங்கும் உணர்ந்து கொண்டிடவே இவ்வலுவான காட்சி வாசகனுக்குள் கடத்தப்படுகிறது.

தன் வீட்டுப் பிள்ளையை இக்கதிக்கு ஆளாக்கிய சத்ராதிகளைக் கட்டிப் போட வேதக் கோயில் சாமியாரை அழைக்கிறார்கள். அவர் எல்லா பில்லி, சூனியங்களையும் என அடுக்கும் போது தெய்வங்களையும் (பிற மதத்தார்) முப்பத்து முக்கோடி தேவர்களையும் கட்டிப் போட வல்லது அந்தோணி யாருடைய கட்டு என்கிறார். இதற்குள் மாற்று மதக் கடவுளர்களையும் அவர்களது நம்பிக்கைகளையும் சாத்தான்களோடு மட்டுமே வைத்துப் பார்க்கும் அடிப்படைக் கிறிஸ்தவத்தின் அடையாளம் தென்படுகிறது. பாட்டியோ வேப்பிலைச் சாறால் வைத்தியம் செய்து பார்க்கிறாள். பித்தத்தை தெளியச் செய்திட இஸ்லாமியரான மவுலி யாரைத் தேடிப் போகிறார் தந்தை . ஆனால் பாண்டியோ எல்லாவற்றையும் கவனிக்காது கடலை வெறித்துத் தேடிக் கொண்டிருக்கிறான். பிரியத்திற்குரிய அவனுடைய நாயான ஜிம்மிக்கு முட்டை ஊட்டிக் கொண்டிருக்கிறான். மவுலியார்தான் சொல்கிறார் பெண் தொடர்பு வகையில் பெரிய சிக்கல் உண்டாகி யிருக்கும் என்று. பாண்டியின் வாழ்க்கைக்குள் வருகிற அசாத்தியமான பெண்கள் அமலாவும், சாராவும். அமலா பாண்டியின் பால்யகாலத் தோழி. அவனுக்கு அக்காவும் கூட. சாரா வாலிபத்தில் பாண்டிக்குள் வசீகரமாக நுழைந்தவள். இருவருமே கன்னியாஸ்திரிகளாகப் படித்துக் கொண்டிருப்பார்கள் என்பதே பாண்டிக்கு ஏற்பட்ட மன நெருக்கடிக்கான மையப்புள்ளி.

பாண்டியன் உயிர்த்தோழியாக சுனையாகவும், அருவியாகவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அமலாவின் தன்மை இதுவரை தமிழ்ப்புனைவுலகம் கண்டிராத அசாத்தியமானது. தன் பாட்டி கண்ட கனவில் தாடிக்கார கோனாரின் கையில் இருந்த நான்காவது ஆடுதான் அமலா என்பதால் அவளை தேவனுக்கு ஒப்புவிக்கிறார்கள். இதனை அமலா விரும்பி ஏற்றுக் கொண்டாளா, இல்லையா என்பதெல்லாம் கலங்கலாகத்தான் நாவலுக்குள் பதிவாகியிருக்கிறது. அமலா அக்காவை விடாது பின் தொடர்பவன் பாண்டி. அமலாவிற்கு புதுநன்மை எடுத்த நாளில் போட்டோ எடுத்தார்கள் என்பதற்காக நெல்லை வரை போய் போட்டோ எடுத்துத் திரும்புகிறாள். அமலா தனக்கு புது நன்மை எடுத்த நாளில் தரப்பட்ட தேவ அப்பம் கிடைக்கவில்லையே என பாண்டி ஏங்கிப் போவானே என திருடி வந்து தருகிறாள். நாவில் பட்ட கிறிஸ்துவின் திருடிய சரீரத்திற்கு ஏன் ருசியில்லை என்று பாண்டி தனக்குள் கேட்டுக் கொள்கிறான். அன்பெனும் பெருவெள்ளம் அடைத்துக் கிடக்கும் எதனையும் உடைத்திடும் வல்லமை கொண்டது என்பதன் அடையாளம் நாவலின் இந்தப் புள்ளியில் தான் வெளிப்படத் துவங்குகிறது. அது தேவநிந்தனை, மதவிரோதம் என எதையும் பார்ப்பதில்லை. இந்த உணர்வினை பல இடங்களில் அமலா பாண்டியிடம் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள்.

பாண்டி கன்னியாஸ்திரியாகப் போகப் போகிற அமலாவிற்கு திருச்செந்தூரில் வைத்து மஞ்சள் சுடிதார் எடுத்துத் தருகிறான். பாண்டியை கவிதைக்குள், இலக்கியத்திற்குள் இயக்கிக் கொண்டிருக்கும் அமலா அவனுக்கு தங்கச் சங்கிலியை அவன் எழுதிய இசைப்பாடலுக்காகத் தருகிறாள். அவன் மறுத்திடவே அப்போது அவள் சிலுவை கோர்த்திருந்த சிறு வளையத்தை பல்லால் கடித்துப் பிரித்து செயினை மட்டும் வைத்துக் கொண்டு சிலுவையை அவனிடம் தந்து விடுகிறாள் “வேறு ஒன்றுமில்லடா இது உறுத்திக்கிட்டே இருந்திச்சு அதுதான் உங்கிட்ட கொடுக்கிறேன்” என்கிறாள். இதை வெறும் வார்த்தையாகப் பார்க்க வேண்டியதில்லை. அதற்குள் ஆயிரம் சொல்லாத அல்லது சொல்ல முடியாத வார்த்தைப்பாடுகள் ஒளிந்திருக்கும் என்று தான் படுகிறது.

அமலா பாண்டிக்கு எழுதியதாகச் சொல்லப்படுகிற கடிதங்களை வாசகன் அறிந்திடத் தரவில்லை கிருபா. “நேரடிச் சந்திப்பில் அவள் வாய் தான் பேசுகிறது. எழுத்தில் அவள் இதயம் ஒளித்தது” நேரில் ஒரு அக்காவாகவும், எழுத்தில் ஒரு அக்காவாகவும் இருக்கிறாள் என்கிறார். அப்படியானால் அமலாவின் கடிதங்களுக்குள் மெஸியாவின் உடலில் காயம் ஏற்படுத்திடப் போகும் காரியத்திற்கான துவக்கப் புள்ளிகள் தென்பட்டிருக்கும். அமலாதாசன் என தனக்கு புனைப்பெயர் வைத்துக் கொள்ள பாண்டியைத் தடுத்ததற்கான காரணத்தைக் கூட அவள் சொல்லியிருப்பாள். அமலா கடிதங்களில் கத்தோலிக்கக் கிறிஸ்தவத்தின் அடிப்படை பிடிவாதங்களைக் கூட விவாதித்திருக்கலாம். பொங்கிப் பெருகும் அன்பையும் அது தடைகளற்று பிரவகிப்பதையும் கூட வெளிப்படுத்தியிருப்பாள். அன்பின் பெருவழியில் ஏற்பட்ட பெருந்தடை அவள் குருத்துவத்தை ஏற்று கன்னியாஸ்திரியாகியதே. வாசகன் இவற்றை அவனுடைய மனத்திரைகளில் எழுதப் போவது நிச்சயம். இவை யாவும் வாசகனுக்கான இடைவெளிகள்.

நாவலின் பின் பகுதியில் தேரித்துறையின் திருவிழாக் காட்சிகளின் வழியாக சாரா பாண்டிக்குள் நுழைகிறாள். திருச்சபையில் அவளைப் பார்த்தபடியே நாவை நீட்டி அப்பத்தைத் தவற விடுகிற பாண்டி அதன் பின் சாரோன் என்றாகி அவளுக்காக கவிஞனாகித் தவிக்கிறான். தேர்த்திருவிழா நாளில் இருவருக்கும் இடையே இருந்த மனத்தடைகள் நொறுங்கிட ஒன்றாகிப் போகிறார்கள். கார்முகில் எனும் இவ்வத்தியாயம் எங்கும் கவித்துவ மழை பொங்கிப் பெருகுகிறது. மழையாக தனக்குள் இறங்கியவள் ஷெல்லியின் கவிதைத் தொகுப்பைத் தந்து “எபிசை கிடி யான்னு ஒரு கவிதை இருக்கு” அதைப் படிச்சு பாருங்க ஏன்னு புரியும். நேராச் சொல்லி உங்களைச் சங்கடப்படுத்த விரும்பல” என்கிறாள். அதன் பிறகான பாண்டியின் நிலையே நாம் நாவலுக்குள் முதல் பகுதியில் கண்டது. சாராவும் கன்னியாஸ்திரி படிப்பின் கடைசி மாதத்திற்காக தேரித்துறைக்கு வந்தவள் என்பதை அறியும் போது பாண்டியுடன் சேர்ந்து நாமும் தான் தடுமாறி விடுகிறோம். இந்தப் பகுதியெங்கும் சொல்லப்படுகிற டீச்சர் வீட்டுத் தாழ்வாரத்தில் முளைத்திருக்கும் காகிதப்பூ குறியீடாக இவற்றை நமக்கு முன் உணர்த்தி விடுகிறது.

அதனால் தான் கன்னியை படித்து முடித்த நாளில் பெரும் மன அவஸ்தைக்குள்ளாகி மிகப்பெரும் பாரத்தை நெஞ்சில் சுமந்தலைந்திட்ட துயரத்துக்குள்ளாகிறான் வாசகன். மனதிற்குள் இறங்கி நீண்ட நாட்கள் யாவருக்குள்ளும் நீடித்து நிலைபெற்றிருக்கும் கவித்துவப் பெரும் படைப்பே “கன்னி”.

ம.மணிமாறன்

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //மனதிற்குள் இறங்கி நீண்ட நாட்கள் யாவருக்குள்ளும் நீடித்து நிலைபெற்றிருக்கும் கவித்துவப் பெரும் படைப்பே “கன்னி”.//

    உங்கள் வாசகக் குறிப்பு புத்தகத்தின் மீதான ஆவலைத் தூண்டுகிறது.

    எனது சிறுகதையையும் நேரமிருப்பின் வந்து பார்த்து கருத்துச் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  2. அன்பு மாதவராஜ்,

    அருமையான பகிர்வு... கடற்புரத்தில் எத்தனை அருமையான புதினம் அது... பிலோமி சாமிதாஸின் காதலைச் சொல்லி ஆரம்பமாகும் இந்த கதையின் சம்பாஷனைகள் கதாபாத்திரங்களை விட சம்பாஷனைகள் அல்லாத விவரிப்பில் கிறங்கி கிடக்கிறேன்...

    எல்லா உரிமையும் சுதந்தரமும் நெருக்கத்தில் இருந்தும் கூட... சாமிதாஸ் ஒன்றுமே செய்ய முற்படாமல் அதை பயண்படுத்திக் கொள்ளாமல், சும்மா உடன் கிடப்பது... கடற்கரை மணலின் ஒவ்வொரு துகளிலும் ஒரு கதையை விரிக்கும் எழுத்து... வண்ணநிலவனின் நேர்த்தியான ஓவியம் இது...

    இதுவரை யாரும் நடக்காத அல்லது காலடிகளே இதுவரை படாத ஒரு இடத்தில் நடப்பது போல இருப்பது...

    பிலோமி பிலோமி என்று என்னை புலம்ப வைத்த எழுத்து மாதவராஜ்... அது...

    அற்புதமான மணிமாறனின் எழுத்து எனக்கு கடற்புரத்தில் திரும்பவும் அந்த உப்புக் கசியும் பிசுபிசுத்த காற்றில் ஆடையின்றி கிடக்க வாய்ப்பாய் இருந்தது.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!