பகத்சிங்: மண் அடைகாத்துக் கொண்டிருக்கிறது

baghat singh

என்னை நட்சத்திரப் பதிவாளராய் அறிவித்த தமிழ்மணத்திற்கு நன்றி. இன்று இந்த தேசத்தின் வீரப்புதல்வன் பகத்சிங்கின் நினைவு தினம் என்பது நிழலாடிக்கொண்டு இருக்கிறது.  இந்த முதல் நட்சத்திரப் பதிவை அந்தப் போராளியின் நினைவுகளோடு துவங்குகிறேன்.

 

 

*

 

சட்லெஜ் நதியின் கரையோர ஊரான பெரோஸ்பூரில் சிறுவர்கள் ஆச்சரியமாக அந்த ஹெலிகாப்டரை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ம் தேதி, இந்த உற்சாகத்தை அவர்களுக்கு தந்து செல்கிறது. பஞ்சாப் மாநில முதல்வர் விண்ணிலிருந்து தரையிறங்கி அந்த மூன்று பேருக்கும் வணக்கம் செலுத்தி பறக்கிறார். சிறுவர்கள் மீண்டும் விண்ணைப் பார்த்து சத்தம் எழுப்புகிறார்கள். ஓடுகிறார்கள். பகத்சிங் அங்குதான் ராஜகுருவோடும், சுகதேவோடும் அந்த மண்ணில்தான் கலந்து, அடுத்த தலைமுறையின் காலடி ஓசைகளை கேட்டபடி இருக்கிறார்.

 

அங்கு மட்டும் அவர்கள் இல்லை. டான் நிறுவனம் நடத்தும் பத்திரிக்கையொன்றில் ஜாவேத் நக்வி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒரு தகவலை சொல்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன. 1991ம் வருடம் அங்கு சென்றிருந்தபோது நக்வி அதை பார்த்திருக்கிறார். ஆளுயரத்திற்கு மிக நேர்த்தியாக இருந்திருக்கின்றன. யார் வரைந்தார்கள், எப்போது வரைந்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. எதோ போகிற போக்கில் பகத்சிங் வரையப்பட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. "நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே" என்று சிறைக்குள் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட நோக்கத்தோடுதான் அங்கு காட்சியளித்திருக்க வேண்டும்.

 

தனது இருபத்தொன்றாம் வயதில் 'மதமும் விடுதலைப் போராட்டமும்' என்று வகுப்புவாதத்தின் அபாயங்களைச் சுட்டிக் காட்டிய சிந்தனையாளர் அவர்.

லாகூர் கலவரங்களுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். "முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல...அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை  ஏற்படுத்துவது என்பதும் ஆகும்." என்ற வாக்கியம் அவரது பார்வையின் வீரியத்தையும், தெளிவையும் நமக்கு உணர்த்துகிறது.

 

இளமையின் துணிவும், தேசப்பற்றும், அளப்பரிய தியாகமும் கொண்ட உருவமாகவே பொதுவாக பகத்சிங் முன்வைக்கப்பட்டிருக்கிறார். அதையும் தாண்டி ஆழமான புரிதல் கொண்டவராய், பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை யோசிக்கிறவராய் இருந்திருக்கிறார். இருபத்து மூன்று வயதில் இந்த மக்களைப் பற்றி, விடுதலையைப் பற்றி, அனைவருக்குமான தேசம் பற்றி தனது இலட்சியங்களை அறிவுபூர்வமாக முன் வைத்திருக்கிறார். அதுதான் பாபர் மசூதியின் சுவரில் அவரது உருவம் வெளிப்பட காரணமாயிருந்திருக்க வேண்டும்.

 

பாராளுமன்றத்தில் குண்டுகள் வீசியதற்காகவும், சாண்டிரஸை கொலை செய்ததற்காகவும் நடந்த வழக்கு முடிந்திருக்கிறது. தீர்ப்பு எந்த நாளிலும் வரலாம். சுகதேவ் தனக்கு இருபது வருடம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அப்படி ஆயுள் தண்டனை கிடைத்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், வாழ்வு அல்லது மரணம் என்றும் குறிப்பிடுகிறார். பகத்சிங் அவருக்கு எழுதுகிற பதில் அந்த இளைஞனின் தோளில் உட்கார்ந்து நம்மை உலகத்தை பார்க்கச் சொல்கிறது. "எனக்கு மரண தண்டனை. உங்களை நாடு கடத்தப் போகிறார்கள். நீங்கள் வாழ வேண்டும். புரட்சியாளர்கள் மரணத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு சூழலையும் எதிர்நோக்குவார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் வாழ வேண்டும். உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது." என்னும் அவரது வார்த்தைகளை செவிடர்களுக்கும் கேட்கும்படியாய் உரக்க வாசிக்க வேண்டும்.

 

1931, மார்ச் 23ம் தேதி அந்த திங்கள் கிழமை இரவு 7.33 மணிக்கு நடந்தது. "இன்குலாப் ஜிந்தாபாத்' வீர முழுக்கமிட்ட பகத்சிங்கின் குரல்வளையை இறுக்கிய தூக்குக்கயிறு அவரது கடைசி நேரத் துடிப்புகளோடு அதிர்ந்து மெல்ல அசையாமல் போனது. தேசம் தனது வீரப்புதல்வர்களை பறி கொடுத்து நின்றது. தன்னெழுச்சியாய் கடைகள் அடைக்கபட்டன. ஊர்வலங்களும், பிரார்த்தனைகளும்  நடைபெற்றன. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் லாகூர் மிண்டோ பூங்காவில் கூடி நின்று பிரார்த்தனை செய்தார்கள். சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் வங்காளத்தில் மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற்றது. பகத்சிங் என்னும் பேரே ஒரு சக்தி பிறக்கும் மந்திரச் சொல்லாகிப் போனது.  பஞ்சாபில் பெரும்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லை.

 

“பகைவர்களே இல்லை என்கிறாயா?
அந்தோ என் நண்பனே!
இப்பெருமிதம் மிகவும் அற்பமானது
உனக்கு எதிரிகள் இல்லாது போனால்
நீ செய்திருப்பது அற்ப சொற்பமானதே
துரோகி யாரையும் வீழ்த்தியிருக்க மாட்டாய்
தவறினை ஒருபோதும் சரி செய்திருக்க மாட்டாய்
போராட்டத்தில் கோழையாய் இருந்திருப்பாய்”
சார்லஸ் மகாய் எழுதிய இந்தக் கவிதையை சிறைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங். ஆத்திரமும், வேகமும் கொண்ட அவரின் பரிணாமம் மிக நிதானமானதாய் இருக்கிறது.  அதே நேரத்தில் மிக உறுதியானதாய் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பலர் பின்னாளில் ஆன்மீக வாழ்விற்குள் தங்களை புதைத்துக் கொண்டு ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். பகத்சிங்கின் குரல் இந்த இடத்தில் தனித்து ஒலிக்கிறது. "நான் ஏன் நாத்திகனாய் இருக்கிறேன்' என்னும் கட்டுரையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின் தொடர வைக்கின்றன. எழுப்பும் கேள்விகள் ஏற்கனவே இங்கு தயாராய் இருக்கும் பதில்களை வீழ்த்துகின்றன. "கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது" என்று சென்றுகொண்டே இருக்கிறார்.

 

கனவுகளை, இலட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் பகத்சிங். அவைகளை இன்னும் இந்த மண் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. பாபர் மசூதியில் வரையப்பட்டிருந்த பகத்சிங்கின் சித்திரம் உயிர்பெற்று, விதைகளையும் மண்ணையும் கீறிக்கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வெளிவரட்டும். நம் அறிவும் கண்களும் ஏங்குகிற காட்சியாக அது இருக்கட்டும்.

 

 

*

கருத்துகள்

35 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இன்று மீ த ஃபர்ஸ்ட்!
    வாழ்த்துக்கள் அங்கிள்!

    படித்து விட்டுத் திரும்பி வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் தோழரே!!..உங்களது பணி (படைப்புகளும் பகிர்வுகளும்) மென்மேலும் தொடர வாழ்த்துகள்..


    //உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது.//

    23 வயதில் எவ்வளவு நிதானமான நடை. அதுதான் அன்றைய பெரியவர்களின் எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். நான் ஏன் நாத்திகன் படைப்பை படிக்கும் ஒவ்வொருவரையும் வெட்கி தலைகுனிய வைக்கும்..

    பகத் சிங் பற்றி பேராசிரியர் ஞான சம்பந்தம் கூறியது.." எங்களை தூக்கில் இட வேண்டாம் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லுங்கள் இல்லை பீரங்கிகளால் சிதறி அடியிங்கள் என்று கூறிஉள்ளார். ஏன் தூக்கு பயமா என்று கேட்ட வெள்ளை ஐரோப்பிய ஈனறடிடம் தூக்கு போடும்போது என் கால்கள் எமது மண்ணை விட்டு மேலே சென்றுவிடும் என்று தமது மண்ணை எவ்வளவு தூரம் நேசிக்கிறார் என்று இதிலிருந்து தெரியும்.

    இந்தியாவிற்கு சோசலிசத்தை 23 வயதில் அறிமுகப்படுத்திய ஒப்பற்ற வீரன் அவர். சில மனிதர்களின் செயல்களால் என்றுமே நிலைத்து விடுவார்கள்..அதற்கு இந்த இளைஞனே சாட்சி..லெனின் ரஷ்ய புரட்சியை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி செய்த துடிப்பான இளைஞனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம்..

    //"நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே"//

    கண்டிப்பாக

    தோழமையுடன்

    முகமது பாருக்

    பதிலளிநீக்கு
  3. நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. நட்சத்திர வாழ்த்துக்கள் தோழரே!

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!
    அடித்து ஆடுங்கள்!

    பதிலளிநீக்கு
  7. தமிழ்மண நட்சரத்தித்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    பகத்சிங்கின் சடலத்தைக் கூட உறவினர்களிடம் தராமல் சட்லெஜ் நதியில் தூக்கி எறிந்ததாம்
    ஆதிக்க வெறி பிடித்த ஆங்கில அரசு...
    இம்மண்ணுக்காக் தன்னுயிர் நீத்த தன்மானச் சிங்கத்திற்கு எனது வீரவணக்கங்களும் உரித்தாகட்டும்.

    பதிலளிநீக்கு
  8. இளமையிலேயே உதிர்ந்தாலும் நட்சத்திரமாக ஜோலித்தவனைப் பற்றிய பதிவுடன் நட்சத்திர வாரம் தொடங்கும் மாதவ்! உங்களுக்கும் ஒரு வீர வணக்கம். வாழ்த்துகள்.

    அனுஜன்யா

    பதிலளிநீக்கு
  9. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. இதிலும் பாபர் மசூதி அரசியலா?. வழிபாடு நடத்தப்படும் மசூதிகளில்
    இப்படி படங்கள் வரைய அனுமதிப்பார்களா?. இல்லை இதுவும்
    இடதுகளின் பொய்களில் ஒன்றா.அது
    உண்மையோ பொய்யோ பகத் சிங்
    பற்றி எழுதும் போதும் பாபர் மசூதியைப் பற்றி ISI முத்திரை
    பெற்ற போலி மதசார்பற்றவாதி
    என்று நிருபீத்து விட்டீர்கள். நாத்திகவாதியான பகத்சிங்
    பாபர் மசூதி சுவற்றில் தன்
    படத்தை வரைவதை நிச்சயம்
    விரும்பியிருக்கமாட்டார்.

    பதிலளிநீக்கு
  11. நட்சத்திர வாழ்த்துகள்,

    பகத்சிங் பற்றிய பதிவு முறுக்கேறச்செய்கிறது,

    இன்னொரு செய்தியும் தெரியவந்ததில் மிக்க மகிழ்ச்சி

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில், 70 புத்தகங்கள் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஒரு எழுத்து விடாது வெறித்தனமாய் வாசித்தேன், என்னை தீவிர இலக்கிய வாசிப்புக்கு அழைத்து வந்தவரே அவர் தான்
    உன்னைப்போல் ஒருவனில் இருந்து பெயர்களைக் சொல்ல ஆரம்பித்தால் இப்பதிவு நீண்டுவிடும்,
    நூலகத்தில் ஒவ்வொரு முறையும் மூன்று புத்தகங்களை 2, 3 மணிநேரம் தேடியெடுப்பேன்.
    பிறகு புத்தக கண்காட்சியில் 40 புத்தகங்கள் ஒருமுறையும் மீத புத்தகங்களை மறுமுறையும் வாங்கி வாசித்த அனுபவங்கள் பொன்னான நாட்கள்
    அப்போது கையில் விபத்தது ஏற்ப்பட்டு ஒரு வருடம் எந்த பணிக்கும் செல்லாமலிருந்தேன், அந்த நாட்களில் தினம் 12 மணிநேரம் வாசிப்பு என இவருடைய எழுத்துக்களின் மூலமாகத்தான் மீண்டெழுந்தேன்.
    ஒரு முறை சந்தித்து உரையாடும் பாக்யமும் பெற்றேன்,நிறைய இருக்கிறது பகிர்வதற்கு
    உங்களிடம் இப்படியெல்லாம் பகிர்ந்து கொள்வதில் மன நிறைவாயிருக்கிறது,
    ஜெயகாந்தன் அவர்கள் உடல்நலம் தற்போது எப்படியிருக்கிறது, மேடையில் கம்பீரக்குரலுடன் சிங்கம் போல் கர்ஜிக்கும் அவர் உருவம் தான் நினைவிலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  12. தீபா!
    நட்புடன் ஜமால்!
    முகமது பாருக்!
    ஜ்யோவ்ராம் சுந்தர்!
    வெயிலான்!
    டக்ளஸ்!
    SP.VR. SUBBIAH!
    அனுஜன்யா!
    சந்தனமுல்லை!
    ஆயில்யன்!
    தங்கராஜா ஜீவராஜ்!

    தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  13. அனானி!
    //அது
    உண்மையோ பொய்யோ பகத் சிங்
    பற்றி எழுதும் போதும் பாபர் மசூதியைப் பற்றி ISI முத்திரை
    பெற்ற போலி மதசார்பற்றவாதி
    என்று நிருபீத்து விட்டீர்கள். //

    உங்களிடமிருந்து முத்திரை பெற்றதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. யாத்ரா!

    வாழ்த்துக்களுக்கு நன்றி.
    உங்கள் பகிர்வு சந்தோஷமளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. அண்ணாச்சி

    நட்சத்திரமானதற்கு வாழ்த்துகள்!
    நீங்கள் திருச்செந்தூர் என்றறிந்ததில் மகிழ்ச்சி. நம்ம சல்லிப்ப்ய 'செல்வேந்திரன்' நான் பொறன்டஹ் அதே ஊருலதான் பொறந்தானாம் :-) - சாத்தான்குளத்துல.

    நல்லா இருங்க!

    பதிலளிநீக்கு
  16. 'நச்'சத்திர வாழ்த்துக்கள் மாதவராஜ் :)
    தமிழ்செல்வனை கொண்டு வந்தமைக்கும்..

    பதிலளிநீக்கு
  17. நட்சத்திர வாழ்த்துக்கள்... பகத் சிங் பதிவு!! அவருக்கு எழுத்துக்களால் ஒரு வீரவணக்கம்...

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள் மாதவராஜ் சார்.

    எப்போதுமே பகவத்சிங்கை பற்றி படிக்கும் போது நம்மை அறியாமல் நம்மில் ஒரு வீரமும் நாட்டுப்பற்றும்
    அப்பியிருக்கும் அது போலவை இப்பதிவை படிக்கும் போது என்மீது கவ்வியது. ஆனால் பகவத்சிங்கை நான் படித்ததில் இதுவரை படிக்காத சிலபக்கங்களை எனக்கு அறிமுக படித்தி உள்ளீர்கள்
    //இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன.//
    இப்பதிவால் பகவத்சிங்கை பற்றி இன்னும் கொஞ்சம் தெறிந்துக் கொண்டேன். நன்றி

    பதிலளிநீக்கு
  19. பதிவுக்கு நன்றி.பரந்த பார்வை மகிழ்ச்சியைத் தருகிறது.

    பதிலளிநீக்கு
  20. ஆசிப் மீரான்!

    நீங்கள் இங்கு வந்து வாழ்த்தியது மிக்க சந்தோஷம். என்ன நம்ம செல்வேந்திரனை இப்படி சொல்லிப்புட்டீங்க.

    பதிலளிநீக்கு
  21. அய்யனார்!

    நன்றிங்க. ஒங்களையெல்லாம் த்மிழ்ச்செல்வன் பாக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  22. ஆதவா!

    ஆ.முத்துராமலிங்கம்!

    அமுதா!

    ராஜ நடராஜன்!

    அனைவரின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. இந்த பதிவு விகடன்.காம் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    அதற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. ஒவ்வொருவரும் தனது வாழ்வை நேசிக்கும்போது அந்த உப்பு சம்பற்ற வாழ்வின் தினசரி வேலைகளைகூட குறைத்துகொள்ளவிரும்பாத மனிதர் உலகத்தில் பற்றி எரிந்த சுதந்திர தீயில் சோசலிச பதாகையின் கிழ் புது உலகம் சமைக்க முதல் விறகான தோழர்கள் பகத். சுகதேவ், ராஜாகுரு செவ்வணக்கம்.

    நட்சத்திர வாழ்த்துகள் தோழர் மாதவராஜ் அவர்களுக்கு

    பதிலளிநீக்கு
  25. நட்சத்திரவாரத்தில் மிகவும் சிறந்ததொரு பதிவை அளித்து அனைவரையும் திருப்திப்படவைத்துவிட்டீர்கள்.
    பகத்சிங்கை பற்றி எங்கு படித்தாலும் உடம்பில் இனம் தெரியாத ஒரு உணர்வு எனக்கு ஏற்படும். அது இன்றும் ஏற்பட்டது.

    மிகவும் நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு
  26. வண்ணத்துப் பூச்சியார்!

    வாழ்த்துக்களுக்கும், தகவலுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. விடுதலை!

    வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  28. மஞ்சூர்ராஜா!

    ரொம்பநாள் கழிச்சு உங்களை இங்கு சந்திக்கிறேன். சந்தோஷமாயிருக்கிறது.

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  29. why dotn u write about Gandhi's infulance in fixing date of BahagathSingh's hanging.
    vkN

    பதிலளிநீக்கு
  30. //"கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது" // தீட்சண்யமான இன்றைக்கும் பொருந்தக்கூடிய வைர வரிகள்... தீராதபக்கங்களின் புதிய பக்கங்களைத்தேடித்தேடி கண்கள் பூத்துவிட்டன மாது... எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!