மண் வாசித்த புத்தகங்கள்!

சனிக்கிழமை காலை பதினோரு மணியிலிருந்து புத்தகக் கண்காட்சியிலிருந்தேன். உள்ளே புழுக்கமும் வேர்வையுமாய் இருக்க, புத்தகங்களிலிருந்து காற்று வீசிக்கொண்டு இருந்தது. யாரிடமும் நிதானமாக பேசிட முடியவில்லை. பாரதி புத்தகாலயம் நாகராஜன் அவர்களிடம் ஒரு ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு காலச்சுவட்டில் நுழைந்துவிட்டேன். அப்புறம் அவர்  இருமுறை போன் செய்து, எங்கு இருக்கிறீர்கள் என கேட்டுவிட்டு, போகும்போது சந்திக்க வேண்டும் என்று சொல்லவும் செய்தார். சந்திக்கவில்லை.

வலைப்பக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட புத்தகங்களை முதன்முதலாக அப்போதுதான் வம்சியில் பார்த்தேன். நன்றாக வந்திருக்கின்றன. ‘பெருவெளிச்சலனங்களில்’ காத்திகைப் பாண்டியன் அவர்களது பதிவின் பாதி ஒரு பக்கம் தாண்டிச் சென்று இருந்தது.  அதாவது 47ம் பக்கத்திற்கு பிறகு 46 வந்து விட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து 48ம் பக்கம் வருகிறது. கஷ்டமாக இருந்தது. ‘புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வந்துவிட வேண்டுமென்கிற அவசரம். பிரிண்டிங், பைண்டிங்கில் பிசகு” என்று பவாவும் வருத்தப்பட்டார்.

அவ்வப்போது வந்து “இந்தப் புத்தகம் வாங்கி விட்டீர்களா, இதை வாங்கலாமா?” என நான் நின்றிருந்த ஸ்டால்களில் எல்லாம் தோன்றி, உமா மகேஸ்வரன் கேட்டுக் கொண்டு இருந்தார். சிரித்த முகத்துக்காரர். கும்க்கியோடு சுற்றினேன். சட்டென்று நெருக்கமாகிவிடும் மனிதர். மணிகண்டன் அவர்களை பார்த்தேன். சாரு நிவேதிதா உயிர்மையில் யாருக்கோ புத்தகத்தில் கையெழுத்திட்டுக் கொண்டு இருந்தார். இடையில் வெளியே வந்து வெட்டி வைத்த பழத்துண்டுகள் சாப்பிட்டு மதிய உணவை முடித்துக்கொண்டோம். நான்கு மணிக்குப் போல வெளியே வந்த பிறகு “என்ன அண்ணா, எங்க இருக்கீங்க?” என்று போன் செய்தார் நிலாரசிகன்.

 

ஞாயிற்றுக் கிழமையும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். இதற்குமுன்னர் இருமுறை அவசரமாக சென்னைக்கு வந்து சென்ற போதும் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களைப் பார்க்க நேரமில்லாமல் போயிருந்தது. இந்த தடவை பார்க்க வேண்டும் என்றிருந்தேன். காலையில் அவர்களே போன் செய்து “எப்போ வர்றீங்க..”என்று கேட்டு விட்டார். இரண்டு மணிநேரம் அவரோடு இருந்தேன். அம்முவை, குழந்தைகளை விசாரித்தார். வலைப்பக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட புத்தகங்களை கொடுத்தேன். லேசாக புரட்டிப் பார்த்துவிட்டு, “நல்ல விஷயம்” என்றார். ஒரு ஆப்பிளை எடுத்து நறுக்கித் தந்தார். புத்தகக் கண் காட்சி குறித்து கேட்டுக் கொண்டார். ‘புகை மற்றும் தண்ணீரை’ சுத்தமாக விட்டு இரண்டு வருடத்திற்கும் மேலாகிறது. கொஞ்சம் தளர்ந்திருந்தாலும் நிதானமாகவும், சாந்தமாகவும் இருக்கிறார். மௌனமான நேரங்களில் டி.வியில், ராமாயணத்தில் அவரது கண்கள் இருந்தன. முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து அவரது எழுத்துக்களை ஓரளவு அறிந்திருக்கிறேன். இருபது வருடங்களாக அவரை நெருக்கத்தில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். அவரது பக்கங்களை புரட்டிக்கொண்டு இருந்தேன்.

மதியம் ஒரு மணிக்கு மேல் புத்தகக் கண்காட்சிக்கு சென்று, அவசரம் அவசரமாக 6.30க்கு பஸ்ஸை பிடிக்க முடியும் எனத் தோன்றவில்லை. தீபா வீட்டில் சாப்பிட்டுவிட்டு, தூங்கி விட்டேன். எஸ்.வி.வேணுகோபலன் போன்செய்து “என்ன நீங்கள் புத்தகக் கண்காட்சி வரலையா” என்றார். பவா போன் செய்து. “என்ன மாது, இன்னிக்கு நீங்கள் வந்திருக்கலாமே.... நிறைய பேர் உங்களை விசாரித்தார்கள், இதோ சென்ஷியிடம் பேசுங்கள்’ என்றார். எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. நான் பேசியது அவருக்கு சரியாக கேட்கவில்லை. பிறகு பேசுகிறேன் என்றார். இன்னொருவரும் பேசினார். அவர் பேசியதும், நான் பேசியதுமே சரியாக கேட்கவில்லை. தண்டோரா பேசினார். பஸ்ஸிற்கு காத்து நிற்கும்போது “அமிர்தவர்ஷிணி அம்மாள்” வந்திருந்தாங்க என்றார் பவா. போன் செய்து அவர்களுக்கு வாழ்த்து சொன்னேன். நிச்சயம் அடுத்த வருடத்திற்குள் அவரது எழுத்துக்கள் ஒரு தொகுப்பாக வரும் என நம்பிக்கை இருக்கிறது.

வண்ண வெளிச்சங்களால் நிரம்பிய சென்னையை விட்டுக் கிளம்பினேன். டாஸ்மார்க் ஒன்றில் வெளியே, சாலையோரம் நின்றபடியே சிலர் குடித்துக்கொண்டு இருந்தனர். இரண்டு பேர் கடுமையாக விவாதித்துக் கொண்டு இருந்தனர். வாகனங்கள் நிரம்பிய சாலை அலுப்பைத் தந்தது. வண்டலூர் தாண்டியபிறகு இருட்டுக்குள்ளும், குளிருக்குள்ளும் பஸ் பயணமானது. பின்னாலிருந்த ஒருவர் “சார் ஜன்னலை சாத்துங்க” என்றார். டி.வியில் தனுஷ் குத்திய குத்தில் தடிமனான ஒருவன் கார் கண்ணாடியையெல்லாம் உடைத்துக்கொண்டு விழுந்தான். தப்பிக்க தூக்கம் வரவில்லை.

 

காலையில் 4.30 மணிக்கு சாத்தூர் வந்து சேர்ந்தேன். எங்கும் ஈரமாயிருந்தது. நேற்று மழை பெய்திருக்க வேண்டும். பஸ்ஸை விட்டு இறங்கினேன். அந்த ஆம்னி பஸ்ஸின் பின்னால் வைத்திருந்த அட்டைப்பெட்டியை எடுத்து தரச் சொன்னேன். அந்தத் தம்பி வேகமாகவும், அலட்சியமாகவும் எடுத்து வைக்க, அட்டைப் பெட்டையின் கீழ் பாகம் கிழிய புத்தகங்கள் சடசடவென்று சரிந்தன. மண் வாசித்துக்கொண்டு இருந்தது எழுத்துக்களை.

கருத்துகள்

23 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //மண் வாசித்துக்கொண்டு இருந்தது எழுத்துக்களை//

    :-) ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இனிமையான பகிர்வு.

    அந்த வலைப்பதிவுகளின் தொகுப்பு புத்தகத்தை நானும் வாங்கியுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. அனுபவப் பகிர்வு ரொம்ப நல்லா இருக்கு சார்.

    பதிலளிநீக்கு
  4. தாங்கள் வாங்கிய புத்தகங்களை பட்டியல் இடலாமே ?

    பதிலளிநீக்கு
  5. //மண் வாசித்துக்கொண்டு இருந்தது எழுத்துக்களை//

    அங்கிருந்துதானே எல்லாமே வந்தது, அங்குதானே எல்லாமே போகவும் போகிறது.

    இந்தப்பதிவை முடித்தவிதம் மிகவும் அருமை.

    தங்களிடம் பேசியது அதுவும் அமித்துவை அருகாமையில் வைத்துக்கொண்டு உங்களிடம் பேசியது மிகுந்த மனநிறைவைத்தந்தது.

    பதிலளிநீக்கு
  6. அழகான நடையில் அருமையான பகிர்வு.

    ////தப்பிக்க தூக்கம் வரவில்லை.////

    சிரித்தேன்.

    ////மண் வாசித்துக்கொண்டு இருந்தது எழுத்துக்களை.////

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  7. சுவாரசியமான பகிர்வு! :-)
    இடுகையின் தலைப்பை மிகவும் ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  8. ஐயோ அண்ணே..!

    ஒரு வார்த்தை போன் செய்திருந்தால் ஓடி வந்திருப்பேன்..!

    இனி தங்களைச் சந்திக்க சாத்தூருக்குத்தான் வர வேண்டும்..!

    பதிலளிநீக்கு
  9. அதன் பின் புத்தகங்களுக்கு என்ன ஆச்சு..? மழை என்று வேறு சொன்னீர்கள்..?

    பதிலளிநீக்கு
  10. மாதவராஜ்,

    அருமையான பகிர்வு.நான் புத்தக கண்காட்சிக்கு நான்கு மணியளவில் வந்து ஏழு மணி வரை இருந்தேன்.

    ம்ம்..உங்களை சந்திக்க தவறியது வருத்தமே!!

    பதிலளிநீக்கு
  11. i was with shenshsi and was given a chance to talk to u. but not able to hear properly. the person you mentioned is me , a regular reader of your writings. i had come to the book fair mainly to meet you but missed it. giving comment for the first time. happy i bought all those books . nice writings

    பதிலளிநீக்கு
  12. அன்பின் மாதவராஜ்

    சென்னைப் பயணத்தைப் பற்றிய பதிவு

    இறுதியில் நூலின் எழுத்துகளை வாசிக்கும் மண்துகள்கள் - கற்பனை அருமை அருமை

    நல்வாழ்த்துகள் மாதவராஜ்

    பதிலளிநீக்கு
  13. தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மாதவராஜ் சார்! கண்காட்சிக்கு வந்தவுடன் முதலில் வம்சி புக்ஸ்-க்குத் தான் வந்தேன். அங்கேயே தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

    //உள்ளே புழுக்கமும் வேர்வையுமாய் இருக்க, புத்தகங்களிலிருந்து காற்று வீசிக்கொண்டு இருந்தது.//
    அருமை...

    பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. இப்படியெல்லாம் கொட்ட யாரால் இயலும்?

    உங்களை விட்டால்.

    பதிலளிநீக்கு
  15. தோழர்.,
    அந்த நகரமே எங்கும் பரபரப்புக்களினூடாகவும், பதட்டத்தினூடாகவும்தான் மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது போல.
    எத்தனை முறைகள் வந்தாலும் புறப்படுகையில் திட்டமிட்டபடி எதுவும் செய்ய முடிவதில்லை.
    நகரத்தின் ஊடான பயண நேரங்களே
    சலிப்பூட்டுவதாக அமைந்துவிடுவதும் ஒரு காரணம்.
    நல்ல வேளை., சீக்கிரமே உங்களை அங்கிருந்து அழைத்து வந்து விட்டேன்.
    இல்லையெனில் நீங்கள் பயணித்த ஆம்னி பஸ் கூட புத்தகங்களால் நிரம்பிய ஒரு டெம்ப்போவும் வந்திருக்கும்..
    மாலை வரை இருந்திருப்பின் இன்னும் அநேகம் நண்பர்களை சந்திக்க அமைந்திருக்கும்..
    தங்களை சந்தித்ததிலும், வெகு நேரம் உரையாடியதிலும் எனக்கும் மிக்க மகிழ்வு தோழர்..

    பதிலளிநீக்கு
  16. சங்கே முழங்கு!
    ரசித்ததற்கு நன்றி.

    விழியன்!
    சந்தோஷம் நண்பரே! படித்துவிட்டு சொல்லுங்கள்.

    நிலாரசிகன்!
    நானும்தான்....!


    மண்குதிரை!
    நன்றி.


    கிருஷ்ணன்!
    அப்புறம் சொல்கிறேன்...


    அமித்து அம்மா!
    ஆஹா... அப்போது அமித்துவும் கூட இருந்தார்களா...! சந்தோஷமாயிருக்கிறது.


    நவாஸூதின்!
    மிக்க நன்றி, நண்பரே.... நேற்றுதான் தங்கள் வலைப்பக்கம் வந்தேன். இனி தொடர்ந்து வர முயற்சிப்பேன்.


    செ.சரவணக்குமார்!
    நன்றி தம்பி.


    சந்தனமுல்லை!
    மிக்க நன்றி.


    உண்மைத் தமிழன்!
    ஞாயிறு புத்தகக் கண்காட்சிக்கு வந்தால் கண்டிப்பாகச் சொல்லியிருபேன். மன்னியுங்கள். அப்புறம், புத்தகங்களை துடைத்து எடுத்துக்கொண்டேன். பாதிப்பில்லை.


    லேகா!
    அப்படியா.....!
    எனக்கும் வருத்தமே.


    குப்பன் யாஹூ!
    நிச்சய்மாய் சந்திப்போம்.


    aalaivasi!
    நீங்கதானா...! ஆமாங்க , நீங்க பேசியது கேட்கவேயில்லை. ஆனாலும் சந்தோஷமாக இருந்தது.


    சீனா!
    நன்றி.
    ஆனால் கற்பனை இல்லை.


    உமா மகேஸ்வரன்!
    கண்ணுக்குள்ளேயே நிற்கிறீர்கள். கடைசியில் விடைபெறாமல் வந்துவிட்டேன்.சந்திப்போம்.


    பா.ரா!
    வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தங்களைத் தரமுடிகிறது உங்களால்!

    கும்க்கி!
    உங்களோடு இருந்த கணங்களும், நாம் பேசியவைகளும் நிழலாடுகின்றன. ரொம்பகாலமாய் பார்த்துப் பழகிய நண்பராகவே உங்களைப் பார்த்த கணத்திலிருந்து தோன்றியது. சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  17. ////மண் வாசித்துக்கொண்டு இருந்தது எழுத்துக்களை. //

    கூடவே அழைத்துக் கொண்டு போய்க் கடைசியில் அந்தரத்தில் மிதக்க விடுதுங்க உங்க எழுத்து..

    பதிலளிநீக்கு
  18. தங்களின் புத்தக கண்காட்சி அனுபவம் மிகவும் சிறப்பு.

    கடைசி வரிகள் கவலை தருவது எனினும் கவிதையாகத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  19. அடடா....வாசித்த மண்ணுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் பூங்கொத்து!

    பதிலளிநீக்கு
  20. சுவாரஸ்யமான அனுபவக் கட்டுரை.

    முன்னமே தெரிந்திருந்தால் சென்னை வரும்போது சந்தித்திருப்பேன்.

    மறுமுறை வரும்போது சொல்லுங்கள், சந்திக்க முயல்வோம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!