க்ளிக் - 13 (தொடர்கதை)


கால்கள் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொண்டாள். கைகளை அகல விரித்துக் கொண்டாள். “இங்கே பாருங்க..”  என்றாள்.

 

ஹாஸ்டல் வராண்டாவில் அங்கங்கு நின்றிருந்தவர்கள் இவளைத் திரும்பிப் பார்த்தார்கள். அறையின் வாசலில் நின்றிருந்தாள் ஸ்ரீஜா.

 

“இப்போ பாருங்க…” மேலும் சத்தமாய் சொன்னாள். திரும்பிப் பார்த்தாள். ஸ்ரீஜா அங்கு இல்லை.

 

மூச்சை முழுவதுமாய் உள்ளிழுத்தாள். கைகள் இரண்டும் மெல்ல நெளிந்து நெளிந்து நடனம் போல அசைந்தன. பின் உயர்ந்து தாழ்ந்து சிறகைப் போல வீசின.

 

பஞ்சைப் போல மிதக்க ஆரம்பித்தாள். அசோகா மரங்களைத் தொடுவது போல உரசிச் சென்றாள். மேலே மேலே எழும்பினாள் . கீழே நின்றிருந்தவர்கள் கைகளை உயர்த்தி ஆரவாரித்தார்கள். சின்ன உருவங்களானார்கள். மரங்கள், கட்டிடங்கள்  எல்லாம் அடியில்  சென்று கொண்டேயிருந்தன. ஜிவ்வென்று இருந்தது. ஒவ்வொரு அணுவும் புல்லரித்தது. காற்றும் இவளும் மட்டுமே. ஹோவென்று கத்தினாள். கத்திக்கொண்டே இருந்தாள். போதும் என விரித்த கைகளை கீழிறக்கினாள். அசைந்து நிதானமாக காற்றில் தரை நோக்கி நழுவ ஆரம்பித்தாள். ஹாஸ்டல் வராண்டவில் போய் இறங்க வேண்டுமே என்றிருந்தது. சம்பந்தமில்லாமல் வேறொரு இடம் நோக்கிச் செல்வதாய் உணர்ந்தாள். ஒன்றும் பிடிபடவில்லை. நேர்  கீழே எலக்டிரிக் கம்பிகள் போய்க்கொண்டு  இருப்பதைப் பார்த்தாள். விலகிட நினைத்தாள். கைகளையும் கால்களையும் அசைத்தாள். முடியவில்லை. ஐயோ என்று கண்களை மூடிக் கொண்டாள். ’பயப்படாதே… பயப்படாதே. ஒன்றும் ஆகாது” ஒரு குரல் ஆழத்திலிருந்து கேட்டது. பிரகாஷின் குரல் போலிருந்தது. இறங்கியபடி இருந்தாள். “அப்படித்தான் வா….வா..” பிரகாஷ் அழைத்தான். இலைகளில் உரசுவது போலிருந்தது. கண்களைத் திறக்க  முடியவில்லை.  தவித்தாள். பூக்களின் ஸ்பரிசம் உணர்ந்தாள். திணறித் திமிறி இமைகளைப் பிரித்தாள். அடைபட்டிருந்த மூச்சை விட்டுக் கொண்டாள்.

 

முகத்தின் அருகே கட்டிலில் தன் சிறுமுகம் சாய்த்து குறுகுறுவென்று குழந்தை ஒன்று பார்த்துக் கொண்டிருந்தாள். யாழினி! அவளது பிஞ்சுக் கரங்களால் இவள் முகத்தில் தட்டிக் கொண்டிருந்தாள். விடிவதற்கு முன்பே கலைச்செல்வன் வீட்டிற்கு வந்தது, படுத்தது எல்லாம் பூங்குழலிக்கு புலப்பட ஆரம்பித்தது. ஜன்னலுக்கு வெளியே  தென்னை மரமும், பளீரென்று வானமும் தெரிந்தது. எழுந்து யாழினியை வாரி எடுத்து, “ஹேய் டார்லிங்’ என  உச்சி முகர்ந்தாள். முத்தம் கொடுத்தாள். அவள்  “அம்மா”வென சிணுங்கிக் கொண்டு இவளை விட்டு இறங்குவதற்கு கால்களை நீட்டி துடித்தாள்.

 

இறக்கி விட்டாள். கொலுசுச் சத்தம் கேட்க பாய்ந்து ஓடினாள். வாசல் அருகே போனதும் நின்று இவளைத் திரும்பிப் பார்த்தாள். கன்னங்குழிகள்  எல்லாம் மலர்ந்து சின்ன உதடுகள் விரிய சிரித்தாள். “வாம்மா…” என கெஞ்சியவாறு இவள் கைகளை நீட்டினாள். உடலெல்லாம் குலுங்கச் சிரித்து வெளியே ஒடினாள்.

 

“வாலு வந்து உன்னை எழுப்பிட்டாளா?” கேட்டுக் கொண்டே கலைச்செல்வன் எட்டிப் பார்த்தான்.

 

“மணி என்னண்ணா?”

 

“ஒன்பது”

 

“நீ பேங்க்க்கு கிளம்பலயா?’

 

“இன்னிக்கு ஃபோர்த் சாட்டர்டே. லீவுதான். பிரஷ் பண்ணிட்டு வர்றியா?”

 

“இன்னும் கொஞ்சம் தூங்கிக்கிறேன்.” படுக்கையில் திரும்பவும் சுருண்டு கொண்டாள். அறைக்குள் திரும்பவும் யாழினியின் கொலுசு சத்தம். எழுந்து உட்கார்ந்தாள். இவளைப் பார்த்ததும்  சிரித்தபடி திரும்பி ஓடினாள்.  பின்னர் கதவு அருகில் நின்று பார்த்தாள். “ஏஞ் செல்லம்! இங்க வா” கைகளை நீட்டினாள். மாட்டேன் என்பதாய் தலையை ஆட்டினாள். கட்டிலில் இருந்து இறங்குவது போல பாவனை செய்தாள் இவள். சிரிப்பும், கொலுசும் சேர்ந்து சத்தமெழுப்ப ஓடினாள் யாழினி.

 

இவள் தனது பையை கீழிருந்து தூக்கி கட்டிலில் வைத்து பிரஷ்ஷை எடுத்தாள். யாழினி திரும்பவும் கதவருகில் வந்து மெல்ல எட்டிப் பார்த்தாள். திரும்பவும் கட்டிலை விட்டு இறங்கப் போனாள். குழந்தை சிரித்துக் கத்தி ஒடினாள். “யாழினி… மெல்ல..” என கலைச்செல்வன் குரல் ஹாலில் இருந்து கேட்டது. சிறிது நேரம் கழித்து திரும்பவும் கதவருகில் வந்து சத்தம் போடாமல் எட்டிப் பார்த்தாள் யாழினி. இவளுக்கு அந்த விளையாட்டு அலுப்பாய்த் தோன்றினாலும், குழந்தை ஏமாந்து விடக் கூடாதே என திரும்பவும் கட்டிலை விட்டு இறங்குவது போல பாசாங்கு செய்தாள். அவள் கலகலவென ஒடினாள்.

 

குழந்தைகள் திரும்ப திரும்பச் செய்து எதையும் விளையாட்டாக்கிக் கொள்கின்றனர். சிரிப்பும், குதூகலமும் குறைவதே இல்லை. பெரியவர்கள்தான் அலுத்துப் போகிறோம், எரிந்து விழுகிறோம். நரேனின் அம்மாவிடம் அமைதியாகப் பேசி இருக்கலாம் என்று தோன்றினாலும், “எங்க இருக்க?” என்ற கேள்விக்கு அப்படி கொடுத்ததுதான் சரியென்று இருந்தது. அதில் ஒரு சந்தோஷமும் இருக்கவே செய்தது. கடற்கரையில் எடுத்த செல்பியை மகன் அனுப்பினான். சரி. பார்த்தோமா, ரசித்தோமா என்றில்லாமல் உடனே ஒரு போன்.  “எங்க இருக்கீங்க “ என விசாரிப்பு. தியேட்டரில் இருவரும் சேர்ந்து படம் பார்க்கிறார்கள் என்பதில் ஒரு சுவாரசியம். படம் முடிந்ததும் மகனுக்குத் திரும்பவும் போன். நடந்ததை மறைத்து ஃபிரண்டு போன் பண்ணியதால் பாதியில் சென்று விட்டாள் என அவன் உளறியிருக்க வேண்டும். எதோ ஏமாற்றம். உடனே இவளுக்கு போன். எல்லாவற்றிலும் இப்படி தலையிடுவது, என்ன நடந்தது என தெரிந்து கொள்ள அலைவது எல்லாம் சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. இவளுக்கு அருவருப்பாய் இருந்தது.

 

யாழினி திரும்பவும் கதவருகில் தோன்றினாள். இந்த தடவை உண்மையாகவே இவள் கட்டிலில் இருந்து இறங்கி அவளைப் பிடிக்கப் போனாள். சிரித்துக் கொண்டே சமையலறைக்கு ஓடி சரண்யாவின் கால்களோடு ஒட்டிக் கொண்டாள். நைட்டிக்குள் முகத்தை பொத்திக் கொண்டாள்.  “யாழினி” என செல்லமாய் அதட்டிக்கொண்டே தோசை சுட்டுக் கொண்டிருந்தாள் சரண்யா. இவள் புன்னகைத்துக் கொண்டே ‘அண்ணி குட்மார்னிங்’ சொல்லி சமையலறை தாண்டி பின்பக்கம் பாத்ரூம் போனாள்.

 

முகத்தை அம்மாவிடமிருந்து விலக்கிப் பார்த்து யாரையும் காணாமல் பூங்குழலி படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தாள் யாழினி. இருந்த இன்னொரு படுக்கையறை சென்று பார்த்தாள். வெளியே ஹாலுக்குச் சென்று பார்த்தாள். கலைச்செல்வன்  டி.வி பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தை ஒன்றும் புரியாமல் விழித்து முகம் வாடினாள். அப்போது விளம்பரத்தில் வந்த நாய்க்குட்டியைப் பார்த்ததும் டி.வி அருகில் போய் நின்று கொண்டாள். முகம் சட்டென்று மலர்ந்தது. அதை நோக்கி கைகளை நீட்டி சிரித்து குதித்தாள்.

 

முகம் கழுவி வந்த பூங்குழலி துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே சோபாவில் கலைச்செல்வன் அருகில் உட்கார்ந்தாள். திரும்பிப் பார்த்து அவன் புன்னகைத்தான். ’ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்து வரும்  முதலமைச்சர் ஜெயலலிதா  விரைவில் உடல்நலம் பெற தி.மு.க தலைவர் கருணாநிதி வாழ்த்தினார்’ செய்தியில் கவனம் செலுத்தினார்கள். டிவியில் இருந்து விலகிய யாழினி கலைச்செல்வனிடம் வந்து ஒட்டிக் கொண்டு இவளைப் பார்த்து சிரித்தாள். பூங்குழலி கைநீட்டினாள். வரமாட்டேன் என்பதாய் தலையசைத்தாள். “ரொம்பத் தெரிஞ்சவ போல சிரிக்குறா, பழகுறாளே” ஆச்சரியப்பட்டாள் பூங்குழலி.

 

“நிச்சயதார்த்தத்துக்கு வந்தப்ப. மேடையில நீ நின்னத, உட்கார்ந்திருந்தத எல்லாம் சரண்யா போட்டோ எடுத்திருந்தா. போன்ல அதக் காட்டினா. யாருன்னு இவ உம்முகத்துல கைய வச்சு கேட்டா. பூவத்தைன்னு சொன்னா. அந்த பூவத்தையப் பிடிச்சுக் கிட்டா.  போனை எடுத்தா பூவத்தக் காட்டுன்னு கேப்பா. சரண்யா காட்டுவா. நேத்து ராத்திரி படுக்கப் போகும்போது பூவத்தை வர்றாங்கன்னு சொன்னா.  காலைல முழிச்சு வந்தவ நீ தூங்குறதப் பாத்தா. அதுலயிருந்து ஒரே ஒட்டமும் சாட்டமுமா இருக்கா. மூனு வயசாய்ட்டு.  எல்லாம் தெரியுது கழுதைக்கு” சிரித்தான்.

 

அவளருகே குனிந்து,  “நா யாரு?” என்றாள்.

 

“பூ..த்..த” என இழுத்துச் சொல்லி சிரித்தாள்.

 

“எஞ்செல்லம்..” இழுத்து அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.  அவள் திமிறி கலைச்செல்வனிடம் ஒட்டிக்கொண்டு இவளைப் பார்த்தாள்.

 

“போன தடவ வந்தப்போ நடந்துக்கிட்டு இருந்தா. இப்ப பாரேன். என்னா ஓட்டம்?”

 

“ஓடுறது என்ன? பறக்கவேச் செய்வா எந்தங்கம். என்னம்மா?” குழந்தையை வாரியணைத்து முத்தமிட்டன் கலைச்செல்வன்.

 

“அண்ணா, இன்னிக்குக் காலைல பறக்குற மாதிரி கனவு கண்டேன்!” இவளது ஆச்சரியத்தைப் பார்த்து கலைச்செல்வன் ரசித்தான். “ஆமாண்ணா, பறக்குற மாதிரி கனவு அடிக்கடி வரும். ரொம்ப ஈஸியா பறப்பேன்” மேலும் ஆச்சரியமாய் கண்களை விரித்துச் சொன்னாள்.

 

“எங்கயிருந்து பறந்த?”

 

“ஹாஸ்டல்லயிருந்து…”

 

“அதான் பறந்து வந்துட்டியே” சிரித்துக்கொண்டே அவளது கைகளைப் பற்றிக் கொண்டான்.

 

ரொம்ப நாட்கள் கழித்து பறக்கும் கனவு வந்திருந்தது. சின்ன வயதிலிருந்து அடிக்கடி வருகிற கனவாகத் தெரிந்தது. முன்பு கண்ட பறக்கும் கனவுகள் எதுவும் நினைவில் இல்லை. அந்தரத்தில் பறக்கும்போது அடைந்த சிலிர்ப்பு பழக்கமானதாக இருந்தது. ஒரு தடவையும் சரியாய் இறங்க முடிந்ததே இல்லை. ஸ்ரீஜா என்று அதில் கண்ட பெண்ணின் முகம் இப்போது சரண்யா போலிருந்தது. கேட்டது பிரகாஷின் குரல்தான். அவன் எங்கேயோ இருந்து அழைக்கிறான். கனவுகளை முழுசாக அப்படியே திரும்ப நினைத்துப் பார்க்க முடிவதில்லை. அங்கங்கே கலைந்து கலைந்து முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் ஆகி விடுகிறது.

 

காபியைக் கொண்டு வந்து பூங்குழலியிடம் கொடுத்தாள் சரண்யா. “ஏங்க, சாப்டுறீங்களா.” கலைச்செல்வனிடம் கேட்டாள். சரியென்றவன், “பூவு டிபன் சாப்பிடலாமா?” என்றான்.

 

“இல்லண்ணா, கொஞ்ச நேரம் ஆகட்டும். நீ சாப்பிடு “ என்றவளுக்கு போன் ஞாபகம் வந்தது. போய் எடுத்து வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். சரண்யா பின்னால் யாழினியைத் தூக்கிக் கொண்டு கலைச்செல்வன் சென்றான்.

 

போனை ஆன் பண்ணி கோடுகள் இழுத்து அன்லாக் செய்தாள். செட்டிங்கில் போய் சித்ரா, சந்திரா, முருகேசன், நரேன் நம்பர்களை பிளாக் செய்தாள். கலைச்செல்வனுக்கு யாரும் போன் செய்ய மாட்டார்கள் என்று தெரியும். சொந்தத்தில் சபாபதி தாத்தாவைத் தவிர வேறு யாரும் அவனோடு பேசுவதில்லை. ரவிச்சந்திரனின் அண்ணன் உதயச்சந்திரன் கூட இன்னும் சரியாய் பேசுவதில்லை. “சாதி கெட்ட பய… போயும் போயும் குடும்பம் நடத்த எங்க போயிருக்காம் பாரு” என இவளது மாமா முருகேசனோடு சேர்ந்து அந்த நேரத்தில் குதி குதி என குதித்திருந்தார்.  கொஞ்சநாள் ஊர் முழுக்க அதுதான் பேச்சாய் இருந்தது. கலைச்செல்வனும் சரண்யாவும்  படித்து பேங்க்கில் வேலை பார்த்து சொந்தக்காலில் நிற்க முடிந்ததால் பிழைத்தார்கள்.

 

முன்பு இருந்த வேகம் இந்த அஞ்சு வருஷத்தில் குறைந்திருந்தாலும் கோபம் மட்டும் அணையாமல் இருந்தது. தான் பெத்த மகனைப் பார்க்க வேண்டும்,  அவன் பெத்த பேரனை கொஞ்ச வேண்டும் என சித்ராவுக்கு ஆசை இருந்தது. நிச்சயதார்த்தத்தின் போது கலைச்செல்வனோடு ஒரு வார்த்தையும் பேசவில்லை. இருக்கும் சொந்த பந்தங்களையும் ஊரையும் தன் மகனுக்காக பகைத்துக் கொள்ள துணியவில்லை. அவர்களது கோபமும் வெறுப்பும் தனக்கும் இருப்பதாக  காட்டியாக வேண்டும். நிச்சயதார்த்தத்துக்கு கலைச்செல்வன் வரக் கூடாது என்றால் எங்கே பூங்குழலி தனக்கு கல்யாணமே வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ என அனைவரும் அமைதியாய் இருந்தனர். பழகிய ஊரில், கூடவே வந்த சொந்தங்களில் சபாபதி தாத்தாவைத் தவிர ஒருவரும் அன்று கலைச்செல்வனோடு பேசவில்லை

 

இதோ, தன் கூடப் பிறந்த அண்ணனின் வீட்டில் உரிமையோடு இருக்கிறாள். யாழினி சிரித்து விளையாடுகிறாள்.  “பூ..த்..த..” என உயிர் உருக கூப்பிடுகிறாள். அண்ணியின் அன்பு கண்களில் தெரிகிறது. இந்த இடமே நிம்மதியாகவும், ஆதரவாகவும் இருக்கிறது. அன்றைக்கு இந்த மூன்று பேரும் சம்பந்தமில்லாமல் அந்த மொத்தக் கூட்டத்தில் தனியாய் நின்ற காட்சி வந்து வதைத்தது.. அண்ணனுக்கு அந்த அவமானமும் வலியும் எப்படி இருந்திருக்கும், எல்லாவற்றையும் தன் ஒருத்திக்காக பொறுத்துக் கொண்டு வந்தார்களே,  என்று நினைத்தாள். எழுந்து போய் சாப்பிட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு முத்தம் கொடுத்தாள். “பூவு… என்னம்மா” என அவன்  இவளை அருகில் இருந்த சேரில் உட்கார வைத்தான். நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்கள் ததும்பி நின்றன.

 

“பூங்குழலி….” பிரியத்தோடு சரண்யா இவளருகில் வந்து தலையை கோதி விட்டாள். அவ்வளவுதான். பெரும் கேவலோடு எழுந்து அண்ணியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வெடித்து அழுதாள். ”ஏய் என்னாச்சும்மா..” என அவளை தன்னில் சாய்த்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தாள்  சரண்யா. என்ன ஏதென்று தெரியாமல் யாழினியும் சேரில் ஏறி சரண்யாவின் மீது சாய்ந்து  கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

கலைச்செல்வன் சாப்பிடுவதை நிறுத்தி, “பூவு…. பூவும்மா” என அழைத்துக் கொண்டிருந்தான். உடல் லேசாய் வெட்டிக் கொண்டிருந்தது. அவன் சாப்பிட வரும்போது சாதாரணமாகத்தான் இருந்தாள். அதற்குள் என்ன ஆனது என்று அவனுக்குப் புரியவில்லை. எளிதில் கலங்குகிறவள் இல்லை.  எப்படி திடுமென உடைந்து அழுகிறாள் என ஆச்சரியமாகவும் இருந்தது. எழுந்து கை கழுவி யாழினியைத் தூக்கிக் கொண்டான். “பூம்மா” என்றான். இவள் மெல்ல அடங்கிக் கொண்டிருந்தாள்.

 

சரண்யா  அவனைத் திரும்பி பார்த்து, “பெரிய குழந்தை” என்று சிரித்தாள்.

 

வாசலில் யாரோ வருவது போலிருந்தது.  எட்டிப் பார்த்தான்.

 

“சரண்யா, உங்கம்மா வர்றாங்க.”

 

இரண்டு தெரு தள்ளி சரண்யாவின் அம்மாவும் அப்பாவும் இருக்கிறார்கள். தினமும் காலையில் கலைச்செல்வனும், சரண்யாவும்  வேலைக்குக் கிளம்பும் போது அவர்கள் வீட்டில் யாழினியை விட்டுச் செல்வார்கள்.

 

“பேத்திய இன்னிக்குப் பாக்கலியேன்னு வந்திருப்பாங்க.” என்றாள் சரண்யா.

 

பூங்குழலி சரண்யாவிடமிருந்து விலகி கண்களைத் துடைத்துக் கொண்டாள். உள்ளே வந்த சரண்யாவின் அம்மா இவளைப் பார்த்ததும், “வாங்கம்மா”  மரியாதையாக கும்பிட்டார். இவளும்  “வாங்க அத்தை” என்று கும்பிட்டு பாத்ரூம் சென்றாள்.

 

“என்ன, வாங்கம்மா போங்கம்மான்னு? சின்னப் பொண்ணு அவ. வா போன்னு சொல்லுங்க” சிரித்துக் கொண்டே சொல்லி “உக்காருங்க..” என்று சேரைக் காட்டினான் கலைச்செல்வன்.

 

“பாட்டி..” என்று அவரிடம் பாய்ந்தாள் யாழினி.

 

“அம்மா காபி போடவா” சரண்யா கேட்டாள்..

 

“இல்லம்மா. கடைக்கு போறேன். யாழினி ஆசைப்படுவாளே. கூட்டிட்டு போலாமேன்னு வந்தேன்.” சிரித்தார்.

 

“பாட்டி! போவோம்” என யாழினி பாட்டி கையைப் பிடித்துக் கொண்டு அழைத்தாள்.

 

“சரி, இருங்க வர்றோம்..” பாட்டியும், பேத்தியும் கிளம்பினார்கள்.

 

“யாழினி, பாட்டி கைய விடக் கூடாது. பாத்துப் போணும். அத்த! அவளுக்கு சாக்லெட் வாங்கிக் கொடுக்காதீங்க” வாசல் வரைக்கும் போனான் கலைச்செல்வன்.

 

பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பூங்குழலி சேரில் அமைதியாக உட்காந்தாள். துண்டால் முகத்தை துடைப்பது போல மூடியிருந்தாள். எதற்கு அப்படி அழுதோம் என்று தெரியவில்லை. அழுத்தங்கள் குறைந்து அண்ணனின் அருகாமையில்  உடலும் உள்ளமும் இலேசாகிப் போனது தெரிந்தது.

 

“பூங்குழலி , தோசை சுடவா?” கேட்டாள் சரண்யா,

 

சரியென்பதாய் தலையாட்டி, துண்டை எடுத்தாள். கலைச்செல்வன் உள்ளே வந்து அவள் அருகில் உட்கார்ந்தான். “என்னாச்சு பூவுக்கு” என்று இவள் முகம் பார்த்தான்.

 

டைனிங் டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்துவிட்டு அண்ணனை நிதானமாகப் பார்த்து, “அண்ணா, எனக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கல..” என்றாள்.

 

அவன் யோசித்துக் கொண்டு பெருமூச்சு விட்டபடி இவளைப் பார்த்தான்.

 

“ஆமா. எனக்குப் பிடிக்கல.”

 

“ஏம் பிடிக்கல?” குழந்தையிடம் கேட்பது போலிருந்தது.

 

“இப்ப வேண்டாம்னு தோணுது”

 

“அப்ப எப்போ வேணும்”

 

“நீ கிண்டல் பண்ற. நா சீரியஸா பேசுறேன்.”

 

“அதுதான் எதுக்குன்னு சொல்லு”

 

இவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள். சரண்யா அடுப்பருகே நின்று இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“வேற யாரையாவது லவ் பண்றியா. சீரியஸா கேக்கேன்.”

 

“இல்ல” என தலையாட்டினாள்.

 

“பிறகென்ன?”

 

“அவனயும் பிடிக்கல.. அவங்க வீட்டுல உள்ளவங்களையும் பிடிக்கல”

 

சரண்யா தோசையை இவள் முன் கொண்டு வந்து வைத்தாள். கலைச்செல்வன் தன் தங்கையையேப் பார்த்துக் கொண்டிருந்தான். இவள் முகம் கடுமையாகவே இருந்தது. இதைச் சொல்லத்தான் வந்தாளா? பஸ்ஸிலிருந்து இறங்கும் போதெல்லாம் சந்தோஷமா இருந்தாளே. இப்போ அழுதது எதுக்கு? குழம்பிப் போயிருக்கிறாள் என்பது தெரிந்தது.

 

“பையனப் பாத்துப் பேசி சம்மதம் பேசியாச்சு. நிச்சயதார்த்தமும் முடிஞ்சுது . பூவும்மா இதோட சீரியஸ்னஸ்  உனக்குப் புரியுதா?”

 

”புரியுதுன்னா. இப்படியெல்லம் இருக்கும்னு தெரியல. எப்படியிருந்தாலும் போகப் போக ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்குவோம். ஒரு ஹெல்த்தி ரெலேஷன்ஷிப்  வந்துரும்னுதான் நினைச்சேன். அவங்களுக்கு என்னை புரியவே இல்ல. எப்பப் பாத்தாலும் போனப் பண்ணி கழுத்த அறுக்குறாங்க. ஒரு இங்கீதமே இல்லண்ணா.”

 

“இதுதான் பிரச்சினையா?”

 

“ஆபிஸ் வேலை, அதுல இருக்குற டென்ஷன், இன்செக்யூரிட்டி எல்லாம்  தலையே வெடிக்குற மாதிரி இருக்கு. நம்மள புரிஞ்சுக்கிறவங்க கூட இருக்குறது ரொம்ப அவசியம். இவங்க அப்படியில்ல.”

 

“இதெல்லாம் பேசி சரி பண்ணிரலாம். அவங்க கூடவேவா இருக்கப் போறாங்க?”

 

“அப்படி எனக்கு தோணல.”

 

“நரேன்ட்ட நீ பேசலாமே. பேசுவியா?”

 

“அய்யோ, அவங்கிட்டயா? தலையிலதான் அடிச்சுக்கணும். எல்லாத்தையும் அம்மாக்கிட்ட சொல்லிட்டே இருப்பான்.”

 

கலைச்செல்வன் மேலே எதுவும் கேட்காமல் இருந்தான்.

 

“அவன் ஒரு வேஸ்ட்டுண்ணா. இண்ட்ரஸ்டிங்கனா பர்சன் இல்ல.”

 

சரண்யா அடுத்த தோசை ஒன்றைக் கொண்டு வந்து தட்டில் வைத்தாள். “போதும் அண்ணி.” என்றவள், “தியேட்டருக்கு படம் பாக்கப் போனோம். கையைப் புடிச்சு இழுத்து வச்சுக்கிட்டு முத்தங் கொடுக்குறான். இதயும் உங்கம்மாக் கிட்ட கேட்டுத்தான் செய்றீங்களான்னேன். கையை விட்டுட்டான்.” என்று எரிச்சலோடு சொல்லி தண்ணீர் குடித்தாள்.

 

அடக்க முடியாமல் , “ஹஹ்ஹா…ஹ்ஹா..” என சத்தம் போட்டு சிரித்தாள் சரண்யா. கஷ்டப்பட்டு அடக்க முயற்சித்தாள். பார்த்துக் கொண்டிருந்த கலைச்செல்வனுக்கும், பூங்குழலிக்கும் சிரிப்பு வந்தது. அதை மீறிய கோபத்தில், “பின்ன என்ன அண்ணி? ஒரு விவஸ்தை வேண்டாம்” என்றாள்.

 

“பூங்குழலி! கல்யாணத்துக்கு முன்னால உங்கண்ணனும் அதெல்லாம் பண்ணவர்தான்” என்று மீண்டும் சிரித்தாள் சரண்யா.

 

பொய்யான கோபத்தோடும் கொஞ்சம் வெட்கத்தோடும் கலைச்செல்வன், “சரண்யா, நிறுத்துறியா” என்றான்.

 

“மே பி. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிங்க. அண்னனுக்கு உங்களையும், உங்களுக்கு அண்ணனையும் தெரியும். என்னப் பத்தி அவனுக்கு என்ன தெரியும். நான் ஒரு பெண். அவன் ஒரு ஆண். அது மட்டுந்தானே அவனுக்குத் தெரிஞ்சிருக்கு.” என கடுமையாக குறுக்கிட்டாள் பூங்குழலி.

 

அந்த இடம் அமைதியானது. கலைச்செல்வனின் மொபைல் அடித்தது. ‘சபாபதி தாத்தா.” என்று ஆங்கிலத்தில் இருந்ததை பூங்குழலியிடம் காட்டிவிட்டு எடுத்தான்.

 

“சொல்லுங்க தாத்தா…”

 

“………………”

 

“ஆமா தாத்தா, நேத்து சாயங்காலம் இங்க வந்துட்டேன்.”

 

“………….”


“ஆமா, தாத்தா..”

 

“…………… “

 

“அப்படியா….. எனக்குத் தெரியாது”

 

“…………… “

 

“பூவா… இல்லைய தாத்தா. இங்க வரலயே. என்ன விஷயம் தாத்தா?”

 

(தொடரும்)

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அடுத்த அத்தியாயத்திற்காக
    ஆவலுடன காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தன் மனதில் உள்ளதை பகிர்ந்துக்கொள்ள ஒரு அண்ணன் இருக்கிறார் பூங்குழலிக்கு... இப்போது அது அவளுக்கு தேவை...! குழந்தை யாழினியின் நிஜமான குறும்பு அருமை... பறக்கும் கனவு எல்லோருக்கும் வரும் போல.. கோபத்துடன் இருக்கும் பூங்குழலி மனம் மாறுவாளா..!!??? அறிய ஆவல்.. அடுத்து என்ன நடக்கும்??? எதிர் பார்க்கிறேன்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!