க்ளிக் - 9 (தொடர்கதை)


தங்கள் பெயரை எழுத்துக்களில் மனிதர்கள் பார்த்ததும் அது அவர்களுக்கு உயிர்ப்போடு புலப்படுகின்றன. அந்த எழுத்துக்களில் தாங்களே இருப்பதாகத் தோன்றும்.  பூங்குழலிக்கு  அப்படியிருக்கவில்லை. அது தான்தானா  என்று தோன்றியது. அழைப்பிதழில்  ’பூங்குழலி’ எழுத்துக்களுக்கு உரிய வண்ணமும், ஓளியும் இல்லாமல் போயிருந்தது. மங்கலாக சோபையிழந்து காட்சியளித்தது. இன்னொரு கட்டத்திற்குள் நரேன் பெயர் இருந்தது.  குயின் பக்கத்தில் கிங்காக இப்போதே வந்து உட்கார்ந்திருந்தான். நிஜமாகவே தனக்கு திருமணம் ஆகப் போகிறது, அதுவும் ஒரு மாதத்தில் என்பது உறைத்தது.

 

“நல்லாயிருக்கா?” நரேன் கேட்டான். முகம் பூராவும் பரவசமும், பெருமிதமும்  இருந்தது.

 

“ம்” லேசாய் புன்னகைத்தாள். அது அவனுக்கு போதவில்லை போல.

 

“செமயா இருக்குல்ல” கேட்டு, இவளிடமிருந்து வாங்கி இன்னொருமுறை ஆசையாய் பார்த்துக்கொண்டான்.

 

“போகும்போது தர்றேன்” என பைக் கவரில் வைத்தான். மணலில் இருவரும் மெல்ல நடந்து கடலை நோக்கிச் சென்றார்கள்.

 

“நமக்கு வீடு பாத்துட்டிருக்கேன்” என்றான்.

 

“ஓ…” அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் கடலின் திசையில் தூரத்தில் தன் பார்வையை செலுத்தினாள். காற்றில் பறந்த முடியைச் சரி செய்தாள்.

 

“பூங்குழலி….” அழைத்தான். அக்கறையோடும் நெருக்கமாகவும் அவன் குரல் கேட்டது. திரும்பினாள்.

 

“எனி ப்ராப்ளம்?” முதல் தடவையாக இவள் கண்களை உற்றுப் பார்த்தான் நரேன்.

 

“இல்ல…” நெற்றி சுருங்க தலையசைத்தாள்.

 

“ஆபிஸ்ல ஒர்க் எப்படி போய்ட்டு இருக்கு”

 

“ம்…. நல்லாத்தான் போய்ட்டு இருக்கு.” கைகளை கட்டிக்கொண்டு அருகே மெல்ல நடந்து கொண்டிருந்தாள் பூங்குழலி.

 

“எங்க ஆபிஸ்ல போன வருசம் வரைக்கும் டீம் லீடரா இருந்தவன், வெளியேப் போய் சின்னதா ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிச்சான். இப்ப எங்களோட கிளையண்ட் அவன். கொலையா கொல்றான். தாங்க முடில.”

 

“என்னோட ரூம்மேட் ஸ்ரீஜாவும் இது போல ஒரு அனுபவத்தைச் சொல்லியிருக்கா”  

 

தனக்கும் தெரியும் என்றது போல் இருந்தது இவளது தொனி. பேச்சைத் தொடராமல் நரேனும் அமைதியானான். மணற்பரப்பில் கால்கள் அழுந்தியதால் மெல்ல அடியெடுத்து நடந்தார்கள். அங்கங்கு மக்கள் உட்கார்ந்தும் நடந்துகொண்டும் இருந்தார்கள். ததும்பி, தவித்து, இரைந்து அலைகள் அடித்த கரையிலிருந்து போகப் போக அடர் நீலமாய் எல்லையற்று அசைந்த கடலின் முன்னே எல்லோரும் பொடிப்பொடியாய் இருந்தார்கள். குழந்தைகளின் குரல்களே காற்றின் இரைச்சலையும் மீறி கேட்டது. கடற்கரை என்றாலே குழந்தைகள் குதூகலமாகி விடுகிறார்கள். குதூகலமாவதற்கு குழந்தைகளாக வேண்டும் போலிருக்கிறது.

 

தன்னிடம் குழந்தைத்தனம் இல்லையோ என்று  தன்னையே கேட்டுக்கொண்டாள் பூங்குழலி. சின்ன வயதில் எப்போதும் ஆட்டமும் பாட்டமுமாய் இருந்தவள்தான். சொந்தத்தில்,  அக்கம் பக்கத்தில் எல்லோரையும் ரசித்து கொஞ்ச வைத்த இவளது விளையாட்டுத்தனங்கள் எங்கேயோ மாயமாகி விட்டிருந்தன. ரவிச்சந்திரன் இறந்த பிறகுதான் அடங்கி, அமைதியாகி விட்டதாக பத்மாவதி பாட்டி  ஒருமுறை சொன்னார். கல்லூரிக்கு போனதிலிருந்து சித்ராவும் இவளை குழந்தையாகப் பாவிக்காமல், ஒரு மரியாதையோடு பார்த்தார். ஸ்ரீஜா மட்டுந்தான் குதூகலமான சமயங்களில்  “பேபி” என்று  இவளை அழைக்கிறாள்.

 

அடுத்த கணம் குறித்து குழந்தைகள் யோசித்துப் பார்ப்பதில்லை. பசித்தால் அழுகின்றன. பசிக்குமே என்று அழுவதில்லை. எதிர்காலம் குறித்து யோசிக்கத் தோன்றியதும் மனிதர்கள் குழந்தைத்தனத்திலிருந்து மெல்ல வெளியேற ஆரம்பிக்கிறார்கள். எதாவது ஒன்றில் ஆழ்ந்து சிந்திக்கும்போது மனிதர்கள் குழந்தைத்தனத்தை இழந்து போகிறார்கள். இன்னும் சிலர் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக  குழந்தைத்தனத்தை  வேண்டுமென்றே மறைத்துக் கொள்கிறார்கள். டீம் லீடர் பாஸ்டஸ் லியோ மாதிரி. எது எப்படியிருந்தாலும் குழந்தைத்தனத்தை இழப்பது  மனிதர்களை பீடீத்த சாபம்தான்.

 

அந்த மனிதர்கள் இயல்பாக எல்லோரோடும் கலந்து பழகுவதில்லை. உறவுகளிலும் தொடர்புகளிலும் ஒரு எல்லையை வரையறுத்துக் கொள்கிறார்கள். அதைத் தாண்டி அவர்களும் போக மாட்டார்கள். மற்றவர்களையும் தாண்டி வர அனுமதிக்க மாட்டார்கள். நரேனையும் அப்படித்தான் அனுமதிக்காமல் இருக்கிறோமோ என்று தோன்றியது..

 

நரேனிடம் இருந்த குழந்தைத்தனத்தையும், கொண்டாட்ட மனநிலையையும் இவள் சிதைத்துக் கொண்டு இருப்பதாக வருத்தம் கொண்டாள். மனிதர்களுக்கு அவர்கள் இழந்துபோன குழந்தைத்தனங்களை  மீட்டித் தந்துவிடும் கடல் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வந்தது.  ஏன் தனக்கு அப்படியெல்லாம் நிகழவில்லை என்று தவித்தாள்.

 

யாருமில்லாமல் இருந்த இடம் காண்பித்து  “அங்க உக்காருவமா?” என்றான் நரேன். சரியென்று தலையாட்டினாள் பூங்குழலி.

 

உட்கார்ந்து இருவரும்  கடலையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களைத் தாண்டி ஒடிய இரண்டு குழந்தைகளின்  கால்கள்  அவர்கள் மீது மணலை வாரி இறைத்தன. தட்டிக்கொண்டார்கள். நரேனின் பார்வை தன் மீது குறுகுறுவென அலைவதை உணர்ந்தாள்.

 

“வந்ததிலிருந்து பாக்குறேன் பூங்குழலி, மூடியாவே இருக்க. என்னாச்சு?”

 

“ஒன்னும் இல்ல நரேன்.” குனிந்திருந்தவள் நிமிர்ந்தாள். அவன் முகத்தில் ஏக்கம், ஆதங்கம் எல்லாம் அப்பியிருந்தது.

 

“உங்கம்மாக் கிட்ட கோபப்பட்டே. எங்கம்மாவைக் கிண்டல் பண்ணே. எனக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. சரி, எதும் ஆபிஸ்ல ப்ராப்ளம்னு நினைச்சேன்.  கேட்டேன். ஏங்கிட்ட ஃப்ரீயா பேச மாட்டேங்குற. நிச்சயம் செய்த பிறகு மொத தடவையா நம்ம ரெண்டு பேரும் மட்டும் சந்திச்சிருக்கோம். வெளியே வந்துருக்கோம்.”  என்று மேலும் எதோ சொல்ல வந்து நிறுத்திக் கொண்டான்.

 

அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். “ம்.. இன்னும் எதோ சொல்ல வந்தீங்க…” என்றாள்.

 

“யார் மேல உனக்கு கோபம்?” எல்லாவற்றையும் கொட்டி விட்டது போலிருந்தது அவனுக்கு. 

 

“யார் மீதும் கோபம் இல்ல நரேன். என் மீதுதான் கோபம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கல்யாணம், நீங்க, உங்க அம்மா, அப்பா எல்லோரும்  திடீரென்று வந்த மாதிரி இருக்கு. ம்… எப்படி சொல்றது… ஆங்… நீங்க சட்டென்று லெஃப்ட் க்ளிக் பண்ணி எண்டர் ஆகிட்டீங்க. நா ரைட் க்ளிக் பண்ணியிருக்கேன். என்ன காட்டுதுன்னு பாத்துட்டு இருக்கேன். அவ்வளவுதான். நீங்க இதை புரிஞ்சுக்கிடணும்”

 

தான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டது போலிருந்தது. நரேன் இதனை எதிர்பார்க்கவில்லை. அவன் முகத்தில் குழப்பத்தைக் காண முடிந்தது. சரியாக புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை. யோசிக்கட்டும் என்று அமைதியாய் கடலைப் பார்க்க ஆரம்பித்தாள்.

 

“சரி. இன்னும் ஒரு மாசத்தில் லெஃப்ட் க்ளிக் பண்ணிருவியா? ” சிரித்துக் கொண்டே கேட்டான்.

 

“தெரில..” சிரித்தாள்.

 

“அடுத்த மாசம் கல்யாணம்!”

 

“நாம ரெண்டு பேரும் மொத தடவ  பார்க்கும்போதே உங்கக் கிட்ட சொல்லியிருக்கேன். நமக்குள்ள ஃபார்மாலிட்டிஸ் தேவையில்ல. அட்டேச்மெண்ட் வரணும். இப்பவும் அதத்தான் மீன் பண்றேன். இந்த மோதிரம், கல்யாணம் எல்லாம்  ஃபார்மாலிட்டிதான?”

 

“அப்ப கல்யாணம் வேண்டாமா?” கொஞ்சம் பதற்றத்தோடுதான் கேட்டான். அவனைப் பார்க்க பாவமாகவும் இருந்தது.

 

“அடடா, உங்களுக்கும் எனக்கும் இடையேதான் ஃபார்மாலிட்டிஸ் தேவையில்லன்னு சொல்றேன். எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும்  உங்க அப்பா அம்மாவுக்கும் அது தேவையாய் இருக்கே?”

 

புரிந்தும் புரியாமலும் இருந்தது. கூடவே ஒரு நிம்மதி வந்தது போலிருந்தது நரேனுக்கு. ”நாம ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” சட்டென்று கேட்டான். 

 

இதெல்லாம் அவன் ரொம்ப திட்டமிட்டு வைத்திருந்த சமாச்சாரம் என்பது புரிந்தது. சிரித்துக் கொண்டாள். “ஷ்யூர்… கம் ஆன்” என்று அவன் அருகில் நகர்ந்து உட்கார்ந்தாள். அவனும் நெருக்கமாக உட்கார்ந்தான். வலது கையில் செல்போனை உயர்த்திப் பிடித்துப் பார்த்தவன் ஒருகணம் திரும்பி இவளைப் பார்த்தான். இடதுகையை எடுத்து இவள் தோளில் போட்டுக் கொண்டான்.  தோள்களை குலுக்கியவாறு புன்னகைத்தாள். அவனும் புன்னகைத்தான். ’க்ளிக்’ செய்தான். “தேங்க் யூ” என்றான்.

 

“எதுக்கு தேங்ஸ்” கேட்டாள்.

 

“ம்….. செல்பி எடுக்க உடனே ஒத்துக்கிட்டதுக்கு.”

 

“ஹா..ஹ்…ஹா…ஹா..” என சத்தம் போட்டு சிரித்தாள் பூங்குழலி.

 

அவன் ஆச்சரியமாய் இவளைப் பார்த்திருந்தான். ”இத மாரி சிரிச்சுக்கிட்டே ரைட் க்ளிக் பண்ணிப் பாக்கலாமே.” என்றான்.

 

திரும்பவும் வாய்விட்டு சிரித்தாள். சட்டென்று அதையும் க்ளிக் செய்தான். பின் குனிந்து போனில் எடுத்த படத்தை பார்க்க ஆரம்பித்தான்.

 

தன்னை மீறி அப்படி சிரித்தது இவளுக்குப் பிடித்திருந்தது. ஸ்ரீஜாவோடு ரெண்டு வருசத்துக்கு முன்னால் மெரீனாவுக்குச் சென்றிருந்த போது இருவரும் சிரித்துக் கிடந்தது நினைவுக்கு வந்தது. அன்றைக்கு அலையோடு விளையாடி, நனைந்து குழந்தைகளாகிப் போயிருந்தார்கள். பிறகு உட்கார்ந்து இவளது கைகளைப் பிடித்துக்கொண்டு பேசாமல் கடலையேப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஸ்ரீஜா. அமைதியாய் உட்கார்ந்திருந்தாலும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருந்ததை கைகள் சொல்லின. மங்கலான வெளிச்சத்தில் முகத்தை உற்றுப் பார்த்தபோது கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அவள் தோளை அசைத்து “ஸ்ரீ, என்னாச்சு” என பூங்குழலி கேட்டாள். அவள் எந்தப் பதிலும் சொல்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.  இருட்டியிருந்தது. இருவரும்  எழுந்து கடலை விட்டு சாலை ,வாகனங்கள், கட்டிடங்கள் நோக்கி நடந்தார்கள். வெளியே வந்ததும் ஸ்ரீஜா தூரத்துக் கடலை திரும்பிப் பார்த்தாள். இருட்டில் இரைச்சல் கேட்டுக்கொண்டு இருந்தது. “கடவுளிடம் பேசுவதை விட கடலிடம் பேசலாம்” முணுமுணுத்தாள்.

 

அன்றைக்குத்தான் இவளை முதல் முறையாக பப்புக்கு அழைத்துச் சென்றாள். காலியாயிருந்த மேஜையில் உட்கார்ந்து ஆர்டர் செய்தாள். தங்கள் கம்பெனியிலும் ஃப்ரைடே பார்ட்டிகள் குறித்து பூங்குழலி அறிந்திருந்தாள். ஒன்றிரண்டு முறை கலந்து கொண்டாலும் டிரிங்ஸ் எடுத்துக் கொண்டதில்லை. அன்று என்னதான் அதில் இருக்கிறது என ஒரு பெக் ருசி பார்த்தாள்.


ஸ்ரீஜா நிறைய பேசினாள். அப்பா இன்னொரு பெண்ணுடனும் வாழ்ந்தது, எப்போதும் குடித்துவிட்டு சண்டை போட்டது, அம்மாவும் ஒரு  டிரைவரோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தது, அம்மாவைப் பெற்ற பாட்டி அம்மாவிடம் சண்டை போட்டு கைக்குழந்தையாயிருந்த ஸ்ரீஜாவை துக்கிக்கொண்டு வந்து வளர்த்தது என நீண்ட கதை. அவளது குரலில் துயரமும் வலியும் இருந்தது. ‘கடலிடம் பேசியதை பூங்குழலியிடம் பேசிவிட்டேன்..” என சிரித்தாள். எல்லாம் பேசி முடிக்கும்போது மூன்று சிகரெட்  அடித்திருந்தாள்.

 

”வாட்ஸ் அப்பில் போட்டோ அனுப்பியிருக்கேன்.” என்றான் நரேன்.

 

“பார்க்கிறேன்” என்று மொபைலில் கோடுகள் போட்டாள். வாட்ஸப் போய் பார்த்தாள். படங்கள் நன்றாக இருந்தன. அளவான புன்னகையோடு இரண்டு பேரின் கண்களிலும்  எதையோ அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. இவள் மட்டும் தனியே அண்ணாந்து சிரித்தபடி இருந்த, அடுத்த போட்டோ ரொம்ப அழகு. வரிசையாக பற்களும், கன்னங்குழியும் தெரிய  அவ்வளவு இயல்பாக இருந்தது. “தாங்ஸ்” என்றாள்.

 

“இந்த மூடோடு எதாவது சினிமாவுக்குப் போலாமா?” மெல்ல கேட்டான்.

 

“வேண்டாம், இங்கயே நல்லா இருக்கு” கடலைப் பார்த்தாள்.

 

அவன் தலையாட்டிக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் போனில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.  பூங்குழலி அவன் முகத்தைப் பார்த்தாள். “சரி, போகலாம். எந்த படத்துக்கு?”  கேட்டாள்.

 

சட்டென்று முகமெல்லாம் பிரகாசமாக “ ஆண்டவன் கட்டளை. விஜய் சேதுபதி. இன்னிக்குத்தான் ரிலீஸ்..” படபடத்தான்.

 

“இன்னிக்கு ரிலீஸா. எப்படி டிக்கெட் கிடைக்கும்?”

 

“ம்… ஒருவேள போனாலும் போக வேண்டி இருக்கும்னு டிக்கெட் ஏற்கனவே புக் பண்ணி வச்சிருந்தேன்”  இழுத்தான்.

 

பூங்குழலி திரும்பவும் சிரித்தாள். இவன் ஒரு ஆள்தான் என நினைத்துக் கொண்டு எழுந்தாள். படம் போகிற அவசரத்தில் இவளை விட்டு முன்னால் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

 

இருட்ட ஆரம்பித்திருந்தது. சோடியம் விளக்குகள் எரிந்தன. சாலையில் நெரிசலும், இரைச்சலும் அதிகமாயிருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்துதான் போக வேண்டியிருந்தது. சிக்னலில் முட்டி நின்று, வாட்சைப் பார்த்து எரிச்சலடைந்தான்.  

 

கடற்கரையில் எடுத்த தனது போட்டோவை மொபைலில் திரும்ப ஒருமுறை பார்த்துக் கொண்டாள். நரேன் அவனது அம்மாவுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி இருப்பான்  என்பது அப்போதே தெரிந்திருந்தது. ஏன் நமது அம்மாவுக்கு அனுப்பவில்லை என்றும் அம்மாவை கஷ்டப்படுத்த வேண்டாம் என்றுதானே இந்த கல்யாணத்துக்கே ஒப்புக்கொண்டோம் என்றும்  நினைத்துக் கொண்டாள். அப்பா இறந்த பிறகு எல்லாவற்றுக்கும் தாத்தாவையும், பாட்டியையும், மாமாவையும் எதிர்பார்த்திருந்த அம்மாவுக்கு இந்த சின்ன சந்தோஷத்தை கொடுப்பதில் என்ன யோசனை எனத் தோன்றியது. பெண்கள் எப்போதும் தங்களைச் சூழ்ந்திருக்கும் நெருக்கடிகளால்  முடிவெடுக்க மட்டுமல்ல, சந்தோஷப்படவும் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் போலும்!

 

தியேட்டர் வளாகத்தில் இவர்கள் நுழையும்போது மணி கிட்டத்தட்ட ஆறே முக்கால் ஆகியிருந்தது. ரித்திகாசிங் பைக் ஓட்டியபடியும் பின்னால் திரும்பிப் பார்த்தவாறு பெரிய தலையோடு விஜய்சேதுபதியும் போஸ்டரில் இருந்தனர்.

 

அவசரமாய் படிகள் ஏறி, டிக்கெட் காண்பிக்கவும் நரேனின் போன் அடித்தது. எடுத்து, ”ஆமாம்மா” என்றான். “தாங்ஸ்மா” என்றான். திரும்பவும் “ ஆமாம்மா”.  “படம் பாக்க வந்திருக்கோம்”. “ஆண்டவன் கட்டளை”. “தாங்ஸ்மா.”  முடித்துக் கொண்டான். இவள் அருகில் காத்துக்கொண்டு இருந்தாள்.

 

 மூடியிருந்த கதவைத் திறந்தார்கள். சில்லென்று இருந்தது. இருட்டுக்குள் சின்னதாய் இருந்த வெளிச்சத்தில் தங்கள் இருக்கைகளைப் பார்த்து உட்கார்ந்தார்கள்.  படம் அப்போதுதான் ஆரம்பித்திருக்க வேண்டும்.  

 

விஜய் சேதுபதி சென்னையில் வீடு தேடும் படலத்தில்  நரேன் நிறைய சிரித்தான். செயற்கையாகவும் அதிகமாகவும் தெரிந்தது. இருக்கையில் இவள் கை வைக்க வசதியாக, தனது கையை அதில் வைக்காமல் இருந்தான். ஏற்கனவே கைகளை கட்டியபடி இருந்தவள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அசையாதிருந்தாள். திரையிலிருந்து சிதறும் வெளிச்சத்தில் இவளது முகத்தை, கழுத்தை, மார்பை, தொடையை அவன் அவ்வப்போது பார்த்துக் கொண்டது தெரிந்தது. அவனது மூச்சுச் சத்தம் தனியாக கேட்ட மாதிரியும் இருந்தது.

 

இவள் இருக்கைகளில் கைகளை வைத்தாள். சிறிது நேரத்தில் இவளது கைகளை தொட்டபடி இருக்கையில் அவன் தனது கையை வைத்தான். இவள் அப்படியே இருந்தாள். மெல்ல இவளது கையைப் பற்றிக் கொண்டான். சூடாயிருந்தான். லேசாய் சிரிப்பு வர அவனைப் பார்த்தான். திரையை சலனமற்று பார்த்தபடி இவளது உள்ளங்கையை விரல்களால் தடவிக்கொண்டு இருந்தான்.  அவனது கை என்னவோ போலிருந்தது. கையை மெல்ல இழுத்துக் கொள்ள முற்பட்டாள். அவன் இறுகப் பற்றியிருந்தான். இழுத்து அவன் முகம் அருகே கொண்டு சென்று, மேவாயால் கையில் உரசினான். ஒரு முத்தம் கொடுத்தான். அப்படியே வைத்திருந்தான். இன்னொரு முத்தம் கொடுத்தான். திரும்பி அவனது முகத்தைத் தெளிவாய் பார்த்தாள். அவன் தலை நிமிரவே இல்லை.  இவளது உள்ளங்கைக்குள் முகத்தை வைத்திருந்தான். சத்தமாய் மூச்சு விட்டான். இவளும் கிளர்ச்சியடைந்தாள்.

 

அந்த இருட்டுக்குள் அவனது அம்மாவும், இவளது அம்மாவும் பாட்டியும் இருவரையும் உற்றுப் பார்த்துக் கொண்டு இருப்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது. கோவிலுக்குப் போக வேண்டும் என இன்றைக்கு இருவரையும் சந்திக்க வைத்ததும் அவர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பதும் இதற்குத்தான் என தோன்றியது. ஆண் தொட்டுவிட்டால் பெண் காலத்துக்கும் மாறமாட்டாள் என்பது அவர்கள் நினைப்பாய் வந்து உறுத்தியது. சினிமா பார்க்க என்று நரேன் ரிசர்வ் செய்திருந்தது, அவசரம் அவசரமாக படிகளில் ஏறியது எல்லாம் ஒருமாதிரி அருவருப்பாய்த் தெரிந்தது. "மாப்பிள்ள மனம் கோணாம நடந்துக்க” என பாட்டி சொன்னதும், “எல்லாம் நல்லபடி நடக்கணும்” என அம்மா சொன்னதும் வேறு அர்த்தங்களோடு கேட்டன. கேவலமாய் உணர்ந்தாள்.

 

கைகளை இழுத்துக் கொள்ள முயன்றாள். அவன் விடவில்லை. முத்தமாய் கொடுத்துக் கொண்டு இருந்தான். “இது ரைட் க்ளிக்கா, லெஃப்ட் க்ளிக்கா?” அமைதியாக கேட்டாள். அவனது இயக்கங்கள் நின்றன. இவளது கைகள் அவனிடம்தான் இருந்தன. “இதையும் உங்க அம்மாவக் கேட்டுத்தான் செய்றீங்களா?” என்றாள். கையை விட்டு விட்டான். அப்படியே உட்கார்ந்திருந்தான்.  எழுந்து வெளியே சென்றான்.

 

பத்திரிகையாளர் பேட்டி ஒன்றில் அரசியல்வாதியை வெளுத்துக் கொண்டிருந்தாள் ரித்திகாசிங். கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்த்தாள். பிறகு இவளும் எழுந்து வெளியே சென்றாள். நரேன் தனியாக ஒரு தூண் அருகே நின்றபடி வெளியே பார்த்துக்கொண்டு இருந்தான். அருகில் சென்று, “நா கிளம்புறேன்” என்றாள்.

 

இவளது கண்களைப் பார்க்க முடியவில்லை. மொபைலை எடுத்து பார்த்தபடி, “படம் முடிஞ்ச பிறகு போலாமே”  என்றான்.

 

“இல்ல.  வர்றேன்”

 

எதோ சொல்ல வந்தவன் வார்த்தைகள் சரியாக வராமல் திணறினான்.

 

“பை” கையசைத்தாள்.

 

“நா கொண்டு வந்து ஹாஸ்டல்ல விடுறேன்”

 

“நோ பிராப்ளம். நீங்க படம் பாருங்க. நா ஆட்டோ பிடிச்சுப் போயிருவேன்” நடக்க ஆரம்பித்தாள். வெளியே வந்த போது நிம்மதியாய் இருந்தது. தியேட்டர் வளாகத்தில் காற்று சுகமாய் வீசியது. இருட்டை மறைத்துக் கொண்டு மின்சாரத்தின் வெளிச்சங்களில் நகரம் மின்னிக்கொண்டிருந்தது.  ஆட்டோ ஒன்றை நிறுத்தி போக வேண்டிய இடம் சொல்லி ஏறிக் கொண்டாள்.

 

பரந்து கிடந்த கடற்கரையில் நரேனிடம் தன்னைப் பற்றி தெளிவாக சொன்னதும், அவன் ஓரளவு புரிந்து கொண்டதும்  நிம்மதி தந்திருந்தது. தியேட்டரின் இருட்டில் அவன் ஆளே வேறாகி இருந்தான். கொஞ்சம் இயல்பாய் நரேனிடம் பழகவும், சிரிக்கவும் ஆரம்பித்தவுடன் அவன் எதை நோக்கி நகர்ந்தான் என்பதை பார்த்துவிட்டாள். ஏன் இன்னும் கொஞ்ச காலம் சிரித்துப் பேச, பழக எல்லாம் நிதானம் இருக்காதா?

 

ஆட்டோவை நிறுத்தி லாட்ஜில் நுழைந்தாள். அவ்வளவாக நடமாட்டங்கள் இல்லாமலிருந்தது. அறை உள்ளுக்குள் பூட்டி இருந்தது. தட்டி காத்திருந்தாள். ஸ்ரீஜா கதவைத் திறந்து இவளைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அவள் எங்கோ கிளம்பிக்கொண்டு இருப்பது தெரிந்தது. பவுடரும், செண்ட்டும் ரூம் முழுக்க மணத்தது.

 

பூங்குழலி ஹேண்ட் பேக்கை படுக்கையில் வைத்து, தலையணையை உயர்த்தி வைத்து, கண்ணை மூடி சாய்ந்தாள்.

 

“பூங்ஸ், ஊருக்குக் கிளம்பறேன். ஒன்பது மணிக்கு பஸ். இந்த சனி ஞாயிறு நா இல்லாம மேனேஜ் பண்ணிக்க”

 

இவள் புன்னகைத்துக் கொண்டே, எழுந்து உட்கார்ந்து மொபைலை எடுத்துப் பார்த்தாள். கடற்கரையில் எடுத்த படங்கள். இவள் சிரித்துக் கொண்டு இருந்ததை இப்போது பார்க்கவே பிடிக்கவில்லை.  திரும்பவும் சாய்ந்து கொண்டாள்.

 

“என்ன பூங்ஸ், என்னாச்சு..?”

 

“நரேனுக்கும் எனக்கும் செட் ஆகும்னு தோணல” மொபைலை வைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

 

“ஹேய்… வாட் ஹாப்பண்ட்.” அருகில் வந்து உட்கார்ந்தாள் ஸ்ரீஜா.

 

“ஸ்ரீ, நானும் உங்கூட ஊருக்கு வரட்டுமா?”

 

(தொடரும்)

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமையாக போகிறது கதை... திருமணம் நடக்குமா???!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே! தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. தொடர்வோம்.

   நீக்கு
 2. பீச் பக்கம் அவர்கள் பக்கவாட்டில் அமர்ந்து பார்த்தது போல ஒரு உணர்வு. அருமையாக சென்று கொண்டிருக்கிறது. ஆர்வமாக அடுத்த பகுதிக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உற்சாகமளிக்கும் தங்கள் கருத்துக்கு நன்றி.
   அடுத்த அத்தியாயம் இன்று வெளியாகிவிட்டது.

   நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!