-->

முன்பக்கம் , , , , , � நந்தலாலா : வாழ்க்கையெனும் ஜீவநதி

நந்தலாலா : வாழ்க்கையெனும் ஜீவநதி

nanthalala மந்திரவாதியின் சாபத்திலிருந்து விடுபட இளவரசனோ அல்லது மந்திரியின் மகனோ கிளியையோ அல்லது ஒற்றை மலரையோத் தேடிப் புறப்படுவார்கள். ஏழுகடல், ஏழுமலை எல்லாம் தாண்டி, பூதம் அடைகாக்கிற முகவரி நோக்கி அவர்கள் பயணம் இருக்கும். வழியில் சோதனைகள், உதவிகள் பலப்பல ரூபங்களில் எதிர்ப்படும், கைகொடுக்கும். மலைப்புமிக்க அனுபவங்களுக்குள் தங்களையும் இணைத்துக்கொண்டு கதை கேட்கிறவர்களும் அவர்களை பின்தொடர்கிற வசியம் நிகழும். இந்தத் தொன்மத்தின் விழுதொன்றைப் பிடித்து வந்திருக்கிறது நந்தலாலா. சபிக்கப்பட்டவர்களென தங்களைக் கருதுவோரையே அப்படியொரு பயணம் மேற்கொள்ள வைத்திருக்கிறார் மிஷ்கின். தத்தம் தாயைத் தேடியலையும் அவர்கள், உண்மையில் தங்களைத் தேடி அறிபவர்களாக இருக்கிறார்கள் என்பதைச் சொல்வதுதான் நந்தலாலா.

பொருள் தேடும் உலகத்தில் இரு மானிடர்கள் இங்கே உண்மைகளைத் தேடிச் செல்கிறார்கள். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞனும், ஒரு சிறுவனுமாக அவர்கள் இருக்கிறார்கள். தத்தம் தாயைத் தேடிச் செல்லும் அவர்களது பயணத்தில் காணும் உலகம் விரிந்தபடியே இருக்கிறது. போதனைகளும், அறிவுரைகளும் அவர்களை வழிநடத்தவில்லை.   ஓடுகிறார்கள். நடக்கிறார்கள். நிற்கிறார்கள். விழுகிறார்கள். எழுகிறார்கள். திரும்பவும் நடக்கிறார்கள். அழுகிறார்கள். சிரிக்கிறார்கள். வஞ்சகம், துரோகம், அன்பு, பாசம் என எல்லாமுமாக தருணங்கள் வாய்க்கின்றன. வாழ்வின் கணங்கள் ஒவ்வொன்றும் புதிது புதிதாய் பிறக்கின்றன. உறவுகள் வாய்த்து வாய்த்து மறைகின்றன. ஒன்றின் முடிவில் இன்னொன்று ஆரம்பமாகிறது. பயணத்தின் குறியீடாய் சாலை நீண்டு சென்றுகொண்டே இருக்கிறது. சைக்கிள், ஆட்டோ, லாரி, பைக், டிராக்டர், பஸ், கார், மினி வேன் என சகல உபாயங்களிலும் அவர்கள் தூரங்களைக் கடக்கிறார்கள். மழை பெய்கிறது. வெயிலில் கானல் ததும்புகிறது.

அந்தப் பயணிகளுக்கு நிகழ்வது, பார்வையாளனுக்கும் அப்போதுதான் நிகழ்வதாய்த் தெரிய மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர். அதற்காக புதுசாய்க் கதை சொல்லிப் பார்த்திருக்கிறார். உறைந்து காட்சிகள் உருக ஆரம்பிக்கின்றன. உறைகின்றன. செய்வதறியாது தலைகள் குனிகின்றன. திசைகளை கால்கள் பார்க்கின்றன. ஒருவகை நாடகத்தன்மையையும், அயற்சியையும் இவை அவ்வப்போது ஏற்படுத்துகின்றன பார்வையாளனுக்கு. தொடரும் சில அடிகளில் வாழ்க்கை சிலிர்ப்போடு இழுத்துக்கொள்ளவும் செய்கிறது. அமைதிக்குப் பிறகு வரும் வார்த்தைகள் எவ்வளவு துடிப்பு மிக்கவையாய் இருக்கின்றன. எல்லாவற்றையும் பார்த்து, பார்த்து அறிய வைத்திருக்கிறார்கள். சோகம், வீழ்ச்சி எல்லாவற்றையும் மீறி வாழ்க்கை எவ்வளவு சுவையும், நகைச்சுவையும் நிரம்பியது என இந்தப் படம் முழுக்கவேப் பார்க்க முடிகிறது. அழுத்தங்களுக்கிடையில் பார்வையாளர்கள் அவ்வப்போது வெடித்துச் சிரிக்கின்றனர்.

வாழ்வின் ஓட்டத்தில், ஒன்றொன்றாக நிகழ்பவைகளை இங்கே ஒரு இயக்குனர் அங்குலம் அங்குலமாக செய்திருக்கிறார். குறியீடுகளால் அவர் சொல்ல முயன்றிருப்பதை ஒருமுறை பார்த்து அறிய முடியாது. சிறுவனின் தாய் இருக்கும் வீட்டைத் தவிர இப்படத்தில் வரும் எல்லா வீடுகளும் வெள்ளை வர்ணம் பூசப்பட்டதாய் இருக்கின்றன. எங்கோ பாழடைந்த கூரையற்ற சாலையோரக் கட்டிடத்தில் எவனோ ஒரு லாரி டிரைவரிடம் உடலைக் கொடுக்கிறவளாய் அறிமுகமாகிற அந்தப் பெண், பின் துயரப்பட்டு நம் பயணிகளோடு சேர்ந்து மழைக்கு ஒதுங்கும் நேரத்தில், அவள் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறாள். அதில் வெள்ளை நிறம் வருகிறது. ஒன்றின் அர்த்தம் வேறொன்றிலிருந்து தெரிய நேர்கிறது. ஃபாண்டஸிகளுக்குள் பூடகங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

யார் இங்கே நடித்திருக்கிறார்கள் எனத் தேடித்தான் பார்க்க வேண்டும். குளோசப் ஷாட்களை தவிர்த்து, மிக அகலமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோணங்களில் அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்றன. பெரும் வெளியில் மனிதர்கள் சஞ்சரிக்கும் உணர்வைத் தருகிறது. மிஷ்கினின் உடல் மொழி, நடிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டு இருக்கிறது. சிறுவன் நம் கனவில் நிச்சயம் வருவான். படத்தில் வரும் எத்தனையோ பாத்திரங்களில் ஒருவரைக் கூட நம்மால் மறக்க முடியாது போலிருக்கிறது. அந்த பெரிய பைக்கில் வருகிற அந்த இரண்டு ஜாம்பவான் உருவங்களை எத்தனையோ தமிழ்ப்படத்தில் பார்த்திருக்கிறோம். நினைவுக்கு வந்ததேக் கிடையாது. இந்தப் படத்தில் அப்படியில்லை. இத்தனைக்கும் அப்படி அவர்கள் என்ன செய்து விட்டார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுதான் இப்படத்தின் சிறப்பு.

இயக்குனரின் அத்தனை பார்வைகளையும், சிரமங்களையும் தனதாக்கிக் கொண்டு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. இசை காட்சிகளை நகர்த்துகிறது. இசை உணர்வுகளை வாசிக்கிறது. மௌனங்களுக்கு அர்த்தம் சொல்கிறது. சிறு புல்லின் அசைவிலும், நீரின் சுழிப்பிலும் கவிதை வாசிக்கிறது. வானின் நிறங்களுக்கும், தொலைதூரத்து வெளிக்கும் அடர்த்தி தருகிறது. படத்தின் நாடித்துடிப்பு இசைதான்.

தாயைத் தேடிச் செல்பவர்களுக்கும் நமக்கும் அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. உண்மைகள் கசப்பாய் இருக்கின்றன. ஆனாலும் வாழ்வில் வெறுமையில்லை. அன்பும், உறவுகளும் தொடர்ந்து வந்து, வாழ்க்கை ஜீவநதியாய் ஓடிக்கொண்டு இருக்கிறது. எல்லாம் அருகேயே இருக்கின்றன. நம் கண்கள் சுரக்கின்றன.

தமிழ்ச்சினிமாவில் நிரம்பி வழிகின்ற பெரும் கழிசடைத்தனங்களை நீக்கி வந்திருக்கிற படம். தைரியத்தோடும், இயக்குனருக்கு சுதந்திரத்தோடும் வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளரையும் பாராட்ட வேண்டும். நிச்சயம் அனைவரும் பார்த்து அறிய வேண்டிய படம் இது. அதற்காக, உலகத்தரமான படம், தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்பதெல்லாம் அதீதமாகவே இருக்கிறது. (இந்த உலகத்தரம் குறித்து பிறிதொரு சமயம் பேசுவோம்). இந்தப்படம் ஜப்பானிய ‘கிகுஜிரோ’வின் இன்ஸ்பிரேஷன் என்றும், தழுவல் என்றும், பல காட்சிகள் அப்படியே எடுக்கப்பட்டு இருக்கிறதென்றும் இன்னொரு புறம் பேசப்படுகிறது. ‘கிகுஜிரோ’ இன்னும் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். ஆனாலும் ஒன்றை இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும். நல்ல மொழியாக்கத்தில் ஒரு பிறமொழி நாவலைப் படித்த நிறைவே  ஏனோ ஏற்படுகிறது. இன்னொரு முறை நிச்சயம் பார்க்க வேண்டும்.  Related Posts with Thumbnails

16 comments:

 1. மிக மிக நேர்மையான வெளிப்பாடு.அதிக அளவு மேலை நாட்டு படங்கள் பார்ப்பவர்களுக்கு சூப்பர் விருந்து

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 3. நன்றி தோழரே!! சரியான விமர்சனம்..

  ReplyDelete
 4. வலிகள் நிறைந்த வாழ்க்கை வசந்தங்களையும் தனக்குள்ளேயே ஒளித்து வைத்திருக்கிறது, எங்கோ... ரகசியமாய். வலியெனும் முட்கள் நீக்கி வசந்த மலர் தேடுவதே இவ்வாழ்க்கையை கடத்தலோ...?
  இந்த மனித இருப்பின் அர்த்தமோ...?

  உங்கள் சொல்லாடல் அழகாய் உள்ளது.

  ReplyDelete
 5. >>நல்ல மொழியாக்கத்தில் ஒரு பிறமொழி நாவலைப் படித்த நிறைவே ஏனோ ஏற்படுகிறது. இன்னொரு முறை நிச்சயம் பார்க்க வேண்டும். <<

  Athan athan atheethan enakkum!

  ReplyDelete
 6. ம்ம்ம்... தெரியுது. தெரியுது. நண்பர் இருவரும் எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு பகல் நேர காட்சிக்கு போயிட்டீங்கன்னு. இவ்வளவு அருமையா ஒரு படத்த விமர்சனம் செய்யறீங்க! நாங்கெல்லாம் போய் ஒரு பெரிய எதிர்பார்ப்போட தான பார்க்கணும்.

  உங்க விமர்சனம் எல்லாம் படத்தின் படைப்பாளி எதிர்பார்த்ததைவிட மிகவும் நன்றாக வந்திருக்குதே! அதைவிட அந்த படையாளிக்கு என்ன வேணும்.

  மாதவராசுக்கு என்ன படம் பிடிக்கும்னு கேட்ட அன்புள்ளங்களுக்கு எல்லாம் இந்த விமர்சனம் தான் பதிலா! நன்றாக இருக்கு.

  ReplyDelete
 7. நலமா அண்ணா.

  மிகவும் ரசிக்கவைத்த விமர்சனம்.

  ReplyDelete
 8. 'நூறுமுறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும் என்கிற' பாடல் வரி இப்போது மெல்ல எனக்கு பின்னணி இசைக்கிறது தோழா. ஓராயிரம் பர்வையிலே....

  ReplyDelete
 9. நல்ல விமர்சனம்.பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. மாதவ்ஜி, இந்த பதிவை பாருங்கள்:

  http://butterflysurya.blogspot.com/search/label/Kikujiro

  இந்த டிரைலர் பாருங்க:

  http://www.youtube.com/watch?v=te5gmO6nj9w&feature=related

  ReplyDelete
 11. நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 12. மிக மிக நேர்மையான வெளிப்பாடு...

  நல்ல விமர்சனம்.

  ReplyDelete
 13. கச்சிதமான விமர்சனம் சார்!

  ReplyDelete
 14. //உறைந்து காட்சிகள் உருக ஆரம்பிக்கின்றன. உறைகின்றன. செய்வதறியாது தலைகள் குனிகின்றன. திசைகளை கால்கள் பார்க்கின்றன. ஒருவகை நாடகத்தன்மையையும், அயற்சியையும் இவை அவ்வப்போது ஏற்படுத்துகின்றன//

  சரியான விமர்சனம் தோழர்!
  அவசியம் கூடியவிரைவில் “கிகுஜிரோ” படத்தையும் பாருங்கள்

  ReplyDelete
 15. Ellam saridhaan! Kikujiro endra padaththai uruvaakkiyavarukku nandri endru oru vari engaavadhu pottirukka vendum. Peraanmai pada titleil Jananadhan eppadi Russia pudhinaththai ninaivu koorndharo adhu pola Myshkinum Kitanovukku nandri solliyirukka vendum.

  Pettigallil kooda Mysskin ipoodhellam andha jappaniya padaththaip patrip pesaamal iruppadhu enna niyaayam. You Tubeil oru murai Kikujirovin kaatchigalaip paarungal. Naan enna solla varugiren endru puriyum.

  ReplyDelete