டிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 2

dark room 1 கார்த்தியைப் பார்க்கச் சென்ற பல சமயங்களில், ஸ்டூடியோவில் இருக்கும் தம்பிகள் “அண்ணன்  டார்க் ரூமில் இருக்காங்க. கொஞ்சம் இருங்க. இப்ப வந்துருவாங்க” எனச் சொல்லியிருக்கிறார்கள். நான் காத்திருந்திருக்கிறேன். கைகளைத் துடைத்துக்கொண்டு, லேசாய் வியர்த்த முகத்தோடு கதவு திறந்து, முகம் கண்டு சிரித்தபடியே வரும் கார்த்தியைப் பார்த்திருக்கிறேன். அதெல்லாம் பழைய கதை. கார்த்தியின் பிரியா ஸ்டூடியோவில் இப்போது டார்க் ரூம் இல்லை. கொஞ்சநாள் முன்பு வரை இருந்தது. முன்னறையின் தெற்குப்பக்கம் மரத்தடுப்பு வைத்து, வர்ணம் பூசப்பட்டு, இருப்பதே தெரியாமல் இருந்த சின்ன அறை.

“ஒருநாள் உள்ளே வந்து, என்ன செய்கிறாய் என பார்க்க வேண்டுமே” எனக் கேட்டிருக்கிறேன். “அதென்ன பெரிய வித்தையா” என்று நிறுத்தி, “அதில் ஒரு திரில் இருக்கத்தான் செய்கிறது” என்பான். “நாம் ரசித்துப் பார்த்த காட்சிகள், முகங்கள், கண்கள் எல்லாம் திரவங்களின் அசைவுகளிலிருந்து மெல்ல மெல்ல புலப்படுவது ஒரு அனுபவம்தான். நம் நினைவுகளிலிருந்து மீட்டெடுப்பது போல இருக்கும்” என கவிதை போல் சொல்லியிருக்கிறான். தொழில்தான் என்றாலும், தினசரி செய்கிற காரியங்கள்தான் என்றாலும், குறையாத ரசனையோடு அவைகளைச் செய்வான். “இதற்கு டார்க் ரூம் என்ற பெயர் ஒன்றும் சும்மா இல்லண்ணா. தாயின் கருவறை போல” என அவன் விளக்கம் கொடுத்த போது, பிம்பங்களின் ஆவிகள் உள்ளே அசைந்து ஆடிக்கொண்டு இருப்பதாய்த் தோன்றியது.

“அண்ணா, நமக்கு மட்டுமல்ல, அந்த போட்டோக்களை வாங்க வருகிறவர்களுக்கும் ஒரு திரில் இருக்கும்.” என விவரிப்பான். “கழுவி, நகலெடுத்து, பாஸ்போர்ட் சைசில் வெட்டி சின்னக் கவர்களில் போட்டு வைத்திருப்போம். ஒருநாளோ, இரண்டு நாளோ கழித்துத்தான் வரச் சொல்லியிருப்போம். வந்தவுடன் பெயரையும், பில் நமபரையும் கேட்டு, கவர்களில் தேடிக் கொடுப்போம். வாங்கின உடனே வேகமாய் கவரைத் திறந்து அவர்கள் போட்டோவைப் பார்ப்பார்கள். வேறெதிலும் அப்போது அவர்களுக்கு கவனம் இருக்காது. கடையை விட்டு வெளியேறி, கொஞ்ச தூரம் போனதும் நின்று திரும்பவும் போட்டோவை எடுத்துப் பார்ப்பார்கள்” எனச் சொல்லி சிரிப்பான். “இப்போது அதெல்லாம் இல்லைண்ணா. எடுத்தவுடன் காமிராவின் மானிட்டரில் பார்க்கிறார்கள். கம்ப்யூட்டரில் பார்க்கிறார்கள். திருத்தங்கள் சொல்கிறார்கள். சில நிமிடங்களில் வாங்கிக்கொண்டு போகிறார்கள்.” என்று சொல்லிவிட்டு “காத்திருக்கும் வலியும், சுகமும் இன்ஸ்டண்ட்களில் கிடைக்குமா” என ஒரு தத்துவக் கேள்வியோடு முடிப்பான்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமான பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் கதவு மூடப்படுவதும், பிறகு திறக்கப்படுவதும் குறைந்து போனது. பெரும்பாலும் மூடப்பட்டே இருந்தது. ஸ்டூடியோவை ஒவ்வொரு முறை சுத்தப்படுத்தும் போதும், ஒதுங்க வைக்கும் போதும், பழைய பொருட்களால் நிரப்பப்பட்ட கோடவுன் போலானது. அந்த அறையைப் பார்க்கும் போதெல்லாம் கார்த்தியின் கண்களில் ஏக்கமும், பெருமூச்சு படருவதையும் நான் பார்த்திருக்கிறேன்.

அந்த அறைக்குள் சென்று உள்ளே பூட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் இருந்ததுண்டு. கார்த்தியின் கடந்த காலம் அங்கே உறைந்து கிடந்தது.  ஒரு மூலையில் நிறைய சிறு கவர்கள் வரிசை வரிசையாய் அடுக்கிக் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. கார்த்தியை அழைத்து விசாரித்தேன். “எல்லாம் மக்கள் எடுத்த போட்டோக்கள்தான். வாங்காமல் போனவை” என்றான். ஆச்சரியத்துடன் பார்த்தேன். “ஆமாண்ணா, எல்லாரும் வந்து தாங்கள் எடுத்த போட்டோக்களை வாங்கிச் செல்வதில்லை. சொன்ன நாளில் பெரும்பாலும் சரியாய் வந்து போட்டோக்களை வாங்கிச் செல்வார்கள். கொஞ்சம் பேர், அங்க போயிருந்தேன், இங்க போயிருந்தேன்னுச் சொல்லி சில மாசங்கள் கழித்து வாங்கிச் செல்வார்கள். சிலர் எங்கே போனார்கள் என்று கடைசி வரை தெரியாது. அவர்களுடைய போட்டோக்கள் இவை” என்றான். “இந்த போட்டோக்களை எல்லாம் இங்க வைத்துத்தான் கழுவினேன்.”என்று சொன்ன போது குரல் இறங்கி இருந்தது. ஏன் வராமல் போயிருப்பார்கள், எங்கே போயிருப்பார்கள் என யோசிக்கும் போது ஒவ்வொரு போட்டோவும் ஒரு கதையாய்ச் சிதற ஆரம்பித்தன. டார்க் ரூம் எவ்வளவு ரகசியங்களை தனக்குள் வைத்துக்கொண்டு இருந்திருக்கிறது!

பிறகொரு நாள், டார்க் ரூமில் ஸ்டூடியோவின் இரண்டாவது கம்ப்யூட்டர் கொண்டு வைக்கப்பட்டது. அந்தக் கதவு எப்போதும் திறந்தே இருந்தது. இன்னொரு நாளில் மரத்தடுப்பும் அகற்றப்பட்டு இடம் விஸ்தாரமானது. அங்கிருந்த பொருட்களெல்லாம் எங்கு போயின என்று தெரியவில்லை. கார்த்தியிடம் கேட்கவில்லை. டார்க் ரூம் காணாமலேயே போய்விட்டது.

கையில் மவுஸோடு எதையோத் தேடிக்கொண்டு இருக்கிறான் கார்த்தி.

டிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 1

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. என்னதான் டிஜிட்டலில் எடுத்த படங்களை உடனுக்குடன் பார்க்க முடியும் என்றாலும், அந்த பழைய கருப்பு-வெள்ளை/கலர் படங்களில் இருந்த நயம், எப்படி வந்து இருக்கும் நமது படம் என்ற ஆர்வம் எல்லாம் போய் விட்டது என்பது வருத்தமான விஷயம்தான்.

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  2. 1954ம் ஆண்டு மேட்டுர் மிநன்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.பாக்ஸ் காமிரா இருந்தது பிலிம் சுருள் பதினான்கு அணா.(இன்றய கணக்கில் 87 பைசா).எட்டு படம் எடுக்கலாம்.தங்கியிருந்த அறையின் கதவைஸ் சாத்தி ப்ரிண்ட் பொடுவேன்.மேகமூட்டம் கலைந்து நிலா வெளிச்சம் வருவது போன்று உருவங்கள் புலப்பட ஆரம்பிக்கும்.அது ஒரு அற்புதமான அனுபவம் தான்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  3. அருமை, அப்போது எல்லாம் கலர் போட்டோ எடுக்க முப்பத்திரண்டு முடிந்தால் தான் பிரிண்ட் போடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஆமா அண்ணா...
    இப்ப டார்க் ரூம் இல்லை.
    போட்டாவுல்ல டார்க்கா இருக்க இடமெல்லாம் கம்ப்யூட்டர் கரெக்ட் பண்ணுது.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  5. விவரிக்க முடியாத உணர்வு....

    வெறுமை நிறைகிறது...

    பதிலளிநீக்கு
  6. அன்பின் மாதவராஜ்

    தொழில் நுட்பப் புரட்சி - புதுமைகள் - முன்னேற்றங்கள் வரத்தான் செய்யும் - நாமும் அதற்கு ஏற்றாற் போல் மாற வேண்டும். இருப்பினும் கார்த்தியின் அனுபவமும் ஆதங்கமும் தவிர்க்க இயலாதவை தான். காத்திருப்பதின் சுகம் - கையில் வாங்கிய உடன் எல்லாவற்றையும் மறந்து நமது புகைப்படத்தினை ஆவலுடன் பார்க்கும் குணம் - சுகம் கணினியில் உடனுக்குடன் பார்க்கும் போது கிடைக்காது தான்.

    நல்வாழ்த்துகள் மாதவராஜ்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  7. உண்மை பழமையில் உள்ள சுகமும் நெருக்கமும் புதியவற்றில் இல்லை. ஆயினும் அவற்றோடு இணையாவிட்டால் காலம் எங்களைக் கைவிட்டுக் கடந்துவிடும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!