அன்புடையீர்!
தீராத பக்கங்கள் திறந்தவுடன் 'Subscribe' செய்ய ஒரு வேண்டுகோளை பார்க்கலாம். ‘சரி’ என்பதை க்ளிக் செய்யுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் பிரவுசர் ‘allow’ செய்ய கேட்கும். ‘Allow’ செய்ய அனுமதியுங்கள். தீராத பக்கங்களில் புதிய பதிவு வந்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் / மொபைலில் notification வந்துவிடும். நன்றி.

அடர்ந்து பரவிய விருட்சம்!


1985ம் ஆண்டில், பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம் நடத்திய தர்ணாப் போராட்டத்தில் வாழ்த்திப் பேசியபோதுதான் அவரை முதலில் பார்த்ததாக ஞாபகம். சங்கத்தின் பொதுச்செயலாளராய் இருந்த தோழர் பாரதி கிருஷ்ணகுமார் , “தோழர் எஸ்.ஏ.பெருமாள் (எஸ்.ஏ.பி). சி.ஐ.டி.யூ தலைவர்களில் ஒருவர்” என அறிமுகப்படுத்தினார். ஆஜானுபாகுவான தோற்றமும், கம்பீரமான பேச்சும் நினைவில் நிலையாக்கி இருந்தன.
 
வைப்பாற்றங்கரையோரத்தில், 42-பி எல்.எப்.தெரு என்னும் முகவரியில் இருந்த சங்க அலுவலகத்திற்கு திடுமென இரவு பத்து மணிக்குப் போல.எஸ்.ஏ.பி வந்து " எதாவது படம் பாக்கப் போவமா" என்பார்.  எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு எங்களையும் அழைத்துக் கொண்டு படம் பார்க்கச் செல்வார் கிருஷ்ணகுமார். தோழர் எஸ்.ஏ.பி இராமநாதபுரம் மாவட்ட (இன்றைய விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் ஒன்றாய் இருந்த இராமநாதபுரம் மாவட்டம்) சி.பி.எம் செயலாளர் என்பது அந்த சமயங்களில் நடந்த  உரையாடல்களில் தெரிந்தது. படம் பார்த்துவிட்டு வந்த பிறகு டீக்குடித்து விட்டு விடிய விடிய கிருஷ்ணகுமாரும்  எஸ்.ஏ.பியும் பேசிக்கொண்டிருப்பார்கள். எம்.ஜி.ஆரைப் பற்றி, ராஜிவ் காந்தியின் இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கான அழைப்பு பற்றி, கோர்பச்சேவின் உலக அமைதிக்கான நடவடிக்கைகள் பற்றி, இலங்கைப் பிரச்சினை பற்றி உரையாடல்கள் விரிந்து கொண்டிருக்கும். முடிந்தவரை விழித்து கேட்டு, அப்படியே தூங்கியும் விடுவேன். அவர்கள் இருவரும் எப்போது தூங்குவார்கள் என்று தெரியாது. காலையில் எழுந்திரிக்கும்போது, எஸ்.ஏ.பி பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். எதோ கனவு மாதிரி முந்தைய நாள் நினைவுக்கு வரும். வாழ்க்கை என்பது அபூர்வமானதாய் படியும்.
 
சங்கத்தின் அறைகூவலை ஏற்று, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தேன். நான்காம் நாள் காலை டாக்டர் பரிசோதித்து, கைது செய்து சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டேன். வலது கையில் டிரிப்ஸ் ஏற்றப்பட்டுக் கொண்டு இருந்த நிலையில், எனது இடது கையில் நிரஞ்சனாவின் ‘நினைவுகள் அழிவதில்லை’ நாவலைத் தந்தார் கிருஷ்ணகுமார். கேரளாவின் கையூருக்குள் பயணமானேன். அதில் வரும் மாஸ்டராக தோழர் எஸ்.ஏ.பி தெரிந்தார். பிரபஞ்சத்தைப் பற்றி, புரட்சியைப் பற்றி எத்தனையோ இரவுகள் அவர் சங்க அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்ததற்கெல்லாம் அப்போது அர்த்தங்கள் விளங்க ஆரம்பித்தன.
 
சில சமயங்களில் விருதுநகரில், பர்மா தெருவில் இருந்த சி.பி.எம் அலுவலகத்திற்கு  எங்களை கிருஷ்ணகுமார் அழைத்துச் செல்வார். தோழர்களுடன் கூட்டத்தில் இருப்பார், கொஞ்சம் காத்திருக்கச் சொல்வார். இல்லை, எதாவது புத்தகம் படித்துக்கொண்டிருப்பார். சில சமயங்களில் எதாவது கீரைகளை ஆய்ந்துகொண்டு அதன் மருத்துவக் குணங்களை பற்றி பிரஸ்தாபிப்பார். பின்னர் எங்களோடு டீக்களும் அரட்டைகளுமாய் இருக்கும். எதைப் பற்றிப் பேசினாலும், இயக்கவியல் குறித்த பார்வையோடு ஒவ்வொன்றையும் எப்படிப் பார்க்க வேண்டும் என்பது அவரது பேச்சில் ஒட்டிக்கொண்டே இருக்கும். 

எங்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராய் இருந்த தோழர் கிருஷ்ணகுமார் அவரிடம் மெத்த பணிவாகவும், அடக்கமாகவும் இருப்பதைப் பார்த்து எஸ்.ஏ.பியின் மீது எங்களுக்கு மரியாதை ஏற்பட்டது. அவருடனான உரையாடல்களில் அது மேலும் அதிகரித்தது. அந்த சமயங்களில் விருதுநகரில் ஒரு நந்தவனத் தோட்டத்தில் வைத்து மாதாமாதம் மாலைநேரங்களில், பல்வேறு தலைப்புகளில் எஸ்.ஏ.பி நடத்திய மார்க்சீய வகுப்புகளை கேட்டிருக்கிறேன். அவரிடம் பயின்று, அவரிடம் தாக்கம் கொண்டு, அவரிடம் வளர்ந்த தோழர்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் நிறைந்து இருக்கின்றனர்.  அடர்ந்து பரவிய விருட்சத்திலிருந்து சிறகு விரித்தவர்கள் அவர்கள்.
 
சோவியத் இலக்கியங்களின் மீது என்னைப் போன்று பலருக்கு ஈடுபாடும், காதலும் ஏற்பட்டதில் எஸ்.ஏ.பிக்கு ஒரு பங்கு உண்டு. கதைகளின் முக்கியப் பகுதிகளையும் அதில் இருக்கும் லயங்களையும், அதற்கான பின்னணியையும் விவரிக்கும்போது, ஒவ்வொன்றையும் எவ்வளவு ஆழமாகவும் தீர்க்கமாகவும் இந்த மனிதர் பார்க்கிறார் என ஆர்வம் கொள்ள வைக்கும். எழுதி வைத்திருந்த கவிதைகளை ஒருநாள் தயக்கத்தோடு கண்பித்தபோது மெல்ல புன்னகத்து, “கவிதைக்கான வரிகளாய் இருக்கின்றன, இன்னும் அர்த்தங்கள் தெளிவாய் இருக்க வேண்டும்” எனச் சொல்லி தொடர்ந்து என்னை எழுத ஊக்கப்படுத்தினார். சங்க அலுவலகத்தில் தங்கியிருந்த போது நான் எழுதிய ‘மண்குடம்’ சிறுகதையை கையெழுத்திப் பிரதியில் பார்த்தவர், செம்மலரில் பிரசுரிக்கச் சொல்கிறேன் என்று எடுத்துக்கொண்டு சென்றார். சில நாட்களில், அந்தக் கதையைப் பாராட்டியும், செம்மலரில் அந்த மாதம் வர இருக்கிறது என்ற தகவலோடும் அவர் எழுதிய கடிதத்தை இன்றும் வைத்திருக்கிறேன்.
 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகி, மாநாடுகளின் இரவுகளில் அவரோடு எழுத்தாளர்கள் கந்தர்வன், மேலாண்மைப் பொன்னுச்சாமி, கே.ஏ.குணசேகரன், தமிழ்ச்செல்வன் , உதயசங்கர், ஷாஜஹான், காமராஜ் எல்லாம் நடத்திய உரையாடல்கள் கிடைத்தற்கரிய அனுபவங்களாய் இருந்தன. மாநாட்டின் நிகழ்வுகளை விட, அதுபோன்ற தருணங்களே இப்போதும் நினைவில் இருக்கின்றன. ஒருமுறை சில தோழர்கள் கவிஞர் கண்ணதாசனையும், எழுத்தாளர் ஜெயகாந்தனையும் மட்டம் தட்டிப் பேசியபோது, கடும் ஆவேசத்தோடு, “கண்ணதாசனைப் போல ஒரு கவிதையையும் ஜெயகாந்தனைப் போல ஒரு கதையையும் எழுதி விட்டு பேசப்பா” என சத்தம் போட்டார். எதார்த்தவாத எழுத்தாளர்களை அப்போது கடும் கிண்டலோடும், விமர்சனங்களோடும் பார்த்த எழுத்தாளர்கள் கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணனும் தோழர் எஸ்.ஏ.பியிடம் மிகுந்த மரியாதையும், நெருக்கமும் கொண்டு இருந்தது ஆச்சரியமாக இருந்தது.
 
களத்தில் சமரசமற்ற போராளியாய், கட்சியை எங்கும் விட்டுக் கொடுக்காத வெறிகொண்ட தோழராய் இருந்தார். சாத்தூரில் சி.பி.எம் தாலுகா செயலாளராய் இருந்த தோழரை, அப்போதைய தமிழக அமைச்சராய் இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆரின் கையாட்களாய் இருந்தவர்களில் ஒருவன் மிரட்டியதும், அதற்காக போலீஸ் ஸ்டேஷனில் முறையிடச் சென்ற கட்சியின் தாலுகா செயலாளரை , காவல் நிலைய வாசலில் வைத்தே அந்த ரவுடி தாக்க வந்ததும், அருகிலிருந்த எஸ்.ஏ.பி அதே இடத்தில் வைத்து ஆங்காரமாய் குரல் எழுப்பி அவனை அடித்துத் துவைத்ததும் அப்போது பெரும் அதிர்வுகளுக்குள்ளாகிய சம்பவம். அருப்புக்கோட்டையில் தனியார் போக்குவரத்து ஊழியர்களைத் திரட்டி அவர் முன்னின்று நடத்திய போராட்டத்தை தோழர்கள் ஒரு காவியம் போல விவரித்ததெல்லாம் நினைவில் இருக்கிறது.
 
அவரது வீடு மதுரையில், திருவள்ளுவர் பேருந்து நிறுத்ததின்அருகில் இருக்கும் திடீர் நகரில் அப்போது இருந்தது. சங்கத்தில் நெருக்கடியான தருணங்களில் அவரிடம் ஆலோசிக்க கிருஷ்ணகுமார் மதுரைக்கு அழைத்துச் செல்வார். அவரது வீட்டில் கருவாட்டுக் குழம்போடு சாப்பிட்டு விட்டு, விடிய விடிய அருகிலிருக்கும் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க அலுவலகத்தில் பேசிவிட்டு கொஞ்சம் கூட களைப்பில்லாமல் சாத்தூருக்கு அதிகாலையில் திரும்பி வருவோம். இன்று மூடப்பட்டு ஆளரவமற்றிருக்கும் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டை கடந்து செல்லும்போதெல்லாம், வெதுவெதுப்பான அந்த நாட்கள் கடந்து செல்ல முடியாமல் தவிக்க வைக்கின்றன.
 
காலங்கள் ஓட, அவரும் விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து தீக்கதிர் பத்திரிகை அலுவலகத்தில் முக்கிய பொறுப்புக்குச் சென்றார். சந்திக்க முடிவது குறைந்து போனாலும் “மாது..” என அழைக்கிற தொனியில் இருக்கும் அன்பும், தோழமையும் சட்டென காலங்கள் எல்லாவற்றையும் திருப்பித் தந்து நெருக்கம் கொள்ள வைக்கும். அம்முவை, குழந்தைகளை தவறாமல் விசாரிப்பார். என் மகளுக்கு அவரைத் தெரியும். நான் பார்த்து பழகிய எத்தனையோ தோழர்களின் குடும்பங்களுடன் அவர் இப்படி நெருக்கம் கொண்டு இருக்கிறார். ஒரு கம்யூனிஸ்டின் வாழ்வு அது.
 
2017ம் ஆண்டில்  ‘பண மதிப்பு’ நடவடிக்கையை எதிர்த்து பாண்டியன் கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடந்த தர்ணாவுக்கு அவரை வாழ்த்திப் பேச அழைத்திருந்தோம். வயது காரணமாக அவரது தோற்றமும், குரலும் தளர்ந்திருந்தாலும், கம்பீரம் அப்படியே இருந்தது. அவரை நன்கு தெரிந்து பழகிய எங்கள் தோழர்கள் பலர் ஓய்வு பெற்று சென்று விட்டனர். பெரும்பாலும் அவருக்கு பழக்கமில்லாத இளைய தலைமுறையினர்தான் இருந்தனர். அவர்களோடு மிக இயல்பாக பேசினார். இளைஞர்களின் போராட்டக்குணத்தையும், அவர்களில் சிலர் பேசியதையும் பார்த்துக்கொண்டே இருந்தார். பஸ்ஸில் ஏறிச் சென்ற பிறகு போன் செய்து “அருமையான இளைஞர்கள். சங்கம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சந்தோஷம் மாது.” என்றார்.
 
“நீங்கள் வளர்த்தது எஸ்.ஏ.பி” என்றேன்.
 
*
கடந்த சில வருடங்களாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து வயது காரணமாக விலகி  இருக்கிறார். காலமும், சூழலும் வெகுவாய் மாறிக்கொண்டிருப்பதை எஸ்.ஏ.பி எப்படி பார்க்கிறார் என்பதை அவரது . ஃபேஸ்புக் சொல்லிக்கொண்டு இருக்கிறது.   தமுஎகச நிகழ்வுகளில்தான் எப்போதாவது நேரில் பார்க்க முடிகிறது.
 
கடந்த டிசம்பர் மாதம் தஞ்சையில் நடந்த  தமுஎகச மாநில மாநாட்டிற்கு துணைவியாரோடும், கையில் ஊன்று கோலோடும் எஸ்.ஏ.பி வந்திருந்தார்.  அவரை மேடையேற்றி,  1975ல் எழுத்தாளர் சங்கத்தை துவங்கிய தோழர்களில் ஒருவராக அவரை பொன்விழா ஆண்டில் சிறப்பித்த தருணம் அது. பின்னர் மேடையிலிருந்து இறங்கி  கீழே வந்தார்.
 
அருகே சென்றபோது அவரது கண்களில்,  ஆஜானுபாகுவாய் சஞ்சரித்த அவரது கடந்த காலமும், கனவுகள் நிறைந்த மாபெரும் வெளியும் பொங்கி இருந்தன
. 


You can comment here

Previous Post Next Post