பைத்தியக்காரர்கள்

sachidhananthan

படிக்கும் வரை காகிதத்தில் எழுத்துக்களாய் காத்துக்கொண்டிருக்கும் கவிதைகள் சில, படித்து முடித்ததும் நம்மோடு கூடவே உலவ ஆரம்பித்து விடுகின்றன. கவிஞனால் கல்லாக சபிக்கப்பட்டவை ஒவ்வொரு நல்ல வாசகனாலும் உயிர் பெறுகின்றன. சமயம் பார்க்காமல் எதாவது ஒரு தருணம் நம்மோடு அவை உரையாட ஆரம்பிக்கின்றன. ஒவ்வொருவருக்குள்ளும் இப்படியான தேவதைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கவிஞர் சச்சிதானந்தனின் இந்த ‘பைத்தியக்காரர்கள்’ என்னும் ‘தேவதை’என்னை விட்டுப் பிரிவதுமில்லை. விலகுவதுமில்லை.

பைத்தியக்காரர்கள்

பைத்தியக்காரர்களுக்கு
ஜாதியோ, மதமோ இல்லை.
பைத்தியக்காரிகளுக்கும்.

நம்முடைய பாலுறுப்புப் பிரிவினை
அவர்களுக்கு பாதகமல்ல.
அவர்கள் முன்முடிவுகளுக்கு
அப்பாற்பட்டவர்கள்.
அவர்களின் பரிசுத்தம்
நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

பைத்தியங்களின் மொழி கனவுகளால் ஆனதல்ல.
வேறொரு யதார்த்தத்தினுடையது.
அவர்களின் சினேகம் நிலவைப் போன்றது,
பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.

மேலே பார்க்கும்போது அவர்கள் காண்பது நாம்
கேட்டேயறியாத தேவதைகளின் மொழியைத்தான்.
அவர்கள் சிலிர்ப்பதாய் நாம் நினைப்பது
சூன்யமான சிறகுகள் உதிரும்போதுதான்.

ஈக்களுக்கும் ஆத்மா உண்டென்று அவர்கள் நினைக்கிறார்கள்.
வெட்டுக்கிளியின் தேவன் பச்சை நிறத்தில்
நீண்ட கால்களுடன் குதித்து
நடக்கிறான் என்றும் கருதுகிறார்கள்.

சிலசமயம் மரங்களிலிருந்து
குருதி கொட்டுவதை காண்கிறார்கள்.
சிலசமயம் தெருவில் நின்று
சிங்கங்கள் கர்ஜிப்பதை காண்கிறார்கள்.
சிலசமயம் பூனையின் கண்களில்
சொர்க்கம் ஜொலிப்பதைக் காண்கிறார்கள்.
இந்த விஷயங்களில் அவர்களில் நம்மைப் போலத்தான்.

ஆனாலும் எறும்புகள் கூட்டம் சேர்ந்து பாடுவதை
அவர்களால் மட்டுமே கேட்க இயலும்.
அவர்கள் சூன்யத்தில் விரல் அசைக்கும்போது
நடுக்கடலிலே சுழற் காற்றினை
தன் வயப்படுத்துவது போலவும்,
கால் அழுத்தி உதைக்கும் போது
ஜப்பானின் எரிமலையை வெடித்துச்
சிதறாமல் காப்பது போலவும்,
நினைக்கிறார்கள்.

பைத்தியக்காரர்களின் நேரம் வேறு.
நம்முடைய ஒரு நூற்றாண்டு
அவர்களுக்கு ஒரு நொடி மட்டுமே.
இருபது நொடி போதும்,
அவர்கள் கிறிஸ்துவை சென்றடைய
ஆறு நொடிதான்
புத்தனுக்குச் செல்ல.
ஒரு பகல் போதும்
வெடித்துச் சிதறிய
ஆதித்துகளகளை உணர.

பூமி கொதித்து உருகுவதால்தான்
அவர்கள் எங்கேயும் இருக்க முடியாமல்
நடந்து கொண்டேயிருக்கிறார்கள்.

பைத்தியக்காரர்கள்
பைத்தியங்கள் அல்ல,
நம்மைப் போல.

கவிஞர் சச்சிதானந்தன் கேரள நவீன கவிதையை உலகெங்கும் பரவச் செய்தவர்.  ‘என் மொழி என்பது மலையாளமோ, ஆங்கிலமோ அல்ல, என் மொழி கவிதை’ என்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருவண்ணாமலை கிளை நடத்திய முற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஒரு விஷயம் இந்தக் கவிதையோடு சம்பந்தப்பட்டது.

“குழந்தைப்பருவம் எனக்கு மிகவும் வேதனையான காலங்களாக இருந்தன. நம் எல்லோரின் குழந்தைப் பருவம் போலத்தான் என் வீட்டிலும் நிறைய கஷ்டங்கள் இருந்தன. வறுமை இருந்தது. வறுமைக்கும் மேலாக பைத்தியம் இருந்தது. பைத்தியம் என்பது என் குடும்பத்திலிருந்து எனக்குக் கிடைத்த பிரதானச் சொத்தாக நான் நினைக்கிறேன். என் பாட்டி பைத்தியமாக இருந்தாள். சித்திக்குப் பைத்தியம். சித்தியின் மகனும் பைத்தியம். என்னோட  பெரியம்மா, அதாவது பெரியப்பாவின் மனைவிக்கும் பைத்தியம். இப்படியாக எங்கள் குடும்பத்தில் ஐந்து பேர் பைத்தியமாக இருந்தார்கள். ஆறாவது ஆள்தான் உங்கள் முன் நிற்கும் சச்சிதானந்தன். ஒருவேளை நான் பைத்தியத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பேன் என்றால் அதற்கான காரணம் பைத்தியமாக மாறுவதற்குண்டான விஷயங்களையெல்லாம் வார்த்தைகளில், கவிதைகளில் பதிவு செய்ய முடிந்ததுதான்.”

படித்துவிட்டீர்களா? இனி, ஒரு தேவதையோடு, ஒரு கவிஞரும் உங்களோடு எப்போதும் வருவார்.

*

கருத்துகள்

21 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ஒரு அருமையான கவிதையை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி!

    //இனி, ஒரு தேவதையோடு, ஒரு கவிஞரும் உங்களோடு எப்போதும் வருவார்.//

    உண்மைதான்!

    பதிலளிநீக்கு
  2. //பைத்தியக்காரர்கள்
    பைத்தியங்கள் அல்ல,
    நம்மைப் போல.//

    எத்தனை சத்தியமான வார்த்தைகள்!

    பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. // பைத்தியக்காரர்கள்
    பைத்தியங்கள் அல்ல,
    நம்மைப் போல. //

    மிகச்சரி. நல்ல அறிமுகம் மாதவ். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. என் இரவுகள் பசித்திருந்தன
    என் கல்விச்சாலை நாட்கள்
    செருப்புதைக்கும் பயிற்சியோடும்
    மேற்படியார்கள் கொடுக்கும் சுடுகாட்டு வேலையோடும் அவர்கள் தரும்
    'சுதந்திரத்தோடு'ம் கழிந்தன.
    அம்மா களத்திலிருந்து வந்து இருங்குசோளம் வறுத்து இடித்து பொங்கி போடும் முன் தூங்கிப்போன நாட்கள் முள்ளாய்க்குத்துகிறது. அந்த வகையில் நாங்கள் பைத்தியக்காரர்கள் தான்.

    பதிலளிநீக்கு
  5. சச்சிதானந்தனைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படித்ததில்லை.
    வித்தியாசமான கவிதை.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. பகிர்தலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. Romanticising mental disorders and those afflicted by them may be poetically fashionable.That approach is nonsensical and cruel.
    They need treatment, sympathy and care not these stupid and silly poems. Mental disorder is like any other disease - ulcer, blood pressure, diabetes. Why dont you understand this basic fact. Sachidanandan's poem ignores the harsh reality and suffering.
    Only an insensitive mind can write so.

    பதிலளிநீக்கு
  8. //அவர்கள் முன்முடிவுகளுக்கு
    அப்பாற்பட்டவர்கள்.
    அவர்களின் பரிசுத்தம்
    நம்மால் அங்கீகரிக்கப்படுவதில்லை.

    பைத்தியங்களின் மொழி கனவுகளால் ஆனதல்ல.
    வேறொரு யதார்த்தத்தினுடையது.
    அவர்களின் சினேகம் நிலவைப் போன்றது,
    பௌர்ணமியன்று அது உருகி வழிகிறது.//

    எத்தனை உண்மையான விசயம்
    வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது.
    இப்படி ஒரு கவிதையை படிக்க தந்ததிற்கு நன்றி சொல்லிக் கொள்கீன்றேன்.

    அவர்களை பார்க்கையில் எனக்கு அடிக்கடி சில கேள்விகள் தோன்றும்.
    நம் மனம் எப்போதும் ஏதாவதொன்றை பற்றி பேசிக்கொண்டே இருக்கும் அந்த வாரத்தைகள் உதடுகள் வரை வந்து நிற்கும் அதற்கு மேல் நம் நாகரீகம் திடுத்து விடும். சில சமயம் இசை கேட்கும் போதும் அல்லது திருவிழாவில் கொட்டு சப்தம் கேட்கும் போதும் நம்முள் ஒரு ஆட்டம் துவங்கிவிடும் அது நம் உடலில் பரவியிருக்கும் சிலர் கால்கள் கூட ஆடிவிடும். ஆனால் முழுமையாக வெளிபடுத்துவதில்லை மூடி மறைக்கின்றோம் ஆனால் அவர்கள் அப்படி அல்ல எதையும் எங்கும் யாரையும் எதிற்பார்காமல் மூடி மறைக்காமல் பேசி விடுகின்றனர்.
    இதில் எது உண்மை நிலை என்று எனக்கு நிரம்ப நாளாகவே கேள்வி இருந்தது.
    இந்த கவிதை அழகாக அதை சொல்லுகின்றது.

    மாதவராஜ் அய்யா மிகவும் நன்றி இக்கவிதையை பகிர பதிவிட்டதற்கு.

    பதிலளிநீக்கு
  9. பைத்தியக்காரன் குறித்த இந்த பதிவு.... அருமையான விசிட்டிங் கார்ட்..

    இந்த கவிதை படித்ததும், எனது பூச்சாண்டி கவிதை ஞாபகத்திற்கு வந்தது. அழகான நடையில் எழுதியிருக்கிறார்.. வித்தியாசம் நன்கு புரிகிறது.

    பகிர்வுக்கும் பதிவுக்கு நன்றீங்க.

    பதிலளிநீக்கு
  10. அவர்களை பற்றி முழுப்புரிதல்
    இருந்தால் மட்டுமே
    இதுபோல் எழுத்துக்களை வடிக்க
    முடியும்

    பெயரில்லாதவரே
    வெறும் மருந்து கொடுக்கும்
    எந்த முருத்துவமும் குணமடைய
    செய்வதில்லை
    நம்பிக்கை ஊட்டும் அரவணைப்போடு
    கூடிய மருத்துவமே குணமாக்கும்
    அரவணைப்புக்கு புரிதல் அவசியம்

    மாதவராஜ் அண்ணா சொன்னது
    தப்பில்லையே

    பதிலளிநீக்கு
  11. தோழா அடையாளம் கண்டுபிடிப்பது,
    அதை ரகசியப்படுத்தாமல் உலகறியச்சொல்லுவது
    எல்லாமே, கவிஞன், உண்மத்தமானவன்,ஞானி,
    விஞ்ஞானிகளின் மூலக்கூறு. நண்பர்கள் இன்னும்
    ஒரு சிட்டிகை அதிகமாக.
    அருமை அருமை

    பதிலளிநீக்கு
  12. அறிவொளி நாட்களில் நாங்கள் பேசிக்கொள்வோம்.தொண்டர்கள் இயக்கத்தின் மீது பைத்தியமாக இருக்க வேண்டும்.பைத்தியம் தெளியுமுன் இயக்கத்தின் லட்சியத்தை அடைந்து விட வேண்டும் என்று.கவிஞன் மட்டுமல்ல.நாம் எல்லோருமே பைத்தியங்கள் தான் மாது.

    பதிலளிநீக்கு
  13. நல்லதொரு கவிதையையும், கவிஞரையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  14. சந்தனமுல்லை!
    சென்ஷி!
    வடகரைவேலன்!
    சுரேஷ்!
    திலீப் நாராரயணன்!
    மஞ்ஞூர்ராஜா!
    முத்துவேல்!
    ஆதவா!
    ஆதவா!
    காமராஜ்!

    அனைவரின் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முத்துராமலிங்கம்!

    உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி. நேர்மையாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  16. புன்னகை!

    அனானிக்கு சரியான பதில் தந்திருக்கிறீர்கள். நன்றி.

    அனானி!
    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  17. தமிழ்!

    ஆமாம். உண்மைதான் நீங்கள் சொல்வது....

    பதிலளிநீக்கு
  18. சொந்த படைப்புகள் மட்டுமல்ல நாம் படித்து ரசித்தவைகளும் ஒரு சிறந்த பதிவாக முடியம் என்பதினை உணர முடிகிறது

    நன்றி

    பதிலளிநீக்கு
  19. Not touched me the "poem " sir.What to do ??
    -R.Selvapriyan-Chalakudy

    பதிலளிநீக்கு
  20. பைத்தியம் என்ற பதத்திற்க்கு
    பொருளறிய முற்பட்டதில்லை நான்.
    ஆனால் பலரிடமிருந்து
    பல முறை பட்டம் பெற்றிருக்கிறேன்
    பைத்தியகாரனென்று.

    (ஊற்று கிணறு அழுதபோது
    மழை வாணத்தில் யானை சென்றபோது
    ரேஷன் அரிசிக்கு வரிசையில் நின்றபோது
    ஜாதி சான்றிதழ் ஏன் என்ற போது
    275 ரூபாயில் புதுமைபித்தன்(தமிழ்) புத்தகம் வாங்கிய போது
    .
    .
    .
    .)
    அப்போதெல்லாம் சிறு கோபம் வரும்.
    இனி புன்னகை மட்டுமே
    இதுவும் பைத்தியகாரர்களின் மொழி தானே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!