அகதியாய்ப் போகிறேன்!


’வாழ்வின் மீதான எளிய பாடல்கள்’ என்னும் சிறு கவிதைத் தொகுப்பை நேற்று திரும்பவும் படித்தேன். 2000ம் ஆண்டில் வெளிவந்திருக்கிறது. மஜித் என்னும் இலங்கைக் கவிஞரின் குரல்கள் வலியோடு பதிவாகி இருக்கின்றன.

பதிப்புரை எழுதிய எஸ்.வி.ராஜதுரை ‘கவிதையே இருத்தலாய், ஜீவித்தலாய்க் கொண்டு மரணத்தின் கருநிழல்களிலிருந்து தப்பிக்கக் கணந்தோறும் போராடி வருகிறார் ஒரு இளங்கவிஞர். முப்பதுகளையே இன்னும் தாண்டாத மஜித்.” என்று குறிப்பிடுகிறார். 

கவிதைத் தொகுப்பை படித்து முடிக்கும்போது தாங்க முடியாமல் வெறுமையில் மூழ்கிப் போக வேண்டியிருக்கும். அக்கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:

அகதியாய்ப் போகிறேன்

இந்த தேசத்தை விட்டும்
இங்கேயிருக்கும் தாவரங்களை விட்டும்
பூக்களையும்
புல் பூண்டுகளையும் விட்டும்
மிருகங்களையும்
எனக்கு அநியாயம் செய்தவர்களை விட்டும்
நான் போகிறேன்

எனது இருதயத்திற்கும்
உங்கள் இருதயத்திற்கும்
தூரமென்று விலக்கிவிட்டீர்களே
அதனால் போகிறேன்

நான் குளித்த ஒடைகளே
கிழிந்த களிசனோடு
நான் பிடித்த தும்பிகளே
வண்ணத்துப் பூச்சிகளே
இந்த காற்றில் கலந்திருக்கும்
நல்லவர்களின் சுவாசத்தின் வாசனைகளே
நான் போகிறேன்

சொந்த தேசத்தில் என்னால்
அந்நியனாய் வாழ முடியாது
இந்த தேசமும் துரோகிகளும்
நாசமாகட்டும்
மனம் பத்தி எரியும் சுவாலையில்
இவர்களெல்லாம் எரிந்து சாம்பலாகட்டும்
இளம் குழந்தைகளின் ஈரல் குலைகளை
அயல் தேசத்தில் விற்று
வயிறு நிரப்பட்டும்
இடிவிழுந்து புயல் அடித்து
தூள் தூளாய்ச் சிதறி இந்த தேசம்
மண் போல போகட்டுமென்று
என்னால் சாபமிட முடியாது
எனது நாகரீகம் வேறு
நான் போகிறேன்

இந்த உலகத்தில் எந்த மூலையிலாவது
ஒரு பிச்சைக்காரனாக
ஒரு அநாதையாக
ஒரு அகதியாக
வாழ்ந்து மரணித்துப் போகிறேன்

எந்த தேசத்திலும்
இந்த வானமும்
இந்த நிலவும் தானிருக்கிறது
வாழ்ந்து மரணித்துப் போகிறேன்.


Comments

5 Comments

வருகைக்கு நன்றி.

கமெண்ட் செய்கிறவர்கள் Anonymous, Name/Url, Google Account, Name/Url, Google Account மூலம் கமெண்ட் செய்யலாம்.

1) முடிந்தவரை Google Account மூலம் கமெண்ட் செய்யுங்கள்.

2) இல்லையென்றால் Name/Url மூலம், பேரை மட்டுமாவது குறிப்பிட்டு கமெண்ட் செய்யுங்கள்.

3) Anonymous மூலம்தான் கமெண்ட் செய்ய முடியுமென்றால், கமெண்ட்டில் கீழே உங்கள் பேரை தயவு செய்து குறிப்பிடுங்கள்.

நன்றி.

- தீராத பக்கங்கள்
  1. அண்ணா!

    வலிகள் நிறைந்த பதிவு.இதற்கு வாழ்த்து மட்டும் அல்ல விடையும் சொல்ல முடியாததால் எனது வருத்தங்களை மட்டும் சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  2. வலி கொள்கின்றது வரிகள்.

    ReplyDelete
  3. மனம் வலிக்கின்றது

    ReplyDelete
  4. கவிதையின் கனம் தாங்க முடியாது மனதை அழுத்துகிறது.

    ReplyDelete
  5. அண்டோ!

    ஆ.முத்துராமலிங்கம்!

    அமுதா!

    தமிழர்ஸ்!

    யாத்ரா!

    தங்கள் வருகைக்கும், வலிகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    ReplyDelete

You can comment here

தீராத பக்கங்களை Subscribe செய்து விட்டீர்களா நண்பரே!

Enter Email and Subscribe தீராத பக்கங்கள்!