க்ளிக் - 14 (தொடர்கதை)


நரேனின் கல்யாண இன்விடேஷன் கொடுக்க சனிக்கிழமை ஊருக்குப் போகிறோம் என மூர்த்தி சொன்னதிலிருந்து அவரது அப்பா நடராஜன் அதே நினைப்பாகத்தான் இருந்தார். கண்ணுக்குள்ளேயே இருக்கும் மனிதர்களை, தெருக்களை, இடங்களை பார்க்கப் போகிறோம் என துடிப்பாய் இருந்தது. இன்று காலையில் வாக்கிங் போய் வந்தவுடன் ஷேவிங் செய்து, குளித்து விட்டிருந்தார். டிபன் சாப்பிட்டு விட்டு புறப்படுவோம் என்று மூர்த்தி சொல்லியிருந்தார்.

 

சந்திராவும் மூர்த்தியும் புறப்படுவதற்கான அறிகுறிகள் இல்லாதது போல் நடராஜனுக்குத் தெரிந்தது. காலையில் காபி தரும்போது சந்திராவின் முகமே சரியில்லாமல் இருந்தது. என்ன ஏதென்று புரியாமல் ஹாலில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். சந்திரா எதுவும் சொல்லாமல் சமையல் வேலைகளில் இருந்தார். வழக்கமாக இந்த நேரம் கேட்கும் இளையராஜா பாட்டுக்களும் இல்லாமல் வீடு அமைதியாக இருந்தது.

 

கடந்த இரண்டு மூன்று நாட்களாய் பள்ளியிலிருந்து வந்த பிறகு மூர்த்தியும் சந்திராவும் இங்கு தூத்துக்குடியில் தெரிந்தவர்கள் விடுகளுக்குச் சென்று கல்யாண அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தார்கள். நேற்று சாயங்காலம் மூர்த்தி கூட வேலை பார்க்கும் அல்போன்ஸ் வீட்டில் காபி குடித்து கல்யாணம் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போது  நரேன் அனுப்பியிருந்த செல்பியை சந்திரா பார்த்தார். அப்போதே மூர்த்தியிடம் காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பார்த்துக் கொண்டிருந்த அல்போன்ஸ் என்னவென்று கேட்கவும்,  “நரேனும் மருமகளும் பீச்சுக்குப் போயிருக்காங்க. படம் அனுப்பி இருக்காங்க” என மொபைலில்  காண்பித்தார். அவரும் ரசித்தார்.

 

அங்கிருந்து விடைபெற்று  இன்னொரு  வீட்டிற்கு செல்லும் வழியில், “அந்த செல்பியை ஊருக்கே காட்டணுமா. அதுவும் உடனேவா. ஏம்மா இப்படி இருக்கே?’ என மூர்த்தி லேசாய் கடிந்து கொண்டார். சந்திரா அவரது வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல், நரேனுக்கு போன் செய்து பேச ஆரம்பித்தார். மூர்த்தி தனக்குள் சிரித்தாரா, எரிச்சல் கொண்டாரா தெரியவில்லை. அப்படியொரு முக பாவனையோடு, கொடுக்க வேண்டிய அழைப்பிதழை எடுத்து மேலே வைத்துக் கொண்டார். கார் டிரைவரிடம் “அடுத்த லெப்ட்ல திரும்பணும்” வழி சொன்னார்.

 

“நரேனும் பூங்குழலியும் ஆண்டவன் கட்டளை படம் பாக்க போறாங்களாம்.” மேலும் ஒரு தகவலைச் சொல்லி சந்திரா பொங்கிப் பூரித்தார். அதைக் கேட்ட மாதிரி  மூர்த்தி காட்டிக் கொள்ளவில்லை. “அந்த செல்பியை இனும எந்த வீட்டுலயும் காட்டிராத..” என்று மட்டும் சொல்லி வைத்தார்.

 

திட்டமிட்டிருந்தபடி ஒன்றிரண்டு வீடுகளுக்குக் கொடுக்க முடியவில்லை. எட்டரை மணிக்குள் வீடு திரும்பினார்கள். நடராஜனுக்கு ஒன்பது மணிக்குள் சப்பாத்தி ரெடி பண்ணிக் கொடுக்க வேண்டி இருந்தது. உள்ளே நுழைந்ததும், “ஆறு மணி ஷோ எத்தனை மணிக்கு முடியும்?” என்று சந்திரா கேட்டார். மூர்த்தி அதையும் கவனிக்காதது போல இருந்தார்.

 

படம் முடிய ஒன்பது மணிக்கு மேலாகும், அதன் பின்னர் பூங்குழலியை ஹாஸ்டலில் கொண்டு விட வேண்டும், எப்படியும் எதாவது ஒட்டலில் சாப்பிட்டு விட்டுத்தான் போவார்கள், பத்து மணிக்கு மேலே போன் செய்வோம் என சந்திரா ஒரு கணக்கு போட்டுக் கொண்டார். சமையல் செய்து மூர்த்திக்கும், நடராஜனுக்கும் பரிமாறிவிட்டு வெளியே வராண்டாவில் போனோடு வந்து உட்கார்ந்திருந்தார்.

 

“என்ன ஆன்ட்டி, வெளியே தனியா உக்கார்ந்திருக்கீங்க?” கையில் இட்லி மாவு பாக்கெட்டுடன் போய்க்கொண்டு இருந்த ஈஸ்வரி நின்று கேட்டாள். இரண்டு வீடு தள்ளியிருக்கிற ராஜேஸ்வரியின் மருமகள்.

 

“இப்பத்தான் வேலை முடிஞ்சுது. சும்மா உக்காந்திருக்கேம்மா”

 

“நரேன் தம்பி கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாசந்தானே இருக்கு?” புன்னகைத்தாள்.

 

“ஆமாம்மா, பத்திரிகை அடிச்சுக் கொடுக்க ஆரம்பிச்சாச்சு”

 

“மருமகா எப்படி இருக்கா? பேசுவீங்களா?”

 

“நல்லா இருக்கா. இன்னிக்குக் கூட தம்பியும் அவளும் கோயிலுக்குப் போய்ட்டு, சினிமா போயிருக்காங்க”

 

“பரவாயில்லையே...” என்றவள் “தங்கம் போல வச்சுக்க மாட்டீங்க நீங்க?” சிரித்தாள். சந்திராவும் சிரித்துக் கொண்டார்.  

 

தங்கள் வீட்டைப் பார்த்துவிட்டு, “சரி, ஆன்ட்டி, வர்றேன்” நடக்க ஆரம்பித்தாள்.  பத்து மணியாக இன்னும் நேரம் இருந்தது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூடியுப் எல்லாம் ஒரு சுற்று வந்தார். பத்து மணியாகவில்லை. பொறுக்க முடியாமல் போன் செய்தார்.

 

நரேன் சுவாரசியம் காட்டிக் கொள்ளாமல் பேசியது ஏமாற்றமாயிருந்தது. ஃபிரண்டிடம் இருந்து போன் வந்ததால், பூங்குழலி படம் பார்க்காமல் சென்று விட்டாள் என்பது இடறியது. ‘முதல் முதலா சேர்ந்து போயிருக்காங்க, இப்படியா பிரிஞ்சு போறது?’, ‘இதைவிட அந்த ஃபிரண்டு என்ன முக்கியம்?’, என்றெல்லாம் யோசித்தார்.

 

“நீங்க உடனே பூங்குழலிக்கு போன் செய்து தொண தொணன்னு பேசாதீங்க. அவ எரிச்சல் படப் போறா” என்று  நரேன் எச்சரித்ததும் பிடிக்கவில்லை. இன்று ஒருநாள் பூங்குழலியோடு கொஞ்ச நேரம் பேசியிருக்கிறான், அதற்குள் அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தனக்கு மகன் புத்திமதி சொன்னதைத் தாங்க முடியவில்லை..  இத்தனைக்கும்  இரண்டு பேருக்கும் இடையில் கசப்பு முளைக்க ஆரம்பித்தது. அது மேலும் வளர்ந்து விடக் கூடாது என ஆசைப்பட்டது நாம், நம்மையே தள்ளி வைப்பது போல அல்லவா இருக்கிறது என புழுங்கிப் போனார். அதென்ன அவள் சின்னப் பெண் நம்மிடம் எரிச்சல் படுவது என பூங்குழலிக்குப் போன் செய்தார். அவள் எடுக்கவில்லை. அப்போதாவது சந்திரா நிதானித்து இருந்திருக்கலாம். திரும்பவும் போன் செய்ததுதான்  மொத்தத்தையும் தவறாக்கி விட்டது..

 

“பஃப்ல தண்ணியடிக்கேன்”,  “வேற எப்படிப் பேசணும்”, “ஒங்க ஆம்பளப் பையனிடம் கேளுங்க” எல்லாம் என்ன வார்த்தைகள்? பேசிய தொனியையும், அர்த்தங்களையும் நினைத்துப் பார்க்க பார்க்க நொறுங்கிப் போனார். துச்சமாக தன்னை மனதில் வைத்திருக்கிறாள். எதுவும் பேச முடியாமல் அப்படியே விக்கித்து உட்கார்ந்திருந்தவர் எழுந்து படுக்கையறைக்குள் போனார். ஹாலில் இருந்த மூர்த்தியும், நடராஜனும் சீரியலில் இருந்தார்கள்.

 

மாமியாரை விழ வைப்பதற்காக சமையலறையில் எண்ணெயைக் கொட்டி, மருமகளும் அவளது அம்மாவும் பக்கத்து அறையில் காத்திருந்தார்கள். மாமியார் நடந்து வர, இவர்கள் ஒருவரையொரு பார்த்து பயங்கரமாய் கண்களை உருட்ட, மாமியார் நடந்து வர, இவர்கள் கண்களை உருட்ட திகில் ஓசை அதிர பளார் பளாரென காட்சிகள் மாறி மாறி வெட்டி மாமியாரின் கால்களில் தொடரும் என நின்றது.

 

“இப்படியெல்லாம் எந்த வீட்டில் நடக்குது. அஞ்சு நிமிஷம் பாக்க முடியல. எப்படித்தாம் பாக்கீங்களோ” மூர்த்தி எரிச்சல் பட்டார். நடராஜன் சிரித்துக் கொண்டார். அவர் படுக்கச் செல்வதற்கு இன்னும் ஒரு சீரியல் பாக்கி இருந்தது. மூர்த்தி எழுந்து வெளியே கேட் பூட்டிவிட்டு, வெளிக்கதவையும்  சாத்தினார்.  “அப்பா காலையில் ஊருக்குப் போறோம்.” நினைவு படுத்தி விட்டு படுக்கையறைக்குப் போனார்.

 

சந்திரா போனில் ”சரி. தப்புத்தாண்டா… அதுக்கு இப்படியா..?” என்று சொல்லிக்கொண்டு இருந்தவர் நிறுத்தினார்.  “நரேன்… நரேன்..” என கூப்பிட்டார். போனையே வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.

 

“என்னம்மா, நரேன் என்ன சொல்றான்?” என சாதாரணமாகக் கேட்டுக் கொண்டே அருகில் போய் உட்கார்ந்தார். கண்ணெல்லாம் பொங்கியிருந்தது.

 

“சந்திரா… என்னாச்சு..”

 

“ஏங்க அந்தப் பொண்ணு என்னை புரிஞ்சுக்கிட மாட்டேங்கிறா… என்னல்லாம் பேசிட்டா தெரிமா?’ என எல்லாவற்றையும் சொன்னார். “என்னடா இப்படிப் பேசுறான்னு நரேனுக்கு போன் செஞ்சா, நீ எதுக்கு போன் பண்ணேன்னு கோபப்பட்டு போனை வச்சிட்டான்.” சந்திராவின் குரல் பலவீனமாக இருந்தது.

 

“ஒவ்வொன்னுலயும் நீ எதுக்கு தலையிடுற. உன் மரியாதையை நீயே கெடுத்துக்கிற”

 

“நம்மப் பிள்ளைன்னு உரிமைலதான பேசினேன். அத ஏன் புரிஞ்சுக்கிட மாட்டேங்கிறா?”

 

 “ஒண்ணு சொல்றேன் கேளு. இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு கேள்வி கேக்குறது பிடிக்காது. அட்வைஸ் பண்றது பிடிக்காது. நாந்தான் ஸ்கூல்ல தினமும் பாக்கிறேனே. நா வாத்தியார், நீ ஸ்டூடண்ட், நாஞ் சொல்றத கேக்கணும்னு சொன்னா சரிப்பட்டு வராது. திமிரத்தான் செய்வாங்க. ஒம் பையன் எதோ ஒரு மரியாதைக்கு அப்பா அம்மான்னு அமைதியா இருக்கான். வர்ற மருமகளும் அப்பிடி இருக்கணும்னு நினைக்காத”

 

“ஊர்ல நாட்டுல நடக்குறத பாத்தா பயமா இருக்குல்ல. கல்யாணமாகி பத்து நாள், பதினைஞ்சு நாள்ள பிரிஞ்சிர்றாங்க. பிடிக்கலன்னு டைவர்ஸுக்குப் போறாங்க. முதல்லயே நம்மயும், நம்ம பையனையும் அவ புரிஞ்சிக்கிட்டா பின்னால பிரச்சினை எதும் வராதுன்னுதான் நினைச்சேன்”

 

“சரிதாம்மா. அதை ஏன் உடனே உடனே கேக்குற. கொஞ்சம் ஆற அமர யோசிச்சு பேசலாம். சரி பண்ணலாம்”

 

“அடிக்கடி பேசினா நெருக்கமா ஃபீல் பண்ணுவான்னு பாத்தேன்...” சந்திராவின் முகம் பாவம் போலிருந்தது.

 

சந்திராவின் கைகளைப் பிடித்து உள்ளங்கையை வருடிக்கொண்டே, “நீ குழந்தையாவே இருக்கே. ஆனா பூங்குழலி குழந்தை இல்ல” என்றான்.

 

“அதுக்காக என்ன வேண்ணாலும் பேசலாமா?  நாளை பின்ன ஒருத்தர் முகத்துல ஒருத்த விழிக்க வேண்டாமா?”

 

உண்மைதான். பூங்குழலியின் வார்த்தைகள் மோசமானவை என்பதை சந்திரா சொல்லும்போதே மூர்த்தி உணர்ந்திருந்தார். பேசப் பிடிக்கவில்லையென்றால் போனை எடுக்காமல் இருக்கலாம். இல்லை போனை எடுத்து எதுவும் பேசாமல் அமைதியா இருக்கலாம், அப்புறம் பேசுவதாய்க்கூட சொல்லி துண்டிக்கலாம். இது என்ன? மட்டு மரியாதை எதுவும்  இல்லாமல்…

 

“நா அன்பாத்தானே இருக்கேன். என்னை ஏங்க அந்த பொண்ணு இப்படி வெறுக்கிறா..”  வெடித்து   அழ ஆரம்பித்தார்.

 

“சந்திரா , அழாத.. என்னமோ எதோன்னு அப்பா வந்து கேக்கப் போறாங்க. வருத்தப்படுவாங்க.” சமாதானப்படுத்தினார்.

 

“இனும நீ யார்ட்டயும் பேசாத. நாம் பேசிக்கிறேன்.” என்று சொல்லி விட்டு முருகேசனுக்குப் போன் செய்தார். ஏற்கனவே ஒருமுறை மனத்தாங்கல் வந்தது, அப்போது சித்ராவிடம் சொன்னது, பிறகு பூங்குழலி ஸாரி என வேண்டா வெறுப்பாய்ச்  சொன்னது, இப்போது சந்திராவை மரியாதைக்குறைவாய் பேசியது எல்லாவற்றையும் சொன்னார். இதெல்லாம் நன்றாக இல்லை என முடித்துக் கொண்டார்.

 

“இந்த மாரி நிலைமையில எப்படிங்க சந்தோஷமா ஊருல போய் கல்யாணக் கார்டு கொடுக்க..” சந்திரா புலம்பினார்.

 

“விடு காலையில பாத்துக்குவோம்” சந்திராவிடம் சொல்லிப் படுத்துக் கொண்டாலும் தூங்க முடியாமல் இருவருமே அலைக்கழிந்தார்கள். சரியாக நரேனுக்கும் பூங்குழலிக்கும் நிச்சயம் செய்து இந்த சனிக்கிழமையோடு பதினைந்து நாட்களாகின்றன. பூங்குழலியோடு போனில் சந்திரா பேசியது மொத்தமே நான்கந்து தடவைதான் இருக்கும். நரேனும் பூங்குழலியும் ஒரே ஒரு தடவை நேற்று அஷ்டலஷ்மி கோயிலுக்கும் சினிமாவுக்கும் போயிருக்கிறார்கள். அதற்குள் எவ்வளவு மனக்கசப்புகள், கோபதாபங்கள், உளைச்சல்கள் என எல்லாம் விநோதமாய் இருந்தன. மிகச் சிறிய விஷயங்களிலும் புரிதல்கள்  இல்லாவிட்டால் வாழ்க்கை வெறுத்துப் போகாதா என்று வருத்தப்பட்டார்.

 

மூர்த்திக்கு உள்ளுக்குள் இன்னொரு உறுத்தலும் இருந்தது. பூங்குழலியின்  சில வார்த்தைகள் நெருடலாக இருந்தன. “ஒங்க ஆம்பளப் பையனக் கேளுங்க” என்னும் வார்த்தையில் வேறு அர்த்தங்கள் தெரிந்தன. வழக்கத்துக்கு மாறாக நரேன் தன் அம்மாவை விட்டுக் கொடுத்துப் பேசுவதும் விசித்திரமாயிருந்தது. நரேனிடம் காலையில் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டார்.

 

எழுந்து காபி எல்லாம் குடித்து கொஞ்சம் ஆசுவாசமானதும் வராண்டாவுக்கு சென்றார்.

 

“எய்யா மூர்த்தி, கார் டிரைவருக்கு போன் செஞ்சுட்டியா” தன்னைக் கடந்து சென்ற மூர்த்தியைப் பார்த்து நடராஜன் கேட்டார்.

 

“இல்லப்பா. பண்ணனும்.” சொல்லிக்கொண்டே வெளியே சென்று நரேனுக்கு போன் செய்தார். முழு ரிங் சத்தம் போனது. எடுக்கவில்லை. வெளியே அவ்வளவாக காற்று இல்லாமலிருந்தது. சமையலறையில் பாத்திரங்களின் சத்தங்கள் லேசாய் கேட்டபடி இருந்தன. திறந்திருந்த கதவின் வழியே வெளிச்சமான ஹாலில், சோபாவில் நடராஜன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பது தெரிந்தது. தன் மகன் கட்டிய சொந்த வீட்டில் இருக்கிறோம் என்னும் பெருமிதத்தை காணமுடிந்தது.

 

ஊரில் அப்பா இப்படித்தான் காலையிலேயே புறப்படுவார். தன் குழந்தைகள் தலையெடுக்கிற வரை நடராஜன் தினமும் சைக்கிள் மிதித்து பல ஊர்களுக்குச் சென்று துணிமணிகள் விற்று வந்தார். இரவிலும் நேரம் கழித்துத்தான் வருவார். அலைந்து திரிந்து  மனிதர்களோடு பழகிப் பழகிப் பெற்ற அறிவை அவருக்குள்ளேதான் வைத்துக் கொண்டார். வீட்டில் அவரோடு இருந்தது,  பேசியது என நினைவில் இல்லை. ஒரு தடவை நண்பர்களோடு தூரத்து ஊரில் நடந்த கிரிக்கெட் போட்டிக்கு மூர்த்தி பஸ்ஸில் சென்றபோது, ஆள் அரவமற்ற நீண்ட சாலையில் தனியாய் எதிர் காற்றில் துணி மூடை பாரத்தை வைத்து உன்னி உன்னி சைக்கிள் அழுத்திய தன் அப்பாவை பார்க்க நேர்ந்தது. நெஞ்சடைத்துப் போனது. அன்றிரவு அப்பா வந்ததும், அவர் அருகில் போய் ஆசையாய் கையைப் பிடித்துக்கொண்டது அழியாமல் இருக்கிறது.

 

அவரிடம் எது குறித்தும் அதிகமாக ஏன் பேசத் தோன்றவில்லை என்னும் கேள்வி மூர்த்தியிடம் இருக்கிறது. அவருக்கு எதாவது உடம்பு சரியல்லா விட்டால் துடித்து அருகில் இருந்து பார்த்துக் கொள்ள முடிகிறது. சாதாரண நேரங்களில் அவரிடம் ஒரு இடைவெளியோடு இருப்பதையும் நினைத்துப் பார்த்திருக்கிறார். வேண்டும் என்று அப்படி இருப்பதில்லை என்பதும் இயல்பாகவே அப்படித்தான் இருக்கிறோம் என்பதும் பிடிபடுகிறது.  சந்திராவும் நடராஜனிடம் அப்படித்தான் நடந்து கொள்கிறார். அவராக எதாவது பழைய கதைகளை ஆர்வத்துடன் பேசினால் கூட ஒப்புக்குத்தான் கேட்கிறார்கள். ஒன்றிரண்டு சம்பிரதாய வார்த்தைகளோடு வீட்டுக்குள் நடமாடுகிறார்கள். அப்பாவோ தன்னுடனும் சந்திராவுடனும் பேசுவதற்கு ஏங்குகிறார் என்பது மூர்த்திக்குத் தெரியும். தனக்கு அப்பாவிடம் கடக்க முடியாத ஒரு மௌனம் இருப்பதாகவே தோன்றுகிறது. தனக்கும்  நரேனுக்கும் இடையேயும் அப்படித்தான் இருக்குமோ எனச் சங்கடமாய் இருந்தது.

 

நரேனும், நடராஜனும் அப்படி இல்லை. தோளில் கை போட்டுக்கொள்வார்கள். கதைகள் பேசிக்கொண்டு, கிண்டல் செய்து கொண்டு, சண்டை போட்டுக் கொண்டு  இருப்பார்கள். அவனிடம் மனம் விட்டுப் பேசுவார். அவன் வருகிறான் என்றால், நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருப்பார். போன தடவை வந்த போது, “தாத்தா, இனி நீங்க காலைல வாக்கிங் போகும்போது டீ ஷர்ட்டும், இந்த டிராக் ஷுட்டும் போடுங்க.” என சென்னையில் வாங்கி வந்திருந்த இரண்டு செட் டிரெஸ்ஸை கொடுத்தான்.  அவர் வெட்கப்பட்டார். “ஓல்டு மேன், நவ் யூ ஆர் அ மாடர்ன் மேன்” என அவரைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான்.  நடராஜன் அதைத்தான் மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு காலையில் வாக்கிங் போகிறார். தெருவில் தெரிந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கும் போது, “எம் பேரன் வாங்கித் தந்தது” என பெருமை பொங்கச் சொல்கிறார்.

 

சந்திராவுடன் மணிக்கணக்காக நரேனால் பேச முடிகிறது. தினமும் காலையும், இரவிலும் கண்டிப்பாய் பேசி விடுவான். மூர்த்தியிடம் எப்போதாவது, “ஹாய் டாட்” என்பதோடு சரி. “ரிடையர் ஆன பிறகு இந்த வீட்டை வித்துட்டு சென்னையில ஒரு பிளாட் வாங்கிருவோம்” வெகு சாதாரணமாகச் சொல்கிறான் நரேன். அவனுக்கே என்று நினைவுகள் நிரம்பிய எதுவும் கிடையாதா என்று விசித்திரமாய் இருக்கிறது. பாதுகாத்து வைப்பதற்கு எதுவும் இல்லாத வாழ்வில் என்ன சுவராசியம் இருக்கும் எனத் தெரியவில்லை. எப்போதாவது ஊருக்கு அவனை அழைத்துச் சென்றாலும் கொஞ்சம் கூட யாருடனும் ஒட்ட மாட்டான். கம்ப்யூட்டர், மொபைல்களோடு கிடந்து மனிதர்களின் அருமை தெரியாமல் போய் விடும் போலிருக்கிறது. போராடிக்கிறது என்பான். எப்போது வீடு திரும்பலாம் என தவிப்பான். தன் காலத்துக்குப் பிறகு வழிவழியாய் வந்த சொந்தங்களும், அடையாளங்களும், உறவுகளும் அவனோடு எப்படி தொடர்பில் இருக்கும் என்பது புதிராக இருக்கிறது.


போன் அடித்தது. நரேன். எடுத்தார். “சொல்லுங்கப்பா” என்றான்.

 

“அம்மா ரொம்ப சங்கடப்படுறாங்கப்பா. ஏன் பூங்குழலி அப்படி பேசுனா? என்னடா நடந்துச்சு.”

 

“புரியுதுப்பா. அம்மாதான் மாறி மாறி போன் செஞ்சு எல்லாத்தயும் குழப்பியிருக்காங்க. அடிக்கடி போன் செய்யாதீங்கன்னு நா சொன்னேன். கேக்கல”

 

“சரி இருக்கட்டும். அதுக்கு இப்படியா பேசுறது..”

 

நரேன் அமைதியாக இருந்தான்.

 

“சொல்லு நரேன்.”

 

“ஷி இஸ் நாட் ஸச் எ கேர்ள். பப்புக்கு போக மாட்டா. வேணும்னு சொல்லியிருக்கா?”

 

“நா அதக் கேக்கல. அவ பப்புக்கு போகட்டும். தண்ணி அடிக்கட்டும். ஒங்க ஆம்பளப் பையனக் கேளுங்கன்னு எதுக்கு சொன்னா?”

 

“தெரிலப்பா.”

 

“அவ தியேட்டர் விட்டு போகும்போது சந்தோஷமாத்தான போனா?”

 

“ஐ திங் ஸோ..”

 

“நரேன், உனக்கு அவளப் பிடிச்சிருக்கா?”

 

“ஆமாம்ப்பா. ரொம்ப பிடிச்சிருக்கு”

 

“அவளுக்கு உன்னப் பிடிச்சிருக்கா?”

 

“தெரிலப்பா..”

 

“ஸம் திங் இஸ் ராங். அந்தப் பொண்ணு கிட்ட நான் நேர்ல வந்து பேசலாம்னு தோணுது”

 

“இல்லப்பா… நானே பேசி சரி பண்னிருவேன். இரண்டு மூனு நாள் டைம் கொடுங்க.”

 

“ ம்.. பாப்போம். நா அவங்க மாமா முருகேசன் கிட்ட பேசியிருக்கேன்”

 

“அப்பா, நீங்க கோபமாவும் வருத்தமாவும் இருக்கீங்க. வேண்டாம்ப்பா. நா பாத்துக்குறேன். அம்மாட்ட ஸாரி கேட்டேன்னு சொல்லுங்க..” நரேன் வைத்து விட்டான். அவன் குரல் தழுதழுத்த மாதிரி இருந்தது. பாசமும் இருந்தது. அடிபட்ட வலியும் தெரிந்தது. எதோ மறைக்கிறான் அல்லது சொல்லத் தயங்குகிறான் என்பதை புரிந்து கொண்டார். உள்ளே வந்தார்.

 

“என்னய்யா, கார் டிரைவருக்கு போன் பண்ணிட்டியா?” நடராஜன் திரும்பவும் கேட்டார்.

 

“இல்லப்பா. நாம அடுத்த வாரம் ஊருக்குப் போவோம்”

 

நடராஜனுக்கு ஒன்றும் புரியவில்லை. முகம் முழுவதும் ஏமாற்றம் அப்பியிருந்தது.

 

(தொடரும்)

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. கதை சற்று விறுவிறுப்பாக செல்கிறது...திருமணம் நடக்குமா நடகாதா..? நடக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது... ஆனால் பல பிரச்சனைகளை தாண்டி...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!