இன்று எங்கள் வங்கியில் நகைக்கடன் வைக்க வந்தவர்களில் ஒருவரிடம் பேரைக் கேட்டேன். “கடவுள்” என்றார். “கடவுளா!” என்று அவரைப் பார்த்தேன். ரேஷன் கார்டை நீட்டினார். கடவுளுக்கு அட்ரஸ் இருந்தது. மனவியும், இரண்டு பெண்மக்களும், ஒரு ஆண் மகனுமாய் ஒரு குடும்பமும் இருந்தது!
நேற்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் 79வது பிறந்தநாள். அம்மு இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்னை சென்றிருந்தாள். என்னால் செல்ல முடியவில்லை. அம்முவுக்கு போன் செய்து, “அப்பா, பிறந்தநாள் எப்படியிருந்தது?” என நேற்று சாயங்காலம் கேட்டேன். “நல்லாயிருந்துச்சு. அப்பா ஃபிரண்ட்ஸெல்லாம் இப்ப வரைக்கும் வந்து கொண்டே இருக்கிறார்கள்” உற்சாகத்துடனும், வேலைகளின் அசதியுடனும் குரல் கேட்டது. ”நீங்க greet பண்ணீங்களா?” கேட்டாள். “ஆமாம், காலையிலையே பேசிவிட்டேனே” என்றேன். சிரித்தாள்.
“நீங்க வருவீங்கன்னு நெனைச்சேன் மாது”
என்று JK சொன்னதை அவளிடம் சொல்லவில்லை.
இன்னமும் அவரது வார்த்தைகளும் அதிலிருந்த அன்பான
எதிர்பார்ப்பும் தொந்தரவு செய்கின்றன.
முன்னர் காஞ்சி சுப்பிரமணியை கைது செய்தபோதும் சந்தோஷம் வரத்தான் செய்தது. இப்போது ராமதாஸ் வகையறாக்கள் கைது செய்யப்படுவதும் சந்தோஷம்தான். அம்மையாரின் அரசியலே தனி. கைதுகள், வழக்குகளின் அர்த்தங்கள் அவரது அகராதியில் வேறு. சகலத்தையும் மீறும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்பதும், தன்னை மிஞ்சி யாரும் இல்லை என்பதுமே அவரது ராஜாங்கம். பாசிச இயல்புகள் எதிரிகளை மட்டுமல்ல, நண்பர்களையும் விட்டு வைக்காது. நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியானவை என்று மட்டும் மயக்கம் கொண்டுவிடக் கூடாது.
எதிர்த்திசையில் இருந்து வந்தவர் பெட்ரோல் போட காத்திருந்தார். பக்கத்தில் கொண்டு போய் நிறுத்தினேன். அங்கே பணிபுரிகிறவர் என்னருகில் வந்து பெட்ரோல் போட டியூபை கையில் பிடித்தபடி, “சார் எவ்வளவு” என்றார். முன்பே வந்து காத்திருந்தவரைக் காட்டி “அவர்தான் முதலில் வந்தார்” என்றேன். சட்டென்று முகம் சிரிக்க எதிரே இருந்தவர், “பரவாயில்ல” என்றார். நானும். “பரவாயில்ல. இருக்கட்டும். நீங்கதான முதலில் வந்தீங்க” என்றேன். பெட்ரோல் போடுகிறவர் முகத்திலும், பெட்ரோல் போட வந்தவர் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. பெட்ரோல் போட்டு முடித்து, பைக்கை ஸ்டார்ட் செய்தவர் முன்பின் தெரியாத என்னைப் பார்த்து, “பார்ப்போம் சார்” என்று புறப்பட்டார். அவரது சிரிப்பு அங்கேயே இருந்தது.
உலகம் சட்டென்று அழகாகவும், அன்பாகவும் ஆனது.
மழை பெய்து அடங்கிய வெளியில் நின்று, மூச்சை
இழுத்து சுவாசிக்கிறேன். உள்ளும், வெளியும் ஊடுருவிய சில்லென்ற
காற்றில் கரைந்து போகிறேன். நட்சத்திரங்கள் தெரியாமல் வானம் அடைந்து போய் வியாபித்திருக்கிறது இரவு. அசைவதே தெரியாமல் தெரு விளக்கின் வெளிச்சத்தை
அசை போட்டுக் கொண்டு இருக்கின்றன மரங்கள் . தன்னை மறந்த உலகின் முணுமுணுப்பாகவும்,
பிதற்றலாகவும் கேட்கின்றன பூச்சிகளின் சத்தங்கள். அப்படியே பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும்
நிற்கிறேன். இது போன்ற ஒரு கணத்தில், மனிதன் இந்நிலத்தில் பரிணமித்தான் என்பதை ஒரு
பெரும் ரகசியம் போல உணர்ந்தேன்.
