க்ளிக் - 18 (தொடர்கதை)


காலையில் எழுந்து வேலைக்குக் கிளம்புவதற்குத்தான் நேரமிருந்தது. முகம் பார்த்து பேச முடிந்த  சொற்ப நேரங்களிலும்  நரேனின் கல்யாணம், பூங்குழலி குறித்த பேச்சே அறையில் வரவில்லை. அடுத்த ஐந்து நாட்களும் வராது. வியாழக்கிழமை வரைக்கும் செத்துப் போய் வந்து உயிர் பெற்றுச் செல்ல வேண்டும். எதுவாயிருந்தாலும் கொஞ்ச நாள் கழித்து சொல்லிக் கொள்ளலாம் என்று நிம்மதி கொண்டான் நரேன்.

 

சனியும், ஞாயிறும் பவித்ராவோடு இருக்கும் வரை அமைதியாகவும், நிதானமாகவும் இருந்தது. நேற்று இருட்டிய பிறகுதான் இங்கு திரும்பினான். கிஷோரும், பிரசாந்த்தும் அப்போதுதான் எழுந்து குளித்து வெளியே செல்வதற்கு தயாராய் இருந்தார்கள். இவனைப் பார்த்ததும் “வா ப்ரோ, சரியான நேரத்துக்குத்தான் வந்த” என உற்சாகமானார்கள். பீர் அடிப்பதற்கு அழைத்தார்கள்.

 

“இல்ல, துணி துவைக்க வேண்டியிருக்கு, நீங்க போய்ட்டு வாங்க” என்றான்.

 

“அந்த செல்பிக்கே பார்ட்டி வைக்கணும் ப்ரோ” கெஞ்சினார்கள். ஐநூறு ருபாய் கொடுத்து ஒருவழியாய் அனுப்பி வைத்து பிக்கல் பிடுங்கல்களிலிருந்து  தப்பித்தான். இரண்டு மூன்று மணி நேரம் கழித்து திரும்பியவர்கள் அவர்களுக்குள் சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தனர். கிஷோர் அவனது மேனேஜரை கோபமாய்  திட்டிக்கொண்டே இருந்தான்.  பிரசாந்த்திற்கு அவனது அம்மாவின் மருத்துவச் செலவுக்கு பணம் அனுப்ப வேண்டியிருந்தது. அது குறித்த முயற்சிகளில் சோகமாய் இருந்தான் அடுத்த அறையில் போய்  படுத்து இவன் தூங்கி விட்டிருந்தான்.  

 

பைக்கை வெளியே எடுத்து ஸ்டார்ட் செய்யவும் சந்திரா போன் செய்தார். வெள்ளிக்கிழமை இரவு பேசிய பிறகு அம்மாவிடம் பேசவே இல்லை. சென்னைக்கு வந்து இப்படி இரண்டு நாட்கள் தொடர்ந்து பேசாமல் இருந்ததே இல்லை. பவித்ரா எல்லாவற்றையும் ஏற்கனவே பேசியிருந்ததால் அழைப்பை ஏற்று “சொல்லுங்கம்மா” என்றான்.

 

“நரேன்! ஆபிஸ்க்கு கிளம்பிட்டியாப்பா?”

 

“ஆமாம்மா..”

 

“சாப்பிட்டியா..”

 

“இனுமத்தான் போற வழில சாப்பிடணும்”

 

“நீ எதுக்கும் கவலப்படாதப்பா”

 

“சரிம்மா…. நீங்க சாப்பிட்டீங்களா?”

 

“இனுமத்தான். சாப்பிட இட்லிய தட்டுல எடுத்து வச்சேன். உன் ஞாபகம் வந்துச்சு.”

 

“அம்மா..”

 

“சொல்லு நரேன்..”

 

“நீங்களும் கவலப்படாதீங்கம்மா. அன்னிக்கு நா கோவமா பேசினதுக்கு மன்னிச்சிருங்கம்மா.” இளகிப் போயிருந்தான்.

 

 “உன்னப் போயி அவ தப்பா நெனச்சிட்டாளேன்னுதாங் கவல. கடவுள்தான் நல்ல புத்திய எல்லாருக்கும் குடுக்கணும். உடம்பப் பாத்துக்க.”

 

“சரிம்மா..”

 

“ரோட்ல பாத்துப் போப்பா. வச்சிர்றேன்”

 

அம்மாவின் பேச்ச்சில் இருந்த கனிவும், உருக்கமும் அலைக்கழித்தது. இந்தக் கல்யாணத்தின் மீது எவ்வளவு ஆசை வைத்திருந்தார்கள். அதைப் பற்றியே நினைத்துக் கொண்டு, கனவு கண்டு, பேசிக்கொண்டு இருந்தார்கள் ரோட்டில் போகும் வழியெல்லாம் அம்மாவையே நினைத்துக் கொண்டு போனான். போனில் கேட்ட அம்மாவின் குரலில் அந்த ஆசையெல்லாம் விட்டுப் போயிருந்தது. அவனது கம்பெனிக் கட்டிடத்திற்குள் நுழைந்து நான்காவது தளத்திற்குச் செல்ல லிஃப்டுக்காக காத்திருக்கும் வரை அந்த வருத்தம் அப்பியிருந்தது.

 

மேல் நோக்கி நகரும்போது நரேனுக்கு ஆஷாவின் நினைவு வந்தது. இரண்டு நாட்களாய் இல்லாமலிருந்தது. அவள் முகத்தை எப்படிப் பார்ப்பது என தவிக்க ஆரம்பித்தான். தயக்கத்துடன் ஆபிஸுக்குள் நுழைந்தான். அவள் இருந்த இடத்தை தவிர்த்து ஜேக்கப் அருகே இருந்த வழியில் சென்று தனது சேரில் அமர்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில், “குட்மார்னிங் நரேன்” என பின்னால் ஆஷாவின் குரல் கேட்டது. தலையை மட்டும்  ஒரு கணம் திருப்பி, “குட்மார்னிங்” சொல்லி சட்டென சிஸ்டத்திற்குள் புகுந்து கொண்டான்.

 

இவனருகே குனிந்து, “வேணும்னே என்னை அவாய்ட் பண்ணித்தானே உள்ள வந்தே? இப்போ நான் அசிங்கமானவ அப்படித்தானே?” மெல்லிய குரலில் அழுத்தமாய்ச் சொன்னாள். 

 

கொஞ்சம் தள்ளி இருந்த இர்ஃபான் இவர்களை பார்ப்பதை ஆஷா கவனித்தாள்.  நிமிர்ந்து இவனது சேரை லேசாக சுழற்ற, அது திரும்பி அவளுக்கு நேராய் நின்றது. “என்னாச்சு, கண்ணு கூசுதா?” என்றாள்.

 

“இல்லய” அவள் முகத்தைப் பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.

 

 “என்னாச்சு ஆஷா?” இர்ஃபான் சிரித்துக் கொண்டே கேட்டான்.

 

“என் மூஞ்சைப் பாக்க பிடிக்கலயாம். குட்மார்னிங் கூட இந்த ஃபெல்லோக்கு சொல்ல முடில.” சத்தமாய்ச் சொன்னாள்.

 

அவசரமாய் எழுந்து நின்று, “இப்ப என்ன? நேரமாய்ட்டுன்னு வேகமா வந்து உட்காந்தேன். குட்மார்னிங். சொல்லியாச்சு. போதுமா” என சொல்லி சேரைத் திருப்பி கம்ப்யூட்டரைப் பார்த்து உட்கார்ந்தான். மேலும் சிலர் நடக்கிற கலாட்டாவைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

 

“ஒரு வீக்கோட பிகினிங்கையே அப்செட் பண்ணிட்டான். அவனுக்குன்னு ஒரு கேர்ள் வந்தவுடனே நாம எல்லாம் கண்ணுக்குத் தெரியல. என்ன?” என அதட்டிக்கொண்டே சேரை மறுபடியும் சுழற்றி தன் பக்கம் இவனைத் திருப்பினாள்.

 

நரேனுக்கு எரிச்சலாய் இருந்தது. “விடு ஆஷா. வேல இருக்கு” திரும்பப் போனான்.

 

சேரை விடாமல் பிடித்துக்கொண்டு, “லுக் ஹியர். வந்த புதுசுல பயந்து பயந்து என்னை நீ சைட் அடிச்ச காலமும் உண்டு. அதையெல்லாம் மறந்துராத ஜெண்டில்மேன்”  என்றாள்.

 

சுற்றிலும் மொத்தமாய் சிரித்தார்கள். தாங்க முடியாமல், “டோண்ட்  யூ ஹெவ் எனி மேனர்ஸ்? எனி சென்ஸ்? ஸ்டுப்பிட் மாதிரி பிஹேவ் பண்ற?  நீ கிட்டிங் பண்ண நா ஆளு இல்ல. ஒகேவா?” சத்தமாய் கத்தினான்.

 

ஆஷா அதிர்ந்து போனாள். அந்த இடம் அப்படியே அமைதியானது. சட்டென சேரிலிருந்து கைகளை எடுத்துக் கொண்டாள். “ஸாரி… ஸாரி..” என அவன் முகத்தைப் பார்க்கக் கூட முடியாமல், கொஞ்ச தள்ளி இருந்த தன் இருக்கைக்கு வேகமாய்ச் சென்று உட்கார்ந்தாள். தன் சேரைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்தான் இவன். யாரும் எதுவும் சொல்லத் தோன்றாமல் உட்கார்ந்திருந்தார்கள். ஆஷா எழுந்து ரெஸ்ட் ரூம் போவதைப் பார்த்தார்கள்.

 

நரேனுக்கு தலை முழுவதும் ஜிவ்வென்று இருந்தது. அங்கு இங்கு முகம் திருப்பாமல் சிஸ்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். டெவலப் செய்யப்பட்டிருந்த சாப்ட்வேரின் செயல்பாடு, எளிதில் கையாளும் வகையில் வடிவமைப்பு, வேகம் என ஒவ்வொன்றாய் டெஸ்ட் செய்து குறைகளை டாகுமெண்ட்டேஷன் செய்ய வேண்டியிருந்தது. வேலைக்கு முழுவதுமாய் தன்னைக் கொடுக்க முடியாமல் திணறினான். தான்  நடந்து கொண்டதும் கத்தியதும்  வந்து வந்து உறுத்தியது. எல்லோரிடமும் இருந்த அமைதி அதை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தது. சேரை விட்டு எழாமல் வேலையிலேயே கவனமாய் இருப்பது போலிருந்தான்.  

 

பனிரெண்டு மணிக்கு ராஜேஷும், இர்ஃபானும் டீ சாப்பிட அழைத்தார்கள். “வேலையிருக்கு. நீங்க போய்ட்டு வாங்க…” இருந்து கொண்டான். வெளியே டீக்குடித்துக் கொண்டிருப்பவர்கள் இவனையும் ஆஷாவையும் பற்றித்தான் பேசுவார்கள். எவ்வளவு டீக் குடித்திருக்கிறான்? பேசட்டும் என இருந்தான்.

 

ஒரு தடவை ரெஸ்ட் ரூமுக்குப் போனது, அப்புறம் லஞ்ச்சுக்கு எழுந்ததோடு சரி. பொதுவாகவே அதிகம் தன் இருக்கையை விட்டு எழ மாட்டான். தேவையில்லாமல் யாரிடமும் பேச மாட்டான். இருந்த கொஞ்ச நஞ்ச சகஜத்தையும் இன்று இழந்து போனான். மதியத்திற்கு மேல் ஒரு தடவை ஆஷா இவனைத் தாண்டி சதீஷிடம் சென்று எதோ பேப்பர்களை வைத்துக்கொண்டு பேசிச் சென்றாள். அப்போது மட்டும் திரும்பி அவளைப் பார்த்தான். வழக்கமான சிரிப்பும், கிளர்ச்சியுமான முகமாய் இல்லை. வாடிப் போயிருந்தாள்.

 

அவளிடம் ‘ஸாரி” சொல்ல வேண்டும் போலிருந்தது. எதுவோ தடுத்தது. ஆரம்பத்தில் யாரிடமும் பழகாமல் கூச்சம் கொண்டு இந்த ஆபிஸில் தனித்து நின்றபோது,  வேலை தெரியாமல் தவித்தபோது அவள்தான் இவன் கை பிடித்து சரி செய்தவள். தன்னம்பிக்கை தந்தவள். எது வேண்டுமானாலும் பேசக் கூடிய மனுஷியாய் இருந்தாள். அவள் வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அம்மா, அப்பா, குழந்தை எல்லோரும் தெரியும். சென்னையில் இவன் அதிகம் பேசிப் பழகியது அவளோடுதான். இதற்கு முன்பும் நிறைய கேலி கிண்டல் செய்திருக்கிறாள். அப்போதெல்லாம்  இயல்பாகவும், ஒரு சந்தோஷத்தோடும் எடுத்துக் கொண்டவன்தான். 

 

இன்றைக்கு  அப்படி வழக்கம் போல இருக்க முடியாமல் போய்விட்டது. கொதித்து விட்டான். வெளியே யாரிடமும் இதுவரை இப்படி நடந்து கொண்டதேயில்லை. இவனுக்கே அது விசித்திரமாயிருந்தது. அவளைப் போய் காயப்படுத்தி விட்டோமே  என குற்ற உணர்வு கொண்டான். இப்போதும் அவள் முகத்தைப் பார்க்க சங்கடமாயிருந்தது.

 

சிஸ்டத்தில் நேரத்தைப் பார்த்தான் நரேன். மணி எட்டை நெருங்கியிருந்தது. காலை பத்து மணிக்கு வந்து உட்கார்ந்தவன் . ஓரளவுக்குத்தான் வேலை முடிந்திருந்தது. நாளைக்குள் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். இன்றைக்கு அதற்கு மேல் முடியாது போல சோர்வு அழுத்தியது. டீமில் மற்றவர்கள் கிளம்பி விட்டிருந்தார்கள். ஜேக்கப், சுதா, ஆஷா இருந்தார்கள். ஆஷா போனதும் கிளம்பலாம் என காத்திருந்தான். அவள் முகம் பார்த்து “பை” சொல்ல தெம்பில்லை.

 

காலையில் இருந்து பூங்குழலியின் நினைவு வரவேயில்லை என்பது ஆச்சரியம் போலிருந்தது. பூங்குழலி கலைச்செல்வன் வீட்டிற்கு சென்றது, தன் அம்மா சித்ராவிடம் போனில் பேசியது, அவள் சரியாகும் வரை இன்விடேஷன் கொடுக்கப் போவதில்லை என தான் முடிவெடுத்திருப்பது வரை முருகேசன் எல்லாவற்றையும் மூர்த்தியிடம் சொல்லியிருந்தார். அவர் நேற்று பவித்ரா வீட்டில் இவன் இருக்கும்போது போன் செய்து ‘சில நாட்கள் அமைதியாய் இருப்போம், என்ன நடக்கிறதென்று பார்ப்போம்” என பேசியிருந்தார்.

 

இன்று பூங்குழலியும் சென்னை வந்திருப்பாள். வேலைக்குச் சென்றிருப்பாள். இதுபோல் மறந்திருப்பாளா என நினைத்தான். இப்போது ஹாஸ்டலுக்கு திரும்பியிருக்கக் கூடும். ஒருமுறை அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. “நீ என்னை தப்பாப் புரிஞ்சிட்டே” என அவளிடம் சொல்ல வேண்டும்.  ஆஷாவும் அப்படித்தான் தன்னிடம்  காலையில் பேச  வந்திருக்க வேண்டும். அதற்குள் ஆத்திரத்தில் விரட்டி விட்டோமே என்றிருந்தது.

 

ஹீல்ஸ் சத்தம்  ஒலிக்க ஆஷா இவனைக் கடந்து சென்று அறையை விட்டு வெளியேறினாள். வேறு வழியாகவும் சென்றிருக்கலாம். “நான் போகிறேன்” என்பதை இவனிடம் சொல்லாமல் சொன்னாள். கதவைத் திறந்து வெளியேறும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன். சிறிது நேரத்திற்கு பின் சிஸ்டத்தை ஆஃப் செய்துவிட்டு ஜேக்கப்பிடமும், சுதாவிடமும் “பை” சொன்னான்.  “என்னாச்சு உனக்கு. ஆஷா ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டா” என்ற ஜேக்கப்புக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் வெளியேறினான் நரேன்.

 

வராண்டாவில் நடந்த போது கண்ணாடி தடுப்புகளின் வழியே வெளியுலகம் தெரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெள்ளி இரவு தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து பார்த்ததைவிட நகரம் கீழே இருந்தது. இருட்டில் எங்கும் வெளிச்ச சிதறல்களாகவும், புள்ளிகளாகவும் விரிந்து பரந்து கிடந்தது. தினமும் பார்ப்பதுதான் என்றாலும் எதோ பெருஞ்சோகத்தோடு காணப்பட்டது இன்று. ரொம்ப கீழே வாகனங்கள் சின்னப் புள்ளிகளாய் நகர்ந்து கொண்டிருந்தன.

 

லிஃப்டில் இறங்கி கட்டிடத்தை விட்டு  வெளியே வந்தான். பைக்கை ஸ்டார்ட் செய்து கம்பெனியின் வாசலைத் தாண்டி ரோட்டுக்கு வந்தான். சோடியம் வெளிச்சம் நிறைந்திருந்த அந்த இடத்தில் வலது பக்கம் கொஞ்சம் தள்ளி ஆஷா ஒரு ஆட்டோவுக்கு கை காட்ட அது நிற்காமல் சென்றது. பைக்கைத் திருப்பி அவளருகே சென்றான். “ஸாரி ஆஷா” என்றான்.

 

அவள் இவனைக் கவனிக்காமல், வேறு ஆட்டோ எதாவது வருகிறதா என பார்த்துக் கொண்டிருந்தாள். “உன் வண்டிக்கு என்னாச்சு?” என்றான். அவள் அதற்கும் பதில் சொல்லவில்லை. பைக்கை விட்டு இறங்கினான். “மன்னிச்சிரு ஆஷா. இப்படி ஒருநாளும் யார்க்கிட்டயும் நடந்துக்கிட்டதேயில்ல. ஸாரி.. ஸாரி.” சொல்லிக்கொண்டே இருந்தான். பக்கத்தில் இரண்டு மூன்று பேர் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவன் கை பிடித்து,“போதும் நிறுத்து. வண்டி எடு” சொல்லி, அவன் ஸ்டார்ட் செய்யவும் பின்னால் ஏறிக் கொண்டாள் ஆஷா.

 

“தாங்ஸ் ஆஷா” என்றவன் கிளம்பினான். “வண்டில வரல?” கேட்டான்.

 

“காலைல புறப்படும் போது ஸ்டார்ட் ஆகல. கால் டாக்ஸிலதான் வந்தேன். இப்பவும் புக் பண்ணேன். வர அரை மணி நேரம் ஆகும்னு காட்டிச்சு. சரி ஆட்டோல்ல போயிருவோம்னு பாத்தேன்.” என்றாள்.

 

அதற்கு மேல் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. பைக்கின் பின்னால் உட்கார்ந்திருக்கும் இரண்டாவது பெண் ஆஷா. இதுவரை வேறு யாரையும் உட்கார அனுமதித்ததில்லை என்று பூங்குழலியிடம் சொன்னது நினைவுக்கு வந்தது. இன்று காலை வரை அவளது முகம் பார்க்கவே சங்கடமாயிருந்தது. தானே இப்போது அழைத்து உட்கார வைத்துச் செல்கிறோம் என்பது மனித மனதின் விசித்திரமாகத் தெரிந்தது. உட்கார்ந்த ஒரு பெண் கோபம் கொண்டு போய்விட்டாள். கோபம் கொண்டு போன ஒரு பெண் இப்போது உட்கார்ந்திருக்கிறாள்.

 

“வீட்டுக்குத்தானே?” கேட்டான்.

 

“ம்” என்றவள் அவன் தோள் மீது கை வைத்துக் கொண்டாள். அன்றைக்கு பூங்குழலி  ஒருதடவை கூட தன் தோளில் கை வைக்கவில்லை என்பதை இப்போது உணர்ந்தான்.

 

“இன்விடேஷன் அடிக்கக் கொடுத்திருந்தியே. வாங்கிட்டியா?”

 

“இல்ல” என்றான்.

 

“என்னாச்சு நரேன் வெள்ளிக்கிழம” ஆஷா கேட்டாள்.

 

“புரியல…”

 

“பூங்குழலியோட செல்ஃபி எடுத்தத அனுப்பியிருந்தே. பிறகு என்னாச்சு?”

 

“ஒன்னுமில்ல. அவ ஹாஸ்டலுக்குப் போய்ட்டா. நா ரூமுக்குப் போய்ட்டேன். தட்ஸ் ஆல்.”

 

கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தவன், “ஆஷா, எதாவது ஒரு ரெஸ்டாரண்ட்ல காஃபி சாப்பிடலாமா?” கேட்டான்.

 

”ம்.” என்றாள்.

 

ரோட்டிலிருந்து கொஞ்சம் உள்ளே தள்ளி, அமைதியாக, தேவையான வெளிச்சத்தில் இருந்த ரெஸ்டாரண்ட்டில் நிறுத்தினான். இருவரும்  ஒரு டேபிளில் எதிரெதிரே அமர்ந்தார்கள். வந்த சர்வரிடம், “இரண்டு காஃபி” சொன்னான் நரேன்.  ரோட்டையும், அதில் செல்கிற வாகனங்களையும் ஆஷா பார்த்துக் கொண்டிருந்தாள். மெல்ல அவள் கண்களில் ஈரம் படிவதைப் பார்த்தான்.

 

“இப்ப சொல்லு நரேன், எதுக்கு என்னைப் பாக்காம காலைல போனே?” முகத்தில் அழுகையும், கோபமும் சேர்ந்தே இருந்தது.

 

“விடு ஆஷா. உன் முகத்தப் பாக்க ஏனோ சங்கடமாயிருந்துச்சு.”

 

“நா தப்பானவன்னு நினைக்கிறியா?”

 

“ச்சே. அப்படில்லாம் இல்ல. மேனேஜரோட உன்னப் பாத்தத தாங்க முடில.  மனசால ஏத்துக்க முடில.”

 

“தாங்ஸ் நரேன். உண்மையச் சொன்னதுக்கு…”.

 

சர்வர் காபி வந்து கொடுத்தான். இருவரும் குடிக்க ஆரம்பித்தார்கள். அவள் இயல்பாகிக்கொண்டு இருந்தாள்.

 

“யெஸ். ஐ ஹேட் செக்ஸ் வித் ஹிம். தப்பாத் தெரில நரேன்.”

 

நரேனால் அவள் முகத்தைப் பார்க்க சங்கடமாயிருந்தது.

 

“என்னைக் கல்யாணம் பண்ணி குழந்தையைத் தந்தவன் ரெண்டு பேர் சம்பாத்தியத்தையும் ஒரே ஆளா சம்பாதிக்கிறதுக்கு  அமெரிக்கா போனான். இப்போ என்னை வேலையை விட்டுட்டு அமெரிக்கா வரச் சொல்றான். அப்படி ஒன்னு நடந்துச்சுன்னா நா காலம் பூரா அவன டிபண்ட் பண்ணித்தான் இருக்கணும். இங்கேயே ரெண்டு பேரும் சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கலாம்னு சொன்னத கேக்கல. ரெண்டு வருஷமாச்சு. செக்ஸ் வச்சுக்காமயா அங்க இருப்பான்?”

 

அவள் காபி குடிக்காமல் பேசிக்கொண்டு இருந்தாள். கையைக் காட்டி குடிக்கச் சொன்னான் நரேன்.

 

அதைக் கவனிக்காமல் “மாஸ்டர்பேட் பண்ணலாம். ஹோமோ செக்ஸ் வச்சுக்கலாம். எதோ ஒரு பெண்ணோட இருக்கலாம். ஏன் செக்ஸ் டாய் யூஸ் பண்ணலாம். எதோ செக்ஸ் இல்லாம அவன் இருப்பானா?”

 

இப்படியெல்லாம் ஆஷா பேசுவாள் என இவன் எதிர்பார்க்கவில்லை. அவள் ரொம்ப தீவிரமாக பேசிக்கொண்டு இருந்தாள்.

 

“அந்த மேனேஜருக்கு நானும், எனக்கு அவனும் செக்ஸ் டாய்னு நினைச்சுட்டுப் போயேன். அதுக்கு மேல எனக்கு அவனுக்கும் ஒன்னும் இல்ல. போதுமா? ஜஸ்ட் செக்ஸ். அதுக்கு ஏன் முகம் சுழிக்கிறீங்க?” முகமெல்லாம் கோபத்தில் பொங்கிக் கொண்டு இருந்தது.

 

நரேன் வாயடைத்துப் போயிருந்தான்.

 

“அதுக்காக நா ஒன்னும் அலையவும் இல்ல. மேனேஜருக்காக உருகவும் இல்ல. யாருக்கும் துரோகம் செய்றதாவும் நினைக்கல. என்னோட அம்மா,  அப்பா, குழந்தைய எல்லாம் நாந்தா பாத்துக்குறேன். அவந்தான் பணத்துக்காக பொண்டாட்டி, புள்ள, அம்மா, அப்பா எல்லாத்தயும் விட்டுட்டுப் போயிருக்கான்.”

 

படபடவென்று பேசியவள் காபியைக் குடித்தாள். ஆறிப் போயிருந்தது. “சூடா இன்னொரு காபி சொல்றியா?” கேட்டாள்.

 

நரேன்  சர்வரை அழைத்துச் சொன்னான்.

 

“ஆபிஸ்ல என்னைப் பத்தி என்ன பேசுறாங்கன்னும் தெரியும். அதப் பத்தி கவலப்படல. நீயும் அப்படி நினைச்சிராத ப்ளீஸ்.” அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

 

“இன்னிக்குக் காலைல குனிஞ்சு உன் காதுல நான் பேசுனத, இர்ஃபான் ஒரு மாதிரியாப் பாத்து சிரிச்சான். அதான் சத்தமா உன்னக் கிண்டல் பண்ணேன். நீ அதுக்குள்ள பொங்கிட்டே..” என லேசய் சிரிக்க ஆரம்பித்தாள்.

 

“ஸாரி ஆஷா.” பிடித்திருந்த அவளது கைகளை தட்டிக் கொடுத்தான் நரேன்.

 

“சரி, வெள்ளிக்கிழம என்னாச்சு. சொல்லிக் குடுத்த குரு கிட்டயே சரியா பதில் சொல்ல மாட்டேங்குறியே?” கண்ணடித்தாள்.

 

வந்த காபியை அவள் குடித்துக் கொண்டு இருக்க, நரேன் எல்லாவற்றையும் சொன்னான்.

 

“நினைச்சேன். எதோ சம்திங் ராங்னு தெரிஞ்சுது. இல்லன்னா நீ காலைல அவ்ளோ கோபப்பட்டிருக்க மாட்ட. அவ கூட சந்தோஷமா இருந்தத நினைச்சு உலகத்தையே மன்னிச்சிருப்பே” கடகடவென சிரித்தாள். எப்போதும் பார்க்கிற கலகல ஆஷாவாகி இருந்தாள்.

 

“பூங்குழலிக்கு வேற எதோ கோபமும், காரணமும் இருக்குன்னு நினைக்கேன்” என்றாள்.

 

“இதைத்தான் பவித்ராவும் சொன்னா..”

 

“பவித்ராவோ, நானோ பூங்குழலியப் பாத்து பேசலாம்னு தோனுது”

 

“ம்… நா சொல்றேனே..” என்று மொபைலில் நேரம் பார்த்து புறப்பட எழுந்தான்.

 

“இப்ப ரொம்ப ஃப்ரீயா ஃபீல் பண்றேன்.” என்ற ஆஷா அவன் கை பிடித்து முத்தம் கொடுத்தாள்.

 

ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தான் நரேன்.

 

“இதுல முழுசும் அன்பு மட்டுந்தான் இருக்கு. செக்ஸ் கிடையாது. பூங்குழலிக்கு அதப் பாக்கத் தெரில” எழுந்தாள்.

 

(தொடரும்)

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமை!! ஆஷாவின் பக்கம் நியாயம் இருப்பது போல்தான் தெரிகிறது.. ஆஷா நரேன் கையில் முத்தம்.. அருமை!! நரேன் ஆஷாவின் மீது possiveness !!!???? என்ன நடக்கும் என்று பார்போம்...!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!