க்ளிக் - 12 (தொடர்கதை)


படிக்கெட்டுகளில் கவனமாய் கால் வைத்து பஸ்ஸை விட்டு இறங்கி தரையில் கால் வைத்ததும்  நிமிர்ந்தாள் பூங்குழலி. எதிரே கலைச்செல்வன் வந்து நின்றிருந்தான். “பூவும்மா..” என ஆசையோடு அவள்  கையில் இருந்த பையை வாங்கப் போனான். “இருக்கட்டும்ணா” என முதுகில் மாட்டிக் கொண்டாள்.

 

“தூங்கினியா” கேட்டுக்கொண்டே பூங்குழலியின் கையைப் பிடித்துக் கொண்டு கொஞ்சம் தள்ளி இருந்த பைக்கை நோக்கி நடந்தான் கலைச்செல்வன்.  

 

“ம். விழுப்புரம்லாம் தாண்டின பிறகுதான் தூக்கம் வந்துச்சு. அப்புறம் மேலூர் வரும்போது நீ போன் பண்ணதும் முழிச்சேன். சரி, நீ தூங்கினியா.” சிரித்தாள். மொபைலை பார்த்தாள். மணி நாலே கால். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், அதைத்தாண்டி சாலை, வரிசையாய் இருந்த கடைகள் எல்லாம் விளக்குகளின் வெளிச்சத்தில் பளீரென்றிருந்தது. அதற்கப்பால் வெளியும், வானமும் இருட்டாய் இருந்தது.  பெரிய தூணின் கீழே ஈரம் சொட்டும் பூக்களை பரப்பி வைத்திருந்த ஒரு அம்மா “வாம்மா..” என இவளது முகத்தைப் பார்த்தார்.

 

“பத்து மணிக்கு பஸ்னு சொன்னியா? அப்ப நாலு மணிக்குப் போல மதுரைக்கு வரும்னு மூன்றைக்கு அலாரம் வச்சேன்.”என்றான். கலைச்செல்வன்   பற்றியிருந்த  தன் கையை விடுவித்து அப்படியே அவனது வலது கையை தனது இடது கையால் கட்டிக்கொண்டாள். சிரித்தாள். அண்ணனைப் பார்த்ததும் குழந்தையாகி விட்டதைப் போல உணர்ந்தாள். குழந்தையாய் இருந்ததிலிருந்து பார்த்தவர்களிடம்  தானாகவே குழந்தையாகி விடுகிறோம். இப்போது யாழினியைத் தூக்கி வைத்துக் கொண்டு இருப்பதைப் போல சின்ன வயதில் இவளைத் தூக்கிக் கொன்டு அலைந்தவன். “ஒங்கண்ணனுக்கு அப்ப ஆறு எழு வயசுதா இருக்கும். எப்பப்பாத்தாலும் பெரிய மனுஷங் கணக்குல உன்னத் தூக்கி வச்சிக்கிட்டு அலைவான். எங்களுக்கு பயமா இருக்கும்.” என்று சித்ரா இவளிடம் நிறைய தடவை சொல்லியிருந்தாள்.

 

கலைச்செல்வன் பைக்கை ஸ்டார்ட் செய்யவும் பின்னால் ஏறிக்கொண்டாள். அவன் தோளில் உரிமையோடு கை வைத்துக் கொண்டாள். ஆண்டவன் கட்டளை போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. நேற்று மாலை நரேனுடன் பைக்கில் சென்றது, அதன்பின் நடந்தது எல்லாம் திரும்பவும் நினைவுக்கு வந்தன.

 

ஹாஸ்டலுக்குள் நுழைந்ததும் ஸ்ரீஜா இருக்கிறாள் என்பது ஆதரவாய் இருந்தது. அவளோடு  இருக்க வேண்டும் என்று தோன்றியது. சென்னையிலிருந்து எங்காவது சென்று விட வேண்டும் போலவுமிருந்தது. ஸ்ரீஜா ஊருக்குப் போகிறேன் என்றதும், தானும் வருகிறேன் என்றாள் இவள்.

 

எத்தனையோ தடவை ஸ்ரீஜா ஆசையோடு இவளை ஊருக்கு அழைத்திருந்தாள்.  “இன்னொருநாள் வருகிறேன்” என்றே சொல்லியிருந்தாள். இன்று தானும் வருவதாய்ச் சொன்னவுடன், ஸ்ரீஜா சந்தோஷத்தில் அப்படியே இறுக்கக் கட்டிப் பிடித்து “மை பேபி..” என கொண்டாடித் தீர்ப்பாள் என்று எதிர்பார்த்தாள். அவளோ அமைதியானாள். என்னவோ போலிருந்தது.

 

“ஏன்  நரேன் செட்டாக மாட்டான்னு சொல்ற?” கேட்டாள் ஸ்ரீஜா. அவள் குரலில் அக்கறையோ அதிர்ச்சியோ தெரியவில்லை. இவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் எதோ மழுப்புவது போலிருந்தது.

 

“நிறைய பேசணும். அதான் ஊருக்கு வர்றேன்னு சொன்னேன்.” அவள் முகத்தைப் பார்த்தாள் பூங்குழலி.

 

“நா ஊருக்குப் போகல” அவள் அமைதியாய்ச் சொன்னாள்.

 

புரியாமல் கேள்விகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள் இவள்.

 

“நானும் மகேஷும் டேட்டிங் போறோம்” சொல்லிக்கொண்டே இவள் தலையைக் கோதி விட்டாள்.

 

எழுந்து கண்ணாடியில் போய் தன் முகத்தைப் பார்த்தவாறே, “அத மொதல்லயே சொல்லி இருக்கலாமே? ஏங்கிட்ட ஏன் மறைக்கணும்?.” கேட்டாள்.

 

“உங்கிட்ட சொல்ல முடியல. ஒரு மாதிரி இருந்துச்சு”

 

பூங்குழலி ஒன்றும் சொல்லவில்லை. பாத்ரூம் போனாள். தலையை மட்டும் திருப்பி இவளை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள் ஸ்ரீஜா. துணிகளை அடுக்கி வைத்திருந்த பை தயாராக இருந்தது. குனிந்து தலையில் இரண்டு கைகளையும் வைத்து உலுப்பிக் கொண்டாள். கண்ணை மூடிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தாள்.

 

பாத்ரூமிலிருந்து வந்தவள் கட்டிலில் படுத்துக் கொண்டு மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தாள். பூங்குழலி கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்தது.

 

அவள் அருகில் போய் உட்கார்ந்து, “ஸில்லியா பிஹேவ் பண்ணிட்டேன். யூ ஆர் மை லைஃப் அப்படி இப்படின்னு உங்கிட்ட சந்தோஷத்துல எக்கச்சக்கமா உளறியிருக்கேன். மகேஷ் எனக்கு ஒரு ஃபன்   மாதிரின்னு கூட சொல்லியிருக்கேன். அவங்கூட டேட்டிங் போறத நீ எப்படி புரிஞ்சுப்பன்னு தெரில. இட்ஸ் மை மிஸ்டேக். ஒகே வா? ஸாரி.”

 

பூங்குழலி மொபைலில் விரல்களால் தீட்டிக்கொண்டிருந்தாள். 

 

“பேபி… ப்ளீஸ். என்னைப் பாரேன்.”

 

 “ம்  நாங்கூட ஒனக்கு ஒரு ஃபன்தான் இல்ல?” திரும்பிப் பார்க்காமலேயே சொன்னாள் பூங்குழலி.

 

எதோ தீர்மானம் செய்தவளாய் ஸ்ரீஜா எழுந்து பையைத் தூக்கிக் கொண்டு இவள் அருகில் வந்து, “உங்கூட இந்த நேரத்தில் இல்லாம இருக்குறதுக்கு ஃபீல் பண்றேன். இப்போ ஒன்னுதான் சொல்ல முடியும். செட் ஆகலன்னு அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். பேசிக்கலாம்.” என்றாள்.

 

பூங்குழலி எதோ சொல்வதற்கு அவளை நிமிர்ந்து  பார்த்தாள். சட்டென குனிந்து முத்தம் கொடுத்து விட்டு, “யெஸ். திஸ் இஸ் ஆல்ஸோ ஃபன். திங்கக்கிழம பாக்கலாம். பை” வேகமாக கிளம்பிச் சென்றாள் ஸ்ரீஜா.

 

கொஞ்ச நேரம் அப்படியேக் கிடந்தாள் இவள். மனிதர்கள்  விசித்திரமானவர்களாகவும், ஒரு நிலையில்லாமல் இருப்பதாகவும்  தோன்றியது. வெளியே இருந்த இவள் உள்ளே இருக்கிறாள். உள்ளே இருந்த அவள் வெளியே போய் விட்டாள். மிகுந்த மகிழ்ச்சியுடன் தன்னை வரவேற்றவள், போகும்போது எப்படிச் சென்றாள் என்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். இருந்த பத்து நிமிடங்களுக்குள் வார்த்தைகள், உணர்வுகளில்  இருவருமே காயம்பட்டிருந்தார்கள். மனநிலைகளை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று  ஸ்ரீஜா அங்கிருந்து சென்றுவிட்டாள். அடர்ந்த மௌனத்தையும், வெறுமையையும் அறைக்குள் விட்டுச் சென்றிருந்தாள்.

 

மற்றவர்கள் பார்க்காத, புரிந்து கொள்ளாத ஒருவர், ஒவ்வொருவரிலும் இருக்கிறார். அந்த ஒருவரை ரகசியமாகவே தங்களுக்கு மட்டுமே தெரிந்தவராக வைத்திருக்க ஒவ்வொருவரும் மெனக்கெடுகிறார்கள். இன்னொருவர் அந்த ஒருவரைப் பார்க்க விரும்புவதில்லை. அனுமதிப்பதுமில்லை. மீறியோ, தப்பித்தவறியோ இன்னொருவர் பார்த்து விட்டால் அந்த இன்னொருவரை பிடிக்காமல் போய் விடுகிறது. பார்த்தாலும் பார்க்காதது போல, புரிந்தாலும் புரியாதது போல் பாவிப்பதில்தான் மனித உறவுகள் தொடருகின்றன.  அப்படி பார்க்க விரும்பாத ஸ்ரீஜாவை இவள் பார்க்க நேர்ந்து விட்டது. ஒருகணம் அதில் கலைந்து போனாலும், நேர்மையாகவே அதனை அவள் எதிர்கொண்டாள்.

 

தன்னுடைய  ஸ்ரீஜா என எவ்வளவு நம்பியிருந்தாள் பூங்குழலி? ஜன்னலைத் திறந்து வெளியைப் பார்த்தாள். இந்த இடம் ஸ்ரீஜாவுக்கானது. பெரும்பாலும் இங்கே நின்று சிகரெட் குடிப்பாள். இந்த சேரில் உட்கார்ந்து புத்தகம் படிப்பாள். எப்போதும் ஒரு ஏகாந்தமான களை முகத்தில் இருக்கும். உற்சாகமாகி விட்டால் போதும் ஒடி வந்து முத்தம் கொடுப்பாள். இந்த மூன்று வருடத்தில்   அதிகமாகப் பேசியது, பழகியது, கூடவே இருந்தது ஸ்ரீஜாவுடன்தான். எதைத்தான் பேசவில்லை? இரவெல்லாம் பேசி, அறிந்து களைத்து விடிகாலையில் தூங்கியிருக்கிறார்கள். சென்னை முழுவதும் கைபிடித்து அலைந்து திரிந்திருக்கிறார்கள். முழுசாக அவளை அறிந்திருக்கிறோம் என நினைத்திருந்தாள்.  “அப்படியில்ல பேபி..” என்று கன்னத்தில் தட்டிச் சொல்லி விட்டாள் ஸ்ரீஜா. இதுவும் ஒரு பாடம்தான்.

 

அப்போதுதான் வாட்ஸப்பில் ‘என்னைப் பார்க்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. மன்னித்துக் கொள்’ நரேனின் மெஸேஜைப் பார்த்தாள். யார் கேட்டார்கள் இவனிடம் மன்னிப்பை என்று மொத்த எரிச்சலும் அவன் மீது வந்தது.

 

இவளைப் பற்றி நரேனுக்கு என்ன  தெரியும்? பார்த்துப் பேசியதே ஒன்றிரண்டு நாட்கள்தான். அதற்குள்ளாகவே அவன் மீறினான். அந்த தைரியம் அவனுக்கு எப்படி வந்தது? இத்தனைக்கும் அதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்புதான்,  ‘முதல்ல நமக்குள்ள அட்டேச்மெண்ட் வரணும்.’ என்று தெளிவாய்ச் சொல்லி இருந்தாள். புரிந்தது போல் காட்டிக் கொன்டானே? இருட்டில் கள்ளத்தனத்தோடு அப்படி தொடுவதுதான் அட்டேச்மெண்ட்டா? அதிர்ச்சியாய் இருந்தது. அவனோடு வாழ்க்கை முழுவதும் எப்படி பயணிப்பது? நாளெல்லாம் புழுக்கமும், ஏமாற்றங்களும்  அதிர்ச்சிகளுமாய் இருந்தால் அதை விட சித்திரவதை இல்லை.

 

அதே இருட்டில் முதலில் இவள்  அவனது கையை  எடுத்து வைத்துக் கொண்டு முத்தமிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?  உள்ளுக்குள் இவளை எவ்வளவு அசிங்கமாக நினைத்திருப்பான். இதுபோல மன்னிப்பு கேட்டால் அமைதியாகி விடுவானா?

 

அம்மாவுக்காக மட்டும்தான் சம்மதித்தாள். அப்பாவை இழந்து, உறவுகளில்  தனிமைப்பட்டவளுக்கு கலைச்செல்வனும், பூங்குழலியும் மட்டுமே நம்பிக்கையாய் இருந்தனர். கலைச்செல்வனும் ஏமாற்றி விட்டதாய் வெறுத்துப் போன அம்மாவுக்கு  தன்னை விட்டால் வேறு கதியில்லை என்று உணர்ந்தாள். அம்மா வருத்தம் கொள்ளவோ, சொந்தங்கள் மத்தியில் அவமானப்படவோ கூடாது என்றுதான் நரேனைத் திருமணம் செய்து கொள்ள சரியென்றாள்.

 

போன்களில், புரிதல்களில் சின்னச் சின்னதாய் மனக்கசப்புகள், முரண்பாடுகள் வர ஆரம்பித்ததும் நரேனின் அம்மாவும், இவளது அம்மாவும் பாட்டியும் சேர்ந்து  திட்டமிட்ட அஷ்டலஷ்மிக் கோவில் சந்திப்பை நினைத்தாலே குமட்டியது. ஒரு ஆணாக நரேன் தொட்டு விட்டால் ஒரு பெண்ணாக இவள் காலம் காலமாக வாய்மூடி அடங்கி இருப்பாள் என்று அவர்கள் ரகசியமாக எதிர்பார்த்தார்கள்.  வாழ்க்கையெல்லாம் அவர்கள் பார்வையில் இது குடிகொண்டிருக்கும். அதைப் பார்க்கவே இயலாது.

 

மொபைலை எடுத்து நரேனுக்கு, “நரேன்.  நமக்குள்ளே செட் ஆகாது. என்ன செய்யலாம்?” என்று மெஸேஜ் அனுப்பி விட்டு  எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தாள். வராண்டாவில் யாருமில்லை. இரண்டு நாள் லீவில் ஊருக்குப் போயிருப்பார்கள். போகாதவர்கள் வெளியே எங்காவது சென்று விட்டு வருவார்கள். வராண்டாவை ஒட்டி வரிசையாய் நின்ற அசோகா மரங்கள் அசையாமல் இருந்தன.

 

கடற்கரையில் தனியாகப் போய் இருக்க வேண்டும் போலிருந்தது. ஸ்ரீஜா கடவுளிடமும் சொல்லவில்லை, கடலிடமும்  சொல்லவில்லை, தன்னிடமும் சொல்லவில்லை என நினைத்துக் கொண்டாள். இதை ஒருநாள் அவளிடம் சொல்ல வேண்டும். இந்த நேரத்தில் தன்னை ஆதரவாய், அரவணைத்துக் கொள்ள  சென்னையில் யாருமில்லை என்று வாட்டியது.

 

 ஹாஸ்டலில் இரண்டு நாட்கள் தனியாக இருக்க முடியாது. அண்ணன் கலைச்செல்வன் நினைவு வந்தது. மணி ஒன்பதுதான். ரெட்பஸ்ஸில் பார்த்தாள். வரிசையாக மதுரைக்கு பஸ்கள் இருந்தன. கலைச்செல்வனுக்கு போன் செய்து வருவதாகச் சொன்னாள். ஒரே மகிழ்ச்சி அவனுக்கு. “இனும புறப்பட்டு வர முடியுமா? பஸ் ரிசர்வ் பண்ணிட்டியா?” அக்கறையோடு விசாரித்தான்.

 

“வந்துருவேண்ணா” சொல்லி புறப்பட்டு விட்டாள்.

 

கலைச்செல்வன் எதோ சொன்ன மாதிரி இருந்தது. சரியாய் கேட்கவில்லை. தோளைத் தொட்டு “என்னண்ணா?” என்றாள்.

 

“அடுத்த சனி ஞாயிறு மாப்பிள்ளை வீட்லயும், நம்ம வீட்டுலயும் சென்னைக்கு வீடு பாக்கவும், ஜவுளி எடுக்கவும் வர்றாங்களாமே? முருகேசன் மாமா சொன்னாங்கன்னு தாத்தா சொன்னாங்க?”

 

 “ம்..” சொல்லி நிறுத்திக் கொண்டாள். விடிந்ததும் பிரச்சினை இருக்கிறது. அம்மா போன் செய்வார்கள் என நினைத்துக் கொண்டாள்.

 

நேற்றிரவு பெருங்குளத்தூரில் பஸ்ஸுக்கு காத்திருந்தபோது நரேனின் ‘நமக்குள்ள செட் ஆகும்னு தோணுது. என்ன செய்யலாம்?’ செய்தியைப் பார்த்தாள். என்ன நெஞ்சழுத்தம் என்றிருந்தது. தியேட்டரில் முகம் பார்த்து பேச முடியாமல் இருந்தவன் என்ன தைரியத்தில் இப்படி அனுப்பி இருக்கிறான்? இன்னொரு தடவை அந்த முகத்தை எப்படி பார்ப்பது? வாழ்க்கை முழுவதும் பார்க்க வேண்டுமா? கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டாள்.  மொபைலை மூடி கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.

 

பஸ்ஸில் ஏறி கொஞ்ச நேரம் கூட ஆகியிருக்காது, சந்திரா போன் செய்தார். எடுக்காமலிருந்தாள். ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. திரும்பவும் போன் வந்தது. எடுத்தாள். “சொல்லுங்க ஆண்ட்டி” மெல்லிய குரலில் பேசினாள்.

 

“எங்கம்மா இருக்க?”

 

“என்ன ஆண்ட்டி..?”

 

“எங்க இருக்கன்னு கேட்டேன். எதோ ஃபிரண்டுக் கிட்ட இருந்து போன் வந்துச்சுன்னு படம் பாக்காம பாதியிலேயே கிளம்பிட்டியாமே. அதாங் கேட்டேன்.”

 

“பப்ல உக்காந்து  ஹாஸ்டல் ஃபிரண்ட்ஸோட  டிரிங்க்ஸ் சாப்டுறேன்.”

 

“என்னம்மா இப்டில்லாம் பேசுற? “

 

“வேற எப்படிப் பேசணும்.”

 

“கோவிலுக்கு போனீங்க. கடற்கரையில போட்டோல்லாம் எடுத்துருக்கீங்க. பாத்தேன் சந்தோஷமாயிருந்துச்சு. அதான் போன் பண்ணி பேசலாமேன்னு பாத்தேன்.”

 

“பேசிப் பாத்துட்டீங்களா? வச்சிரவா?”

 

 “இதெல்லாம் நல்லாவா இருக்கு? ஒரு பொண்ணு மாதிரியா பேசுற?”

 

“இந்தக் கேள்வியை ஒங்க ஆம்பளைப் பையனிடம் கேளுங்க.” துண்டித்து விட்டாள்.

 

போனை ஆஃப் செய்துவிட்டு படுத்துக் கொண்டாள். தூக்கம் வரவில்லை. படபடவென இருந்தது. இந்த நேரத்தில் வீட்டுக்கும், நரேனுக்கும் மாறி மாறி போன்கள் அடித்துக் கொண்டிருக்கும். குய்யோ முறையோ என்று பேசிக்கொண்டு இருப்பார்கள். பேசட்டும். இவளுக்கு வீட்டில் இருந்து சித்ராவும் பத்மாவதியும் போன் அடித்துக் கொண்டே இருப்பார்கள். ஹாஸ்டலுக்குக் கூட போன் அடித்திருப்பார்கள். அடிக்கட்டும். அம்மா அழுவார். பாட்டி அம்மாவையும், அப்பாவையும் திட்டுவார். அதுதான் தாங்க முடியவில்லை. கண்ணை இறுக்க  மூடிக் கொண்டாள். எப்படியாவது அம்மாவை அழைத்துக் கொண்டு சென்னையில் ஒரு வீடு பார்த்து தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

 

விழுப்புரம் எல்லாம் தாண்டிய பிறகு தூக்கம் வரும் போலிருந்தது. மணியைப் பார்த்தாள். பனிரெண்டரையைத் தாண்டி இருந்தது. இனி போன் செய்ய மாட்டார்கள் என்று போனை ஆன் செய்தாள். காலையில் நிச்சயம் கலைச்செல்வன் போன் செய்வான் என்று தெரியும்.  ஒருவேளை அம்மா போன் செய்தால் திரும்பவும் ஆஃப் செய்து விட வேண்டியதுதான் என நினைத்துக் கொண்டாள்.

 

ஆண்டவன் கட்டளை போஸ்டர்கள் போய்க்கொண்டிருக்கும் வழியிலும் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்தன. “அண்ணா, இன்னிக்கு ஆண்டவன் கட்டளை படம் போவோமா.?” கேட்டாள்.

 

“போவோம்.” உற்சாகமாகச் சொன்னான்.

 

“பூவு, பால் வாங்கிட்டுப் போயிருவமா?. போனவுடன ஒரு காப்பி போட்டுக் குடிக்கலாம்”

 

“எனக்கு காபி வேண்டாண்ணா. போய் அப்படியே கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கணும்”

 

“சரண்யா வாங்கிட்டு வரச் சொன்னாளே”

 

“சரி வாங்குவோம்.” சிரித்துக் கொண்டாள்.

 

ஆவின் முன்பு பைக்கை நிறுத்தினான். பால் வாங்கிக்கொண்டு வந்தவன், “ரொம்ப நாளைக்குப் பிறகு நேத்து தாத்தா விட்டுல கருப்பட்டிக் காபி குடிச்சேன்.” என்றான்.

 

அப்போதுதான் கலைச்செல்வன் நேற்று அப்பாவின் நினைவு நாளுக்கு  ஊருக்குச் சென்றிருந்தது ஞாபகம் வந்தது. சாயங்காலத்திலிருந்து நடந்த நிகழ்வுகளில் எல்லாவற்றையும் மறந்து விட்டோம் என்பது உறைத்தது.

 

“ஊர்லயிருந்து நீ எப்பண்ணா வந்த? அதக் கூட கேக்க மறந்துட்டேன் பாரு”

 

“மத்தியானம் சாப்பிட்டுட்டு கிளம்பினேன். சாயங்காலம் வந்தேன்.” என்றவன் இவளது முகத்தைப் பார்த்தான். “தாத்தா ரொம்ப பிரியமா இருந்தாங்க. அப்பாக்கு படையல் வச்ச சாப்பாட்ட எனக்கு எடுத்து வச்சு,  சாப்பிடுய்யான்னு எம்பக்கத்துல வந்து உக்காந்துட்டாங்க. ஆறு வருசமாச்சு நீ வந்து. உங்க அப்பாக்கு படையல் வைக்கும் போதெல்லாம் உன் ஞாபகமாயிருக்கும்ன்னாங்க..”  அண்ணனின் கண்கள்  கலங்கியதைப் பார்த்தாள்.

 

பைக்கில் ஏறி நகர்ந்தார்கள். தெருக்களுக்குள் நுழைந்தார்கள். வீடுகளுக்குள் மங்கலான வெளிச்சம் கசிந்து கொண்டிருக்க வாசல் தெளிக்க ஆரம்பித்திருந்தார்கள். சேவல்கள் எங்கேயோ இருந்து விட்டு விட்டு குரல் எழுப்பின.

 

“இதெல்லாம் ஊருல இருக்கும் போது பாத்ததுதான். சென்னையில படுக்குறது பனிரெண்டுக்கு மேலாயிரும். எந்திரிக்கிறது எழு எட்டுக்கு. அடிச்சுப் புரண்டு ஒடுறோம்.”

 

வீடு வந்திருந்தது. நிறுத்தினான். பைக் சத்தம் கேட்டு சரண்யா வெளியே வந்தாள். “வா பூங்குழலி” என முகமெல்லாம் சிரித்து அழைத்தாள்.

 

“அண்ணி ஒங்க தூக்கத்தையும் கெடுத்துட்டனா?’” கேட்டாள்.

 

“அய்யோ ..இதிலென்ன. நீ வந்தது சந்தோஷம்” சரண்யா சிரித்தாள். கலைச்செல்வன் கொடுத்த பால் பாக்கெட்டை வாங்கி உள்ளே சென்றாள்.

 

இவர்களும் பின்னால் சென்றார்கள். முன்னறையில்  ரவிச்சந்திரனின் படம் மாட்டியிருந்தது. மாலை வாடாமல் இருந்தது. அப்பாவையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

சரியாய் அந்த நேரத்தில் போன் வந்தது. கொஞ்சம் அதிர்ச்சியோடு பார்த்தாள். அம்மாதான். அவசரமாக போனை அமைதியாக்கி ஆப் செய்தாள்.

 

“பூவு யாரும்மா இந்த நேரத்துல?” கலைச்செல்வன் கேட்டான்.

 

“ஆபிஸ்லயிருந்துதான். எதாவது டவுட்டாயிருக்கும். அட்டெண்ட் பண்ண வேண்டியதில்ல. பாத்துக்கலாம்.”

 

(தொடரும்)

க்ளிக் - தொடர்கதையின் அத்தியாயங்களைப் படிக்க கீழே க்ளிக்குங்கள்!

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அடடா சுவராசியம் கூடி கொண்டே அல்லவா போகிறது. மனித முகங்களை பிரதிபலிக்கும் வரிகள் மிக்க அருமை. வழக்கம் போல பூங்குழலியின் முடிவுக்கு நரேனை போல நானும் காத்துகொண்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  2. பூங்குழலியும் ஸ்ரீஜாவும் இரு திசையில் பயணம் செய்யும் நம் அன்றாட வாழ்வில் பார்க்கும் வேறுப்பட்ட கதாபாத்திரங்கள்.. நரேன் உள்பட... அருமையான கதை நகர்வு..!! பல திருப்பங்களை எதிர் பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!