1983 டிசம்பர் 1ம் தேதி. இஸ்மாயில் சார் முன்புதான் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு பணிக்குச் சேர்ந்தேன். அவர் BSc Agri முடித்துவிட்டு, பாண்டியன் கிராம வங்கியின் தலைமையலுவலகத்தில் Agri departmentல் சூப்பிரண்டண்ட் ஆக இருந்தார். அதிகம் பேச மாட்டார். மனிதர்களை நேசிக்கிற புன்னகை அவரிடம் இருக்கும்.
எனக்கு Despatch section. வரும் கடிதங்களைப் பிரித்து ஒவ்வொரு செக்ஷனுக்கும் கொடுக்க வேண்டும். அதுபோல் ஒவ்வொரு செக்ஷனிலிருந்து வரும் கடிதங்களுக்கு முகவரி எழுதி சீல் அடித்து பியூனிடம் கொடுத்து தபாலில் சேர்க்க வேண்டும். நான் கொஞ்சம் பொறுப்பற்றவனாய் இருந்தேன். மேஜையில் கடிதங்களை அப்படியே போட்டு விட்டு வெளியே தம்மடிக்கச் சென்று விடுவேன். ஃபேன் காற்றில் கடிதங்கள் பறந்து அறை முழுக்கக் கீழே கிடக்கும். இஸ்மாயில் சார் அவரது சீட்டில் இருந்து எழுந்து வந்து அவைகளை அடுக்கி, மேஜையில் வைத்து பேப்பர் வெயிட்டை மேலே வைத்து விட்டுச் செல்வார்.
பக்கத்து சீட்டில் இருந்த பாஸ்கர், நடந்ததைச் சொன்னார். எனக்கு சங்கடமாக இருந்தது. அதன் பிறகு கவனம் கொண்டு கடிதங்கள் மீது பேப்பர் வெயிட் வைத்து விட்டுச் செல்ல ஆரம்பித்தேன். இரண்டு மூன்று நாட்களுக்குள் திரும்பவும் தவறினேன். சிகரெட் பிடித்து விட்டுத் திரும்பி வந்தபோது, இஸ்மாயில் சார் குனிந்து கடிதங்களை பொறுக்கிக் கொண்டு இருந்தார். பதற்றத்துடன் ‘சார் நான் எடுக்குறேன்” என அருகில் சென்றேன். அவர் அந்த புன்னகை மாறாமல், “பேப்பர் வெயிட் வைக்க மறந்துட்டிங்களா?” கேட்டுச் சென்றார். அப்படி ஒரு இயல்பு கொண்ட மனிதரை நேரில் முதல் முதலாக நான் தரிசித்தேன்.
புதிய சொந்தங்களாய் ஊழியர்கள் பலர் கிடைத்தாலும், தங்கியிருந்த மணிசங்கர் லாட்ஜின் அலப்பறைகள் பரவி, அதிகாரிகள் மட்டத்தில் எனக்கு நல்ல பேரை வங்கியில் பெற்றுத் தரவில்லை. அடிஷனல் சூப்பிரண்டண்ட் மெய்யப்பன் எல்லாம் என்னை ‘தேறாத கேஸ்’ லிஸ்ட்டில்தான் வைத்திருந்தார். யூனியன் தர்ணாக்களில், மீட்டிங்குகளில் போய் கலந்து கொண்டேன். வங்கியின் சேர்மன் ஒருநாள் வந்து “பேங்க் ஸ்டாஃபா, பேட்டை ரவுடியா” என முறைத்து விட்டுப் போனார்.
எல்லாம் அறிந்திருந்தாலும் இஸ்மாயில் சாரின் அணுகுமுறை மட்டும் அவரது புன்னகை போல மாறவே இல்லை. வங்கியில் யாரிடம் காட்டாத அடக்கத்தையும், மரியாதையையும் அவரிடம் செலுத்தினேன்.
சில வருடங்களில் தலைமையலுவலகத்திலிருந்து அவர் வங்கிக் கிளைக்கு மாறிச் சென்றார். நான் தொழிற்சங்க பொறுப்புகள் ஏற்று அலைந்து கொண்டிருந்தேன். வாழ்க்கை தடதடவென்று ஓடிக்கொண்டு இருந்தது.
எப்போதாவது இஸ்மாயில் சாரை சந்திக்க முடிந்தது. அதே புன்னகையுடன், அதே சினேகத்துடன், அக்கறையுடன் பேசுவார். அவர் பணி ஓய்வு பெற்று பத்து பனிரெண்டு வருடங்களுக்குப் பிறகுதான் நான் பணி ஓய்வு பெற்றேன்.
சென்ற சனிக்கிழமை எங்கள் தமிழ்நாடு கிராம வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான சங்கத்தின் மாநாடு நடந்தது. சிறப்புரையாற்ற அழைத்திருந்தார்கள். சென்றிருந்தேன். முதல் வரிசையில் இஸ்மாயில் சார் உட்கார்ந்து சிரித்தார். வணங்கினேன்.
கிராம வங்கி ஊழியர்களின் கடந்த கால வாழ்க்கையை உணர்வுபூர்வமாகப் பேசினேன் என்று நினைக்கிறேன். பேசி முடிக்கும்போது பலரது கண்கள் ததும்பி நின்றன. இஸ்மாயில் சார் என் அருகில் வரவும், நான் கீழே சென்று அவரை அரவணைத்தேன்.
மேடையில் எனக்கு மரியாதை செய்வதற்காக துண்டு அணிவித்து இருந்தார்கள். “இது தொழுகை நேரம். தொழ வேண்டும். அந்தத் துண்டைத் தாருங்கள்” என்று கேட்டார். நான் கொடுத்தேன். சென்று விட்டார்.
பின்னர் தோழர்களுடன் பேசி, மதிய உணவுக்கான அறைக்குச் சென்றேன். இஸ்மாயில் சார் அங்கு வந்து “இந்தாங்க மாதவராஜ்” எனத் தந்தார். "சார் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றேன். அவர் மறுத்தார். அவரது நினைவாக, நம்மிடம் இருக்கட்டும் என வாங்கிக் கொண்டேன். அதே புன்னகையுடன் விடைபெற்றார்.
அன்றிரவு முத்துநகர் ரெயில் ஏறி சென்னையில் அடுத்தநாள் வீட்டுக்கு வந்து, பையைத் திறந்தேன். அந்தத் துண்டு மேலே இருந்தது. இஸ்மாயில் சார் புன்னகைத்துக் கொண்டிருந்தார்.


வருகைக்கு நன்றி.
கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.
1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.
2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.
3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.
நன்றி.
- தீராத பக்கங்கள்