-->

முன்பக்கம் , � கொலைகாரன்

கொலைகாரன்

வந்து நின்ற பஸ்ஸிற்குள் நெருக்கியடித்து மக்கள் ஏறினார்கள். அரக்க பரக்க காலியாக இருந்த இருக்கைகளை நோக்கி விரைந்தனர். நடுவில் இருந்த வரிசையில் ஜன்னலோரம் துப்பாக்கியோடு ஒரு கான்ஸ்டபிளும், அவரையடுத்து கலைந்த முடியுடன் ஒரு இளைஞனும் உட்கர்ந்திருந்தனர். அதற்கடுத்த இருக்கை காலியாகத்தான் இருந்தது. வேகமாக அதை நோக்கிப் போனவர்கள், அருகில் சென்றதும் தயங்கியது தெரிந்தது. அவனது கைகளில் விலங்கு மாட்டபட்டிருந்தது. வேறு இருக்கைகளை நோட்டம் விட்டு அங்கிருந்து அகன்றனர். அவசரமாக அவன் அருகில் வந்து உட்கார்ந்த ஒருவர் சட்டென எழுந்து, வேறு காலியான இருக்கைகள் இல்லையென்பதைப் பார்த்து ஏமாற்றத்துடனும்,  தயக்கத்துடனும், மிகுந்த சங்கடத்துடனும் அங்கேயே அமர்ந்தார்.  கைகளை அசைக்க முடியாமல் அவன் உடலை மட்டும் அசைத்தவாறு கொஞ்சம் நகன்று அவர் வசதியாக உட்கார இடம் கொடுத்தான்.

அவரது கண்கள் அவ்வப்போது அந்த விலங்கை பார்த்தன. நரம்புகள் நெளிந்து ஓடிய, உறுதியான கைகளை அசையவிடாமல் செய்திருந்த அந்த உலோகம் மிரட்டுவதாயிருந்தது. பஸ்ஸின் ஓட்டத்தில் அவனது தோளும், புஜமும் அவரது உடலில் பட்டபோது என்னவோ போலிருந்தது. அருகிலிருந்த வரிசைகளில் இருந்தவர்களும் அவ்வப்போது திரும்பி அவனைப் பார்த்தனர். சகஜமற்ற பயணமாக இருந்தது. சிலசமயம் மனதைத் திடப்படுத்தி அவனது முகத்தை ஏறிட்டுப்பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டார் அவர். ஜன்னலுக்கு வெளியே சலனமற்று பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.  கான்ஸ்டபிள் தூங்கிக்கொண்டு இருந்தார்.

நகரமொன்றில் கான்ஸ்டபிளும் அந்தக் கைதியும் இறங்கி, சாலையில் நடந்தனர். போகிற, வருகிற, நிற்கிற, உட்கார்ந்திருகிறவர்களின் பார்வைகள் அந்தக் காட்சியில் ஒரு கணத்தையும் தாண்டியே நிலைத்து விலகின. அந்த இரண்டாம் நிலை மாஜிஸ்ட்ரேட் கோர்ட் வளாகம்  பல்வேறுத் தரப்பட்ட மனிதர்களால் நிரம்பியிருந்தது. அவர்களும்  பார்த்தனர். எல்லோரிடமும் ஒரு இறுக்கம் நிலவி, பிறகு மறைந்தபடி இருந்தது. "அதான்... அந்த வச்சக்காரப்பட்டியில நடந்துச்ச ரெட்டக் கொலை... இவந்தான்..”  யாரோச் சொல்லிக்கொண்டு இருந்ததைக் கடந்து சென்றான்.

வக்கீல் ஒருவர் அருகில் வந்து எதோ பேசினார். தலையை ஆட்டியபடி கேட்டுக்கொண்டு இருந்தான். கான்ஸ்டபிள் அவனது தோளைத்தட்டினார். கொஞ்சம் விலகி அந்த வேப்பமரம் நோக்கிச் சென்றார்கள். அங்கே இரண்டு முன்று கிராமத்து மனிதர்களும், குழந்தையோடு ஒரு பெண்ணும் நின்றிருந்தனர். அருகில் சென்றதும் அந்தக் குழந்தை அவன் மீது தாவியது. விலங்கோடு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கு அவன் பழக்கபட்டு இருந்தான். அழுத்தமாய் முத்தம் கொடுத்தான்.

*

Related Posts with Thumbnails

12 comments:

 1. கொலை காரனாக இருந்தாலும் தன் குடும்பத்துக்கும்முக்கியமானவன் தான் . அருமையான கதை

  ReplyDelete
 2. ....மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளையும்!

  ReplyDelete
 3. //அந்தக் குழந்தை அவன் மீது தாவியது. விலங்கோடு குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவதற்கு அவன் பழக்கபட்டு இருந்தான்//

  வலிக்கும் வரிகள்

  மிக அற்புதமான எழுத்து

  ReplyDelete
 4. அருமை.....!!!! ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணங்களால் அவன் கொலைலாயியானான்.....!! இருந்தாலும் அவனும் மனிதன்தானே என்று கடைசி வரியில் அழகாக கான்பித்துள்ளீர் தோழரே...!!!


  நல்ல பதிவு...!! வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 5. கடைசி வரிகள் மனதை விட்டகல மறுக்கின்றன.
  :-(

  ReplyDelete
 6. கடைசிப்பத்தி எத்தனையோ சொல்லுது.

  ReplyDelete
 7. நல்ல கதை. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். காட்சிகள் கண் முன் விரிகின்றன.

  இதுவரை அந்தக் குழந்தையாவது அவரை நினைவில் வைத்துக் கொண்டிருந்ததே !!

  தீபா சொன்ன மாதிரி கடைசி வரிகள் மனதை விட்டகல மறுக்கின்றன.

  கதை ரொம்ப நாள் நினைவில் இருக்கும்

  ReplyDelete
 8. கடைசி வரிகள் வலிக்கும் வரிகள்

  நல்ல பதிவு...!! வாழ்த்துக்கள்....!!!

  ReplyDelete
 9. சின்னக் கதையானாலும் சிறப்பா இருக்கு.

  நிறைய இடங்களில், குழந்தைகள் முகமெல்லாம் சுருக்கம் விழுந்த பாட்டி, தாத்தாவுக்கு அழுத்தமா முத்தம் கொடுப்பதை பார்த்துள்ளேன். அந்த சுருக்கங்கள் குழந்தைக்கு தயக்கத்தை ஏற்படுத்தாதா என்று கூட நினைத்துள்ளேன். எதுவும் விதைக்கப்படாத குழந்தை மனம் மட்டுமே "மனிதர்"களை புரிந்து கொள்ளும்..

  நமெக்கெல்லாம் Outlook மட்டுமே பிரதானம்.

  ReplyDelete
 10. ச்சே! சூப்பர் !
  இதுமூலமா நிறைய சொல்லப்பட்டிருக்குது.ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க .

  ReplyDelete
 11. சுரேஷ் குமார்!
  சந்தனமுல்லை!
  கதிர்!
  லவ்டேல்மேடி!
  தீபா!
  மங்களூர் சிவா!
  சின்ன அம்மிணி!
  சீமாச்சு!
  நாஞ்சில் நாதம்!
  புபட்டியான்!
  முத்துவேல்!

  அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete