-->

முன்பக்கம் , � வயதாகி வந்த காமம்

வயதாகி வந்த காமம்

oldman dreams

 

 

ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அதைத் தாண்டி தொழுவத்தில் மாடுகள் சதாநேரமும் அசை போட்டுக்கொண்டு இருக்கும். தாத்தாவோ வீட்டின் முன்னறையில் ஈஸிச்சேர் போட்டு உட்கார்ந்து வாசலைப் பார்த்தபடி இடித்த வெத்தலையை அசை போட்டுக்கொண்டு இருப்பார். வயது எழுபதுக் கிட்ட இருக்கும். ரைஸ்மில், வயல்கள் என கோலோச்சியவர்.

தினத்தந்தி பேப்பர் அந்த வீட்டில் வந்து விழுவதிலிருந்து அவரது பொழுது ஆரம்பிக்கும். கேப்பைக்கூழைக் குடித்து, வாசல் பக்கம் வந்து, கண்களை இடுக்கியபடி மெல்ல படிப்பார். வெத்தலை ஒழுக, தாமரைச்சிங்கம் சுருட்டு புகைந்து கொண்டு இருக்கும். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகும். அப்புறம் பக்கத்தில் உள்ள பெஞ்ச்சில் பேப்பரை வைத்துக் கொண்டு காத்திருப்பார்.

தெருவில் உள்ள வாலிபப் பெண்களுக்கு அந்த வீட்டில் பல காரியங்கள் இருக்கும். மோர் வாங்க, தோட்டத்தில் பூ பறிக்க, சாணம் எடுக்க என தினமும் நான்கைந்து பேர் காலையில் வருவது வாடிக்கை. வந்ததும், “யம்மா, பாட்டியப் பாக்கப் போறியா, வரும் போது அந்த பேப்பர்ல இன்னிக்கு தொடர் கத வந்திருக்கு, கொஞ்சம் படிச்சுக் காமிச்சுட்டு போம்மா..” என கனிவோடு சொல்வார். அந்தப் பெண்களுக்கு விபரம் தெரியும். சிரிப்பும், எரிச்சலும் முகத்தில் சேர்ந்து வரும். “சரி தாத்தா”சொல்லி உள்ளே போவார்கள். வேலை ஆனதும், பின்பக்கக் கதவு வழியே அடுத்தத் தெரு சுற்றி வீட்டுக்குப் போய் விடுவார்கள். ஞாபக மறதியில் முன்பக்கம் வந்தால் மாட்டிக் கொள்வார்கள். பேப்பரை படித்துக் காட்டித்தான் ஆக வேண்டும்.

தினத்தந்தி பேப்பரில் அமுதா கணேசன், குரும்பூர் குப்புசாமி போன்றவர்களின் தொடர்கதை ஒருநாள் விட்டு ஒருநாள் வரும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பெண்ணின் அங்கங்களை வர்ணித்தோ, ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவு குறித்தோ சித்தரிப்புகள் கண்டிப்பாய் இருக்கும். இல்லையென்றால் இருக்கவே இருக்கும் குருவியார் பதில்கள். அவைகளை வாசிக்கச் சொல்லிவிட்டு, சுருட்டை பற்றவைத்து ஈஸிச்சேரில் சாய்ந்து கொள்வார். “ஊம்.. ஊம்” கொட்டிக் கொண்டே இருப்பார். பானை வயிறு  அதற்கேற்ப எழுந்து அடங்கி அசைந்து கொண்டிருக்கும். கதையின் அந்தப் பகுதியை அந்தப் பெண்ணின் குரல் நெருங்க, நெருங்க இந்த ”ஊம்”கள் வேகம் கொள்ளும். படிக்கும் பெண்கள் அந்த இடத்தில் தர்மசங்கடத்தோடு மிக வேகமாய் முணுமுணுப்பாய்க் கடக்க முனைவார்கள். சட்டென்று “சத்தமாப் படி” என்பார். பாவம் அவர்கள், திரும்பப் படிக்க வேண்டியதிருக்கும்.

பெண்களும் பலவித உபாயங்களைக் கையாண்டுதான் பார்த்தார்கள். முன்கூட்டியே தினத்தந்தி படித்து வைத்துக்கொண்டு அந்த இடம் வந்ததும் தாண்டிப் போவார்கள். “ஏளா, என்ன விட்டுட்டுப் படிக்க” என்று விவஸ்தையில்லாமல் கத்துவார். எந்த உணர்வும் இல்லாமல் ஜடம் போல் வேகமாய் வாசிப்பார்கள். “மெல்லப் படி, மெல்லப் படி” என்று பின்னாலேயே சொல்லிக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் அதிருப்தியுற்று, மொத்தமாய் திரும்பப் படிக்க வைத்து விடுவார். இந்தக் கைவரிசையை ஒரு பெண்ணிடம் மட்டும் காட்டுவதில்லை. வருகிற போகிற எல்லாப் பெண்களின் குரலிலும் தெரிந்து கொள்ள விரும்புவார். “தாத்தா... சக்திக்கனி காலைல படிச்சுட்டாளாமே” என்று சொல்லி பத்ரகாளி தப்பிக்க பார்ப்பாள். விட மாட்டார். “அவ சரியாப் படிக்கலம்மா...நீதான் நல்லா படிப்பே” என்று குளிப்பாட்டி உட்காரவைத்து விடுவார்.

தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் “தந்தித் தாத்தா”வின் தகிடுதத்தம் குறித்துப் பேசி சிரித்துக் கொண்டார்கள். அதற்குப் பிறகுதான் வீட்டின் பின்பக்க வழியாக ஓடுவது நடந்தது. இன்னொன்றும் செய்தார்கள் அப்படியே ஒருத்தி வாசிக்க வேண்டி வந்து விட்டால், அவள் அந்தக் கதை வந்திருக்கும் பக்கப் பேப்பரை மட்டும்  அசைவில்லாமல் எடுதுக் கொண்டு வந்து விடுவாள். மற்ற பெண்கள் தப்பிப்பார்கள். ”தந்தி”, ”தந்தி” என்று தாத்தா தட்டோலம் விட்டுக் கிடப்பார் அன்று முழுவதும்.

ஒருநாள் இந்தச் சதியையும் கண்டுபிடித்து அமுதாவை ”இப்படி திருடிட்டுப் போறியே... என்னப் பொம்பளப் பிள்ள நீ” என்று சத்தம் போட்டார். விஷயம் புரியாமல் பாட்டியும் முன்பக்கம் வந்து அமுதாவைச் சத்தம் போட்டார்கள். அவ்வளவுதான். அடக்கி வந்ததெல்லாம் வெடித்ததைப் போல “ஆமா.. நீங்க அசிங்கத்தையெல்லாம் படிக்கச் சொல்லி கேட்டுட்டு இருப்பீங்க... நாங்க படிச்சிட்டு இருக்கணுமோ. வயசானாப் போதுமா..” என்று கத்தித் தீர்க்கவும் தாத்தா பேச்சே வராமல் அடங்கிப் போனார். பாட்டியோ “ச்சே...” என்று தாத்தாவைப் பார்த்துச் சொல்லி உள்ளே போய் விட்டார்கள்.

சில நாட்கள் தினத்தந்திகள் பிரிக்கப்படாமலே அந்த வீட்டில் கிடந்தன. பெண்களும் அதைப் பார்த்து கடந்து போய் வந்து கொண்டிருந்தார்கள். தாத்தா அவர்களைப் பார்த்ததும் எதுவும் பேசாமல் கண்களை மூடிக் கொள்வார். ஒரு வாரம் கழித்து அமுதா அவர் அருகில் வந்து, “தாத்தா.. பேப்பர் படிக்கட்டுமா” என்று மெல்ல கேட்டாள். எட்டிப் பார்த்தார். அவள் முகம் வாடி இருந்தது. கண்கள் கருணையோடு பார்த்தன. வேண்டாம் என்பதாய் தலையை இடப்பக்கமும், வலப்பக்கமும் அசைத்தார். “இல்ல.. தாத்தா. படிக்கிறேன்.” அவள் குரல் தழுதழுத்த மாதிரி இருந்த்து. ஈஸிச் சேரில் இருந்து தலையை நிமிர்த்தி அவள் தலையைக் கோதி, எழுந்து நின்று அவள் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து “நீ நல்லாயிருக்கணும்மா” என்றார். அவர் குரல் தழுதழுத்து இருந்தது.

 

பி.கு: தாத்தா அந்த ஊரில் இறந்து போய் முப்பத்தைந்து வருடங்களாகி விட்டன. பேப்பர் படித்த பெண்கள் எங்கெங்கோ கல்யாணம் ஆகிப் போய் பாட்டிகளாகி விட்டனர். எப்போதாவது வரும் அவர்களின் அபூர்வமான ஊர் ஞாபகங்களில் தாத்தாவும் இருக்கத்தான் செய்வார். தினத்தந்தி எல்லா ஊர்களுக்கும் தானே செல்கிறது.

 

*

Related Posts with Thumbnails

35 comments:

 1. //அவர்களின் அபூர்வமான ஊர் ஞாபகங்களில் தாத்தாவும் இருக்கத்தான் செய்வார். தினத்தந்தி எல்லா ஊர்களுக்கும் தானே செல்கிறது.//

  வாசிக்க இயல்பா அழக நல்ல இருக்கிறது.

  ReplyDelete
 2. அமுதா, ஏன் திரும்பவும் தினதந்தியை வாசித்தார் என்று எனக்கு புரியவில்லை?

  ReplyDelete
 3. மாதவராஜ் ஸார்.. சிறிய இடைவெளிக்குப்பிறகு இணையப்பக்கம் வந்தேன்.. நட்சத்திரப் பதிவுகள் அனைத்தும் அலப்பறையான பதிவுகள்..

  வாழ்த்த வயதில்லை..(கிளிஷே இல்லை)

  எழுத்தின் ஊடாக காட்சிகள் கண்முன்!

  ReplyDelete
 4. கதை படிக்க இயல்பாகவும்
  உருத்தலுமின்றி எளிய நடையில் உள்ளது. படித்தேன்.
  ஆனால் அமுதா ஏன் திரும்ப அப்பேப்பரை படிப்பதாய் தானாக சென்று கேட்டாள் என்பதிற்கு
  காரணமேதும் சொல்லமல் விட்டுவிட்டீங்களே.
  இக்கதையில் மைய்யக்கருவே அதுதான் என்று நினைக்கின்றேன் அத்தயே விட்டுட்டீங்களே...

  ReplyDelete
 5. __///பேப்பர் படிக்கட்டுமா” என்று மெல்ல கேட்டாள். எட்டிப் பார்த்தார். அவள் முகம் வாடி இருந்தது. கண்கள் கருணையோடு பார்த்தன. வேண்டாம் என்பதாய் தலையை இடப்பக்கமும், வலப்பக்கமும் அசைத்தார். “இல்ல.. தாத்தா. படிக்கிறேன்.” அவள் குரல் தழுதழுத்த மாதிரி இருந்த்து.//___

  தாத்தா தவறான எண்ணத்தில் யாரையும் அணுகவில்லை
  அவருக்கு அது ஒரு திருப்தி...
  ஒரு சிலரே உணர்வுகளை புரிந்துகொள்கின்றனர்.
  தாத்தாவின் உணர்வுகளை அமுதா புரிந்து கொண்டாளோ?

  உங்கள் எழுத்து
  எப்போதுமே வாழ்வின் யதார்த்தம்.

  ReplyDelete
 6. ரொம்ப யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. "பாம்பு கோபத்தோடு சீறி, முயலைக் கவ்வி ஒரே வாயில் விழுங்கி விட்டது."

  அதிகாரவர்க்கம்...:)

  ReplyDelete
 8. மிக மிக யதார்த்தமான உளவியலோடு கூடிய கதை. அருமை.

  நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.தாமத வாழ்த்துக்கு மன்னிக்கவும் இரண்டு நாட்களாக இணையப் பக்கம் வரமுடியவில்லை

  ReplyDelete
 9. best wishes keep writing

  ReplyDelete
 10. மண்குதிரை!

  முதல் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 11. அப்பாவி முரு!
  அ.முத்துராமலிங்கம்!

  வாங்க.
  புரியவில்லையா.

  இங்கே மோனி அவர்கள் புரிந்து கொண்டதை எழுதியிருக்காங்க..
  கிட்டத்தட்ட...

  ReplyDelete
 12. நரசிம்!

  இந்த சார் அவசியம் தானா?
  நீங்கள் இங்கு வந்தது மகிழ்ச்சி தருகிறது.
  தங்கள் வாழ்த்துக்கு நன்றி. (அதென்ன வயது.. வாழ்த்துக்கு இடைஞ்சலாய்)

  டி.வியில் ஒரு பேட்டி பார்த்த கோபத்தில் எழுதியது, அலப்பரையாய்ட்டு. த்ப்போ, சரியோ மக்கள் விவாதிக்கட்டும்.

  ReplyDelete
 13. பின்னி பெடல் எடுக்கறீங்க தல................

  ReplyDelete
 14. கிருத்திகா!

  இரண்டு பதிவுகளுக்குமான பகிர்வுகளுக்கு நன்றி.

  ReplyDelete
 15. //அவள் முகம் வாடி இருந்தது. கண்கள் கருணையோடு பார்த்தன.//

  ??????????

  ReplyDelete
 16. முரளிக்கண்ணன்!

  நினச்சுக்கிட்டு இருந்தேன். ஆளைக் காணோமே என்று. நன்றி. உங்க பதிவை இன்று படித்தேன். சாயங்காலம் வருவேன்.

  ReplyDelete
 17. //அமுதா கணேசன், குரும்பூர் குப்புசாமி போன்றவர்களின் தொடர்கதை ஒருநாள் விட்டு ஒருநாள் வரும்//


  இனிமேல் தேடனும் சார்..

  ReplyDelete
 18. ருத்ரன் சார்!

  தலை தாழ்த்தி வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 19. அது என்ன திருப்ததி வக்கிரபுத்தி..
  இதுல என்ன திருப்தி வாழுது அவருக்கு இளம் பென்களிடம் இச்சை வார்த்தைகளை இரசிப்பது என்னவித்தில் திருப்தி என்பதில் எனக்கு குழப்பம்... மாதவராஜ் சார். வேறு ஏதோ காரணம் உள்ளது என்று நான் நினைத்தேன். நானும் அப்படி புரிந்திருந்தேன் ஆனால் அதை நீங்கள் ஒரிரு வரிகளில் கோடிட்டுக் காட்டிருக்க வேண்டாமா

  ReplyDelete
 20. நன்றி மாதவராஜ்
  உங்களோட கிட்டத்தட்ட-ங்குற வார்த்தை-க்காக .//

  அப்படியில்ல
  ஆ. முத்துராமலிங்கம் ...
  இதுக்கு பேரு வக்கிரபுத்தி இல்ல.
  உணர்வு...

  உணர்வுங்குற ஒரு விஷயத்தை
  சொல்லி புரிய வெக்க எனக்குத் தெரியல ...

  நம்மால முடியுதோ இல்லையோ but
  மனசு எப்படியாவது அதை அனுபவிக்கனும்-னு
  நெனைக்கும் ..

  இப்போ சர்க்கரை வியாதி இருக்குறவங்க
  யாருக்கும் தெரியாம வீட்ல இருந்து
  இனிப்புகளை எடுத்து திங்குரதில்லையா ?
  அதுக்கு "திருட்டு"ன்னு நாம பெயர் கொடுத்திட முடியுமா ?

  இந்த கதைல
  தாத்தா பண்ணுனது
  தப்பா, சரியா - ன்னு
  மாதவராஜ் சொல்ல வரலை .
  தாத்தாவோட
  Feelings-i தான் சொல்லியிருக்கார்-னு
  நான் நெனைக்கிறேன்.

  வாழ்க்கை-ங்குறதே
  ஏதோ ஒரு விஷயத்துல
  ஒரு பிரதிபலிப்பு தானே ?

  ReplyDelete
 21. எல்லோருக்கும் வந்த அதே சந்தேகம்தான். கூடவே, தாத்தா ஏன் "நீ நல்லாயிருக்கணும்மா" என்று சொன்னார் என்றும் தெரியவில்லை. மற்றபடி இயல்பான நடை.

  ReplyDelete
 22. அருமையான கதை மாதவராஜ். வாழ்த்துவதற்கு வயது ஒரு வரம்பில்லை. அதனால் வாழ்த்துகிறேன். ஆசீர்வதிப்பதற்குத்தான் வயது தேவை.

  தாத்தாவின் சின்னப் புத்திக்கு தெரிந்தே தீனி போட துனிந்த அமுதாவின் பெருந்தன்மையின் முன்னால் தாத்தா திருந்தி விட்டார். சின்னப் புத்தி, அதனால் அவமானம் பிறகு திருந்துதல் எல்லாமே இயல்பாக இருந்தது.

  மோனி,

  சர்க்கரை வியாதியுள்ளவர் இனிப்பைத் திருடி தின்பதும் கிழவன் சிறு வயது பெண்களிடம் செக்ஸ் சில்மிஷம் செய்வதும் ஒன்றல்ல. கிழவனுக்கு பீலிங்ஸ் இருந்தால் அதற்கு வேறு வழி முறைகள் உள்ளது. பேத்திகளிடம் வக்கிர புத்தியுடன் வடிகால் தேடுவது குற்றம்.

  ReplyDelete
 23. டச்சிங்கா இருந்தது.
  /தெருவில் உள்ள வாலிபப் பெண்களுக்கு அந்த வீட்டில் பல காரியங்கள் இருக்கும். மோர் வாங்க, தோட்டத்தில் பூ பறிக்க, சாணம் எடுக்க என தினமும் நான்கைந்து பேர் காலையில் வருவது வாடிக்கை./

  சரி,அப்போ உங்களுக்கு என்ன வயசு?

  ReplyDelete
 24. மோனி..
  //இந்த கதைல
  தாத்தா பண்ணுனது
  தப்பா, சரியா - ன்னு
  மாதவராஜ் சொல்ல வரலை .
  தாத்தாவோட
  Feelings-i தான் சொல்லியிருக்கார்-னு
  நான் நெனைக்கிறேன்.//
  ஒ..ஒ.. இப்ப சரின்னு நினைக்கிரேன்

  ReplyDelete
 25. சார், மனதைத் தொடுவதாயிருக்கிறது, தொடர்ந்து நீங்கள் சிறுகதை எழுத வேண்டுமென வேண்டுகிறேன்

  ReplyDelete
 26. முத்துராமலிங்கம்!

  வயதானவர்களுக்கு இருக்கும் இதுபோன்ற உணர்வுகள் அத்துமீறும்போது அருவருப்பாகி விடுகின்றன. மற்றபடி இதை மிகப்பெரிய பாவமாகவோ, அருவருப்பாகவோ பார்க்கத் தேவையில்லை. ஒரு தடவை பட்ட சூட்டிலேயே கூனிக் குறுகி போனவருக்கு ஆறுதலும், அன்பும் செலுத்தும் பக்குவம் அமுதாவுக்கு இருந்திருக்கிறது. அதை அவரும் புரிந்து கொள்கிறார்.

  ReplyDelete
 27. மோனி!

  நன்றி.

  உழவன்!

  முத்துராமலிங்கத்திற்கு நான் அளிட்த்ஹ பதிலைப் படியுங்கள். நன்றி.

  அமரபாதி!
  வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 28. முத்துவேல்!

  பத்து வயது போல இருக்கலாம்.

  ReplyDelete
 29. தமிழன் கறுப்பி!

  ஆமாம் கதை!

  ReplyDelete
 30. யாத்ரா!

  மங்களூர் சிவா!

  வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 31. இதுப் போன்ற தாத்தாக்கள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள்.

  எங்க ஊரில் ஒரு தாத்தா எப்பவும் கையில் பூக்களுடன் வலம் வருவார். தாத்தா ஒரு பூக்குடுன்னு கேட்டா நீ என்ன பொம்பளையா, அக்காங்கஙளுக்கு கொடுக்க வச்சிருக்கேம்பார். அதில் அவருக்கு ஒரு சந்தோசம்.

  இன்னொரு தாத்தா கிணற்று மேடையில் உட்காந்துகிட்டு வரும் பெண்களிடமெல்லாம் வம்பு பேசுவார்.
  சிலர் சிடுசிடுவென்றாலும் பலரும் அவரது கிண்டல்களை ரசிக்கவே செய்கின்றனர்.

  எங்க ஊரில் ஒரு பாட்டிக்கு 75 வயது. இன்னும் கிரிக்கெட் பார்ப்பதும் கமெண்ட்ரி சொல்வதும் என இருக்காங்க.

  இது போல பல ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  ReplyDelete
 32. Good story>>"SeX" is a feeling.It has its own rulings and "thrusts".It is purely "personal" one.It should not affect the others without their consent.It shall be respect.It shall be understood.Age/body is one important factor for "Intercourse"only.Mind and needs has no limitations.You have rightly narrated the feelings of a "person".
  I request the readers to read the Book>>Jayakanthan's>>>"GOKILA ENNA SEITHUVITTAL".--R.Selvapriyan-Chalakudy

  ReplyDelete