க்ளிக் -10 (தொடர்கதை)


காய்ச்சல் அடித்து உடம்பே வெலவெலத்துப் போனது போலிருந்தான் நரேன். அவமானமும் பதற்றமும் தின்று கொண்டிருந்தது. பளீரென்று வெளிச்சம் பரவிக்கிடந்த யாருமற்ற அந்த வெளி வராண்டாவில் பூங்குழலி தனியாய் நடந்து படிகளில் இறங்கியதை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவசரத்தில் பெண்களின் கழிப்பறைக்குள் நுழைந்து விட்டான். இவனைக் கேலி செய்து சிரித்தார்கள். யாரையும் ஏறெடுத்துப் பார்க்க முடியாமல் போனான். அப்படித்தான் இன்று பூங்குழலி முன்பு கூனிக்குறுகி இதே இடத்தில் நின்றிருந்தான். அவளிடம் இரண்டு வார்த்தைகள் சரியாய்ப் பேச முடியவில்லை. தொண்டை வறண்டு விட்டது. எப்படியாவது பூங்குழலியை சமாதானப்படுத்த வேண்டும் என்று துடித்தான். அவளது இயல்பும், அறிவும் நெருங்கக் கூடியதாய் இல்லை. ஒன்றும் ஓடாமல்  படபடப்பாய் வந்தது.

 

தன்னோடு காலமெல்லாம் வாழப் போகிறவளின் கையைப் பிடித்துத்தானே முத்தம் கொடுத்தோம். அதிலென்ன தவறு?  என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். நிதானமாக முடியவில்லை. தவித்தான். தான் செய்தது அருவருப்பாக உறுத்திக் கொண்டிருந்தது. தாண்டிச் செல்ல முடியவில்லை.

 

ஊரில் நாட்டில் நடக்காத எதையும் செய்யவில்லை. இது ஒரு மிகச் சாதாரண விஷயம் என்று நியாயம் கற்பித்து பார்த்தான். தவறு செய்து விட்டோம் என்ற உணர்வுதான் மேலோங்கியிருந்தது.

 

தனக்குரிய பெண்ணிடம் ஆசையை வெளிப்படுத்தினோம். அவள் மறுத்து விட்டாள். நாம் விலகி விட்டோம். அவ்வளவுதானே. என நினைக்க மட்டும்தான் முடிந்தது விடுபடாமலேயே இருந்தான். தியேட்டரின் இருட்டு திரும்பத் திரும்ப வந்து மோதியது.

 

பூங்குழலிக்கும் இவனுக்கும் இடையே நடந்தது அந்தரங்கமான ஒரு சின்ன விஷயம். இதனை பூங்குழலி யாரிடம் சொல்வாள்? நெருங்கிய தோழிகளிடம்  சொல்லலாம்.  அவர்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள். அவளது அம்மாவிடமோ, பாட்டியிடமோ சொன்னால், ‘அட அசடே. அதற்கு என்ன?’ என்று கேட்பார்கள். இவனது அம்மாவிடமோ, அப்பாவிடமோ சொல்ல மாட்டாள். சொன்னாலும் தன் மகன் உரிமையோடு கொஞ்சம் வரம்பு மீறியிருக்கிறான் என்றே எடுத்துக் கொள்வார்கள். யாரும் குற்றவாளிக் கூண்டிலேற்றி விசாரிக்கப் போவதில்லை. தண்டிக்கப் போவதில்லை. இருந்தாலும் எதோ ஒன்று அவனை விசாரித்து தண்டித்துக் கொண்டிருந்தது.

 

கடற்கரையில் செல்பி எடுத்தவுடன் சந்தோஷமாக அவள் கையைப் பிடித்து அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுத்து ‘தாங்க்ஸ்’ சொல்லியிருந்தால் நிச்சயம் அவள் இப்படி பேசி இருக்க மாட்டாள். போயிருக்கவும் மாட்டாள். சிறு அதிர்ச்ச்சியடைந்து பின்னர் சிரித்தும் கூட இருப்பாள்.

 

சினிமாவுக்கென புக் செய்து வைத்திருந்தது, அதற்கென அவசரப்பட்டது, இருட்டில் அருகே உட்கார்ந்ததும் சகஜமிழந்தது, திட்டமிட்டு அவளது கை பற்றியது, முத்தம் கொடுத்தது எல்லாவற்றிலும் ஒரு கள்ளத்தனம் இருந்தது. அவள் கையை இழுத்துக் கொள்ள முயற்சிக்கும்போது கூட விட்டுவிடத் தோன்றவில்லை. ஒரு மூர்க்கம் வந்தது. இவனுக்குள் ஓளிந்திருந்தவனை இருட்டில் அவள் பார்த்துவிட்டாள். அவள் பார்த்ததை இவனும் பார்த்துவிட்டான். அதுதான் வதைக்கிறது.

 

வாட்ஸப் சத்தம். பார்த்தான். கடற்கரையில் பூங்குழலியோடு எடுத்த செல்பிக்கு. கண்களில் அன்பு பொங்கும் எமோஜியோடு  “ஸோ நைஸ் டா” என்றிருந்தாள் பவித்ரா. அந்த செல்பியை சந்திராவுக்கு, மூர்த்திக்கு, பவித்ராவுக்கு, தனது டீம் மேட் ஆஷாவுக்கு, தங்கியிருக்கும் வீட்டின் நண்பர்கள் கிஷோருக்கும் பிரசாந்த்துக்கும் உற்சாகமாய் அனுப்பி வைத்து இருந்தான். சந்திரா தியேட்டருக்குள் நுழையும்போதே மகனுக்கு போன் செய்து  ’நல்லாயிருக்கு” என கொண்டாடி இருந்தார்.

 

சந்திராவும் பவித்ராவும் அடைந்திருக்கும் சந்தோஷத்திற்கு இப்போது அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. போட்டோவில் சிரித்துக் கொண்டிருக்கிறது போலவா இவனும் பூங்குழலியும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்? இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர்கள் இப்போதும் பூரித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களை எல்லாம் ஏமாற்றுவது தானே இது. பவித்ரா இவனை ஒரு குழந்தை என்று சொல்லிக் கொண்டு இருப்பதும் அப்படித்தான் போல.

 

பள்ளிக்கே போக மாட்டேன் என வீட்டில் அன்றைக்கு அடம் பிடித்துக் கிடந்தவனின் கைபிடித்து எதிர்த்த வீட்டில் இருந்த பவித்ராதான் அழைத்துச் சென்றாள். அவளும் அதே பள்ளியில் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இவனைக் கிண்டல் செய்தவர்களை அடக்கினாள். அடிக்கடி இவனது வகுப்பு வந்து பார்த்துக் கொண்டாள். தொடர்ந்து சில நாட்கள் அவள் கூடவே இருந்தான். “பவித்ராக்கா” வாய் நிறைய அழைத்துக் கொண்டு நரேன் எதிர்த்த வீட்டிற்கு போவது அதன் பிறகு வழக்கமானது.

 

பவித்ரா பெரியவளானது, கல்லூரிக்குப் போனது, வேலைக்குச் சேர்ந்தது, திருமணம் ஆனது, விவாகரத்தில் முடிந்தது வரையிலான பதினைந்து ஆண்டுகளாக நரேன் பார்த்துப் பழகிய நெருக்கமான பெண் பவித்ரா. இவன் மீது தனிப் பிரியமும், உரிமையும் வைத்திருந்தாள். சந்திரா எதாவது குறை சொன்னால் கூட, “விடுங்க ஆண்ட்டி… நம்ம நரேன் எவ்வளவு நல்ல பையன் தெரிமா” என்று சொல்லி தோளில் கை போட்டு “என்னடா..” என்று குனிந்து இவன் முகத்தை உற்றுப் பார்ப்பாள்.

 

பூங்குழலியோடு நிச்சயம் செய்த அன்றைக்கு பவித்ராவால் சென்னையிலிருந்து வர முடியவில்லை. சந்திரா வாட்ஸப்பில் அனுப்பியிருந்த போட்டோக்களைப் பார்த்து இவனுக்கு போன் செய்தாள். பூங்குழலி அழகாய் இருப்பதாகவும், இருவருக்கும் நல்ல பொருத்தம் என்றும் வாழ்த்தினாள். பவித்ராவைப் போலவே பூங்குழலியின் பேச்சும் பார்வையும் இருப்பதாக இவன் சொன்னான்.

 

“அப்ப பைத்தியமாக்கிடாதே”  சிரித்தாள்.

 

“போங்கக்கா…” என்று எதோ சொல்ல வந்தவன் பேச முடியாமல் உடைந்து அழுது விட்டான். விளையாட்டுத்தானே என்று சொல்லி இவனைத் தேற்றுவதற்குள் போதுமென்றாகி விட்டது. கொஞ்ச நேரம் கழித்து, “ஸ்டில் யு ஆர் எ சைல்ட்” என வாட்ஸப்பில் சிரித்திருந்தாள்.

 

அந்தக் குழந்தைக்குள் இருந்துதான் ஒருவன் எட்டிப் பார்த்திருந்தான். இருட்டில் அவ்வளவு பக்கத்தில் பூங்குழலி இருக்கிறாள் என்னும் உணர்வு இவனது மூச்சுக்காற்றை தகிக்க வைத்தது. எதிர்பார்த்து காத்திருந்த தருணம் சாத்தியமாகிவிட்டது, அதனை தவற விடக்கூடாது என வேகம் கொண்டான்.  அப்படியே வாரி எடுத்துக் கொள்ள ஒரு வேட்கை உந்தியது.

 

அதற்கு முன்பு அவளை ஈர்ப்பதற்கு குழந்தை போல எடுத்துக் கொண்ட இவனது முயற்சிகள் ஒன்றுமில்லாமல் போயிருந்தன. கல்யாணப் பேச்சு நடந்து பூங்குழலியின் போட்டோ கிடைத்து முதன்முறை மொபைலில் பார்த்ததிலிருந்து செய்த கற்பனைகள் எவ்வளவு? பட்ட பாடெல்லாம் இவனுக்கு மட்டும்தான் தெரியும்.

 

ஃபேஸ்புக்கில் அவளைத் தேடி அறிந்தான். போட்டோக்களில் அவளது பார்வையை, சிரிப்பை பார்த்துப் பார்த்து இவனாகவே பழகிக்கொண்டு இருந்தான். முதன்முதலாய் திருவேற்காடு கோவிலில் அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்றவுடன் தனக்குள் நிறைய திட்டமிட்டிருந்தான்.  முதல் சந்திப்பு முக்கியமானது,  வாழ்க்கை முழுவதும் வரக் கூடியது என்று கிஷோர் சொன்னான்.  அது இவனுக்கும் தெரிந்ததுதான்.  

 

இரண்டு நாட்களுக்கு முன்பு போய் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டான். டிரஸ், செண்ட், எல்லாம் புதிதாக வாங்கியிருந்தான். எப்படி பேச வேண்டும், சிரிக்க வேண்டும் என்றெல்லாம் கூட யோசித்து வைத்திருந்தான். பூங்குழலியைப் பார்த்ததும் சுத்தமாய்  வாயும் வராமல் கையும் வராமல் போனது. அவள் ரொம்ப சாதாரணமாக வந்திருந்தாள் எல்லோரோடும் இயல்பாக பேசினாள். அவளோடு தனியாகப் போய் சம்பந்தமில்லாமல் எதோ உளறினான். அப்போதும் அவள் மார்பின் மீது இவனின் பார்வை போனது. அவள் அதை கவனித்து விட்டாள் என்பது சங்கடமாய் இருந்தது. சொதப்பி விட்டோம் என்பது அடுத்த சில நாட்கள் அலைக்கழித்தது.

 

நிச்சயதார்த்தம் அன்றைக்கும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என யோசித்திருந்தான். அங்கு தனியே இருக்கும் சூழலே இல்லை. எல்லோர் முன்னிலையில் பூங்குழலியோடு மேடையில் நின்றிருந்தான். யாராவது வந்து போட்டோ எடுத்துக்கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். கிடைத்த சந்தர்ப்பத்தில் அவளது கம்பெனி, வேலை பற்றி மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான். அதில் வந்த தைரியத்தில் இரண்டு நாள் கழித்து இரவில் போன் செய்தான். ஒன்றும் பேசத் தோன்றாமல் அசடுதான் வழிய வேண்டியிருந்தது.

 

அதற்கு அடுத்தநாள் ‘குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்” என பூங்குழலி ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தாள். இவனது நண்பர்கள் சுட்டிக்காட்டி “என்னாச்சு” என கேட்டார்கள். எரிச்சலையும் கோபத்தையும் சந்திராவிடம் கொட்டியிருந்தான். ”அது ஒன்றும் பிரச்சினையில்ல. நரேன் என்னிடம் கேட்டிருக்கலாமே. நான் நரேனிடம் பேசிக் கொள்கிறேன்.” என பூங்குழலி சந்திராவிடம் சொல்லியதை தெரிந்து கொண்ட பிறகு நிம்மதியானான். உரிமையோடு பேசியிருக்கலாமே என்னும் அந்த தொனி பிடித்திருந்தது.

 

“நீயும் பூங்குழலியும் அஷ்டலட்சுமி கோவிலுக்கு போய்ட்டு வாங்க. அவங்கம்மா பூங்குழலிக்கிட்ட சொல்லியிருக்காங்க” இரண்டு நாட்களுக்கு முன் சந்திரா போனில் சொன்னதும்  மீண்டும் பறக்க ஆரம்பித்தான். தங்கியிருந்த அறையில் கிஷோரும் பிரசாந்த்தும் இரண்டு பீர் அடித்து மூன்று தடவை மூத்திரம் போய் பேசியதெல்லாம் அபத்தமாயிருந்தது. திரும்பத் திரும்ப பெண்களை கரெக்ட் பண்றது ஒரு வித்தை, டக் அவுட் ஆகி விடாதே என சொன்னதையே சொல்லிக்கொண்டு இருந்தார்கள். கல்லூரி ஹாஸ்டல் ரூம்களை விட்டு இன்னும் வெளியே வராமல் இருந்தார்கள்.

 

ஆஷாதான் நிதானமாக சில விஷயங்களைச் சொல்லியிருந்தாள்.  “முதலில் கேஷுவலா ஃபீல் பண்ணு. உன்னை ஹீரோ மாதிரி காட்டிக் கொள்ளத் துடிக்காதே. அவளுக்குப் பிடிக்காததை இப்போ பேசாத. பிடிச்சா பிடிக்கட்டும், பிடிக்கலன்னா போகட்டும் என நினை. ரொம்ப முக்கியமா அசடு வழியாத.” என்றிருந்தாள்.

 

பவித்ராவுக்குப் பிறகு இவனிடம் நெருங்கிப் பழகும் பெண் ஆஷாதான். திருமணமாகி குழந்தை இருக்கிறது. வேலை பார்த்த கம்பெனியில் இருந்து அமெரிக்காவில் செல்ல வாய்ப்பு கிடைத்து சென்றிருந்தான் அவளது கணவன். கணிசமான சம்பளம். ஐந்து வருடங்கள் இருந்து விட்டு இந்தியா திரும்பினால்  போதும் என திட்டமிட்டிருந்தான். வீடு, கார், ஷேரில் முதலீடு என பிரச்சினையில்லாமல் பின்னர் வாழலாம் என்றும் ஆஷா வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமெரிக்காவுக்கு அழைத்திருக்கிறான். அதையெல்லாம் அவள் காதில் போட்டுக் கொள்ளவில்லை. கிடைத்த வேலையை விடுவதற்கு தயங்கினாள். இப்போது கணவனோடு பேச்சுவார்த்தை இல்லை.  குழந்தையோடு சென்னையில் இருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும் அவளோடு இருக்கிறார்கள். அவளாக இவனிடம் சொன்னது கொஞ்சம்தான். ஆபிஸ்தான் நிறைய சொல்லியிருந்தது.

 

வேலைக்குச் சேர்ந்தபோது அவளது டீமில் இருந்தான். ஆஷாதான் டிரெய்னிங் கொடுத்தாள். அப்போதும் நிறைய மெனக்கெட்டான். அவளுக்காகவே ஆபிஸ் போவது போலிருக்கும். அருகில் உட்கார்ந்திருக்க ஆசைப்படுவான். உட்கார்ந்தவுடன் நடுக்கம் வந்து விடும். அவள் பேசுவதில் கவனம் இல்லாமல் போய், வேலை தெரியாமல் தடுமாற எல்லாம் செய்தான்.  

 

“வாட்ஸ் ராங் வித் யூ” என ஒருநாள் எரிச்சலடைந்து இவனை  தனியே அழைத்துப் பேசினாள் ஆஷா.  குடும்பம், படிப்பு, ரசனைகளை கொஞ்சம் தெரிந்து கொண்டாள். சந்திராவின் போன் நம்பர் கேட்டு வாங்கினாள். பிறகு இவனைப் பார்க்கும் போதெல்லாம் முகம் மலர்ந்து ’ஹாய் பட்டி “ என ரொம்பத் தெரிந்தவள் போல நடந்து கொண்டாள். கொஞ்ச நாள் கழித்து அருகில் உட்கார்ந்து எதோ பேசிக்கொண்டு இருக்கும்போது  “கேர்ள்ஸப் பாத்தா உனக்கென்ன செய்யுது மேன்” என இவன் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

 

“இல்ல. நார்மலாத்தான் இருக்கேன்.” என்றான்.

 

“குட். யாரையாவது லவ் பண்ணு. அவக் கிட்ட பேசு. சரியாயிரும்”  சிரித்தாள். அந்த கம்பெனியில் பணிபுரியும் பெண்களை அவ்வப்போது இவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். டைனிங் ஹாலில் மற்ற பெண்களோடு உட்கார்ந்து சப்பிட்டுக் கொண்டிருக்கும்போது இவனை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வாள்.

 

தன்னைப் பற்றி தெரிந்து கொண்டவளாக ஆஷாவை உணர்ந்தான். பிறகெல்லாம் அவள் யாரோவாக இவனுக்குத் தெரியவில்லை. அவளது உடலை, அசைவுகளை ரகசியமாக பார்த்து வந்ததெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்  இவனை விட்டுப் போயிருந்தது. இயல்பாக பேசவும், தன்னைப் பற்றி வெளிப்படையாய் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது. இந்த ஆறு வருட சென்னை வாழ்க்கையில் இவனது கை பிடித்து நடக்க வைத்தது ஆஷாதான் என்று சொல்ல வேண்டும்.

 

தியேட்டரில் அங்கேயே நின்று கொண்டிருப்பது ஒரு மாதிரியாய் இருந்தது. யாரோ ஒருவன் இரண்டு மூன்று தடவை இவனை எட்டிப் பார்த்து விட்டுப் போயிருந்தான். உள்ளே போக முடியாது. பூங்குழலி பக்கத்தில் உட்கார்ந்திருந்த சீட் இப்போது வெறுமனே இருக்கும்.  தொந்தரவு செய்யும். படத்திலும் கவனம் இருக்காது.

 

தியேட்டரை விட்டு வெளியே எங்கு செல்ல? தங்கியிருக்கும் இடத்திற்கு செல்லலாம். படத்திற்கு புக் செய்ததை கிஷோரிடமும், பிரசாந்த்திடமும் சொல்லியிருக்கவில்லை. கடற்கரையில் எடுத்த செல்பியை ஏற்கனவே அனுப்பி இருந்தான். பூங்குழலியோடு கோவிலுக்குப் போய்விட்டு கடற்கரையிலிருந்து விட்டு வந்ததாகச் சொல்லலாம். முகம் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடும். அவர்களிடம் போய் எதைச் சொல்ல ?  

 

படம் பார்க்க போகலாமா என இவன் கேட்டது வரைக்கும் நன்றாகத்தான் இருந்தது. பூங்குழலி ஒருவேளை அமைதியாய் இருந்தால் என்னவாகி இருக்கும்? மேலும் தைரியமும், வேட்கையும் கொண்டு மேலும் நகர்ந்திருப்பான். அப்போது இதைவிடவும் மோசமாக பூங்குழலி கோபப்பட்டிருக்கலாம். இன்னும் அவமானமாகக் கூட இருந்திருக்கலாம்.

 

ஒரு வேளை  பூங்குழலி இணங்கி இருந்தால்..?  தியேட்டரை விட்டு வேறெங்காவது அழைத்துச் செல்ல தோன்றியிருக்கும். ‘என்ன பேச்சு பேசினாள், இவ்வளவுதானா இவள்’ என உள்ளுக்குள் ஆணின் திமிர் வந்திருக்கும்.

 

மெல்லிய குரலில் அவளோடு பேசிக்கொண்டு, ரசித்ததை பகிர்ந்து கொண்டு, சிரித்துக் கொண்டு படம் பார்த்திருந்தால் இந்த நாள் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. அவ்வப்போது எதிர்பாராமல் அவள் கை, உடல் பட்டு கிடைத்திருக்கும் உணர்வுகள்  நினைவுகளில் வாடாமல் தங்கியிருக்கும். சின்ன சின்ன ஸ்பரிசங்கள், புரிதல்களிலிருந்து இருவரிடமும் பிறக்கும் கள்ளம் எவ்வளவு சுகமாய் இருந்திருக்கும். எல்லாவற்றையும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டது போலிருந்தது. வெறுமையிலும் சோர்விலும் புதைந்து போனவனாய் தியேட்டரிலிருந்து வெளியேறினான்.

 

சாலைகளில் வரிசை வரிசையாய் விளக்குகள்  ஜொலித்துக் கொண்டிருந்தன. பெரிய பெரிய கட்டிடங்களின் உச்சியில்  காட்சிகள் சட்சட்டென்று மாற டிஜிட்டல் எழுத்துக்கள் ஒடிக்கொண்டு இருந்தன. நகரத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாய் வாகனங்களின் ஓட்டமும், இரைச்சலும் தெறித்தன. பட்டுப்புடவைகளுக்கு, நகைகளுக்கு, ஜீன்ஸிற்கு, கார்களுக்கு, ஃபேஷன் ஸ்டோர்களுக்கு, டாய்லெட்டிற்கு என பெரிய பெரிய விளம்பர பேனர்களில் பெண்கள் இருந்தார்கள்.

 

வேகமெடுத்துக் கிடந்தது வெள்ளிக்கிழமை இரவு நேரத்துச் சென்னை. சனி ஞாயிறு விடுமுறை என்பதால் இந்த இரவு கொண்டாட்டங்களுக்கானது. ஒரே மாதிரியான ஐந்து நாட்களிலிருந்து ‘அப்பாடா’ என விடுதலை பெற்றிருக்கும் நேரம். ரெஸ்டாரண்ட்கள், பார்கள், பப்புகளில்  களை கட்டும். டாஸ்மார்க் பார்களில் கடலின் இரைச்சலைப் போல மனிதக்குரல்கள் சேர்ந்து ஒலிக்கும். கிஷோரும், பிரசாந்த்தும் மற்ற நண்பர்களோடு அந்த ஜோதியில் ஐக்கியமாகி இருப்பார்கள்.

 

இந்தப் பெரிய நகரத்தில் தனியாய் அலைந்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்த்தான். தூத்துக்குடியில் வாழ்ந்த தெருவில் இவன் வயதொத்த நண்பர்கள் இருந்ததில்லை. எட்டாம் வகுப்பு படிக்கும்போது சில தெருக்கள் தாண்டி ஹைஸ்கூல் படிக்கும் சிலரோடு கிரிக்கெட் விளையாடப் போனான். ஒருநாள் மாலையில் இருட்டிய பிறகு வீடு திரும்பியவன் சந்திராவிடம் “இனும நா அவங்களோட விளையாடப் போக மாட்டேன். அவங்க கெட்டவங்கம்மா. போன்ல கெட்ட கெட்ட படமா காட்டுறாங்க” என அழுதான். அதிலிருந்து பெரும்பாலும் வெளியே போவதில்லை. பவித்ராவும் காலேஜில் படிக்க வெளியூர் போனதால் அவனே தனியாய் எதாவது விளையாடிக்கொண்டு, படித்துக் கொண்டு, படம் வரைந்து கொண்டிருப்பான். மூர்த்திக்கு வீட்டில் அப்படி அடைந்து கிடப்பது பிடிக்காது. வெளியே போய் விளையாடச் சொல்லுவார். சந்திரா “சும்மா இருங்க. உலகம் கெட்டுக் கிடக்கு” என்பார்.

 

 

தாகமெடுத்தது. ஒரு ரெஸ்டரண்ட் முன்பு இருந்த  ஜூஸ் கடை அருகே பைக்கை நிறுத்தி, ஆரஞ்சு ஜூஸ் சொன்னான். வாட்ஸ் அப்பில் பூங்குழலியைப் பார்த்தான். இவன் அனுப்பியிருந்த படம் மட்டுமே இருந்தது. “என்னைப் பார்க்க எனக்கே அருவருப்பாய் இருக்கிறது. மன்னித்துக் கொள்” என்று அனுப்பி விட்டு பார்த்தான். சிங்கிள் டிக்தான் இருந்தது. பார்க்கட்டும் என மொபபைலை பையில் வைத்தான்.

 

சரியாக அந்த நேரம் ப்ரிஸ்ஸோ கார்  இவனைத் தாண்டி நின்றது. டிரைவர் சீட்டிலிருந்து அவனது கம்பெனி மேனேஜர் இறங்கினான். அருகில் போய் பேசலாமா என நினைப்பதற்குள் முன்பக்கமிருந்து ஆஷா இறங்கினாள். இவன் தயங்கி நின்றான். மேனேஜரிடம் எதோ சொல்லி சிரித்தவள் யதேச்சையாக திரும்பும் போது இவனைப் பார்த்தாள். ஒரு கணம் நிலைத்த பார்வையை திருப்பிக் கொண்டு ரெஸ்டாரண்டுக்குள் சென்றாள். பக்கத்தில் மேனேஜர் மிக இயல்பாய் அவள் தோளில் கை போட்டிருந்தான்.

 

நரேனுக்கு  தாள முடியவில்லை. ஆர்டர் செய்த ஜூஸை வாங்கி வேக வேகமாய் குடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினான். ஆபிஸில் யாரோ அரசல் புரசலாக இதுபற்றி சில நாட்களுக்கு முன்பு பேசிய போது எரிச்சலடைந்து இருந்தான். எவ்வளவு சாதாரணமாக ஆஷாவால் இப்படி இருக்க முடிகிறது  என்பது பயத்தைத் தந்தது. தான் மட்டும் ஏன் ஒரு சின்ன மீறலுக்கு இப்படி கிடந்து துடித்துக் கொண்டு இருக்கிறோம் எனத் தோன்றியது.

 

அறை வெளிப்பக்கம் பூட்டி இருந்தது. சாவி இருந்தாலும் உள்ளே செல்ல மனம் வராமல் மேலே மொட்டை மாடிக்குச் சென்றான். யாருமில்லை. கட்டம் கட்டமாய் சுற்றிலும் வீடுகள் நிறைந்திருந்தன. ஏன் அந்த நேரம் ஜூஸ் குடிக்க அங்கு நின்றோம்? இவ்வளவு பெரிய நகரத்தில் சரியாக அங்கே எதற்கு ஆஷா அப்படி வந்து இறங்க வேண்டும்?  அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அண்ணாந்து கண்ணை மூடி நின்றான்.

 

வாட்ஸப் சத்தம். பார்த்தான். பூங்குழலிதான். இவன் மெஸேஜ் பார்த்து விட்டு பதில் அனுப்பி இருந்தாள்.

 

“நரேன்.  நமக்குள்ளே செட் ஆகாது. என்ன செய்யலாம்?”


(தொடரும்)

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. என்ன சொல்ல..?? பலரின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே படம் பிடித்துக்காட்டும் பதிவாகவே இருக்கிறது உங்கள் தொடர்கதை.... மிக அருமை..!!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா... இப்பக்கமா அப்பக்கமா என நரேன் மனகுமுறலை வெளிப்படுத்திய விதம் மிக அருமை. இறுதியில் வைத்த 'கிளிக்' கதையை மேலும் 'கிக்' ஆக்கி விட்டது... அடுத்த பகுதி சீக்கிரம் தோழர்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!