தர்ப்பண சுந்தரி

- எஸ்.வி.வேணுகோபாலன்

 

சுற்றுலாத் தலமாயிருந்த அந்தப் புராதனக் கோயிலை விடவும் அதிக வயோதிகம் தெரிந்தது கேசவ அய்யங்காரிடம். கன்னங்கருத்த சரீரத்தின் மீது வெள்ளை   வெளேரென்று எடுப்பாகத் தெரிந்த வேட்டியை அவ்வண்ணமே பாதுகாக்க அவர் படும் பாடு அவருக்குத் தான் தெரியும். திருத்தமான பஞ்சகச்ச வேட்டி ஒடிசலான அவரது தேகத்தில் ஒட்டியிருந்தது.  நடுப்பகலின் வெயில் சுளீரென்று அடித்துக் கொண்டிருக்க அடுத்த டூரிஸ்டு பஸ் எப்போது வரும் என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தார் அவர்.

மே மாதத்தின் ஓயாத வரும்படிகளோ, ஜூன் ஜூலைகளின் 'டல்'லடிக்கும்   பொழுதுகளோ அவரை பெரிதாக பாதிப்பதில்லை.  யாத்ரிகர்களுக்குக் கோவிலைக் காட்ட வேண்டிய கடமை அவருடையது.  வழிகாட்டி. உரிமம் பெற்ற கைடு அவர், அவ்வளவுதான்.  கும்பல் கும்பலாகக் குவிகிற மக்களிடையே புகுந்து அவர்களுக்குத் தேவையான மொழி இன்னதென்று தேர்வு செய்த மாத்திரத்தில் அடுத்த கணம் அவர்கள் அவ்வளவு பேரையும் தன்வசம் கொண்டுவந்து விடுவார்.  பிறகென்ன 'பைடு பைப்பர்'  கதையில் வருகிற இனிய இசையைப் பெருக்கிச்   செல்லும் குழலூதுவோனாக அவர் செல்ல, பைப்பர் பின்னே சென்ற எலிகளைப் போலவோ, குழந்தைகளைப் போலவோ சுற்றுலா வந்த கூட்டம் ஆர்வத்தோடு  பின்தொடர்வது சாதாரண காட்சி.

ஒரு சிறிய டார்ச் லைட், மிகச் சிறிய கண்ணாடி, ஓர் ஈர்க்குச்சி சகிதம் அவரது வழிகாட்டும் படலம் பிரதான கோவிலிலிருந்து தொடங்கும்.  பிரமிக்க வைக்கும் கல் தூண்கள், முகப்புத் தோரணங்கள், சின்னஞ்சிறு சிற்பங்கள்  என்று ஒன்று விடாமல் காட்டியபடி பேசிச் செல்வார் கேசவர். அவரது அசத்தலான ஆங்கில வருணனையில் சொக்கிய அந்நிய தேசத்தவர் பலர் சிற்பத்தைவிட அவரை அதிகம் அதிசயித்தபடி நகர்வார்கள்.

இன்றைய அடுத்த கோஷ்டி எங்கிருந்தோ என்றபடி மனசுக்குள், "கேசவா, எல்லாம் நீ அளக்கற படி" என்று சொல்லிக் கொண்டார்.  கர்நாடக மாநிலத்தின் உள் மாவட்டம் ஒன்றிலிருந்த அந்தச் சரித்திர பேராலயம் இப்படி எத்தனையோ  பெருமூச்சுக்களை உட்கொண்டு கிண்ணென்று இருந்தது. கருவறையின் மீது பெரிய விமானமும், சுற்றிலுமிருந்த கற்சுவர்களில் அசத்திக் கொண்டிருந்த வேலைப்பாடுகளுமாக ஈர்த்துக் கொண்டிருந்தது கோவில்.  'என்ன உன் வேலைகள்,  பெரிய வேலைகள்! எல்லாவற்றையும் உதறிப் போட்டுவிட்டு வந்து உட்கார் இங்கே ஒரு விநாடி' என்கிற மாதிரியான ஒரு கம்பீரம் விகசிக்க நின்றிருந்த தலத்தின் வாசலில் தமிழகத்திலிருந்து வந்திருந்த ஒரு பயணிகள் கூட்டம் சளசளவென்று பேசிக்கொண்டு நுழைந்தது.

(2)

கோவில் வாசலருகே இருந்த இளநீர்க் கடைக்காரி கடந்து போகிறவர்களை இரைந்து இரைந்து அழைத்துக் கொண்டிருந்தாள். அவளது தடித்த உடல்வாகுக்கு ஈடு கொடுக்க மாட்டாமல் அழுக்குப் பச்சை நிறத்திலிருந்த மெல்லிய சேலை பரவித் தோற்றுப் போய் நெளிந்தது. அரிவாள் வைத்திருந்த கையோடு முழங்கை முட்டினை நெற்றிக்குக் கொண்டுபோய் வியர்வையை வழித்து விட்டுக் கொண்டபடி தொடர்ந்து கூவியபடியும், எதிரே நிற்பவர்களுக்கான காய்களை ஒரு விற்பன்னருக்குரிய தேர்ச்சியோடு பொறுக்கி எடுத்து வீச், வீச்சென்று வெட்டி இளநீர் மேலே தெறிக்க அநாயாசமாக அவர்களிடம் ஸ்டிரா போட்டு நீட்டிக் கொண்டிருந்தாள். அதே வேகத்தில் குடித்துவிட்டு காயை நீட்டியவர்களிடமிருந்து வாங்கி பளுக் பளுக்கென்று அதைப் பிளந்து வழுக்கையை வெட்டியெடுத்துத் தருவதும், ஒன்றுமற்ற ஓடுகளை சுவாரசியமற்று அருகே மலையாகக் குவிந்திருந்த மட்டைகளின்மீது எறிவதும், காசை எண்ணி எண்ணி வாங்கி மீதி தருவதும், இடுப்பில் முடிந்து கொள்வதுமாக ஓர் அதிரடி மின்னல் வேலைக்காரியாக சுழன்றடித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு இந்த விடுமுறைக் காலங்கள் முக்கியமானவை.  காய்ச்சல் கண்டிருந்தாலும் வம்படியாகக் கடையைப் போட்டு நின்றுவிடுவாள். 'என்ன சம்பாதித்து என்ன சுகம் கண்டோம்' என்று அவளுள்ளிருந்தும் பெருமூச்சு எழாத நாள் கிடையாது.  அவளது பிரார்த்தனைகள் கோவிலுள் நுழையக் காணோம்.  அவை வாசலில் திரண்டிருந்த மட்டைக் குவியலின்மீது மோதி மோதி உடைந்து நொறுங்கிக் கொண்டிருக்கக் கூடும்.

தமிழகப் பயணிகள் குழுவில் ஒரு குழந்தை, 'அப்பா இளநீர்' என்று கையைப் பிடித்து இழுத்தது.  திரும்பி வரும்போது பார்த்துக்கலாம் என்ற வார்த்தைகளோடு குழந்தை இழுபட்டு உள்ளே சென்று மறைந்து விட்டது.  இளநீர்க் கடைக்காரி நாகலட்சுமிக்குச் சற்று ஓய்வு கிடைத்தாற்போலிருந்தது.  எதிரே டீக்கடையைப் பார்த்து சைகை செய்துவிட்டு எந்த திட்டமிட்ட உருவிலுமில்லாதிருந்த ஒரு மர ஸ்டூலின்மீது உட்கார்ந்து டீ வரக் காத்திருந்தாள் நாகலட்சுமி.

சூடான டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கத் தவிர்க்க மாட்டாதபடி அவளது தம்பி மாதேஷின் நினைவு வந்தது.  'ஊருக்குப் பூரா சூட்டைத் தணிக்கிற சரக்கை வித்துட்டு, நீ எதுக்கு அக்கா இந்த உருப்படாத டீயை உறிஞ்சிட்டு நிக்கறே' என்று சிரிப்பான் அவன்.  அதென்னவோ சிறு வயசிலருந்து டீக்கு அடிமைப்பட்டு வளந்தாச்சு.  போதாததற்கு இந்தக் கழுத டீ அதிகம் போனா நாலு ரூபா.  ஒரு இளநீர் குறைஞ்சா பதினஞ்சு ரூபா இல்ல நஷ்டம்....

வேண்டாம், அவன் நெனப்பு வேண்டாம் என்று பதறியது மனது. இளநீரை மட்டும்   வெட்டிக் கொண்டிருந்த அரிவாள் அப்பாவியாக அந்தக் கதையைத் தனக்குள் ஒளித்துக் கொண்டு இளநீர்க் குவியலிடையே ஒருபக்கமாக ஒளித்துப் படுத்திருந்தது.  சூடான டீ உள்ளே இறங்கியதாலோ, மாதேஷின் நினைவு எழுப்பிய  வெப்பமோ குப்பென்று பெருக்கெடுத்த வியர்வையை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் நாகலட்சுமி.

உள்ளே நுழைந்த கூட்டம் வெளியில் வர எப்படியும் முக்கால் மணி நேரம் எடுக்கும் என்று அவளுக்குத் தெரியும்.  வேறு டூரிஸ்ட் பஸ், கார் வரக் காத்திருக்கத்  தொடங்கினாள் அவள்.  வயதான அப்பா சாப்பாடு எடுத்துவர எப்படியும் மணி இரண்டரை, மூன்றாகி விடும்.  அதுவரை அசைபோடவோ என்னவோ மாதேஷ் நினைவு மீண்டும் மீண்டும் சுழன்றடித்தது உள்ளே.....

(3)

உள்ளே கேசவய்யங்கார் தமிழில் இதிகாச, புராணக் கதைகள் சகிதம் சிற்பக் காட்சிகளை அறிமுகப்படுத்தலானார்.  வந்த இருபத்து நாலு பேரும் ஒவ்வொரு தினுசாகக் கதையை வாங்கியபடி அவரோடே நடந்தனர்.  புதுமண ஜோடி ஒன்று பரஸ்பர ஸ்பரிசத் துள்ளலில் திளைத்தவண்ணம் சிற்பங்களை நோக்கிக் கொண்டு வந்தது. உடன் வந்த பெரியவர் ஒருவர் நர்த்தன விநாயகர் உருவைக் காட்டித் தலையில் குட்டிக் கொண்டு நடந்தால் இந்த இரண்டு வாலிபமும் வேறு எதையோ காட்டிக் காட்டிச் சிரித்தபடி சென்றது. சிறுவர் கும்பல் கம்பங்களைத் தொடுவதும், அண்ணாந்து பார்த்து அசந்து போவதுமாக ஆட்டமும் பாட்டமுமாக நகர்ந்தது.

கேசவய்யங்கார் நடு நாயகமாகக் கூட்டத்தினிடையே நின்று ஹொய்சாள வம்சம் கட்டிய விஷ்ணு ஆலயத்தின் அருமை பெருமைகளை கன்னடத்தில் நனைந்த தமிழில் விளக்க ஆரம்பித்தார்.  ஹோய் சாலா என்றால், 'சாலா அதை அடித்துக்    கொல்' என்று பொருள்.  சாலா என்ற மன்னன் தன்னைத் தாக்க வந்த புலியை ஒற்றைக் கையால் அடித்துக் கொன்ற வீரத்தைப் பற்றியே ஹோய்சாள வம்சம் என்ற           பெயராயிற்று.  அதனாலேயே சாலா பெயர் நிலைத்தது போலவே, சாம்ராஜ்யத்தின் சின்னமாக அந்தப் புலியும் அமரத்துவம் பெற்றது என்று ஏதோ தனது கொள்ளுத் தாத்தாவின் புகழைப் பரப்புகிற தொனியில் துவங்கினார் கேசவர்.  ராஜாக்களின்   பெயரை கணினியில் பார்த்துப் படிக்கிற வேகத்தில் சொல்லிக் கொண்டு போனார். சமணராயிருந்த மன்னனை ராமானுஜர் வைஷ்ணவனாக்கிய கதை,  விஷ்ணுவர்த்தனின் ஜைன பத்தினி சாந்தலாவின் அபார நாட்டியத் திறன், அவளையே சிலை வடித்திருந்த கோலம், அலங்காரத் தூண்கள், அவற்றின் தயாரிப்பிலிருந்த அசாத்திய உழைப்பு.....என ஆற்றோட்டமாக ஓடிக் கொண்டிருந்தது அவரது பொழிவு.

ஒரு தகவல் விடாது குறித்துக் கொண்டே வேகவேகமாக அவரோடு நடைபோட்டு வந்தவர்கள், சொல்லும்போது எங்கோ பராக் பார்த்துவிட்டு அவரைத் திரும்ப முதலிலிருந்து சொல்லச் சொல்லிக் கேட்டவாறும் சில பயணிகள், வரலாற்றில் ஆழ்வதைவிட, கதைகளில் மிதப்பதைவிட அவர் காட்டும் ஒவ்வோர் உருவையும் கடவுளின் அவதாரமாகக் கருதி பக்திபூர்வமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டும், கண்களை இறுக்க மூடி 'பரமேஸ்வரா, நாராயணா, ஸ்ரீ ஹரி..' என்று ஜபித்துக் கொண்டும் நடந்தவர்கள்.... என வகை வகையாய்க் கலந்து வருபவர்கள் தமிழகப் பட்டியலிலும் இருந்தார்கள்.

பிரகாரத்திலிருந்த மண்டபங்கள், விமானத்தின் மீதான சிற்பங்கள் ஒவ்வொன்றாய்க் காட்டி வருகையில் பலநேரம் நிமிர்ந்து பார்க்கக் கூடத் தேவையில்லாமல் சர்வ அநாயாசமாக அது அது இருக்குமிடம் ஒரு நூற்றாண்டாய்த் தமக்குப் பாடமானது மாதிரியான தோரணையில் சொல்லி வந்தார் கேசவய்யங்கார்.  உயரமான இடத்துச் சிற்பமொன்றின் நுட்பமொன்றை விளக்க வேண்டி வர, கைப் பிரம்பை உயர்த்தித்  தொட்டு எல்லோரும் பார்த்தாயிற்றா, பார்த்தாயிற்றா என்று கேட்டு விட்டு நகர்ந்தார். சிற்ப உருவம் ஒன்றின் காதில் நுழைத்த ஈர்க்குச்சி இன்னொரு காது வழியாக வருவதைக் காட்டி, "ஏதாவது விஷயம் சொன்னால் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுகிறவர்களைப் போல.." என்று சிரிக்காமல் சொல்லிச் சென்றார்.

பிரகார வெளியில் சிற்பங்களுக்கிடையேயான ஓர் இடைவெளியில் பாறை மீது தனது சட்டைப்பையிலிருந்து எடுத்த காந்தத் துண்டினை ஒட்ட வைத்து அங்கு உலோகக் கலப்பு இருப்பதை விளக்கினார். பெண்மணி ஒருத்தியின் தலைக்குளியல் சிற்பத்தில் அவள் அலசிக்  கொண்டிருந்த முடிக் கற்றையின் ஒவ்வொரு நுனியிலும் சேகரமாகித் திரண்டு கீழ்விழக் காத்திருந்த நீர்த்துளிகளைக்கூட விடாது சித்தரித்திருந்த பெயர்  தெரியாத சிற்பியை நினைக்குமாறு பயணியரைக் கேட்டுக் கொண்டார்.  அடுத்து தனது காலணியைக் கழற்றி சினத்தோடு குரங்கை விரட்டிக் கொண்டிருந்த பெண் சிற்பம். பிறகு தசாவதாரம்.  மகாபாரதப் போர். நடனக்காரர்கள். வாத்தியக்காரர்கள். யோகியர். சேடிப் பெண்கள் சூழ நங்கையர்.....சொல்லிக் கொண்டே வந்தார்.

கையில் தாங்கிப் பிடித்த கண்ணாடியில் தனது ஒப்பனையைச் சரிபார்த்துக்  கொண்டு நின்ற நடன நங்கை சிற்பத்தின் சொரூபத்தில் சொக்கி நின்றுவிட்ட ஒரு இளம்பெண் நோட்டுப்புத்தகத்தில் பென்சில் கோடுகளால் நிமிட நேரத்தில் அந்தச் சிற்பத்தைப் பிரதி எடுத்தாள்.  துவண்ட இடையும், அவளது ஒய்யாரமும், நுட்பமாகப் பதிவாகியிருந்த சின்னச்சின்ன வேலைப்பாடுகளுமாக மின்னிய அந்தச் சிலையை கேசவர் தர்ப்பணசுந்தரி என்று அழைத்தார்.  தர்ப்பண் என்றால் கண்ணாடி, சுந்தரி என்றால் அழகிய பெண் என்று ஏதோ ஏழாம் வாய்ப்பாட்டைச் சொல்வது மாதிரி  மொண மொணவென்று அவர் சொல்லிவிட்டுப் பட்டென்று அங்கிருந்து நகர்ந்தது வித்தியாசமாயிருந்தது. அந்த ஒயிலான நடனமாதுவிற்கு அவர் அத்தனை மரியாதை அளிக்காதது போலவும், தவிர்த்துவிட்டு நடப்பது போலவும் கூடத் தோன்றியது.

முக்கால் மணி திட்டத்திற்குள் கிட்டத்தட்ட எல்லாம் சொல்லி முடித்துவிட்டு இறுதியாக உயரமாக நின்ற பெருந்தூண் ஒன்றின் எதிரே எல்லோரையும் கொண்டு நிற்க வைத்தார்.  "40 அடி உயரமுள்ள தூணை பாருங்கள்.  20,000 கிலோ எடை" என்றார்.  "எந்தச் சூறைக் காற்று, பேய் மழைக்குக் கூட சாயாது ஒன்பது  நூற்றாண்டுகளாக நிற்கிற அதிசயத்தைப் பாருங்கள்" என்று அடுக்கிக் கொண்டே போனார். தயாராக வைத்திருந்த செய்தித் தாளின் இரண்டு பக்கங்களை அதன் அடியில் நுழைத்து, செங்குத்தாக நிற்கும் அந்தத் தூண் எப்படி தனது புவி ஈர்ப்பு மையத்தின் சரியான புள்ளியின் நின்று கொண்டு கீழே எந்த ஒட்ட வைத்தலுமின்றி விழாமலும் நிற்கிறது என்று காட்டி பரவசப்படுத்தினார்.  சிறுவர் கும்பல் கை தட்டி ஆரவாரித்தது.

 

                   (4)


கோவிலுக்குள் நுழைந்த கும்பல் இன்னமும் வெளியே வராதிருக்க மாதேஷின் நினைவுகள் நாகலட்சுமியை ஆட்கொண்டிருந்தன.

மேற்படிப்புக்கு என்று பெங்களூர் போனவன் மேற்சாதிப் பெண்ணைக் கட்டிக்  கொண்டுவந்து நிற்பான் என்று யார் நினைத்தார்கள்...அன்றைய இரவு பாழிரவானது.  நாகலட்சுமி எவ்வளவோ தடுத்தும், அப்பா கோபத்தில் எடுத்த அரிவாள் திசை மாறி அம்மா மண்டையில் மோதி குற்றுயிரும் குலையுயிருமாக விழுந்தவள் எழுந்திராமல் படுத்திருக்கிறாள் இன்னும் அன்று விழுந்தபடியே.

மாதேஷ் ஓடிப் போனவன் பின்னொரு போதும் அந்த அழிந்த நகரத்தின் வரலாற்றுத் தடங்களைத் தேடி வரவில்லை. இரட்டை சரித்திர பிரசித்தமாய் அருகிலிருந்த இந்தக் கோவில் நகரத்திற்குக் குடும்பத்தோடு குடியேறிய சுவாரசியமற்ற கதையில் அப்புறமும் எத்தனை கசப்பான வாழ்க்கைப் பதிவுகள். இளநீரைக் குடிக்கிற வரை இனிப்பா, உப்பா என்பதன் புதிர் அவிழாத மாதிரிதானே அமைகிறது வாழ்க்கைப் பயணமும்..............

சேலைத் தலைப்பை எடுத்து வெயிலுக்குப் பாதுகாப்பாய் தலையைச் சுற்றிக் கொண்டு கூட்டத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் நாகலட்சுமி.

(5)

மெதுவாக, எங்கே துவங்கினாரோ அந்த இடத்தருகே வந்து நின்று கை கூப்பி எல்லாம் முடிந்தது என்று சூசகமாக உணர்த்தினார் கேசவய்யங்கார்.  அவரவர் கையில் திணிக்க வந்த உபரி கரன்சி நோட்டுக்களை உலர்ந்த ஒரு புன்னகை மூலம் மறுத்துக்  கொண்டார்.  ஏற்கெனவே ரசீது போட்டு வாங்கிக் கொண்ட               தொகைக்கு மேல் தம்படி கூடப் பெறக் கூடாது, பெறவும் மாட்டேன் என்றும்   சொன்னார்.  சிலர் அவரது கைகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர். புது மண ஜோடி அவரது காலில் விழுந்து ஆசிர்வதிக்கக் கேட்டுக்  கொள்ளவும், அடுத்த விஜயம் குழந்தை குட்டிகளோடு வரவேணும் என்று எல்லோரையும் சிரிக்க வைத்து வாழ்த்தினார்.

ஒருவழியாகக் கூட்டம் முழுக்க வாசல் பக்கம் செல்லவும், நோட்டுப் புத்தகமும், பென்சிலும் கையுமாய் அலைந்த அந்த இளம்பெண் மட்டும் மற்றவர் நகரக் காத்திருந்த மாதிரி அருகே வந்து, "சாமி, ஒண்ணு கேட்கணும்" என்றாள்.      'சொல்லம்மா' என்பது மாதிரி பார்த்தார்.

"ஏன் தாத்தா, சின்னச் சின்ன சிற்பத்தை எல்லாம் எப்படி சுவாரசியமாச்   சொல்லிட்டு வந்தீங்க...தர்ப்பண சுந்தரி கிட்ட வரும்போது விடுவிடுன்னு தாண்டி வந்த மாதிரி இருந்தது...ப்ளீஸ்...கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்..." என்றாள்.
"முடிஞ்சு போச்சு, இன்னும் அதில் விளக்க என்ன இருக்கிறது", என்றார்.

அவள் ஏதோ கேட்கத் துவங்கவும், கைகளைக் கூப்பி "என் ஜென்ம பிராரப்தம், எல்லாம் முடிஞ்சு போச்சு, கேட்காதே சுந்தரியைப் பற்றி" என்று கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

திடுக்கிட்டுப் போன அந்த இளம்பெண், "சரி எனக்காக இந்த புத்தகத்தில்   கையெழுத்தாவது போட்டுக் கொடுங்க" என்றாள்.  விரித்து வைத்த புத்தகத்தின் இடப்புறம் இருந்த புகைப்படத்தைப் பார்த்த மாத்திரத்தில் கேசவர் அதிர்ந்து போய், "யார் இது படத்துல, என் ரூபசுந்தரியா" என்று கன்னடத்தில் இரைந்து வெடித்து அழ ஆரம்பித்தார்.  தலையில் கையை வைத்துக் கொண்டு கைத் துண்டால் வாயைப் பொத்தியவாறு விம்மத் துவங்கினார்.

அக்கம் பக்கம் பார்த்தவாறு சட்டென்று சுதாரித்துக் கொண்டு துக்கத்தைத் தணித்துக் கொண்டவர், "கேசவா, பெருமாளே...யாரம்மா நீ,  குழந்தே என் கிட்ட வா" என்றார்.

"முடியாது தாத்தா, நான் கிட்ட வரக் கூடாது, தீண்டத் தகாத பிறப்பு எனது" என்றாள்.

அதிர்ந்து போய் நின்றார் கேசவய்யங்கார்.  சட்டென்று துலங்கிவிட்டது எல்லாம்.

"ஈஸ்வரா, ஈஸ்வரா" என்று தலையில் அடித்துக் கொண்டவாறு, "எங்கே உங்கம்மா" என்றார்.

மல்லேஸ்வரம் சீனிவாச பெருமாள் கோவிலில் பட்டராக இருந்த காலங்கள் கேசவய்யங்காரின் கண் முன் வந்து நின்றது. ஒரே ஒரு பெண் குட்டி. ஆசை ஆசையாய் வளர்த்தார்.  இந்த   க்ஷணம் நாட்டிய வகுப்பில் சேருவேன் என்று ஒற்றைக் காலில் நின்று அடம்பிடித்தாள் ரூபசுந்தரி.  கல்லூரிக் காலத்தில் ஒருநாள் 'நாட்டிய நிகழ்ச்சிக்குப் பெயர் கொடுத்திருக்கிறேன், இன்னிக்கு ரிகர்சல்", என்று   சொல்லிவிட்டுப் போனவள் திரும்ப வரவில்லை.  கேசவர் அலைந்து திரிந்ததுதான் மிச்சம்.

ஆறு மாதம் கழித்து ஒரு நள்ளிரவில் வந்து கதவைத் தட்டினாள், தனியாக அல்ல. அருகில் இருந்தான் மாதேஷ்.  தாலிக் கயிற்றைக் காட்டி அழுதாள்: " தெரியாம ஆயிடுத்து, மன்னிச்சு ஆசிர்வாதம் பண்ணிடுங்கோப்பா", என்று கதறினாள்.  அவன் என்ன ஜாதி, என்ன கோத்திரம் என்று நிர்த்தாண்சட்யமாகக் கேட்டார்.

அவள் ஏதும் சொல்லுமுன், மாதேஷ் சொல்லிவிட்டான்.

"நீச ஜன்மங்களா, வெளியே போங்கோ, நிக்கக் கூடாது என் கண் முன்னால...." என்று கதவை அறைந்து சாத்தினார்.  அம்மாக்காரி அலமேலு அடித்துக் கொண்டு அடித்துக்  கொண்டு அரற்றிப் பார்த்தாள்.  அவர் அசையவில்லை.  அடுத்து அவள் வாழ்ந்த ஒன்றரை வருடங்களும் அவரிடம் ஒற்றை வார்த்தை பேசாமலேயே வைராக்கியமாய் இருந்து போய்ச் சேர்ந்தாள்.

தனியராய்ப் போன கேசவய்யங்கார் சிதறிப் போன வாழ்விலிருந்து மீண்டு வந்து இப்படி வரலாற்றுத் தடமாகிவிட்ட கோயிலுக்கு வழிகாட்டியாகக் குடியேறி உட்கார்ந்திருக்கிறார்.

"எங்கேம்மா கண்ணு, உங்கம்மா எங்கே" என்று மீண்டும் அந்த இளம் பெண்ணிடம் கேட்டார் கேசவய்யங்கார்.

"நான் உங்க பேத்தி இல்ல தாத்தா.." என்று நிறுத்தி அவரை நோக்கினாள் அவள். குழப்பமடைந்த அவரது கண்களைப் பார்த்தவாறு, "ரூப சுந்தரியோட மாணவி நான்.  சென்னையில் டான்ஸ் கத்துக்கிட்டேன் அவங்க கிட்ட....இப்போ எங்கே இருக்காங்கன்னு தெரியாது..." என்றாள்.

ஏமாற்றமாக அவளை நோக்கினார் கேசவர்.

"சாரி தாத்தா...பஸ்ல தேடிட்டு இருப்பாங்க...நான் புறப்படுறேன்..."  என்று வேகமாக அவரிடமிருந்து விலகி நடந்தாள்.

அவள் கோவில் வாசலை எட்டியபோது கூட வந்தவர்கள் ஐஸ் கடை, டீக்கடை என்று பிரிந்து அவரவர் வேலையில் மும்முரமாக இருக்க, இவள் நிதானமாக இளநீர்க்கடையில் போய் நின்றாள்.

"நல்ல தண்ணிக் காயா ஒண்ணு வெட்டிக் கொடுங்க அத்தை..." என்று நாகலட்சுமியைப் பார்த்து அவள் கன்னடத்தில் கேட்கவும், "அத்தையாம் அத்தை, இது கூட ஜோராத் தான் இருக்கு", என்று சொல்லிச் சிரித்தபடி பதமான இளநீர் ஒன்றை எடுத்துச் சீவத் தொடங்கினாள் நாகலட்சுமி.

அதற்குள் உடன் வந்தவர்கள் யாரோ அந்த இளம்பெண்ணிடம் வந்து சீக்கிரம் புறப்படச் சொல்லவும், அவள் நிதானமாக, "பல நாள் தேடிக் கிடைக்காத இடத்தையும் என் சொந்தங்களையும் இப்ப தான் கண்டுபிடிச்சிருக்கேன். எனக்கு இங்கே கொஞ்சம் வேலை இருக்கு. என் பெட்டியை மட்டும் இறக்கிக் கொடுத்துட்டு நீங்க எல்லாம் புறப்படுங்களேன்...." என்றாள்.

மதியச் சாப்பாடிற்காகக் கோவிலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்த கேசவய்யங்காரின் முகத்தில் குழப்ப ரேகைகள் விடைபெறாமல் இருந்தன.  ஒட்டும் உறவுமற்றுத் தன் பிடிமானத்தில் தானே நின்று கொண்டிருப்பதான கல் தூணாய்க் கம்பீரமாக இருப்பதாக நினைத்திருந்த அவரது வாழ்வை ஒரு குமரிப் பெண் குறுக்கிட்டு அசைத்து விட்டு நகர்ந்து விட்டாள். மனம் எங்கோ சிக்குண்டு தவிக்க, வெற்றுப் பாதங்கள் சாலையின் சூட்டினை ருசித்தபடி வீட்டை நோக்கி நடந்து  கொண்டிருந்தன.

தன்னை நினைத்தபடியே தான் இருப்பது அறியாமல் தன்னைக் கடந்து போய்க் கொண்டிருக்கும் அவரைப் பார்த்தபடி இளநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த இளம்பெண்.

கருத்துகள்

12 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. The pain and agony of Kesave is briealently portrayed by SVV.Kesav"s feelings are pan indian.Nagalakshmi is beautyfully jaxtoposed.The subterinian picturisation of the curse of castisym is SVV"s finest stroke........Kashyapan.

    பதிலளிநீக்கு
  2. மறுபடி மறுபடி படித்தாலும் திகட்டாத சிறுகதை.. இத்தனை செறிவாய் தற்போது எழுத்துக்கள் வருவதில்லை என்பதில் பெருமூச்சும்.. வாசிக்கக் கொடுத்ததற்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  3. வேண்டாம், அவன் நெனப்பு வேண்டாம் என்று பதறியது மனது. இளநீரை மட்டும் வெட்டிக் கொண்டிருந்த அரிவாள் அப்பாவியாக அந்தக் கதையைத் தனக்குள் ஒளித்துக் கொண்டு இளநீர்க் குவியலிடையே ஒருபக்கமாக ஒளித்துப் படுத்திருந்தது. சூடான டீ உள்ளே இறங்கியதாலோ, மாதேஷின் நினைவு எழுப்பிய வெப்பமோ குப்பென்று பெருக்கெடுத்த வியர்வையை சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள் நாகலட்சுமி............ super.


    இது என் முதல் வருகை. எழுத்து நடையிலும் அமுத மொழியிலும் அசத்தி விட்டீர்கள்.
    அருமையான சிறுகதை. சாத்தூர் பக்கம், நமக்கு புகுந்த வீடுங்கோ. ஊர் பக்கம் சுத்தி வந்த மாதிரி இருந்துச்சு, கதையை படிச்சப்போ. Thank you.
    http://konjamvettipechu.blogspot.com/

    பதிலளிநீக்கு
  4. ஜொலிக்கிறாள் "தர்ப்பண சுந்தரி"!

    பதிலளிநீக்கு
  5. ஒரு நல்ல சிறுகதைக்கான அழகியல் நிறைந்த செறிவான எழுத்து. அற்புதமான நடையும் கதையை நகர்த்திச் சென்ற தொனியும் அருமை. வேணுகோபாலன் அவர்களின் மற்ற சிறுகதைகளையும் இடுகையிடுங்கள் மாதவ் அண்ணா.

    பதிலளிநீக்கு
  6. நல்ல விவரிப்பு. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. புதிதாக எழுத வருபவர்களுக்கு கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன.

    வாக்கிய கட்டமைப்புகள்,வார்த்தைச்செறிவு,அலங்காரம் திகட்ட திகட்ட எழுதப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. எஸ்.வி.வி,

    இந்தக் கதையைப் படித்ததும் சந்தோஷமாய் இருந்தது. தாங்கள் சிறுகதைகள் எழுத வேண்டும் என தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருப்பேன். அது அழகாக நிறைவேறும்போது சந்தோஷமாக இருக்காதா....!

    மொழியும், நடையும் அழகு தோழா!

    பதிலளிநீக்கு
  9. இந்தக் கதையும், வார்த்தை பிரயோகங்களும், விவரிப்புகள் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது.

    பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. அன்புள்ள எஸ்.வி.வி. உங்களோட எழுத்துக்களை பலப் பல பத்திரிக்கைகளில் வாசித்திருக்கிறேன். எல்லா கதை மற்றும் கவிதைகளிலே கடைசிலே ஒரு முடிச்சு அவிழ்ந்து மனசு உடைஞ்சு போகும் அந்த தருணங்கள் நெஞ்சில் ரொம்ப நேரம் நின்றுகொண்டு அரற்றும். இந்த தர்ப்பணசுந்தரியும் அப்படித்தான். ரொம்ப நன்றி உங்களுக்கும், மாதவராஜிற்கும். எஸ்.வி.வியோட ப்ளாக் தனியா இருக்கா இல்ல செல்போன் உபயோகிக்கமாட்டேன்ங்கிற கொள்கையைப் போல் இதுவும் ஒன்னா? கே. நாகநாதன்., திருச்சி.

    பதிலளிநீக்கு
  11. அன்பு மாதவ்

    உங்களுக்கு எத்தனை முறை நன்றி சொல்வது என்று தெரியவில்லை.

    செம்மலர் ஜனவரி இதழில் வெளிவந்த கதையை நீங்கள் பார்க்கத் தான் அனுப்பியிருந்தேன். ஆனால் உங்களது ரசனையின் தூண்டுதல் உங்கள் வலைப்பூவில் வெளியிடவைக்கவும் அப்பாடா எத்தனை எத்தனை ரம்மியமான வாசிப்புத் தெறிப்புகள் ...காஷ்யபன் தொலைபேசியில் வேறு அழைத்து வெகு நேரம் சிலாகித்து வாழ்த்தியதை மறக்க இயலாது.

    பதிவு செய்து பாராட்டியிருக்கும் ஒவ்வொரு வாசகரின் அன்பு வாழ்த்துதலுக்கும் தலை வணங்குகிறேன். எனது கதைகள் அனைத்தையும் கோரும் அன்பு நெஞ்சத்திற்கு எனது பணிவான பதில், நான் அடிப்படையில் ஒரு ரசனை மிக்க வாசகன் மட்டுமே. எழுத்தாளன் அன்று. எல்லா அன்பு இதயங்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  12. மிக அருமை. தர்ப்பண சுந்தரி! அந்தப் பெண் ஏன் தாத்தாவிடம் தன்னை மறைத்துக் கொண்டாள்? அத்தையிடம் வெளிக்காட்டிக் கொண்டாள். அத்தைக்குத் தான் புரியவில்லை. பெரியவருக்குத் தன் சம்பந்தி குடும்பமும் அங்கேயே இருப்பது தெரியுமோ?

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!