பதில்களை விடவும் கேள்விகள் முக்கியமானவை

சாத்தூரில் த.மு.எ.ச நடத்திய நாவல் கருத்தரங்கில், முப்பதுக்கும் மேல் கேள்விகளை தயாரித்து வந்திருந்த பார்வையாளர்களுக்கு கொடுத்தோம். முடிந்தவரையில், மிக நேர்மையாக அதை நிரப்பித் தாருங்கள் என அறிவிக்கவும் செய்தோம். நிறைய பேர் கேள்விகளை வாசித்து, யோசித்துக் கொண்டிருந்ததை பார்த்தோம். சிலர் நிரப்பவும் செய்தார்கள். ஆனால் யாரும் தரவில்லை. கட்டாயப்படுத்த வேண்டாம் என்று நாங்களும் திரும்ப ஒருமுறை அறிவிக்கவோ, ஒவ்வொருவரிடமும் போய் சேகரிக்கவோ இல்லை. யாரும் அவர்களாக முன்வந்து, தங்கள் பதில்களை தராததற்கு வருத்தமுமில்லை.

அந்தக் கேள்விகள் ஒவ்வொருவருக்குள்ளும் சில அனுபவங்களை மீட்டியிருக்கக் கூடும். அல்லது மீட்கவும் செய்திருக்கலாம். அதுதான் முக்கியமானது என நினைக்கிறேன். அசைவற்ற நீரில் சில கற்களை எறிந்து பார்ப்பது போலத்தான் இந்தக் கேள்விகள். கற்கள் நீரில் அமிழ்ந்து போகலாம். ஆனால் அவை எழுப்பும் சலனங்கள் உயிர்ப்புள்ளவை. வாசிப்பு அனுபவம் குறைந்து வருகிற ஒரு காலத்தில் இதுபோன்ற முயற்சிகள் எதாவது செய்யுமா என்ற நம்பிக்கைதான் அடிப்படையாய் இருக்கிறது.

கேள்விகள் ரொம்ப ரொம்பச் சாதரணமானவையே. ஆனாலும் ஏன் பதில்கள் வர மறுக்கின்றன? நாம் மிகுந்த மனசாட்சியுடனும், குற்ற உணர்ச்சியுடனும் இருக்கிறோம் என்பது இங்கு தெளிவாகிறது. மௌனமாயிருந்தாலும் பதில்கள் உண்டுதானே? நீங்கள் எப்படிப்பட்ட பதில்கள் சொல்லப் போகிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கண்டிப்பாக இந்தக் கேள்விகளைப் படிக்க வேண்டும். பதில்களை விடவும் கேள்விகள் முக்கியமானவை.
சரி தயாராகுங்கள்....

நாவல்களோடு உங்கள் அனுபவம்

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

அ. சமூக நாவல்கள்

ஆ. சரித்திர நாவல்கள்

இ. ஹரிபாட்டர் வகையான வினோத நாவல்கள்

ஈ. ராணிமுத்து, மாலைமதி மற்றும் பாக்கெட் நாவல்கள்

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?

அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு

ஆ. பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து

இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து

ஈ. நாவலின் முன்னுரையைப் படித்துப் பார்த்து

உ. புத்தகத்தின் வடிவமைப்பையும், அட்டையையும் பார்த்து

ஊ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

அ. பக்க அளவு

ஆ. சொல்லப்படும்ம் கதையின் கால எல்லை

இ. (வேறு எதேனும் காரணம் இருந்தால் எழுதவும்)

6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

அ. வாசகனின் அக நிலையிலிருந்து

ஆ.எழுத்தாளரின் முன்வைப்பிலிருந்து

இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)

7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?

9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?

10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?

11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?

12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?

13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?

14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?

15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?

16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?

17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?

18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?

19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.

20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?

21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?

22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?

23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

அ.எழுத்து மொழி

ஆ.பேச்சு வழக்கு

இ.வட்டார வழக்கு

24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?

25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?

26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?

27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?

28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?

29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.

30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?

31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?

32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?

33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?

சரி. படித்து விட்டீர்களா? முடிந்தால் நேர்மையாக பதில் சொல்லுங்கள். அல்லது நேர்மையாக மௌனமயிருங்கள். ஆனாலும் ஒன்றை நீங்கள் கண்டிப்பாக செய்தாக வேண்டும். முடிந்தவரையில் உங்கள் நண்பர்கள் இந்தக் கேள்விகளைப் படிக்கச் செய்யுங்கள். தமிழ் இலக்கியத்துக்கு நீங்கள் செய்யும் சிறு தொண்டாக அது இருக்கலாம்.

முன் பக்கம்

கருத்துகள்

24 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. yes, questions are more important than the answers in this context. These questions
    instill a guilty conscious,
    they provoke you into deep thinking,
    they disturb you endlessly,
    they initiate a new desire in you, they fan the flame burning in already,
    they attack you,
    they expose you, t
    hey make you admire yourself,
    but they continue to haunt you..............

    s v venugopalan

    பதிலளிநீக்கு
  2. நான் நேர்மையாக மௌனமாக இருந்து என்னாலான தொண்டு செய்து என் நண்பர்களைப் படிக்கச் செய்திருக்கிறேன்:)

    http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. மௌனமாக இருக்க வேண்டாம். பதில் சொல்லலாம். நேரம் தேவைப்படும்.

    25 கேள்விக்குச் சொல்லிவிடுகிறேன்.
    படித்துப் பார்த்து,நேரில சந்திக்க விரும்பிய எழுத்தாளர்கள் திரு.கி.இராஜநாராயணனும்,திரு சுஜாதாவும்.
    சந்தித்தும் விட்டேன்.
    நாவல்களைபடிக்கத் தேர்ந்தெடுக்கும் நேரம் என்பது எதையாவது படித்தே ஆகவேண்டும் என்கிற எண்ணம் வரும் நேரம்.

    பதிலளிநீக்கு
  4. அன்புள்ள மதுமிதா

    நன்றி.

    தங்கள் வலைப் பக்கத்தில் இந்தக் கேள்விகளை வெளியிட்டதற்குத்தான் சொல்கிறேன்.

    பதில்கள் சொல்லாவிட்டாலும், பலர் இந்தக் கேள்விகளுக்குள் உலா வருவதை நான் அறிகிறேன். வேணுகோபால் சொல்லியிருப்பதைப் போல தங்கள் வாசிப்பு உலகத்திற்குள் கொஞ்ச நேரம் பயணம் செய்திருப்பார்கள் அவர்கள். எதையாவது படிக்கவோ, எழுதவோ அவர்களுக்குத் தோன்றினால், நாம் எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்திருக்கிறோம்?

    சரி.ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நேர்மையாக பதில் சொல்லுங்கள். நீங்கள் கடைசியாக படித்த நாவல் எது? நான் கீரனூர் ஜாகீர் ராஜாவின் 'மீன்கர்ரத் தெரு' படித்தேன். ஆனால் அது வெளிவந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது

    மாதவராஜ்

    பதிலளிநீக்கு
  5. ஹலோ எஸ்.வி.வி

    வணக்கம்.

    மிக அற்புதமாக இந்தக் கேள்விகள் குறித்து உங்கள் கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். மாவோவின் 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்' கட்டுரையை ஆயிரம் தடவையாவது நாம் படித்தாக வேண்டும். நாம் எப்படியெல்லாம் நமது நேரத்தை வீணடிக்கிறோம் என்று முகத்துக்கு நேரே கைநீட்டி சொல்வது போல இருக்கும். புத்தகங்களோடு நாம் இன்னும் நேரத்தை செலவழித்தால் இங்கு பல நல்ல நிகழ்வுகள் நடந்திருக்கக் கூடும். எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் சென்ற வாரம் சொன்னார். நம்முடைய அலமாரியில் உள்ள எத்தனையோ நாவல்களை, புத்தகங்களை நாம் படிக்காமலே இருக்கிறோம் என்று. உண்மைதான். கேவலமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. அன்புள்ள வல்லி சிம்ஹன் அவர்களுக்கு

    பரவாயில்லை. ஒரு கேள்விக்கு பதில் சொன்னாலும் உங்களைப் பற்றி மிகக் கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிகிறது. கல்லூரி நாட்களில் எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர்கள் இருவர். ஒருவர் சுஜாதா. இன்னொருவர் இந்துமதி. பிறகு ஜெயகாந்தன், ஜானகிராமன், சுந்தரராமசாமி, வண்ணநிலவன் என்று முக்கிய எழுத்தாளர்களின் உலகங்களுக்குள் சஞ்சரிக்க ஆரம்பித்தபோது, சுஜாதாவின் கதை உலகம் மிகச் சாதாரணமாகிப் போனது. சோவியத் இலக்கியங்களை படித்தபோது எழுத்துக்களின் வீரியமும், வசீகரமும் என்னை ஆட்கொண்டது. ஆனாலும் இன்றுவரை, சுஜாதாவின் எழுத்துநடை மீது உள்ள லயிப்பு மட்டும் குறையவே இல்லை. கரையெல்லாம் செண்பகப்பூவாயிருந்தாலும், கணேஷ் வசந்த்தின் உரையாடல்களாயிருந்தாலும் நளினமான அந்தக் கிண்டல் அவருக்கு மட்டுமே இயல்பாய் வரக்கூடியது போலத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  7. நாவல்களோடு உங்கள் அனுபவம்

    1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?
    நினைவில்லை

    2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
    பத்துவயதில் இருந்து இருக்கலாம்

    3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

    அ. சமூக நாவல்கள், ஆ. சரித்திர நாவல்கள்

    4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
    அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு

    ஆ. பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து

    இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து

    5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

    அ. பக்க அளவு :-)

    6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

    அ. வாசகனின் அக நிலையிலிருந்து

    7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
    சற்றே பெரிய சிறுகதையாய் இருக்ககூடாது:-)

    8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
    சந்தோஷம்

    9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
    வெகு குறைவு, ஆனால் ரத்த உறவு படிக்கும்பொழுது பாதியில், கடைசி பக்கத்தைப் பார்த்து நிம்மதியடைந்தேன்.

    10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
    நாவலின் சுவாரசியத்தைப் பொறுத்து, சாம்பாரைக்கிண்டிக் கொண்டும் படிப்பேன் :-)

    11. பாதி வரைப் படித்து,முடிக்காமல் போன நாவல்கள் எவை?
    அப்படி எதுவும் இல்லை

    12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
    வெளியே சொல்ல முடியாது :-)

    13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
    ஜெ.கேவின் பாரிசுக்கு போ. நாஞ்சிலாரின் சில நாவல்கள்

    14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
    பத்துக்குள் அடக்க முடியாது

    15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
    பல ஞான பீட, சாகித்ய் அகாதமி பரிசு பெற்ற நாவல்கள் உள்ளன்

    16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
    நிறைய இருக்கின்றன

    17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
    பல உண்டு

    18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
    விசேஷமாய் இல்லை

    19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
    இல்லை

    20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
    ஒன்றும் இல்லை

    21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
    லிஸ்ட் பெரியது :-)

    22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
    ஏழாவது உலகம்

    23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

    அ.எழுத்து மொழி

    ஆ.பேச்சு வழக்கு

    இ.வட்டார வழக்கு
    மூன்றுமே! கதை தளத்தை பொறுத்தே அமைகின்றன

    24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
    புரியவில்லை

    25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?
    இல்லை

    26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
    நாவலின் சுவாரசியத்தை பொறுத்து. பெரும்பாலும் ஓரே மூச்சுதான்

    27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
    பொதுவாய் சொல்வதைவிட காடு - ஜெ.மோ, கிருஷ்ணா கிருஷ்ணா- இ.பா, கோபல்ல கிராமம்- கி.ரா

    28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
    இதற்கும் பொதுவாய் சொல்ல முடியாது. ஆனால் இ.பா தன் பல நாவல்களில் தென்படுவார். எழுத்தில்
    அவரின் ஸ்மார்ட்நஸ் (இதற்கு தமிழில் என்ன?) எனக்கு பிடிக்கும்

    29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
    விஷ்ணுபுரம் ?

    30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
    இல்லை , இவைகளின் தளங்கள் மாறுபட்டவைகள்

    31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?
    யாமம்

    32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
    தோன்றியது

    33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?
    இல்லை எழுதி முதல் முயற்சியில் வென்றும் விட்டேன்

    பதிலளிநீக்கு
  8. உஷா அவர்களுக்கு

    மெனக்கெட்டு எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய முதல் ஆள் நீங்கள்தான். உற்சாகமாய் இருக்கிறது. இந்தப் பதில்களை எழுதியபோதும், அல்லது கேள்விகள் குறித்து யோசித்தபோதும் உங்கள் மனநிலை என்னவாயிருந்தது என்பதை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். சில கேள்விகளுக்கு மிக நேர்மையாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் மிக வேகமாக வாசிக்கும் திறன் கொண்டவராக இருப்பீர்கள் என நம்புகிறேன். உங்கள் blog படித்தபோது, எழுத்துநடை மிக இயல்பாக கொண்டவராகவும் உணர முடிகிறது. குழந்தைகளை விளம்பரங்களுக்கும், படப்பிடிப்புக்கும் பயன்படுத்துவது குறித்து உங்கள் எழுத்து வலி நிறைந்தது. குலாத்தி என்னும் மராட்டிய நாவல் படித்திருக்கிறீர்களா? திரைக்கு முன்னே ஆண்கள் வீசியெறியும் காசுக்கு ஒரு பெண் ஆடிக்கொண்டு இருப்பாள். திரைக்குப் பின்னே கைக்குழந்தையின் அழுகுரல் அவளுக்கு கேட்டுக் கொண்டிருக்கும். அப்படி அழுத ஒருவனின் பதிவுதான் அந்த நாவலே.

    உங்கள் படைப்புக்களை நான் படிக்க வேண்டும் என ஆவல். எங்கே கிடைக்கும் என்று சொன்னால் நன்றாயிருக்கும். இந்தக் கேள்விகள் உங்களுக்குள் என்ன பாதிப்பு ஏற்படுத்த்தியது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கலாம். இன்னும் என்னவெல்லாம் கேள்விகள் உங்களுக்குள் தோன்றியது தெரியப்படுத்தினால் இன்னும் சிறப்பு. யாமம் எப்படியிருந்தது? சில கேள்விகளுக்கு மிக பொத்தாம் பொதுவாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். இருப்பினும், உங்கள் பதில்கள் இன்னும் சில கேள்விகளை எனக்குள் எழுப்பியிருக்கின்றன. நன்றி.

    பதிலளிநீக்கு
  9. //உங்கள் படைப்புக்களை நான் படிக்க வேண்டும் என ஆவல். எங்கே கிடைக்கும் என்று சொன்னால் நன்றாயிருக்கும். இந்தக் கேள்விகள் உங்களுக்குள் என்ன பாதிப்பு ஏற்படுத்த்தியது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கலாம். இன்னும் என்னவெல்லாம் கேள்விகள் உங்களுக்குள் தோன்றியது தெரியப்படுத்தினால் இன்னும் சிறப்பு. யாமம் எப்படியிருந்தது? சில கேள்விகளுக்கு மிக பொத்தாம் பொதுவாக பதில் சொல்லியிருக்கிறீர்கள். இருப்பினும், உங்கள் பதில்கள் இன்னும் சில கேள்விகளை எனக்குள் எழுப்பியிருக்கின்றன.//

    கணிணியில் தமிழ் பாஃண்ட் இல்லாத நிலையில் தங்கீலீஷில் தட்டச்சி, சுரதா ரீடர் மூலமாய் தமிழில் மாற்றி போட்டது. தங்கீலிஷ்ஷில்
    அடிப்பதை விட, அதை மீண்டும் படிப்பது கொடுமை :-)

    1- மிக சமீபத்தில் 2003ல் இணையத்தில் எழுத ஆரம்பித்து, ஆறு மாதத்தில் ஆ.வி, கணையாழி, அமுதசுரபி, கலைமகள்,அவள்
    விகடன், யுகமாயினி போன்ற இதழ்களில் என் ஓரிரு படைப்புகள் வெளியாகியுள்ளது. இது பிப்ரவரி 2008 யுகமாயினியில் வெளியான சிறுகதை. http://nunippul.blogspot.com/2008/02/blog-post.html. மற்றப்படி இன்னும் புத்தகங்களாய் போட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாவல் என்றால் முதல் முயற்சியாய் கலைமகள் பத்திரிக்கை நடத்திய கி.வ.ஜகந்நாதன்
    நினைவு நாவல் போட்டியில் துபாய் வாழ் இஸ்லாமிய சமூக பெண்கள்/ பணிபெண்கள் வாழ்க்கையை தளமாய் வைத்து எழுதிய "கரையைத் தேடும் ஓடங்கள்" என்ற தலைப்பில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அதுவும் இன்னும் புத்தகமாகவில்லை.

    2- இந்த கேள்விகள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பு என்பதைவிட, மிதமிஞ்சிய சந்தோஷத்தையே தந்தது. குழந்தைக்கு முன்னால் ஏகப்பட்ட விளையாட்டு சாமான்களையோ, வித வித சாக்லேட்டுகளை குவித்து இந்தா என்றால் எந்த மனநிலை
    குழந்தைக்கு இருக்குமோ அதே உணர்வு.

    3- யாமம் நாவலுடன் வாங்கியது திரு.நரசய்யாவின் "மதராச பட்டினம்". சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவளுக்கு, சென்னையின் பூர்வ வரலாறு தெரிந்த அற்புத உணர்வு.விவரமாய் என் பதிவில் எழுத உள்ளேன். யாமம் முதல் முறை
    முடித்ததும், உடனேயே முதல் பக்கத்தில் இருந்து மீண்டும் படிக்க தொடங்கினேன் :-)
    நாவலாய் என்னை கவர்ந்தது என்று
    சொல்வதைவிட, சென்னையின் பழைய விவரங்களே சுவாரசியத்தை தந்தது.

    4- பொத்தாம் பொதுவாய் பதில் சொன்னதற்கு காரணம் கணிணி பிரச்சனையே! விளக்கமாய் விரைவில் தருகிறேன்.

    5- உங்கள் கேள்விகள் பல புரிதல்களை தந்தது. உதாரணமாய் நாவலின் தலைப்பு பற்றி எல்லாம் நான் இதுவரை யோசித்ததே இல்லை என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். இன்று மீண்டும் கேள்விகளைப் பார்க்கும்பொழுது, ஜெ.மோ வின் ஏழாவது உலகம் தலைப்பு நினைவுக்கு வந்தது. அது தந்த தாக்கம் மிக மிக அதிகம். ஆனால் கேள்வியாய் நீங்கள் கேட்ட பொழுதுதான், நினைவுக்கு வந்தது.

    நன்றி

    பதிலளிநீக்கு
  10. உஷா அவர்களுக்கு!

    உங்கள் கதையை படித்தேன். வலியை உணர்த்தும் அனுபவம் போல இருந்தது. முயற்சித்தால் அற்புதமான கதைகள் உங்களிடமிருந்து வெளிப்படும். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. இந்த கேள்விகளுக்கான உங்கள் பதிலை எங்கே எழுதியிருக்கிறீர்கள்.

    முழுவதற்கும் வந்து பதிலளிக்கிறேன் மாதவராஜ்.

    ///சரி.ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் நேர்மையாக பதில் சொல்லுங்கள். நீங்கள் கடைசியாக படித்த நாவல் எது? ///

    எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம்.

    மீன்காரத்தெரு குறித்து விமர்சனம் ஏதும் எழுதியிருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள மதுமிதா!

    ஒரு உண்மையைச் சொல்லட்டுமா..
    எழுத்தாளர் சங்கம் நடத்திய மாநில அளவிலான நாவல் போட்டியின் நடுவ்ர் குழுவில் நானுமொரு உறுப்பினர். வத்சலாவின் "வட்டத்துள்', யூமா வாசுகியின் "மஞ்சள் வெயில்', சோலைசுந்தரபெருமாளின் "நஞ்சைமனிதர்கள்', கீரனூர் ஜாகீர்ராஜாவின் "மீன்காரத்தெரு' போன்ற முக்கியமான நாவல்கள் கலந்துகொண்டன.அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவலே மீன்காரத்தெரு. மொழிநடை, நாம் அறிந்திராத மூஸ்லீம்களின் வாழ்க்கை, பெண்களின் பாத்திரங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சாதரண மனிதர்களின் குரல்கள் ஒலிக்கின்ற நாவல் அது. மிக இயல்பாக வாசகன் ஒட்டி உறவாட முடியும். கடல்புரத்தில் அளவுக்கு இல்லையென்றாலும் அப்படியொரு வாழ்வின் நீட்சி புலப்படும். வீட்டு முற்றத்தில் கிண்டலோடும், வேதனையோடும் கூச்சமற்று போட்டு உடைக்கும் விவகாரங்கள் வாசகனை வசப்படுத்தும். படித்துப் பாருங்களேன். உங்களுக்கும், எனக்கும் அதிர்வுகளை உண்டாக்கும்.

    பதிலளிநீக்கு
  14. மதுமிதா

    நான் எழுதிய பதில்களை இன்னும் படிக்கவில்லையா?
    அடுத்த POSTல் சொல்லிவிட்டேனே?. படியுங்கள்.
    யாமனம் எப்படியிருந்தது?

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் நடுவரே!!!

    மிக்க மகிழ்ச்சி. மீன்காரத்தெரு குறித்தும் நான் எழுதணும்.

    இதோ பதில்கள்
    http://madhumithaa.blogspot.com/2008/10/blog-post_16.html

    பதிலளிநீக்கு
  16. உங்கள் பதில்களை வந்து வாசித்துவிட்டு எழுதுகிறேன்.

    நிறைய உண்மை நிகழ்வுகளுடன் புனைவு கலப்பது எனக்கு வாசிக்க பிடிக்கும். அந்த வகையில் வரலாறை இணைத்து வந்த யாமம் பிடித்திருந்தது. யாமம் குறித்தும் விரிவாக எழுதவேண்டும்.

    பதிலளிநீக்கு
  17. உங்கள் கேள்விகளுக்குப் பதிலெழுத நீண்ட நாட்கள் எடுத்து விட்டேன்.

    என்னை எனக்குத் தெரிந்தவரையில் பதிகளை அமைத்திருக்கிறேன். இன்னும் விட்டுப்போன எழுத்தாளர்களே அதிகம். எல்லா வாசிப்பும் ஏதோ ஒரு பாதிப்பை நிகழ்த்தாமல் போவதில்லை.

    மும்தாஜ் யாசின், கருணாமணாளன் இவர்களின் சிறுகதைகள் அதைப் போலத்தான். அதே போல தமயந்தி என்ற எழுத்தாளரின் எழுத்துகளும்,அகிலன்,நா.பார்த்தசாரதி,திரு ஜெயகாந்தன் இவர்களெல்லாரும் மிகப் பெரிய சிந்தனைகளைத் தூண்டிவிட்டவர்கள்.

    வெறும் வாசகி என்ற நிலையில் நான் பதிந்திருக்கும் கருத்துகள் அந்த நிலையில்தான் இருக்கும். தவறுகள், பிழைகளை மன்னிக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் !

    பதிவுலகத்துக்கு நீங்கள் வந்தது இன்றுதான் தெரியவந்தது.

    உங்கள் திறன் இங்கும் ஜொலிக்கட்டும்.

    கீழே உள்ள சுட்டியில் சென்று பாருங்கள்! ஒரு சிறு ஆச்சர்யம் காத்திருக்கிறது.

    அது - உங்கள் படைப்பைப்பற்றிய பார்வை !

    பதிலளிநீக்கு
  19. வல்லிசிம்ஹன்!

    இதிலென்ன தவறுகள் இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.
    உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளில்தான் உங்கள் வாசிப்பு அனுபவமும் இருக்கும்.
    இதில் நமக்கான ரசனைகள், நமக்கான பார்வைகள்தான் நம்முடைய வாசிப்பு அனுபவத்தை உருவாக்குகின்றன.
    இதில் பகிர்வதற்கும், புரியவைப்பதற்கும் நல்ல வாசக நண்பர்கள் கிடைத்துவிட்டால் இந்த அனுபவம் செழுமையடையும்.
    எல்லாவற்றுக்கும் அடிநாதமாக இருப்பது தேடல்.
    இந்தத் தேடல் பெண்களுக்கு வாய்ப்பது ரொம்ப அரிது.
    இவையெல்லாவறையும் மீறி நீங்கள் இருந்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.
    வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. சுரேகா!
    நன்றி. ஏற்கனவே இதனை நான் பார்த்திருக்கிறேன்.
    அடிக்கடி சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  21. 1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?
    ஞாபகம் இல்லை.

    2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
    ஒன்பது வயதில் என்று நினைக்கிறேன்.

    3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?

    அ. சமூக நாவல்கள்,
    ஆ. சரித்திர நாவல்கள்
    இ. சுய உதவி
    ஈ. விஞ்ஞானக் கதைகள்

    4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
    அ. ஏற்கனவே அந்த நாவலைப் படிக்க நேர்ந்தவர்கள் சொல்லக் கேட்டு

    ஆ. பத்திரிக்கைகளில் நூல் மதிப்புரைப் படித்து

    இ. நாவலாசிரியரின் பேரைப் பார்த்து

    5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?

    அ. ஒரு நிகழ்வைச் சுற்றி சுருக்கமாக எழுதுவது சிறுகதை, விரிவாக எழுதுவது நாவல்.

    6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?

    அ. வாசகனின் அக நிலையிலிருந்து

    7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?

    போரடிக்காத வரை.

    8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
    சந்தோஷம், திகைப்பு

    9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
    வெகு குறைவு. ஆனால் அடக்க முடியாத ஆர்வத்தினால் சில முறை செய்ததும் உண்டு.

    10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
    நாவலின் சுவாரசியத்தைப் பொறுத்து, சாம்பாரைக்கிண்டிக் கொண்டும், தோசையை கிண்டாமல் வார்த்துக்கொண்டும் படிப்பதும் உண்டு. பெரும்பாலும் உறங்கச் செல்லும் முன் படிக்கும் வழக்கம் உண்டு.

    11. பாதி வரைப் படித்து,முடிக்காமல் போன நாவல்கள் எவை?
    ஞாபகம் இல்லையே.

    12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
    அந்த சமயத்தில் ஞாபகம் இருக்குமே தவிர இப்பொழுது ஞாபகம் வரவில்லை.

    13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
    சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், புல்லின் இதழ்கள் (ஆசிரியர் பெயர் ஞாபகத்துக்கு வரவில்லை), பிரதாப முதலியார் சரித்திரம் இன்ன பிற.

    14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
    பத்துதானா? பத்துக்குள் அடக்க முடியாது

    15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
    சரத் சந்திரரின் நாவல்கள், யெண்டமூரி வீரேந்திர நாத் கதைகள், த.ர.பேந்த்ரேயின் நாயிய நெரளு, த்ரிவேணி அவர்களின் ஹொம்பிசிலு.

    16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
    நிறைய இருக்கின்றன. பத்துக்குள் அடங்காது.

    17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
    பல உண்டு. குறிப்பாக கல்கி, சுஜாதா, நா.பா, தி.ஜானகிராமன், சாண்டில்யன், ஜயகாந்தன், லக்ஷ்மி, வாசந்தி, சிவஷங்கரி, இந்துமதி, ஜெஃப்ரி ஆர்ச்சர், டான் ப்ரான், ராபின் குக், எரிக் வான்ன் டொனிக்கன்(சுஜாதா அறிமுகம் செய்வித்த நாவலாசிறியர்)இவர்களின் எழுத்துக்கள்.

    18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
    விசேஷமாய் இல்லை. சில சமயம் உண்டு.

    19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
    குறிஞ்சி மலர் - அரவிந்தன், பூரணி.

    20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்?
    அதிகமாக ஒன்றும் இல்லை.

    21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
    பெரிய பட்டியலே இருக்கு. இடம் பத்தாது.

    22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை?
    மோக முள்.
    இரண்டு பேர்

    23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?

    அ.எழுத்து மொழி

    ஆ.பேச்சு வழக்கு

    இ.வட்டார வழக்கு
    மூன்றுமே! கதை தளத்தை பொறுத்தே அமைகின்றன

    24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
    அந்த அந்த மொழி பேசும் மக்களின் கலாசாரம் வெவ்வேரானாலும், ஒரு கஷ்டம் வரும்போது இந்த வேற்றுமைகள் மறைந்து விடும் தன்மை.

    25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?
    பொன்னியின் செல்வன் - அமரர் கல்கி, மோகமுள் - தி.ஜானகி ராமன், கணையாழியின் கடைசிப் பக்கங்கள் (நாவல் அல்ல - இருந்தாலும்..)- சுஜாதா, அவன் - சிவசங்கரி, வாஷிங்டனில் திருமணம் - சாவி, Central - P.V.R, தில்லானா மோஹனாம்பாள் - கலைமணி ...

    26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
    நாவலின் சுவாரசியத்தை பொறுத்து. பெரும்பாலும் ஓரே மூச்சுதான்

    27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
    சுஜாதா, கல்கி, இந்திரா பார்த்த சாரதி,கி.ரா, வண்ணதாசன், இந்திரா சௌந்திர ராஜன், பி.வி.ஆர்,

    28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
    இன்னும் நல்ல அபிப்ராயம் உண்டாகும்.

    29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
    ஞாபகம் வரவில்லை.

    30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
    இல்லை , இவைகளின் தளங்கள் மாறுபட்டவைகள்

    31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?
    இந்திரா சொந்தர ராஜனின் வைரம்.

    32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
    ஆம். துணிச்சல்தான் வரவில்லை.

    33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?
    பயம், தயக்கம்.

    பதிலளிநீக்கு
  22. Many thanks for the information. Now I will know it.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!