அங்காடித் தெரு

Angadi Theru

குறைகள் இருப்பினும், ‘அங்காடித் தெருவை’ தமிழின் முக்கிய படங்களில் ஒன்றாகச் சொல்லலாம். இன்னும் சிறப்பாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கலாமே என்ற ஆதங்கம் வந்தபோதிலும், இயக்குனர் வசந்தபாலனை தூக்கி வைத்துக் கொண்டாடலாம்.

அதேச் சண்டைகளையும், அதே காதல் குலுக்கல்களையும் நிரப்பி கூச்சநாச்சமில்லாமல் “இட்ஸ் எண்டயர்லி எ டிஃபரண்ட் மூவி” என உளறிக்கொட்டுபவர்களை நோக்கி “பாரடா, பாரடா..... இதோ கதை, இதோ வாழ்க்கை, இதோ சினிமா... பாரடா” என உக்கிரமாக வெளிப்பட்டு இருக்கிறது இந்தப் படம். தினம்தினம் பார்த்தும் பாராமல் கடக்கும் மனிதர்களை “எங்கே போகிறீர்கள்” என உலுக்கி நிறுத்துகிறது. ‘இந்தியா வல்லரசாகும் நாள் தொலைவில் இல்லை’, ‘நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது”, ‘இந்தியாவின் முகம் மாறுகிறது” என நகரத்தின் பளபளப்புகளையும், உயரம் உயரமான கட்டிடங்களையும் காட்டி மார்தட்டிக் கொண்டிருப்பவர்களின் செவிட்டில் ஓங்கி அறைகிறது.

பொருட்கள் வாங்க வருபவர்களை அங்கிருப்பவர்கள் சிரித்துக்கொண்டேதான் வரவேற்பார்கள். குளிர்பதனம் செய்யப்பட்ட அந்தப் பெரிய கட்டிடங்களிலிருந்து தெருவுக்கும் கூட சில்லென்று காற்று வீசும். அதில் நனைந்தபடியே உள்ளேயும், வெளியேயும் நெரிசலில் சிக்கி கூட்டம் அலைபாய்ந்து கொண்டு இருக்கும். மனிதர்களை கன்ஸ்யூமர்களாக்கி புழுக்களாய் நெளிய வைத்திருக்கும் நவீன உலகின் குறியீடாகவே ரெங்கநாதன் தெருக்கள் இருக்கின்றன. அங்கே  ஒரு தமிழ்ச் சினிமாவின் இயக்குனர் இதயசுத்தியோடும், காமிராவோடும், சில நிர்ப்பந்தங்களோடும்  நுழைந்திருக்கிறார். அந்தக் கட்டிடங்களுக்குள் இருக்கிற புழுக்கமும், வெக்கையும் துயரங்களோடுக்  கசிவதைக் காணமுடிகிறது. 

உள்ளே இருந்த ஒரு பணிப்பெண் நேற்று செத்து விழுந்த வாசலில் இன்று ஒரு கோலம் சிரிக்கிறது. அதையும் இன்று சில பணிப்பெண்களே வரைந்து கொண்டு இருக்கின்றனர் தங்கள் தோழியை நினைவில் சுமந்தபடி. ‘கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை’ மீறியதால் மேலாளரிடம் அடிவாங்கி வெளியே வந்து, ‘இந்த புடவையை பாக்குறீங்களா, இந்தக் கலர் பிடிக்குதா பாருங்க” என்று குரல் வீசி வியாபாரம் செய்ய முடிகிறது அவர்களால். தெருவில் கொட்டப்பட்ட அட்டைப் பெட்டிகளும், பைகளும், தும்புகளும் காற்றில் சுருண்டு சுருண்டு அலையும் இரவின் தெருவில், சக்கைகளாய் உறங்கச் செல்கின்றனர் அதுவரை நின்றுகொண்டும், நடந்துகொண்டும் வேலைசெய்தவர்கள். தங்குமிடத்தில் அன்று வந்து குவிந்திருக்கும் கடிதங்களில் தங்கள் பெயர் இருக்கிறதா என தொலைதூரத்து வீட்டு நினைவுகளோடு தேடுகிறார்கள். நகரம் வெளிச்சங்களால் நிரம்பி இருக்கிறது. என்ன மனிதர்கள் இவர்கள். என்ன வாழ்க்கை இது. என்ன நகரம் இது. இட்டமொழி கிராமத்தின் தேரி மண்ணில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்களை இந்த ரெங்கநாதன் தெரு எப்படியெல்லாம் சிதைத்துப் போடுகிறது.

சந்தையில் பண்டமும், பணமுமே முக்கியம். சரக்கிற்கும், பண்டத்திற்கும் கிடைக்கும் மரியாதை உழைப்புக்கு இல்லை. அதிகாரம், செல்வாக்குகளோடு காரில் அழுக்குப் படியாத உடையோடு வந்து இறங்கி மரியாதை பெறுகிறது பணம். அரசின் தூண்கள் அவைகளுக்கு காவலும், சேவகமும் புரிகின்றன. அபிமான நடிகை, நடிகர்கள் பண்டத்தை வாங்க வைக்க ஆடுகின்றனர்,  பல்லிளிக்கின்றனர். எங்கெங்கோ உள்ள கிராமங்களில் எதிர்காலம் நிச்சயமற்ற குடும்பங்களிலிருந்து பதின்மப் பருவத்து ஆண்களும், பெண்களும் நகரத்தின் இந்தப் பெரிய கட்டிடங்களில் வேலை செய்ய வருகிறார்கள். கனவுகளும், பொறிகளும் நிரம்பிய நாட்கள் பொருட்களை எடுத்தும், வைத்தும், கண்பித்தும், அடுக்கியும் கலைந்து போகின்றன. அதில் மலரும் ஒரு காதலின் வழியே வாழ்வின் பயம், அழகு, குரூரம், நம்பிக்கை எல்லாம் சொல்லப்படுகிறது. வாழ்ந்து பார்த்து விடுவது என்னும் வேகத்தையும், வெப்பத்தையும் மனிதர்கள் இழக்காமல் இருக்கிறார்கள். துரத்தப்பட்டு, உருக்குலைந்த நிலையிலும் “நா உன்ன இப்பவே கல்யாணம் பண்ணிக்கிறேன்” என அவன் அவளிடம் சொல்லும் காட்சியில் தியேட்டரே கைதட்டி ஆரவாரிக்கிறது. நம் கண்களில் ஈரம் படர்கிறது. அந்தப் பெரிய கட்டிடங்களுக்கு வெளியே வாழ்க்கை இருக்கிறது என காமிரா, உயரே உயரேச் செல்கிறது.

இயக்குனருக்கு உள்ள மிகபெரும், பலமும், சவாலும் கதைக்களம் தான். அவ்வளவு பேர் வந்துசெல்கிற ஓரிடத்தை முழுமையாகவும், அங்கு பணிபுரிபவர்களின் ஒட்டுமொத்த  வாழ்வையும் பார்வையாளர்களுக்குள் செலுத்துவதாய் காட்சிகள் அமைய வேண்டும். இரண்டரை மணி நேரத்துக்குள் இது சாத்தியமில்லையென்றாலும், அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துவதாய் காட்சிகள் அடுக்கப்பட வேண்டும். ஒரு சிலரின் மூலம் ரெங்கநாதன் தெருவின் கதையைச் சொல்வது சிரமமே. அதைச் செய்யத் துணிந்திருக்கிறார். எலக்டிரிக்  டிரெயினில் டிப்டாப்பாக வந்து, வேறு உடை மாற்றி, பொதுக் கழிப்பறை முன்னால் உட்கார்ந்து காசு வசூலிப்பவன்,  பொருட்களை தெருவில் விற்கும் உடல் ஊனமுற்றவன், அவன் மனைவி, வெள்ளைத் தாடியும், குல்லாவும் அணிந்து வரும் பெரியவர் என பல்வேறு குணாதிசியங்களோடு சித்திரத்தைத் தீட்ட முனைந்திருக்கிறார். நினைத்தவரை சாதிக்க முடியவில்லையென்றாலும், ஓரளவுக்கு முன் சென்றிருக்கிறார். அதுவே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இன்னும் அந்தத் தெருக்களில் சொல்வதற்கு எவ்வளவோ கொட்டிக்கிடப்பதையும் சுட்டிக்காட்டிச் செல்கிறது. அதுதான் இந்தப் படத்தின் தாக்கம் எனச் சொல்ல வேண்டும்.

இது ரெங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல. இந்த தேசத்தின், இந்த காலத்தின் கதை. நகரங்களின் அதிகாலைகள் எல்லாம் இலட்சக்கணக்கில் இப்படியான இளைஞர்களை விழுங்கியபடியே விடிகின்றன. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் அவர்கள் ஒருநாளும் பார்த்திட முடியாமல் சபிக்கப்பட்டுப் போகிறார்கள். உண்ணவும், உடுக்கவும், உறையவும் முடிகிற அவர்களுக்கு, மூச்சுவிட முடியாத வாழ்விடங்களே கிட்டுகின்றன. ஈவு இரக்கமற்ற முறையில் காயப்படுத்தப்படுவதற்கும் அவர்கள் பழகிப் போகிறார்கள். எதிர்காலம் எப்போதும் அவர்களுக்கு அருகில் இல்லை. இவை எல்லாவற்றையும் ‘அங்காடித் தெரு’ சொல்கிறது.

படத்தில் பல காட்சிகள் மனதை விட்டு லேசில் அகலாது. பிளாட்பாரத்தில் தூங்கும் குழந்தை ஒன்று தாயிடமிருந்து விலகி சாலையில் விழுந்து அழுவது, ‘உன்னை அடிப்பான். எனக்கு, மாரைப் பிடிச்சான்’ என்று நாயகனிடம் சொல்லும் நாயகியின் முகம் மாறுவது, ‘எப்பணே ஊருக்கு வருவே’ என்னும் தங்கையின் குரல், முன்பின் தெரியாத அசாமுக்கு வீட்டு வேலைக்குச் செல்லும் அந்தச் சின்னப்பெண்ணிடம் உள்ள தைரியம், கோடவுனிலிருந்து பரிதாபமாக நாயகி அழைத்து வரப்படும்போது பின்னணிச் சுவற்றில் நடிகை சினேகா சிரித்துக்கொண்டு இருப்பது என சொல்லிக்கொண்டே போகலாம். வசந்தபாலனும், அவரது குழுவினரும் அழுத்தமாக தடம் பதித்து இருக்கின்றனர்.

படத்தில் சில முக்கிய இடங்களில் சித்தரிப்புகளும், நடிப்பும் ஒருவித நாடகத்தன்மையோடு வந்திருக்கின்றன என்பதையும் சொல்லத்தான் வேண்டும். எல்லோரும் கத்தி கத்திப் பேசுகிறார்கள். வார்த்தைகளின் அழுத்தம் அடர்த்தியாக இருக்கவில்லை. காட்சியினூடாக மேலும் பயணிக்க விடாமல், அங்கங்கு தடுத்து நிறுத்தப்பட்டு வேறு வழியில் அழைத்துச் செல்லப்படுவது போல உணர்வு சில தருணங்களில் ஏற்படுகிறது.  ஒரு சினிமாவாக பார்க்கும்போது தெரியும் இந்தக் குறைகள், தமிழ்ச்சினிமாவாக பார்க்கும் போது தெரியாது. நாயகனாக வருபவர் நன்றாக நடித்திருந்தாலும் நாயகியாக வரும் அஞ்சலி அற்புதமாக நடித்திருக்கிறார். சந்தோஷம், கோபம், துயரம் எல்லாம் வாழ்வின் தருணங்களாய் அப்படியே அவரிடம் வெளிப்பட்டு இருக்கின்றன. ‘கற்றது தமிழ்’படத்திலும் மறக்க முடியாதவராய் வருவார். தமிழ்ச்சினிமா அவரையும் ஆடவைத்து, செல்லூலாய்ட் பொம்மையாக்கி விடக்கூடாதே என்ற பதற்றமும் இருக்கிறது.

படத்தைப் பார்த்தவர்கள் இனி ரெங்கநாதன் தெருவுக்குள், அடுக்குமாடி ஸ்டோர்களுக்குள் செல்லும்போது புடவைகளையும், சட்டைகளையும், பாத்திரங்களையும் தாண்டி, அவைகளை எடுத்துத் தருகிற மனிதர்களை உற்று பார்ப்பார்கள். வெளியே, “கண்ணாடி, கைக்குட்டை... ” என்று குரல் எழுப்பும் முகங்களை கூர்ந்து கவனிப்பார்கள். அவர்களுக்குள் என்ன கதைகள் இருக்கின்றன, எந்த ஊரிலிருந்து வந்திருப்பார்கள் எனத் தேடுவார்கள். நுகர்வோர்கள் கொஞ்சமாவது, சில கணங்களாவது  மனிதர்களாய் தங்கள் இயல்புநிலைக்குத் திரும்பிச் செல்வார்கள். அதுவே பெரிய விஷயம்தான். இந்தப் படத்திற்கு பெரும் வெற்றிதான்.

கருத்துகள்

42 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அழுத்தமான பதிவு.

    அருமையான படம்.

    கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

    பதிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமையான விமர்சனம் .சீக்கிரம் பார்க்கணும் ..இது போன்ற கடைகளில் பணம் கையாளும் இளைஞர்கள் ஒரு வங்கி காசாளரைவிட லாவகமாக வாங்கி எண்ணி போட்டு கணக்கு முடிப்பதைக்கண்டு வியந்திருக்கிறேன் .அது ஒரு பாவமான உலகம் .

    பதிலளிநீக்கு
  3. நல்ல விமர்சனம் மாதவராஜ்.

    பதிலளிநீக்கு
  4. மாதவ்ஜி, படம் பார்த்துவிட்டு, கொஞ்சம் அதிர்ந்துதான் போனேன். இதே சென்னையில் சில பலசரக்கு கடைகளிலும் பெருநகரத்தில் சில உணவகங்களிலும் என் வாழ்க்கை கழிந்திருக்கிறது.

    கடந்துவிட்ட காலம் என்றாலும் 'அங்காடிதெரு' அதை சொல்லி சென்றதையும் இனி சில இரவுகள் தூங்கவிடாமலே செய்யும்.

    பதிலளிநீக்கு
  5. அன்பு மாதவராஜ்,

    நான் படிக்கும் உங்களின் முதல் சினிமா பற்றிய விமர்சனம்...

    அருமையாய் இருக்கிறது உங்கள் எழுத்தும், நடையும்.

    பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது உங்களைப் போன்றவர்களின் விமர்சனம் (ரிவ்யூ).

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  6. படம் பார்க்கணும் மாது.

    படத்தின் மேல் உள்ள நம்பகத்தன்மை கூடிக் கொண்டிருக்கிறது.நம் மக்களின் விமர்சனங்கள்.

    அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்கிற மனசை யாரிடம் கேட்டு வாங்க?

    பதிலளிநீக்கு
  7. உங்க விமர்சனத்தை படிச்ச உடனே...பாடம் பார்கணும்னு தோணுது....! Very nice!

    பதிலளிநீக்கு
  8. //இது ரெங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல. இந்த தேசத்தின், இந்த காலத்தின் கதை. நகரங்களின் அதிகாலைகள் எல்லாம் இலட்சக்கணக்கில் இப்படியான இளைஞர்களை விழுங்கியபடியே விடிகின்றன. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் அவர்கள் ஒருநாளும் பார்த்திட முடியாமல் சபிக்கப்பட்டுப் போகிறார்கள்.//

    மாதவராஜ்,
    படத்தோடும் கதைகளோடும் முடிந்துபோகிற ஆதங்கங்கள் மட்டுமே இவை. விமர்சனம் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  9. //படத்தைப் பார்த்தவர்கள் இனி ரெங்கநாதன் தெருவுக்குள், அடுக்குமாடி ஸ்டோர்களுக்குள் செல்லும்போது புடவைகளையும், சட்டைகளையும், பாத்திரங்களையும் தாண்டி, அவைகளை எடுத்துத் தருகிற மனிதர்களை உற்று பார்ப்பார்கள்//

    இது தான் படத்தின் வெற்றி என்று நினைக்கிறேன்,உங்கள் விமர்சனம் அருமை.படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  10. தெளிவான பார்வையில் அழுத்தமான விமர்சனம்
    இது போன்ற அங்காடித் தெருக்கள் தலைநகரில் மட்டுமல்ல எல்லா பெருநகரங்கள் சிறு நகரங்களிலும் இருக்கின்றன.
    நிச்சயம் இந்தப் படத்திற்குப் பிறகு 'அம் மக்களின்' மீதான பொது ஜனப் பார்வை வலுப் பெறும்.

    பதிலளிநீக்கு
  11. //எலக்டிரிக் டிரெயினில் டிப்டாப்பாக வந்து, வேறு உடை மாற்றி, பொதுக் கழிப்பறை முன்னால் உட்கார்ந்து காசு வசூலிப்பவன்//

    அந்தக் கேரக்டரை உன்னிக்க வேண்டிய இடம் அதுவன்று; நாறிக் கிடந்த அந்தக் கக்கூஸை அவன் சுத்தம் பண்ணி, முதல் ஒற்றை ரூபாய் நாணய வரும்படியை அதட்டி வாங்குவானே அந்த இடம்.

    //காட்சியினூடாக மேலும் பயணிக்க விடாமல், அங்கங்கு தடுத்து நிறுத்தப்பட்டு வேறு வழியில் அழைத்துச் செல்லப்படுவது போல உணர்வு சில தருணங்களில் ஏற்படுகிறது.//

    What a romantic expectation! என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்த ஊதாத் திரைக்கு ஊடாகவும் பயணித்து அவன் அவள் மாரைப் பிடிக்கிறதைப் பார்க்கவிட்டிருக்க வேண்டுமா? சத்தியமா அப்படி ஒரு 'பிட்' எடுத்திருக்க மாட்டார்கள், தோழரே. இண்டு இடுக்கான ரெண்டகமான வாழ்க்கையைப் பேசுகிற படம் வெட்டி வெட்டித் திரும்புமா, வெலாவாரியாக் கதையளக்குமா?

    ஆனால் படத்தைப் பாராட்டவேண்டும் என்று தோன்றிய உங்கள் நல்லெண்ணத்தை மதிக்கிறேன்; போற்றுகிறேன்.

    - ராஜசுந்தரராஜன்

    பதிலளிநீக்கு
  12. ராஜசுந்தரராஜன்!

    //அந்தக் கேரக்டரை உன்னிக்க வேண்டிய இடம் அதுவன்று; நாறிக் கிடந்த அந்தக் கக்கூஸை அவன் சுத்தம் பண்ணி, முதல் ஒற்றை ரூபாய் நாணய வரும்படியை அதட்டி வாங்குவானே அந்த இடம்.//

    அதை உன்னிப்பாக கவினித்ததால்தான், நான் அப்படி என் என் பதிவில் குறிப்பிட்டேன் நண்பரே!


    //என்ன சொல்ல வருகிறீர்கள்? அந்த ஊதாத் திரைக்கு ஊடாகவும் பயணித்து அவன் அவள் மாரைப் பிடிக்கிறதைப் பார்க்கவிட்டிருக்க வேண்டுமா? சத்தியமா அப்படி ஒரு 'பிட்' எடுத்திருக்க மாட்டார்கள், தோழரே.//

    என்னாச்சு உங்களுக்கு. நான் என்ன சொல்ல வருகிறேன் என்றே புரியவில்லை உங்களுக்கு. ஆனால் பிட்டுப்படம் என்றெல்லாம் பீடம் தெரியாமல் சாமியாடிவிட்டுப் போயிருக்கிறீர்கள். அவ்வளவு மட்டமான ரசனை கொண்டவன் என்றா என்னை நினைத்துக்கொண்டீர்கள். கருமம் என்று தலையில்அடித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் மாதவராஜ்,

    விமர்சனத்தின் ஓரிடத்திலாவது வசனம் எழுதிய ஜெயமோகனை குறிப்பிட்டிருக்கலாம். இந்த இடுகையை நான் வாசித்தது வரை அவரை நீங்கள் குறிப்பிடவே இல்லை.

    நல்ல விஷயங்களை பாராட்டக் கூட அரசியல் தடுத்துவிடுகிறதா தோழர்?

    தோழமையுடன்
    பைத்தியக்காரன்

    பதிலளிநீக்கு
  14. உங்கள் பார்வை பிரமாதம் தோழர். கதைகள் நம்மை சுற்றி குவிந்து கிடக்கின்றன. வசந்தபாலனை பாராட்ட வார்த்தைகளை தேடத்தான் வேண்டும். இன்று அலைபேசியில் வாய் வலிக்க ,வலிக்க பாராட்டி தீர்த்தேன். நாளை பதிவர்களுக்கு திரையிடல் இருக்கிறது,

    பதிலளிநீக்கு
  15. வாங்க பைத்தியக்காரன்!

    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    இதில் எந்த அரசியலும் நிச்சயமாய் கிடையாது.

    என்னை impress பண்ணியிருந்தால் நான் தயங்காமல் சொல்லியிருப்பேன் தோழரே!

    பதிலளிநீக்கு
  16. ஓ நீங்க பீடமா? ஜெயேந்திரர் நித்தியானந்தர் நினைப்பு வருவதால் பயமாக இருக்கிறது.

    //இரண்டரை மணி நேரத்துக்குள் இது சாத்தியமில்லையென்றாலும், அப்படி ஒரு உணர்வை ஏற்படுத்துவதாய் காட்சிகள் அடுக்கப்பட வேண்டும். ஒரு சிலரின் மூலம் ரெங்கநாதன் தெருவின் கதையைச் சொல்வது சிரமமே. அதைச் செய்யத் துணிந்திருக்கிறார்.//

    //காட்சியினூடாக மேலும் பயணிக்க விடாமல், அங்கங்கு தடுத்து நிறுத்தப்பட்டு வேறு வழியில் அழைத்துச் செல்லப்படுவது போல உணர்வு சில தருணங்களில் ஏற்படுகிறது.//

    மேலே உள்ள முதற்கூற்றைச் சாதிக்க இரண்டாவது கூற்றுப்படி (அது உங்கள் தோற்றம் என்றாலும்) செல்லவேண்டி வராதா?

    எனக்கு அப்படித் தோன்றவில்லை. இற்றைத் திரைமொழி அப்படித்தான் வளர்ந்திருக்கிறது. இடைவெளிகளை நிரப்ப அது நம் அறிவுத் திறனைக் கோருகிறது.

    பாராட்டுவதற்கு வேண்டுமானால் சப்பைக்கட்டு (substantiation) தரலாம்; விடலாம். ஆனால், குறை சொல்லுதல் வெறும் அபிப்ராயங்களாக உதிர்வது எழுத்துக்கு உரமல்ல.

    எனக்கு வந்தது சாமியாக இருக்க வாய்ப்பில்லை; பேயாகலாம். வேலையை விட்டுவிட்டு வீட்டில் சும்மா இருப்பதால் வருகிற வினை.
    பேய்க்கோட்டாலை வந்தவன் வார்த்தையை எல்லாம் பொருட்படுத்துகிறீர்கள் பாருங்கள் அதற்கு உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. கலங்கடித்து விட்ட படம் தோழர்.. இன்னமும் பார்ப்பவர்கள் எல்லோரிடமும் படம் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்.. தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்று அடித்துச் சொல்லலாம்..

    பதிலளிநீக்கு
  18. It was a good review. Still it missed out few things. The character of Maari Muthu was forgotten. The way Nellai Tamil used in all the scenes (in Chennai too). That speaks for the director's hard work and his sharp observances.

    பதிலளிநீக்கு
  19. ராஜசுந்தரரஜன்!
    நீங்கள் ஒரு முக்கியமானக் கவிஞர் என சிலர் பதிவுலகில் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அதை நினைத்து எனக்கு இந்த நேரத்தில் சிரிப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பீடம் தெரியாமல் சாமியாடுவது என்னும் மரபான பழமொழிக்கும் நீங்கள் கற்பிக்கும் அர்த்தத்தை என்னவென்று சொல்வது? பரிதாபமாக இருக்கிறது.

    எனது இரண்டு கூற்றுக்களை இங்கே மேற்கோள் காட்டி இருக்கிறீர்கள். அதுகுறித்து உங்களுக்கு தெளிவு படுத்தும் முன்பு, இதில் எங்கே அய்யா, நீங்கள் உங்கள் முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட மலிவான ரசனைக்கு இடம் தந்தது? சரி.குருடன் யானையை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்தான்.

    பெரும் மனிதத் திரளான ஒரு கதைக்களனில் காட்சிகள் அமைப்பது/கதை சொல்வது குறித்த எனது பார்வையைச் சொல்லி இருக்கிறேன். பேட்டில்ஷிப் பொட்டம்கின்னிலிருந்து, லைப் இஸ் பியீட்டில்புல் என தொடரும் சினிமாக்கள் பார்த்த என் குறைந்தபட்ச சினிமா ஞானத்திலிருந்து பேசியது அது. உங்கள் விரிந்த அனுபவத்தளத்திலிருந்து அதைப் பேசியிருக்கலாமே.

    எனக்கு இந்தப் படத்தில் குறைகள் சொல்வதைக் காட்டிலும், இந்தக் காலக்கட்டத்தில், இது எத்தகைய முக்கியப்படம் என்று சொல்வது பிரதானமாகத் தோன்றியது. அத்னாலேயே, அதில் பாஸ்ட்டிவ்வான விஷயஙகளை விவரித்தும், நெகட்டிவ்வான சில விஷயங்களைச் சுட்டிக் காட்டியும் என் விமர்சனத்தை தந்திருந்தேன். இதில் விளக்கமாய்ச் சொல்ல வேண்டுமென கோருங்கள். அது நியாயம். உங்கள் மட்டத்திற்கு ஏற்ப என் ரசனைகளை/புரிதல்களை மட்டுப்படுத்துவது எப்படிச் சரி?

    இதைச் சுட்டிகாட்டியதற்கு, நான் சாமியல்ல, பேய், என்றெல்லாம் ஏன் சுய பிரதாபங்கள்? எதோ என்னை மட்டம் தட்டுவதாய் நினைத்துக்கொண்டு, உங்கலை நீங்களே மட்டம் தட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. நிதானமாய் யோசியுங்கள். எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  20. படமும் அருமை, உங்களின் பதிவும் மதிப்புரையும் மிக அருமை.
    நான் படம் இன்னும் பார்க்க வில்லை.

    தேரிக்காடு, உடன்குடி, ஆறுமுகநேரி இளைஞர்கள் (பையன்கள், பெண்கள்) ஏன் அந்த வேலைக்கு செல்கின்றனர். படிக்கும் வயதில் ஏன் சரியாகப் படிக்க வில்லை, படிக்க முடிய வில்லை என்ற விசயத்தை தொட்டாரா என்று தெரிய வில்லை.

    பதிலளிநீக்கு
  21. //நீங்கள் ஒரு முக்கியமான கவிஞர் என சிலர் பதிவுலகில் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.//

    தவறு. நல்லவேளை கேள்விப் பட்டதோடு தப்பித்தீர்கள். எந்த நேரத்திலும் சிரித்து மறந்து விடுவதே எனக்கும் வழக்கம்.

    ஒரு தனிமனிதனை ஏத்தி இறக்கி என்னத்துக்குப் பேசவேண்டும்? படத்தைப் பேசுவோமே:

    'பேட்டில்ஷிப் பொட்டெம்கின்' பார்த்திருக்கிறேன். உங்களுக்கு வாய்த்த ஏனைய ஜனத்திரள்ப் படங்களைப் பார்த்திருக்க மாட்டேன் என்றே தோன்றுகிறது. ஆனால் நான் தெளிவுறுத்தவேண்டுவது //காட்சியினூடே பயணிக்க விடாமல்...// என்கிற அந்த அழகியல் இடைஞ்சல் என்ன என்றுதான். மெய்யாலுமே விளங்காமல்தான் கேட்டேன். தயவு செய்து, ஊரார் உளறுவதைக் கணக்கில் எடுத்து என்னைத் தனிமைப் படுத்தாதீர்கள்.

    பதிலளிநீக்கு
  22. ராஜசுந்தரராஜன்!

    //காட்சியினூடே பயணிக்க விடாமல்...//

    இந்த வார்த்தைகளில் காமிராவுக்கும், காட்சிப்பொருளுக்கும் இடையிலான உறவைக் கையாண்ட விதத்தைச் சொல்லவே முற்பட்டிருந்தேன்.

    ஒரு முக்கிய நிகழ்வைச் சொல்லும் காட்சி முடிவுறும் தருணத்தில், காமிரா காட்சிப்பொருளை மேலும் நெருங்கி, கொஞ்சம் நிலைத்து fade ஆகும். அந்த அவகாசத்தில் பார்வையாளன் காட்சியின் அழுத்தம் பெறுகிறான்.அதனூடாக அந்நிகழ்வு குறித்த சிந்தனைகள் தொடர்ந்து முழுவதும் உள்வாங்க முயற்சிக்கிறான். இது பார்வையாளனுக்குள் நிகழும் கதையின் பய்ணம். அது சில இடங்களில் பிசகாகி இருக்கிறது. சட்டென்று அடுத்த காட்சிக்கு தாவுகிறது.

    பதிலளிநீக்கு
  23. I live in a place (Nagpur) were Tamil Film is ATHTHIPAZHAM.I visit T.N once in awhile. U r review increases my egerness to witness the film.Is it correct if I say Vasantha balan was living in MELAPONNAGARAM,Madurai wher ialso lived for a long time when he was a small little boy(Ihear from friends).Fine agood transformation for Vasantha Balan.....Kashyapan.

    பதிலளிநீக்கு
  24. butterfly Surya!
    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    பத்மா!
    அவசியம் படம் பாருங்கள்.


    செல்வராஜ் ஜெகதீசன்!
    மிக்க நன்றி.


    ஆடுமாடு!
    ஆமாம். பாதிப்புகளை ஏற்படுத்தும் படம்தான்.


    ராகவன்!
    மிக்க நன்றி. படம் பாருங்கள். நீங்கள் இதைவிடவும் நன்றாகச் சொல்வீர்கள்.


    பா.ரா!
    //அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் படம் பார்க்கிற மனசை யாரிடம் கேட்டு வாங்க?//
    புரிகிறது. எல்லாப் படங்களிலும் நாம் எதிர்பார்ப்பது இல்லையே.


    தேவா!
    மிக்க நன்றி. உடனடியாகப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  25. Hisham Mohamed!

    படத்தோடு முடிந்து போகிற ஆதங்கங்கள் என்றாலும், சில படத்தின் தாக்கங்கள் நமக்குள் சில கதவுகளை திறந்து வைக்கின்றன.


    மகாராஜன்!
    ஆமாம். அதுதான் படத்தின் வெற்றி.


    கண்மணி!
    நிச்சயமாய்.



    மணிஜீ!
    ஆமாம், பாராட்டிக் கொண்டாட வேணும் இது போன்ற கலைஞர்களை.


    கார்த்திகைப் பாண்டியன்!
    அடித்துச் சொல்வோம்.:-))))


    தனராஜ்!
    இது நிச்சயமாய் முழு விமர்சனம் இல்லை. நீங்கள் சொல்வதும் முக்கியமானது. நன்றி.


    ராம்ஜி யாஹூ!
    இங்கு வந்து வேலை பார்க்கும் சூழல் குறித்து யோசிக்கிறீர்கள்.
    சர். எல்லோரும் படித்துவிட்டால் எல்லோரும் வேலை கிடைத்து விடுமா. மனிதர்களை பெயிலாக்கிப் பார்க்கும் சமூகம்தானே இது.

    காஸ்யபன் தோழர்!
    மிக்க நன்றி. வசந்தபாலன் நிச்சயமாய் தமிழின் முக்கிய இயக்குனராக வருவார்.

    பதிலளிநீக்கு
  26. // dheva said...
    உங்க விமர்சனத்தை படிச்ச உடனே...பாடம் பார்கணும்னு தோணுது....! Very nice!
    //

    இது தான் உங்கள் விமர்சனத்தின் சாரத்துக்குச் சான்று!

    பதிலளிநீக்கு
  27. கண்டிப்பா படம் பார்க்க வேண்டும்.
    நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  28. தமிழ்த்தோழன்29 மார்ச், 2010 அன்று PM 3:01

    அன்புடன் மாதவராஜ் இயா
    படம் இன்னும் பார்க்கவில்லை. தங்களின் விமர்சனம் படித்தேன். "நகரங்களின் அதிகாலைகள் எல்லாம் இலட்சக்கணக்கில் இப்படியான இளைஞர்களை விழுங்கியபடியே விடிகின்றன. சூரியன் உதிப்பதையும், மறைவதையும் அவர்கள் ஒருநாளும் பார்த்திட முடியாமல் சபிக்கப்பட்டுப் போகிறார்கள்"
    இங்கு Farance -Paris ல் என்னைப் போன்ற ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை நிலையை பார்த்ததுபோல் இருந்தது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அருமையான விமர்சனம்.
    ஆனால் இவ்வாறு வேலை செய்யும் பலரை உடல், மன உழைச்சல்களுடன் மருத்துவனாக சந்தித்த அனுபவங்கள் நிறைய உண்டு.
    படம் பார்க்கவில்லை. ஆனால் கட்டாயம் பார்க்க வேண்டிய லிஸ்டில் உண்டு.

    பதிலளிநீக்கு
  30. ஆஹா ராஜசுந்தர்ராஜன் சார் கேள்வி கேக்கறதும் மாதவராஜ் அண்ணன் பதில் சொல்றதையும் பாக்கும் போது தில்லானா மோகனாம்பாள் படத்துல வர சிவாஜி பதமினி மாதிரியே இருக்கு.. ம்ம் நல்லா வாசிங்க நீங்க வாசிக்க வாசிக்க எங்களுக்கு நல்ல வாசிப்பனுபவம் தோழர்கள்

    பதிலளிநீக்கு
  31. திரைபடம் பார்த்து பத்து வருடம் ஆகிவிட்டது!!!
    உஙகள் விமர்சனம் பார்த்து படம் காண வேண்டும் போல் இருக்கிறது

    அருமையான விமர்சனம் !!!
    அழுத்தமான பதிவு.
    வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  32. உங்கள் விமர்சனம் படித்ததும் படம் பார்க்கவேண்டும் போல் உள்ளது....வாய்ப்புதான் இது எவ்வ்ளோ பழசானதுக்கு அப்புறம் கிடைக்குமோ???!!

    பதிலளிநீக்கு
  33. சித்தாந்தம் மனித மனதை எப்படி ஆக்கி விடுகிறது ? பைத்தியக்காரனின் கேள்வி , உங்கள் பதில் .

    நீங்கள் ரசித்த எந்த காட்சியிலும் அந்த வசனகர்த்தாவுக்கு எந்த பங்குமில்லை என்றா சொல்கிறீர்கள் ?

    //என்னை impress பண்ணியிருந்தால் நான் தயங்காமல் சொல்லியிருப்பேன் தோழரே!//

    பைத்தியக்காரன் , வரவர என் மனதில் உங்களை மிகவும் மரியாதைக்குறிய இடத்திற்க்கு கொண்டு சென்றுகொண்டே இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  34. நன்றி மாதவராஜ். உங்கள் knowledge-ஐ வெளிக்கொண்டு வர எம்மட்டுப் பாடுபட்டுவிட்டேன்!

    இப்போது ஒத்துக் கொள்கிறேன்: தமிழ்ப்படத் தரத்துக்கு குறிஞ்சி பூத்தாற்போல் வரும் இத்தகைய படங்களைக் குற்றங்குறை பாராட்டாமல் பரிந்துரைக்க வேண்டியது உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் கடமை என்று நானாக ஒரு மனப்படிவம் கொண்டிருந்தேன். அதனால்தான் உங்களைச் சீண்டினேன்.

    எனக்கு விடையிறுக்க உலகின் சிறந்த படங்களோடு இதை சமன்வைத்துச் சரிவுகண்டபோது வருத்தப்பட்டு மேலும் சீண்டினேன்.

    இப்போது நீங்கள் அறிந்ததை வெளிச்சொல்லி விட்டீர்கள். நீங்கள் சொல்கிற technique இக்காலத்தில் இதுபோன்ற கதை கூறலுக்கு ஒவ்வும் ஒவ்வாது என்று மேலறிந்து கொள்வதைத் தவிர இனி உங்கள் மீது வருத்தப் படுவதற்கு ஒன்றுமில்லை. நன்றி!

    பதிலளிநீக்கு
  35. தீபா!
    நன்றி.


    அம்பிகா!
    நன்றி.


    தமிழ்தோழன்!
    :((((


    Dr.எம்.கே.முருகானந்தன்!
    வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி. அந்த அனுபவங்களை பகிரலாமே டாக்டர்.

    அதிஷா!
    இதற்கும் சந்தோஷம் தானா.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது...


    பொன்ராஜ்!
    அவசியம் படம் பார்க்கவும்.


    அன்புடன் அருணா!
    பகிர்வுக்கு நன்றி.


    மதி இண்டியா!
    நன்றிங்க.


    ராஜசுந்தரராஜன்!
    ஆமாம். மீசையில் மண் ஒட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  36. அங்காடித்தெரு படம் பற்றிய உங்களது பார்வை மிகச்சரியானதே!
    தமிழ் படங்களைங்களுக்கு அதிகமாக விமர்சனம் எழுதாத தாங்கள் அங்காடித்தெரு படத்தைப்பற்றி உடனே எழுதியதே படம் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமான படைப்பு என்று விளங்குகிறது.

    //வசந்தபாலனும், அவரது குழுவினரும் அழுத்தமாக தடம் பதித்து இருக்கின்றனர்//
    இந்த வரிகளுக்குள்ளேயே ஜெயமோகனும் அடங்குவாரெ.

    பதிலளிநீக்கு
  37. அருமையான படம்.

    //படத்தைப் பார்த்தவர்கள் இனி ரெங்கநாதன் தெருவுக்குள், அடுக்குமாடி ஸ்டோர்களுக்குள் செல்லும்போது புடவைகளையும், சட்டைகளையும், பாத்திரங்களையும் தாண்டி, அவைகளை எடுத்துத் தருகிற மனிதர்களை உற்று பார்ப்பார்கள்//


    கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.

    பதிலளிநீக்கு
  38. ஐயா வணக்கம்
    முதல் முறையாக உங்கள் தளம் பார்த்தேன், அதுவும் ஒரு அற்ப்புதமான திரைப்படத்தின் சீர்தூக்கிப் பார்த்த பத்தியூடாக. நிற்க, விடயத்திற்கு வருகிறேன். அங்காடித் தெரு திரைப்படம் பார்த்த பல்லாயிரம் யதார்த்த விரும்பிகளில் நானும் ஒருவன். தனிய சதைத்துண்டங்களை நம்பி படம் எடுக்கும் பல ஜாம்பவான்களுக்கு (இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிக நடிகைகளும் அடங்கலாக) இது ஒரு சாட்டை. தொண்டைக்குள் விக்கி, விழிக்குளம் நிரம்பிய இடங்கள் பல, சில பாத்திரங்களை பார்த்து கோபப்பட்டதும் உண்டு. இக்கதையை சிலவற்றுடன் ஒப்பிடும் பொழுது நெஞ்சம் கனக்கிறது. சொல்லாமல் சொல்லிச்சென்ற கருத்துக்கள் பற்பல. இதற்கு உழைத்த அத்தனை சிற்பிகளும் பல பராட்டுகளுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  39. ராமு!
    மிக்க நன்றி.


    kajinikarthik !
    திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறோம். விரைவில் எதிர்பார்க்கலாம்.



    ரவிக்குமார்!
    //இந்த வரிகளுக்குள்ளேயே ஜெயமோகனும் அடங்குவாரெ.//

    அதானே.



    AkashSankar!
    மிக்க நன்றி.



    கரண்!
    வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. அருமையான படம்.
    படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கண்ணீர் ஒரு பக்கம் தன்பாட்டில் போய்க் கொண்டே இருக்கிறது. படம் முடிந்து வெளியே வர இயலவில்லை. இப்படிப்பட்ட மக்களை அங்கேயே விட்டுவருகிறோமேயென்பது போன்ற ஒரு உணர்வு, ஏதாவது செய்யவேண்டுமே என்ற பரிதவிப்பு இரண்டு உணர்வுகளுமே மிகைத்திருந்தது.

    படம் பார்த்த அன்று இரவு தூங்கவில்லை. மீண்டும் பார்க்க வேண்டும் போல இருக்கிறது இப்பொழுதும்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!