பறவை, மனிதன் மற்றும் விலங்கு


கார் ஷெட்டிற்கு மேலே தாழ்வான மரக்கிளை ஒன்றில் அந்தக் குருவியை வீட்டு மனிதர்கள் அடிக்கடி பார்த்தார்கள்.  

சின்னச் சின்னத் துரும்புகளைக் கொண்டு வருவதும், விர்ரென பறப்பதுமாய் இருந்தது. குருவிச்சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தது.  

கிளையொன்றின் கக்கத்தை தோதான இடமாகப் பார்த்து கூட்டை கட்டிய பிறகு அதன் வருகையும், இருப்பும், பறத்தலும் சத்தமில்லாமல் இருந்தன.  

நாட்கள் சில கழித்து வீட்டு மனிதர்களின் நடமாட்டங்களைப் பார்த்து வால் துடிக்க அந்தக் கிளையில் அங்குமிங்கும் சடசடத்து குருவி கத்த ஆரம்பித்தது.  

வீட்டின் பாடலாகியது குருவியின் சத்தம்.  

ஒருநாள் காலையில் வீட்டில் இருந்து மனிதன் வெளியே வரவும் கார் ஷெட் மேலிருந்து சிறகுகள் முளைக்க ஆரம்பித்திருந்த குருவிக்குஞ்சு அருகே விழுந்தது. காம்பவுண்டுச் சுவரிலிருந்து தாய்க்குருவி மனிதனைப் பார்த்து துடித்து சத்தமிட்டது.  

பூப்போல எடுத்து கார் ஷெட்டின் மீது விட்டு விடலாம் என சின்னச் சிறகை அசைத்துக் கொண்டிருந்த அந்த உயிரை நோக்கி மனிதன் குனிந்தான்.  

காருக்கு அடியிலிருந்த சாம்பல் நிறப் பூனை ஒன்று சட்டென பாய்ந்து அந்த குருவிக் குஞ்சை கவ்வி, வெளி கேட்டைத் தாவித் தாண்டி கண் இமைப்பதற்குள் மறைந்தது.  

செய்வதறியாமல் திகைத்து நின்றான் மனிதன். குனிந்து எடுக்கப் போன கைகள் நடுங்கின.  

குருவி அங்குமிங்கும் மாய்ந்து மாய்ந்து கதறியது.  

வீட்டின் ஓலமாகி மனிதனை அறுத்தது குருவியின் சத்தம்.


Comments

8 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. பல நேரங்களில் எண்ணங்களை செயல்படுத்த சில இடங்கல்கள் பல்வேறு வடிவங்களில் வரும், போகும். அவற்றை நம் மனதில் ஏற்றிக்கொண்டால் வாழ்க்கையில் நடுக்கங்கள் ஏற்படும். வாழ்வில் இதுவும் கடந்து போகும். மனிதருக்கும் குருவிக்கும். வாழ்த்துகள் தோழர்..

    ReplyDelete
    Replies
    1. மேலே பறந்து கொண்டிருக்கும் குருவிகளை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். கீழே பதுங்கிக் கொண்டிருக்கும் பூனைகளை நாம் பார்ப்பதில்லை. வாழ்வின் இழப்புகளையும், வலிகளையும் திடுமென எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழர். தங்கள் பெயரைக் குறிப்பிட்டால் நான் அறிந்துகொள்ள உதவியாய் இருக்கும்.

      Delete
  2. உயிர்த்து இருத்தலின் வாதை.....
    குருவிக் குஞ்சிற்கும் பூனைக்கும் 😥
    ஆயினும் பலவீனர் பக்கமே மனிதம் 😌

    மாரிக்கனி
    விருதுநகர்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, மாரிக்கனி தோழர்! தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சரியாகச் சொன்னீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் பக்கமே எப்போதும் மனிதம்!

      Delete
  3. அருமை தோழா

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர். தங்கள் பெயரைக் குறிப்பிட்டால் உங்களை நான் தெரிந்து கொள்ள முடியும்.

      Delete
  4. காப்பாற்றும் முயற்சியின் போது எதிர்பாராத ஆபத்து நேரிட்டது. மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது....... க. ஷெரீப், சிவகாசி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழர் ஷெரிப்! மனிதர்களின் கைகளில் இல்லாமல் போய்விடும் சந்தர்ப்பங்கள் பாடாய் படுத்தும்!

      Delete

You can comment here

தீராத பக்கங்களை Subscribe செய்து விட்டீர்களா நண்பரே!

Enter Email and Subscribe தீராத பக்கங்கள்!