|
மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மறைநாடு – 626127 15-9-89 அன்புத்தோழர் மாதவராஜ், ஈரமான இதயத்தின் அன்பான வாழ்த்துகள்! உங்கள் திருமண வைபவத்தில் கலந்துகொண்டு கண்குளிரக் காண்கிற வாய்ப்பு எனக்கு எட்டவில்லை. இருப்பினும் இதயத்தால் உங்களைக் காண்கிறேன். உங்கள் முகத்தை... களி துள்ளும் கண்களை... அடி உதட்டில் எந்நேரமும் ஒட்டியிருக்கும் குழந்தைப் புன்னகையை... அடிக்கடி வியப்பில் மலர்கிற கன்னக்கதுப்புகளை... கட்டுக்குள் அடங்காமல் இருபக்கமும் சிலுப்பிக் கொண்டிருக்கும் மயிர்க்கற்றைகளை... மண்குடம் படைத்த எழுத்தாளன்தானா? குழந்தை போல் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் பிரமித்துப் போய் குதூகலமாய் குலுங்கிச் சிரிக்கிற இந்த இளம் பையனா? வாழ்க்கை மனிதனுள் முரண்பட்டுச் சிரிக்கிறது. பொறுப்பற்ற – வாழ்க்கை பற்றிய அக்கறையற்ற - விளையாட்டும் வேடிக்கையும், நட்புகளும், ஓயாத அலைச்சல்களுமாய் ஓடித் திரிகிற தோற்றம் காட்டுகிற மாதவராஜ் –
அடம்பிடித்து பிணங்குகிற தலைமுறையை அன்பாய் - இங்கிதமான அணுகுமுறையால் சரிப்படுத்தி – சம்மதிக்க வைத்த மாது – வாழ்த்துகள்! இந்த திருமணத்தில் பெரும்பங்கு காதம்பரிக்கு உண்டு என்பதை உணர்கிறேன். அந்தத் தோழியை அன்போடு வாழ்த்துகிறேன். உங்கள் பெற்றோரின் பாச உணர்ச்சியும் முக்கிய பங்காற்றியிருக்கிறது. நான் பார்த்திராத அந்த முதிய இதயங்களை வணங்குகிறேன். ‘யுகசந்தி’ தொகுப்புதான் என்னை எழுத்தாளனாக்கியது என்பது உங்களுக்குத் தெரியுமா? எழுத்துக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாமல் செய்து கொண்ட இலக்கிய மேதை ஜெயகாந்தன் போற்றுதலுக்குரியவர். ஒரு நல்ல இனிய வாழ்க்கை உங்களுக்கு அமைய வாழ்த்துகிறேன். உங்களிடமிருந்து மண்குடங்கள், லட்சுமண ரேகைகள் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். அவைதாம் உங்களை என் போன்றவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தியவை. உங்களிடமிருக்கிற ஒரிஜினாலிட்டியே இலக்கிய படைப்பாளிதான். அந்தப் படைப்பாளியை கட்டவிழ்த்து விடுங்கள். மீண்டும் வாழ்த்துகள். தோழமையுள்ள
மேலாண்மை பொன்னுச்சாமி |
