க்ளிக் - 16 (தொடர்கதை)


அந்த அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்திற்கு லிஃப்டில் சென்று பி2 எழுத்துக்களைத் தேடி காலிங் பெல்லடித்து நின்றிருந்தான் நரேன். எல்லா வீட்டின் கதவுகளும் உள்ளுக்குள் பூட்டி இருந்தன.

 

நடந்தது ஒரு அந்தரங்கமான விஷயம். இப்போது எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது. விடாமல் அலைக்கழிக்கப்படுவதைத் தாள முடியவில்லை. இரவில் அம்மாவிடம் கோபப்பட்டு எரிந்து விழுந்திருந்தான். அதுவும் வதைத்தது. தணியவேத் தணியாமல் பூங்குழலிக்கு அப்படியொரு கோபம் ஏன் என்பது பிடிபடவில்லை. கிஷோரும், பிரசாந்த்தும் எப்போது வந்தார்களோ? இவன் எழுந்திருக்கும் போது தூங்கிக்கொண்டு இருந்தார்கள். கடற்கரையில் எடுத்த செல்பியை அவர்களுக்கும் அனுப்பி இருந்தான். மேற்கொண்டு  அவர்கள் கேட்டால் என்ன பேச? விழிக்கும் முன்னால் எங்காவது ஓடிவிட  வேண்டும் போலிருந்தது. போதாதற்கு காலையில் அப்பாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் துளைத்துக் கொண்டிருந்தன. அசிங்கமாக உணர்ந்தான். கண்ணாடியில் தன் முகம் பார்க்கவேப் பிடிக்கவில்லை. மேலும் அவமானங்களை சந்திக்காமல்  எலெக்டிரிக் ட்ரெய்னில் விழுந்தோ, எதாவது மருந்தை கிருந்தை விழுங்கியோ  ஒரேயடியாய் போய்விடலாம் என்று கூட தோன்ற ஆரம்பித்தது. பயம் வந்தது. கிளம்பி விட்டான்.

 

கதவு திறந்தது. பவித்ராதான். இவனைப் பார்த்ததும், “ஹேய், நரேன்!” என ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் முகமெல்லாம் காட்டி வரவேற்றாள். சமையலறையில் இருந்த பார்வதிக்கு, “அம்மா! யாரு வந்து இருக்கான்னு பாருங்க” குரல் கொடுத்தாள். இவனுக்கு நிம்மதியாகவும் இருந்தது. அவஸ்தையாகவும் இருந்தது. தன் மீது எவ்வளவு அன்பும், அக்கறையும் அவளுக்கு என்று உணர்ந்தான். அதுதான் இங்கு அழைத்து வந்திருக்க வேண்டும்.

 

“என்ன அப்படியே நிக்குற.” பவித்ரா இவனது கைகளைப் பிடித்துக் கொண்டு ”உள்ளே வா” அழைத்துச் சென்றாள். மீண்டும் குழந்தையாகி அவள் பின்னால் சென்றான். பவித்ராவைப் போல பூங்குழலியும் இருக்கக் கூடாதா என்றிருந்தது. பவித்ராவுக்கு சின்ன வயதில் இருந்தே இவனைத் தெரியும். பூங்குழலிக்கு எத்தனை நாளாகத் தெரியும்? என்று நினைக்கவும் பூங்குழலியிடம் நடந்து கொண்டது போல் பவித்ராவிடம் நடந்து கொண்டதில்லை  என்பதும் உறைத்தது. சின்ன வயதிலிருந்து பார்த்துப் பார்த்துப் பழகிய கண்களில் இதுவரை அவளது உடல் குறித்த பிரக்ஞையும் கள்ளமும் புகுந்ததில்லை. ச்சே, எப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது என உடனே கேவலமாக உணர்ந்தான்.

 

“ம்… பூங்குழலியோட நேத்து பிரதர் செம்ம மூட்ல இருந்தாப்பல தெரிஞ்சுது” இவனைப் பார்த்தாள். சலனமில்லமல் இருந்தான். இருவரும் சோபாவில் உட்கார்ந்தார்கள். இவன் முகத்தைக் கூர்ந்து பார்த்து, “அந்த போட்டோவ பாத்ததும், நம்ம நரேன் வளந்துட்டான்னு தோணிச்சு.ஹேய், மேன்” கலகலவென இருந்தாள்.

 

பார்வதி சமையலறையிலிருந்து வெளியே வந்து, “வாப்பா நரேன். எப்படியிருக்கே?” என்றார். “நல்லாயிருக்கேன் ஆண்ட்டி. நீங்க எப்படியிருக்கீங்க.” எழுந்து நின்றான்.

 

“உக்காருப்பா. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கா?” புன்னகைத்தார். ஒன்றும் சொல்லாமல் நெளிந்தான்.

 

“அம்மா, சனி ஞாயிறுக்கு வாயேன்னு எத்தனை வாரம் கேட்டிருப்பீங்க? நானும்தான் கூப்பிட்டேன். வந்தானா? இப்ப பாருங்க தன்னாலே வந்திருக்கான். குடும்பஸ்தன் ஆகப் போறான்ல. பொறுப்பு?” கலாய்த்தாள். சோபாவின் ஒரு ஓரமாய் நரேன் அமர்ந்தான்.

 

“நம்மளப் பாத்தாதான் சின்னப்பையன் மாதிரி கூச்சம். அமைதி எல்லாம். வரப் போறவக் கிட்ட ஆளு வேற லெவல்ல இருக்காரு.” சிரித்தாள். சிரிப்பது போல எதோ சம்பந்தமில்லாமல் செய்து கொண்டிருந்தான். இவன் ரசிக்கவில்லை என்பதை பவித்ரா கவனித்தாள்.

 

“சாப்பிடுறியா நரேன்” பார்வதி கேட்டார்.

 

“இல்ல, பரவாயில்ல ஆன்ட்டி”

 

“என்ன பரவாயில்ல. நாங்களும் இன்னும் டிபன் பண்ணல பிரதர். வா சேந்து சாப்பிடுவோம்.”  இவன் கன்னத்தில் செல்லமாய் தட்டினாள். சரி என்பதாய் தலையாட்டினான். பார்வதி உள்ளே சென்றார். அம்மாவுக்கு உதவி செய்ய பவித்ராவும் எழுந்தாள்.

 

“பவிக்கா..” அவள் கையைப் பிடித்தான்.  

 

ஆச்சரியமாக நரேனின் முகத்தைப் பார்த்து, “என்னடா?” கனிவாக கேட்டாள்.

 

“நீ உக்காரேன்.” என்றான். நரேனின் முகம் வெளிறி இருந்தது. சொல்ல முடியாத வேதனையை அடக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

 

“என்ன ஆச்சு நரேன்.” துடித்துப் போனாள். பக்கத்தில் அமர்ந்து ஆதரவாய் இவன் முதுகில் கை வைத்தாள்.

 

 “எனக்கே என்னைப் பாக்க அசிங்கமாயிருக்கு..” அதற்கு மேல் சொல்ல முடியாமல் முகத்தை கைகளால் மூடிக்கொண்டான்.

 

“நரேன்.” இவன் தோளைப்  பிடித்து அசைத்து மேலும் நெருக்கமாக உட்கார்ந்தாள். “என்னடா…”

 

நிமிர்ந்து முகத்தைப் பார்த்தவன் அழுகையை அடக்கிக் கொண்டு ஈனக்குரலில் நேற்று மாலை  பூங்குழலியை சந்தித்தலிருந்து இன்று காலை மூர்த்தி போன் செய்தது வரை எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தான் “செத்துரலாம் போலயிருக்குக்கா” வாய்விட்டு அழுதான்.

 

“அடச் சீ பைத்தியமே..” கோபத்தில் வெடித்தாள். இவனுக்கு தொண்டை காய்ந்து பேச முடியாமல் இருந்தது. தள்ளி மேஜையில் இருந்த பாட்டிலைப் போய் எடுத்து தண்ணீர் குடித்தான். திரும்ப வந்து உட்கார்ந்தான். தலையைக் குனிந்து கொண்டான்.

 

“இன்னும் நீ அந்த மூனாங் கிளாஸ் பையனாவே இருக்க  உன்னப் போய் பெரிய மனுஷனாய்ட்டேன்னு சொன்னேம் பாரு.” என்றாள்.  தலை நிமிராமல் இருந்தான்.

 

“இப்ப என்ன நடந்து போச்சு. இடிஞ்சு போன மாதிரி இருக்கே.” எழுந்து நின்று குனிந்து இவன் முகத்தைப் பார்த்து கேட்டாள்.

 

“இல்லக்கா… யார் முகத்தயும் பாக்க முடியாம, எதுவும் பேச முடியாம… அவமானமா, அசிங்கமா இருக்கு..” கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டான்.

 

“நரேன்…”

 

“………….. “

 

“நரேன்! இங்க பாரு… பாருன்னு சொல்றேன்ல..”

 

நிமிர்ந்தான். முகத்தில் களையே இல்லை. வறண்டு போயிருந்தான்.

 

“எழுந்து நில்லு.”

 

திரும்பவும் குனிந்தான்.

 

“சொல்றேன்ல. எழுந்து நில்லு.”

 

எழுந்து நின்றான். புரியாமல் அவளைப் பார்த்து விட்டு குனிந்து கொண்டான்.

 

“வா… பவி அக்காவ ஹக் பண்ணு.” கையிரண்டையும் விரித்து நின்றாள்.

 

சித்தம் கலங்கியது போல் இருந்தது. எதுவும் செய்யத் தோன்றாமல் அப்படியே நின்றான். இவன் முகத்தை நிமிர்த்தினாள்  பவித்ரா. அவளது கண்கள் இவனை நேராக பார்த்தன. அவள் முகம் எல்லாம் மலர்ந்து புன்னகைத்து இருந்தது.

 

“கமான் மேன்.”

 

நரேன் பவித்ராவை நெருங்கி பட்டும் படாமல்  அணைத்துக் கொண்டு நின்றான்.

 

“உன்னை அன்பா நேசிக்கிற மனுஷங்கள நினைச்சுக்க. அம்மாவை, அப்பாவை, என்னை, உன்னை, உன் க்ளோஸ் ஃபிரண்ட்ஸை … யாரு வேண்ணா இருக்கட்டும்,. நினைச்சுக்க.” கண்களோடு பேசினாள். கண்ணீராய்க் கொட்டிக் கொண்டிருந்தது இவனுக்கு. ஒரு குழந்தையைப் போல இவன் முதுகில் தட்டிக் கொடுத்தாள். “எனக்குத் தெரியும் நரேன். நீ நல்லவன்.” என்றாள். தன் மீது இதமான காற்று படர்ந்தது போலிருந்தது.

 

“இன்னிக்கு இருக்கும் கஷ்டம் நாளைக்கு இருக்காது. நிச்சயம் ஒரு சந்தோஷம் வரும். அப்போ இந்த இருட்டு காணாமப் போயிரும். இல்ல அதுவே கூட சுகமாக இருக்கும். நீ இருந்தாத்தானே அதைப் பார்க்க முடியும். அனுபவிக்க முடியும். உன்னையும் வெறுக்காத. உலகத்தையும் வெறுக்காத. உனக்குப் பிடிச்சதுன்னு உலகத்துல இருக்கும். அதை பத்திரமா வச்சுக்க. உனக்குன்னு கொஞ்சம் பேர் எங்கயாவது இருப்பாங்க. அவங்கள நினைச்சுக்க.” அவள் பேசப் பேச கரைந்து கொண்டிருந்தான். இளகி அவள் காலடியில் கிடக்க வேண்டும் போலிருந்தது.

 

“எல்லாத்தயும் கிடந்து உனக்குள்ளயேத் தேடாத. நீ ஒன்னும் சிஸ்டம் இல்ல. எல்லாம் உள்ளுக்குள்ள இன்பில்ட்டா இருக்காது. வெளிய பாரு. உன் கேள்விகளுக்கு அங்கதான் பதில் கிடைக்கும். கூசாமப் பாரு.  தைரியமாப் பாரு.” அவனை மெல்ல விலக்கி இயல்பாய் சிரித்தாள். அமைதி திரும்பியவனாய், சரி என ஒப்புக்கொண்டவனாய் சோபாவில் உட்கார்ந்தான்.

 

“எதையும் மனசில் போட்டுக் குழப்பிக்காத. அம்மாவுக்கு எதாவது ஹெல்ப் செய்யணுமான்னு பாக்குறேன். டிவி பாக்குறியா” கேட்டாள். மற்ற சத்தங்கள் எல்லாம் நீங்கி அவல் குரல் மட்டும் தனித்துக் கேட்டது. நிதானத்திற்கு வந்திருந்தான்.

 

“பவிக்கா.. “ என்று எதோ சொல்ல வந்து முடியாமல் மௌனம் காத்தான்.

 

“நத்திங் டு வொர்ரி. இரு வர்றேன்” என இவன் தோளைத் தட்டி உள்ளே சென்றாள்.  

 

“நானும் வர்றேன்” அவள் பின்னாலேயே சென்றான். தரையில் உட்கார்ந்து சப்பாத்திக்கு உருட்டிக் கொண்டிருந்தார் பார்வதி.

 

“அம்மா எழுந்திருங்க, நா செய்றேன்” என பவித்ரா போய் வாங்கிக் கொண்டாள். இவனும் போய் அவளுக்கு எதிரே கீழே உட்கார்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்னால் ஒரு தேவதை போல தன்னை ஆற்றுப்படுத்தியவளா அவள் என்று அதிசயமாக இருந்தது.

 

அவள் சிரித்தாள். “ஞாபகம் இருக்காம்மா. சின்ன வயசுல இதே மாதிரி நம்ம வீட்டு கிச்சன்ல வந்து உக்காந்திருப்பான்ல” கேட்டாள்.

 

பார்வதியும் சிரித்துக் கொண்டார். “அங்க மட்டுமா. காலையில நீ கோலம் போடும்போதும் வந்து முன்னால வந்து உக்காந்திருப்பான். சந்திராவும், அவங்க வீட்டுக்காரரும் கிடந்து கூப்பிட்டுத்தான் பாப்பாங்க. அசைய மாட்டான். நானும் கோலம் போடுறேன்னு இஷ்டத்துக்கு அங்க இங்க புள்ளி வச்சு என்னா பாடு படுத்துவான்.” என்றார்.

 

தரையின் குளிர்ச்சி சுகமாய் இருந்தது. அப்படி உட்கார்ந்திருப்பதும், தன்னைப் புரிந்து கொண்டவர்கள் அருகில் இருப்பதும்  ஆசுவாசப்படுத்தின. வேறு எங்கும் போகாமல் அவர்களோடு இருந்துவிடலாம் போலிருந்தது.

 

நரேனின் ரிங்டோன் சத்தம் ஹாலில் கேட்டது. “உன் மொபைலா?” கேட்டாள் பவித்ரா. மனமில்லாமல் எழுந்து சென்றான். கிஷோர் அழைத்துக் கொண்டிருந்தான். எடுத்தான்.

 

 “ப்ரோ, எங்க இருக்க?”

 

“பவித்ராக்கான்னு சொல்லியிருக்கேன்ல. அவங்க வீட்டுக்கு வந்துருக்கேன்.”

 

“எப்ப வருவே”

 

“தெரில. நீங்க ரெண்டு பேரும் எப்ப முழிச்சீங்க?”

 

“இப்பத்தான். ஹவுஸ் ஓனர் வந்து எழுப்பிட்டாரு. எதோ போட்டோ கேட்டியாமே. அதக் கொடுக்க வந்தாரு. நீ இல்லன்னதும் கொண்டுட்டுப் போய்ட்டாரு.”

 

“சரி. நா வந்து வாங்கிக்கிறேன். இன்னிக்கு என்ன புரோக்ராம்?”

 

“ஒன்னும் இல்ல. தூக்கந்தான். விடிகாலைல வரும்போது மூனு மூன்ற இருக்கும். நீ தூங்கிட்டு இருந்த. பீச்சில எடுத்த போட்டோ சூப்பரா இருந்துச்சு ப்ரோ. அப்புறம் எங்கல்லாம் போனீங்க. என்ன பண்னீங்க? ஜாலிதானா?”

 

“படுத்துத் தூங்கு” அழைப்பைத் துண்டித்தான். வாட்ஸப் பார்த்தான். இவன் அனுப்பிய செல்பிக்கு ஆஷா ஹார்ட்டின் விட்டிருந்தாள். நாளை மறுநாள் ஆபிஸில் அவள் எப்படித் தன்னைப் பார்ப்பாள். பேசுவாள் என யோசித்தவன் டிவி பக்கத்தில் பார்வதி ஆன்ட்டி, பவித்ரா, சுந்தரேசன் அங்கிள் மூவரும் இருந்த போட்டோவைப் பார்த்தான். ஊரில் பார்த்த போட்டோதான். பவித்ரா வெளியூரில் தங்கி காலேஜ்க்குப் போன நாட்களில், அவளைக் காண் முடியாமல் எதிர்த்த வீட்டிற்குப் போய் அந்த போட்டோவை ஏக்கத்தோடு பார்த்தது நினைவுக்கு வந்தது. அந்தக் கண்கள் அப்படியே இருந்தன. எத்தனை கொடுமைகளையும், கஷ்டங்களையும் கண்டிருக்கிறது அந்தக் கண்கள். கல்யாணமாகி, முடங்கி, பைத்தியக்காரி பட்டம் கட்டி அனுப்பப்பட்ட பிறகும் அதே ஓளியோடு கண்கள் இருக்கின்றன. ஊரில் அப்பாவையும், சென்னையில்  தன்னோடு அம்மாவையும் வைத்துக்கொண்டு வாழ்வோடு மல்லுக்கட்டி நிற்கிறாள். கண்கள் வாடிப் போகவில்லை. எதையும் ஒளித்து வைக்காத தெளிவும், அன்பும், அப்படியே நிறைந்து இருந்தன. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இவனுக்கு எவ்வளவு பெரிய ஆறுதலைத் தந்தன.

 

“என்ன அப்படி வச்ச கண் வாங்காம பாத்துட்டிருக்க?” பின்னால் பவித்ராவின் குரல் கேட்டதும் திரும்பினான். அதே கண்களோடு சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

“இந்த போட்டோ பத்தாம் வகுப்பு படிக்கும்போது எடுத்ததுதானே?”

 

“ஆமா, ஞாபகம் வச்சிருக்கியே.”

 

லேசாய் சிரித்துக் கொண்டான். “சப்பாத்தி  போட்டாச்சா..”

 

“உருட்டிக் கொடுத்துட்டேன். இனும அம்மா பாத்துக்கிடுவாங்க.”  என்றவள் குரல் கொஞ்சம் தாழ்த்தி, “தாங்ஸ் நரேன்” என்றாள்.

 

“என்னக்கா?”

 

“ஒரு கஷ்டம்னதும் என்னப் பாக்கனும்னு உனக்குத் தோனியிருக்கே. சந்தோஷமா இருக்கு” புன்னகைத்தாள்.

 

“இப்பவும் எனக்கு ஒன்னு உறுத்திக் கிட்டே இருக்கு. தியேட்டர்ல பூங்குழலிக் கிட்ட நா அப்படி நடந்துக்கிட்டது தப்புதானே?”

 

“தப்புன்னு சொல்ல முடியாது. நேச்சுரல்தான். அது ஒரு இண்டிமஸியான மொமண்ட். உனக்கு  அந்த அர்ஜ் இருந்திருக்க வேண்டாம். நீ அவள சரியா ரீட் பண்ணலன்னுத் தோனுது” நிறுத்தினாள்.  யோசித்தபடியே “உன்னோடு செல்பி எடுக்குறா. முதல்ல சினிமா வேண்டாங்கிறா. பிறகு வர்றா. இயல்பாத்தான் இருக்கு. ஆனா அவள எதோ ரொம்ப டிஸ்டர்ப் செய்யுது. உங்க ஆம்பளப் பையன்னு சொன்னது அடியாழத்துலயிருந்து வந்திருக்கு. அதுக்கு நிறைய அர்த்தம் இருக்கு” சொல்லிக்கொண்டே வந்தவள் திடுமென வாய் விட்டு அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.

 

“என்னக்கா?’

 

“ஒருவேள உனக்கும் பூங்குழலிக்கும் கல்யாணமாயிருந்துச்சுன்னு வச்சுக்க. நீ அவள தொடக்கூட செய்யாம உங்கைய வச்சிட்டு சும்மா இருந்திருப்ப” சொல்லி திரும்பவும் சிரித்தாள். யோசித்துப் பார்க்கும்போது அதுவும் உண்மையாகத்தான் இருந்தது.

 

 “அம்மா, அப்பா முகத்துல நா எப்படி விழிப்பேன். இதுனால கல்யாணத்துல ஒரு  பிரச்சினைன்னா  எவ்வளவு அசிங்கம்?” பரிதாபமாக பார்த்தான்.

 

“லூஸாடா நீ. திரும்பத் திரும்ப அசிங்கம், அசிங்கம்னே சொல்லிட்டிருக்கே. என்ன அசிங்கம் பண்ணிட்டே. அம்மா அப்பாக் கிட்ட சொல்லு. ஆமா தியேட்டர்ல அவ கையப் பிடிச்சு முத்தம் கொடுக்கத் தோணிச்சு கொடுத்தேன்னு சொல்லு. அவளுக்குப் பிடிக்கல. விட்டுட்டேன்னு சொல்லு. ஒன்னு தெரிஞ்சுக்க. தப்புன்னா ஒத்துக்க. தப்பு இல்லன்னா ஒத்துக்காத. சிம்பிள். இப்படிக் கிடந்து அனத்தாத. அதுதான் அசிங்கமாயிருக்கு”

 

அவள் எரிச்சல் பட்டாலும்  மகிழ்ச்சியாகவே இருந்தது. தான் செய்யக் கூடாத தப்பைச் செய்து விடவில்லை என்று நிம்மதியடைந்தான்.

 

கண்ணை மூடி யோசித்தவள், “பூங்குழலி செட் ஆகலன்னு சொல்றதுக்கு தியேட்டர்ல நீ நடந்துக்கிட்டது காரணமில்லன்னு நினைக்கிறேன். அத ஒரு காரணமா சொல்றா. வேற எதோ இருக்கு. அதென்னன்னு தெரியணும்.”  என்றாள். பவித்ராவின் பக்கத்தில் சிறு குழந்தை போல உட்கார்ந்து அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன்.

 

“ம்… இப்ப மூஞ்சு பரவாயில்ல. காலிங் பெல்லடிச்சு கதவத் திறந்ததும் பாத்த மூஞ்சி இருக்கே. சகிக்கல. எதோ பையன் சகஜமில்லாம இருக்கான்னு நினைச்சேன். செத்துப் போகணும்னு சொன்னப்போதான் ரொம்ப பயந்துட்டேன். லூஸூ. இனும எப்பவும் அப்படியொரு நினைப்பே வரக் கூடாது. ஒகேவா?” பவித்ராவின் கண்கள் கலங்கியிருந்தன.

 

 “பவி..” பார்வதி அழைத்தார். பவித்ரா சென்றாள். சிறிது நேரத்தில், “நரேன்! டைனிங் டேபிளுக்கு வர்றியா? டிபன் ரெடி” என்று குரல் கொடுத்தாள்.

 

சாப்பிடும்போது, “எய்யா,. தினமும் வெளியேத்தான சாப்பிடுவ. வீட்டுல சாப்பிடுற மாதிரியா இருக்கும்? இன்னிக்கும் நாளைக்கும் லீவுதான. இங்கேயே இரு” என்றார் பார்வதி.

 

“அதெல்லாம் இருப்பான்.” என்ற பவித்ரா, “நரேன், உள்ள இருக்கும்போது சந்திரா ஆன்ட்டி  போன் பண்ணாங்க. நீ இங்கதான் இருக்கேன்னு சொன்னதும் நிம்மதியாய்ட்டாங்க. அவனப் பாத்துக்குங்கன்னு சொன்னாங்க. பாவமா இருந்துச்சு. நீங்க பொண்ணு வீட்டுல யாருக்கும் போன் பண்ணாதீங்கன்னு சொன்னேன். அதுல கொஞ்சம் வருத்தந்தான் அவங்களுக்கு. ஒரு வாரம் போல இதப் பத்தி யாரும் எதுவும் பேசாம இருந்தா நல்லதுன்னு  சொல்லியிருக்கேன்” என்றாள்.

 

“அம்மா வேற எதுவும் கேட்டாங்களா?”

 

“வேறன்னா… ஓ!” என பார்வதியைப் பார்த்துவிட்டு, “கேட்டாங்க. சொன்னேன்.”

 

தொடர்ந்து சொல்வாள் என எதிர்பார்த்து சாப்பிடாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான். 

 

”என்ன, சாப்பிடல?”

 

“அம்மா என்ன சொன்னாங்க?”

 

“இதுதானான்னாங்க.”

 

”ரொம்ப தாங்ஸ்க்கா” சாப்பிட ஆரம்பித்தான். அப்பாடா என்றிருந்தது. இனி சமாளித்துக் கொள்ளலாம் என தெம்பும் வந்தது.

 

தட்டில் இரண்டு சப்பாத்தியும், கொஞ்சம் தக்காளித் தொக்கும் வைத்துக்கொண்டு டிவியை ஆன் செய்து அதன் முன்னால் உட்கார்ந்தார் பார்வதி.

 

“அங்கிள் பாவம், ஊர்ல தனியா இருப்பாங்கள்ள?” கேட்டான்.

 

“ஆமா. வாலண்டரி ரிடையர்மெண்ட் எழுதிக் குடுத்துட்டு வாங்கன்னா, கேக்க மாட்டேங்குறாங்க.” கவலையோடு சொன்னார் பார்வதி. அவரையேக் கொஞ்ச நேரம் பார்த்திருந்த பவித்ரா  எதோ யோசனையில்  சாப்பிடாமல் இருந்தாள்.

 

“இவளுக்கும் வரனெல்லாம் வருது. கல்யாணம் வேண்டவே வேண்டாங்குறா” பார்வதி அடுத்த கவலையை வெளிப்படுத்தினார்.

 

“வேண்ணா சொல்லுங்க. யு.எஸ்க்கு போறதுக்கு கம்பெனில ஆஃபர் இருக்கு. நாளைக்கே அக்ரிமெண்ட் போட்டுட்டு போயிர்றேன். நீங்க அப்பாவோட ஊருல போய் இருக்கலாம்.” என்று கோபமாகச் சொன்னாள் பவித்ரா.

 

“ஏங்க்கா இப்படி பேசுறீங்க?”

 

“பிறகென்ன? நா யாருக்காக இருக்கேன். அம்மாவுக்காகவும், அப்பாவுக்காகவும்தான். அவங்களே போ, போன்னா. பேசாம அமெரிக்காவை கல்யாணம் பண்ணிட்டு போறேன்.”

 

“நிறுத்தும்மா, நா வாயேத் தெறக்கல” பார்வதி கோபத்தோடு எழுந்து உள்ளே போனார்.

 

நரேன் சிறு பதற்றத்தோடு பவித்ராவைப் பார்த்தான்.  அவளோ சிரித்துக் கொண்டே “தினமும் நடக்குறதுதான். எனக்கு அவங்கள விட்டா கதியில்ல. அவங்களுக்கு என்னை விட்டா கதியில்ல. கொஞ்ச நேரத்துல திரும்பவும் இதே பாட்ட பாடுவாங்க”

 

“பவிக்கா, நீ ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?”

 

”ப்ச் . கல்யாணம் பண்ணி… இன்னொருத்தன் வருவான். எதோ பெரிய தியாகம் செஞ்ச மாதிரி பாப்பான். கொடுமை. இல்லண்ணா என்னை மாதிரி டைவர்ஸான ஒருத்தனப் பாக்கணும். அவ எப்படியிருக்கானோ. எதுவும் இல்லாம பிடிச்ச ஒருத்தனோட எந்த கமிட்மெண்ட்டும் இல்லாம ரிலேஷன்ஷிப்ல இருக்குறது கூட பெட்டர்னு தோணுது.”

 

வருத்தத்தோடும், கொஞ்சம் அதிர்ச்சியோடும் அவளைப் பார்த்தான் நரேன். அந்தக்  கண்களில் எப்போதும் போல் அன்பும்  தெளிவும் அப்படியே இருந்தது. இவனைப் பார்த்து சிரித்தது போலவும் தெரிந்தது.

 

“பவிக்கா… நீ யாரையாவது லவ் பண்றியா?”

 

“ம்… எல்லாரையும் லவ் பண்ணிக்கிட்டுத்தானே இருக்கேன்.” சிரித்தாள்.

 

“ஜோக் அடிக்காத. உன்ன  எல்லோரும் லவ் பண்ணுவாங்க. நீ யாரையாவது லவ் பண்றியா?’

 

“என்னடா இது வரைக்கும் இப்படில்லாம் கேட்டதேயில்ல. திடீர்னு பெரிய மனுஷனாட்டம் ரொம்ப அக்கறையா கேக்குற?

 

“நீ எப்பவும் சந்தோஷமா, சிரிச்சுக்கிட்டு இருக்கணும். அவ்வளவுதான்.”

 

“அப்படின்னா லவ்வே பண்ணக் கூடாது” சத்தம் போட்டு சிரித்தாள்.

 

(தொடரும்)

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!