க்ளிக் - 6 (தொடர்கதை)


நண்பர்களே!
வணக்கம்.
தொடர்பு எல்லைக்கு வெளியே – என்று எழுதி வந்த இந்த தொடர்கதை இனி ‘க்ளிக்’ என்னும் தலைப்பில் வரும். இந்தக் கதைக்கு அந்த தலைப்பு பொருத்தமாயிருக்கும் எனத் தோன்றியதால் மாற்றப்பட்டு இருக்கிறது.
தங்களின் தொடர்ந்த வாசிப்பும், ஆதரவும் வேண்டி…
-மாதவராஜ்
--------

சோக்கை நேற்று சாயங்காலம் வேலையிலிருந்து அனுப்பி விட்டதாக காலையில் சோபியா போன் செய்து சொன்னாள். முந்தின நாள் வேலையிலிருந்து கிளம்பி கீழே செல்வதற்கு லிஃப்டுக்கு காத்திருந்தபோது, அசோக் மேலே செல்வதற்கு நின்றிருந்தது நினைவுக்கு வந்தது. பார்த்ததும்  சிரித்துக் கொண்டு “எங்க பிராஜக்டுக்கு எப்போ வர்றீங்க?” என்று கேட்டாள். சிரித்துக்கொண்டே “க்ளிக் ஆகணும்.  பார்ப்போம். ஹெச்.ஆர்ல வரச் சொல்லி இருக்காங்க.” என்றான். குரலில் மெலிதாய் ஒரு விரக்தி தெரிந்தது.

 

கடந்த ஒரு மாதமாகவே பெஞ்ச்சில்தான் இருந்தான் அசோக். பெஞ்ச்  என்றால் பிராஜக்ட் கிடைக்காமல், அதனால் வேலையில்லாமல் இருக்கும் ஐ,டி ஊழியரின் நிலை. அந்த நேரத்தில் தங்கள் திறனையும், பயிற்சியையும் வளர்த்துக்கொண்டு காத்திருக்க வேண்டும். அடுத்த சில மாதங்களுக்குள் புதிதாக பிராஜக்ட் கிடைக்கவில்லையென்றால் ஒருநாள் சத்தமில்லாமல் கம்பெனி குட்பை சொல்லி வெளியே அனுப்பி விடும். பெரும்பாலும் பெஞ்ச்சில் இருக்கும் போதே அடுத்த  கம்பெனியில் வேலை தேட ஆரம்பித்து விடுவார்கள்.

 

பூங்குழலியின் பேட்ச்தான் அசோக். ஆரம்பத்தில் சோபியா இருக்கும் பிராஜக்டில்தான் வேலை செய்து கொண்டிருந்தான். அந்த லீடருக்கு அவன் மீது நல்ல கருத்து இல்லை. குறித்த நேரத்தில் வேலையை முடிக்காமல் இழுத்தடிக்கிறான் என குறைபட்டுக் கொண்டான்.  விஷயம் என்னவென்றால் எல்லாவற்றிலும் அசோக் தனக்கென்று கருத்தையோ, சந்தேகத்தையோ வைத்திருந்தான். கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தான். அந்த பிராஜக்ட் முடிந்து அடுத்த பிராஜக்ட் வந்தபோது, அதற்கு அவ்வளவு ஆட்கள் தேவையில்லை என பெஞ்ச்சில் அமர்த்தப்பட்டன்.  கடந்த வாரம் பூங்குழலி வேலை பார்த்த பிராஜக்டில் மேலும் ஒருவர் தேவைப்பட்டது. அசோக்கின் பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது.

 

இப்படி நடக்கும் என பூங்குழலி எதிர்பார்க்கவில்லை. வேலைக்குச் சேர்ந்த பிறகு, அவளுக்குத் தெரிந்த ஒருவர் வெளியேற்றப்படுவதை இப்போதுதான் பார்க்கிறாள். இப்படியா இன்று விடியவேண்டும் என்று வருத்தப்பட்டாள். போனில் நேரம் பார்த்தவள் மேலும் பதறினாள். ஸ்ரீஜாவை விலக்கி எழுந்து, அவசரம் அவசரமாக புறப்பட்டாள். பிரட் டோஸ்ட்டும், டீயும் சாப்பிட்டு  ஹாஸ்டலை  விட்டு அரக்க பரக்க வெளியேறினாள்.

 

ஐ.டி கார்டு காண்பித்து கம்பெனிக்குள் நுழையும்போது லேட்டாகி இருந்தது.  லிஃப்ட் ஆபரேட்டர் மகாலிங்கம் “வாங்கம்மா..” என புன்னகைத்ததும் கொஞ்சம் நிதானம் வந்தது. மகாலிங்கத்திற்கு நாற்பத்தைந்து வயது போலிருக்கும். வேலை நாட்களில் லிப்டில் பயணம் செய்யக் கிடைக்கும் சில வினாடிகள்தான் பேசிப் பேசி பழக்கம். அவரது குடும்பம் குறித்து இவளுக்கும், இவளைப் பற்றி அவருக்கும் பரிச்சயம் உண்டு. கம்பெனியின் உயர் மட்ட விஷயங்கள் கூட அவருக்குத் தெரிந்திருக்கும். பலரின் குடும்ப விஷயங்களையும் அறிவார். அவரை ஒரு பொருட்டாக மதிக்காமல் வார்த்தைகளை இறைத்தபடி மனிதர்கள் மேலேயும், கீழேயும் சென்று கொண்டிருந்தார்கள். அமைதியாய் ஒன்றுமறியாதவராய் அந்த சின்னப் பெட்டிக்குள் அடைந்து கிடப்பார்.

 

இவள் தனியாக செல்ல நேரும் போது,  கேள்விப்பட்ட எதையாவது சொல்லி “அப்பிடியாம்மா” என கேட்பார். அன்பானவர். சில நாட்களில் ஆபிஸ் விட்டுச் செல்ல நேரமாகிவிட்டால் லிப்டில் இருக்க மாட்டார். வேறொருவர் ஷிப்டு மாறியிருப்பார். அடுத்த நாள் பார்க்கும்போது, “பூங்குழலிம்மா, நேத்து லேட்டாயிட்டா? நா கிளம்புற வரைக்கும் வரல்லியேன்னு பாத்தேன்” என கேட்பார்.  இன்று எதோ பேச அவர் முயலும்போது, லிஃப்ட் மூன்றாவது தளத்தை அடைந்து இருந்தது. அனேகமாக அசோக்கைப் பற்றித்தான் கேட்க வந்திருப்பார். “பார்ப்போம் மகாலிங்கம்..” என அவசரமாக பூங்குழலி வெளியேறினாள்.

 

தனது இருக்கைக்கு சென்று சிஸ்டத்தை ஆன் செய்தாள். அவள் பக்கத்தில் சலனமில்லாமல் கம்ப்யூட்டரில் ஆழ்ந்திருந்த சந்தானம், அதற்கடுத்த கேபினில் எதிரே நிலைகுத்தியிருந்த அக்னேஸ் பிரின்சியா ஆகியோரின் தலைகளும், பார்வைகளும் கம்ப்யூட்டர் திரைகளில் அப்பியிருந்தன. திரும்பி பார்க்காமலேயே ‘குட் மார்னிங்..” என்றனர். வந்திருந்த மெயில்களைப் பார்த்தாள். பார்க்க வேண்டிய வேலைகள், பிராஜக்ட் குறித்த விபரங்கள் என்றே பெரும்பாலும் இருக்கும்.  கம்பெனியில் வேலை பார்க்கும் அனைவருக்கும் இன்று முதல் ஒரு நாளைக்கு இரண்டு டீக்கள்தான் கேண்டீனில் கொடுக்கப்படும் என்றும், லஞ்ச்சில் அப்பளமும் வடையும் கிடையாது என்றும் வந்திருந்த இமெயில் அவமானப்படுத்துவதாய் இருந்தது.

 

அருகருகே இருப்பதாய்த் தோன்றினாலும் ஒவ்வொருக்கொருவர் தொடர்பு எல்லைக்கு வெளியேத்தான் இருந்தார்கள். என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியாது.  சிசிடிவி காமிராக்கள் ஒவ்வொருவரின் செயல்களை கண்காணித்துக் கொண்டிருந்தன. சூரிய வெளிச்சமும், காற்றும் நுழையாமல் அடைக்கப்பட்டிருந்த அறைகள் முழுவதும் நிறைந்திருக்கும் ஏசியின் பதமான குளிரும், சக்தி வாய்ந்த விளக்குகளின் வெளிச்சமும், முணுமுணுப்பது போல பேசும் முறையும்  மனிதர்களின் தன்னியல்புகளை அகற்றியிருந்தன

 

எல்லாமே கண்ணுக்குத் தெரியாமல்தான். உலகின் ஒரு மூலையில் கிளையண்ட் இருப்பான்.  அவனது பிராடக்ட் குறித்த விபரங்களை உலகமெங்கும் வசிக்கிற கஸ்டமர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். விரல்நுனியில் தேவைப்படும் விபரங்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கான ஏற்பாட்டைச் செய்கிற வேலையை கம்பெனிக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுப்பான். அதை பிராஜக்டுகளாக பிரித்து தனித்தனி டீம்களிடம் கொடுப்பார்கள். அவைகளுக்கான கம்ப்யூட்டர் மொழியில் உருவாக்கி வடிவமைக்க வேண்டும். “எங்க ஊர் தீப்பெட்டியாபீஸ் இது” என ஸ்ரீஜா வேடிக்கையாய்ச் சொல்வாள்.

 

“தீப்பெட்டி அட்டை ஒட்டுறது ஒரு பிராஸஸ். குச்சி அடுக்குறது ஒரு பிராஸஸ். அடுக்கிய குச்சிகளை தீமருந்துக்குள் முக்கி எடுக்குறது ஒரு பிராஸஸ். அந்த குச்சிகளை உலர்த்தி தீப்பெட்டிக்குள் அடுக்குறது ஒரு பிராஸஸ். தீப்பெட்டிக்கு ஆர்டர் கொடுத்து விலை நிர்ணயம் செய்றது குஜராத்திலயும், இராஜஸ்தானிலும் இருக்குற சேட்டுகள். அவங்களுக்கு தீப்பெட்டியாபிஸ் ஓனர்கள் பண்டல் பண்டலா தீப்பெட்டி செஞ்சு கொடுத்து, செலவு போக லாபம் பாப்பாங்க. சின்ன வயசுல எங்க ஊருக்கு விடிகாலைல தீப்பெட்டி ஆபிஸ்லயிருந்து வண்டி வரும். பத்து வயசுல இருந்து முப்பது வயசு வரை பொம்பளைங்கள ஏத்திக்கிட்டு போவும். ஆளுக்கேத்த மாதிரி வேலை கொடுப்பாங்க. சாயங்காலம் இருட்டுனதுக்கு அப்புறம்தான் அந்த வண்டி ஊருக்கு திரும்பக் கொண்டு வந்து விடும். போய்ட்டு வர்றவங்க கசங்கிப் போய் இருப்பாங்க. எங்க பாட்டி கூட அப்படி போனவங்கதான். அப்படித்தான் நீயும் நானும் இருக்கோம். வீ ஆர் ஆல் ஜஸ்ட் கோடிங் கூலிஸ். அவ்வளவுதான்”

 

வேலை முடித்து இரவில் ராட்சசக் கட்டிடத்திலிருந்து வெளியேறும்போது  நெற்றி கிண்ணென்று இருக்கும். சோடியம் மஞ்சள் பூத்த சாலைகளில் அமைதியை கிழித்துக் கொண்டு மனிதர்கள் சுற்றிலும் தலை தெறிக்கச் செல்ல, எதையோ இழந்து தனித்து அலைவது போல துயரம்  வாட்டும். போனில் நண்பர்களுடன் பேசிக்கொண்டு, பிடித்தமான பாட்டுகளைக் கேட்டுக்கொண்டு  தப்பிக்கலாம். ஃபேஸ்புக்கில், வாட்ஸ்-அப்பில் போய் ஓளிந்து கொள்ளலாம். கூட பணிபுரிகிறவர்களோடு காபி ஷாப்பிலோ, ஓட்டலில் பீட்சாவுக்கு ஆர்டர் கொடுத்தோ உளைச்சல்களை ஆற்றலாம். எதுவும் முடியாது போனால் அப்படியே படுக்கையில் விழுந்து தூங்கிப் போகலாம்.

 

எதையும் காட்டிக் கொள்ளாமல், புன்சிரிப்பும் உற்சாகமுமாய் அடுத்த நாள் இதே அடுக்குமாடி கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து நுழைய வேண்டும். எவ்வளவு தூரம் ஓட வேண்டும் என்பது தெரியாது.  ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். எதாவது ஒரு தருணத்தில் விசில் அடித்து வெளியேற்றப்படலாம். அசோக்கிற்கான விசில் அடிக்கப்பட்டு விட்டது. நமக்கான விசில் சத்தம் கேட்டுவிடக் கூடாது எனும் பயத்தோடு வெறி கொண்டு ஓட வேண்டும். பூங்குழலியும் ஓடிக்கொண்டு இருந்தாள்.

 

அனுபவமுள்ளவர்களுக்கு அதிகச் சம்பளம் கொடுக்க வேண்டுமே என்று கம்பெனி அவர்களை வெளியேற்றிவிட்டு புதியவர்களை குறைந்த சம்பளத்தில் அமர்த்திக் கொள்ள துடிக்கும். கிளையண்ட்டுகளுக்கு டீம் லீடரும், அனுபவமுள்ளவர்களும்தான் வேண்டும். கத்துக்குட்டிகளை வைத்து தங்கள் பிராஜக்டுகளை முடிக்க அவர்கள் தயங்குவார்கள். கம்பெனி இவ்விஷயத்தில் அடம் பிடிக்காது. பிராஜக்ட்களை இழக்க விரும்பாது.

 

பூங்குழலி இப்போது அசிஸ்டெண்ட் பிராஜக்ட் எஞ்சீனியராகி இருக்கிறாள்.  டீமின் டிஸ்கஷனில் இவளது வியூகங்களும், விவாதங்களும் முக்கியமானவையாக கருதப்பட்டன. பிடித்துக் கொண்டு மேலே செல்ல வேண்டும். அடுத்து பிராஜக்ட் எஞ்சீனியராகி டீம் லீடராக வேண்டும்.

 

தன் அம்மாவுக்கும், பாட்டிக்கும், வீட்டுக்கும் இந்த நாட்களும் உலகமும் தெரியாது என்பது பூங்குழலிக்கு ஒருவகையில் நிம்மதி. சொன்னாலும் அவர்களுக்கு புரியாது, புரிந்தாலும் அவர்களால் என்ன செய்து விட முடியும்? தன் மகள் படித்தாள், படித்தவுடன் வேலை கிடைத்து விட்டது என்று சந்தோஷம் கொண்டிருக்கிறார்கள். அந்த சந்தோஷம் அப்படியே அவர்களுக்கு இருக்கட்டும் என்று ஆசைப்பட்டாள்.

 

கலைச்செல்வனுக்கு ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. இரண்டு நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்த போது அவளது வேலை, பிராஜக்ட் பற்றியெல்லாம் கேட்டிருந்தான். அப்பா இருந்திருந்தால் அவனும் இப்படி எதாவது கம்பெனியில்  வந்து கோடிங் புலியாகி இருப்பான். வங்கிக் கிளையில் உட்கார்ந்து கஸ்டமர்களை தினமும் நேரடியாக முகம் பார்த்துப் பேசிடும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அப்பாவின் வேலை! ”பூம்மா, அப்பாவுக்கு அந்த பேங்க்ல எவ்ளோ மரியாத தெரியுமா…. நம்மத் தோழர் ரவிச்சந்திரன் பையன்னு பேங்க் ஸ்டாஃப் யார் வந்தாலும் அறிமுகப்படுத்துவாங்க.” சொல்லி கலங்கினான்.  

 

பூங்குழலி நிர்த்திரையிட அண்ணனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பத்மாவதி பாட்டிக்குத்தான் அப்பாவைப் பிடிக்கவே பிடிக்காது. கோபமோ வருத்தமோ வந்தால் அம்மாவைப் பார்த்து, “எனக்கென்னன்னு போய்ட்டார். நாங்கதான படிக்க வச்சோம். ஒங்கப்பாக்கிட்ட தலையிலத் தலையில அடிச்சுக்கிட்டேன். வியாபாரம் பண்ணுற பையனாப் பாத்து கல்யாணம் செய்வோம்னு. கேட்டாங்களா. இன்னிக்கு பாரு. ஒத்த கடையோடிருந்த ஒந்தங்கச்சி விமலா புருஷனுக்கு திருப்பூர்ல வரிசையாக் கடை வச்சு நல்ல சம்பாத்தியம். அமுதா புருஷனோ மேடவாக்கத்துல ஹார்டுவேர் கடை வச்சு எத்தன பேருக்கு வேல கொடுத்து ராஜாவாட்டம் இருக்காங்க. ஒங்களுக்கு என்ன இருக்கு. வீடு இருக்கா, வாசல் இருக்கா. மேனேஜரா பிரமோஷன் வந்தப்ப கூட வேண்டாம்னுட்டு, யூனியன் யூனியன்னு அலைஞ்சு என்ன மிச்சம். கொடி பிடிச்சு கோஷம் போட்டா பொழுது விடிஞ்சிருமா?” என்று புலம்புவார்.

 

பாட்டியின் பேச்சு எப்போதுமே புங்குழலிக்கு பிடிக்காது இப்போது அம்மாவின் குரலும் நச்சரிப்பாய்த் தெரிந்தது. நரேனின் அம்மா சந்திராவும் அவர்களைப் போலவே இருந்தார். சாதாரணமாகவும், இயல்பாகவும் பேசும் வார்த்தைகளுக்கு வேறு அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு இவளிடம் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. இவளுக்கு அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் “ஹூம்” போட்டுக் கொண்டு இருக்கவும் முடியவில்லை.  

 

நரேனும் அப்படித்தான் தெரிந்தான். நிச்சயதார்த்தம்  முடிந்து சென்னைக்கு வந்த  இரண்டாம் நாள் இரவில் போன் செய்தான். ‘ஹாய்’ என்றான்.

 

இவளும் ‘ஹாய்’ என்றாள்.

 

அப்புறம் ஒரு அமைதி.  இவளுக்கு சிரிப்பாய்த்தான் இருந்தது அந்த விளையாட்டு.

 

“சொல்லுங்க நரேன்’” என்று இவளே  அமைதியை உடைத்தாள். 

 

“அப்புறம்…” என்றான். 

 

“என்ன அப்புறம்… சொல்லுங்க..” என்றாள் திரும்பவும்.

 

”பிஸியா “

 

“இல்ல வெட்டியாத்தான் இருக்கேன். சொல்லுங்க “

 

திரும்பவும் அமைதி. 

 

“சொல்லுங்க நரேன்….”

 

“இல்ல சும்மாத்தான் போன் செய்தேன். அப்புறமா பேசுறேன்” என்று வைத்து விட்டான். 

 

பூங்குழலிக்கு சிரிப்பாய் வந்தது.  அந்த பயம், தயக்கம் எல்லாவற்றையும் ரசிக்கவே செய்தாள். அதற்குப் பிறகு அவன் அவளிடம் பேசவேயில்லை. எல்லாவற்றையும் அவன் அம்மாவிடம் ஒப்பிப்பதும், பேசுவதும்தான் எரிச்சலைத் தந்தது. அதிலும் அந்த ‘குயின்’ ஸ்டேடஸைத் தொடர்ந்து அவன் நடந்து கொண்டது சுத்தமாய் பிடிக்கவில்லை.

 

டேபிளில் டீ வைக்கப்பட்டதும், இன்றைய முதல் டீ என்று ஒரு ஸ்க்ரோல் அரூபமாய் ஓட ஆரம்பித்தது. சம்மதம் இல்லையென்றாலும் உடன்பட வேண்டி இருக்கிறது.  பூங்குழலி. டீயை எடுத்துக்கொண்டு ஏசி அறையை விட்டு வெளியே வந்தாள்.

 

மூன்றாவது தளத்தின் வெளித் தாழ்வாரத்தில் நின்று கொண்டு கண்ணாடி வழியாக பார்க்கும்போது கீழே ஆழத்தில் பஸ்களும், கார்களும் ஸ்கூட்டர்களும் சின்னச் சின்னதாய் தெரிந்தன. சில அங்கங்கு நகர்ந்து கொண்டிருந்தன. பரந்து கிடந்த வெளிக்கு அப்பால் தொலைவில் ஞாயிற்றுக்கிழமை ஆங்கில ஹிந்து பத்திரிகையின் விளம்பரப் பக்கங்களைப் போல விரிந்து கிடந்தது நகரம். எத்தனை குடும்பங்கள், கதைகளை இந்தப் பெருவெளி கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு வீட்டில்தான் நரேனுடன் வாழப் போகிறோம் என்று நின்றிருந்தாள். இந்த வெளியுலகம் எதுவும் புலப்படாத சுவர்களாலான கிச்சன், ஹால், பெட்ரூம், பாத்ரூம், பிரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, குக்கர், டிவி, லேப்டாப்களோடு உள்ளிருப்போம். அவன்  பின்னால் பைக்கில் உட்கார்ந்துகொண்டு, எண்ணற்ற சிறு பூச்சிகளில் ஒன்றாய் சாலைகளில் பயணிப்போம்.

 

சாயங்காலம் நரேனுடன் முதன்முறையாக பைக்கில் செல்ல இருக்கிறாள். நான்கு மணிக்கு இந்தக் கட்டிடத்தின் கீழே வந்து காத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறான்.

 

முந்தாநாள் மதியத்தில் இருந்து பூங்குழலி தனது அம்மா சித்ராவின் நம்பரை பிளாக் செய்து இருந்தாள். மயிர் என்று பாட்டி பேசியது பிடிக்கவேயில்லை. நேற்று சாயங்காலம்தான் பிளாக் லிஸ்ட்டில் இருந்த அம்மாவின் பெயரை எடுத்து விட்டாள். இரவில் அம்மாவின் அழைப்பு கெஞ்சியது. பேசினாள்.

 

“ம், சொல்லும்மா...”

 

“பூவு, கோபமா....?”.

 

“அத விடும்மா, என்ன விஷயம்?”

 

“கல்யாணப் பத்திரிக்கை அடிச்சு வந்தாச்சு. வர்ற வெள்ளிக்கிழம கோயில்ல வச்சுக் கும்பிட்டுட்டு கொடுக்கப் போறோம். அதே நாள் நீயும் மாப்பிள்ளையும் அடையாறுல அஷ்ட லஷ்மி கோயிலுக்கு போய்ட்டு வந்துருங்களேன்.”

 

“எதுக்கும்மா இதெல்லாம். வெள்ளிக்கிழம எனக்கு ஆபிஸ் முடியவே ஏழு மணிக்கிட்ட ஆகும். அதுக்கப்புறம் எப்படி போக முடியும்?”

 

“ஒரு நா கொஞ்சம் கீக்கிரம் போக முடியாதா? கேட்டுப் பாரேன். இல்லன்னா ஒரு நா லீவு போடேன்.”

 

“லீவுல்லாம் அடிக்கடி போட முடியாது. பெர்மிஷன் கேட்டுப் பார்க்கிறேன்.”

 

“ஏந்தங்கம். கண்டிப்பா போய்ட்டு வந்துரும்மா...”

 

“ம். வச்சிரவா?”

 

“யம்மா, பாட்டி ஒங்கூடப் பேசணுமாம்... கொஞ்சம் இரு.”

 

“ம்...”

 

“பூவு, ஏஞ்செல்லம், நல்லாயிருக்கியாம்மா?”

 

“இருக்கேன் பாட்டி.”

 

“யம்மா, பாட்டி மேல கோபம் இல்லியே...எதோ வயசானவ சொல்லிட்டான்னு மறந்துரும்மா.”

 

“அதுல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி. ஒங்களப் பத்தி தெரியாதா?” சிரித்தாள்.

 

“என் ராசாத்தி! இப்பிடியே எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருக்கணும்.”

 

“ சரி பாட்டி, வச்சிரவா?”

 

“ரெண்டு வார்த்தை இப்பிடிப் பேசுனாப் போதும்மா எங்களுக்கு”

 

“சரி பாட்டி.”

 

“அப்புறம்........ மாப்பிள்ளப் பையன் மனம் கோணாம நடந்துக்கம்மா.”

 

சட்டென எரிச்சல் வந்தது. “வச்சிர்றேன் பாட்டி!”.  அழைப்பை துண்டித்து பெருமுச்சு விட்டாள்.

 

சிறிது நேரத்தில் சந்திரா போன் செய்து, “வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நாள். தம்பியோட அஷ்டலஷ்மி கோவிலுக்கு போய்ட்டு வாம்மா, நரேனுக்கும் சொல்லிட்டேன்.” என்றார். சரியென்றாள் பூங்குழலி. ஆபிஸிலும் சொல்லி விட்டாள். இவளது பிராஸஸில் சின்ன வேலைகள் பாக்கியிருந்தன. சந்தானம் பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தான்.

 

டீயை குடித்து விட்டு திரும்பி வரும்போது வலது பக்கம் டாய்லெட் அருகே இருக்கும் சின்ன வளைவில் பிராஜக்ட் எஞ்சீனியர் சாகிதராமன்  சில வாரங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்திருந்த அந்தப் பெண்ணிடம் எதோ சொல்லி சிரித்துக் கொண்டிருந்தான். அவள் பாவம் போல் நின்றிருந்தாள். அந்த இடம் சிசிடிவி காமிராவின் பார்வைக்குள் விழாது. கதவைத் திறக்கவும் சில்லென்றிருந்தது. அனைவரும் அசைவற்று உட்கார்ந்திருந்தனர். கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சம் கண்களில் மின்னியது.

 

சாந்தியைக் கடக்கும்போது “ஆமாங்க, இப்பத்தான் அந்தம்மா வரமுடியலன்னு சொல்லுது. ஜென்னிக்கு பனிரெண்டரை மணிக்கு ஸ்கூல் முடிஞ்சிரும். என்ன பண்ணன்னு தெரியல.” அடங்கிய குரலில் பதறிக்கொண்டு இருந்தாள்.

 

சென்ற பிராஜக்டில் இருந்த தவறுகளை, அதை சரி செய்வதற்கான வழிமுறைகளை இன்றைய டீமில் டிஸ்கஸ் செய்ய வேண்டும். அதற்கான குறிப்புகளை யோசித்து ஒரு நோட் தயார் செய்து கொடுக்க வேண்டும். தன் இருக்கையில் அமர்ந்து, போனைத் தொட்டு விழிக்கச் செய்தாள். மிஸ்டு காலில் கலைச்செல்வன் என்றிருந்தது. அழைப்பு விடுத்து காத்திருந்தாள்.

 

எடுத்தவுடன் “பூம்மா...எப்படியிருக்கே?” அண்ணனின் குரலில்  பாசம் இழைந்து வந்தது. “நல்லாயிருக்கேண்ணா. கூப்பிட்டிருந்தியா?”

 

“ஆமா. ஊருக்கு வந்திருக்கேன். இன்னிக்கு அப்பா இறந்த நாள்ல்ல..”

 

“மறந்தே போய்ட்டேன். பக்கத்துல  யார் சத்தம். யாழினி போல இருக்கு.”

 

“ஆமா யாழினிதான். உன் நிச்சயதார்த்தத்துக்கு வந்தப்ப சபாபதி தாத்தா என் நம்பரை வாங்கியிருந்தார். ரெண்டு நாளைக்கு முன்னால போன் செஞ்சு, நாளை மறு நா  வெள்ளிக்கிழம அப்பாவோட நினைவு நாள்.  கல்லறைக்கு வர்றியான்னு கேட்டார். வர்றேன்னேன். குடும்பத்தோட வாய்யான்னார்” கலைச்செல்வன் ததழுத்தான்.

 

“ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா....” சொல்லும்போது இவளுக்கும் தொண்டை அடைத்தது. அடக்கிக் கொண்டாள்.

 

“நேத்து நைட்லயே வந்துட்டோம். அண்ணிக்கு லீவு கிடைக்கல. வரல்ல. வேறு யார் முகமும் தெரியாதுனால யாழினி முழிக்கிறா. தூக்கி வச்சுக்கன்னு தொந்தரவு செய்றா. அப்பா கல்றைலதான் இப்ப நின்னிட்டுருக்கோம்”

 

“சரிண்ணா...” அதற்கு மேல் எதுவும் பேச இயலவில்லை. குரல் கம்மியது.

 

கலைச்செல்வன் புரிந்திருக்க வேண்டும்.  “பூம்மா...” ஆறுதலாய் அழைத்தான்.

 

“............”

 

“பூம்மா, என்னம்மா...”

 

“ஒன்னுமில்ல. அண்ணா, அப்பா கல்றைய போட்டோ எடுத்து வாட்ஸ்-அப்பில அனுப்பி வைக்கிறியா?”

 

“அனுப்புறேன்,,”

 

“ம்... தாத்தாவக் கேட்டதாச் சொல்லுண்ணா, அடுத்த வருஷம் கண்டிப்பா நானும் வரணும்ணா. ஏங்கிட்ட முன் கூட்டியேச் சொல்லிரு”

 

“சரிம்மா, இங்கயும் கல்யாணி வந்திருக்காங்க. தாத்தா விரட்டிட்டாரு. தூரத்துல நிக்கிறாங்க. கல்றைல கீழ போட்டுருக்கிற சிமெண்ட் தளத்துல கரிய வச்சு, என் ராசா, உன் மகளுக்குக் கல்யாணம்னு எழுதியிருக்கு. அதையும் எடுத்து அனுப்பி வைக்கிறேன்.”

 

பூங்குழலிக்கு அழுகையாய் வந்தது.

 

(தொடரும்)

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. கல்யாணியின் காதல் காலத்தை வென்றதாக உள்ளது. ஆனால் இப்படி எத்தனையோ காதல்கள் உதாசீனப்படுத்த படுகின்றனதான். காதல் என்பது சேர்ந்து வாழ்வதில் மட்டுமில்லை என்பதையும் கல்யாணி உணர்த்துகிறாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்தாளர் மணிமாறன் கல்யாணியை ‘மனப்பிறழ்வு கொண்ட பெண்’ என்கிறார். நீங்கள் ‘காலத்தை வென்ற காதல்’ என்கிறீர்கள். ரொம்ப காலமாக என் நினைவில் சுமந்து கொண்டிருக்கிறேன் அவரை.

   வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ரவிசங்கர்.

   நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!