இப்போதும் தமிழ்நாடு அரசு அது சர்வேக்கல் என்று சொல்கிறது.
அதில் சிறு நம்பிக்கையும், மகிழ்ச்சியும்
ஒட்டிக்கொண்டு இருக்கிறது.
சர்வேக்கல் என்பது உண்மை. அங்கு தீபம் ஏற்றப்படவில்லை
என்பதும் உண்மை.
உண்மைகளை நம்பிக்கையின் பேரில் அவர்கள் கேள்விக்கு
உட்படுத்துவார்கள். ‘பெரும்பான்மை’ என்னும் இறுமாப்பில் மூர்க்கத்தனமாக முட்டி தகர்ப்பார்கள்.
பன்மைத்துவம் இறுகிய நிலத்தில் அவர்களால் உடனடியாக
சாதித்துவிட முடியாது. வெளிச்சம் மறைவது தெரியாமல்
மெல்ல மெல்ல இருளடைவது போல கொஞ்சம் கொஞசமாக நிறுவிக்கொண்டே வருவார்கள். இதுதான்
ஆர்.எஸ்.எஸ்ஸின், அதன் இந்துத்துவப் பரிவாரங்களின்
ஆக்கிரமிப்புகளாக இருக்கின்றன. அப்படி பல ரத்தம் தோய்ந்த, வலி மிகுந்த, சாட்சியங்களோடுதான் கடந்த காலம் நிறைந்திருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் தர்காவுக்கு அருகே உள்ள அந்த
சர்வேக் கல்லில் தீபம் ஏற்றுவதில் – பத்து
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இருந்த நிலைமைக்கும் -
இன்று அவர்கள் இருக்கும் நிலைமைக்கும் - இடையே அவர்கள் எவ்வளவு முன்னேறி இருக்கிறார்கள்
என்பது தெரியும். அதுவும் குறிப்பாக மோடியின் தலைமையில் இந்துத்துவா பரிவாரங்கள் அதிகாரத்துக்கு
வந்த பிறகு நாடெங்கும் இதுபோன்ற அநியாயங்களில் ஒரு பாய்ச்சலே இருக்கிறது.
இப்போது உண்மை என்ன ஆகியிருக்கிறது?
சர்வேக்கல்லை தீபத்தூண் என்றும் அதில் தீபம் ஏற்றலாம்
என்றும் முந்தையத் தீர்ப்புகளைத் தாண்டி நீதிபதி
சுவாமிநாதன் தீப்பளித்தார். இப்போது பெரும்பாலான ஊடகங்கள் தீபத்தூண் என்றேச் சொல்ல
ஆரம்பித்து விட்டன. உரையாடல்களும் விவாதங்களும் சர்வேக்கல்லா, தூபத்தூணா என்று ஆகிவிட்டன. உச்சநீதிமன்றமும் தீபத்தூணில் இந்த
ஒருதடவை தீபம் ஏற்றலாம் எனச் சொல்லிவிட்டது. துரும்பில் கூட இல்லாத உண்மையை இப்போது தூணாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
சர்வேக்கல்லில் தீபம் ஏற்றினால், அது கீழிருந்து தெரியாது. சர்வேக்கல்லில் தீபம் ஏற்றும் கொப்பரையை
வைக்கவே முடியாது. அவைகளும் உண்மைதான்.
முதலில் பிள்ளையார்ச்சுழி போட வேண்டும். அது சுப்ரீம்
கோர்ட் உத்தரவுப்படி நாளையாக இருக்கலாம். சர்வேக்கல் என்று சொல்லிக்கொண்டே தமிழ்நாடு
அரசு அதில் விளக்கு ஏற்றலாம். பேருக்கு ஒரு விளக்கு அங்கு ஏற்ற வேண்டும். அது
யாருக்கும் தெரியக்கூட வேண்டாம். தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டு விட்டது என்பதுதானே
அடுத்தநாள் தலைப்புச் செய்தியாகும்!
நேற்று இல்லாத தூணை இன்று இருப்பதாக நிறுவி விட்டால் , இருக்கிற தூணை, நாளை பெரிய கொப்பரை
வைக்கும் பெரிய தூணாக கட்டியெழுப்ப முடியாதா? அப்போது கீழிருந்து
மக்களுக்கு தீபம் தெரியாதா?
கட்டியமைக்கப்பட்ட அயோத்தியும் ராமரும் நாட்டுக்கும்
மக்களுக்கும் என்ன செய்து விட்டார்கள் என்று இப்போது யாராவது யோசிக்கிறார்களா? திசை திருப்பப்படும் மக்களை, உண்மையானப் பிரச்சினைகளின்
பக்கம் திருப்பும் வல்லமை கொண்ட அரசியல் இயக்கங்கள் அதைச் செய்யத் துணிவதில்லை. போதிய வல்லமை
இல்லாத அரசியல் இயக்கங்கள் மூச்சிரைக்க திருப்பிப் பார்க்கின்றன.
எப்போதும் போல் நாளை என்னும் நம்பிக்கை மட்டுமே மீதமிருக்கின்றன. எப்போதும் உண்மைகளை உரக்கப் பேசிக்கொண்டே இருப்போம்.
