க்ளிக் - 11 (தொடர்கதை)


கோபப்படுவாள். பேசாமல் இருப்பாள். அவள் சரியாவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும். இப்படித்தான் நினைத்திருந்தான். அவள் முகத்தை எப்படி பார்ப்பது என்பதுதான் நரேனுக்கு தவிப்பாக இருந்தது. இது போல ஒரு முடிவுக்கு பூங்குழலி வருவாள் என்று யோசித்திருக்கவே இல்லை.

 

அழுத்தமானவள் அவள் என்பதை இந்த பத்து இருபது நாட்களில் புரிந்து கொண்டிருந்தான். அதுதான் பயமாய் இருந்தது. அவளுக்குப் போன் செய்து பேச வேண்டும் என்று துடித்தாலும் அடக்கிக் கொண்டான். இரண்டு நாட்கள் போகட்டும். உடனுக்குடன் பேசியும் எழுதியும் பிரச்சினை மேலும் அதிகமாகி விடக்கூடாது. நிதானமாயிருக்க வேண்டும்.  என்றெல்லாம் அமைதிப்படுத்தினாலும் சிந்தனை எல்லாம் பூங்குழலி எழுதியதிலேயே இருந்தது.

 

நமக்குள் செட் ஆகாது என்று ஒரு வரியில் சொல்லிவிட்டாள். இவன் சரிப்படமாட்டான் என்று சொல்கிறாளா? அந்த இருட்டில் ஒரு வேகத்தில் நடந்து கொண்டதை வைத்து வாழ்க்கைக்கே ஒத்து வரமாட்டான் என்று எப்படி முடிவுக்கு வந்தாள்? நாம் என்ன அவ்வளவு தவறானவனா, இதுவரைக்கும் வேறு எந்தப் பெண்ணிடமாவது இப்படி நடந்து கொண்டிருக்கிறோமா என்றெல்லாம் நொறுங்கிப் போனான்.

 

வெளியே என்னவென்று சொல்வது? அம்மா அப்பாவிடம் எப்படி சொல்வது? இதற்காக ஒரு கல்யாணத்தையே நிறுத்த வேண்டும் என்பதெல்லாம் கொடுமையானது. அழைப்பிதழ்களை சொந்தக்காரர்களுக்கும், ஊரில் உள்ளவர்களுக்கும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவனும் தனியே அழைப்பிதழ் அடிக்க ஏற்பாடு செய்திருந்தான். போனில், வாட்ஸப்பில் நேரில் என்று பலரிடமும் சொல்லிவிட்டான். அவர்களிடம் என்ன சொல்வது.

 

இவனும் பூங்குழலியும் இன்னேரம் ஆண்டவன் கட்டளை படம் பார்த்துக் கொண்டிருப்பதாய் சந்திரா ஆசையாய் இருப்பார். பத்து மணிக்குப் போல நிச்சயம் போன் செய்து விசாரிப்பார். பாதியிலேயே வந்ததைச் சொல்ல வேண்டாம் என்று நினைத்துக் கொண்டான்.  சொன்னால், முதல் முதலாக இரண்டு பேரும் சேர்ந்து பார்க்கப் போன படமே பிடிக்கவில்லையா என்று கேள்வி வரும். எதாவது பொய் சொல்ல வேண்டும். இவனுக்கோ பூங்குழலிக்கோ தலை வலித்தது என்று சொல்லலாம். அது குறித்தும் கவலைப்படுவார்கள். கேள்வி வரும். அதற்கும் பொய் சொல்ல வேண்டும். பேசாமல் ஒரேயடியாய் படம் முழுவதும் பார்த்ததாய் சொல்லி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அவளை ஹாஸ்டலில் கொண்டு விட்டதாகவும் சொல்ல வேண்டும். எல்லாம் பொய்தான். வேறு வழி தெரியவில்லை.

 

ஒருவேளை தன்னிடம் பேசியது போல பூங்குழலியிடமும் போன் பேசி, அவள் பாதியிலேயே வந்துவிட்டோம் என்று சொல்லி விட்டால்..?  வேறு வினையே வேண்டியதில்லை. அடுத்த கேள்விகளுக்கு பூங்குழலி என்னவெல்லாம் சொல்வாள் என்று தெரியாது. “அம்மா அடிக்கடி பூங்குழலிக்கு போன் செய்து பேசாதீங்க. ஒரே விஷயத்த எல்லார்ட்டயும் மாறி மாறிப் பேசுறது எரிச்சலா ஃபீல் பண்றா” என்று அடுத்த பொய்யை தயார் செய்து கொண்டான். வருத்தம் தந்தாலும் அம்மா பேசாமல் இருப்பார்கள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் பூங்குழலியின் அம்மாவிடம் படம் பார்க்க போயிருப்பதைப் பற்றி பேசுவார்களே?  அவர்கள் பூங்குழலியிடம்  கேட்பார்களே?  பேசுவார்களே என்ன பேசுவார்களே. இன்னேரம் பேசியிருப்பார்கள். ஒரு செல்பியை எடுத்து அனுப்பி,  சேர்ந்து படம் பார்க்கப் போகும் சந்தோஷத்தை போனில்  தெரிவித்து எல்லாம் இப்போது ஏடாகூடமாகி இருக்கிறது.

 

ஒன்றிலிருந்து ஒன்று என பிரிந்து பிரிந்தும், சுற்றி சுற்றியும் சிக்கல்களாகி விடுகின்றன மனித உறவுகள். ஹெச்.டி.எம்.எல்,  சி.எஸ்.எஸ், ஜாவா போல இல்லை மனிதர்களின் மொழிகள். இந்த கோடிங் எழுதினால் இந்த ரிசல்ட் வரும் என்று தெரியும். எதிர்பார்க்கலாம். வரவில்லை என்றால் கோடிங்கை மாற்றி எழுதி, சரி செய்து தேவையான ரிசல்ட்டை வரவைக்க முடியும். மனிதர்களிடம் ஒரு வார்த்தை தவறாக பேசிவிட்டு அதை மாற்ற முடியாது. எழுதினால் எழுதியதுதான். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் சரியாகவே பேசினாலும், கேட்பவர்  தவறாக புரிந்து கொள்வதும் நடக்கும். கம்ப்யூட்டர் மொழிகளுக்கு தொனி கிடையாது. பரிமாணங்கள் கிடையாது. டொமைனில் புலி என பேரெடுத்த நரேன் ஒரு சின்ன விஷயத்தில் அடுத்து என்ன பேச என்று தெரியாமல் மண்டை காய்ந்து போனான். நடப்பது நடக்கட்டும், நாம் ஒன்றும் சொல்லாமல் இருப்போம், அவர்களாக தெரிந்து கொண்டால் பார்த்துக் கொள்வோம் என முடிவுக்கு வந்தான்.

 

கடுப்பாக இருந்தது. இப்போது கல்யாணம் வேண்டும் என்று யார் அவசரப்பட்டார்கள்? சந்திரா மீதுதான் எரிச்சல் வந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்புதான் சம்பளம்  அறுபதாயிரத்தைத் தொட்டிருந்தது. நான்கு லட்சம் போல சேமிப்பில் இருந்தது. இரண்டு மூன்று வருடங்கள் கழித்து என்றால் பிரமோஷனும் கிடைத்து விடும், கணிசமான சம்பளம் வரும், சேமிப்பும் பத்து லட்சத்துக்கு மேலிருக்கும். தைரியமாக பெண், குழந்தை, குடும்பம் என அடியெடுத்து வைக்கலாம். திருமணப் பேச்சை ஆரம்பித்த நேரத்தில் சந்திராவிடம்  எவ்வளவோ சொல்லியிருந்தான்.

 

“எங்களுக்கு நீதான் ஒரே பையன். இந்த வீடு, அப்பா சம்பாதிச்சது எல்லாம் யாருக்கு? அவர் ரிடையர் ஆனப்புறம் சென்னையிலேயேக் கூட ஒரு வீடு வாங்கி நாம எல்லாம் ஒன்னாயிருக்கலாம்.” சந்திரா தீர்மானமாக மறுத்து விட்டார்.

 

இதோ எங்கும் வீடுகள். ஜன்னலில், வாசலில், பால்கனியில், மொட்டைமாடியில் என அங்கங்கு  வெளிச்சம் சிந்திய திட்டுகளாய் கண்ணுக்கெட்டிய தூரத்திற்கு இறைந்து கிடந்தன. வெளிச்சம் படாத பகுதிகளில் வீடுகளின் நிழல் உருவங்கள் தங்களுக்கென்று ரகசியங்களை வைத்திருந்தன. இரவு ஒரு பெரிய கடல்போல் விரிந்து பரந்து சலனமில்லாமல் கிடந்தது. பார்க்கும் யாவும் அதில் மிதந்து கொண்டிருந்தன. பகலில் இதே வீடுகள், வெளிகள் எல்லாம் தரை தட்டி இரவின் சுவடுகளற்று வெயிலில் காய ஆரம்பிக்கும். குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என மனிதர்கள் வீடுகளிருந்து வேகவேகமாய் வெளியேறுவார்கள். நடை, சைக்கிள், ஸ்கூட்டர், பைக், ஆட்டோ, கார், பஸ், என அவரவர்க்கான வேகங்களோடு விரைவார்கள். இப்படித்தானே  ஒரு  வீட்டில் நாமும் வாழப் போகிறோம் என்றிருந்தது. இன்று பூங்குழலியைப் பார்க்கிற வரைக்கும் அவளோடு சேர்ந்து வாழப் போகிற வீடு குறித்து கனவுகளும், யோசனைகளும்  இருந்தன. இப்போது அவையெல்லாம் வற்றிக் கொண்டிருந்தன.

 

இந்த நகரத்தில்தான் எங்கோ ஒரு வீட்டில் பூங்குழலி இருக்கிறாள். பூங்குழலியைப் பார்க்கப் போகும் வழியில் கந்தல் துணியால்  உடலையும் உயிரையும், குழந்தையையும் போர்த்திக் கொண்டு “சார்..” என கைநீட்டிய  வாடிப் போயிருந்த பெண்ணும் எங்கோ இருக்கிறாள். பவித்ரா இருக்கிறாள். எங்கோ உட்கார்ந்து கிஷோர் தண்ணியடித்துக் கொண்டிருக்கிறான். ஆஷா அந்த மேனேஜரோடு சிரிக்கிறாள். அவளை எதிர்பார்த்து குழந்தையும், அம்மாவும், அப்பாவும் காத்து இருக்கிறார்கள். வீடுகளுக்குள்ளேயும் வெளியேயும் கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்வின் நெருக்கடிகளில் சிக்கிக் கொண்டும், மீள்வதற்கு வழியைத் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். இவன் முன்னே பூங்குழலியின் வாட்ஸப் செய்தி இருட்டாய் அடர்ந்திருந்தது.

 

“என்ன  தம்பி, இங்கதான் இருக்கீங்களா?” பின்னால் நாச்சியப்பன் குரல் கேட்டது. திரும்பினான். “நீங்க வரும்போது பாத்தேன்.  பேசலாம்னு மேல வந்தேன். ரூம் பூட்டிக்கிடந்தது. செருப்பு வெளியே இருந்துச்சு. சரி, இங்கதாம் இருப்பீங்கன்னு  நினைச்சேன்” சிரித்தார்.

 

“வாங்க சார்..”  என வலது கையை லேசாக நெஞ்சில் வைத்து மரியாதை காட்டி ஒதுங்கி நிற்பது போல அசைந்தான் நரேன். நாச்சியப்பன் இந்த வீட்டுக்காரர். கீழே அவரும் அவரது மனைவி விஜயாவும்  இருக்கிறார்கள். மேல் போர்ஷனில் இவன், கிஷோர் பிரசாந்த்.

 

“கல்யாணமாம்ல தம்பிக்கு!” என்று நரேன் முதுகில் லேசாய் தட்டினார்.

 

அதிர்ச்சியாயிருந்தது. அம்மாதான் சொல்லியிருக்க வேண்டும் என புரிந்தது. பதில் சொல்ல வராமல் விழித்தான்.  சிரிப்பே வராமல் சிரித்தான். 

 

மாசத்துக்கு இரண்டு மூன்று தடவை அவரோடும்  அவரது மனைவி விஜயாவோடும் பேசுவதை சந்திரா வழக்கமாக வைத்திருந்தார். தன் மகனை அவர்கள் இருவரும்தான் பார்த்துக் கொள்வது போல ஒரு நினைப்பு. யாராவது பெரியவர்கள் கண்காணிப்பில் தங்கள் குழந்தைகள் இருப்பது ஒரு தைரியத்தையும், நம்பிக்கையையும் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு அளிக்கிறது போலும்.

 

“படம் பாக்கப் போயிருக்கிறதா அம்மா சொன்னாங்க. இப்பமே வந்துட்டீங்க”

 

“கொஞ்ச நேரம் படம் பாத்தோம். அவளோட ஃபிரண்டுக்கிட்ட இருந்து போன் வந்துச்சு. அவசரமா கிளம்பணும்னு  புறப்பட்டா. எனக்கும் தனியா படம் பாக்க பிடிக்கல. வந்துட்டேன்.” என்றான். கொஞ்சமும் யோசிக்காமல் அப்படிச் சொல்ல முடிந்தது அவனுக்கே ஆச்சரியமாய் இருந்தது.

 

நாச்சியப்பன் எதுவும் சொல்லாமல் தலையாட்டிக்கொண்டே அருகில் வந்து சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார்.

 

நாச்சியப்பன் பி.எஸ்.என்.எல்லில் வேலைபார்த்து இரண்டு வருடங்களுக்கு முன்புதான் ரிடையராகி இருந்தார். எப்போதாவது சில நேரங்களில் மொட்டை மாடிக்கு வருவார். பெரும்பாலும் கீழே வராண்டாவில் சேர் போட்டு தெருவைப் பார்த்து உட்கார்ந்திருப்பார். இல்லையென்றால் எதிரே வீட்டோடு சேர்ந்து சின்னதாய் மளிகைக்கடை வைத்திருக்கும் ரெங்கசாமியோடு உட்கார்ந்து சிகரெட் புகைத்தவாறு பேசிக்கொண்டு இருப்பார். இருட்டிவிட்டால் வெளியே பெரும்பாலும் தென்பட மாட்டார். மேலே படியேறும்போது அவர் வீட்டின் ஹாலிலிருந்து  டி.வி சத்தமாய் கேட்கும். இவர்களோடு அவசியமென்றால் மட்டும் பேசுவார். மூத்தவன் அமெரிக்காவில் இருக்கிறான். இங்கு தங்கியிருக்கும் மூன்று வருடங்களில் ஒருமுறைதான் அவனை நரேன் பார்த்திருந்தான். மனைவியோடும்  குழந்தைகளோடும்  வந்திருந்தான். இரண்டாவது ஒரு மகள் இருந்திருக்கிறாள். எலக்டிரிக் டிரெயினில் அடிபட்டு இறந்து விட்டதாய் விஜயா ஒருமுறை போனில் பேசும்போது சந்திராவிடம் சொல்லி இருக்கிறார். என்ன நடந்தது என்று மேலே சொல்லவில்லையாம். “என்னத்தச் சொல்ல. விடுங்க அதை” என்று தழுதழுத்து நிறுத்திக் கொண்டாராம்.

 

தொண்டையை லேசாக செருமிக் கொண்டே “அம்மாவிடம் பொண்ணப்பத்தி பேசிட்டு இருந்தோம். அவளோட ஊர் பேர் கேள்விப்பட்டதா இருந்துச்சு. அந்த ஊரில் இருந்து ரவிச்சந்திரன்னு ஒரு ஃபிரண்டு எனக்குத் தெரியும்னு சொன்னேன். எப்படித் தெரியும்னு கேட்டாங்க. எனக்கு வேல கிடைச்ச புதுசுல நானும் அவனும் ராமநாதபுரத்துல ஒரு மேன்ஷனில் தங்கியிருந்தோம். அவன் பேங்ல வேலை பார்த்தான். நா டெலிபோன்ஸ்ல வேலை பாத்தேன். இரண்டு வருஷம்  கழிச்சு நான் மெட்ராஸ் வந்து செட்டிலாய்ட்டேன். அவனும் ஊர்ப்பக்கம்தான் டிரான்ஸ்பர்ல போனான்னு சொன்னேன். பொண்ணோட அப்பா பேரும் ரவிச்சந்திரன்தான், அவங்களும் பேங்லதான் வேலை பாத்தாங்க. இப்போ இறந்துட்டாங்கன்னு உங்க அம்மா சொன்னாங்க” என நிறுத்தினார். சிகரெட்டை ஆழமாக உள்ளிழுத்தார்.

 

நரேனுக்கு எல்லாம் விநோதமாக இருந்தது. ஜூஸ் கடையில் நின்றபோது ஆஷாவை சரியாக அதே இடத்தில் பார்க்க நேர்ந்ததே ஆச்சரியமாய் இருந்தது.. பூங்குழலியின் அப்பாவின் நண்பராக இந்த நாச்சியப்பன் இருந்திருக்கிறார். அவர் வீட்டில்தான் தங்கியிருக்கிறோம் என்பது தன்னைத் தொடர்ந்து வந்து எதோ உற்றுப் பார்ப்பது போலிருந்தது.

 

“என் கல்யாணத்துக்கு வந்தப்ப கடைசியா பார்த்தது. கொஞ்ச நாள் மாறி மாறி லெட்டர் போட்டது  நினைவில இருக்கு. பிறகு அவனோட தொடர்பு இல்ல. அவனுக்கு கல்யாணமாச்சா, எங்க இருக்கான்னு தெரியல. விசாரிக்கவும் இல்ல. இன்னிக்கு வரைக்கும் அவன் ஞாபகம் வந்த மாதிரியே இல்ல. ஒங்கம்மாக் கிட்ட பேசுன பிறகு அவனப் பத்தியே நினைச்சுட்டு இருக்கேன். எங் கல்யாணப் போட்டோக்களை எடுத்துப் பார்த்தேன். இருந்தான். முகமும் பிடிபட்டுச்சு. முப்பது வருஷத்துக்கும் மேல இருக்கும் இல்லியா?”

 

அவர் இன்னும் பேசுவதற்கு இருக்கிறார் என்று தெரிந்தது. நரேன் அமைதியாக கைகட்டிக் கொண்டான்.

 

“எல்லார்ட்டயும் நல்லா பழகுவான். அவன் இருக்குற இடமே கலகலப்பா இருக்கும். சினிமாவா பாத்து தள்ளுவோம். பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், இளையராஜா, கமல், ரஜினி ஸ்ரீதேவி பத்தி நிறையப் பேசுவோம். வேற என்ன பொழுது போக்கு எங்களுக்கு? அவனுக்கு யூனியன்ல இண்ட்ரஸ்ட் உண்டு. அரசியல் கூட்டம் நடந்தா எங்கன்னாலும் போய்ப் பார்ப்பான். நாங்க இருக்குற ரூமுக்கு அவனப் பாக்க கம்யூனிஸ்டுக் கட்சிக்காரங்க ரெண்டு பேரு வருவாங்க.. யோசிக்க யோசிக்க ஒவ்வொண்ணா ஞாபகத்துக்கு வருது. சம்பளம் எல்லாம் ஆயிரத்து சொச்சம். அதுல மேன்ஷனுக்கு, மெஸ்ஸுக்கு, சினிமாத் தியேட்டருக்கு எல்லாம் கொடுத்தது போக வீட்டுக்கும் அனுப்புவோம்னா பாத்துக்குங்க…”

 

சிகரெட்டை அணைத்து விட்டு நரேனை ஒரு தரம் பார்த்தார். “இந்த சிகரெட்  அவங்கிட்ட இருந்து வந்தது. நா காலேஜ் முடிக்கிற வரைக்கும் சிகரெட் பிடிச்சது கிடையாது. ரவிச்சந்திரன் எப்பப் பாத்தாலும் சிகரெட்டுத்தான். ஒரே ரூமா… ஒட்டிவிட்டது.”

 

இருண்டு கிடந்த வெளியில் எதையோத் தேடுவது போல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது இளமைக் காலத்திற்குள் நாச்சியப்பன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதை நரேன் பார்த்துக் கொண்டிருந்தான். இவனது அப்பா மூர்த்தியும் இதுபோல பேசி கேட்டிருக்கிறான். அவரையுமறியாமல் ஒரு உற்சாகம் தெரியும். கூடவே விலை மதிப்பற்ற ஒன்றை இழந்த பெருமூச்சும் வெளிப்படும்.

 

 “ரவிச்சந்திரன் மனைவி பெயர் என்ன?” எதோ நினைவுக்கு வந்தவராய் கேட்டார்.

 

“ஆன்ட்டி பேரா? சித்ரா.” எதற்கு கேட்கிறார் என்று புரியவில்லை.

 

யோசித்தார். அவராகவே தலையாட்டிக் கொண்டார். “இப்போ சொல்றதுல ஒன்னும் தப்பில்ல.  என நிறுத்தி நரேனைப் பார்த்தார்.  திரும்பவும் தொண்டையை செருமிக் கொண்டு, “நா அங்கயிருந்து டிரான்ஸ்பர் ஆகுறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னால, அவன் ஊர்லயிருந்து ஒரு பொண்ணு ரவிச்சந்திரனைத் தேடி வந்தா. மாநிறம். லட்சணமா இருந்தா. பேரு கூட ….. பராசக்தி படத்து கதாநாயகி பேரு….. ஆங் கல்யாணி… வந்து ஒங்கூடத்தான் வாழ்வேன். என்னக் கல்யாணம் பண்ணிக்கன்னு ஒரே அனத்தல். ரவிச்சந்திரனுக்கு என்ன செய்யன்னு தெரில. அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி சமாதானம் செஞ்சு…. ஊருக்கு டிரங்க்கால் போட்டு பேசி… அவங்க அங்கயிருந்து காருல வந்து அடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. அன்னிக்கு பூரா மேன்ஷனே கலவரமா இருந்துச்சு. ரவிச்சந்திரன் யாருக்கிட்டயும் பேசாம ரெண்டு மூனு நாள் ஒரு மாரி இருந்தான்.”

 

நிச்சயம் செய்த அன்று திடீரென மேடைக்கு  தலைவிரி கோலமாய், பைத்தியம் போல இருந்த ஒரு வயசான பெண் ஏறியதும் , பூங்குழலி வீட்டில் அந்தப் பெண்ணை விரட்டியதும், அந்தப் பெண் கதறியதும்  நினைவுக்கு வந்தது. கல்யாணி என்றுதான் பூங்குழலி சொல்லியிருந்தாள்.

 

“ம்… காலம் வேகமா ஒடிப்போச்சு. வீடு கட்டி இங்க வந்து இருபத்தைஞ்சு வருசமாகுது. அப்ப குரோம்பேட்டையில இந்த இடம் டெவலப்பாய்ட்டிருந்த நேரம். மொத்தமே நாலைஞ்சு வீடுங்கதான் இருந்துச்சு. இப்போ பாருங்க. கால்  வைக்க இடம் இல்லாத மாரி இருக்கு” என்று சொல்லியவர், “எங்க கதைய சொல்லி ரொம்ப போரடிச்சிட்டேன் இல்ல..” என சிரித்தார்.

 

“அப்படில்லாம் ஒன்னும் இல்ல. நீங்க இவ்ளோ பேசுனதே பெரிய விஷயம். அதிகமா பேசவே மாட்டீங்க..” என்றான்.

 

“என்ன தம்பி செய்ய. யாராவது பேசக் கிடைச்சா இப்படித்தான் அறுத்து தள்றேன். மகனோ, மகளோ கூட இருந்து பேரப் பிள்ளைங்கக் கிட்ட பேசுறதுக்கும் கொஞ்சுறதுக்கும் நமக்கு கொடுப்பின இல்லயே. நானாவது அங்க இங்க வெளியே போய்ட்டு வர்ரேன். விஜயா என்ன செய்வா? நா அவ முகத்தையும், அவ என் முகத்தையும் ரெண்டு பேரும் டிவியையும் பாத்துட்டு இருக்கோம். இன்னிக்கு எங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.”

 

அவரது குரல் உடைந்து கொண்டிருந்தது. இவனால் என்ன சமாதானம் சொல்ல முடியும்.

 

“நாஞ் செஞ்ச காரியத்துக்கு இப்போ அனுபவிக்கிறேன். ஊரிலிருந்து எங்க அம்மாவையும், அப்பாவையும் விட்டு நான் நகரத்துக்கு வந்தேன். அவங்களால பழகுன இடங்களை விட்டு இங்க வர முடியலை. எங்க இருந்தாலும் தன் மகன் நல்லாயிருக்கட்டும்னு வயசான காலத்துல தனிமையில வாழ்ந்தாங்க. இப்போ என் மகன் இந்த நகரத்த விட்டு, நாட்டை விட்டு எங்கேயோ இருக்கான். நாங்க இங்க தனியா இருக்கோம். இதுதான் கதி போல.” வேட்டி முனை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டார்.

 

“சார், ஒங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தாங்களா?’ என மெல்லக் கேட்டான்.

 

அதை  கவனிக்காதது போல “சொல்ல மறந்துட்டேன். அம்மாவும் வீடு பாக்கச் சொல்லியிருந்தாங்க. கொஞ்சம் அவுட்டர்ல ஒரு தனி வீடு வாடகைக்கு இருக்குன்னு சொன்னாங்க. நாளைக்கு கூட போய்ப் பாத்துரலாம். அப்புறம் நாஞ் சொன்னத அந்தப் பொண்ணுக்கிட்டல்லாம் சொல்ல வேண்டாம். நா கிளம்புறேன். இன்னொரு நா பேசுவோம்..” என்றவர் நின்று, “ரவிச்சந்திரன் மகளிடம் என்னப் பத்திச் சொல்லுங்க. முடிஞ்சா ஒரு நா கூட்டிட்டு வாங்க.” என்றார்.

 

”சரி சார் பாத்துப் போங்க.” என்றான்.

 

“சரி தம்பி..” என படிகளிலிருந்து அவர்  குரல் கேட்டது.

 

இவ்வளவு நேரம்  அவர் பேசியது  நரேனுக்கும், பூங்குழலிக்கும் பின்னால் நீண்டிருந்த அவர்களின் கடந்த காலத்தை தொட்டுக் காட்டிச் சென்றது போலிருந்து.  பூங்குழலி என்றால் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் தனக்கு இணையான ஒரு பெண்ணின் தோற்றம், அவளோடு கடந்த சில நாட்களாக பேசியதால் அறிந்த இயல்புகள் தவிர வேறு என்ன அவளைப் பற்றி தெரியும் என நினைத்துப் பார்த்தான். அவளது அப்பா, அவரைக் காதலித்த ஒரு பெண், அவர் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண், அவர்களுக்கு ஒரு குடும்பம், அவரது யூனியன் நடவடிக்கைகள், அவரது மரணம், அந்தக் குழந்தைகள் தவிப்பு, அவளது அம்மாவின் நிலைமை இதுகுறித்தெல்லம் யோசித்துப் பார்த்திருக்கிறானா என்றால் கிடையாது. அதுபோல அவளுக்கும் இவனைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

இதைத்தான் பூங்குழலி  சுட்டிக்காட்டியிருந்தாள் என்பது புரிந்தது. அவளது தயக்கங்களைக் களைவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும் என்பதை ‘ரைட் க்ளிக்’ செய்திருப்பதாக சொல்லவும் செய்திருந்தாள். அதற்கு ஒத்துழைத்திருக்க வேண்டும். அவளுக்கு  ஆதரவாக இருந்து தைரியத்தை அளித்திருக்க வேண்டும். கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கைகளையும் சிதைத்து விட்டோமே என்றிருந்தது நரேனுக்கு.

 

அதற்கு மேல் யோசிக்கவில்லை.  மொபைலை எடுத்து வாட்ஸ்ப்பில் “நமக்குள்ள செட் ஆகும்னு தோணுது. என்ன செய்யலாம்?” என  பூங்குழலிக்கு மெஸேஜ் அனுப்பினான். நாச்சியப்பன் சொன்ன ரவிச்சந்திரனின் போட்டோவைப்  பார்க்க வேண்டும் போலிருந்தது. மாடியிலிருந்து கீழே இறங்கினான் நரேன்.

 

(தொடரும்)

க்ளிக் - தொடர்கதையின் அத்தியாயங்களைப் படிக்க கீழே க்ளிக்குங்கள்!

கருத்துகள்

1 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அருமையாக போகிறது கதை... கதையை படிக்கும் போது, நம்மை சுற்றி நடந்த சில சம்பவங்கள் மனதில் நினைவுகளாக வருகிறது.. சிறப்பு!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!