க்ளிக் - 8 (தொடர்கதை)
பிரகாஷிற்கு வாட்ஸப்பில் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை.  பிறகு பார்த்துக் கொள்வோம் என அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள் பூங்குழலி.

 

“சர்வீஸ் பேஸ்ல இருக்குற கம்பெனியை விட, ப்ராட்க்ட் பேஸ்ல இருக்குற கம்பெனி  பெட்டர்னு சொல்றாங்க. இவ்வளவு டென்ஷன் இருக்காது. ஜாப் செக்யூரிட்டியும்  இருக்கும்.” என்றான் அலையரசன்.

 

“என்ன வந்ததுலயிருந்து வேலையப் பத்தியே பேசிக்கிட்டு இருக்குற மாரி இருக்கு…” என்றாள் பூங்குழலி.

 

“ஆமா இரண்டு மூனு நாளா. ரெஸ்டே இல்லை. முதுகு வலி, தலை வலி. சரியாத் தூங்கல.” என்றான்.

 

நிச்சயதார்த்தம் அன்றைக்கு பேசிக்கொண்டு இருக்கும்போது நரேனும் இதையேச் சொல்லியிருந்தான். அவனுக்கு ப்ராட்க்ட் பேஸ்ல இருக்குற கம்பெனிதானாம். இவளையும் வேற கம்பெனி யோசிக்கச் சொல்லியிருந்தான்.

 

“அசோக் பத்தி எதாவது தெரியுமா.” பூங்குழலி கேட்டாள்.

 

“இல்ல“ என்று நிறுத்திய சோஃபியா எதோ சொல்ல வந்தது போலிருந்தது. தண்ணீர் குடித்தாள். எங்கோ பார்த்தாள்.

 

“என்ன சோஃபி…”  

 

பூங்குழலியை  உற்றுப் பார்த்துவிட்டு குனிந்து சாப்பிட்டுக் கொண்டே, “ஒரு மாசமா விக்னேஷும் பெஞ்ச்சிலதான் இருக்கான். நைட்ல ஓவராத் தண்ணியடிக்கான். நாலு நாளைக்கு முன்னால விடிஞ்சு பாக்கும்போது சோபாவுல அப்படியேக் கிடந்தான்.  க்ளாஸ்ல ஊத்தி வச்ச டிரிங்க்ஸ் பாதி அப்படியே டிபாய்ல இருந்துச்சு.  பசங்க ரெண்டு பேரும் பாக்க வேண்டாம்னு எல்லாத்தயும் அவசரமா சுத்தம் செஞ்சேன். என்ன பேசினாலும் கோபப்படுறான்.” சொல்லும்போதே குரல் கம்மி அழப் போனாள்.

 

சோஃபியாவின் கைகளை இறுகப் பற்றினாள் பூங்குழலி.

 

“விடு. விடு. யாராச்சும் பாத்தா நல்லாயிருக்காது.” சட்டென்று எழுந்து கை கழுவப் போனாள்.

 

அலையரசனும், பூங்குழலியும் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். சில கணங்கள் முன்பு வரைக்கும்  சகஜமாகவும் சிரித்துக்கொண்டும் இருந்தவள் சட்டென்று உடைந்து போய் விட்டாளே என்று இருந்தது. எந்த சமயத்திலும் உருகவும், உறைந்து போகவுமான பிரத்யேகமான இடங்களை ஒவ்வொருவருக்குள்ளும் வாழ்க்கை  வடிவமைத்து விடுகிறது. அந்த இடங்களை மறைத்துக்கொண்டுதான் எல்லோரும் வெளியே நடமாடிக்கொண்டு இருப்பது போலத் தோன்றியது.

 

 கை கழுவி விட்டு வந்த சோஃபியா, “நாளைக்கு சாயங்காலம் முடிஞ்சா ரெண்டு பேரும் வீட்டுக்கு வர்றீங்களா?” என்றாள். அவள் அழுதது  கண்களில் தெரிந்தது. முகம் கசங்கி இருந்தது. கைக்குட்டையால் முகத்தை திரும்பத் திரும்ப துடைத்துக் கொண்டாள்.

 

“வர்றோம்” என்றான் அலையரசன்.

 

“ஒ.கே . பை. நாளைக்கு பாப்போம்.” சென்றவள் திரும்பி வந்து, “நரேனை நாங்கள் கேட்டதாச் சொல்லு. ஹெவ் அ நைஸ் டைம்.” என முகத்தில் சிரிப்பை வரவழைத்துப் பேசினாள். பாவமாய் இருந்தது.

 

சாப்பிட்டு முடித்து, அலையரசனிடம் விடைபெற்று, டீமின்  டிஸ்கஸனில் உட்காரும் வரும் சோஃபியாவின் நினைவாகவே இருந்தது. நான்கு மணிக்குள்ளாகவே எல்லாம் முடிந்தது. லியோ பூங்குழலியின் பங்களிப்பை பாராட்டினான்.

 

எல்லோரிடமும் விடைபெறவும் நரேன் மொபைலில் அழைக்கவும் சரியாக இருந்தது. “இதோ வந்துட்டேயிருக்கேன்”  கிளம்பினாள்.

 

லிஃப்டில் மகாலிங்கம், “வாங்க பூங்குழலிம்மா?.” வரவேற்றார். தரைத் தளத்துக்கு பட்டனை அழுத்தி விட்டு, “என்ன உங்களுக்கு கல்யாணமாம்மா?” என்றார்.

 

பூங்குழலிக்கு ஆச்சரியத்தை விட அதிர்ச்சியே வந்தது. இங்கு அலையரசனுக்கும், சோஃபியாவுக்கும் மட்டும்தான் தெரியும். மகாலிங்கத்தைப் பற்றி யோசிக்காமல் அவர்கள் இரண்டு பேரும் லிஃப்டில் இது பற்றி பேசியிருக்க வேண்டும் என புரிந்து கொண்டாள். ‘சரியான லூஸுங்க” என நினைத்துக் கொண்டாள்.

 

“ஆமாம் மகாலிங்கம்.” சிரித்தாள்.

 

“நல்லதும்மா. சந்தோஷம்..” என்றார். லிஃப்ட்  நிற்கவும் பூங்குழலி வெளிவந்தாள்.

 

நரேன் பைக்கில் வந்திருந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் மேக் அப் செய்துகொண்டவனாக, சட்டை பேண்ட் கசங்காமல், தலைமுடி கலையாமல், கூலிங்கிளாஸ் போட்டு தெளிவாய் தோற்றம் கொண்டிருந்தான். லீவு போட்டிருக்க வேண்டும். அருகில் சென்றதும் புன்னகைத்தான். பூங்குழலியும் புன்னகைத்தாள். இவளது விரலில் அவன் அணிந்திருந்த நிச்சயதார்த்த மோதிரத்தின் மீது அவன் பார்வை சென்று திரும்பியதைப் பார்த்தாள்.

 

“போவமா” என்றான். தலையாட்டிவிட்டு, ஜீன்ஸ் போட்டிருந்ததால் இரண்டு பக்கமும் கால் போட்டு பின்னால் உட்கார்ந்தாள். நரேனிடமிருந்து அடர்த்தியாய் பாடி ஸ்ப்ரே வீசிக் கொண்டிருந்தது. ஹெல்மட் அணிந்து வண்டியை ஸ்டார்ட் செய்தான். பஸ்ஸில், ஆட்டோவில் செல்வதை விட, பைக்கில் செல்வது வேறாக இருந்தது. காற்றோடும், வெளியோடும் கலந்து முடியெல்லாம் படபடக்க பயணிப்பது சுகம்தான். இரைச்சல்களும், புகையும் இல்லாவிட்டால் முழுசாக அனுபவிக்கலாம். 

 

குட்டிக்கரா பவுடர், சிகரெட், வேர்வை கலந்த வாசம் பிடித்து அப்பாவுடன் பைக்கில் செல்ல அவ்வளவு பிடிக்கும். அன்பையெல்லாம் காட்டுவதற்கான நேரம் போல இருக்கும். முதுகோடு கட்டிப்பிடித்துக் கொள்வாள். முருகேசன் மாமாவோடு பைக்கில் சென்றிருக்கிறாள். எந்த வாசமும் அவரிடம் இருக்காது.  உரிமையோடு தோளில் கை வைத்துக்கொள்வாள். அலையரசனோடு ஒன்றிரண்டு சமயம் சென்றிருக்கிறாள். பிரேக் போடும் போது, வேகமாய் போகும்போது ஒரு கையை அவன் தோளில் வைத்துவிட்டு எடுத்துக் கொள்வாள். நரேனின் தோளில் கைவைத்துக் கொள்ள யோசனையாய் இருந்தது. பின்னால் கம்பியைப் பிடித்துக் கொண்டாள். இவனோடுதான் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறது, இவனோடுதான் வாழ்க்கை முழுவதும் பயணிக்கப் போகிறோம் என்பது இன்னும் உணர்வாகவில்லை. செய்தியாகவே இருக்கிறது.

 

பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தவர்களில், ஷாப்பிங் போகும் போது கடைகளில் “வாங்க மேடம்” என  பொறுமையோடு கவனித்தவர்களில், நடந்து செல்லும்போது எதிரே வந்தவர்களில், ஓட்டலில் சாப்பிட உட்கார்ந்திருந்தவர்களில், ஒரே ரெயில் பெட்டியில் பயணம் செய்தவர்களில் என எத்தனையோ ஆண்களின் பார்வையில் சிலிர்த்திருக்கிறாள். சில வார்த்தைகள் பேசியதிலோ, அமைதியாக உடனிருந்ததிலோ பரவசம் கொண்டிருக்கிறாள். அந்த கணங்கள் அப்படியே முடிவில்லாமல் நீண்டு செல்லாதா என ஏக்கம் வந்ததுண்டு. அழகான பூக்களை ரசித்துவிட்டு, அவைகளை பறிக்க முடியாமல்  அங்கேயே விட்டுச் செல்கிற அந்த நேரத்து சிறு வலி அது. கல்லூரி முடிக்கும் வரை அந்த வலி  சமயங்களில் பெரும் துக்கமாக வதைத்தும் இருக்கிறது. துடித்துக்கொண்டு அலைபாய வைத்திருக்கிறது. திரும்பவும் அந்தப் பூவை ரசிக்க மெனக்கெட்டிருக்கிறாள். அப்படியெல்லாம் இப்போது இல்லை.  நிதானம் வந்திருக்கிறது. செடியிலேயே பூ இருக்கட்டும் என கடக்க முடிகிறது. அந்த முகத்துக்கு மேல் முகமாக பூத்து பூத்து ஒவ்வொன்றாய் மறைந்து விடுகின்றன. பள்ளி வரை கூட படித்த பிரகாஷ், கல்லூரியில் கெஸ்ட் லெக்சர் கொடுக்க வந்த சாலமன், கல்கத்தாவுக்கு ஆபிஸ் விஷயமாக ஒரு வாரம் டிரெயினிங் சென்றபோது அதில் கலந்துகொண்ட பெங்காலி இளைஞன் ரதிந்திரா என ஒன்றிரண்டு பேர்கள்தான் வாடிப்போகாமல் இருக்கிறார்கள்.

 

நரேனுக்கு மிக அருகில் உட்கார்ந்திருக்கும் இந்த நேரத்திலும் எந்த வித ஈர்ப்பும் ஏற்படவில்லை. கால்மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்களின் இரைச்சலோடு பெரிய மாராத்தானில்  எல்லோரும் ஒன்று போல் சென்று கொண்டு இருப்பதாகத் தெரிந்தது. ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளவில்லை. என்ன பேசுவது என யோசிப்பதும், அப்போது நிலவும் மௌனமும்  ஒரு அவஸ்தை. சிக்னலில் நின்றபோது, லேசாய் தொண்டையை கனைத்துக்கொண்டு, “அப்புறம் பூங்குழலி.....” என்றான்.

 

“ம்....சொல்லுங்க.” என்றாள். `ங்க’  எதோ போலிருந்தது. நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும்போது, நரேனைப் பற்றி குறிப்பிட்டு அவன், இவன் என்று பூங்குழலி பேசினாள். பத்மாவதி சத்தம் போட்டார். ‘வாங்க’, ‘போங்க’ன்னுதான் சொல்ல வேண்டும் என பாடம் நடத்தியிருந்தார்.

 

“உன்னோடு பைக்ல போறது எதோ றெக்கை கட்டி பறக்குற மாதிரி இருக்கு” என்றான்.

 

தமிழ்ச் சினிமாவின் வசனமாய்ப் பேசுகிறானே என நினைத்துக் கொண்டாள். சிரிப்பு வந்தது. திரும்பிப் பார்த்து உற்சாகமடைந்து, “ஹவ் டூ யூ ஃபில் இட்?” கேட்டான்.

 

இது வேறா என்று லேசாய் அலுத்துக் கொண்டாள். பைக்கில் செல்வது குறித்து நிறைய யோசித்து திட்டமிட்டு இருப்பான் போலிருந்தது. எதாவது சொல்லி வருத்தப்படப் போகிறான் என தவிர்த்து, “பவித்ராங்கிறது யாரு?” கேட்டாள்.

 

“எஙக எதுத்த வீட்டு அக்கா. ரொம்ப பாசமா இருப்பாங்க.”

 

“ஃபேஸ்புக்ல ரிக்வஸ்ட் கொடுத்திருந்தாங்க. ரிலேஷன்ஷிப்ல நீங்க பிரதர்னு காட்டிச்சு அதாங் கேட்டேன்.

 

“அப்படியா. என்னோட ரூம் மேட்ஸ், பிரண்ட்ஸ் கூட ரிக்வஸ்ட் கொடுத்திருப்பாங்களே!” சிரித்தான்.

 

“கவனிக்கல.”

 

“இன்னிக்கு ஃபிரண்ட்ஸ்ங்க சில பேர் வர்றதாச் சொல்லியிருந்தாங்க. உன்னைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டாங்க.”

 

“ஏன்… கூட்டிட்டு வந்திருக்கலாமே”

 

“அம்மாக்கிட்ட கேட்டேன். அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இன்னொரு நா சாயங்காலம் எதாவது ஒரு ஒட்டல்ல மீட் பண்ணுவோம்”

 

“ம்....பவித்ரா சென்னையிலத்தான் இருக்காங்களா, கல்யாணமாய்ட்டா?”

 

“சென்னையிலத்தான் இருக்கா. கல்யாணமாகி டைவர்ஸூம் முடிஞ்சுது.” குரலில் எரிச்சல் தெரிந்தது. அமைதியானார்கள்.

 

“நம்மப் பத்தி பேசுவோமே” என்றான். சிக்னல் விழுந்ததும் வாகனங்கள்  உறுமிக்கொண்டு புறப்பட்டன. இவர்களும் தொடந்தார்கள்.

 

“வண்டியில ஜோடி ஜோடியா போறதப் பார்க்கும்போது நானும் ஒரு நா இப்படில்லாம் போவேன்னு நினைப்பேன்.” இரைச்சலில் கொஞ்சம் கத்திப் பேசினான். “ஆமா, எப்படி ஃபீல் பண்றேன்னு கேட்டேனே, பதிலே சொல்லல?” முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டான்.

 

“ம்..ம்.. கொஞ்சம் எக்ஸைட்டடாத்தான் இருக்கு.” சொல்லி வைத்தாள்.

 

“கொஞ்சம்தானா?” சிரித்தான். “ஒன்னு தெரியுமா. இந்த பைக் வாங்கி மூனு வருஷமாச்சு. இதுல உக்காந்த மொதப் பொண்ணு நீதான்.” என்றான். தன்னை சந்தோஷப்படுத்தும் என அவன் பேசியது புரிந்தது. அமைதியாக இருந்தாள்.

 

“ஏங்கூட ஆபிஸ்ல வேல பாக்குற சுதா  ஒரு தடவை தாம்பரத்துல இறக்கி விடுறியான்னு கேட்டா. ரிசர்வ்டுனு சொல்லிட்டேன்.”

 

“இதுல என்ன இருக்கு. கூட்டிட்டுப் போயிருக்கலாமே..”

 

“என்ன அப்பிடிச் சொல்லிட்ட. இதுலத்தான் எல்லாம் இருக்கு. வொய்ஃப்ன்னா ஒரு ஸ்பெஷல் இல்லியா?”

 

“அப்ப, என்னைத் தவிர வேற யாரையும் இந்த பைக்ல கூட்டிட்டு போக மாட்டீங்களா?”

 

“அவசியமிருந்தா போகலாம்தான். ஆனா மொதல்ல உக்காந்தது வொய்ஃப்தான?” சிரித்தான்.

 

“ம்” என்று ஆட்டோக்களிலும், கார்களிலும், பைக்குகளிலும் கூடவே வந்து கொண்டு இருப்பவர்களை பார்க்க ஆரம்பித்தாள் பூங்குழலி. நெரிசலில் எதாவது ஒரு சின்ன இடைவெளி கிடைத்தால் அதில் நுழைந்து எப்படியாவது முன்னால் சென்று விடுவதிலேயே எல்லோரும் முனைப்பாயிருந்தனர். பக்கத்தில் வந்த ஒரு பைக்கில் ஆண் மேல் விழுந்து கட்டிப்பிடித்தபடி பெண் இருந்தாள். முதுகில் முகம் புதைத்து இருந்தாள். தூங்குகிறாளா, பயத்தில் இருக்கிறாளா, இல்லை மயக்கத்தில் இருக்கிறாளா என்று தெரியவில்லை.

 

கல்கத்தாவில், மெட்ரோ ரெயிலில்  போகும்போது பார்த்த அந்த ஜோடி அபூர்வமானவர்கள். கடுமையான நெரிசலில் இரண்டு கம்பார்ட்மெண்டுக்கும் இடையே  இருந்த குறுகலான இடத்தில் அவனும் அவளும் நின்றிருந்தார்கள். மூச்சு படும் நெருக்கத்தில், இயர் போனின் இரு முனைகளில் ஒன்றை அவளும், மற்றொன்றை அவனும் காதில் சொருகியிருந்தனர். இருவரும் கண்கள் மூடி மெய்மறந்திருந்தனர். ஒரு சமயம் அவன் கண் திறந்து, தலையசைத்து, பின் கண்சொருகிப் போனான். மெல்ல அவள் கண் திறந்து ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும், உருக்கத்தையும் வெளிப்படுத்தி மூடினாள். தூக்கத்தில் புன்னகைக்கும் குழந்தையின் மாயக்கணம் அவளிடம் தோன்றி மறையாமல் இருந்தது.  இருவரும் ஒன்று போல் கண் திறந்து ஒருவரையொருவர் அசையாமல் பார்த்திருந்தனர். அந்தப் பார்வையில் இருந்து மிதந்த இசையை பூங்குழலியால் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. அவளுக்கும் கிறக்கமாய் இருந்தது. இசையின் பெருவெளியில் ஒரு ஆணும் பெண்ணும் சின்னப் புள்ளியாகக் கூட தெரியாமல் கரைந்து மறைந்து கொண்டிருந்தனர். ஸ்டேஷன் வந்ததும் கிடைக்காத ஒன்றை விட்டுச் செல்லும் வருத்தத்துடன் இறங்கினாள். அவர்கள் இருவரையும் எங்கே கொண்டு செல்கிறது அந்த ரெயில் என்பது போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு அப்படியொரு இசையனுபவம் கிடைக்கவேயில்லை. எப்போதாவது அவளையறியாமல் உறக்கத்தில் வந்து வருடுகிறது. அப்போது அவளது மாயப்புன்னகையை அவளே பார்க்க முடிந்தது.

 

நரேன் எதோ சொல்லியது போலிருந்தது. “என்ன?” கேட்டாள்.

 

“போன் அடிக்கிற சத்தம் கேட்டுச்சு. உன்னுடைய போன்தான்னு நினைக்கிறேன்.”

 

பார்த்துவிட்டு, “அம்மா கூப்பிட்டிருக்காங்க” என்றாள்.

 

“வண்டியை ஓரமா நிறுத்தட்டுமா, பேசுறியா?”

 

“வேண்டாம். ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயாச்சான்னு  கேப்பாங்க. கோயிலுக்கு போய்ட்டு பேசுறேன்”

 

அடுத்த சிக்னலில் வண்டிகள் முன்னால் நின்றிருந்தன. உஸ்ஸென்று நரேன் அலுத்தான். பக்கத்தில் வந்து நின்ற காரின் பின்சீட்டில் ஒருவர் லேப்டாப்பில் ஆழ்ந்திருந்தது கண்ணாடி வழியாகத் தெரிந்தது. இந்தப் பக்கத்தில் ஆட்டோவில் இரண்டு பெண்கள் சில பைகளோடு எதோ கவலையில் தெரிந்தார்கள். இடையில் உறுமிக்கொண்டு பைக்கை ஒருவன் கொண்டுவந்து நிறுத்தி நரேனையும், பூங்குழலியையும் ஒருமுறை பார்த்துவிட்டு காலை ஊன்றி, கைகளை கட்டிக்கொண்டு சிக்னலை பார்த்தவாறு பொறுமை காத்தான்.  ஆலுக்காஸில் நகை வாங்கும்படி நடிகர் விஜய் வரிசையாய்  நடுவே கம்பங்களில் தொங்கிக் கொண்டு இருக்க, அதற்கும் உயரத்தில் திரிஷா பட்டுப்புடவையில் ஒய்யாராமாய் நிற்க, கவனியாமல் இரு பக்கமும் பிளாட்பாரங்களில் மக்கள் எதிரும்புதிருமாய் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

 

“ஜவுளி வாங்கவும், நகை வாங்கவும் அடுத்த வாரம் சென்னைக்கு வர்றதா அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க. ஒங்க தாத்தா , பாட்டி, அம்மாவும் வருவாங்கன்னும் சொன்னாங்க” என்றான் நரேன்.

 

“ம். சொன்னாங்க.”

 

பச்சைக்கலர் விளக்கு எரிய, முன்னால் நகர்ந்தார்கள். இராட்சச் சக்கரம் சழல ஆரம்பித்தது போலிருந்தது. பிழைப்புக்காக மனிதர்கள் வந்து மேலும் மேலும் தொற்றிக்கொண்டே இருக்கிறார்கள். நகரம் கொதித்துக் கிடந்தது.

 

தரையின் சகல இரைச்சல்களையும் தின்றுவிட்டு கிடுகிடுக்க வைக்கும் அதிர்வோடு பிரளயத்தின் சத்தம் மேலே கேட்டது. அண்ணாந்து பார்த்தபோது அடிவயிற்றில் நெருப்புத்துண்டுகளாய் விளக்குகள் எரிய, விமானம்  ஒன்று அப்போதுதான் தரையிலிருந்து எழும்பி பெரிய  உலோகப் பறவையாய் அசையாத இறக்கைகளோடு போய்க்கொண்டு இருந்தது. அதற்கும் மேலே காற்று மண்டலத்தில் சாதுவாய் சில பஞ்சு மேகங்களை பூங்குழலி பார்த்தாள். சம்பந்தமில்லாமல் அவை தோன்றின. ஊரில், பள்ளிக் கூடத்தில் பார்க்குபோது  பஞ்சு மேகங்கள் ஆசையாகவும், சொந்தமாகவும் தெரியும்.

 

போன் சத்தம் கேட்டது. பார்த்தாள். அம்மாதான் அழைத்துக் கொண்டு இருந்தாள். நரேன் வண்டியின் வேகம் குறைத்து ஒரு ஓரமாக ஓட்டிக் கொண்டு சென்றான்.

 

“சொல்லும்மா”

 

“கோயிலுக்குப் போயாச்சா..?”

 

“போய்க்கிட்டு இருக்கோம்.”

 

“சரிம்மா, சரி. எல்லாம் நல்லபடி நடக்கட்டும்.”

 

“என்னது நல்லபடி நடக்கணும்”

 

“மொத மொதல்ல கோயிலுக்கு சேர்ந்து போறீங்களே... அதான்..”

 

“ம்.... வேறென்ன?”

 

“அப்புறம்... ஒனக்கு பீரியட்ஸ்லாம் இல்லியே?” சித்ரா மெல்லிய குரலில் கேட்டாள்.

 

“என்னம்மா கேள்வி. கடுப்பை கிளப்பாத”

 

“இல்லம்மா, பாட்டிதான் கேக்க சொன்னாங்க.”

 

“அவங்களுக்கு அப்படி எதாவது உண்டான்னு நாங் கேட்டதா நீ கேளு” போனை எரிச்சலில் துண்டித்தாள்.

 

நரேன் வண்டியின் வேகத்தை கொஞ்சம் அதிகமாக்கிக் கொண்டு, “எதுக்கு கோபப்படுற. அப்படி என்ன சொல்லிட்டாங்க.” கேட்டான்.

 

“ஸாரி. உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்” என்றாள் பூங்குழலி சட்டென்று. முகம் பார்க்க முடியாவிட்டாலும், நரேன் தாங்கிக்கொள்ள முடியாமல் கஷ்டப்படுவான் என்பது புரிந்தது. அவனை நெருக்கமாய் உணர்ந்திருந்தால் இதையே ஒரு ஜோக்காக சொல்லி சிரித்திருக்கவும் முடியும்.  இப்போதே  அவன் அதிகமாய் உரிமை எடுத்துக் கொள்வது, எல்லாவற்றையும் அறிந்துகொள்ள கேள்வி கேட்பது பிடிக்கவில்லை. கொஞ்சம் தன்னைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும் என அமைதியாய் இருந்தாள். அவனும் பேசவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியாமல், இருவரும் அவரவர் தனிமைகளுக்குள் நுழைந்து கொண்டனர்.

 

ஒரு வளைவில் திரும்பியதும் எதிரே கடல் தெரிந்தது. கடற்கரையை ஒட்டிச் சென்று சிறிது நேரத்தில் கோவில் முன்பு நரேன் நிறுத்தினான். இவள் இறங்கிக் கொண்டதும் கொஞ்சம் தள்ளி சென்று பைக்கை நிறுத்தி விட்டு வந்தான். பூங்குழலி கோவிலைப் பார்த்துக்கொண்டிருந்தாள். செருப்புகளை கழற்றிக் கொடுக்கும் இடம் நோக்கி சென்றான். இவளும் பின்னால் சென்றாள். டோக்கன் வாங்கியதும், போனை எடுத்து தொடு திரையில் கைகளால் கோடு போட்டான். காதில் வைத்துக் கொண்டான்.

 

“ஆமாம்மா, கோயிலுக்கு வந்துட்டேன்.” என்றான். தொடர்ந்து நான்கைந்து “சரிம்மா” க்கள் சொன்னான்.  ஒரே ஒரு “இல்லை” சொன்னான். இவளிடம் “அம்மா பேசணும்னு சொன்னாங்க” என்று போனை நீட்டினான்.

 

“சொல்லுங்க ஆன்ட்டி”

 

“நரேன்ட்ட எல்லாம் சொல்லியிருக்கேன். ரெண்டாவது அடுக்குல இருக்குற மகாலஷ்மிய முதல்ல கும்பிட்டுட்டு, அப்புறம் மத்த ஏழு லஷ்மியையும் கும்பிடுங்க. கடற்கரைக்கும் போய்ட்டு வாங்க.”

 

“ஓ.கே ஆன்ட்டி...”

 

“சரி, நீ என்ன புடவை கட்டிட்டு வரலியா”

 

“இல்ல. சிசிடிசி கேமிராவில தெரியுதா?’ என்றாள்.

 

அந்த பக்கம் கொஞ்சம் அமைதி. ”சரிம்மா. போனைக் கொடும்மா” என்றார் சந்திரா.

 

நரேனிடம் போனைக் கொடுத்தாள். வாங்கி, “அப்புறமா பேசுறேன்.” என போனை பையில் வைத்துக் கொண்டான்.


இருவரும் அமைதியாக உள்ளே சென்றனர். விசாரித்து மகாலஷ்மியை முதலில் கும்பிட்டனர். அய்யர் தந்த குங்குமத்தை கைகளில் வாங்கி, நெற்றியில் வைக்கப் போனாள். “இரு” என்று அவனே வைத்து விட்டான். இதிலெல்லாம் தெளிவாய் இருக்கிறானே என்று நினைத்தவளுக்கு அனேகமாய் இதையும் அவனது அம்மாவே சொல்லியிருக்கக் கூடும் என நினைத்துக் கொண்டாள். உர்ரென்று இருந்த அவன் முகத்தில் சந்தோஷம் கண்டாள். கோவிலுக்குள் அவ்வளவாய் கூட்டம் இல்லை. எண்ணெய், குங்குமம், சந்தனம், பூக்களின் கலவையாய்  ஒரு வாசம் அடித்தது. பிரகாரம் சுற்றியபோது தன்னைவிட நரேன் கொஞ்சம்தான் உயரமாக இருப்பதை பார்த்தாள்.

 

வெளியே வந்து செருப்பை மாட்டிக்கொண்டு, “பைக்கை எடுத்து வர்றேன்” என சென்றான். காத்திருந்தாள். கடமையை ஆற்றிய பெருமூச்சு வந்தது. நரேன் வந்ததும் ஏறிக்கொண்டாள். மெல்ல ஊர்ந்து கொண்டே அங்குமிங்குமாய் பார்த்து ஒரு இடத்தில் நிறுத்தினான். இறங்கியதும் கடலைப் பார்க்க ஆரம்பித்தாள். பைக்கின் கவரிலிருந்து, கல்யாணப் பத்திரிகையை எடுத்து, “பூங்குழலி..” என அழைத்தான். திரும்பிப் பார்த்தவளிடம் முகமெல்லாம் பூரித்து நீட்டினான். தங்கக் கலரில் மின்னியது. பிரித்துப் பார்த்தாள்.

 

இவளது பெயரும், நரேன் பெயரும் நடுவே கட்டங்களில் பெரிதாக இருந்தன.

 

(தொடரும்)

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. சிற்றாறு போல் சிறப்புடன் செல்கிறது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாசித்து கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி தோழர். மகிழ்ச்சி.

   நீக்கு
 2. வாங்க பேசுவோம்...

  இயல்பான முதல் சந்திப்பு... இருவரும் மாற்று எண்ணங்களுடன்...
  அருமை...

  பதிலளிநீக்கு
 3. அருமை தோழர். நன்றாக சென்று கொண்டிருக்கிறது. வாழ்வின் பயணங்கள்.....

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!