க்ளிக் - 19 (தொடர்கதை)


தனக்குத்தான் அலாரம் அடிக்கிறது என்ற பிரக்ஞையோடு எரிச்சலும் சேர்ந்தே வந்தது. கண் விழித்தாள் பூங்குழலி. குட்நைட் ப்ளக்கிலிருந்து பழக்கமான சின்ன வெளிச்சம்  தெரிந்தது. கட்டிலையொட்டி இருந்த ஜன்னல் ஓரத்தில் தடவி மொபைலை எடுத்துப் பார்த்தாள். சரியாக ஐந்துதான். எழுந்து விளக்கைப் போட்டாள்.

 

பக்கத்துக் கட்டிலில்  ஸ்ரீஜா ஒருக்களித்து கால்களைச் சுருக்கி சின்னக் குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்தாள். ஃபேன்  காற்றில் நெற்றியை ஒட்டி சன்னமாய் அசைந்து கொண்டிருந்த தலைமுடிகளில் அவளிடம் ததும்பிக் கொண்டிருக்கும் அமைதி தெரிந்தது. எப்போது அவளது படுக்கைக்குச் சென்றாள் எனத் தெரியவில்லை. குறும்பு பொங்கும் பார்வையோடும், சிறு புன்னகையோடும் ரசித்தாள் பூங்குழலி.

 

ஸ்ரீஜாவுக்கு ஒன்பது மணிக்கு கிளம்பினால் போதும். அவள் தூங்கட்டும் என்று அறையின் விளைக்கை அணைத்துவிட்டு பாத்ரூம்  விளக்கைப்  போட்டாள். அங்கிருந்து கசியும் வெளிச்சத்தில் அறைக்குள் நடமாடப் பழகியிருந்தாள். கம்பெனிக்கு செல்ல கால் டாக்ஸி புக் செய்தாள். பேஸ்ட், பிரஷ்ஷை எடுத்துக்கொண்டு பாத்ரூம் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

 

ஆறரை மணிக்கு சிஸ்டம் முன்னால் உட்கார வேண்டும் என்றாலும், கடந்த சில நாட்களாய், ஏழு, ஏழரைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறாள். நேற்றெல்லாம் கிட்டத்தட்ட எட்டு மணியாகி விட்டது. ஸ்ரீஜா மடியில் அப்படியே படுத்திருக்க வேண்டும் போலிருந்தது. லீவு போட்டு விடலாமா என்று கூட நினைத்தாள். ஸ்ரீஜாதான் சமாதானப்படுத்தி, “நானும் ஆபிஸ் போகணும். வா, இரவு பேசிக்கொள்ளலாம்” என அனுப்பி வைத்தாள்.

 

ஃபாஸ்டஸ் லியோ கடுப்பாகியிருக்க வேண்டும். முகத்தில் இறுக்கம் தெரிந்தது. மதுரைக்கு அண்ணன் வீட்டுக்குச் சென்றதாகவும், காலையில் பஸ் வர நேரமாகிவிட்டதாகவும் சொல்லி சமாளித்தாள். “இதையே வழக்கமாக்கிடாத. பாத்துக்க.” சிரிக்காமல் சொன்னான்.  மிரட்டல் போலிருந்தது. இனி சரியான நேரத்துக்கு வந்துவிட வேண்டும் என்று அப்போதே உறுதி செய்திருந்தாள். பேசிப் பேசியும் ஒருவரை ஒருவர் அறிந்தும் ஒரு வழியாக தூங்கும்போது இரவு இரண்டு மணி போலாகி விட்டது.  

 

குழந்தை போல் தூங்கிக்கொண்டு இருக்கிறாள். எப்படி மனித மனங்களை ஊடுருவிப் பார்த்து விடுகிறாள் என்று ஆச்சரியமாய் இருந்தது. படுத்துக் கிடந்து எல்லாவற்றையும்  இவள் சொல்லி முடித்த பிறகு “நா ஒன்னு கேப்பேன். மறைக்காம பதில் சொல்லணும்” கேட்டாள் ஸ்ரீஜா. சரியென்று தலையாட்டினாள் பூங்குழலி.

 

“தியேட்டரில் அந்த இருட்டில் நரேன் உன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது உன்னைத் தொடுவான் என்று எதிர்பார்க்கவே இல்லையா?” மிக அருகில் படுத்து நெருக்கமாக பூங்குழலியின் கண்களைப் பார்த்து கேட்டாள்.

 

“அப்படில்லாம் நான் யோசிக்கல” மெல்ல இழுத்துச் சொன்னாள்.

 

“பொய் சொல்ற. அது போல ஒன்றை எதிர்பாத்திருக்கணும். அவன் செட்டாகலன்னு சொல்ல ஒரு காரணம் தேடிட்டு இருந்திருக்கே. அதான் முதல்ல சினிமாவுக்கு வேண்டாம்னு சொன்னாலும், பிறகு போகலாம்னு சொல்லியிருக்கே.” என்றாள் ஸ்ரீஜா.

 

“ம்.. சொல்லு” கவிழ்ந்து படுத்து தலையை நிமிர்த்தி மேவாயில் கை வைத்துக் கொண்டாள் பூங்குழலி.

 

“உங்க வீட்டுலயும், நரேனோட வீட்டுலயும் சேந்து மொத மொதல்ல திருவேற்காடு கோயில்ல சந்திச்சதப் பத்தி ஏங்கிட்டச் சொன்னது ஞாபகமிருக்கா? அவனால உன் கண்களைப் பாக்க முடியல. செஸ்டைப் பாத்தான்னு சொல்லிச் சிரிச்சே. ஒ.கேவா? இப்ப அஷ்டலட்சுமி கோயிலுக்கு போய்ட்டு கடற்கரைல வச்சு சினிமாவுக்குப் போகணும்னு சொன்னப்ப, அவன் பிளான் பண்ணி டிக்கெட் புக் பண்ணியது உனக்கு உறுத்தியிருக்கணும். ஒ.கேவா? தியேட்டர்ல முதல்ல சீட்டுல நீ கை வைக்காமத்தான் இருந்திருக்கே. அவன் சம்பந்தமில்லாம சிரிச்சுக்கிட்டு, அன்ஈஸியா இருந்தான்னு இப்போ சிரிச்சுக்கிட்டு சொன்ன. ஸோ, அதுக்கப்புறம்தான் வேணும்னே என்ன நடக்குதுன்னு பாப்போம்னு கை வச்சிருக்கே. ஒ.கேவா? எலி வந்து மாட்டிக்கிட்டு… ஹா..ஹ்..ஹ்ஹா”  சிரித்தாள் ஸ்ரீஜா. “சரியாச் சொல்லணும்னா. நீ அவன ரீட் பண்ணிட்ட. அவனாலத்தான் உன்ன ரீட் பண்ணத் தெரில.” திரும்பவும் சிரித்தாள்.

 

அந்தந்த நேரங்களில் தனக்குள் ஒடியதை எல்லாம் அப்படியே சொல்கிறாளே என்றிருந்தது. இல்லையென்று மறுக்க வேண்டும் போலவுமிருந்தது. பேசாமல் ஸ்ரீஜாவை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.

 

“உங்கண்ணன் கேட்டது சரிதான். உனக்கு கல்யாணமே பிடிக்கல. ஒரு தயக்கம் உனக்குள்ள ஒடிக்கிட்டே இருக்கு.”

 

“எப்படி சொல்ற?”

 

“இந்தக் கல்யாணப் பேச்சு ஆரம்பமானதும் ஒருநாள் சொன்னே. இப்ப கல்யாணம் பண்ணவே பிடிக்கல…. வீட்டுல அம்மாவும் பாட்டியும் ரொம்ப அனத்துறாங்கன்னே. அப்புறம் ரெண்டு வீட்டுலயும் பாத்துப் பேசுற அன்னிக்கு, ஜஸ்ட் போய்ட்டு வேண்டாம்னுட்டு வந்துருவேன்னே. ஆனா சரின்னு சொன்னே. கேட்டா அம்மாவுக்காகன்னே. பிறகு ஒரு நாள் இத மாரி பேசிக்கிட்டு இருக்கும் போது, இப்போ கல்யாணம், கல்யாணம்னு அனத்துறவங்க, பிறகு குழந்த, குழந்தன்னு அனத்துவாங்களேன்னு பயப்பட்டே. வேலைல இருக்குற நிலைமைல உடனே குழந்தப் பெத்துக்க முடியாதுன்னு புலம்பின. ரெண்டு நாள்ள குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்ன்னு ஃபேஸ்புக்குல வம்புக்குன்னே எழுதுன. நரேனுக்கு கம்யூனிகேட் ஆகட்டும்னே எழுதுன. உங்கம்மா போன்ல வருத்தப்பட்டதும் வேண்டா வெறுப்பா ஸாரி கேட்டே. நரேனோட அஷ்டலஷ்மி கோயிலுக்குப் போன. செல்ஃபில்லாம் எடுத்துக்கிட்ட. அதுல ஒன்ன கவனிச்சியா? நரேன் தனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அந்த போட்டோவ அனுப்பினான். நீ யாருக்கும் அனுப்பல. பிறகுதான் சினிமாவுக்குப் போறீங்க. எல்லாத்தையும் ஒன்னொன்னா கோத்துப்பாரு. கல்யாணம் பண்ணிக்குவோம்னு ஒரு நினைக்குற. அடுத்த கொஞ்ச நேரத்துல வேண்டாம்னும் நினைக்குற. இதான் பிரச்சினை.”

 

ஸ்ரீஜா சொன்னதையெல்லாம் ஒப்புக் கொள்வதாய் அவள் கை பிடித்துக் கொண்ட பூங்குழலி, “வெல். இதுல ஓரளவுதான் உண்மை. நா இரண்டு மனமா இல்ல. நா நம்பி கொஞ்ச தூரம் போறேன். எதாவது பிடிக்காம நடக்குது. திரும்பிரலாமான்னு நிக்கிறேன். பிறகு தைரியமா ரெண்டு எட்டு எடுத்து வைக்கிறேன். எதாவது நடக்குது. நா என்ன செய்ய? நிச்சயதார்த்தம் வரைக்கும் பிரச்சினை இல்ல. அதுக்கப்புறம் நரேன் ஒரு நா போன் பண்ணான். உண்மையில எதாவது பேசுவான்னு எதிர்பாத்தேன். பேசக் காணோம். அவனுக்கு இருந்த தயக்கத்த அப்போ கூட ரசிக்கத்தான் செஞ்சேன். அவனுக்கும் சேத்து அவங்கம்மா பேச ஆரம்பிச்சாங்க. அதுதான் எரிச்சலாய்ட்டு. டெய்லி காலைலயும், ராத்திரியும் குட்மார்னிங், குட்நைட்னு மெஸேஜ் போடவும் அப்பப்ப போன் பண்ணி என்ன சாப்பிட்ட, என்ன டிரெஸ் போட்ட, எங்க போனேன்னு கேக்க ஆரம்பிச்சாங்க. நா எங்கம்மா, பாட்டிக்கிட்ட   கூட இதெல்லாம் பேசுறது இல்ல. எங்கம்மா நரேன்ட்ட அத மாரி பேசுறாங்களா?  கேக்குறாங்களா? நிச்சயம் ஆனவுடன் ஒரு பொண்ணு மேல மட்டும் மாப்பிள்ளை வீட்டுல இந்த அக்கறையும் உரிமையும் எதுக்கு? அதான் குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்னு போட்டேன். அவனுக்குப் புரியட்டும்னு நினைச்சா, அதையே தூக்கிட்டு அவங்கம்மாக்கிட்ட போயி பிரச்சினையாக்கிட்டான். எங்கம்மா வருத்தப்பட்டதும் ஸாரின்னு சொன்னேன். அப்பமாவது யோசிப்பான்னு நினைச்சேன். இல்ல. அஷ்டலஷ்மி கோயிலுக்கு நாங்க புறப்பட்டதுலயிருந்து அவங்கம்மாட்ட பேசிட்டே வந்தான். நா புடவை கட்டிட்டு வரலேன்னு கூட பிட்ட போட்டான். அப்பக்கூட பொறுத்துக் கிட்டேன். சினிமாக்கு போறது பிளான்லயே இல்ல. பரவாயில்லையே\, சுயமாவும் ரகசியமாவும் ஒரு முடிவெடுத்திருக்கானேன்னு சம்மதிச்சேன். தியேட்டருக்குள்ள போறதுக்குள்ள என்ன படம் வரைக்கும் டீடெய்லா அவங்கம்மாட்ட சொல்லிட்டான். திரும்பவும் எரிச்சல் வந்தது. எங்க பாட்டி ஒருதடவை எங்கம்மாக் கிட்டச் சொல்லிட்டு இருந்தாங்க…. அந்த கல்யாணிய சின்ன வயசுல எங்கப்பா தொட்டு இருப்பாரு… அதுனாலத்தான் இப்பமும் அப்பா மேல பைத்தியமா அலயறான்னு சொன்னாங்க. அப்ப என்னை இவன் தொட்டுட்டானா நானும் அவம்மேல பைத்தியமா அலைவேன்னுதான எதிர்பாப்பாங்க.  அதான் பிரேக்கிங் பாயிண்ட். அதுக்குப் பிறகு சுத்தமா நம்பிக்கை போச்சு. இனும செட்டாகாதுன்னு தோனிச்சு.”

 

“நீ சொல்றது உணமையாவே புரியல பேபி. கல்யாணம், கணவன், குடும்ப வாழ்க்கை பத்தில்லாம் நீ என்ன நினைக்குற?  இல்ல என்ன நம்புற?  அதுக்கு மாறா இப்ப என்ன நடந்துட்டுன்னு கொஞ்சம் சொல்லேன்.”

 

பதில் சொல்லாமல் அமைதியானாள்.. யோசிக்கட்டும் என ஸ்ரீஜாவும் அமைதியாய் இருந்தாள். கவிழ்ந்து படுத்திருந்த பூங்குழலி திரும்பி படுத்தாள். பக்கவாட்டில் திரும்பி, “சரியில்லன்னு தோனுது. ஆனா சொல்லத் தெரில.” என்றாள்.

 

ஸ்ரீஜா சிரித்தாள்.

 

“ஸ்ரீ, கல்யாணம் பத்தி நீ என்ன நினைக்குற. மகேஷைக் கல்யாணம் பண்ணிப்பியா? சந்தோஷமா இருப்பியா?”

 

“ஏங்கதை வேற. கல்யாணம் பத்தி அம்மாவும் கவலைப்படப் போறதில்ல. அப்பாவும் கவலைப்படப் போறதில்ல. சொந்தம் அது இதுன்னு எந்த நெருக்கமுமில்ல. பாட்டி மட்டும் உயிரைக் கைல பிடிச்சுக்கிட்டு ஊர்ல இருக்காங்க. நா வாழுறதுதான் வாழ்க்க. ஒ.கேவா? நா மகேஷக் கல்யாணம் பண்ணிக்குவேன். ஒரு நல்ல பார்ட்னரா இருப்பான்னு நம்புறேன். நாலு வருஷமா பழக்கம். சின்சியரானவன். கவிதை, ரசனைக்கான ஆள் இல்லதான். பட் கேரிங்கா இருப்பான். அவங்கிட்டயும் கேரிங்கா இருக்கணும்னு நினைப்பான். ஏமாத்தத் தெரியாது. இது போதும்னு  நினைக்கிறேன். பிடிக்கலயா? ஒத்து வரலியா? ரெண்டு பேரும் பை சொல்லிற வேண்டியதுதான். பிரச்சினையில்ல. தட்ஸ் ஆல்.”

 

“மகேஷ் வீட்டுல..?”

 

“மகேஷ் சொல்லிட்டான். ம்… ஒன்னு தெரிமா. மகேஷ்க்கு ஸ்லைட்டா ஆட்டிசம் உண்டு. அவன நல்லா கவனிச்சா தெரியும். லேசுல மத்தவங்கக் கூட கலந்து பழக மாட்டான். பிடிச்சவங்கக் கூட நல்லா பழகுவான். தனக்குள்ளயேச் சொல்லி சிரிச்சுக்குவான். அவங்கம்மாவும் அப்பாவும் என்னை நம்புறாங்க. வீட்டுக்கு வரச் சொல்லி இருக்காங்க. போகணும். ஒருவேளப் பிடிக்கலன்னாலும் பரவாயில்ல. அவனுக்காக உருகவோ, மருகவோ கிடையாது.”

 

ஸ்ரீஜாவின் கைகளை எடுத்து தன் மீது வைத்துக் கொண்டாள் பூங்குழலி.  “எல்லாத்தையும் நீ ஈஸியா பாக்குற. எடுத்துக்குற. சந்தோஷமா இருக்க.”

 

“ஈஸின்னு கூட சொல்ல முடியாது. எதுலயும் ஃபிக்ஸ் ஆகக் கூடாதுன்னு நினைப்பேன். அதுதான் நம் நிம்மதி, சந்தோஷம் எல்லாத்தயும் பிடுங்கிரும். குடும்பம், குழந்தை, அவங்க எதிர்காலம் அப்படி பெருசா எந்தக் கனவும் இப்போ இல்ல. கிடைச்ச வாழ்க்கைய சுயமரியாதையோட, முடிஞ்ச வரைக்கும் சந்தோஷத்த கெடுத்துக்காம வாழனும்.”

 

பூங்குழலி கண்களை மூடியிருந்தாள்.

 

“பேபி… தூங்கிட்டியா?”

 

“இல்ல… யோசிச்சுட்டு இருக்கேன்.

 

பூங்குழலியின் முடியைக் கோதி விட்டவாறு, “யெஸ். யோசி. வர்றது வரட்டும், கல்யாணம் செஞ்சுக்கன்னும் சொல்ல மாட்டேன். கல்யாணம் செய்ய வேண்டாம்னும் சொல்ல மாட்டேன். ஏன்னு எனக்கேத் தெரிலன்னு மட்டும் சொல்லாத. அது டேஞ்சர். ஒகேவா? தெளிவா முடிவெடு. அதை போல்டா  ஃபேஸ் பண்ணு.”

 

இரவில் ஸ்ரீஜாவோடு பேசியது இப்போது தெளிவையும் நிதானத்தையும் தந்திருந்தது. இன்னும் சில நாட்கள்  யாரும் தொந்தரவு செய்யப் போவதில்லை. அதற்குள் ஒரு முடிவெடுத்து அண்ணனிடமும், அம்மாவிடமும் சொல்லிவிட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டாள்.

 

டிரெஸ் செய்து கண்ணாடியில் முகம் பார்க்க வேண்டும். எப்படியும் உள்பக்கம் பூட்டிக்கொள்ள ஸ்ரீஜாவை எழுப்பி சொல்லத்தான் வேண்டும். அறையின் விளக்கைப் போட்டாள்.

 

ஸ்ரீஜா அசையாமல் படுத்திருந்தாள். இரவில் அவள் சொன்ன அந்த வண்ணத்துப் பூச்சிகள் நினைவில் பறக்க ஆரம்பித்தன. நேற்று காலை பூங்குழலி புறப்பட்டுச் சென்ற பிறகு கொஞ்சம் நேரம் ஓய்வாக இருந்துவிட்டு, ஸ்ரீஜா ஆபிஸ் செல்ல புறப்பட்டு வெளியே வந்திருக்கிறாள். வராண்டாவை ஒட்டிய அசோகா மரங்களைச் சுற்றிச் சுற்றி இரண்டு வண்ணத்துப் பூச்சிகள் பறந்திருக்கின்றன. ஒரு கணத்தில் இரண்டும் ஒன்றாகி, ஒரே வண்ணத்துப் பூச்சி போலாகி ஸ்லோ மோஷனில் பறந்திருக்கின்றன. “காத்திலேயே பறந்துட்டு லவ் செய்யுதுங்க. ஐய்யோ!” சொல்லிய அவள் முகத்தில் அப்படியொரு குதூகலத்தையும்,  பரவசத்தையும், பூரிப்பையும் பார்க்க முடிந்தது. கொஞ்ச நேரத்தில் அப்படியே போய் தரையில் விழுந்து அசையாமல் கிடந்திருக்கின்றன. படிகளில் கீழிறங்கிப் போய் பார்த்திருக்கிறாள். ஒரே ஒரு வண்ணத்துப் பூச்சியாகத்தான் தெரிந்திருக்கிறது. அருகில் செல்லவும் சட்டென சிறகசைத்து ஒரு வண்ணத்துப் பூச்சி பறந்து எங்கோ சென்றிருக்கிறது. ஒரு வண்ணத்துப் பூச்சி தரையிலேயே அப்படியே கிடந்திருக்கிறது.

 

“ஹேய், மை டியர் பட்டர்ஃப்ளை!” ஸ்ரீஜாவை எழுப்பினாள். கண் விழித்ததும் இவளைப் பார்த்து சிரித்தாள். கையிரண்டையும் நீட்டி அழைத்தாள்.

 

“அடி படுவே. நா கிளம்புறேன். கதவை உள்ள லாக் பண்ணிக்க. கால் டாக்ஸி வெயிட் பண்ணுது. வர்றேன். ஈவ்னிங்  மீட் பண்ணுவோம்” சொல்லி கிளம்பினாள்.

 

காரில் ஜன்னல்கள் திறந்தே இருந்தன. “மேடம், ஏசி போடணுமா” டிரைவர் கேட்டார்.

 

இல்லையென்று சொல்லிவிட்டு மொபைலை பார்த்தாள். மணி ஐந்தே முக்கால். மூன்றரை மணி நேரம்தான் தூங்கியிருந்தாலும் களைப்பே இல்லை. வெளியே பார்த்தாள். காலைக் காற்று அவ்வளவு இதமாகவும் சிலிர்ப்பாகவும் இருந்தது. குருநானக் சாலையில் பிளாட்பாரத்தில் ஷூக்கள் போட்டுக்கொண்டு அங்கங்கு நடந்து கொண்டும், ஓடிக்கொண்டும் மனிதர்கள் இருந்தார்கள். அதைத் தாண்டி வேளச்சேரி மெயின் ரோட்டிற்கு வந்ததும் வாகனங்களும், மனிதர்களும், டீக்கடைகளும் தென்பட்டாலும் போக்குவரத்து பெரும்பாலும் குறைவாகவே இருந்தது.

 

அங்கங்கு தொடரி, நாயகி, ஆண்டவன் கட்டளை போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மதுரையில் அண்ணனோடு படம் பார்க்க வேண்டும்  என்று நினைத்து மறந்து போனோமே என்றிருந்தது. ஸ்ரீஜாவோடு ஒருநாள். போய் பார்க்க வேண்டும். ட்ரிம் செய்த தாடியோடு சிறு புன்னகையோடு இருந்த விஜய்சேதுபதியிடம்  அலையரசனின் சாயல் தெரிந்தது. அலையரசன் ஒழுங்காக தலை வார மாட்டான்,  பர்ஃப்யூம் போட மாட்டான். மடிப்புக் கலையாமல் ஷர்ட் போட மாட்டான்

 

நேற்று லஞ்ச் நேரத்தில்  பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் போது அப்படித்தான் இருந்தான். “என்னாச்சு… சனிக்கிழமை ஒங்கம்மா போன் பண்ணவுடன பதறிட்டேன்” என்றான்.

 

சோபியாவும் இவளைப் பார்த்தாள். “ரூம்ல கூட இருந்த ஸ்ரீஜாவும் ஊருக்குப் போய்ட்டா. தனியே இருக்க போர் அடிச்சுது. அதான் திடீர்னு அண்ணனைப் பாக்க மதுரைக்கு கிளம்பி போய்ட்டேன். போனும் சார்ஜ் இல்லாம ஆஃபாய்ட்டு. அம்மா பயந்துட்டாங்க” என்று சாதாரணமாகச் சொல்லி முடித்துக் கொண்டாள். அவர்களிடம் விளக்கமாக எதையும் சொல்லிக் கொள்ளவில்லை. ஒரு முடிவெடுத்துவிட்டு சொல்லிக் கொள்ளலாம் என்றிருந்தாள்.

 

“ஸாரி சோபியா. அதான் சனிக்கிழமை உன் வீட்டுக்கு வர முடியாமப் போய்ட்டு. சரி. விக்னேஷ் எப்படியிருக்கான்?” கேட்டாள்.

 

“பெட்டரா ஃபீல் பண்ணேன். சனி ஞாயிறு ரெண்டு நாள் நானும் வீட்டுல இருந்தேன். கொஞ்சம் இயல்பா இருந்தான். தண்ணி கூட அடிக்கல. குழந்தைகளோட விளையாடிக்கிட்டு இருந்தான். ம் பாப்போம்.”

 

”குட்..” என்ற பூங்குழலி அப்போதுதான் அந்த கேள்வியை சட்டென்று அலையரசனிடம் கேட்டாள். இப்போதும் ஏன் அப்படி கேட்டோம் என்றுதான் இருந்தது.   

 

“உங்க வீட்டுல இருந்து ரெண்டு மூனு மாசத்துக்கு முன்னால என்னை பெண் கேட்டு வீட்டுக்குப் போனாங்களாமே,  தெரியுமா?”  

 

 எதிர்பார்க்காத அலையரசன், ஒன்றும் சொல்லத் தோன்றாமல் திகைத்தான். “அப்படியா!” என ஆச்சரியப்பட்ட சோபியா சிரித்தாள்.

 

“எனக்குத் தெரியும்னு உனக்கும் தெரியும். உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். அதப் பத்தி பேசாம இருக்குறதே நல்லதுன்னு நினைச்சேன். எங்க வீட்டுல ஓங்கிட்டத்தான் மொதல்ல கேக்கச் சொன்னாங்க. மாட்டேன்னுட்டேன். நீ எனக்கு நல்ல ஃபிரண்டு. அதஃ ஸ்பாயில் பண்ண விரும்பல. அப்புறம்தான் வீட்டுல போய் கேட்டிருக்காங்க.” என்று நிதானமாகச் சொன்னான்.

 

பூங்குழலி இடது கையால் அவனைத் தொட்டு சினேகமாய் புன்னகைத்தாள். இப்போது நினைக்கும் போதும் புன்னகையே வந்தது.

 

கால்  டாக்சியிலிருந்து இறங்கி கம்பெனிக்குள் நுழைந்தாள். லிஃப்டுக்காக காத்திருந்தாள்.  கீழே வந்து கதவு திறக்கவும், “வாங்க பூங்குழலிம்மா. இன்னிக்கு கரெக்ட் டைமுக்கு வந்துட்டீங்க” மகாலிங்கம் சிரித்தார்.

 

“எப்படியிருக்கீங்க. சனி ஞாயிறு லீவு எப்படிப் போச்சு.”

 

” எங்க போக? வீட்டுலத்தான். அன்னிக்கு ஒரு நா தானே வீட்டோட , குழந்தைங்களோட இருக்க முடியுது. நேத்து ஆண்டவன் கட்டளை படம் பாத்தேன்.. சூப்பரா இருந்துச்சு.” சிரித்தார்.

 

இந்த ஆண்டவன் கட்டளை விடாமல் துரத்துகிறதே என நினைத்தாள். லிஃப்ட் நின்றது. “வர்றேன் மகாலிங்கம்” என வெளியேறினாள்.

 

உள்ளே நுழைந்தவளுக்கு அக்னேஷ் பிரின்சியா, சாந்தி, சந்தானம் எல்லாம் புன்னகையோடு குட்மார்னிங் சொல்லிவிட்டு தங்கள் சிஸ்டத்துக்குள் நுழைந்து கொண்டார்கள். பாஸ்டஸ் லியோ தூரத்தில் இருந்து பார்த்தே தம்ஸ் அப் காட்டி “குட்” என்றான்.

 

சிஸ்டம் ஆன் செய்து  மெயிலைப் பார்க்க ஆரம்பித்தாள். அலையரசனிடம் இருந்து போன் வந்தது.  “அய்யோ” என வாய்விட்டு கதறி விட்டாள். எல்லோரும் திரும்பிப் பார்க்க பூங்குழலி எழுந்து லியோவிடம் சென்று, சோபியாவின் கணவன் விக்னேஷ் தூக்க மருந்து சாப்பிட்டு விட்டதையும்,  ஆஸ்பத்திரியில் கிரிட்டிக்கலா இருப்பதையும் தனக்கு ஒருநாள் லீவு வேண்டுமென்பதையும்  பதறியபடி சொன்னாள்.

 

 “லுக். இன்னிக்கு மதியம் ரெவ்யூ மீட்டிங் இருக்கு. எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியும். அதற்கான டேட்டாவையும் டீட்டெய்ல்ஸையும் மட்டும் பிரிப்பேர் செஞ்சு அக்னேஷ்ட்ட கொடுத்துட்டு போ. நாளைக்குக் கூட லீவு எடுத்துக்க.”

 

வேறு வழியில்லாமல் திரும்பவும் சீட்டில் வந்து உட்கார்ந்தாள். என்னவென்று கேட்ட சந்தானத்திடமும், அக்னேஷ் பிரின்சியாவிடமும் விஷயத்தைச் சொன்னாள். அவர்களும் களையிழந்து போனார்கள்.

 

அலையரசனுக்கு போன் செய்து மூன்று மணி நேரத்தில் வருவதாக தெரிவித்தாள். சிஸ்டத்தின் முன் உட்கார்ந்து கைகள் நடுங்க வேலை பார்க்க ஆரம்பித்தாள். “ஐயோ, சோபியா இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வாள்?” என உள்ளுக்குள் அரற்றியபடி இருந்தாள். 

 

(நண்பர்களே! க்ளிக் தொடர்கதை இன்னும் நான்கைந்து அத்தியாயங்களில் நிறைவு பெற்று விடும். இதனை நாவலாக வெளியிட பாரதி புத்தாகாலயம் பேசியிருக்கிறது. மீதமுள்ள அத்தியாயங்களை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.  நண்பர்கள் தயவு செய்து பொறுத்துக் கொள்ள வேண்டும். விரைவில் ‘க்ளிக்’ ஒரு முழு நாவலாக வெளிவரும். இதுவரை வாசித்து, கருத்து தெரிவித்து, உற்சாகப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். – மாதவராஜ் ) 

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. பூங்குழலி ஸ்ரீஜாவோடு பேசியதிலிருந்து அவளின் மனநிலையை புரிய முடிகிறது.. ஆனாலும் இன்னும் அவள் மனநிலை தெளிவு இல்லை.. இனி தொடர் வராது என்று அறியும் போது மனம் சற்று கவலை அடைகிறது..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!