-->

முன்பக்கம் , � அவள்

அவள்

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க வேண்டும் என்று முன்வந்து நின்ற அந்த நடுத்தர வயதுப் பெண்மணியை முன்னறையில் உட்காரச் சொன்னான். போட்டோஷாப்பில் ஒரு பெண்ணின் நிறத்தைச் சரிசெய்து கொண்டு இருந்த இவனுக்கு உறுத்தலாக இருந்தது. நிமிர்ந்து பார்த்தபோது அந்தப் பெண்மணி இவனையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள். எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்தது. எட்டிப் பார்த்து, “இதற்கு முன்னர் இங்கே படம் எடுத்திருக்கிறீர்களா?” என்றான். அவள் இல்லையென்றாள். மானிட்டரில் இருந்தவளின் பூவை கவனமில்லாமல் சரிசெய்தவனுக்கு நெற்றி சுருங்கியிருந்தது. எழுந்து டிஜிட்டல் காமிராவை எடுத்துக்கொண்டு அவளை உள்ளே அழைத்தான்.

வெளிச்சம் கண்டு கண்கள் கூசவில்லை அவளுக்கு. முகம் ரொம்ப நெருக்கமாதாய்த் தோன்றியது. ‘யர்ர்... யார்...’ உள்ளுக்குள் தவிப்பாகவே இருந்தது. பில் போடும்போது பெயரைச் சொன்னாள். சட்டென்று நிமிர்ந்தான். முகத்தை உற்றுப்பார்த்தான். 'அவளா....!’  கல்லூரிக் காலங்களில் அவளது தெருவிற்குள் எத்தனை தடவை படபடத்து நடந்திருக்கிறான். அவளது வீட்டிற்குள் கண்கள் எப்படியெல்லாம் ஊடுருவியிருக்கின்றன. ஒருமுறை அவளது கண்கள் இவனைப் பார்த்தாலே எவ்வளவு பரவசங்கள் நாடி நரம்பெல்லாம் பாய்ந்திருக்கின்றன. எத்தனை கவிதைகள் உருகி உருகி ஓடியிருக்கின்றன. ‘அவளா..!’. முகம் முற்றி, சோபையிழந்து, உடல் அந்த மினிமினிப்பற்று வதங்கி இருந்தவளை பார்த்துக்கொண்டு இருந்தான். பில்லை வாங்கிக் கொண்டு போய்விட்டாள். எதோ புரிந்த மாதிரி அவளது மௌனம் இருந்தது.

இவனையொத்தவர்கள் என்றில்லை, ஒரு பெருங் கூட்டமே அவளைச் சுற்றி சுற்றி வந்த நாட்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தன. எல்லோருக்குள்ளும் ரகசியமாய் நிரம்பியிருந்தாள். வாசலில், ஜன்னலில், மொட்டை மாடியில் அவள் நின்று கொண்டு இருப்பாள். ‘என்னைப் பார்த்து இன்று அவள் சிரித்தாள்’ என்று இவனும் பொய் சொல்லித் திரிந்திருக்கிறான். சேட்டுப் பையன் ஒருவனோடு பம்பாய்க்கு ஓடிப் போய்விட்டாள் என்ற செய்தியில் எல்லோரும் ஒருநாள் சிதைந்து போனார்கள். பிறகு மறந்தும் போனார்கள். அப்போது எப்படியிருப்பாள் என்று இவன் நினைத்து நினைத்துப் பார்த்தான். பிடிபடவில்லை. மங்கலாகத் தெரிந்தாள். இந்த ஊருக்கு எப்போது திரும்பி வந்தாள், எங்கு இருக்கிறாள் என்றெல்லாம் கேள்விகள் வந்து கொண்டு இருந்தன.

சில நாட்கள் கழித்து அவள் வந்தாள். போட்டோக்களை வாங்கிப் பார்த்தாள். இவனையும் பார்த்தாள். அந்தக் கண்களில் ஏக்கமும், தவிப்பும் இருந்தன. கைப்பை திறந்து ஒரு போட்டோவைக் கொடுத்து ‘என்லார்ஜ்’ பண்ண முடியுமா என கேட்டாள். அதில் அவனும், பலரும் கனவுகண்ட அவளது இளமையான உருவம் இருந்தது. காலங்களைத் திரும்ப கொண்டு வந்திருந்தாள். “சரிங்க..” என்றான். இரண்டு நாட்கள் கழித்து வருவதாய்ச் சொல்லிச் சென்றான். இவன் அந்தப் போட்டோவையேப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

பிறகு அவள் வரவே இல்லை.

*

Related Posts with Thumbnails

16 comments:

 1. நல்லா இருக்குங்க. கனவுகளை பரிசளிக்க இப்படி புகைப்படமாத்தான் பத்திரப்படுத்த வேண்டியிருக்குது.

  அவள் இனியும் அந்த புகைப்படத்தை வாங்க திரும்பி வராமலே இருக்கட்டும்.

  ReplyDelete
 2. //‘என்லார்ஜ்’ பண்ண முடியுமா என கேட்டாள். அதில் அவனும், பலரும் கனவுகண்ட அவளது இளமையான உருவம் இருந்தது. காலங்களைத் திரும்ப கொண்டு வந்திருந்தாள்.//

  ”சந்தேகத்தோடு பார்க்காதே அது நான் தான்” என்பதாகத்தான் அந்த பழைய போட்டோவா?

  ReplyDelete
 3. //அவள் இனியும் அந்த புகைப்படத்தை வாங்க திரும்பி வராமலே இருக்கட்டும்.//

  ரிப்பீட்டேய்!

  ReplyDelete
 4. அற்புதம்!

  பெண்களின் மனதை அழகாக்ப் படம் பிடித்து விட்டீர்கள்!

  தனது அழகிய பிம்பம் மட்டுமே அவனது நினைவில் நிற்க வேண்டும் என்ற அவளது தவிப்பு புரிகிறது.

  ReplyDelete
 5. ஞாபகங்களை தூண்டிய உங்களுக்கு நன்றி......!!!

  ReplyDelete
 6. காலங்களைத் திரும்ப கொண்டு வந்திருந்தாள். //

  நல்லா இருந்தது, எனது அவாவும், அவள் அந்த புகைப்படத்தை வாங்கக்கூடாது என்பதுதான்.

  ReplyDelete
 7. அருமை. ilamaiyin ninaivalaigal, rewind seyyapadumpothu......
  இது unmayil உங்கள் sontha anubavamaa :-)

  ReplyDelete
 8. அருமை. இளமையின் நினைவலைகள் ரீவைன்ட் செய்யப்படும்போது.....
  இது உங்கள் சொந்த அனுபவமா? :-)

  ReplyDelete
 9. //பிறகு அவள் வரவே இல்லை.//

  கதை அருமையா இருக்கு.

  ReplyDelete
 10. புகை படமாவது கிடைத்ததே .அருமை

  ReplyDelete
 11. அருமையாக இருக்கிறது...அந்தப் பெண்ணின் உணர்வைப் புரிந்துக் கொள்ள முடிகிறது!

  ReplyDelete
 12. அண்ணா, அருமையான உணர்வை பதிவு செய்திருக்கிறீர்கள், அருமை.

  ReplyDelete
 13. அருமை!!! அருமை!!!

  உருவங்கள் மாறலாம், ஆனால்
  நினைவுகள் உயிர் உள்ளவரை மறக்க முடியாது!!!!

  ReplyDelete
 14. சென்ஷி!
  அப்பாவி முரு!
  நாமக்கல் சிபி!
  தீபா!
  லவ்டேல் மேடி!
  அமிர்தவர்ஷிணி அம்மா!
  மங்களூர் சிவா!
  Rad Madhav!
  சின்ன அம்மிணி!
  சுரேஷ் குமார்!
  சந்தனமுல்லை!
  யாத்ரா!
  ஜான் பொன்ராஜ்!
  நாஞ்சில் நாதம்!

  அனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி. ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கு கொள்ள சொந்த அனுபவம் தான் வேண்டுமா?

  ReplyDelete