கோவைச் சம்பவம் சொல்லும் செய்திகளும் எழுப்பும் சிந்தனைகளும் -2




“இந்த மனிதர்கள் தம்மால் முடியவே முடியாத ஒரு காரியத்தைச் செய்ய முயல்கிறார்கள். அதாவது தாமே கெட்டவர்களாய் இருந்துகொண்டு கெட்டதைச் சரிசெய்ய முயலுகிறார்கள்” - புத்துயிர்ப்பு நாவலில்.

ஒரு அமைப்பு, யாருடைய நலன்களை முன்னிறுத்துகிறதோ அவர்களது நலனைப் பேணிப் பாதுகாக்கும் கருவிதான் அரசு. சர்வாதிகாரம், மன்னராட்சி போன்ற முறைகளில் இந்தக் காரியம் மிக நேரிடையாகவே நடைபெற்றன. சாதாரண மக்களின் கருத்துக்களுக்கு அங்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்பட்டதில்லை. இதற்கு எதிராக கருத்துக்களும், போராட்டங்களும், புரட்சிகளும் மக்களிடம் இருந்து கொந்தளிப்பாக புறப்பட்ட, சென்ற நூற்றாண்டிற்குப் பிறகு ‘மக்களின் நலன்களுக்காக’ அமைப்பு இருப்பதாக தனனைக் காட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மக்களிடம் அப்படியொரு ‘இமேஜை’ உருவாக்குவதற்கான ஏற்பாடுதான் இன்று உலக அளவில் அதிகமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிற ஜனநாயகம். ஆத்திரமடைந்த மக்களை சமாதானம் செய்யவும், அதே நேரத்தில் மேல்தட்டு மக்களுக்கு தன் ஊழியத்தைத் தொடர்ந்து மறைமுகமாகச் செய்வதற்கான வழிகளையும் உள்ளடக்கிய தேர்ந்த ஏமாற்றுதான் இது. தேர்தல்முறை, நீதிமன்றம், ஊடகம் என பல்வேறு வழிகளில் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து ஜனநாயக இமேஜை இந்த அமைப்பு காப்பாற்றி வருகிறது.

இந்த இமேஜ் எப்போதெல்லாம் மக்களிடம் பாதிக்கப்படுகிறதோ அல்லது சரிகிறதோ அப்போதெல்லாம் அரசின் இயந்திரங்களான காவல்துறை, நீதிமன்றம், ஊடகம் போன்றவை ‘அமைப்பை நியாயப்படுத்த’ எதாவது ஒரு காரியத்தைச் செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்கும். ஒரு முக்கியமான தீர்ப்பு வரும். ஒரு அமைச்சரின் ஊழல் குறித்த செய்திகள் வரும். மக்களை அச்சுறுத்தும் கொள்ளையர் கும்பல் ஒன்று பிடிபடும். அதாவது, ‘இந்த அமைப்பில் ‘எல்லோருக்குமான இடம் இருக்கிறது’, ‘எப்படியும் நியாயம் கிடைக்கும்’, ‘ஜனநாயகம் ஒன்றும் செத்துப் போய்விடவில்லை’ என்கிற வார்த்தைகளை மக்களின் சிந்தனையில் அப்லோட் செய்கிற வேலையே இது.

தன் நலனைக் காப்பாறுகிற ஒரு கட்சி மக்களிடம் இந்த ‘ஜனநாயக இமேஜை’ இழப்பதாக அமைப்பு உணர்ந்த மறுகணம், தன் நலனைப் பாதுகாக்கிற இன்னொரு கட்சியைத் தூக்கிப் பிடிக்கும். யார் வந்தாலும் இந்த அமைப்பின் நலனை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும், மக்கள் ஒருபோதும் இந்த அமைப்புக்கு எதிராகத் திரும்பி விடக்கூடாது என்பதும்தான் இதன் ஜனநாயக சூத்திரம். இப்படிப்பட்ட கட்சிகளுக்கு இடையே நடக்கும் நாற்காலிச் சண்டைகளையே ‘ஜனநாயகம் தழைத்தோங்குகிறது’ என ஊடகங்கள் அறிவிக்கின்றன. மக்களும் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அப்படியொரு நாற்காலிச் சண்டையில் கொல்லப்பட்டவன்தான் மோகன்ராஜ்.

திமுக ஆட்சியில் குற்றங்கள் பெருகிவிட்டது என்றும், சிறுவர்கள் அதிகமாக கடத்தப்படுகின்றனர் என்றும் அதிமுக வட்டாரம் பேச ஆரம்பித்ததும் மோகன்ராஜ் ஒரு அதிகாலையில் என்கவுண்டர் செய்யப்படுகிறான். மக்களின் கோபமும், அதிருப்தியும் ஒரு கணத்தில் ‘சரி’ செய்யப்படுகிறது, ‘அரசியல் சாணக்கியத்தால்!’. தனது இமேஜைக் காப்பாற்றிக் கொண்டாகி விட்டது. ‘ஜெயிலில் இருக்கும் குழந்தைகளைக் கடத்திய கைதிகள் பீதி’ என்று இப்போது பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், ‘பள்ளிக்குழந்தைகள் கடத்தப்படாமல் இருப்பதைக் கவனிக்க தனிப்படை ரோந்து’ என்று துணைமுதல்வர் அறிக்கை விடுத்திருப்பதையும் கவனித்தால் தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு தீவீரத்தோடு இருக்கிறது இந்த அரசு என்பது புரியும்.

நேற்றைய நிகழ்வுகளை இன்று மறந்து, நாளையை வெறுங்கனவுகளோடு மட்டுமே பார்க்கிற மக்கள் கூட்டமே இந்த வகை அரசுக்கும், அரசியலுக்கும் முதுகெலும்பு. ரவுடி என முத்திரை குத்தப்பட்ட ஒருவனை சென்ற அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் செய்தது காவல்துறை. அந்த ரவுடிக்கு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கும் செல்வாக்கை அறிந்ததும், கொலை செய்யப்பட்ட ரவுடியின் மனைவியையே தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைத்தது திமுக. கணவனைச் சுட்டுக்கொன்ற காவல்துறை, பிறகு அமைச்சரான மனைவிக்கு பாதுகாப்புக்கு வரிசையாக நின்றது. இவ்வளவுதான் போலீஸ். இதுதான் அரசு. இப்படித்தான் ஜனநாயகம்.

இவை யாவையும் மறந்து அல்லது அறியாமல் ‘காவல்துறைக்கு சல்யூட்’ என்றும் ‘அரசுக்கு சபாஷ்’ என்றும் கொண்டாடும் அளவுக்கு நம்மக்கள் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆமாம். உண்மையிலேயே நல்லவர்கள்தாம். கொடுமைகளுக்கு உடனடியாக வருந்தவும், சந்தோஷங்களுக்கு உடனடியாக ஆர்ப்பரிக்கவும் செய்கிற மக்களால்தான் சமூகம் இத்தனை அழிச்சாட்டியங்களுக்கும், அநியாயங்களுக்குப் பிறகும் எப்படியோ மூச்சுவாங்கிக் கொண்டு இருக்கிறது. யாவையும் அறிய நேர்கிற ஒருநாளில் இதே மக்களிடம் மொத்தமாய் ஒரு கோபம் வரத்தான் செய்யும்.

பதிவின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிற புத்துயிர்ப்பு நாவல் வரிகளில் டால்ஸ்டாயின் வார்த்தையான ‘மனிதர்களுக்கு’ என்பதை இந்த ‘அமைப்புக்கு’ என்றே புரிந்து கொள்கிறேன்.

Comments

4 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. நன்றாக இருக்கிறது. உங்க சொற்பொழிவு கேட்டா மாதிரி இருக்கு.

    ReplyDelete
  2. Arumaiyaga ezhuthi ullirkal Mathavaraj,

    Ungal karuthukkal nalla sinthanaiyai vithaikkinrana.

    ReplyDelete
  3. //ரவுடி என முத்திரை குத்தப்பட்ட ஒருவனை சென்ற அதிமுக ஆட்சியில் என்கவுண்டர் செய்தது காவல்துறை. அந்த ரவுடிக்கு குறிப்பிட்ட சமூகத்தில் இருக்கும் செல்வாக்கை அறிந்ததும், கொலை செய்யப்பட்ட ரவுடியின் மனைவியையே தேர்தலில் நிறுத்தி ஜெயிக்க வைத்தது திமுக. கணவனைச் சுட்டுக்கொன்ற காவல்துறை, பிறகு அமைச்சரான மனைவிக்கு பாதுகாப்புக்கு வரிசையாக நின்றது. இவ்வளவுதான் போலீஸ். இதுதான் அரசு. இப்படித்தான் ஜனநாயகம். //

    நம் ஜனநாயகத்தின் பலமும், பலவீனமும் அது தான்! அனைவருக்கும் இங்கு ஓட்டு!அனைவரும் இங்கு ராஜா!
    ஒன்று மட்டும் நிச்சயம்! மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவர்கள், அந்த மக்களின் குணம், பழக்கம், ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிப்பவராகவே இருக்கின்றனர்!

    ஒரு ரவுடி, தேர்தலில் நின்று ஜெயித்து, கல்வி, நிதி, மருத்துவம் போன்ற ஏதெனும் ஒரு துறையில், அமைச்சரானால், நாட்டின் கதி என்ன?

    கவுண்டமணி வசனத்தைப் போல், அந்தக் கருமத்துக்கு படிப்பு, அறிவு எல்லாம் தேவையில்லை!

    ReplyDelete
  4. மாதவ்ஜி! மிக அற்புதமான பதிவு.குறிப்பாக சிந்தனை 2 ஐ தனியாக நகலெடுத்து லட்சக்கணக்கில் குறைந்தபட்சம் கோவை மாவட்டத்திலாவது விநியோகிக்க வேண்டும். புதிய சிகரங்களைத்தொடுகிறீர்கள்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்

    ReplyDelete

You can comment here

தீராத பக்கங்களை Subscribe செய்து விட்டீர்களா நண்பரே!

Enter Email and Subscribe தீராத பக்கங்கள்!