சேகுவேரா (அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் குறிப்புகளின் பின்னணியில்) - 2ம் அத்தியாயம்

"தோழரே! பட்டவர்த்தனமாக சொல்வதென்றால் ஸ்பெயினின் எந்தப்பகுதியிலிருந்து எனது மூதாதையர்கள் வந்தனர் என்பதை நான் அறியேன். நீண்ட காலத்திற்கு முன்பே அவர்கள் தங்கள் பூர்வீக வீட்டை விட்டு பிறந்தமேனியோடு வெளியேறிவிட்டனர். வசதியாக இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் அதுபோல கிளம்ப மாட்டேன். நாம் நெருங்கிய உறவினர்கள் இல்லை என நினைக்கிறேன். இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.

-மரியோ ரோசரியோ குவாரா என்பவருக்கு 1964ம் ஆண்டு சே எழுதிய கடிதத்தில்.

 

(2)

 

the face1 அவர்கள் தங்கள் எதிரியை ஏற்கனவே அடையாளம் கண்டிருந்தார்கள். அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ சேகுவாராவைப்பற்றி தகவல்களை சேகரித்து ஒரு வாழ்க்கை குறிப்பை தயாரித்திருந்திருந்தது. சி.ஐ.ஏவின் கழுகுக் கண்கள் விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கின்றன. அவரது அசைவுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. அவர்களின் வார்த்தைகளில், பார்வையில் சேவின் வாழ்க்கை இது. சி.ஐ.ஏ வின் பல்லாயிரக்கணக்கான ரகசிய ஆவணங்களில் இதுவும் ஒன்று. 1964 ஆகஸ்டில் தயாரிக்கப்பட்டது.

cia

சேகுவாரா

 

பொருளாதாரத்தின் ஜாராகிய சேகுவாரா தற்போது கியூப அரசின் பொருளாதார திட்டம் மற்றும் ஒருங்கிணைப்பு வாரியத்தின் செயலாளராககவும், எதேச்சதிகாரமாக உருவெடுத்திருக்கும் கியூப கட்சியின் தேசீய இயக்குனராகவும், பிடல் காஸ்ட்ரோவின் சக்தி மிக்க ஆலோசகராகவும் இருக்கிறார். 1956ல் கிரான்மா இலட்சியப்பயணத்தில் உறுப்பினராக இருந்த அவர், மலைகளின் இராணுவ கமாண்டராக உயர்ந்து, பிறகு கியூப பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் குரலாக உருவெடுத்திருக்கிறார். துரிதமான தொழில்மயத்திற்கு ஆதரவாளரான அவர், சமீபத்தில் நுகர்பொருட்கள் கவனத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. கியூபாவின் பொருளாதார எதிர்காலம் தொழில்மயமாவதில் இருக்கிறது என்னும் அவரது நிலைபாட்டிற்கும், கியூபா தனது விவசாய வளங்களை பெருக்க வேண்டும் என்கிற விவசாய மறுசீரமைப்பு அமைச்சரான கார்லோ ரபேலின் பார்வைக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றுகின்றன. தற்சமயம் கார்லோ அதில் வென்றிருப்பதாக தெரிகிறது. கியூபா விவசாய மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. தேசீயமயமாவதற்கு உந்துதல் அளித்தவரும், பொருளாதாரத்தின் பன்முகத்தன்மைகளை மையப்படுத்தியவருமான சேகுவாரா அமெரிக்காவின் தீவீர எதிர்ப்பாளாராகவும், அமெரிக்க பொருளாதாரத்தின் நோக்கங்களோடு முரண்பட்டு பேசுபவரும், கியூபா சோவியத்தைச் சார்ந்து இருப்பதற்கு உந்து சக்தியாகவும் இருக்கிறார். மேலும் பலதடவை அவர் சோவியத்திற்கு சென்று வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேசியிருக்கிறார்.  கியூபாவில் புதிய வர்த்தக திட்டங்களை உருவாக்க ஆப்பிரிக்க, ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்.

 

பொருளாதார உதவிகளில் சோவியத் ரஷ்யாவை சார்ந்திருக்கிற சேகுவாரா தத்துவார்த்த நிலைபாடுகளில் சீன கம்யூனிச கட்சியை பின்பற்றுகிறார். மா சே துங்கை நேசிக்கிற அவர் கியூபாவின் புரட்சியை லத்தீன் அமெரிக்கா முழுவதற்கும் பரவச்செய்ய வேண்டும் என தொடர்ந்து போராடுகிறார். கொரில்லா யுத்தத்தில் அவரது திறமை லத்தின் அமெரிக்க நாடுகள் பூராவும் பிரச்சாரம் செய்யப்பட்டு இருக்கிறது. மார்ச் 1959ல் ஹைட்டியிலும், ஜூன் 1959ல் நிகரகுவாவிலும், நவம்பர் 1959ல் கவுதமாலாவிலும் நடக்க இருந்த படையெடுப்புகளுக்கு முக்கிய உருவமாக இருந்திருக்கிறார். உருகுவேவிலும், பிரேசிலிலும், அர்ஜெண்டினாவிலும் புரட்சிக்காக மக்களை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

 

கல்லூரி நாட்களில் கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்ட போதெல்லாம் தான் எந்த கம்யூனிச கட்சியோடும் இணைந்ததில்லை என்றே சொல்லி வந்திருக்கிறார். 1959ல் ஒருமுறை இது போல குற்றம் சாட்டப்பட்ட போது "நாங்கள் செய்வதெல்லாம் கம்யூனிஸ்ட் போல உங்களுக்குத் தோன்றினால் நாங்கள் கம்யூனிஸ்ட்டுகள்தான்" என்று பதில் சொல்லி இருக்கிறார். அர்ஜெண்டினா, கவுதமாலா, மெக்சிகோவில் உள்ள கட்சி உறுப்பினர்களோடு நெருக்கமான உறவுகள் வைத்திருந்த போதும் கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. எப்படியிருந்தாலும் உணர்வுபூர்வமாக அமெரிக்காவுக்கு எதிராக இருக்கும் அவர், கம்யூனிசத்தின்பால் அனுதாப பார்வை கொண்டிருக்கிறார். மிக முக்கியமாக, 1954ல் கவுதமாலாவில் கம்யூனிசத்திற்கு ஆதரவாக இருந்த அர்பென்ஸ் அரசை அமெரிக்கா இராணுவக் கலகம் ஏற்படுத்தி வீழ்த்த்யதை கடுமையாக கண்டித்திருக்கிறார்.

 

எர்னஸ்டோ சேகுவாரா அர்ஜெண்டினாவில் ரோசரியோவில் 1928 ஜூன் 6ம் தேதி பிறந்தார். வசதியான நடுத்தரக் குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில் மூத்தவர். கல்லூரி நாட்களில், அவரது தாயும் தந்தையும் பிரிந்திருந்தார்கள். சேகுவாராவின் தந்தை எர்னஸ்டோ சேகுவாரா லிஞ்ச் சர்வேயராகவும், கட்டிடக் கலைஞராகவும் இருந்தவர். ஆரம்பத்தில் காஸ்ட்ரோவின் இயக்கத்தை ஆதரித்தவர். தாய் செலியா டி லா செர்னா கம்யூனிஸ்டாக தன்னை அறிவித்துக் கொள்ளாத போதிலும், லத்தின் அமெரிக்க மகளிர் காங்கிரஸில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கியூப புரட்சியை ஆதரித்து பேசினார். சிறுவயதிலிருந்தே ஆஸ்த்துமாவினால் அவதிப்பட்டாலும், தந்தையின் ஆலோசனையின் பேரில் சே (அர்ஜெண்டினா மொழியில் மொட்டு என்று அர்த்தம்) உடற்பயிற்சி, வேட்டை, மீன் பிடித்தல், மலையேறுதல் போன்றவற்றில், மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். ( இருப்பினும் எந்நேரமும் ஆக்ஸிஜன் இன்ஹேலரை வைத்திருப்பார்.)

 

1947ல் சேகுவாரா பியுனோஸ் எய்ரஸ் பலகலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கச் சென்றார். 1952ல் மருத்துவப் பட்டம் பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. மாணவப் பருவத்தில் அரசியலில் ஈடுபட்டு பெரோன் ஆட்சிக்கு எதிராக புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கெடுத்திருக்கிறார். மருத்துவக்கல்லூரி இறுதியாண்டில் நண்பர் ஒருவருடன் கல்விச் சுற்றுலா என்று வெளியே சென்றிருக்கிறார். அர்ஜெண்டினா ராணுவத்திற்கான மனிதத்தேவைகளிலிருந்து தப்பிக்கவே அப்படி சென்றார் என்று தெரிய வருகிறது. இருந்தாலும் அந்த பயணத்தை அவர் சாகசங்கள் நிறைந்ததாக மேற்கொண்டிருக்கிறார். மோட்டார் சைக்கிளிலேயே அண்டஸ், சிலி, பெரு, அமேசானின் மேல்புறம், கொலம்பியா, வெனிசுலா சென்றிருக்கிறார். இறுதியாக மியாமியில் இருந்து அமெரிக்க அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார். மருத்துவப் பட்டம் பெற்ற பின்பும் இதே போன்று ஒரு பயணத்தில் கவுதமாலாவிற்கு சென்று உள்நாட்டு அரசியலில் பங்கு பெற்றிருக்கிறார்.

 

கம்யூனிச ஆதரவாளரான ஜேக்கபோ அர்பென்ஸ் குஸ்மானின் ஆட்சியில்(1951-54) சேகுவாராவின் பங்கு முரண்பாடுகளோடு இருக்கிறது. திருப்திகரமான முடிவுக்கு வரமுடியவில்லை. அர்பென்ஸோடு அவருக்கு பழக்கமில்லை என்றாலும், பொருளாதார தேவைகளுக்காக அர்பென்ஸின் கடைசி நாட்களில் (ஜூன் 1954)கவுதமாலா அரசாங்கத்தில் ஒரு மருத்துவச் சேவகனாக பணிபுரிந்திருக்கிறார். கவுதமாலா அரசியலில் அவரது பங்கு என்னவாக இருந்தாலும், அர்பென்ஸ் ஆட்சியை தொடர்ந்து ஆதரித்திருக்கிறார். அமெரிக்காவை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்.

 

அர்பென்ஸ் அரசு வீழ்ந்த பிறகு சேகுவாரா மெக்ஸிகோவிற்கு நகர்ந்திருக்கிறார். மார்க்சிஸ்ட் பாப்புலர் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவரான வின்செண்ட் லொம்பர்டோ டோலெடனோவுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார். லொம்பர்டோ சேகுவாராவிற்கு இரண்டு பொறுப்புகளை மெக்ஸிகோவில் பெற்று தந்ததாக உறுதியற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒன்று, அரசு பொது மருத்துவமனையில் டாக்டர். இன்னொன்று தேசீய பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவின் ஆசிரியர். 1956 கோடைக்காலத்தில் ஒருநாள் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் காஸ்ட்ரோ சேகுவாராவை எதேச்சையாக சந்திக்கிறார். காஸ்ட்ரோ தன்னுடைய அரசியல் சிந்தனைகளையும், கியூபாவை ஆக்கிரமிப்பது குறித்த திட்டத்தினையும் கோடிட்டு காண்பித்திருக்கிறார். கொரில்லாப் போரில் ஈர்க்கப்பட்ட சேகுவாரா மருத்துவத் தகுதியின் பேரில் கொரில்லாப் படையில் இணைய ஒப்புக் கொண்டார். ஸ்பானிய குடியரசின் ஜெனரல் அல்பெர்ட்டோ பயோ கிரெட் மேற்பார்வையில் கொரில்லாப் பயிற்சி பெற்றார்.

 

ஜூலை 1956ல், அப்போதே மிக முக்கியமானவராய் கருதப்பட்ட சேகுவாரா உட்பட காஸ்ட்ரோவின் சதிகார கூட்டாளிகள் கியூப அரசாங்கத்தை அப்புறப்படுத்தும் காரியத்தில் சம்பந்தப்பட்டதாக மெக்ஸிகன் பாதுகாப்பு காவலாளிகளால் சுற்றி வளைக்கப்பட்டனர். ஜூலை 25ம் தேதி அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அதுவே டிசம்பர் 1956ம் தேதி கிரான்மா இலட்சிய பயணத்திற்கும், புரட்சிக்கான அறைகூவலுக்கும் காரணமாயிற்று. 82 மனிதர்களோடு கியூபாவில் காலடி எடுத்து வைத்த அவர்களில் 12 பேர் கொல்லப்படவோ, பிடிபடவோ செய்தார்கள். தப்பித்தவர்களில் ஒருவரான சேகுவாரா காயம்பட்டிருந்தாலும், உற்சாகத்துடன் செயல்பட்டிருக்கிறார். சியரியா மேய்ஸ்டிரா இயக்கம் பலம் பெற்றது. சேகுவாரா போராளியாகவும், இராணுவ தளபதியாகவும் உருவெடுத்தார். தொடர்ந்து கலகப்படையின் உயர்ந்த பதவியை அடைந்தார். எப்போதாவது அல்லது தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவராக செயல்பட்டார். கலகக்காரர்களின் பெரிய குழுவின் கமாண்டராக உயர்ந்து பிடல் காஸ்ட்ரோவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தார். 1958ல் ஓரியண்ட் மாகாணத்திலிருந்து மத்திய லாஸ்வில்லாஸ் மாகாணத்திற்கு அவர் தலைமை தாங்கி நடத்திய பயணத்தால் தலைநகரான சாந்தா கிளாராவை கைப்பற்ற முடிந்தது.

 

1959 புரட்சிக்குப் பிறகு சேகுவாரா கியூபாவிலேயே இருப்பதற்கு குடியுரிமை அளிக்கப்பட்டார். புதிய அரசாங்கத்தில் சேகுவாரா வகித்த முதல் பொறுப்பு ஹவானாவில் உள்ள லா கபானா துறைமுகத்தில் கமாண்டராக இருந்தது. அவருடைய அதிகாரத்தின் கீழ் மோசமான போர்க்கைதிகளுக்கான விசாரணை நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட பொதுமக்களும், இராணுவ அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். புரட்சிகர கோட்பாட்டிலான நீதியின் அடிப்படையில் யாரையும் கைதுசெய்யவும், தண்டனை கொடுக்கவும் சேகுவாராவால் முடிந்தது. கம்யூனிச நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு முந்தைய பாடிஸ்டா அரசில் செயல்பட்டவர்கள் மீதான விசாரணையில் தனிப்பட்ட விருப்புகளோடு செயல்பட்டார். தேசீய இராணுவத்தை  மக்கள் புரட்சிக்கான முக்கிய ஆயுதமாக உருவாக்குவதில் காஸ்ட்ரோவுக்கு துணையாக இருந்தார். இராணுவ உத்தரவு பிறப்பிக்கும் துறையின் தலைவராக இருந்த சேகுவாரா கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையில் அரசியல் கோட்பாட்டை  ஏற்படுத்துவதில் கவனமாயிருந்தார். கியூபாவின் பொதுமக்களை போராளியாக உருவாக்கிய பெருமை அவரைச் சாரும்.

 

இராணுவம் அல்லாத துறையில் அவர் வகித்த முதல் பொறுப்பு தொழில் துறையின் தலைவராக இருந்தது. நிலச்சீர்திருத்தத்தில் தீவீரமாக இருந்தபோதிலும் அந்தப் பதவியில் இரண்டே மாதங்கள்தான்(செப்டம்பர்- நவம்பர் 1959) இருந்தார். 1959 நவம்பரில் தேசீய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதற்கான தகுதிகள் இல்லாத போதும், திறமையான ஆலோசகர்களை வைத்துக்கொண்டு மிக விரைவில் அதன் நுட்பமான விஷயங்களிலும் தலையிட்டு திறம்பட நிர்வகித்தார். தேசியமயமாக்குவதிலும், பொருளாதாரத்தின் பன்முகத்தன்மைகளை மையப்படுத்துவதிலும் வேகம் காட்டினார். பணசுழற்சியினை 62 சதவீதத்திற்கு உயர்த்தி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி புரட்சியின் விளைவை மக்களுக்கு காட்ட முனைந்தார்.

1961ல் அவர் வர்த்தக அமைச்சராகி தேசத்தின் பொருளாதார நடவடிக்கைகளை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிகளை எடுத்தார். தனியார் மூலதனம் குவிந்து விடாமல் தடுத்திட ஏற்பாடுகள் செய்தார். இறக்குமதிகளை குறைப்பதற்கு கட்டுப்பாடுகள் மிக்க லைசென்சு முறையைக் கொண்டு வந்து டாலரின் நடமாட்டத்திற்கு கடிவாளம் போட்டார். உயர்தர மற்றும் நடுத்தர பிரிவினரின் மீது வரியை கடுமையாக்கி தொழிலாளர்களை அரவணைத்துக் கொண்டார்.

 

பிறகு கியூபாவின் பொருளாதார விஷயங்களில் சேகுவாராவின் செல்வாக்கு நிதானமாக அதிகரித்தது. 1960ம் ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பா மற்றும் சோவியத்திற்கு பொருளாதார குழு ஒன்றோடு சென்றார். கியூபாவின் மூலதனப் பொருட்களுக்கான வர்த்தக உடன்பாடுகளில் வெற்றி பெற்றார். மேலும் பல நாடுகளுக்கு வர்த்தக ரீதியான பயணங்கள் மேற்கொண்டார். 1961ல் நடந்த பண்ட்டா டெல் எஸ்டே சந்திப்பு மற்றும் 1964ல் நடந்த வர்த்தகம் மற்றும் முன்னேற்றம் குறித்த ஐக்கிய நாடுகளின் மாநாடு உட்பட பல சர்வதேச மாநாடுகளிலும் கலந்து கொண்டார். இரணுவத்தில் எந்த பொறுப்பும் இல்லாத போதும்  சேகுவாரா ராணுவ உடையையே அணிந்து கொள்கிறார். 1963 டிசம்பரில் பினார் டெல் ரியொ மாகாணத்தில் உள்ள இராணுவத்திற்கு தலைமை தாங்கி ஒரு படையெடுப்பு நடத்த இருந்ததாக தெளிவற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இரக்கமற்ற, ஆதாயங்களை நோக்கும் மனிதரான சேகுவாரா மேற்கத்திய கலாச்சாரத்திற்கு பழக்கமாயிருந்தார். சியரியா மேஸ்ட்ரா நாட்களில் வீரர்களுக்கு சார்லஸ் டிக்கன்ஸ், பிரெஞ்ச் எழுத்தாளர் அல்போன்ஸ் டெடெட், கியூபாவின் புரட்சிகர கவிஞர் மார்ட்டி மற்றும் சிலி நாட்டு கம்யூனிச கவிஞர் பாப்லோ நெருடாவின் எழுத்துக்களை வாசித்துக் காட்டுவாராம். நல்ல உணவு, பிராந்தி, சிகரெட்டுகளுக்கு பிரியம் கொண்டவராக இருந்திருக்கிறார். மென்மையாக பேசக்கூடியவராக இருந்திருக்கிறார். இருந்தாலும் குளிப்பது பிடிக்காமல், உதாசீனமான தோற்றத்தோடுதான் காட்சியளிப்பார்.

 

பெருவிய நாட்டு ஹில்டா கெடியா அக்கோஸ்டாவோடு நடந்த அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பிறந்த ஒரு குழந்தை தாயோடு இருக்கிறது. அலெய்டாவோடு சிலகாலம் சேர்ந்து வாழ்ந்த பிறகு 1959 ஜூன் 3ம் தேதி சேகுவாரா அவரை திருமணம் செய்து கொண்டார். புரட்சி நடந்த சமயத்தில் அலெய்டா கணிசமான காலத்தை சியரியா மேஸ்ட்ராவில் கழித்திருக்கிறார். 1959 செப்டம்பரில் கம்யூனிச செல்வாக்கு உள்ள லத்தீன் அமெரிக்க மகளிர் காங்கிரசில் உறுப்பினரானார். மற்ற இடதுசாரி அமைப்புகளிலும் அவரது பேர் அடிபடுகிறது. 1960ல் ஒரு குழந்தை பிறந்தது. சேகுவாரா பிரெஞ்ச் மற்றும் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவார்.

 

ஆவணம் முடிவடைகிறது.

 

இந்த ஆவணத்தில் சேகுவாராவின் நடவடிக்கைகளைப் பற்றி மட்டுமே சொல்லப்பட்டு இருக்கிறது. அதிலிருந்து அவருடைய சிந்தனைகளின் சிறு வெப்பத்தை மட்டுமே ஸ்பரிசிக்க முடியும். உரைகள், எழுத்துக்கள், அறைகூவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.


அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேகுவாராவின் மீது ஏற்பட்டிருந்த எரிச்சல் தெரிகிறது. காஸ்ட்ரோவின் மீது உள்ள வன்மம் தெரிகிறது. கியூபாவின் மீதுள்ள வெறி தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக கம்யூனிசத்தின் மீதுள்ள மிரட்சியும் தெரிகிறது. இந்த குறிப்புகளோடு சேகுவாராவைப் பற்றி சி.ஐ.ஏ இன்னொரு தகவலையும் சேமித்து வைத்திருந்தது. அது உண்மையானது. சேவால் ஒரு இடத்திலேயே தொடர்ந்து இருந்திட முடியாது என்பதுதான் அது.

 

சேகுவாராவுக்குள் என்ன ஓடிக் கொண்டிருந்தது என்பதை ஓரளவுக்கு புரிந்து வைத்திருந்தவர் காஸ்ட்ரோ மட்டுமே. அவராலும் சேகுவாராவை தடுத்த நிறுத்திட முடியாது.

 

looking 1964 டிசம்பர் 9ம் தேதி கியூபாவின் தலைநகரான ஹவானாவிலிருந்து புறப்பட்டு நியூயார்க் சென்றார். ஐ.நா சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆற்றிய உரை உலகை திரும்பிப் பார்க்க வைத்திருந்தது. "நான் ஒரு கியூபன். நான் ஒரு அர்ஜெண்டைன். நான் யருக்கும் குறையாத லத்தீன் அமெரிக்க தேச பக்தன். இங்கே வந்திருக்கும் லத்தீன் அமெரிக்க முக்கிய மனிதர்கள் யாரும் தங்களை நான் அவமதித்து விட்டதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். லத்தீன் அமெரிக்க நாடுகளில் எதாவது ஒன்றின் விடுதலைக்கு எந்த பலனும் கேட்காமல், யாரையும் பலி கேட்காமல் நான் என்னையே தருவதற்கு தயாராக இருக்கிறேன்" என்னும் பிரகடனத்தில் தீர்க்கமான லட்சியம் இருந்தது.

 

எட்டு நாட்கள் அங்கிருந்த சே 17ம் தேதி புறப்பட்டு கனடா வழியாக அல்ஜீரியா சென்றார். ஆசிய ஆப்பிரிக்கா நாடுகளின் ஒற்றுமைக்கான அமைப்பில் இரண்டாவது பொருளாதாரக் கருத்தரங்கில் பங்கேற்றார். அங்கிருந்து காங்கோ, கினியா, கானா, தாமோ ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பாரிஸ் வழியாக தான்சானியா சென்றார். தொடர்ந்து கெய்ரோவுக்கும் மீண்டும் அல்ஜீரியாவுக்கும் சென்றார். மீண்டும் கெய்ரோ சென்று அங்கிருந்து கியூபாவிற்கு திரும்பியிருந்தார். மொத்தமாய் மூன்று மாதங்கள்.

 

ஏராளமான அனுபவங்களை அவர் பெற்றிருந்தார். ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் உள்ள புரட்சிகர சக்திகளையும், அங்குள்ள நிலைமைகளையும் பற்றி அறிந்துகொண்டிருந்தார். காங்கோவில் லூமும்பாவின் கொலைக்குப் பிறகு அவரது ஆதரவாளர்கள் நடத்துகிற கொரில்லா நடவடிக்கைகள், அல்ஜீரிய வீரர்கள் தங்கள் மண்ணிலிருந்து பிரான்ஸை விரட்டியடித்த நாட்கள், லத்தீன் அமெரிக்காவில் இயங்கிவந்த கொரில்லா குழுக்கள் எல்லாம் அவருக்குள் மேலும் வேகத்தை உருவாக்கியிருந்தது.

 

இன்னொரு கியூபாவாக ஒரே ஒரு லத்தீன் அமெரிக்க நாடு சிலிர்த்துக் கொண்டால் போதும். அதுவே பொறியாகி விடும். ஏகாதிபத்தியத்தை சுற்றி தீ பரவச் செய்ய வேண்டும் என்கிற வேட்கை அவரைத் துரத்திக் கொண்டு இருந்தது.

 

வட்டமிட்டுக் கொண்டிருக்கிற கழுகின் பார்வையை அவர் உணர்ந்து, அதிலிருந்து தன்னை மறைத்துக் கொள்கிறார். கொரில்லாவின் முதல் நடவடிக்கை அதுதான்.

 

முன்னுரை

முதல் அத்தியாயம்

கருத்துகள்

10 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சேகுவேரா குறித்து தங்கள் எழுத்துக்கள் மிகவும் அருமை அவருடைய மொத்த வரலாறு தமிழில் படிக்க அல்லது தரவிறக்க ஏதேனும் தளம் இருந்தால் தரவும்

    பதிலளிநீக்கு
  2. தோழர்
    சே பிறந்த நாள் ஜூன் 6 அல்ல ஜூன் 14. மேற்படி அவர் நண்பருடன் தென் அமெரிக்காவை சுற்றிப்பார்க்கச்சென்றது (அது கல்விச்சுற்றுலாவும் அல்ல) இராணுவ சேவையில் இருந்து தப்பிக்க அல்ல அவருடைய அஸ்துமாவே அவரை இராணுவத்தில் சேரும் தகுதி இழக்கசெய்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  3. அனானிமஸ் அவர்களுக்கு

    தங்கள் வருகைக்கு நன்றி.
    சே குறித்து தமிழில் தளம் இருப்பதாக தெரியவில்லை.
    ஆங்கிலத்தில் ஏராளம் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  4. பசுபதி அவர்களுக்கு!

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
    தாங்கள் குறிப்பிட்ட, சே பற்றிய முரண்பட்ட செய்திகள்
    சி.ஐ.ஏ தயாரித்த ஆவணத்தில் உள்ளவை.

    பதிலளிநீக்கு
  5. தயவு கூர்ந்து இந்த இணையதளங்களை பார்வை இடவும்
    http://www.paperlessarchives.com/guevara_.html

    http://en.wikipedia.org/wiki/Che_Guevara

    http://en.wikipedia.org/wiki/The_Motorcycle_Diaries

    http://www.malaspina.org/guevarac.htm

    பதிலளிநீக்கு
  6. Guevara was born in Rosario, Argentina, the eldest of five children in a family of mixed Spanish and Irish descent. The date of birth recorded on his birth certificate was June 14, 1928, but his true date of birth was May 14, 1928. The birth certificate was deliberately falsified to help shield the family from scandal relating to his mother's having been three months pregnant when she was married. (ref:http://www.malaspina.org/guevarac.htm, http://www.paperlessarchives.com/guevara_.html)

    பதிலளிநீக்கு
  7. Please watch the BBC documentary titled "the true story of Che Guevara"

    http://filmtalks.net/post/2007/10/09/true-story-of-che-guevara/#a

    எனக்கு தெரிந்த வரையில் அதிக அளவு புத்தகங்களும், படங்களும் உள்ளது சேவுக்கு மட்டுமே. தயவுகூர்ந்து வரலாற்றை தவறாக எழுதவேண்டாம். அவரை பற்றிய CIA புத்தகங்களும் அதிகமாகவே உள்ளன. தங்களின் ஆராய்ச்சிக்கு உதவிய புத்தகங்களை பட்டியலிட்டால் நன்றாக இருக்கும் அல்லது இது ஒரு வகையில் அறிவு திருட்டு (intellectual property theft)அல்லவா. இந்த பிழையை நம் பிரபல தமிழ் எழுத்தாளர்களும் செய்வது வருத்தத்துக்குரிய விடயம்.
    ஆதலால் reference இட்டால் சிறப்பு.
    தங்கள் எழுத்தை தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. தோழரே!

    அருமையான பதிவு !!!!!!
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. பசுபதி!

    வணக்கம்.

    நான் படித்த- சி.ஐ.ஏ தயாரித்த குறிப்புகளின் லிங்க் இதோ:


    http://www.totse.com/en/politics/terrorists_and_freedom_fighters/164078.html

    அதில் நான்காவது பாரா இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.


    Ernesto Guevara de la Serna was born in Rosario, Argentina, on 6 June 1928, the eldest of five children of a comfortable, middle-class family. His parents have been separated since his university days. Guevara's father, Ernesto R. Guevara Lynch, is an architect and surveyor of Spanish-Irish descent who reportedly approved of the Castro movement at its inception. His mother, Celia de la Serna, claims not to be a Communist but has been active in the Latin American Woman's Congresses and in speaking in support of the Cuban revolution. Suffering from asthma since childhood, "Che" (the Argentine equivalent of "hey you" or "bud") underwent a program of rigorous physical exercise--hunting, fishing and other mountain activities--to counteract this deficiency, under the direction of his father. (Nevertheless, he still carries an oxygen inhaler with him at all times.)

    நண்பரே!
    இதை நான் உண்மை என்று எடுத்துக் கொள்ளவில்லை.
    சி.ஐ.ஏ வின் தவறான, முரண்பட்ட தகவல்களில் இதுவும் ஒன்றாக கருதலாம்.

    தங்களுக்கு சேவின் மீது இருக்கும் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் மதிக்கிறேன்.


    பொன்ராஜ்!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. சிஐஎ எப்போதும் உல‌கை குழ‌ப்ப‌த்தானே செய்திருக்கிற‌து.

    ந‌ல்ல‌ ப‌திவு வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!