க்ளிக் - 15 (தொடர்கதை)


முக்கியமான நேரத்தில் ஒருவரின் குரலை கேட்க முடியாவிட்டால் ஏமாற்றமும், இயலாமையும் சேர்ந்து பதற்றம் கொள்ளச் செய்கின்றன. வேறு வழிகள் குறித்து யோசிக்க முடியாமல் போகிறது. செல்போன்கள் இல்லாத காலத்தில் கூட இப்படி அவஸ்தைப்பட்டதாக சித்ராவுக்குத் நினைவில்லை. கலைச்செல்வன் உண்டாகியிருந்தபோது எதோ யூனியன் வேலையாகப் போன ரவிச்சந்திரன் இரண்டு மூன்று நாட்களாய் வரவில்லை. அதிகமாக வாந்தி எடுத்துக் கொண்டு தனியாய் வீட்டில் சுருண்டு கிடந்தார் சித்ரா. இந்த நிலைமையில் மனைவியை விட்டு விட்டு வந்திருக்கிறோமே, அவள் என்ன செய்வாள் என்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கிறதா என்று ரவிச்சந்திரன் மீது கோபம் இருந்தது.  தவித்துப் போகவில்லை. பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் வந்து அவரைக் கவனித்துக் கொண்டார்கள். இப்போது பூங்குழலி மீது என்னவெல்லாமோ நினைப்பு வந்து பாடாய் படுத்துகிறது. நேற்றிரவிலிருந்து சுத்தமாய் நிம்மதி போயிருந்தது.

 

பஜாரில் கடையெல்லாம் அடைத்து பூசைப்பழம் வீட்டுக்கு வந்த பிறகு முருகேசன், உறங்கிக் கிடந்த தெருவில் டபடபவென்று புல்லட்டில் வந்தார். கதவைத் தட்டிய தொனியிலேயே எரிச்சலையும் கோபத்தையும் காட்டினார்.

 

சாப்பிட்டு விக்ஸை மூக்கில் உறிஞ்சி படுக்கப் போன பூசைப்பழம் என்னமோ எதோ என்று பதறி ஹாலை ஒட்டியிருந்த படுக்கையறையில் இருந்து வந்து வெளிக்கதவைத் திறந்தார். அப்பாவிடம் எதுவும் பேசாமல் உள்ளே நுழைந்தவர், காயப்போட்டிருந்த துணிகளை எடுத்து வந்து ஹாலில் உட்கார்ந்து மடித்துக் கொண்டிருந்த சித்ராவைப் பார்த்ததும் குரலை உயர்த்தி, “ரொம்ப நல்லா வளத்திருக்க ஓம் பிள்ளைய” கத்தினார்.  அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

“என்ன நடந்துச்சுன்னு இந்தக் கத்து கத்துற?’ பத்மாவதி வேகமாய் சமையலறையில் இருந்து வெளிப்பட்டார்.

 

தன்னிடம்  மூர்த்தி போனில் சொன்னதையெல்லாம் கொட்டினார் முருகேசன். “பொம்பளப் பிள்ள பேசுற பேச்சா இது. மாப்பிள்ளயோட அப்பா வருத்தப்படுறாரு. இதெல்லாம் நல்லாயில்லன்னு கோபமா சொல்றாரு” இரைந்தான்.

 

“மெல்லப் பேசுடா…” பத்மாவதி வெளிக்கதவை மூடி, ஜன்னல்களையும் சாத்திக்கொண்டே “சாயங்காலம் அஷ்டலஷ்மி கோயிலுக்குப் போய்ட்டு கடற்கரையில ரெண்டு பேரும்  சந்தோஷமா எடுத்த போட்டோவக் கூட சம்பந்தியம்மா அனுப்பி இருந்தாங்களே. அதுக்குள்ள என்ன நடந்துச்சு…” அதிர்ச்சியோடு இழுத்தார்.

 

“யாரு இப்போ அவங்க ரெண்டு பேரும் அஷ்டலஷ்மி கோயிலுக்கு போகல, கடற்கரைக்கு போகல, சினிமாவுக்குப் போகலன்னு அடிச்சிக்கிட்டாங்க. எல்லாம் நீங்க ரெண்டு பேரும் பண்ற வேல.”

 

“நாங்க என்னடா பண்ணோம்? எதோ ஒரு படத்தப் பாத்துட்டு இவ எதோ எழுதியிருக்கா. மாப்பிள்ள வருத்தப்பட்ருக்காரு. சரி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா பிரச்சினையில்லாம இருக்குமேன்னு நினைச்சோம்.”

 

“எதையாவது ஏங்கிட்டயோ, அப்பாக்கிட்டயோ சொன்னீங்களா? பொம்பளகளாப் பார்த்து பேசி தீத்து வைக்கிறீங்களாக்கும். கடைசில இந்த நிலைமைக்கு கொண்டு வந்து விட்டிருக்கீங்க.”

 

சித்ராவின் பக்கம் திரும்பி, “ஏம்மா, பூங்குழலிக்கு போன் பண்ணும்மா.” என்றார் பத்மாவதி.

 

“ஆமா, போன் பண்ணவுடனே எடுத்து மறு பேச்சு பேசிட்டுத்தான் அடுத்த வேல பாப்பா ஒங்க பேத்தி. போங்கம்மா, விவரம் தெரியாம. நானும் அப்பமே போன் பண்ணிட்டுத்தான இங்க வந்திருக்கேன். சுவிட்ச் ஆப்ல இருக்கு.”

 

அமைதியானார்கள். பூசைப்பழம் வழக்கம் போல இடது கால் மேல் வலது கால் போட்டு தலையைக் குனிந்து  வலது உள்ளங்காலை தடவிக்கொண்டிருந்தார். சித்ரா துணிகளை மடிப்பதை நிறுத்திவிட்டு தரையில் திக்பிரமை பிடித்தவராய் உட்கார்ந்திருந்தார். “ஏம்மா,  பூங்குழலி இப்படி செஞ்சே..” என வாய் தானாக மெல்ல முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.

 

“சித்ராக்கா, இப்படியே உக்காந்திருந்தா என்ன செய்றது? அவளோட ஹாஸ்டல் நம்பர் இருக்கா. போன் போடு.” என்றார் முருகேசன்.

 

பத்மாவதி மணியைப் பார்த்தார். பத்தே முக்கால் ஆகியிருந்தது. “இந்த நேரத்துல எடுப்பாங்களாத் தெரிலய. சித்ரா போனப் போடும்மா?’ என்றார்.

 

அதற்குள் சித்ரா  போன் செய்திருந்தார்.

 

“ஹலோ..”

 

“சொல்லுங்க... “

 

“நா உங்க ஹாஸ்டல்ல தங்கியிருக்குற பூங்குழலியோட அம்மா பேசுறேன். ..”

 

“பூங்குழலியா… ரூம் நம்பர்? “

 

“14 வது ரூம்..”

 

“அவங்களா, ஊருக்குப் போறேன். மண்டேதான் வருவேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்களே “

 

“அப்படியா..”

 

“ஒங்கக் கிட்ட சொல்லலயா?”

 

“ஆமா, போன் சுவிட்ச் ஆப்னு வருது”  

 

“ஓ….”

 

“சரிங்க”

 

தன்னையே மூன்று பேரும் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டு “ஊருக்குப் போறதா சொல்லிட்டு போய்ட்டாளாம். திங்கக்கிழமைதான் வருவாளாம்” என்றார் சித்ரா. அவள் குரல் அழுதது போல்,இருந்தது.

 

சட்டென முருகேசன் எழுந்து கொண்டார். பூசைப்பழத்தைப் பார்த்து  “யப்பா. பொய்யப் பாத்தீங்களா? ஒரு வேளை அவ அண்ணன் கலைச்செல்வனப் பாக்க போயிருப்பான்னு நினைக்கிறேன். காலைல நா சபாபதி மாமாக் கிட்டப் பேசி, அவர் மூலமா கலைச்செல்வன்கிட்ட பேசச் சொல்றேன். அங்கயும் போகலன்னு வச்சுக்கிடுங்க, அப்புறம் என்னய ஆள விட்ருங்க. நீங்களே பாத்துக்குங்க” கும்பிடு போட்டு  புறப்படப் போனார்.

 

“இருடா. எதுக்கு இப்ப குதிக்கிற. பூங்குழலி பேசுனதுல இருந்து பாத்தா அவளுக்கும்  மாப்பிள்ளைக்கும் எதோ பிரச்சின. அத என்னன்னு பாக்குறத விட்டுட்டு நீ பாட்டுக்கு பேசிட்டுப் போற. எனக்கென்னன்னு அப்படி போறதா சொந்தமும், பாசமும்? உக்காரு” நிதானமாகவும் கொஞ்சம் அதட்டலாகவும் சொன்னார் பூசைப்பழம். முருகேசன் வேண்டா வெறுப்பா நின்றான்.

 

“யம்மா சித்ரா. நீ ஒன்னும் கவலப்படாத. இதெல்லாம் சின்ன விஷயந்தான். சரியாப் போகும். இந்தக் காலத்துப் பசங்களும் பொண்ணுகளும் எல்லாம் தங்களுக்குத் தெரியும்னு நினைக்குறாங்க. அவங்களே முடிவெடுக்குறாங்க. சம்பந்தப்பட்ட மத்தவங்களப் பத்தி யோசிக்குறதே இல்ல. நாமதான் பொறுமையா நல்லது கெட்டத எடுத்துச் சொல்லணும்.” சொல்லி விட்டு முருகேசனைப் பார்த்து, “இதச் சொல்லவா இந்த நடு ராத்திரில வந்தே. இப்பவே முடிவெடுக்க வேண்டிய விஷயமா இது? போய்ப் படுங்க. காலைல பேசிக்கலாம்” சொல்லிவிட்டு எழுந்து உள்ளே சென்றார்.

 

முருகேசன் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றார். புல்லட் சத்தம் அதிர்ந்து மெல்ல மெல்ல தேய்ந்தது.  

 

“இதுக்குத்தான் இவளுவள வைக்கிற இடத்துல வைக்கணும். படிச்சு கிழிச்சது போதும்னு சொல்லி நிறுத்தியிருக்கணும். வீட்டுலயிருந்தா இந்த ஆட்டம் போடுவாளா? செத்த நாய் போல சொன்னதக் கேட்டுட்டு தலைய ஒழுங்கா நீட்டுவா. நாலு எழுத்தப் படிச்சிட்டு, நாலு காச சம்பாதிச்சதும் திமிரப் பாரு. இந்தக் கல்யாணம் நடந்து முடிறதுக்குள்ள இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்காளோ.” புடவைத்தலைப்பால் முகத்தையும், கழுத்தையும் துடைத்துக்கொண்டார் பத்மாவதி.

 

அம்மா இப்படி பேசுவார் எனத் தெரியும். கல்லூரியில் படிக்க வேண்டும் என்று சித்ரா ரொம்ப ஆசைப்பட்டார். பூசைப்பழம் கூட சம்மதித்தார். பத்மாவதிதான் வேண்டவே வேண்டாம் என தன் மூன்று பெண்குழந்தைகளையும் பிளஸ்டூவோடு நிறுத்திக் கொண்டார்.

 

“சும்மா சும்மா இப்படியே பேசாதீங்கம்மா. ஊருல நாட்டுல எல்லாப் பொண்ணுகளும்தான் வேலைக்குப் போறாங்க. கை நிறைய சம்பாதிக்காங்க. நல்லாதான் இருக்காங்க. போஸ்ட்மேன் பொண்ணு போன வருசம் கல்யாணமாச்சு, மெட்ராஸ்லதான் வேலை பாக்கா. ஜம்முனு இருக்கா. பூவு கூட படிச்ச சௌம்யா பெங்களூர்ல காரும் பங்களாவுமா வசதியாத்தான் இருக்கா. பொம்பளைங்க படிக்கக் கூடாது, வேலைக்கு போகக் கூடாதுன்னு  சொல்லாதீங்க.” சித்ரா எரிச்சல் பட்டார்.

 

“அவங்கள மாதிரி இல்லய ஒம்பொண்ணு. வானத்துலயிருந்து நேரே குதிச்ச மாதிரில்லா பவுசுல இருக்கா. செல்லம் கொடுத்து செல்லம் கொடுத்து ஒம்புருஷன் சின்ன வயசுலயே கெடுத்துல்லா வச்சிருக்காரு.” கோபத்தை ரவிச்சந்திரன் மீது கொட்ட ஆரம்பித்தார் பத்மாவதி.

 

அங்கே இங்கே சுற்றி பத்மாவதி இந்த இடத்திற்குத்தான் வருவார். வாக்குவாதம் செய்ய இது நேரமில்லை என அமைதி காத்தார் சித்ரா.

 

“அப்பங்காரன்  காதலிச்சவள விட்டுட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டான். மகங்காரன் யார் பேச்சையும் கேக்காம காதலிச்சவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். மகக்காரி கல்யாணம் பண்ண இருந்தவன விட்டுட்டு காதலிச்சவனோட போய்ட்டா. போலுக்கு. நல்ல குடும்பம் சாமீ”.

 

ஏற்கனவே அலையரசனோடு சென்னையில் பூங்குழலி பைக்கில் சுத்துவதாக ஊருக்குள் ஒரு பேச்சு எப்போதோ நுழைந்து, இருக்கும் இடம் தெரியாமலிருந்தது. அதைப் பிடித்துக்கொண்டு ஜாடை மாடையாக பேச ஆரம்பித்தார் பத்மாவதி.

 

“அம்மா, நிறுத்துறீங்களா. இப்பிடிப் பேசினீங்களா செத்துப் போயிருவேன்” கத்தி கூப்பாடு போட்ட பிறகுதான் பத்மாவதி நிறுத்தினாள். சித்ரா எழுந்து மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் முதல் படியில் உட்கார்ந்து கொண்டார். ஹாலின் வெளிச்சம் முழுமையாக அங்கு பரவியிருக்கவில்லை. மூச்சு வாங்கியது.

 

பத்மாவதி பாசம் கொட்டி திக்குமுக்காட வைப்பார். இல்லையென்றால் எண்ணெய்ச்சட்டியாக கொதித்து நெருங்க முடியாமல் விரட்டுவார்.  இவரிடம் மல்லுக்கட்டுவது உறவுகளில் சேதங்களையே ஏற்படுத்தும். அப்படியேதும் ஏற்படாமல் தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள அந்த வீட்டு மனிதர்கள் பக்குவம் பெற்றிருந்தார்கள். பத்மாவதி ஜாலியாக இருந்தால் அந்தக் குடும்பமே சந்தோஷமாக இருக்கவும், அவர் எரிச்சலில் புலம்ப ஆரம்பித்தால் அனைவரும் அமைதி காக்கவும் பழகிக் கொண்டார்கள். வீட்டிற்கு அதுவே விதியாகிப் போனது. பொண்டாட்டிக்கு அடங்கியவர் என நாலு பேர் பேசுவதினால் தனக்கு குறைந்து விடப் போவதில்லை எனும் தெளிவோடு இருந்தார் பூசைப்பழம். முருகேசன் முதற்கொண்டு மூன்று பெண் குழந்தைகளும் இவரது வார்த்தைக்கு மறு பேச்சு பேசுவதில்லை. நாளடைவில் தனக்குத்தான் அந்த வீட்டில் எல்லா நியாயங்களும் தெரியும் என தன்னையே பீடமாக்கிக் கொண்டார். மிகச் சாதாரணமாக அவரை கிண்டல் செய்தும், மறுத்தும் பேச ஆரம்பித்தது அந்த வீட்டுக்கு மூத்த மருமகனாக வந்த ரவிச்சந்திரன் 

 

சமயம் கிடைக்கும் போதெல்லாம் கிண்டல் செய்வது போல ரவிச்சந்திரனை பத்மாவதி மட்டம் தட்டுவதும், அவனும் சிரித்துக் கொண்டே இவரது வாயடைப்பதுமாய் பனிப்போர் நடந்தது. இருவருக்கும் இடையில் “விடுங்க”, “விடுங்க” என்று சித்ரா பதறிப் போய் நிற்பார். தன் கணவன் மீது அம்மாவுக்கு இருக்கும் வெறுப்பு சித்ராவுக்குத் தெரியும். மகன் கலைச்செல்வனையும் சுத்தமாய் ஒதுக்கிவிட்டார்.  மகளோடும் அப்படியொரு நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என கவலைப்பட்டார். பூங்குழலி மட்டும்தான் வாழ்வின் ஒரே அர்த்தமாய் இருக்கிறாள்.

 

“எடும்மா, எடும்மா” என தனக்குள் வேண்டிக்கொண்டே போன் செய்து பார்த்தார். சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. இனி அவளாக பேசினால்தான் உண்டு. அருகில் இருக்கும்போது கொஞ்சித்  திரிகிறவள், ஊட்டிவிடச் சொல்கிறவள், மடியில் வந்து படுத்துக் கொள்கிறவள் எப்படி தூரத்தில் போனதும் யாரோ போல நடந்து கொள்கிறாள். வீட்டுக்கு வந்து செல்லும் ஒவ்வொரு முறையும், அவள் நின்ற இடம், உட்கார்ந்த இடம், படுத்த இடம் பார்த்து பார்த்து நினைவுகளைச் சுமந்து அலையும் இவரது ஏக்கத்தை அறியாமல் இருக்கிறாள். அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து, இப்படிப் பிரிந்து இருக்கும்போதுதான் தெரியும்.

 

பத்மாவதி வந்து நின்றார். “எம்மேல கோவமா?” அருகில் வந்து தரையில் உட்கார்ந்து கொண்டார். மகளின் கைகளை பற்றிக்கொண்டார்.

 

“நாங் கோபப்பட்டு என்னாகப் போகுது?”  ஏறிட்டுப் பார்த்தார் சித்ரா. இழந்து போன குரல் உயிரற்று இருந்தது.

 

“தங்கமே, அப்படியெல்லாம் சொல்லாத. ஒரு சுகமும் இல்லாம, வாழ்க்கையெல்லாம் எம்புள்ள கஷ்டப்படுதேன்னு கோபத்துல பேசிட்டேன்.” பத்மாவதியின் கண்கள் கெஞ்சின.

 

அம்மாவிடமிருந்து விலகி  ஹாலில் வெறும் தரையில் படுத்துக் கொண்டார். பத்மாவதி எழுந்து சென்று இரண்டு தலையணைகளை எடுத்து வந்து ஒன்றை சித்ராவின் தலைப்பக்கம் வைத்து விட்டு  இன்னொன்றை தனக்கு வைத்துக் கொண்டு அருகில் படுத்துக் கொண்டார்.

 

வேதக்கோயிலில் இருந்து பதினோரு மணி அடித்தது. நினைவுக்குத் தெரிந்த நாளிலிருந்து இரவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்த சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. தூக்கம் வராத எத்தனையோ இரவுகளில் அலைக்கழிக்கும் நினைவுகளை சமாதானம் செய்வதாக இந்த சத்தம் ஒலிக்கும். எப்படியும் விடிந்துவிடும் என நம்பிக்கையளிக்கும். பாதி ராத்திரியில் விழிக்கும்போது  ’இன்னும் விடியவில்லை தூங்கு’ என தட்டிக் கொடுப்பது போலிருக்கும். இன்று துயரத்தின் நரம்புகளை மீட்டிக் கொண்டிருந்தது. இரண்டு மணி அடிக்கும் வரைக்கும் நினைவுகளாய் இருந்தன.

 

ஐந்து தடவை மணிச்சத்தம் கேட்கவும் விழிப்பு வந்து எழுந்து உட்கார்ந்தார். பூங்குழலிக்கு போன் செய்தார். ரிங் சத்தம் போனது. அப்பாடா என மூச்சு விட்டு காத்திருந்தார். பாதியில் அழைப்பு நின்றது. மீண்டும் போன் செய்தார். போன் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. ஒன்றும் புரியவில்லை.

 

தனது அம்மாவோ, தம்பியோ நினைக்கிற மாதிரி பூங்குழலி மனம் போன போக்கில் முடிவெடுக்கிறவள் இல்லை என்பதில் உறுதியாக சித்ரா இருந்தார். கல்யாணத்திற்கு அவள் சம்மதித்தது, நிச்சயதார்த்தத்தில் சந்தோஷமாக வந்து நின்றது எல்லாமே உண்மை. அப்போது அவளுக்குள் வேறு எந்த முடிவும் இல்லை என்று நிச்சயமாய் நம்பினார். இருந்திருந்தால் முகத்துக்கு நேரே சொல்லக் கூடியவள் அவள். மாப்பிள்ளையோடு கோயிலுக்குப் போய்ட்டு வா என்று சொன்னதற்கு மறுப்பு  சொல்லவில்லை, பிறகு என்ன ஆனது என்பதுதான் சித்ராவுக்கு பிடிபடவில்லை.

 

எழுந்து தலையை முடிந்து கொண்டதிலிருந்து பத்மாவதி எரிச்சலில் என்னென்னவோ பேச ஆரம்பித்தார். பூசைப்பழம் எதுவும் பேசாமல் நடமாடிக் கொண்டிருந்தார். சித்ராவுக்கு உள்ளுக்குள் பயம்  வர ஆரம்பித்திருந்தது. அந்த வீட்டு மனிதர்களின் முகங்களில் இருந்த  அருளையெல்லாம் சந்தேகங்கள் இழக்கச் செய்திருந்தன.

 

ஒன்பது மணிக்கு மேல் முருகேசன் வந்தார். சபாபதியிடம் பேசியதை சொன்னார். கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதை நிறுத்தி வைக்கப் போவதாக  நரேனோட அப்பா மூர்த்தி சொன்னதையும் சொன்னார்..

 

கலைச்செல்வன் வீட்டுக்கும் பூங்குழலி  போகவில்லை என்றதும் இருந்த ஒரே நம்பிக்கையும்  அறுந்து வெலவெலத்துப் போனார் சித்ரா. சுற்றிலும் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் போவது அச்சத்தையும், சந்தேகங்களையும் பெருக்கி விடுகின்றன. “கடவுளே! கடவுளே” என முணுமுணுத்தபடி பூங்குழலிக்கு போன் செய்து பார்த்தார்.  

 

“அப்பா, முத பத்திரிகை நாம சபாபதி மாமாவுக்குக் கொடுத்ததோட சரி. இன்னும் ஊருக்குள்ள கொடுக்க ஆரம்பிக்கல. நாமளும் நிறுத்தி வைக்கலாம்னு தோணுது” என்றார் முருகேசன்.

 

சித்ரா விசும்ப ஆரம்பித்தார்.

 

“அழு, நல்லா அழு. அழுறதுக்குப் பெறந்தவதான நீ. சுத்தி சுத்தி அவ எங்க வருவான்னு எனக்குத் தெரியாதா. இந்த எழவ நிச்சயதார்த்தத்துக்கு முந்தியே சொல்லியிருக்க வேண்டியதுதான” பத்மாவதி தலையிலடித்துக் கொண்டார்.

 

“படிச்சிருந்தா, சம்பாதிச்சா போதுமா, அறிவிருக்கா ஒம்பொண்ணுக்கு. எவ்வளவு அசிங்கம். ஊருல தலை காட்ட முடியுமா? அவளுக்கென்ன மெட்ராஸ்ல தலைய விரிச்சுப் போட்டுட்டு அவ பாட்டுக்கு அலைவா. இங்க இருந்து கேக்கிறவங்களுக்கு பதில் சொன்னாத்தான தெரியும்..” கத்தினார்  முருகேசன்

 

அதற்கு மேல் யோசிக்க முடியாமல் பத்மாவதி நடுவீட்டில் வைத்து அவர் மண்டைக்குள் இருந்ததை கொட்டி விட்டார். கோயிலிலோ, ரிஜிஸ்டர் ஆபிஸிலோ பூங்குழலி யாரையோ கல்யாணம் செய்து கொண்டு விட்டாள் என திட்டவட்டமாக சொன்னார்.

 

அப்படியெல்லாம் இருக்காது என சொல்லத் தோன்றினாலும், அடக்க மாட்டாமல் “கடவுளே..!”  என சத்தம் போட்டார் சித்ரா. யாருடைய முகத்திலும் விழிக்கப் பிடிக்காமல்  எழுந்து போய் தனது அறையில் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டார். ஆத்திரம் அடங்காமல் மூச்சு இறைத்தது. இந்த ஊர்க்காரன், கூட ஒரே ஆபிஸில் வேலை பார்க்கிறான் என்றதும் அலையரசன் நம்பரை கேட்டு வாங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. மொபைலில் தேடினார். இருந்தது. போன் செய்தார்.

 

“ஹலோ..”

 

“நா பூங்குழலியோட அம்மா பேசுறேன். அலையரசனா?’

 

“ஆமா, ஆண்ட்டி, நல்லாயிருக்கீங்களா?”

 

“இருக்கேம்ப்பா….” குரல் உடைய ஆரம்பித்தது. கட்டுப்படுத்தினார்.

 

“சொல்லுங்க ஆண்ட்டி…”

 

“தம்பி, பூங்குழலிக்கு போன் செஞ்சா நேத்துலயிருந்து எடுக்கவேயில்ல.. என்னன்னு தெரில…” இழுத்தார். யாரோடோ சித்ரா பேசும் குரல் கேட்கவும் பத்மாவதி அறைக்குள் வந்து எட்டிப் பார்த்தார்.

 

“நரேனோட கோயிலுக்கு போறேன்னு சாயங்காலம் சீக்கிரமே போய்ட்டா. அப்புறம் தெரிலய. நா விசாரிச்சுப் பாக்குறேன்.”

 

“தம்பி, வேற ஒன்னும் பிரச்சின இல்லய..”

 

“இல்லய… என்ன ஆண்ட்டி..”

 

“அவள நெனச்சு ரொம்ப கஷ்டமாயிருக்கு. உனக்கு போன் செஞ்சா ஏங்கிட்ட கொஞ்ச பேசச் சொல்லுய்யா..”

 

“சரி ஆண்ட்டி, கவலைப்படாதீங்க..”

 

அழைப்பைத் துண்டித்து விட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

 

“யாரு போன்ல..” பத்மாவதி கேட்டார்.

 

பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

 

“யாருக்கிட்ட சித்ரா பேசுனா?” முருகேசனும் அங்கு வந்தார்.

 

“தெரில. சொல்ல மாட்டேங்குறா?”

 

தன் மகளிடம் தெரிந்த இறுக்கமும் முகத்தில் தெறித்த கோபமும் பத்மாவதியால் நெருங்க முடியாததாய் இருந்தது. சித்ரா கொஞ்ச நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தார். எதோ நினைத்துக் கொண்டவராய் எழுந்து வேகமாக பூசைப்பழத்திடம் சென்று, “அப்பா, ஆள் ஆளுக்கு கண்டபடிக்கு எம் பொண்ணப் பத்தி பேசுறத நிறுத்தச் சொல்லுங்க. யார் கூடயோ போய்ட்டா, கல்யாணம் பண்ணிக்கிட்டான்னு இன்னொரு தடவ யாராவது பேசுனா இந்த வீட்டுல இருக்க மாட்டேன் பாத்துக்குங்க. அப்படி யார் கூடயும் போறதா இருந்தா அதையும் எல்லார்ட்டயும் சொல்லிட்டுத்தான் போவா.” வெறி பிடித்த மாதிரி முகமும், பேச்சும் இருந்தது.

 

“சித்ரா! என்னடி பேசுற..” வேகமாக வந்த பத்மாவதியைப் பார்த்து பூசைப்பழம் “கையெடுத்துக் கும்பிடுறேன். நிப்பாட்டு தாயி. நிதானம் தவறி யாரும் பேசாதிங்க. அப்புறம் சரியே செய்ய முடியாமப் போயிரும். கல்யானத்துக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள எவ்வளவோ யோசிக்கலாம். பேசலாம். சரி பண்ணலாம். விடுங்க” என கத்தினார்.

 

சித்ராவின் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தார். அழைப்பை அவசரமாக ஏற்று “யம்மா, பூவு..” என்று பெருங்குரலில் அழைத்தார். தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து, போனை காதிலிருந்து எடுத்து ஸ்பீக்கரில் வைத்தார்.

 

”பூவு! என்னம்மா. போன் சுவிட்ச் ஆப்லயே இருக்கு.”

 

“அத விடுங்க. அழுதீங்களா? அலையரசன் சொன்னான்”

 

“நீ செய்ற காரியத்துக்கு நா வேறென்ன செய்ய..”

 

“நீங்களும் பாட்டியும், நரேனோட அம்மாவும் சேந்து செய்ற காரியத்துக்கு நா வேறென்ன செய்ய?”

 

“என்னம்மா இப்படில்லாம் பேசுற. எல்லாம்  உன் நல்லதுக்குத்தான?”

 

“ஆமா ரொம்ப நல்லதுக்கு. எரிச்சலா வருது. இப்ப என்ன? நரேனோட அம்மா புலம்பி இருப்பாங்க அதான  கேக்கப் போறீங்க?”

 

“ஏம்மா இப்படி கொதிக்குற மாதிரி பேசுற. அவங்க பெரியவங்க. அவங்கக் கிட்ட அப்படி பேசலாமா?”

 

“மொதல்ல என்ன நடந்துச்சுன்னு அவங்க பையங்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கட்டும். பிறகு பேசுவோம்.”

 

“பூவு என்னம்மா சொல்ற?”

 

“மாப்பிள்ள மனம் கோணாம என்னால நடந்துக்க முடியலன்னு பாட்டிக் கிட்டச் சொல்லுங்க. புரியும் அவங்களுக்கு.”

 

“பூவு…”

 

“எனக்கு ஒன்னும் ஆகல. நல்லாத்தான் இருக்கேன். சீக்கிரம் ஊருக்கே வந்து பேசுறேன். சரியா? எல்லார்ட்டயும் சொல்லிருங்க.”

 

“பூவு… பூவு.. இப்ப எங்கம்மா இருக்க?”

 

“அண்ணன் வீட்டுக்கு வந்துருக்கேன்.”

 

“அங்க வரலன்னு சபாபதி மாமா சொன்னாங்களே?”

 

“நா வந்தத சொல்ல வேண்டாம்னு அண்ணங்கிட்ட நாந்தா சொன்னேன்.”

 

(தொடரும்)

கருத்துகள்

3 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அடுத்த அத்தியாயத்திற்கு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சில தவறான தகவல் மூலம் பல தவறான கண்ணோட்டம்தான் மனிதர்களிடம் வருகிறது... கலைச்செல்வம் வீட்டுக்கு பூங்குழலி செல்லவில்லை என்ற தவறான தகவல்,பூங்குழலியின் நடத்தையையே சந்தேகப்பட வைக்கிறது அவளின் சொந்தங்களால்... இதுதான் உலக இயல்பு...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!