-->

முன்பக்கம் , , , , � கல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..”

கல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..”

krishi book1

 

 

 

 

 

 

 

 

 

மண்ணைக் கொத்தி
பாத்தி கட்டி
கம்பி வேலி இழுத்துக் கட்டி
ஆசைக் கனவோடு
நட்டுவைத்தேன்
விதவிதமாய்ப் பூஞ்செடிகள்

நட்டு வைத்த பூஞ்செடிகளெல்லாம்
வாடி நிற்க

பார்த்தறியாச் செடியெல்லாம்
பளிச்சென ஒருநாள்
பூத்துக் குலுங்கின
வேலிக்கு வெளியே

இந்தக் கவிதையையும் கொண்டு,  ’மழை வரும் பாதையில்..’ என்னும் கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது. எழுதியவர் கிருஷி என அழைக்கப்படும் திரு.ராமகிருஷ்ணன். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், கோணங்கி போன்றவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இலக்கியப் பரிச்சயமும், எழுத்துக்கள் அறிமுகமும் செய்தவருமான, அறுபதைத் தாண்டிய இளமைத் துடிப்போடு கூடிய கிருஷி. மிக இயல்பான நட்பும், நுட்பமான உறவும் கொண்டாடுகிற மனிதர்.

மார்ச் 10ம் தேதி அவரது ‘மழை வரும் பாதையில்..’, திருநெல்வேலி ஜானகிராம் ஓட்டலில் வைத்து நெல்லை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது.  இலக்கிய விமர்சகர் திரு. தி.க.சி அவர்கள் வெளியிட, எழுத்தாளர். தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்கள் உதயசங்கர், தோப்பில் முகமது மீரான்,  பேராசிரியர்.தொ.பரமசிவம், டி.தருமராஜன் மற்றும் நான் வாழ்த்திப் பேசினோம். கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் வண்ணதாசன் வந்து பார்வையாளர்களோடு உட்கார்ந்து ரசித்தார்.

கடல் அலையாய், கடலுக்குள் யுகம் யுகமாய் தவமிருக்கும் ஒற்றை பாறையாய், பயணி போல வந்து செல்லும் ஒளியாய் கிருஷி இந்தக் கவிதைகளுக்குள் காட்சியளிக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலானது அன்பும் எளிமையும் என்பதை திரும்பத் திரும்ப அவர் முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறார். இயற்கையோடு இயைந்த வெளியில் சஞ்சரிப்பதில் அவருக்கு அலாதியான சுகம் இருக்கிறது. கவிதை தொகுப்பு இன்றைய உலகில் அமைதியை தேடும் ஒரு மனிதனின் குரலில் இறங்குகிறது நமக்குள்.

நிறைசூலியாய் நிற்கும்
வேம்பின் வாசத்தில்
வயல்வெளிக்கு மேல்
கைவீசி வரும்
நிலவைப் பார்த்தபடி
குத்த வைத்திருக்க வேண்டும்
கொஞ்ச நேரம்
முதுகைச் சாய்த்தபடி
மண் சுவற்றில்

000

எவ்வளவு காலப் பழக்கம்
நமக்குள்
ஏதேனும் ஒரு புள்ளியில் கூட
சந்திக்க முடிவதில்லையே
இப்போதெல்லாம்
நண்பனே

000

குழந்தைக்கும் தெரிகிறது
தாய்க்கும் தெரிகிறது
நிலவின் மொழி

000

வேற்றுச் சூரியக் குடும்பத்தின்
பார்த்தறியாச் சகாக்களோடு
இணைய தளத்தில்
சதுரங்கம் ஆடலாம்
நாளைய நூறாண்டில்
இருக்கட்டும்
இன்று என்ன செய்யப் போகிறோம்

000

மேலெல்லாம் வழிய வழிய
அள்ளி அள்ளிப்
பருகினேன் ஆவலோடு
தண்ணீரை

“நான்” கரையக் கரைய
நதியானேன்.

000

அற்புதமானக் கவிதைகள் கொண்ட தொகுப்பில் ஒரு காதல் கவிதை கூட இல்லாதது முக்கியமான விஷயமாக இருக்கிறது. கிருஷியிடம் கேட்டேன். ஆமாம் என்று சிரித்துக் கொண்டார். அவரைப் பற்றி முன்னுரையில் வண்ணதாசன் மிக உண்மையாகச் சொல்கிறார்.

krishi "அவருக்கு எல்லோரும் சார்வாள் அல்லது சாரே!. அது எப்படி ஒரு ஆளின் கையையோ, தோளையோ தொடாமல், வெறும் குரலாலும், அழைப்பாலும் எல்லோரிடமும் ஒரு நெருக்கத்தை உர்வாக்கிவிட முடிகிறது இவருக்கு. இந்த முப்பது, முப்பத்தைந்து வருடப் பழக்கத்தில் அவருடைய தாடி எவ்வளவு அழகாக நரைத்திருக்கிறது. கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி சிந்து பூந்துறைக்கு, த.மு.எ.ச விலிருந்து தம்மபதம் வரை, ஹோட்டல் ஜானகிராம் காஃபி மாஸ்டர் பண்டாரத்திலிருந்து இயறகை வேளாண்மை நம்மாழ்வார், ஒவியர் சந்ரு, எடிட்டர் லெனின், திலகவதி ஐ.பி.எஸ், பேராசிரியர் ஞானசம்பந்தன், இயக்குனர் ராஜேஸ்வர், டாக்டர் ஏக்னஸ் என்று எல்லைகளை விரித்துக்க்கொண்டே போகிற மனது அவருடையது. தச்சை ராஜா கையும், இசக்கி அண்ணாச்சி கையும், கிராஜுவேட் காபி பாரில் வேலை பார்க்கிற வ.உ.சி கையும் அவருக்கு ஒன்றுதான்.”

அவரது கவிதை வரிகள் குறித்து கல்யாண்ஜி சொல்கிறார்....

தன்னைத்தானே ஏந்திக்கொண்டு ராமகிருஷ்ணன் அவருடைய கவிதைகளில் வருகிறார்.எந்த ஒரு வரியின் மேலும் அவருடைய சாயல் இருக்கிறது. ஒரு எளிய ஆரஞ்சுப் பட்டுப்பூச்சி போல, நம் வீட்டு அந்தி மந்தாரைச் செடிகளின் மீது பறந்து விட்டுப் போகிறார். புதுத் தீப்பெட்டியின் முதல் குச்சி உரசலுக்குப் பிறகு, மருந்துப் பெட்டியில் தீக்குச்சியின் ஒற்றை உரசல் பதிந்திருப்பது போல ஒரு வரி. அரசு பொது மருத்துவமனை பக்கத்து வேப்ப மர நிழலின் கீழ் கவலையோடு உட்காந்திருக்கிற ஒரு பெரிய மனுஷியின் பக்கத்தில் அவள் கொண்டு வந்திருக்கிற தண்ணீர் பாட்டிலுக்குள் புகுந்து வெளியேறுகிற வெயில் மாதிரி சில வரிகள்.

கவிதைத் தொகுப்பின் மீதான கல்யாண்ஜியின் பார்வை...

இன்றைய பூமி, இன்றைய இயற்கை, இன்றைய மனிதர், இன்றின் வாழ்வு குறித்து மட்டுமே கவனம். அந்த கவனமே கவிதை. இன்றைய நவீன கவிதை அல்லது கவிதை எந்த இடத்தில் நிறகிறது, தான் எந்த இடத்துகுச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் யோசனையற்ற இயல்பான சிறகடிப்பு. நமக்குத்தான் இது மைனா, இது சிட்டுக்குருவி, இது பருந்து. வானத்துக்கு எல்லாம் பறவைகள்தாம்.

முடிந்தால் வாங்கிப் படியுங்கள்.

வெளியீடு:

வம்சி புக்ஸ்
19, டி.எம்.சாரோன்,
திருவண்ணாமலை

விலை.ரூ.60/-

 

*

Related Posts with Thumbnails

16 comments:

 1. அறிமுகத்திற்கு நன்றி மாதவ்.

  ReplyDelete
 2. மிக அற்புதமான அறிமுகம். நன்றி.

  ReplyDelete
 3. அறிமுகத்திற்க்கு நன்றி சார்.

  ReplyDelete
 4. Please give address in English, such that we can order from outside Tamilnadu. Thanks.

  ReplyDelete
 5. மிக அற்புதமான அறிமுகம் சார். நன்றி.

  ReplyDelete
 6. கவிதைகள் அருமையாக இருந்தது ...அறிமுகத்திற்கு நன்றி ..

  ReplyDelete
 7. நல்லதொரு அறிமுகத்தை செய்து வைத்திருக்கிறீர்கள், மிக்க நன்றி, எல்லோரையும் பார்த்தது போல் இருக்கிறது,

  வண்ணதாசன் அவர்களின் எல்லா எழுத்துக்களையும் வாசித்திருக்கிறேன், நெகிழ்வான, மனதிற்கு நெருக்கமான மனிதர்

  எனக்கு ஒரு ஆசை,
  இறப்பதற்குள் வண்ணதாசன் அவர்களைப் பார்த்துவிட வேண்டும், அவர் கைகளில் முத்தமிட வேண்டும்.

  ReplyDelete
 8. படித்த கவிதைகள் அப்படியே நம்மை அதற்குள் இருத்தி வைத்திருக்கீறது...

  அழகான அறிமுகம்.. நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்.

  ReplyDelete
 9. அறிமுகத்திற்கு மிக்க நன்றி. இந்த மாதிரி புற சென்னை பகுதி பதிப்பகம், புத்தங்ககளுக்கு சரியான விளம்பரம், சந்தையியல் இல்லாது இருத்தலால் அதிகம் பேரை அடைய முடிய வில்லை.

  கண் முன்னாலே ஜானகிராம், பரணி ஹோட்டல், ஜஞ்க்ஷன் பஸ் ஸ்டாண்டை கொண்டு வந்து நிறுத்தி விட்டேர்கள்

  ReplyDelete
 10. அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 11. வேலன்!
  நரசிம்!
  முரளிக்கண்ணன்!
  ராஜு!
  நவீன்!
  யாத்ரா!
  ஆதவா!
  குப்பன் யாஹூ!
  பட்டம்பூச்சி!

  அனைவரின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. ராஜூ!

  புத்தகம் கிடைக்கும் இடம்:

  vamsi books
  19, T.M.saroan
  Thiruvannamalai

  ReplyDelete
 13. அருமையான அறிமுகம் மாதவ். அவர் கவிதைகள் படிக்கும் ஆவல் ஏற்படுகிறது. கல்யாண்ஜியின் முன்னுரை வரிகளும் 'கவிதை'.

  அனுஜன்யா

  ReplyDelete
 14. அனுஜன்யா!

  வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 15. கிருஷி சாரின் கையெழுத்தைப்ப பற்றி நிச்சயம் குறிப்பிடவேண்டும். தமிழில் அபூர்வமான வரி வடிவங்களுக்கும் இழைகளுக்கும் சொந்தக்காரா்.

  ReplyDelete
 16. அருமையான பகிர்வு,அறிமுகம் மாது.நன்றி!

  ReplyDelete