க்ளிக் - 5 (தொடர்கதை)


வுணும் இல்லாத கிராமமும் இல்லாத அந்த ஊரின் பஜாரில்  ’பத்மாவதி ஜவுளி ஸ்டோர்’ வைத்திருந்தார் பூசைப்பழம். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் கடையிலிருந்து வந்து சாப்பிட்டு விட்டு போனார்.  அப்போது சொல்ல மறந்திருக்க வேண்டும். அடுத்துத் தான்  சாப்பிடப் போகும் வழியில் முருகேசன் “பந்தலுக்குச் சொல்லியாச்சு. மேளத்துக்கும் சொல்லியாச்சு. மொத நா ராத்திரி, அடுத்த நா காலைல, மத்தியானம் எல்லாம் பந்திக்கு என்னென்ன வைக்கணும்னு யோசிச்சு வைங்க. சமையலுக்குச் சொல்லணும். அப்பா உங்கக் கிட்ட கேக்கச் சொன்னாங்க” சொல்லிவிட்டுப் போனார். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் குடித்தனம் இருக்கிறார்.

 

சரி, சரி என்ற பத்மாவதி அம்மாள் வேறு எதையும் பேசவில்லை. மாப்பிள்ளை வீட்டில் ரொக்கம் வேண்டாம், நகையும் நீங்கள் போடுவதுதான் எனச் சொல்லியதிலிருந்து தன் மகன் கல்யாண ஏற்பாடுகளில் கடும் வேகமாக இருப்பதை பார்த்துக் கொண்டுதான் இருந்தார்.  நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை விழுந்து விழுந்து உபசரித்தபோதே புரிந்து போனது.  போதாக்குறைக்கு கல்யாணச் செலவுக்கு தங்கள் தரப்பில் மூன்று லட்சம் தருவதாக ரவிச்சந்திரனின் அண்ணன் அதாவது பூங்குழலியின் பெரியப்பா நிச்சயதார்த்தத்துக்கு வந்திருந்த போது  சொல்லி இருந்தார்..

 

பூங்குழலியின் அண்ணன் கலைச்செல்வன் தன் இஷ்டத்திற்கு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து போய் விட்டதிலிருந்து தன் அக்கா சித்ராவின் குடும்பத்தோடு பட்டும் படாமல் இருந்தார் முருகேசன். நான்கு வருஷமாய்  இருந்த முறைப்பு விறைப்பு எல்லாவற்றையும் இப்போது உதறிவிட்டிருந்தார்.  மாரியம்மன் அருளால் இந்த வரன் அமைந்ததாக பூசைப்பழத்திடம் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் வாய்விட்டுச் சொன்னார். வரிசையாக மூன்று பெண் குழந்தைகளை வைத்திருக்கும் தன் மகன் முருகேசன் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு காசுக்கும் எப்படி கணக்கு பார்ப்பார் என்று பத்மாவதிக்குத் தெரியும். பேத்தி பூங்குழலியால் இப்போது ஆரம்பித்திருக்கும் பிரச்சினைகளைச் சொன்னால் அவ்வளவுதான். முருகேசனின் முகம் போகும் போக்கை பார்க்க முடியாது. எப்படி சரி செய்வது என  பத்மாவதியும், சித்ராவும் யோசித்துக் கொண்டு இருந்தார்கள்.

 

திருமண அழைப்பிதழ் அச்சடிப்பது சம்பந்தமாய் கொஞ்ச நேரத்துக்கு முன்பு சந்திராவிடம் சித்ரா பேசியபோது தெரிந்தது. ஒரு சாதாரண விஷயமாகத்தான்  சந்திராவும் சொன்னார். உள்ளுக்குள் வருத்தம் தெரிந்தது. பூங்குழலியை சின்ன வயதில் இருந்து பார்த்து வந்திருப்பதால் சித்ராவுக்கு லேசாய் பதற்றம் தொற்றியிருந்தது. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, எல்லோரும் பார்க்கப் போயிருந்த அந்த மேஜிக் ஷோ இப்போதும் ஒரு பயங்கர கனவு போல இவரை  பயமுறுத்தும்.

 

அரங்கம் முழுவதும் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, வெளிச்சம் வட்டமாய் குவிந்திருந்த மேடையின் அந்தரத்திலிருந்து மேஜிஷியன் இறங்கி வந்து ஷோவை நடத்த ஆரம்பித்தார். வெறும் கைக்குட்டையை காட்டி சுருக்கி விரித்த போது பூக்கள் கொட்டின. வீசிய தொப்பியிலிருந்து புறாக்கள் பறந்தன.  கைகளும், காலும் கட்டப்பட்ட பெண்ணை சின்னப் பெட்டிக்குள் மடக்கி உட்காரவைத்து பூட்டிவிட்டு திறந்தால் கட்டுகள் இல்லாமல் எழுந்தாள். ஒவ்வொன்றும் ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியமாய் இருந்தன. எல்லோரும் கை தட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்தனர். “எப்பிடிப்பா..”, “எப்பிடிப்பா..” என்று ரவிச்சந்திரனைத் தொட்டு தொட்டு கேட்டுக்கொண்டிருந்தாள் பூங்குழலி.  அருகே கலைச்செல்வனும், சித்ராவும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

 

கில்லட்டின் போன்ற ஒன்றை மேடையில் வைத்து, அதன் வளையத்தில் பூசணிக்காயை வைத்து மேலிருந்த லிவரை இழுக்கவும், கத்தியாய் பளபளத்த பெரிய பிளேடு போல இருந்த ஒன்று சட்டென்று இறங்கி வெட்ட இரண்டு துண்டுகளாய் தரையில் உருண்டன.  

 

“உங்களிடமிருந்து ஒருவரை இப்போது அழைக்கிறேன். ஒரு சின்னப் பையனோ, பெண்ணோ மேடைக்கு வாருங்கள். அவர்கள் தலையை இதற்குள் கொடுக்க வேண்டும். யார் வருகிறீர்கள்” கூட்டத்தைப் பார்த்து மேஜிஷியன் அழைத்தார். அனைவரும் உறைந்து போயினர்.

 

ரவிச்சந்திரன் பூங்குழலியைப் போகச் சொன்னார். அவள் கொஞ்சம் யோசித்து எழுந்தாள்.

 

“ஒங்களுக்கு என்ன பைத்தியமா?  சும்மா இருங்க.” சித்ரா பயந்தார்.

 

“அவ கெடக்கா. ஒன்னும் ஆகாது. நீ போம்மா”

 

“ஐயோ, எம்புள்ள, நா போக விட மாட்டேன்.” கத்தவும் பக்கத்திலிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். ரவிச்சந்திரன் அமைதியானார்.

 

யாரும் முன் வராமல் போகவே, ஷோவிலிருந்த ஒரு சின்னப் பெண்ணையே அழைத்து அந்த வளையத்திற்குள் தலையை விடச் செய்தார் மேஜிஷியன். கலைச்செல்வன் தன் அப்பாவின் கைகளைப் பற்றிக்கொள்ள பூங்குழலி சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மேஜிஷியன்  மேலே லிவரை பிடித்து இழுக்கவும் அந்தப் பெண்ணின் கழுத்தில் பூமாலை விழுந்தது. அதிர்ச்சியிலிருந்து மீண்டு எல்லோரும் கை தட்டினார்கள்.

 

வீட்டுக்கு வந்த பிறகும் “கழுத்தை வெட்டாதுன்னு தெரியுதுதான். ஆனாலும் பயமா இருக்குல்ல. இப்ப நினைச்சாலும் உடம்பு நடுங்குது..” என்றார்  சித்ரா. ரவிச்சந்திரன் சிரித்தார். “ஆமா, சிரிங்க… என்ன மனுஷன் நீங்க…. நம்ம புள்ளயப் போயி அனுப்பப் பாத்தீங்களே” என்று கோபப்பட்டார். ரவிச்சந்திரன் மேலும் பலமாக சிரித்தார்.

 

இரண்டு நாள் கழித்து பள்ளிக்கூடத்திலிருந்து மேஜிக் ஷோவுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றார்கள். பூங்குழலி அன்றைக்கு பூமாலையோடு வந்தாள். சித்ராவால் முதலில் நம்பவே இல்லை. உண்மைதான் என கலைச்செல்வன் சொன்னதும் வெலவெலத்துப் போனார். எப்படி தன் பெண்  அத்தனை பேருக்கும் முன்னால், அந்த இருட்டில் நான் வருகிறேன் என எழுந்து மேடைக்குச் சென்று அந்த வளையத்திற்குள் தலையை கொடுத்தாள் என நினைத்து கதிகலங்கிப் போனார். எதுவும் நடக்காதது போல அன்று பூங்குழலி அமைதியாக உட்கார்ந்து பாடம் எழுதியது, சாப்பிட்டது, படுத்து உறங்கியது எல்லாமும் பயம் தந்தது. தூங்கும்போது தன் குழந்தையா இவள் என்பது போல் தொட்டுப் பார்த்தார். அவ்வளவு நெஞ்சழுத்தக்காரியா அவள் என அன்றைக்கு அதிர்ச்சியடைந்தார் சித்ரா.

 

இன்றைக்கு சந்திராவிடம் போனில் பேசியதும் ஏனோ தவிப்பாய் இருந்தது. பூங்குழலிக்கு உடனே போன் செய்தார். எடுக்கவில்லை. இரண்டு மூன்று தடவை தொடர்ந்து  முயற்சி பார்த்தார்.

 

“ஊர்ல உலகத்துல இப்பலாம் கல்யாணம் நிச்சயம் ஆய்ட்டுன்னா பொண்ணும் மாப்பிளையும்  நேரம் காலம் தெரியாம ஆசை ஆசையா போன்லயே பேசிக்கிடறாவ கண்டிருக்கு. ஒம்பொண்ணும் அந்தப் பையனும் அப்படி எதுவும் பேசுறது இல்லையா?” கேட்டுக்கொண்டே சித்ராவைத் தாண்டிச் சென்று வாசல் கதவைச் சாத்தி வந்தார் சந்திரா. “அப்படி எதாவது பேசினா இப்படியெல்லாம் ஒன்னு கெடக்க ஒன்னு பேச்செல்லாம் வராதேன்னு கேட்டேன்” என்று அவரே பதில் சொல்லியபடி  சமையலறை சென்றார்.

 

வரப் போகும் மருமகள் மீது மாப்பிள்ளை வீட்டில் வைத்திருக்கும் ஆசை பத்மாவதிக்குப் புரிந்தது, பூங்குழலி நல்ல பெண்தான், ஆனால் பாசத்திற்கு உருகுகிறவள் இல்லை என்று புரிந்து வைத்திருந்தார். அவளுக்கு சடங்கு கழித்த இரண்டு மாதத்தில் ரவிச்சந்திரன் தனது நாற்பத்து நான்காவது வயதில் இறந்து போனார். பைக்கில் சென்றபோது விபத்தில் முகமும் உடலும் சிதைந்து போனவரை ஒரு உருவமாக வெள்ளைத்துணியால் போர்த்திக் கட்டி ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டு வந்தார்கள். அப்பாவின் மீது விழுந்து பூங்குழலி கதறிக் கதறி அழுதாள். அதற்குப் பிறகு பூங்குழலியும், கலைச்செல்வனும் இந்த வீட்டில்தான் வளர்ந்தார்கள். ஒருநாளும் அவள் அழுது பார்த்ததில்லை. நெஞ்சழுத்தக்காரியாய் இருந்தாள். தன் போக்கில்தான் போவாள். லேசில் பிடி கொடுக்க மாட்டாள்.

 

வாசலிலும் ஜன்னலிலும் நின்று பெண்கள் எட்டிப் பார்த்த காலம் எல்லாம் போய்விட்டது. ஆணும் பெண்ணுமாய் ஒரே இடத்தில் படிக்கவும், வேலை பார்க்கவுமான பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கும்  என்று பயமாக இருந்தது. கண் காணாத தூரத்தில் இருக்கும் தங்கள் குழந்தைகளை நினைத்து, “நல்ல புத்தியையும், நல்ல சுகத்தையும் கொடு கடவுளே!” என நாளும் பத்மாவதி வேண்டிக்கொண்டிருந்தார். கலைச்செல்வனால் மொத்தக் குடும்பமும் உடைந்து போனது. வெளியே தலைகாட்ட முடியாமல் செய்துவிட்டானே என புலம்பித் தள்ளினார்.

 

அந்த பயத்தில்தான் பூங்குழலிக்கு வேலை கிடைத்தவுடன் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என துடித்தார். சித்ராவுக்கு அது சரியாகவேப் பட்டது. பத்மாவதியின் இரண்டாவது பெண் அமுதாவுக்கு  இரண்டு பெண் குழந்தைகள், கடைசிப் பெண் விமலாவுக்கு ஒரு ஆணும், பெண்ணும், மகன்காரன் முருகேசனுக்கு மூன்று பெண்குழந்தைகள் என வரிசையில் நிற்கிறார்கள்.  அந்த வீட்டில் ஒரு சுப காரியத்தை நடத்தி  இழந்த கலகலப்பையும், சந்தோஷத்தையும் கொண்டு வந்து விடலாம் என  தாயும் மகளும் நினைத்தார்கள். அந்த நினைப்பு இருந்தால் பூங்குழலி இப்படியெல்லாம் நடந்து கொள்வாளா என்றிருந்தது.

 

அமுதாவுக்கு பைல்ஸ் ஆபரேஷன் என்று நான்கைந்து மாதங்களுக்கு முன்பு சென்னை சென்று மேடவாக்கத்தில் ஒரு வாரம் போல இருந்த பத்மாவதி, திரும்பி வந்து சித்ராவிடம் நிறையவே குறைபட்டுக் கொண்டார். கல்லூரியில் படிக்கும் விமலாவின் மூத்த பெண் சுபாஷினி சதா நேரமும் போனும் கையுமாகத்தான் இருந்தாளாம். தூங்காமல் கொள்ளாமல் கம்ப்யூட்டர் முன்னாலேயே உட்கார்ந்திருந்தாளாம். எப்படி ஒழுங்கா படித்து முடிக்கப் போகிறாளோ, என வருத்தப்பட்டார். அவளது தாயும் தகப்பனும் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது சரியாகப் படவில்லை. கல்லூரி படித்து முடிக்கும் வரை பூங்குழலிக்கு தாங்கள்  போன் வாங்கிக் கொடுக்கவில்லை என்று அவர்களிடம் பெருமையாகச் சொல்லிக் காட்டியிருந்தார். இப்போது போன் வழியாகத்தான் பிரச்சினை என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதும் உள்ளுக்குள் ஒடிக்கொண்டு இருந்தது.

 

சித்ராவின் மொபைல் குரல் எழுப்பியது. பூங்குழலிதான் பேசினாள். “என்னம்மா, இந்த நேரம்? பிஸியா இருக்கேன். சொல்லும்மா..”

 

“யம்மா பூவு, உன் விளையாட்டல்லாம் நிறுத்திக்கம்மா. மாப்பிள்ளையோட அப்பாவும் அம்மாவும் வருத்தப்படுறாங்க. மாப்பிள்ளைக்கிட்ட போன் பண்ணி ஒரு ஸாரி சொல்லிட்டா என்ன.”

 

“உன் கிட்ட பஞ்சாயத்துக்கு வந்துட்டாங்களா?  அவங்களுக்கு வேற வேலையே இல்லையா? ஐயய்யே.... என்ன இது?”

 

“பஞ்சாயத்துல்லாம் இல்ல. சும்மா பேசிக்கிட்டிருந்தோம். வருத்தப்பட்ட மாரி தெரிஞ்சுது…”

 

“ஆரம்பிச்சிட்டிங்களா… நிறுத்தும்மா. ஒரு சின்ன விஷயத்த எல்லோருமா சேர்ந்து பெரிசாக்குறீங்க.”

 

“மாப்பிள்ளைக்கிட்ட ஒரு ஸாரி கேட்டாதான் என்னம்மா?”

 

“நா ஒரு தப்பும் பண்ணல. கேக்க முடியாது. நரேன் கிட்ட பேசிக்கிறேன்..”

 

“இதப் பாரு... உன் நல்லதுக்குச் சொல்றேன்.....” சித்ரா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பத்மாவதி அவளிடமிருந்து போனை வேகமாய் வாங்கி “ஏளா சின்ன நாயே! அப்புறம் என்ன மயித்துக்கு அப்படி எழுதினியாம்” ஆங்காரமாய் கத்தினார்.

 

பதில் இல்லை. காதில் கொஞ்ச நேரம் போனை வைத்திருந்து விட்டு, சித்ராவிடம் கொடுத்தார். “நாந்தான் பேசிக்கிட்டு இருக்கேன்ல. அதுக்குள்ள இப்படியாக் கத்துறது. வச்சிட்டா”  என்று  திரும்பவும் சித்ரா போன் செய்தாள். பூங்குழலி எடுக்கவில்லை. “கோபப்பட்டா காரியம் நடக்காது. அவ இன்னும் வீம்புதான் பண்ணுவா. அவளப் பத்தி எனக்குத் தெரியும்.”

 

“பிறகென்ன? அந்த சின்னக் கழுதக் கிட்ட கெஞ்சுறது. அவ பெரிய இவளோ. ஆனாலும் பொட்ட புள்ளைக்கு இவ்வளவு திமிரும் கொழுப்பும் ஆகாதுடி.” மேலும் கத்தினார் பத்மாவதி.

 

சித்ரா ஒன்றும் சொல்லாமல் சமையலறைக் கதவைத் திறந்து பின்பக்கம் வளவில் இருந்த நார்க்கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். செல்போனை இரண்டு கைகளுக்குள்ளும் பொத்தியபடி எங்கோ வெறித்துக்கொண்டிருந்தார். ஜன்னல் வழியே மகளைப் பார்த்த பத்மாவதிக்கு அந்த கோலம் சங்கடத்தைத் தந்தது. சித்ராவுக்குத் துணையாக நாம்தானே   இருந்து வருகிறோம், தன்னுடைய காலத்துக்குப் பிறகு  யார் கவனித்துக் கொள்வார்கள், தனக்கும் எழுபது கிட்டே ஆகிறது என்றெல்லாம் நினைத்து வேதனையடைந்தார். கலைச்செல்வனின் குடும்பத்தோடு உறவு  இல்லாமல் இருக்கிறது. பூங்குழலியின் நிச்சயதார்த்தம் நடந்த போது பேத்தி யாழினியை சித்ரா தூக்கி வைத்துக் கொள்ளக் கூட இல்லை.

 

யோசிக்கும் போதெல்லாம் ரவிச்சந்திரன் மீதும் அவரது குடும்பத்து மனிதர்கள் மீதும் வெறுப்பும் ஆத்திரமும் பத்மாவதிக்கு வரும். அந்த பைத்தியக்காரி கல்யாணிக்குப் பயந்து தனது மகள் தலையில் கட்டி வைத்து வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்கள் என சபித்துக் கொள்வார். அவர்கள் ஊரில் ஒரே தெருவில் இருந்த கல்யாணிக்கும் ரவிச்சந்திரனுக்கும் சின்ன வயசில் இருந்தே பழக்கம் என்றும்,  வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் ரவிச்சந்திரனின் அப்பா சபாபதி மறுத்துவிட்டார் என்றும் அந்த ஊரைச் சேர்ந்த பழக்கடைக்காரர் ஒருவர் பூசைப்பழத்திடம் கதை கதையாய்ச் சொல்லியிருந்தார். ரவிச்சந்திரனின் பிறந்தநாளுக்கு கல்யாணி தன் வீட்டு வாசலில் கோலம் போடுவாராம். தெருவில் நின்று, “என் மன்னன் எங்கே, என் மன்னன் எங்கே”  என பாட்டுப் பாடுவாராம். ஒருதடவை அவன் வேலை பார்த்த ஊருக்கே போய் தங்கியிருந்த லாட்ஜின் அறையைத் தட்டி ரகளை ஆகிவிட்டதாம். இவையெல்லாம்  காதில் விழுந்தும் ஆரம்பத்தில் பத்மாவதி அமைதியாய்த்தான் இருந்தார். 

 

கல்யாணமாகி நான்கைந்து வருஷங்களுக்குப் பிறகும் சித்ராவும், ரவிச்சந்திரனும் தங்கியிருந்த திருச்செந்தூருக்கேப் போய் அந்தக் கல்யாணி “அக்கா, ஒங்க வீட்டுல ஒரு வேலைக்காரியாவாது இருக்கிறேனே” என கெஞ்சி அழுதிருக்கிறார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை லீவில் ஊருக்கு வந்தபோது மகள் சொன்னதைக் கேட்டதும் பத்மாவதி கொதித்துப் போனார்.

 

“மொதல்லயே தெரிஞ்சிருஞ்சா நாங்க கல்யாணத்துக்கே சம்மதிச்சிருக்க மாட்டோம்” என ரவிச்சந்திரனை வைத்துக்கொண்டே  சொல்லிவிட்டார். அந்த வீட்டில் இனி காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று அன்றைக்கு சித்ராவை அழைத்துக்கொண்டு ரவிச்சந்திரன் வெளியேறினார். பூசைப்பழம் வீடு தேடி வந்து மன்னிப்புக் கேட்டபிறகும் சமாதானமாகவில்லை. சித்ராவை மட்டும் அனுப்பி வைப்பார்.

 

“அவர் மீது தப்பு இல்லையாம், அந்தப் பொண்ணுதான் உயிரா இருந்துச்சாம். அவங்கம்மா சொன்னாங்க” என தன் அம்மாவிடம் இன்னொருநாள் சொன்னார் சித்ரா.

 

“ஒம்புருஷன் எதுவுமே செய்யாம அவ அப்படி மயங்கிட்டாளாக்கும். போடி, நீ ஒரு பைத்தியக்காரி!”  ஏளனமாகச் சொன்னார் பத்மாவதி. அத்தோடு நிறுத்தியிருக்கலாம். அந்த ஊரில் இருந்த ரவிச்சந்திரனின் சொந்தக்காரர்களிடம்  எல்லாம் வாய்க்கு வந்தபடி பேசி இருக்கிறார்.

 

அந்த பொங்கலுக்கு ரவிச்சந்திரனின் ஊருக்குச் சென்றிருந்த போது ரவிச்சந்திரனின் அம்மா, பேச்சோடு பேச்சாக சித்ராவிடம் “ஒங்கம்மா  இப்படியெல்லாம்  பேசினாளாமே. அவ யோக்கியம் எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சிக்கிட்டு இருக்காளா, ஒங்கப்பாவோட தோட்டத்துல வேலை செஞ்சிட்டு இருந்த குடும்பந்தான ஒங்கம்மா குடும்பம். வயலு, வரப்பு, கடை, சொத்துன்னு கணக்குப் போட்டு  பம்புசெட்டு ரூமுக்குள்ள ஒங்கப்பங்கூட போயிருக்கா. ஒங்கம்மாவுடைய அண்ணங்காரன் கதவ வெளிய மூடி பஞ்சாயத்தக் கூட்டிட்டான். இப்படித்தான ஒங்கப்பாவுக்கும், ஒங்கம்மாவுக்கும் கல்யாணமே நடந்துச்சு. எதோ கெரகம் ஒங்க வீட்டுல சம்பந்தம் வச்சிக்கிட்டோம்” என்று பொரிந்துவிட்டார். முகத்தைப் பொத்திக்கொண்டு “ஏ.. என் அம்மா, அம்மா” என  சித்ரா சத்தம் போட்டு அழுதார்.

 

கேள்விப்பட்ட ரவிச்சந்திரன் தனது அம்மா என்றும் பாராமல் கடுமையாக பேசிவிட்டார். “அறிவிருக்கா, என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுனீங்களா. ஒங்க சங்காத்தமே வேண்டாம். வா.... சித்ரா” அழைத்துக்கொண்டு போய்விட்டார். அதற்குப் பிறகு அந்த வீட்டோடும் உறவு அற்றுப் போனது.

 

பூங்குழலி பிறந்த பிறகு ரவிச்சந்திரனின் அம்மா பார்க்க வந்தார். சித்ராவிடம் மன்னிப்பு கேட்டு, “ஊருக்கு வாம்மா. நம்ம கோவில்ல வச்சு பேத்திக்கு காது குத்தணும்.”  அழைத்தார். உறவுகள் அறுந்து போகாமல் பேருக்கு ஒட்டிக்கொண்டு நின்றன. கடைசி வரை ரவிச்சந்திரன் சித்ராவின் வீட்டுக்குச் செல்லவே இல்லை. அதுபோல ரவிச்சந்திரனின் அம்மா இறந்ததுக்கு பத்மாவதியும் போகவுமில்லை. துஷ்டி கேட்கவுமில்லை.

 

போன்  சத்தம் கேட்டது.  எடுத்து சித்ரா  பேசினார். பத்மாவதி அருகில் போய் நின்று கேட்டார்.

 

‘ம்’, ‘ம்’   சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்தவர், “அவ ஏங்கிட்டயே எப்பமாவதுதான் பேசுவாப் பாத்துக்குங்க. நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க. நாங்க பேசுறோம்.”  என்றார்.

 

என்ன என்று  சத்தம் வராமல் பத்மாவதி, வாயசைத்துக் கேட்டார். பொறுங்கள் என்று சைகை காட்டிவிட்டு, “சரிங்க” , “சரிங்க” என்றார். “ஆமாமா,  கொஞ்சம் அலட்சியமா இருப்பா. இனும அவ ஒங்க பொண்ணு. நீங்கதான் பாத்துக்கணும்” போனை அணைத்தார்.

 

“யாரு, மாப்பிள்ள வீட்லயா?” மகளின் அருகே உட்கார்ந்து கொண்டார்.

 

“ஆமா, மாப்பிளையோட அம்மாதான் பேசினாங்க. அவங்க, அவங்க வீட்டுக்காரரு. மாப்பிள்ளை மூனு பேருக்கும் ஒன்னு போல ஸாரின்னு ஒத்த வார்த்தைல பூவு மெஸேஜ் அனுப்பியிருக்காளாம். கோபத்துல வேண்டா வெறுப்பா பண்ண மாதிரி இருக்காம். வருத்தப்படுறாங்க…”

 

பெருமூச்சு விட்டார் பத்மாவதி.

(தொடரும்)

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

8 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. அருமை தோழர்
  அடுத்து என்ன நடக்கும் என்பதை எதிர்பார்க்க வைக்கிறது. நன்றாக செல்கிறது, வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. “ஆமா, மாப்பிளையோட அம்மாதான் பேசினாங்க. அவங்க, அவங்க வீட்டுக்காரரு. மாப்பிள்ளை மூனு பேருக்கும் ஒன்னு போல ஸாரின்னு ஒத்த வார்த்தைல பூவு மெஸேஜ் அனுப்பியிருக்காளாம். கோபத்துல வேண்டா வெறுப்பா பண்ண மாதிரி இருக்காம். வருத்தப்படுறாங்க…” - இது அருகிலிருந்து பார்ப்பது போலிருக்கிறது. முகம் தெரியாத மாப்பிள்ளையின் அம்மா, சித்ரா, பத்மாவதி - ஏதோ ஒரு முகம் வந்து ஒட்டி செல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா, மகிழ்ச்சி ரவிசங்கர். தொடர்ந்து வாசிப்பதும், கருத்து தெரிவிப்பதும் உற்சாகமளிக்கின்றன. நன்றி.

   நீக்கு
  2. comment பகுதியில் edit வசதி செய்ய முடியுமா ? சில எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்ய வேண்டி வரும்போது முடியவில்லை.

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  4. “ஆமா, மாப்பிளையோட அம்மாதான் பேசினாங்க. அவங்க, அவங்க வீட்டுக்காரரு. மாப்பிள்ளை மூணு பேருக்கும் ஒண்ணு போல ஸாரின்னு ஒத்த வார்த்தைல பூவு மெஸேஜ் அனுப்பியிருக்காளாம். கோபத்துல வேண்டா வெறுப்பா பண்ண மாதிரி இருக்காம். வருத்தப்படுறாங்க…” - இது அருகிலிருந்து பார்ப்பது போலிருக்கிறது. முகம் தெரியாத மாப்பிள்ளையின் அம்மா, சித்ரா, பத்மாவதி - ஏதோ ஒரு முகம் வந்து ஒட்டி செல்கிறது.

   நீக்கு
  5. கமெண்ட் பகுதியை எடிட் செய்யும் வசதி இல்லையே தோழர்.

   நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!