க்ளிக் - 7 (தொடர்கதை)ஃபாஸ்டஸ் லியோ அருகில் வந்து நின்றான். டீம் ஹெட் அவன். பூங்குழலி டைப் அடித்துக் கொண்டிருந்தாள். “மதியம் லஞ்ச்சுக்குப் பிறகு நம்ம டீமோட டிஸ்கஷன். நாலு மணிக்கு முடிஞ்சிரும். நீ கிளம்பலாம். ஒ.கேவா?” என்றான்.

 

“ஓ.கே சார்”  நிமிர்ந்து பார்த்தாள்.

 

“எதும் பிராப்ளமா?”

 

“நத்திங்” என்றாள் அவசரமாக.

 

“உன் பட்டி எதும் சொன்னாளா?”

 

பட்டி என்று அவன் ஆங்கிலத்தில் குறிப்பிட்டது சோபியாவை. இந்தக் கம்பெனி முழுக்க பூங்குழலிக்கு சோபியாவும், சோபியாவுக்கு பூங்குழலியும் பட்டி. ஹாஸ்டலில் ஸ்ரீஜாவுக்கு பூங்குழலியும், பூங்குழலிக்கு ஸ்ரீஜாவும் பட்டி. இப்படி எவ்வளவு வார்த்தைகள். ப்ரோ, ட்யூட், கைஸ், கேள்ஸ், வான்னா, கோன்னா எல்லாவற்றையும் இங்கு வந்துதான் தெரிந்து கொண்டாள். அப்படியெல்லாம் பழக பூங்குழலிக்கு இன்னும் கூச்சம் இருந்தது. லியோ  சொன்னது புரியாதது போல் இவள் முகம் இருந்தது.

 

“ம்… நார்மலா இல்ல நீ” என்றான்.

 

அமைதியாக கம்ப்யூட்டர் திரையை பார்த்து வேலையைத் தொடர்ந்தாள். கீ போர்டில் விரல்கள் இயங்கின.

 

அவளது கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டே லியோ பேசினான். “ஒரு வேலையை எடுத்துக் கிட்டம்னா நாம அதுக்கு ஹண்ட்ரண்ட் பர்சண்ட் எஃபர்ட் கொடுக்கணும்.  நேச்சுரலாவே நீ ரொம்ப ஸ்மார்ட். டேலண்டட். மெச்சூர்ட். ஈஸியா புரிஞ்சுக்கிற. கவனம் மட்டும்  சிதறாம இருந்துச்சுன்னா உன்னை அடிச்சுக்க இங்க ஆளே இல்ல.”

 

எதுவும் சொல்லத் தோன்றாமல் அவனைப் பார்த்து புன்னகைத்து தலையாட்டிவிட்டு மீண்டும் டைப் அடித்தாள்.

 

அவள் முகம் பார்த்து “முன்னமே சொல்லியிருக்கேன். இங்க ஒவ்வொரு நாளும் புதுசு. லேர்ன் பண்ண பண்ண ஒவ்வொண்ணுமே புதுசு. நீயும் புதுசு. ஜாய்ன் பண்றப்ப உன்னோட ரெஸ்யூம்ல விண்டோஸ் டிரபுள்ஷூட்டிங்ல எக்ஸ்பர்ட், அப்புறம் இன்னும் எதோ சொல்லியிருந்தே. இந்த நாலு வருஷத்துல எவ்வளவு லேர்ன் பண்ணியிருக்கே.   புரோகிராமிங்ல, டேட்டா அனலிசஸ்ல, டாகுமெண்டேஷன்ல, டெலிவரிலன்னு சொல்லிக்கிட்டே போகலாம். அசோக் என்ன லேர்ன் பண்ணான்? இன்னொரு கம்பெனிக்கு என்ன ரெஸ்யூம் கொடுப்பான்?  உன்னோட சர்வீஸுக்கு கஸ்டமர்க்கிட்டயிருந்து ஃபோர் ப்ளஸ் ரெவ்யூ கிடைச்சிருக்கு. அவனுக்கு என்ன தெரிமா? அவன மாதிரி வெளியே நிறைய பேர் இருக்காங்க. கோடிக்கணக்குல காத்துக்கிட்டு இருக்காங்க. உள்ளே உன்னைப் போல நிறைய பேர் இல்ல.” என்று பேசிக்கொண்டிருந்தான்.

 

பூங்குழலி டைப் அடிப்பதை நிறுத்திவிட்டு லியோவை அமைதியாகப் பார்த்தாள்.

 

‘ம்’மென்று யோசித்து “டோண்ட் ஸ்பாயில் யுவர் மூட். டோண்ட் லெட் யு டவுண். கீழே விழுந்தா தூக்கி விட இங்க யாரும் இல்ல. எல்லோரும் ஒடிட்டே இருக்காங்க. திரும்பிக் கூட பாக்க நேரம் கிடையாது. நாமதான் எந்திரிக்கணும். ஒடணும். சொல்லணும்னு தோணிச்சு. ஒ.கே. யூ கேரி ஆன்” அந்த இடத்தைவிட்டு சென்றான்.  

 

லியோவைப் பற்றி பல கதைகள் உண்டு. யாவும்  லியோவுக்குப் பின்னால் பேசப்படுபவை. கல்யாணமான இரண்டு நாளில் அவனது மனைவி வேறு யாருடோ போய்விட்டாள், லியோ இப்போது இன்னொரு பெண்ணுடன் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வருகிறான். இது ஒரு கதை. லியோவுக்கு பெண்களை விட பையன்கள் என்றால் ஆசை. பெண்களிடம் நெருங்கிப் பேச மாட்டான். இப்படி ஒரு கதை. இரவில் நிறைய குடிப்பான், போர்னோ பார்ப்பான் என்று ஒரு கதை. பலரையும் பற்றி கதைகள் இருக்கவேச் செய்தன.

 

பூங்குழலிக்கு லியோவிடம் மரியாதை உண்டு. லேசில் புன்னகைக்க மாட்டான். தேவையில்லாமல் பேச மாட்டான். கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து மூன்றாவது வருடம் அவளுக்கு கணிசமாக சம்பளம் கூடியிருந்தது. பதினாறாயிரம் ருபாய்க்கு வேலைக்குச் சேர்ந்தவளுக்கு முப்பத்தைந்து ஆயிரம் எட்டியிருந்தது. அன்றைக்கு அவளை அழைத்து, “உனக்கு இங்க நல்ல கேரியர் இருக்கு. இன்னும் அஞ்சாறு வருசம் நிச்சயம் இருப்ப. மாசம் எழுபத்தைந்திலிருந்து எம்பதாயிரம் வரைக்கும் சம்பாதிப்ப. டீம் லீடரானா ஒன் லேக்கைத் தாண்டுவ. பிளான் பண்ணிக்க. அனாவசியமா செலவு செய்யாத. உன்னோட சம்பளத்தைப் போல குறைஞ்ச பட்சம் பத்து மடங்கு உன்னோட பேங் பேலன்ஸ் எப்பவும்  இருக்கணும். ஒவ்வொரு செலவையும் யோசி. சிம்ப்ளாவே இரு. இங்க எதுவும் நிலையானது இல்ல. ஒ.கே. லவ் யுவர் ஜாப். கங்கிராட்ஸ்” என்று வாழ்த்தினான். ஒவ்வொரு வார்த்தையும் அக்கறையோடு இருந்தன. இன்றைக்கு லியோ வந்ததும் பேசியதும் கூட ‘பயப்படாதே’ என்று தட்டிக்கொடுப்பதற்காக என்று அவள் புரிந்து கொண்டாள்.

 

வாட்ஸ் அப் தட்டியது. கலைச்செல்வன்  போட்டோ அனுப்பியிருந்தான். அப்பாவின் உடல் புதைத்த இடம் இதுதான் என்னும் நினைவே கலங்கடித்தது. யாருமற்ற எத்தனை இரவுகளையும், பகல்களையும் அப்பாவின் உடல் இங்கே கழித்திருக்கிறது “பூம்மா..” வென அழைக்கும் அந்தக் குரல் உயிரைத் தொடும். தன்னம்பிக்கையை ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் தந்தவர்.

 

வேலையில் இருக்கும்போது இது போன்ற நினைப்புகள் வந்து தொந்தரவு செய்வது சரியில்லை என மொபைலை சுவிட்ச் ஆப் செய்தாள். நினைவுகளை சுவிட்ச் ஆப் செய்வது எப்படி? ‘கீழே விழுந்தால் நம்மை யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்’ என்று லியோ சொன்னது ஒலித்தது.

 

ஏழாம் வகுப்பு படிக்கும்போது பள்ளி ஆண்டுவிழாவில் பங்கரா டான்ஸ் ஆடுவதற்கு சேர்ந்திருந்தாள். சதா நேரமும் அந்தப் பாட்டோடு இருந்தாள். அதற்கான டிரெஸ் வாங்க ரவிச்சந்திரனை நச்சரித்தாள். ரவிச்சந்திரனும் சித்ராவும் இவளை வீட்டில் ஆடிக்காட்டச் சொன்னார்கள். பிளேயரில் பாட்டு போடச் சொல்லிவிட்டு அடுத்த அறைக்குச் சென்றாள்.

 

“எங்க போற? யார் ஆடுவாங்க?” சிரித்தான் ரவிச்சந்திரன்.

 

“பாட்டைப் போடுங்கப்பா..” கத்தினாள். மியூசிக் ஆரம்பித்ததும் அடுத்த அறையிலிருந்து ஓடி வந்து உயரே எம்பி குதித்து ஆட ஆரம்பித்தாள். ஆசையாய் பார்த்தார்கள். முடித்ததும், கைதட்டி இவளைத் தூக்கிக் கொஞ்சினான் ரவிச்சந்திரன்.

 

அப்பாவும், அம்மாவும் ஆண்டுவிழாவிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என அழைத்திருந்தாள். சென்று இவள் எப்போது ஆடுவாள் என காத்திருந்தார்கள். பேர் சொல்லி அறிமுகம் செய்ததும் கூட்டத்தில் தலை எட்டிப் பார்த்தார்கள். பாடலுக்கான இசை ஆரம்பித்தது. திரைக்குப் பின்னால் இருந்து ஓடி வந்து குதித்தவள், மேடையில் விரித்திருந்த தார்ப்பாய் சுருங்கியிருக்க, தடுமாறி கீழே விழுந்துவிட்டாள். ரவிச்சந்திரன் கலங்கிப் போனான். “ஐயோ எம்புள்ளா” என்றாள் சித்ரா. முன்னால் இருந்து சத்தமும், சிரிப்பும் எழுந்தது. பூங்குழலி சுதாரித்து சட்டென எழுந்து ஆட ஆரம்பித்தாள். வீட்டில் இருந்த உற்சாகத் துள்ளல் இல்லையென்பது தெரிந்தது. பாட்டும் நடனமும் முடிந்ததும் சிலர் கைதட்டினார்கள். ரவிச்சந்திரன் வேகமாக முன்னால் சென்றான். மேடையில் இருந்து இறங்கியவள் முன் சென்று நின்றான். அவரைப் பார்த்ததும், “அப்பா நா விழுந்திட்டேம்ப்பா...” என அவமானத்தால் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

 

“விழுந்தாலும் அப்படியே இருந்து விடாமல், சட்டுனு எந்திரிச்சு ஆடினியே…. அதுதாம்மா  சூப்பர்!” என எல்லோருக்கும் கேட்கும்படி சத்தம் போட்டுச் சொல்லி, இவளை முத்தம் கொடுத்து தோளில் தூக்கி வைத்துக்கொண்டான். முதுகில் தட்டிக் கொடுத்தான். மெல்ல  தலையை தூக்கிப் பார்க்கத் தொடங்கினாள். அன்று தூங்கும் வரை ரவிச்சந்திரனின் கைகளை பூங்குழலி விடவேயில்லை.

 

எழுந்தால் கொண்டாடவும் விழுந்தால் ஆதரவாய் தூக்கிக் கொள்ளவும் யாரும் இல்லாத ஒரு இடத்தில் நாம் விடப்பட்டிருக்கிறோம் என்னும் தனிமை அப்பா இறந்ததிலிருந்து இவளோடு கூடவே வந்து கொண்டிருக்கிறது. அப்பாவை நினைக்கும் போதெல்லாம் எதையோ இழந்த வெறுமை சூழ்ந்து விடுகிறது. அப்பா மீது பத்மாவதி காட்டும் வெறுப்பு இவளுக்கு எரிச்சலாய் இருக்கும். அப்பாவை ஒதுக்கி விட்டு தன்னைக் கொஞ்சுவதை சகிக்க முடியாது. யாருடனும் பேச விருப்பமில்லாமல் ஒடுங்கி விடுவாள். “என்னம்மா, ஒரு மாதிரி இருக்கே”, “உடம்பு சரியில்லையா”  என அம்மாவோ பாட்டியோ கேட்டால் பற்றிக்கொண்டுதான் வரும்

.

ரவிச்சந்திரன் இறந்த முதல் வருஷம் பூங்குழலியும் கல்லறைக்குப் போயிருந்தாள். ‘என் மன்னன் இங்கே, என் மன்னன் இங்கே’ என எழுதியிருந்தது. கண்ணீர்த்துளிகள் வரையப்பட்டிருந்தன. கல்யாணிதான் என்று சொன்னார்கள். சபாபதி தாத்தாவின் வீட்டில் வேலை செய்யும் அமாவாசை, “சில நாள் ராத்திரி இங்க வந்து படுத்துக்கிறா..” என்று சொன்னார். நம்ப முடியவில்லை. அப்பாவுக்கும் கல்யாணிக்கும் அப்படி என்ன பழக்கம் என்று யாரும் சொல்லவில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ளவும் இல்லை. அப்பாவுக்கு கல்யாணியைப் பிடித்ததா, பிடிக்கவில்லையா?, பிடிக்கவில்லையென்றால் கல்யாணிக்கு தன்னை புரிய வைக்க அப்பா என்ன செய்தார்?, பிடித்திருந்தால், அப்பா ஏன் கல்யாணியை ஏற்றுக் கொள்ளவில்லை? என எவ்வளவோ புதிர்கள் கடந்த காலத்திற்குள் நிறைந்திருந்தன. அவை தெரியாமலே போகலாம். கல்யாணியைப் பார்த்தால் மரியாதை வருகிறது. நிச்சயதார்த்தத்தில் பார்த்தவுடன் அதிர்ச்சியாய் இருந்தாலும், மேடைக்கு வந்து வாழ்த்தட்டும் என்றுதான் தோன்றியது. என்றாவது ஒருநாள் கல்யாணியிடம் உட்கார்ந்து பேச வேண்டும் போலவும் இருந்தது.

 

கம்ப்யூட்டர் திரையில் அவள் டைப் அடித்துக் கொண்டிருக்க, நினைவுகளோ மாறி மாறி வந்து போய்க்கொண்டு இருந்தன. இந்த வேலை சரளமாகி விட்டது போலும்.  ஒரு காரியம் நன்றாக பழக்கமாகி விட்டால்  கைகள் தனியாகவும், மூளை தனியாகவும் இயங்க முடிகிறது.

 

சித்ராவுக்கு பதிலாக கல்யாணியை ரவிச்சந்திரன் திருமணம் செய்திருந்தால் வாழ்வின் போக்கே மாறியிருக்கும். சாத்தியங்கள் வேறாகவும் இருந்திருக்கும். முதலில் பூங்குழலியே  பிறந்திருக்க மாட்டாள். ரவிச்சந்திரன் உயிரோடு இருந்திருக்கலாம். கல்யாணியோடு தனியாக ஒரு வாழ்க்கையை ரவிச்சந்திரன் வைத்திருந்தால் பெரும் கொதிப்புகள் ஏற்பட்டிருக்கும். சித்ராவும் பத்மாவதியோடு சேர்ந்து சதா நேரமும் அப்பாவைப் பழித்துக் கொண்டிருப்பாள்.  கலைச்செல்வனும் இவளும் கூட அதே அப்பாவை வெறுத்திருக்கலாம். ஒருவரை முழுமையாக அறிந்து கொள்ளாமல்,  அந்த ஒருவரோடு அவரவர்க்கான பார்வைகளிலும் உறவுகளிலும் இருந்தே மனிதர்கள் மேலோட்டமாக புரிந்து கொள்கிறார்கள்.  விருப்பு வெறுப்பு கொள்கிறார்கள். அதிலிருந்தே தங்கள் நியாயம் பேசுகிறார்கள்.

 

குயின் படம் குறித்து இவள் ஃபேஸ்புக்கில்  எழுதியதை நரேனும், நரேன் வீட்டிலும் அப்படித்தான் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீஜாவுக்கும் இவளுக்கும் நடந்த உரையாடல் அவர்களுக்குத் தெரியாது. படம் பூங்குழலிக்குப் பிடித்திருந்தது. ஸ்ரீஜா அவ்வளவாக ரசிக்கவில்லை.

 

“ஒ.கே.நிச்சயம் பண்ண கல்யாணம் நின்னு போனாலும் ஹனிமூன் டிக்கெட்டை கேன்சல் பண்ணாம  தனியா அவ மட்டும்  பாரிசுக்குப் போறது ஆலிஸின் அற்புத உலகம் போல ஒரு ஃபேண்டஸியாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து கிடைக்கிற அனுபவங்களையும், அவளுக்குள்ள விரிகிற  உலகத்தையும் சொல்றதுதான் கதை. ஒ.கேவா? அவளுக்கு நடந்தவை எல்லாம் நல்லதாகவே நடந்தன. ஒருவேளை மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால்…? ஒரு இந்திய ஆண் ஒரு இந்தியப் பெண்ணிடம் சினேகமாகவும் துணையாகவும் இல்லாமல் இருக்கிறான்,  ஒரு வெளிநாட்டு ஆண் அதே  இந்தியப் பெண்ணிடம் சினேகமாக இருக்கிறான். இல்லையா? அவளை வேண்டாம் என்ற இந்திய ஆணும் ஒரு வெளிநாட்டு பெண்ணிடம் சினேகமாகவும், அவளுக்கு உதவி செய்கிறவனாகவும் இருந்திருக்கலாம்  இல்லையா” என்று நக்கலாக கேட்டாள் ஸ்ரீஜா.

 

“யெஸ். சினேகமா இருக்கும் போது அவளுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்குது.  ஒருவேள அவளே ஆசைப்பட்ட மாதிரி அவனைக் கல்யாணம் பண்ணி அவங்கூட வொய்ஃபா போயிருந்தா ரொம்ப மோசமான அனுபவங்கள சந்திச்சிருப்பா. அதைத்தான் சொல்லாம சொல்லுது. அதுதான் இப்படி ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குறதுக்கு நீதான் காரணம். தாங்ஸ்னு கடைசில அவங்கிட்ட அவளே சொல்றா.”  என்றாள் பூங்குழலி.

 

“அப்ப கடைசியில தனக்கு நிச்சயம் செய்தவனை எதுக்கு வேண்டாம்னு சொல்றா? இந்தப் பரந்த உலகத்துல  ஒரு பறவை போல இருக்கிறத விட்டுட்டு அவனைக் கல்யாணம் பண்ணிட்டு ஒரு அடிமை போல இருக்க விரும்பலைன்னு சொல்றாளா” 

 

“ஃப்ரண்ட்லியா இருக்குற வரைக்கும் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உறவு சரியா இருக்கு. சமமா இருக்கு. உண்மையிலயே ஒரு குயினா பெண் இருக்கா. குயின் பக்கத்தில் ஒரு கிங்கா ஆண்

வந்து நிக்கும்போதுதான் தப்பாகுது”

 

“ஸோ, கல்யாணமே அடிமைத்தனம். அது வேண்டாம்னு சொல்றியா?” தனது முக்கியமான கேள்வியை வைத்தாள் ஸ்ரீஜா.

 

 “இங்க ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசம் வேற. கிங்கிற்கும் குயினுக்குமான வித்தியாசம் வேற. கிங்னா அதிகாரம். குயின்னா அன்பு.  கிங் பக்கத்தில போய் நின்னதும் குயின் உலகந் தெரியாதவளாகி  பின்னர் அவளுக்கு அவளேத் தெரியாதவளா நிக்கிறா. அப்புறம் அவ குயின் இல்ல. கிரீடம் தரிச்ச ஸ்லேவ். அவ்ளோதான். இங்க குயின்ங்கிற கான்செப்ட் சரி. கிங்குங்கிற கான்செப்ட் தப்பாயிருக்கு. கிங்கா இல்லாத ஆணுக்காக குயினா இருக்குற ஒரு பெண் காத்திருக்கா. கல்யாணம் வேண்டாம்னு படத்துல சொல்லல. எப்படி இருக்கணும்னு ஒரு நல்ல கனவு படத்துல இருக்கு” என்றாள் பூங்குழலி.

 

பக்கத்தில் வந்து இவளை அப்படியே ஸ்ரீஜா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ரசித்தாள். அதைத்தான் ஃபேஸ்புக்கில், `குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்’ என்று இவள் குறிப்பிட்டு இருந்தாள். நரேன் ஒரு கிங்காக இருந்திருக்கிறான். தப்பாக புரிந்து கொண்டான்.

 

இன்று சாயங்காலம் நேரில் சந்திக்கும்போது, நரேனிடம்  இதுபற்றி பேச வேண்டி இருக்குமோ என நினைப்பு வந்தது. பூங்குழலிக்கு அலுப்பாக இருந்தது.  ‘ஏன் தனக்கு சுவாரசியமானவனாக நரேன் இல்லை?’ இரண்டு மூன்று நாட்களாய்  இந்தக் கேள்வியை இவளுக்குள்ளேயே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.  வெறுப்பென்று சொல்ல முடியவில்லை.  அவன் பேரைக் கேட்டதும் மனம் துள்ளிக் குதிக்கவில்லை. எந்த சிலிர்ப்பும் இல்லை. யாரோவாகவே இருக்கிறான். அதுதான் பிரச்சினை. அதுதான் நிச்சயதார்த்த போட்டோக்களை அவனது அம்மா சந்திரா அனுப்பியதும் பதில் சொல்லாமல் இருந்தாள். சம்பிரதாயமாகச் சொல்லவும் பிடிக்கவில்லை.

 

லஞ்ச்சுக்கு சந்தானம் எழுந்தான். மீட்டிங்கில்  பேச வேண்டிய குறிப்புகளை இவளும் கிட்டத்தட்ட முடித்திருந்தாள். சிஸ்டத்தில் இருந்து லாக் அவுட் செய்து வெளியே வந்தாள். கதவின் ஓரமாய் நின்றிருந்த  சாந்தி போனில் பேசி முடித்து இவளைப் பார்த்தாள். “என்னாச்சு, சாந்தி! ஸ்கூல்லயிருந்து குழந்தைங்கள கூட்டிட்டு வர ஏற்பாடு பண்ணிட்டியா” கேட்டாள்.

 

“என்னோட சித்தப்பா பையன் படிச்சு முடிச்சுட்டு சும்மாத்தான் இருக்கான். அவன ஏற்பாடு செஞ்சிருக்கு. சாயங்காலம் ஆபிஸ் விட்டு நானோ அவரோ போற வரைக்கும் குழந்தைங்கள பாக்கச் சொல்லியிருக்கோம்.” பெருமுச்சு விட்டு, “டென்ஷனாய்ட்டு கொஞ்ச நேரம்.” புன்னகைத்தாள்.

 

“உன்னோட அம்மா அப்பாவோ, உன் ஹஸ்பெண்டோட அம்மா அப்பாவோ யாராவது கூட இருந்தா ஒத்தாசையா இருக்குமே...”

 

“அவரோட  அம்மா வந்து இருந்தாங்க. கொஞ்சம் பிடிக்காமப் போச்சு.” இழுத்தாள். “இப்பிடி பிரச்சின வரும் போதெல்லாம் பகீர்னு இருக்கும். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு இருந்திருந்தா இப்பிடி கஷ்டப்பட வேண்டியதில்லன்னு குத்திக் காட்டுவார். என்ன செய்ய..”

 

பேசிக்கொண்டே கேண்டின் வந்தார்கள். எதிரே கேண்டினை ஒட்டி சின்னதாய் அந்த பிளாஸ்டிக் மரம் இலைகளோடு நின்றிருந்தது. மூன்று வருஷத்துக்கும் மேலாச்சு.  தினமும் பார்க்கிறாள். அப்படியே இருக்கிறது.  வெயில், மழை எதுவும் அதற்கு கிடையாது. காற்று அடித்தாலும் மரம் அசையாது.

 

வழக்கமான மேஜையில் அமர்ந்து அலையரசனும், சோபியாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள். ”மைக்ரேஷன் ரொம்ப தலைவலி. சர்வர கான்ஃபிகர் பண்றதுக்குள்ள மூளை உருகி மூக்கு வழியா வந்துரும்” தனது வேலை பற்றி சொல்லிக் கொண்டு இருந்த அலையரசன் இவளைப் பார்த்ததும்  “ஹாய்” என்றான். இவளும் “ஹாய்” சொல்லிக்கொண்டே அருகில் உட்கார்ந்தாள்.  

 

“மீல்ஸ்தான. உனக்கும் சேத்துச் சொல்லிட்டோம்” என்றாள் சோபியா.

 

“குட்” என்றவாறே பூங்குழலி தன் மொபைலை ஆன் செய்தாள். ஃபேஸ்புக்கில் பிரகாஷ், ‘மை ஜர்னி ஸ்டார்ட்ஸ்” என்று கைகளை விரித்து நின்றிருந்தான். உற்சாகமானாள். என்ன ஜர்னி என்று கவனித்த போது பெங்களூரில் ஒரு எம்.என்.சியில் அவன் சென்ற வாரம் ஜாய்ன் பண்ணியிருப்பதை ஃபேஸ் புக் காட்டியது. புன்னகைத்துக் கொண்டே, “கங்கிராட்ஸ். சொல்லவேயில்ல…” என்று வாட்ஸ் அப்பில் மெஸேஜ் அனுப்பினாள்.

 

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சோபியா, என்ன என்பதாய் கண்களால் கேட்டாள். சிரித்துக் கொண்டே, “யூ ஆர் மை பட்டி..” என்று இவள் சிரித்தாள்.

 

“ஹேய்… கிரேஸி. என்ன ஆச்சு உனக்கு?” என்றாள் சோபியா.

 

“ஓன்னுமில்ல. இன்னிக்கு லியோ பக்கத்துல வந்து உன் பட்டி எதும் சொன்னாளா என்று கேட்டார்.”

 

“ஓ..  அசோக்கைப் பத்தி சொன்னேன்னா…?”

 

ஆமாம் என்பதாய் தலையாட்டவும்  மொபைல் அழைத்தது.  எடுத்து  “சொல்லுங்க ஆன்ட்டி”  என்றாள்.

 

“அப்பமேயிருந்து போன் பண்ணிட்டிருந்தேன். என்னம்மா, சாப்பிட்டாச்சா?”

 

“இல்ல ஆன்ட்டி. இப்பத்தான் சாப்பிட கேண்டீன் வந்திருக்கேன்.”

 

“அப்பிடியாம்மா, நா எங்க ஊருக்கு பத்திரிகை கொடுக்க வந்திருக்கேன். நரேனுக்கு பத்திரிகை அனுப்பியிருயிருக்கோம். காட்டுவான். நரேன் அவங்க பிரண்ட்ஸுக்கு கொடுக்க தனியா பத்திரிகை அடிக்கணும்னு சொல்லிட்டிருந்தான். நீயும் தனியா அடிக்கிறியாம்மா”

 

“அது பத்தி இன்னும் யோசிக்கல.”

 

“என்னம்மா, ஒரு மாசந்தான் இன்னும் இருக்கு.”

 

“ஒன்னும் பிரச்சினையில்ல. நா பாத்துக்குறேன் ஆன்ட்டி.”

 

“அப்புறம் லீவு எப்பயிருந்து எடுக்கப் போற? எத்தன நாள் எடுக்கப் போற?”

 

“அது பத்தி இன்னும் ப்ளான் பண்ணல. கேக்கணும்.”

 

“எல்லாத்தயும் சாதாரணமாச் சொல்ற. கடைசி நேரத்துல டென்ஷனாயிரப்போது…”

 

“அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது. நீங்க எல்லாத்தையும் ரொம்ப சீரியஸாவே எடுத்துக்குறீங்க..” சிரித்தாள் இவள்.

 

“சரிம்மா, பாத்துக்க. நரேன் எப்ப வர்றேன்னு சொன்னான்.”

 

“நாலு மணிக்கு..”

 

“பாத்துப் போய்ட்டு வாங்க. அப்புறமா பேசுறேன்.”

 

சந்திரா போனை வைத்ததும் அப்பாடா என்றிருந்தது. சோபியாவும் அலையரசனும் பேசுவதை நிறுத்திவிட்டு, இவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

“கொசுத்தொல்லையா.”   என்றாள் சோபியா.

 

“பல்ல உடைச்சிருவேன்.  மரியாதையாப் பேசணும். மாமியாராக்கும்” என்றாள்.

 

மூவரும் சிரித்தார்கள்.

 

வாட்ஸ் அப் சத்தம். எடுத்துப் பார்த்தாள். பிரகாஷ் அனுப்பி இருந்தான்.

 

“உனக்கு கல்யாணமாமே? சொல்லவேயில்ல.”

 

(தொடரும்)

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!