பொய் மனிதனின் கதை - 2


சாத்தான் ஆரம்பத்திலிருந்தே பொய் சொல்கிறவனாக இருக்கிறான்”
ஜோசப் வெர்த்லின்

 “பிரதமருக்கு 56 இஞ்ச் மார்பு இருக்கிறதா என்பதை அறிய நாடு விரும்பவில்லை. ஆனால் அவரின் உண்மையான பிறந்த நாள் என்ன, அவர் தனது இளநிலை, முதுகலை பட்டங்களை பெற்ற விபரம், அவருடன் படித்த மணவர்களில் குறைந்த பட்சம் 10 பேர் யார் என்னும் தகவல்களை தெரிந்து கொள்ள விரும்புகிறது” என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி சக்திசிங் கோஹில் 2016 ஏப்ரல் மாதத்தில் கேட்டார்.

 கடந்த காலம் குறித்த தகவல்களில் குழப்பங்களும், மர்மங்களும்  நிறைந்த ஒரு பிரதமரை இந்தியா முதன் முதலாக சந்தித்து இருந்தது.  உலக நாடுகளின் தலைவர்கள் யாருக்கேனும் இப்படியெல்லாம் நேர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.

 பிரதமர் மோடியின் வலைத்தளத்தில் அவரது கடந்த காலத்திற்கான தகவல்கள்  சொற்பமாகவே இருந்தன.   குஜராத்தில் மிகச் சிறிய நகரம் ஒன்றில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்ததாகவும், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தால் கடின உழைப்பு குறித்து அவர் அறிந்திருந்ததாகவும், தேசபக்தி இயக்கமான ஆர்.எஸ்.எஸில் சிறுவயதிலேயே இணைந்து பணியாற்றியதாகவும் குஜராத்தில் எம்.ஏ (Political science)  பட்டம்  பெற்றதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 அப்புறம் சின்ன வயதில் இந்த டீ விற்றது, முதலையைப் பிடித்து வீட்டுக்கு கொண்டு வந்தது எல்லாம் கூட்டங்களில் அவரே பேசி இருந்தார்.  பள்ளியில் கபடி மேட்சில் ஜெயித்தது, தீண்டாமைக் கொடுமையை விளக்கும் நாடகம் எழுதி அரங்கேற்றியது எல்லாம் யார் சொல்லி பத்திரிகைகளில் வெளியிட்டார்களோ தெரியவில்லை. அவ்வப்போது மோடியின் சின்ன வயதுக் கதைகள் இப்படி ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லாமல் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.

 அவைகளையும் பொருட்படுத்தி மெனக்கெட்டு ஆராய்ந்து பார்த்ததில், மோடி எட்டு வயதில், அதாவது, 1958ம் வருடத்தில், டீ விற்ற வடநகரில் ரெயில்வே ஸ்டேஷன் திறக்கப்பட்டதே 1973ம் வருடமாக இருந்தது. மோடி பற்றிய மற்ற கதைகள் குறித்தும் அதையொட்டியே ஒரு அபிப்பிராயத்துக்கு வர ,வேண்டி இருந்தது.

 அவரது பிறந்த தேதி, படிப்பு குறித்த கதைகளை அப்படி எளிதாக எடுத்து விட முடியாது. வரலாறு என்பது கற்பனைகளாலோ, கட்டுக் கதைகளாலோ, ஊகங்களாலோ இருந்து விடக் கூடாது. நாட்டின் பிரதம மந்திரியின் வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தகவல்கள் மொத்த இந்தியாவுக்கானது. உலகத்திற்கானது. எதிர்காலத்திற்குமானது. எனவே அதையும் சமூக ஆர்வலர்கள் ஆராயத் துவங்க, கிணறு வெட்ட பூதங்கள் கிளம்ப ஆரம்பித்தன.

 குஜராத்தில், வடநகரில், பி.என்.உயர்நிலைப்பள்ளியில் படித்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடியின் எஸ்.எஸ்.எல்.சி சர்டிபிகேட்டில் அவரது பிறந்த தேதி 1949ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. பிறகு எப்படி அவரது பிறந்த தேதி 1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது முதலில் வந்த பூதம்.

 சர்ச்சைகளும், விவாதங்களும் கேள்விகளும் எழ ஆரம்பித்தன. வழக்கம்போல் நேரடியாக முகம் காட்டி பதில் சொல்லாமல் இருந்தார் பிரதமர் மோடி. அவரது மூத்த அண்ணன் சோமபாய் மோடிதான் வாயைத் திறந்து பேசினார். 1950ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி நரேந்திர மோடி பிறந்ததாகவும்,. பிறந்தவுடன் எழுதப்பட்ட ஜாதகத்தில் அந்த தேதி குறிப்பிடப்பட்டு இருப்பதாகவும், மோடியை பள்ளியில் சேர்க்கும்போது தவறான பிறந்த தேதியை மோடியின் பெற்றோர்கள் கொடுத்துவிட்டதாகவும், அதை மோடி பின்னாளில் சரி செய்து விட்டதாகவும், பெற்றோர்கள் செய்த தவறுக்கு மோடி எப்படி பொறுப்பாக முடியும் என்று தனக்கு விதிக்கப்பட்ட கடமையை முடித்துக் கொண்டார்.

 பள்ளியில் பிறந்த நாளை தவறாகக் கொடுத்து  சேர்ப்பது சென்ற தலைமுறை வரைக்கும் சாமானிய மக்களுக்கு நேர்கிற கதி என்பதை ஒப்புக்கொள்ள முடியும்.

கவனிக்க வேண்டியது என்னவென்றால், சரியோ, தவறோ பள்ளியின் சர்டிபிகேட்தான் செல்லுபடியாகும். ஆதாரமானதாகும். அதிகாரபூர்வமானதாகும். ஜாதகப்படி என்பதெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகாது. அப்படியென்றால் நரேந்திர மோடி பள்ளியில் தனது பிறந்தநாள் தவறாக கொடுக்கப்பட்டு இருப்பதை எப்போது அறிந்தார், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அதை செப்டம்பர் 17, 1950 என மாற்றினார் என்பதெல்லாம் இன்று வரை அவரது தரப்பில் தெரிவிக்கப்படாமலேயே இருக்கின்றன.

 இதையொட்டி அடுத்த பூதமாக மோடியின் கல்வித் தகுதி கேள்விக்குள்ளானது. நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் தனது கல்வித்தகுதியாக, 1978ம் வருடம் டெல்லி யூனிவர்சிட்டியில் பி.ஏ படித்ததாகவும், 1983ம் வருடத்தில் குஜராத் யூனிவர்சிட்டியில் எம்.ஏ படித்ததாகவும் சொல்லியிருந்தார். அதாவது, 1950ம் வருடம் பிறந்ததாக சொல்லப்படும் மோடி, அவரது 28 வது வயதில் பி.ஏ முடித்து, 33 வது வயதில் எம்.ஏ முடித்திருந்தார்.

 குஜராத்தில் அகமதாபாத்தைச் சேர்ந்த ரோஷன் ஷா என்னும் அரசியல் செயற்பாட்டாளர், மோடியின் எம்.ஏ கல்வித்தகுதி குறித்து 2013ம் ஆண்டு RTI மூலம் கேள்விகள் எழுப்பி இருந்தார். அப்போது குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தார். குஜராத் யுனிவர்சிட்டியில் இருந்து பதில் வரவில்லை. திரும்பவும் 2014ம் ஆண்டு பிரதம மந்திரி அலுவலகத்துக்கு கேள்விகள் அனுப்பினார். அப்போது மோடி பிரதம மந்திரியாய் இருந்தார். அதுகுறித்த ஆவணங்கள் தங்களிடம் இல்லை என பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்துவிட்டது. 

 ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் சந்தேகங்கள் எழுப்ப ஆரம்பித்தார். 1978ல் நரேந்திர மோடி என்பவர் டெல்லியில் பி.ஏ படித்திருப்பதாகவும், அவர் இந்த நரேந்திர மோடி இல்லை என்றும் அவரது முழுப் பெயர் நரேந்திர குமார் மகாவீர் பிரசாத் மோடி என்றும், அவர் 1958ல் பிறந்தவர் என்றும் தகவல்களை வெளியிட்டார்.

 ஒரு நாட்டின் பிரதமர் தங்கள் கல்லூரியில் படித்தவர் என்றால் அது அந்த கல்லூரிகளுக்கு எவ்வளவு பெருமை! அதனை தங்கள் வளாகங்களில் பொன்னெழுத்துகளால் குறிப்பிட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருப்பார்களே, அப்படி எதுவும் ஏன் நிகழவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. நரேந்திர மோடியுடன் படித்தவர்கள் இந்த நாட்டில் இருப்பார்களே, அவர்களில் ஒருவராவது மோடி என்னோடு படித்தவர் என எந்த அனுபவத்தையும் பகிரவில்லையே என சந்தேகப்பட்டனர்.

 மோடி மௌனம் சாதித்ததாலும், டெல்லி யுனிவர்சிட்டியும், குஜராத் யுனிவர்சிட்டியும் காலதாமதம் செய்ததாலும்  மேலும் சந்தேகங்களை எழுப்பினார் கெஜ்ரிவால். ஊடகங்கள் அமைதியாய் இருந்தன. அப்போதைய டைம்ஸ் நவ் – இப்போதைய ரிபப்ளிக் டிவி - அர்னர்ப் கோஸ்வாமிக்கு அடி வயிற்றிலிருந்து கத் வேறு பிரச்சினைகள் இருந்தன. தன்னைப் போன்று ஒரு மெழுகுச் சிலை வடிவமைப்பதற்காக மணிக்கணக்கில் போஸ் கொடுத்த மோடிக்கு இந்த சந்தேகங்களுக்கு பதில் சொல்ல நேரமில்லாமல் போனது.  அவரது பரிவாரங்களும், பக்த கோடிகளும்இதுதான் நாட்டின் முக்கியப் பிரச்சினையா?” என்று அலட்சியப்படுத்த முனைந்தனர். என்னமோ, நாட்டின் வறுமை, வேலையின்மை, தீண்டாமை, பெட்ரோல் விலையேற்றம், விவசாயிகளுக்கான நெருக்கடிகளை எல்லாம் தூக்கிப் பிடித்து தீர்க்கிறவர்கள் போல அலட்டிக் கொண்டனர்.

 சமூக ஊடகங்களில் மோடி குறித்த கிண்டல்களும், கேலிகளும் குவிய ஆரம்பித்தன. வெக்கையும், புழுக்கமும் தாங்க முடியாமல், பிஜேபி கட்சித்தலைவர் அமித்ஷாவும், நிதியமைச்சர் அருண்ஜெட்லியும் கூட்டாக இரண்டு காகிதங்களைக் கையில் பிடித்தபடி தங்கள் கூடாரத்தை வெளியே வந்தனர். காத்திருந்த பத்திரிகையாளர்களிடம், “இதுதான் மோடியின் கல்விச் சான்றிதழ்கள். அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களிடமும், நரேந்திர மோடியிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று சொல்லிச் சென்றனர். அதுவரை வாயைப் பொத்திக்கொண்டு இருந்த ஊடகங்கள் அனைத்தும் இதனை ’பிரேக்கிங் நியுஸாக’ வெளியிட்டு கத்தித் தொலைத்தன. அந்த பரபரப்பு கொஞ்சம் கூட நீடிக்கவில்லை.

 நாட்டின் அதிமுக்கிய மனிதர்கள் இரண்டு பேர் தங்கள் பிரதம மந்திரி குறித்து வெளியிட்ட அந்த கல்விச்சான்றிதழ்கள் போலியானவை என்றும், போட்டோ ஷாப்பில் தயாரிக்கப்பட்டவை என்றும், சான்றிதழ்களில் காணப்படும் fontகள் 1991க்குப் பிறகுதான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது என்றும், தேதிகள், பெயர்களில் மாற்றம் இருக்கின்றன என்றும், மோடி வாங்கிய மார்க்குகளின் கூட்டல்களில் தவறு இருக்கிறது என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. உண்மைதான். 23+23+67+23 = 136 தான் வரவேண்டும். மார்க்‌ஷீட்டில் 165 என்றிருந்தது.  திரும்பவும் ஊடகங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடிவாளங்களை மாட்டிக்கொண்டு வேறு பிரேக்கிங் நியுஸுக்காக ஓளிந்து கொண்டன.

 நாட்டின் பிரதமரின் மானத்தையும், கல்வி அறிவையும் காப்பாற்ற வேண்டிய பாத்திரம் டெல்லி யுனிவர்சிட்டிக்கு இந்த நாடகத்தில் விதிக்கப்பட்டது. “பிஜேபி தலைவர்கள் காட்டிய ரெகார்டுகள் உண்மையானவை. பிரதமர் மோடி டெல்லி யுனிவர்சிட்டியில் படித்து பட்டம் பெற்றிருக்கிறார்.” என்று பஞ்சாயத்தை முடிக்க முயற்சித்தார் யூனிவர்சிட்டி துணை வேந்தர்.

 “மார்க்‌ஷீட்களில் இருக்கும் பெயர் வித்தியாசமானதாக இருக்கிறதே?” என்ற கேள்விக்கு அது ஒரு வழக்கமான தவறுதான். இது போன்று வேறு சில மாணவர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது என்று மட்டையடியாய் ஒரு பதிலைச் சொன்னார்.

 “மோடி டிகிரி முடித்தது 1978ம் ஆண்டு. ஆனால் 1979ம் ஆண்டு என சர்டிபிகேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறதே?” என்ற கேள்விக்கு,  இது போன்ற சின்ன தவறுகளுக்கு எல்லாம் பதில் அளிக்க முடியாது என்று ஒரேயடியாய் சொல்லி தன் பாத்திரத்தை முடித்துக் கொண்டார்.

 அதிகாரத்தில் இருக்கும் ஒருவரின் ஒரு பொய் எவ்வளவு பேரை அலைக்கழிக்கிறது! ஒன்றை மறைக்க எத்தனை எத்தனை பொய்கள் அவதாரமெடுக்கின்றன.

 போட்டோ ஷாப்பால் வாழ்ந்தவன் போட்டோ ஷாப்பால் வீழ்வான்” என்னும் புது நீதிகள் டுவிட்டரில் தெறித்தன. “முன்னாபாய் எம்.பி.பி.எஸ் போல மோடிபாய் பி.ஏ, எம்.ஏ” என கிண்டல்கள் அள்ளின.

 இன்னொருபுறம், “டெல்லி நிர்வாகத்தை கவனிக்காமல் கெஜ்ரி்வால் ஏன் மோடியையே மோப்பம் பிடிக்கறார்?”, “இதுபோல் தனிநபர் குறித்த ஆராய்ச்சிகளால் நாட்டின் அரசியல் தரம் தாழ்ந்துவிட்டது“, “கெஜ்ரிவால் படித்தவர்தானே, அவர் செய்யக் கூடிய செயலா இது?”, “இதற்காக கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை”, “மோடியின் படிப்பைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?” என்னும் விமர்சனங்கள் வந்து மோதின.

 மோடி படித்தவரா, படிக்காதவரா என்பது விவாதமே அல்ல. நாட்டு பிரதமரின் நம்பகத்தன்மை குறித்த விவாதம் அது. அவர் எப்படி மக்களை மதிக்கிறார்  என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது.

 ரோஷன் ஷாவும் விடவில்லை. ”ஏன் அமித்ஷா டூப்ளிகேட் சர்டிபிகேட்களை காண்பிக்க வேண்டும். மோடியிடம் இருந்து ஒரிஜினல் சர்டிபிகேட்களை வாங்கி காண்பிக்கலாமே?” என்று  கேட்டார். ”பள்ளிக் கல்வி முடிந்ததும், வீட்டை விட்டு கிளம்பி விட்டதாகவும், இமாலயக் காடுகளில் எல்லாம் சுற்றித் திரிந்ததாகவும் மோடியே ஒரு பேட்டியில் சொல்கிறார். இமாலயத்தில் இருந்து கொண்டு அவர் டெல்லி யுனிவர்சிட்டியிலும், குஜராத் யுனிவர்சிட்டியிலும் எப்படி பட்டம் வாங்கினார். ஒரு மனிதர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்க முடியுமா?” என கேட்டார். யாரிடமும் பதில் இல்லை.

 Rediff.comலிருந்து ரோஷன் ஷாவிடம் கேட்டார்கள். ”நீங்கள் ஏன் மோடியை நம்ப மறுக்கிறீர்கள்?”.

 அதற்கு ரோஷன் ஷா, “மோடி தொடர்ந்து தவறுகள் செய்யும் வழக்கம் கொண்டவர். ஒரு தவறை செய்துவிட்டு அதை மறைப்பதற்காக இல்லாத ஆதாரங்களை உருவாக்குவார் அல்லது இருக்கும் ஆதாரங்களை அழித்துவிடுவார். அது அவரது இயல்பு.” என்றார்.

 நாட்டின் அதிகாரத்தை தன்னிடம் வைத்திருப்பவர்களுக்கு டெல்லி மற்றும் குஜராத் யுனிவர்சிட்டிகளில் கல்விச் சான்றிதழ்களை உருவாக்குவதோ அல்லது சான்றிதழ்கள் இருக்கின்றன எனச் சொல்ல வைப்பதோ மிகச் சாதாரண விஷயம்தான்.

 ஆனால் நாட்டின் பிரதம மந்திரியின் கல்வித்தகுதிக்கான ஒரிஜினல் சான்றிதழ்கள் இதுவரை இல்லையென்பதும், இருந்தவையும் போலியானவை என்பதும் சாதாரண விஷயமல்ல.

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!