-->

முன்பக்கம் , , , � புத்தகங்களாலும், இசையாலும் நடந்த புதிய வகை திருமணம்!

புத்தகங்களாலும், இசையாலும் நடந்த புதிய வகை திருமணம்!

இப்படியொரு திருமணத்தை நேற்றுதான் பார்த்தேன். “ம்...ம்... கெட்டி மேளம், கெட்டி மேளம்” இல்லை.  ‘டும்டும்’ இல்லை. “மாங்கல்யம் தந்துனா..” இல்லை. தாலியும் இல்லை. ஆனாலும், அழகு... அழகு...! அப்படி ஒரு கொண்டாட்டமும், சந்தோஷமும் திருமண மண்டபம் முழுவதும் நிறைந்திருந்தது. நினைத்துப் பார்க்கும் போது மனசெல்லாம் நிறைந்திருக்கிறது.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வனின் மகன் சித்தார்த்தின் திருமண நிகழ்ச்சியைத்தான் சொல்கிறேன். கோவில்பட்டி ஆர்த்தி திருமண மண்டபத்தில் உள்ளே நுழையும்போது வாசலில் எழுத்தாளர்.ராமகிருஷ்ணன் நின்றிருந்தார். கொஞ்சம் தள்ளி பாரதி புத்தகாலயம் நாகராஜன் “என்ன லேட்டு” என்று கேட்டார். கோணங்கி அங்குமிங்கும் சுறுசுறுப்பாய் இருந்தார். உள்ளே செல்லச் செல்ல, பெரும் இலக்கிய மாநாடு போல எழுத்தாளர்களும், கலைஞர்களும் அடர்ந்திருந்தனர். கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அவ்வளவு பெரிய மண்டபத்தில் உட்கார இடமில்லை. மனிதர்களால் இருபுறக் கரைகளும் அடைந்திருந்தன.

திருவண்ணாமலை வீதி நாடகக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனருமான கருணா மேடையேறி அறிவிக்க பாப்பம்பட்டி ஜமாவின் பெரியமேளம் ஒலித்தது. சட்டென அமைதி பரவியது. பாரம்பரியங்களின் ஒலியாய் , எல்லோரையும் பிடித்து வைத்தது. தொன்மையின் ரகசியங்களும், வசீகரமும் அதிர்வுகளாய் எழுந்தன. எழுத்தாளர் க.சீ.சிவக்குமார், மக்கள் டிவி ‘புதிய கோணங்கி’ புதுகை பிரகதீஸ்வரன் எல்லோரும் ஜமாவோடு சேர்ந்து ஆட, கூட்டம் ஆரவாரம் செய்தது. டமடமவென்ற ஓசையோடு “அம்மி மிதிக்காம, அருந்ததி பாக்காம இங்க ஒரு கல்யாணமுங்கோ” என்று இடையே பெருஞ்சத்தத்தில் ராகம் போட்டு கருணா அறிவித்தார். மணமகன் சித்தார்த்தும் வந்து ஆட்டத்தில் சேர்ந்து கொள்ள எஙகும் சந்தோஷ ஆர்ப்பரிப்பு.

ஜமா முடிந்ததும், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் மணம்க்கள் இருவரையும் மேடைக்கு அழைத்தார். பெரியமேளத்தின் பின்னணியில், அவர்கள் நடந்து வந்தது அப்படி ஒரு அழகாக இருந்தது. “மணமக்கள் இருவரும் சேர்ந்து வாழ்வில் செய்யும் முதல் காரியமாக ஒரு புத்தகம் வெளியிட இருக்கிறார்கள்” என்று தமிழ்ச்செல்வன் அறிவித்தார். தமிழ்ச்செல்வனின் தாய்வழித் தாத்தாவும், தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்டவருமான மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களைப் பற்றிய புத்தகத்தை மணம்க்கள் வெளியிட, மதுரகவி பாஸ்கரதாஸ் அவர்களின் நான்கு மகள்களும் மேடையேறி பெரிய மேளத்தின் இசையோடு வாங்கிக் கொண்டனர். குலக்கொழுந்துகளின் கைகளில் பாரம்பரியத்தின் வடம் இருப்பதை உணர்த்தும் அந்த வைபவம் சிலிர்த்திட வைத்தது.

தொடர்ந்து கோடங்கிப்பட்டிக் குழுவினரின் தேவராட்டம் மேடையில் ஜதியோடு ஆரம்பமானது. சதங்கைகளின் சேர்ந்திசையோடு, ஒரே அலைவரிசையாய் கைகால்களெல்லாம் அசைய வந்திருந்தவர்களின் உடலும், உள்ளமும் தாளத்திலும், ஆட்டத்திலும் லயித்துப் போயினர். ஒரு இனிய வைபவம் இசையாலும், ஆட்டத்தாலும் அர்த்தம் பெறுகிறது. சந்தோஷங்களைக் கொண்டாடும் மனித சமூகத்தின் ஆதி நாட்களின் தருணங்களை பெயர்த்துக்கொண்டு அந்தத் திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்தது போல் இருந்தது.

திரும்பவும், தமிழ்ச்செல்வன் மணம்க்களை மேடைக்கு அழைத்தார். வந்திருந்தவர்களின் அனைவரின் முன்னிலையில் “மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் புத்தகங்களை பரிமாறி, திருமணம் செய்துகொள்கின்றனர்” என்றார். கி.ராவின் நாட்டுப்புறக் கதைகள், காரல் மார்க்ஸ் பற்றிய ஒரு புத்தகம் உட்பட ஆறு முக்கிய புத்தகங்களை (ஆளுக்கு மூன்று புத்தகங்கள். மூன்று முடிச்சுக்குப் பதிலாக?) பெரிய மேளம், உறுமி, வெளியே வேட்டு முழக்கங்களுக்கு நடுவே, அனைவரின் கைதட்டல்களோடு புத்தகங்களால் திருமணம் நடந்தது. அடுத்து மாலையும் மாற்றிக் கொண்டனர். எங்கும் ஆனந்தமயமாக இருந்தது.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக உட்கார்ந்திருந்தவர்களும், நின்றிருந்தவர்களும் எழுந்து மேடை நோக்கிச் செல்ல அருமையான, இளையராஜாவின் மெல்லிய காதல் பாட்டுக்கள் ஒலிக்க ஆரம்பித்தன. தமிழ்ச்செல்வன் எழுதியிருந்த “பெண்மை என்றொரு கற்பிதம்” புத்தகம் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. இயக்குனர் சசி, நாடகக் கலைஞர் மங்கை, பேராசிரியர் மாடசாமி உட்பட ஏராளமான பிரபலங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள், எழுத்தாளர் சங்க நண்பர்கள் எனப் பெருகியிருந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திக் கிடந்துவிட்டு தமிழ்ச்செல்வனிடம் விடைபெற்றுக் கொண்டு நானும், என் துணைவியும், நண்பர்கள் காமராஜ், கார்த்தி ஆகியோரோடு சாத்தூருக்குப் புறப்பட்டோம். “கல்யாணம் ரொம்ப நல்லாயிருந்துச்சு” என்றாள் மனைவி. சிரித்துக் கொண்டேன்.

பெரியாரின் சீர்திருத்தக் கல்யாணங்களை கேள்விப்பட்டு இருக்கிறேன். நாதஸ்வரம், மேளம் இல்லாமல், ஐயர்கள் இல்லாமல் நானும் சில திருமண்ங்களை பார்த்திருக்கிறேன். சப்பென்று இருக்கும். கொஞ்சம் பேர் மைக்கில் பேசி திருமணத்தை நடத்தி வைப்பார்கள். நமது மரபுகளில், சம்பிரதாயங்களில் இருக்கும் எதோ ஜீவன் தொலைந்து போனது போல் இருக்கும். தமிழ்ச்செல்வன் அவரது மகனின் திருமணத்தில் அந்த உயிர்த்துடிப்பை சீர்திருத்தத் திருமணங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். வந்திருந்தவர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை இந்தத் திருமணம் ஏற்படுத்தியிருக்கும்.

விடைபெற்றுக் கொள்ளும்போது தமிழ்ச்செல்வனிடம் சொனனது ஞாபகத்துக்கு வந்தது. “திருமணம் மிகச் சிறப்பாக இருந்தது. புத்தகங்களை மாற்றிக்கொள்வதோடு,  இருவரும் சேர்ந்து ஒரு புத்தகத்தில் கையெழுத்திட்டிருந்திருக்கலாம். அது இன்னும் சிறப்பாக இருக்குமல்லவா?”என்றேன். அவர் உடனே “ஆமாம். இதிலிருந்து மேலும் மேலும் யோசிக்கலாம். ஒரே கல்யாணத்துல எல்லாத்தையும் கொண்டு வர முடியாதே..” என்று சிரித்தார். அம்முவிடம் இந்த உரையாடலைச் சொன்னேன். “இல்ல...இப்ப நடந்ததுதான் சரி..  ஊர் பார்க்க மேடையில் சேர்ந்து நின்றாலே போதும், இதுல எதுக்குத் தாலி, கையெழுத்து” என்றாள். ஆச்சரியமாய்ப் பார்த்தேன். பாப்பம்பட்டி ஜமா உள்ளுக்குள் பெரும் இசையாய் பொங்கிக் கொண்டு இருந்தது.

வாழ்க மணமக்கள்!

 

*

Related Posts with Thumbnails

31 comments:

 1. வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.

  எழுத்தின் மீது அவர்களுக்கு உள்ள காதல் பாராட்டுதலுக்கு உரியது.

  பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல.

  குப்பன்_யாஹூ

  ReplyDelete
 2. படிக்கும் போதே சுவாரசியமாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 3. வாழ்த்துகள் மணமக்களுக்கு,

  நன்றிகள் உங்களுக்கு ..

  ReplyDelete
 4. சந்தோஷமாக இருக்கிறது.
  (பாப்பம்பட்டி ஜமாவா, பாப்பம்பாடி ஜமாவா. எனக்கும் திருவண்ணாமலைதான், ஒரு சிறு சந்தேகம்)

  பகிர்ந்து கொண்ட விதம் அழகு,
  நன்றி,

  ‘அகநாழிகை‘
  பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 5. மணமக்களுக்கு வாழ்த்துகள்!
  படிக்கும்போதே மிக சுவாரசியமாய், வியப்பாக இருந்தது! ஒருவகையில் உங்கள் அம்மு சொல்வதும் சரியாகவே படுகிறது! :-)

  ReplyDelete
 6. மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறீர்கள். முக்கியமான ஒரு புதிய சடங்கினை நீங்கள் மறந்து விட்டீர்கள்.....மணமகன் சித்தார்த், மணமகள் பிரதீபாவின் தலையில் குட்டு வைத்ததையும், பின்னர் இவர் அவருக்குக் குட்டு வைத்ததையும் குறிப்பிட வேண்டும். முன்னதாக வீட்டுப் பெரியவரின் வரவேற்புரை என்று அறிவித்துச் சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தை ஒருவன் அழைக்கப்பட்டதும், அவன் நாணிக் கோணி மைக்கில் பேச மறுத்துத் தயங்கித் தயங்கிக் கொஞ்சிக் கொஞ்சி "கலியாணத்துக்கு வந்திருக்கும் எல்லோரும் வயிறாற சாப்பிட்டுட்டு வாழ்த்தணும்" என்று சொன்னதைக் கவனித்தீர்களோ?

  கோவில்பட்டி வந்தடைந்து குளித்து முடித்து மண்டபத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோது சென்னையில் வீட்டிலிருந்த எனது மகள் இந்துவை தொலைபேசியில் அழைத்து, டிபன் சாப்பிடக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன் என்றேன். "எங்கே சாப்பிடுவ" என்று அவள் வினவ, மண்டப்பத்தில்தான் என்று நான் சொல்லவும், சம்பிரதாய கலியாணமாப்பா என்று அதிர்ச்சியோடு அவள் கேட்டாள். žர்திருத்த திருமணங்களில் டிபன், சாப்பாடு எல்லாம் கிடையாது என்பதாக அவள் புரிந்து வைத்திருக்கிறாள். ஏம்மா, வெளியூரிலிருந்து வந்திருக்கிறவங்களுக்குச் சோறு கூட போடலைன்னா எப்படி என்று அவளிடம் பதில் சொன்னேன். இந்த சுவாரசியமான சேதியை திருமணம் முடிந்தபிறகு தமிழ்ச்செல்வனிடம் சொல்லிச் சிரித்தேன். ஓ இப்படி ஒன்று இருக்கோ என்றார் அவரும்.

  இன்று சென்னை வந்து சேர்ந்து வங்கியில் முற்பட்ட வகுப்பு பெண் ஊழியரிடம் இலேசாக இந்த திருமண விஷயத்தைச் சொன்னபோது ரசித்துக் கொண்டே வந்தவர், நேற்று அமாவாசையாம் எனக்குத் தெரியாது என்று சொல்லி நிறுத்தினேன். அவ்வளவுதான், அய்யய்யோ, அமாவாசையன்னிக்குப் போயா கல்யாணம் பண்ணுவாங்க, இதெல்லாம் தப்பு, நம்பிக்கை இருக்கோ இல்லியோ இதெல்லாம் செய்யக் கூடாது என்று மிகவும் அலமந்து போனார். என் பாணியில் அவருக்குச் சில விளக்கங்கள் கொடுத்தேன்.

  சரி, சாப்பிட்டுவிட்டுத் தானே புறப்பட்டீர்கள், செட்டிநாட்டு வெள்ளைப் பணியாரம், ஆப்பம் பற்றியெல்லாம் எழுதவே இல்லியே......நான் புறப்பட இருந்த பிற்பகல் 1 30 மணியளவில், மதுரகவி பாஸ்கரதாஸ் நாட்குறிப்புகள் புத்தகம் 200க்கு மேல் விற்றிருந்தது...


  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete
 7. வணக்கம்

  வாழ்த்துக்கள்....
  வாழ்த்துக்கள்...

  மணமக்களுக்கும்

  உங்களுக்கும்

  இவ்வகையான திருமணங்களே தேவை, திருமணங்கள் வெறும் சடங்குகளின் தெடராக இல்லாமல் வாழ்வில் இணைபவர்களின் இருத்தலாய் இருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட எண்ணம்

  இராஜராஜன்

  ReplyDelete
 8. சுவாரஸ்யமாக இருந்தது.

  மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. எந்த திருமணம் உங்களுக்கு சப்பாக இருந்த்து நண்பரே... பெரியாரின் சீர்திருத்த திருமணமா... தமிழ்செல்வன் தனது மகனுக்கு புரட்சிகர திருமணம் எதுவும் நடத்தவில்லையே... தனது பரம்பரை பெருமையை மீட்டெடுக்க ஒரு விழா... அந்த பரம்பரை பெருமைக்கு உகந்த வகையில் ஒரு திருமணம்... இதற்கு வருகை தந்த என்ஜிஓ புகழ் மங்கை போன்ற நாடக ஆர்வலர்கள்... என்னத்தை சொல்ல உங்களது நாடாளுமன்ற மூன்றாவது அணி போல உள்ளது இந்தக் கூட்டணி...

  ந‌மது மரபில் சம்பிரதாயத்தில் உள்ள ஜீவன் என்பது அதன் உண்மையான தொனியில் புரிந்து கொள்ள எல்லா திருமணத்திலும் சங்கம்ம் நிகழ்ச்சி நடத்த முடியாது.. ஆனால புரட்சிகரத் திருமணம் அதன் பேச்சாளர்களால களைகட்டியதை நீங்கள் சிபிஎம் கட்சி நடத்தும் இதுபோன்ற ரெண்டும்கெட்டான் திருமணங்களில் காணவே முடியாது...

  புத்தகம் வெளியிடுவது, தேவராட்டம் நடத்துவது, மணமக்கள் ஆட்டோகிராப் போடுவது என புரட்சிகரமான வடிவங்களை திருமணத்தில் நீங்கள் கையாளுவதில் தேர்ந்தவர்கள்தான்.. ஆனால் திருமணம் என்பது தங்களது சொந்த வாழ்க்கையை பொது வாழ்க்கைக்கு அதாவது புரட்சிகரப் பணிகளுக்கு உட்படுத்தி கொள்வதற்கான உறுதிமொழி எடுக்கும் வைபவம் என்பதைப் புரிந்து கொள்பவர்கள் அதனை தங்களது சொந்த அனுபவம் மற்றும் பார்வையாளர்களை பின்னர் சுட்டிக்காட்ட வேண்டியவர்களாக கோருவது என விரியும் போது மனம் பழைய உலகத்தின் மதிப்பீடுகளில் இருந்து பார்க்கவே வெட்கப்படுகின்றது... அதற்கு செண்டை மேளத்தை விடவும் சமூக பற்றும், மூடநம்பிக்கை எதிர்ப்பும் முக்கியமானதாகத் தெரிகிறது..

  திருமணம் தாலி, ஐயர் இல்லாததாலே முற்போக்கு என முடிவுசெய்தால் ரிஜிஸ்தர் ஆபீஸ், போலீஸ் நிலையத் திருமணங்கள் அனைத்துமே முற்போக்கானதுதான்... சாதிமறுப்புத் திருமணமா என்றும், அச்சாதி மறுப்பில் சம அந்தஸ்து இல்லாத இருவேறு சாதிகளைசேர்ந்தவர்களா மணமக்கள் என்றும் பார்க்க வேண்டியது கட்டாயம். புத்துலகம் பற்றிய நம்பிக்கையை போலச் செய்தலின் மூலமாக மாத்திரமே செய்ய முடியும் எனக் கனவு காண முடியாது..

  -mani

  ReplyDelete
 10. மணமக்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துகள் சமூகத்தை முன்னோக்கி நகாத்துபவனே இலையக்கிவாதி வாழ்க மாற்றுப்பண்பாடு

  ReplyDelete
 11. எப்பா அனானி மணி முடியல...எதுஎதுக்குத்தான் குறை சொல்லறதுன்னு ஒரு விவஸ்தையே கிடையாதா?வழக்கமான சம்பரதாயங்களுக்கு விடை கொடுத்து விட்டு தமிழ்ச்செல்வன் அவர் பிள்ளைகளுக்கு ஒரு புதிய முறையில் மன இணைப்பு விழா நடத்தியுள்ளார்.இது ஒரு பெரிய குற்றமா?அல்லது அதை ரசித்து பதிவு செய்தது அண்ணன் மாதவராஜின் குற்றமா?உமது பதிவைப் பார்த்தால் திருவளையாடல் திரைப்படத்தில் நாகேஷ் சொல்வது போல்,”சிலர் குற்றம் கண்டுபிடித்தே பிழைப்பை நடத்துகிறார்கள்......”எனற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 12. anto வின் பின்னூட்டத்தைப் படியுங்கள்!
  :-)))))))))

  ReplyDelete
 13. அழகு!
  வீட்டு விழாக்களில் இசையையும் இலக்கியத்தையும் கொண்டு வந்து "சொந்த" மரபைப் பேண இவையெல்லாம் நல்லுதாரணங்கள்!

  ReplyDelete
 14. தங்கள் பதிவு, திருமணத்திற்கு வந்து உங்கள எல்லோரையும் சந்தித்த நிறைவைத் தருகிறது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 15. மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.... இதைப் போன்றே நடத்த நான் விரும்பினாலும் என் சமூகம் விடாது....!!!!

  ReplyDelete
 16. திருமணத்திற்கு வரும்படி தமிழ்ச்செல்வன் அவர்கள் அழைப்பு விடுத்தும் கலந்துகொள்ள முடியவில்லை. 'மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை'என்று சமாதானம் சொன்னேன். இந்தப் பதிவை வாசிக்கும்போது வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. 'மணமக்களுக்கு வாழ்த்துக்கள்' என்று இங்கு வந்து சொல்வதும் சம்பிரதாயந்தான். சம்பிரதாயங்களை ஒட்டுமொத்தமாக வெட்டிவிட முடிவதில்லை. அதை மீற முடிந்த தமிழ்ச்செல்வன் போன்றவர்கள் பாராட்டுதற்குரியவர்கள்.

  ReplyDelete
 17. ரொம்ப அழகான சுவாரசியமான திருமணம் :)

  மணமக்களுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 18. திலிப் நாராயணன்.May 26, 2009 at 10:59 AM

  புதுமையான திருமணம் மட்டும் அல்ல; புரட்சிகரமானதும் கூட. எச்சில் இலை எடுக்கவும் அடைப்பு எடுக்கவும்தான் மண்டபங்களில் தலித்துகளை மனிதாபிமானத்தோடு(!) நடத்துவார்கள். இந்தத்திருமணத்தில் பாப்பம்பாடி என்ற ஊரைச்சேர்ந்த தலித் பெரிய மேளக்கலைஞர்கள் சுழன்றாடிய போது நாட்டுப்புறக்கலைகள் நலிவடைய விடோம் என்னும் நிஜம் அவர்களது கண்களில் தெரிந்தது. அவர்கள் மேளம் அடித்து ஆரம்பித்து வைத்த இந்த த்திருமணம் பிராமணர்களின் வைதிகத்திருமணத்தைவிடவும் ஆயிரம் மடங்கு பெரிதாகப்படுகிறது.வந்தவர்கள் அனைவருக்கும் ச.தமிழ்செல்வனின் பெண்ணியம் என்றொரு கற்பிதம் என்ற நூல் (பாரதி புத்தகாலயம் விலை ரூ.20_/) வழங்கியது போற்றத்தக்க நிகழ்வு.

  ReplyDelete
 19. நண்பர் ஆண்டோ, மாதவராஜ் பெரியாரின் சீர்திருத்த திருமணத்தையும் அதில் நடக்கும் உரைவீச்சையும் மட்டமாக சொன்னதால் பதில் சொல்ல வேண்டியிருந்த்து. மற்றபடி ஒரு கம்யூனிச இயக்கம் எனச் சொல்லிக் கொள்ளும் இவர்கள் தங்களது புரட்சிகர வேலைகளை முதலில் சமூகத்திற்கு சொல்லுவதற்கு முன்னால் அதனை தங்களது குடும்பத்தில் துவங்க வேண்டும் என்ற பாமர எதிர்பார்ப்பில் அப்படி எழுதி விட்டேன்... அப்படி கோருபவர்கள் எல்லோருமே நக்கீரர்களாக இருக்க வேண்டுமா என்ன•..

  மார்க்சிஸ்டு கட்சியின் கலை இலக்கியப் பிரிவை பிரதிநிதித்துவப் படுத்துபவர் என்ற முறையில் சா தமிழ் செல்வன் தனது மகனது திருமணத்தில் வடிவங்களில் முற்போக்கை கொணர்ந்தார் என்ற உங்களது வாதம் அதனது உள்ளடக்கத்தின் புரட்சிகர உள்ளடக்கம் பற்றிப் பேச முடியாமல் போனது ஏன்... சட்டியில் இருந்தும் அகப்பையில் வரவில்லையா...

  சரீ மாற்றுத் திருமண முறைகளை ஏன் செய்ய வேண்டும் என்பதை பாடல்கள் மூலமாவது மக்களிடம் அத்திருமண நிகழ்ச்சி கொண்டு சேர்த்ததா.. எண்பதுகளில் பரீக்சா ஞானியின் திருமணம் இதனை விட இயல்பாக நடந்தது. ஆனால் அது வேறு எந்த கருத்தையும் மக்களிடம் விதைக்க முடியாத நிலைமைக்குத்தான் சென்றதே தவிர எந்த பாதிப்பையும் சமூகத்தில் நிகழ்த்தி விடவில்லை... சாதாரண திருமணங்களில் உள்ள பெண்ண்டிமைத்தனம், பாப்பார சார்பு, மூடநம்பிக்கை, சாதி இழிவு இவற்றை விமர்சிப்பதற்கு இந்த மேடைதானே சரியானது... அதனை விட இளையராஜாவின் மெல்லிசை என்னத்தைச் சாதிக்கும்... அப்பாடல்களில் பெரும்பாலானவை பெண்களை இழிவுபடுத்தும் உள்ளடக்கத்தோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்தானே...

  ஆக முற்போக்கு என்பது வடிவத்திலா உள்ளடக்கத்திலா என்ற புள்ளியில் அது வும் கேந்திரமான புள்ளியில் அதுவும் தமுஎசக ச வின் மாநில செயலரே வேறுபடுகிறார் என்றால் இதற்காக வேறு யார் விமர்சனம் ஏற்க முடியும்...

  இதனை கோவில்பட்டி போன்ற ஆதிக்கசாதிகள் நிறைந்த அதுவும் அகமண முறையில் காப்பதற்காகவும் சொத்து போய்விடக் கூடாது என்பதற்காகவும் 20 வயது வித்தியாசத்தில் தனது சொந்த அக்கா மகளைக் கல்யாணம் பண்ணும் மடத்தனம் இருக்கும் பூமியில், சாதி அடிமைத்தனத்திலும் ஊறிப்போயுள்ள ஊரில், அம்மை போட்டால் டாக்டரிடம் போகாமல் இருக்கன்குடிக்கு மொட்டையடிக்க நேர்ந்து விடும் ஊரில், பெண்கல்விக்கு ஆப்பு வைத்து தீப்பெட்டி ஆபீசை நோக்கி காலை 4 முதல் இரவு 9 வரை தூக்குப் போணியைத் தூக்கிக் கொண்டு நின்று கருகும் பெண்கள் நிறைந்த ஊரில் பேச மறுத்த்த‍ன் மூலம் ஏற்கனேவே உள்ள செட்டப்பை மாற்ற உங்களுக்கு விருப்பமில்லை என்றுதான் தெரிகிற‌து

  -mani

  ReplyDelete
 20. சந்தோசமான வாழ்த்துக்கள் மணமக்களுக்கு.
  எழுத்தின் மீது அவர்களுக்கு உள்ள காதலைப் புரியமுடிகிறது.

  பகிர்ந்தமைக்கு நன்றிகள்

  ReplyDelete
 21. மணமக்களுக்கு வாழ்த்துக்கள். அழகாக சொல்லி இருக்கின்றீர்கள்.

  என் திருமணத்தையும் தலைமையேற்று நடத்தி தந்தது தமிழ்செல்வன் தான் :)

  ReplyDelete
 22. குப்பன்யாஹூ!
  வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  தீபா!
  பகிர்வுக்கு நன்றி.

  தீப்பெட்டி!
  வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  அகநாழிகை!
  பாப்பம்பாடி ஜமாவாகத்தான் இருக்கவேண்டும்! ஆனாலும் உங்களுக்கு மிகுந்த நாசூக்கு!

  சந்தனமுல்லை!
  வருகைக்கும், மணமக்களுக்கு வழ்ழ்த்துக்களுக்கும் நன்றி. அம்முவிடம் சொல்லிவிட்டேன் உங்கள் பின்னூட்டத்தை.

  வேணுகோபால்! (உங்கள் பின்னூட்டம், இந்தப் பதிவின் பிற்சேர்க்கை என சொல்லிக் கொள்ளலாமே!)

  வனம்!(இராஜ ராஜன்)
  ஆமாம்ங்க. உங்கள் வாழ்த்துக்கலுக்கு நன்றி.

  ஜோ!
  வருகைக்கும், மணமக்களுக்கு வழ்ழ்த்துக்களுக்கும் நன்றி.

  விடுதலை!
  //சமூகத்தை முன்னோக்கி நகாத்துபவனே இலையக்கிவாதி//
  உண்மை.

  ReplyDelete
 23. அண்டோ!
  அவர் விவஸ்தையில்லாமல் சொன்னதாகக் கருத வேண்டாம். விமர்சனங்களை சட்டென்று ஒதுக்கவும் வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

  சுந்தரவடிவேல்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  யாத்ரா!
  நன்றி.

  ஆதவா!
  தங்கள் குழந்தைகளுக்கு நடத்தலாமே! காத்திருங்கள் மாற்றங்களுக்கான யோசனைகளுடன்!

  ReplyDelete
 24. தமிழ்நதி!
  உங்கள் வருத்தமும், வேதனைகளும் நன்றாகவேப் புரியும். உங்கள் நேற்றைய ப்திவையும் படித்தேன். எல்லா வலிகளையும் தாண்டி நம்பிக்கையை பெறவும், கொடுக்கவுமான தருணம் இது.
  திருமணத்திற்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ஆகாயநதி!
  வருகைக்கும், மணமக்களுக்கான வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  திலிப் நாராயனன்!
  //எச்சில் இலை எடுக்கவும் அடைப்பு எடுக்கவும்தான் மண்டபங்களில் தலித்துகளை மனிதாபிமானத்தோடு(!) நடத்துவார்கள். இந்தத்திருமணத்தில் பாப்பம்பாடி என்ற ஊரைச்சேர்ந்த தலித் பெரிய மேளக்கலைஞர்கள் சுழன்றாடிய போது நாட்டுப்புறக்கலைகள் நலிவடைய விடோம் என்னும் நிஜம் அவர்களது கண்களில் தெரிந்தது. அவர்கள் மேளம் அடித்து ஆரம்பித்து வைத்த இந்த த்திருமணம் பிராமணர்களின் வைதிகத்திருமணத்தைவிடவும் ஆயிரம் மடங்கு பெரிதாகப்படுகிறது.//

  ஆம்....

  த.ஜீவராஜ்!
  நன்றி!

  விழியன்!
  வருகைக்கு நன்றி. பகிர்ந்த தகவலுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 25. மணி அவர்களுக்கு!
  நான் பெரியாரின் சீர்திருத்த திருமணங்களை கொச்சைப்படுத்தவில்லை. அதனை இன்னும் செழுமைப் படுத்தப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வந்தேன்.வெறும் போதனைகளும், பேச்சுக்களும் இதுபோன்ற மக்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில், அவர்கள் கசகசவென்று பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் அர்த்தமிழந்து போகின்றன. மிகச்சிறந்த பேச்சுக்கள் கூட இதுபோன்ற சந்தர்ப்பங்களில் கவனிப்பாரற்றுப் போவதை வேதனையுடன் பார்த்திருக்கிறேன்.

  விழாக்களுக்கு, கொண்டாட்டம் மிக்க தருணங்களுக்கு இடம் கொடுத்து சீர்திருத்தங்களைச் செய்தால் அதை மெல்ல மெல்ல சமூகம் சுவீகரிக்கும்.
  அதற்கான முயற்சி தமிழ்ச்செல்வன் துவக்கியிருக்கிறார். அதை வரவேற்பதே, இன்னும் பல முயற்சிகளுக்கு, இதைவிடவும் சிறப்பான காரியங்களுக்கு வழியமைக்கும்.

  சரி. இந்த இடத்தில் உங்களது உரையாடல் நீண்டு இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு ‘பரம்பரைப்பெருமை’, ‘மூன்றாவது அணி’ போன்ற வார்த்தைகள் எரிச்சலைத் தருகின்றன. உங்களுக்கு விஷயங்களைத் தாண்டிய எதோ விஷம் உள்ளுக்குள் ஒடிக்கொண்டு இருப்பதாகப் புரிந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 26. மாதவராஜ்.. பெரியாரின் சீர்திருத்த திருமணமும் கம்யூனிஸ்டுகளின் புரட்சிகரத் திருமணமும் இதுவரை பிரச்சாரம் செய்த்தால் மக்கள் அயற்சி அடைந்து விட்டனர்... அப்படி அவர்களை அயற்சி அடையாமல் வைப்பதற்கு ரெண்டு பாட்டு மேளம் போட்டு அதற்கு இடையில் முற்போக்கு என்ற வடிவத்தை மாத்திரம் செய்து காண்பித்தால் அதில் தேறுபவர்கள் உள்ளடக்கத்தின் முற்போக்கைக் காண வருவர் என்ற நோக்கம்தானே உங்களுக்கு... கொக்கு தலைல வெண்ணெயைத் தடவிப் பிடிக்கிறத கேட்டுருக்கேன்.. ஆனா வெண்ணெய தரதுக்கு காரணமான பாலை ஈந்த பசுவே வெண்ணெயையும் தடவித்தரணும் என்பத என்ன்ன்னு சொல்றது...

  ReplyDelete
 27. ஜெ.உமா மகேஸ்வரன்May 27, 2009 at 11:01 PM

  அருமையான நிகழ்வை சிறப்பாகப் பதிவு செய்ததற்கு நன்றிகள்! மணமக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. அனானி!

  உங்கள் வியாக்கியானக்கள் அலுப்பையேத் தருகின்றன. ஒரு முயற்சியை செழுமைப்படுத்த யோசிக்காமல், வெண்ணெய்... கொக்கு... பசு... என்று வெறும் விதண்டாவாதங்களாகவே செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 29. உமா மகேஸ்வரன்!
  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 30. வரவேற்கத் தக்க நிகழ்வு! அதிலும் 'பெண்மை என்றொரு கற்பிதம்' திருமணத்திற்கு முன் ஆண்கள் கட்டாயம் படிக்க வேண்டிய ஒரு நூல்! (தங்களுடைய 'ஆதலினால் காதல் செய்வீரையும்' படிக்கலாம்). ஆனால் கடைசி வரை சாதிய மறுப்புத் திருமணமா என்பதைக் கூறவே இல்லையே!

  ReplyDelete
 31. ஒரு அருமையான திருமண நிகழ்வை
  மனதார பாரட்டுறத விட்டுப்புட்டு
  இதுலயும் ஏடா கூடமாகவே சிந்திச்சு
  முயற்சியை மழுங்கடிக்கிறதே மணி
  போன்ற அன்னாச்சிகளுக்கு வேலயாப்
  போச்சு.இந்த திருமண்ம் இளைய
  தலைமுறைக்கு உற்சாகம் ஊட்டும்.
  கூடவே மாதவராஜின் பதிவு
  உலகத்தமிழ் நெஞ்சங்களை உத்வேகப்படுத்தும். கணேசன் குமரி

  ReplyDelete