க்ளிக் - 4 (தொடர்கதை)


வெயில் அடித்து  நடமாட்டங்களற்றுக் கிடந்த பகல் நேரத்துத்  தெருவை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரா. நரேனுக்கு சமாதானம் சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள் சங்கடமாயிருந்தது. சின்ன விஷயத்துக்கும் நரேன் பதற்றப்படுவான் என்பது தெரியும். எதிலும் அவனுக்கு நிதானம் வேண்டும் என்று கவலைப்பட்டிருக்கிறார். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவனிடம் சொல்லவும் செய்திருக்கிறார். நரேனிடம் இல்லாத நிதானம் பூங்குழலியிடம் இருப்பது நல்லது, அதுதான் பிரச்சினைகளைப் பெரிதாக்காமல் பார்த்துக் கொள்ளும் என்றெல்லாம் நினைத்திருந்தார். 

“மாயநதி இன்று மார்பில் வழியுதே… தூய நரையிலும்..” என்று முணுமுணுத்தவர், பாட்டு அந்த நேரத்துக்கு சம்பந்தமில்லாமல் இருப்பதாக உணர்ந்து நிறுத்திக் கொண்டார். காலையிலிருந்து அந்தப் பாட்டு அவருக்குள் இறங்கி இருந்தது. மொபட்டில் பெரிய கேரியர் வைத்து கேஸ் சிலிண்டர்களை அடுக்கிக்கொண்டு அடர் பச்சை நிற உடையில் சென்றவன் வலப்பக்கம்  தெரு திரும்பி மறைந்தான். வீடுகளில் தெரிந்த கொஞ்ச நஞ்ச மரங்களும், செடிகளும் சலனமற்று நின்றிருந்தன. பூங்குழலியின் மௌனமும் அப்படித்தான் தெரிந்தது. இது நிதானம் இல்லை. என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாத அலட்சியமாகப் பட்டது. எரிச்சலையும் , புழுக்கத்தையுமே ஏற்படுத்தும். நல்லதுக்கு இல்லை என்று கவலைப்பட்டார். 

பூட்டிக்கிடந்த எதிர் வீட்டு காம்பவுண்டுக்குள் நின்றிருந்த காரின் அடியிலிருந்து அந்த கருப்பு வெள்ளைப் பூனை வெளியே வந்து சோம்பல் முறித்தது. அதற்கு கொஞ்சம் தள்ளி கொய்யா மர நிழலில் கும்மாளமடித்துக் கொண்டிருந்த நான்கைந்து தவுட்டுக் குருவிகள் சடசடவென பறந்தன. அடுத்த கணம் அந்த வீடே களையிழந்து போனது. பவித்ரா அந்த வீடெல்லாம் எப்படி மலர்ந்து சிரித்து பறந்து திரிந்து கொண்டிருந்தாள்! மகள் தனியாக இருக்கிறாள் என அவளது அம்மா பார்வதி சென்னைக்கு சென்று மூன்று மாதங்களுக்கும் மேலாகி விட்டது. சுந்தரேசன் மட்டும் இங்கு இருக்கிறார். மின்சார வாரியத்தில் வேலை. இருட்டிய பிறகு வந்து கதவு திறந்து ஆளில்லாத வீட்டிற்குள் அவர் நுழையும் காட்சி பெரும் சோகமாய்த் தெரியும்.  

பெருமூச்சோடு ஹாலுக்குள் திரும்பினார். நடராஜன் முன்பு டீ குடித்த டம்ளர் காலியாய் இருந்தது. எடுத்து வாஷ் பேசினில் போட்டு விட்டு, படுக்கையறைக்குச் சென்றார். நிச்சயதார்த்த ஆல்பத்தில் நரேனும், பூங்குழலியும் மட்டும் சேர்ந்து நின்றிருந்த இன்னொரு போட்டோவை மொபைலில் பிடித்தார். ‘குயின் இஸ் ரைட், கிங் இஸ் ஆல்ஸோ ரைட்’  என குறிப்பிட்டு நரேனுக்கும், பூங்குழலிக்கும் வாட்ஸப்பில் அனுப்பினார். மீண்டும் ஹாலுக்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். சீரியலில் கவனம் ஒட்டவில்லை. 

“என்னம்மா ஒரு மாதிரி இருக்கே, யார் போன் பண்ணது?” நடராஜன் கேட்டார். 

“நரேன்தான் மாமா” 

“எதும் பிரச்சினையா?” உற்றுப் பார்த்தார். 

“ஒன்னும் இல்ல மாமா...” சீரியலைப் பார்ப்பது போல் இருந்தார். 

மருமகளைக் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு, “இல்ல இந்த நேரத்துல்லாம் போன் பண்ண மாட்டானேன்னு பாத்தேன்.” முணுமுணுத்தபடி நடராஜனும் சீரியல் பக்கம் திரும்பிக் கொண்டார்.  

நிச்சயதார்த்தம் அன்றைக்கு காலையில் நடந்தது திரும்பவும் சந்திராவுக்குள் ஓட ஆரம்பித்தது.  ரொம்ப நாட்கள் கழித்து வீட்டிற்கு வரும் பெண்ணிடம், அவளது அம்மாவை விட்டு, தன்னிடம் போனில் பேச அழைத்தது தனது  தவறுதான் என்பது உடனே உறைத்து விட்டது. அது குறித்து வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. கொஞ்ச நேரத்தில் சித்ரா போன் செய்து அதற்காக வருத்தம் தெரிவித்ததும், “ஐயோ இதெல்லாம் ஒரு மேட்டரா. மொதல்ல எம்மருமகள போய் நல்லா கவனிங்க” என சிரித்துக் கொண்டே சொல்லி  முடித்துக் கொண்டார். 

இப்போது அதுவும் உறுத்தியது. அம்மாவோடுதானே அடுத்த இரண்டு மூன்று நாட்களும் இருக்கப் போகிறாள்? தான் பேச அழைத்தது பூங்குழலிக்கு கொஞ்சங்கூட சந்தோஷமாக இல்லையா? ஒரு பெண்ணுக்கு அம்மா விசேஷம்தான் என்றாலும், அந்த நேரத்தில் ஒரே ஒரு வார்த்தை, “ஆண்ட்டி நல்லாயிருக்கீங்களா?” என கேட்பதில் என்ன குறைந்து விடப் போகிறது? அது ஒப்புக்காகவே இருந்துவிட்டுப் போகட்டும். அதுதானே நாகரீகம்? அதுதானே நிதானம்? என்றெல்லாம் யோசித்தார். 

நரேனுக்கு பூங்குழலியைப் பேச ஆரம்பித்ததும் முதலில் அவளை ஃபேஸ்புக்கில்தான் பார்த்தார். சட்டென்று கட்டித்தங்கம் டீச்சரின் நினைவுதான் வந்தது. அவரது சின்ன ஊரில் தேவதை போலிருந்தவர் கட்டித்தங்கம். அழகில் கம்பீரமும், தெளிவும் சேர்ந்திருக்கும். அவரைப் போல டீச்சராக வேண்டும் என்ற  கனவெல்லாம் இருந்தது. 

 ஃபேஸ்புக்கில் பூங்குழலி எழுதியிருந்தை படித்துப் பார்த்ததில் அவள் புத்தகங்கள் படிக்கிறவளாகவும், அவைகளைப் பற்றி எழுதுகிறவளாகவும் இருந்தாள். சின்ன வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் வழக்கம் கொண்டிருந்த சந்திராவுக்கு பூங்குழலி மேலும் நெருக்கமாய்த் தெரிந்தாள். ‘சிகரெட் பிடிப்பதில்லை. சிகரெட் வாசனை பிடிக்கிறது. அப்பாவின் வாசனை.” என்று ரவிச்சந்திரனின் நினைவுநாளில் எழுதி இருந்தாள். உருகுவதும் புலம்புவதாகவும் இல்லாமல் பிரியத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. அவள் இந்த வீட்டிற்கு மருமகளாக வேண்டும் என்று ஆசைப்பட ஆரம்பித்தார். 

‘டொக்...டொக்’. மொபைல்  தட்டியது. வாட்ஸ்-அப்பில் நரேன் “தாங்ஸ் மம்” என்றிருந்தான். சிறு சந்தோஷத்தைத் தந்தாலும் பூங்குழலி ஒன்றும் சொல்லவில்லையே என்றிருந்தது. எழுந்து படுக்கையறைக்கு சென்றார். இவர் செல்வதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மீண்டும் சீரியலுக்குள் புகுந்து கொண்டார்  நடராஜன். 

வாட்ஸ் அப்பை திறந்து வைத்து யோசித்துக் கொண்டு இருந்த போது, பவித்ராவின் ஸ்டேட்டஸ் கவனிக்க வைத்தது. ”ஆம். பைத்தியமாக இருந்தேன். இப்போது தெளிந்து விட்டேன்!”  என்று சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவை பகிர்ந்திருந்தாள். பார்க்கவும் படிக்கவும் நன்றாக இருந்தாலும், அவளது அப்பா சுந்தரேசன் இருட்டிய பிறகு வீட்டிற்குள் நுழையும் காட்சி வந்து மறித்தது. 

இங்கு தூத்துக்குடியில் அவர்கள் வருவதற்கு முன்பே பவித்ரா வீட்டில் குடிவந்து இருந்தார்கள். இந்த வீடு பால் காய்ச்சும்போது பார்வதி இடுப்பில் பவித்ராவோடு வந்திருந்தார். நரேனுக்கு மூன்று நான்கு வயது மூத்தவளாய் பவித்ரா இருக்க வேண்டும்.. சந்திராவிடம் பிரியமும், நெருக்கமும் கொண்டிருந்தாள். தனக்கு நரேன் மட்டும்தான் என்றான பிறகு,  சந்திரா அந்த பெண் குழந்தையிடம் பாசத்தை அதிகமாகக் காட்டி இருந்தார். “ஆண்ட்டி....”, “ஆண்ட்டி....” என பேரன்பு செலுத்தினாள் அவள்.  

அண்ணா யூனிவர்சிட்டியில் முதல் மாணவியாய் தேர்வாகி, பெங்களூரில் முக்க்கியமான சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, ஜாதகம் பார்த்து, விசாரித்துத்தான் பொருத்தம் கண்டார்கள். மாப்பிள்ளையும் பெங்களூரிலேயே வேலை பார்த்தான். பிடித்துப் போனது. திருநெல்வேலியில் வைத்து பிரமாதமாக கல்யாணம் நடந்தது. 

இரண்டு மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்காது. பார்வதியையும் அவரது கணவரையும் பெங்களூருக்கு வரவழைத்து, “ஒங்க மகளுக்கு ஹிஸ்டிரியா, அவளை குணப்படுத்தி அனுப்பி வையுங்கள்” என  சொல்லி இருக்கிறார்கள். பவித்ரா அழுதிருக்கிறாள். கடுமையான வாக்குவாதம் நடந்திருக்கிறது. “டாக்டர் உங்க பொண்ணுக்கு குடுத்த சர்டிபிகேட் இதோ...” மாப்பிள்ளையின் அப்பா எடுத்துக் காட்டவும் பார்வதி அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறார். 

பவித்ரா கொஞ்சம் குள்ளம். வடிவமும், முகமும், நீண்ட முடியுமாய் அழகுச் சிலை போல் இருப்பாள். சிரித்த முகத்துடன், எல்லோரிடமும் மரியாதையுடன்  பழகுவாள். அப்படிப்பட்டவளை ஹிஸ்டிரியா எனச் சொல்லி விட்டார்களே என்று ஆத்திரம்தான் எல்லோருக்கும் வந்தது.  ஆபிஸுக்கு லீவு போட்டு விட்டு கொஞ்ச நாட்கள்  வீட்டில் இருந்தாள் பவித்ரா. சந்திராவும், மூர்த்தியும் அவ்வப்போது பார்த்து பேசி வந்தார்கள். அவளும் இங்கு வருவாள்.  அவள் சொன்ன விஷயங்கள் எல்லாம் தாங்க முடியாதவையாயிருந்தன. 

“ஆண்ட்டி! நம்ம வீட்டுலல்லாம் எப்படி ஜாலியா, அரட்டையடிச்சிட்டு இருப்போம்! அவங்க வீட்டில நான், அவன், மாமனார், மாமியார் நாலு பேரும் ஹாலில் உட்கார்ந்திருப்போம். அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசிக்குவாங்க. மாமனார் தரப்பில் அவங்க அண்ணன் தம்பி அவரை ஏமாத்திட்டாங்களாம். மாமியார் தரப்பிலும் அவங்க அம்மா அப்பா எதுவும் செய்யலையாம். சின்ன  வயசிலிருந்தே ரொம்ப கஷ்டப்பட்டு  முன்னேறி இந்த நிலைமைக்கு மாமனார் வந்தாராம். இது மட்டுந்தான் மொத்தத்தில விளங்கியது எனக்கு. மத்தபடி அவங்க சொன்ன பேர்களும், விஷயங்களும் சத்தியமா புரியல. முகம் பாத்து எதுவும் சொல்ல மாட்டாங்க. முன்ன பின்ன விளங்காம தேமேன்னு உக்கார்ந்திருக்கணும். தெனமும் இதுதான் சாயங்காலம்னா எப்படி இருக்கும்?” 

“அவங்களுக்குன்னு நெருங்கின சொந்தக்காரங்க, நண்பர்கள்னு யாருமே இல்ல. இவங்களும் யாரையும் நம்புறதில்ல. எப்பவும் யாரையாவது குறை சொல்லி பேசிட்டே இருப்பாங்க..” 

“அவனும் மூடியாவே இருப்பான். எதையும் ரசிக்க மாட்டான். ஷாப்பிங், டின்னர்னு போவோம்னு சொன்னா, எதுக்குன்னு கேப்பான்.” 

“இது தோதுப்படாதுன்னு நான் ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்ல ஃபிரண்ட்ஸ்கிட்ட நேரம் கழிக்க ஆரம்பிச்சேன். அதுலயும் வந்து மூக்க நுழைச்சான். என் ப்ரொஃபைல் படத்தைப் பாத்துட்டு, இப்படி போஸ் கொடுத்துட்டு நிக்கிறதாலத்தான் எனக்கு அதிகமா ஃபிரண்ட்ஸ் லிஸ்டாம். அதிகமா லைக் விழுதாம். எல்லாம் ஆண்களாம். கேவலமாப் பேசினான்.” 

“அவனுக்கு காம்ப்ளக்ஸ். என்னை ஒரு புத்திசாலிப் பொண்ணா அங்கீகரிக்கவே மாட்டான். என்னோட அழகால் காரியத்தை சாதிச்சு வந்திருப்பதாகவும், அந்த வித்தை தன்னிடம் பலிக்காதுன்னும் காட்டுவான். மொக்கையா அவஞ் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டணும். சரி அதையும் செஞ்சு பாப்போம்னு ட்ரை பண்ணேன். முடியல. உலகத்துல கொடுமையானது முட்டாள் போல பாவனை செய்றது.” 

“சின்னச் சின்ன விஷயங்களா நிறைய இருக்கு...” என்றவள் நிறுத்தி, “அம்மா அப்பாக் கிட்டத்தான் சொல்ல முடியாது ஒங்கக் கிட்ட சொல்லலாம்” என மெல்லிய குரலில் ஆரம்பித்தாள். “பெட்ல எப்பவும் டென்ஷனாயிருப்பான் ஆரம்பத்துல ப்ளைண்டா இருந்தான். நாந்தான் ஹெல்ப் பண்ணேன். சீக்கிரமே விழுந்துருவான். எனக்குப் புரிஞ்சுது.. ரிலாக்ஸாய் இரு, நிதானமா இரு, நாம ஒண்ணும் தப்பான காரியம் செய்யலேன்னு எங்கரேஜ் பண்ணேன். ஒனக்கு ரொம்ப எக்ஸ்பீரியன்ஸோன்னு கேட்டான்.” 

“பெட்ல சிரிச்சாலோ, சின்னதா சத்தம் வந்தாலோ சட்டுனு விலகிருவான். வெளியே அவனோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் கேட்டுருமாம். அரையும்குறையா, தப்புந் தவறுமா அவன் வைத்துக்கொண்ட செக்ஸில் நல்ல வேளை நான் உண்டாகலை. தாங்ஸ் காட்.” 

அதற்கு மேல் பேச முடியாமல், சந்திராவின் முகத்தையும் பார்க்க முடியாமல் பவித்ரா கவிழ்ந்து கொண்டாள். அவள் கண்களில் நீர் கட்டிக் கொண்டிருந்தது. ஆறுதல் சொல்ல வேண்டும் போல இருந்தாலும், இப்படியெல்லாமா ஒரு பெண் படுக்கையில் பேசுவாள், நடந்து கொள்வாள் என்று ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. 

மூர்த்தியோடு திருமணமாகி இருபத்தெட்டு வருடங்கள் ஆகிவிட்டன. எல்லாம் இருட்டில் மௌனமாகவே நடந்து முடியும். மூர்த்தி எதாவது காதருகே கேட்டால், அதிகபட்சம் “ம்” தான். வேண்டும் என்பதும் வேண்டாம் என்பதும் இவரின் விருப்பமாக ஒருநாளும் இருந்ததில்லை. சின்னச் சின்ன தொடுதல்கள் மூலம் மூர்த்தி புரிய வைப்பார். புரிந்துகொள்ள வேண்டும்.  

சந்திராவுக்கு தொண்டை அடைத்துக்கொண்டு வர, சட்டென்று பவித்ராவை, “ஏங் கண்ணே” என இழுத்து அணைத்துக் கொண்டார். அவளின் முடியை கைகளால் அளைந்து கோதிவிட்டார். பவித்ராவின் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. முதுகைத் தட்டிக் கொடுத்தார். 

“அழவேக் கூடாதுன்னு நினைச்சேன் ஆண்ட்டி! ஏனோ உங்கக் கிட்ட சொல்லும்போது அழுதுட்டேன்.” தேற்றியவாறு கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். “ஒரு மாசம் போல பாத்தேன். தனி வீடு போனா சரியாகும்னு தோணிச்சு. பேசினேன். அவன் , அவங்கம்மா, அப்பா மூணு பேரும் சேர்ந்து கத்துனாங்க. நானும் கத்தினேன். சாப்பாட்டுத் தட்டை தூக்கி எறிஞ்சேன். அவ்வளவுதான். தெரிஞ்ச எவனோ டாக்டர்ட்ட ஒரு சர்டிபிகேட் வாங்கி எனக்கு பைத்தியம்னு பட்டம் கொடுத்துட்டாங்க” 

கர்ச்சீப்பால் முகம் துடைத்துக் கொண்டாள். “வீடா சித்தி அது? ஒருத்தர் கூட ஃபிரண்ட்லியா இல்ல.” லேசாய் சிரித்துக்கொண்டு, “நல்லது. இத்தோடு போச்சு.  பெங்களுரிலிருந்து சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டிருக்கேன். கிடைச்சிரும். டைவர்ஸுக்கு அப்ளை செய்ய வேண்டியதுதான்” 

பவித்ராவைப் பற்றி மூர்த்தியிடம் சந்திரா சொன்னார். “நமக்கு வர்ற மருமகள நல்லா வச்சுக்கணுங்க. கொஞ்ச நாள் அவங்க ரெண்டு பேரும் தனியா  இருக்கட்டும். குழந்தை பிறந்த பிறகு நாமப் போயி அவங்களுக்கு ஒத்தாசையா இருக்கலாம்.” என்றார். “கடைசியில பவித்ராவைப் போயி பைத்தியம்னுட்டாங்களே!” என்று வருத்தப்பட்டார். மூர்த்தி எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்தார்.  அவர் என்ன நினைத்தார் என்பது தெரியவில்லை. சொல்லவுமில்லை. பெண்கள் எல்லாவற்றையும் பேசினாலும் புதிரானவள் என்கிறார்கள். ஆண்கள் எதையும் பேசவில்லை என்றாலும்  வெளிப்படையானவர்கள் என்கிறார்கள். 

இதோ, பவித்ரா அவள் என்ன நினைக்கிறாள், எப்படி இருக்கிறாள் என எல்லாவற்றையும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறாள். தன்னைத் திருமணம் செய்து கொண்டவனிடம் காட்டிய அன்பை பைத்தியமாக இருந்தேன் என்று சொல்கிறாள். எவ்வளவு கொடுமை. 

நிச்சயதார்த்தம் அன்றைக்கு மேடைக்கு தலைவிரி கோலமாய் வந்த பெண் நினைவுக்கு வந்தாள்.  அவள் ஏன் இன்னும் பைத்தியத்தில் இருந்து மீளாமல் இருக்கிறாள் எனத் தோன்றியது. திருமணத்தில் தெளியும் பைத்தியம் காதலில் தெளியாதோ என்றெல்லாம் யோசித்தார். பூங்குழலியின் அப்பா ரவிச்சந்திரன் அந்தப் பெண்ணைக் காதலித்தாரா, இல்லையா? அவர் அன்பு செலுத்தாமலா அந்தப் பெண் பைத்தியமானாள்? ஏன் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்தியவளை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை? பூங்குழலியின் அம்மா சித்ராவுக்கு இதெல்லாம் தெரிந்துமா ரவிச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்? 

பூங்குழலியும் அவளது அப்பாவைப் போல அன்பை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் புதைத்துக் கொள்பவளாய் இருப்பாளோ? இதுவரைக்கும் யார் மீதும் ஆசைப்படாமலா, அன்பு செலுத்தாமலா இருந்திருப்பாள்? அப்படி இருந்தால் அதை அவள் அம்மாவிடம் சொல்லாமலா இருந்திருப்பாள்? ஒருவேளை தன் அண்ணனால் குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடி தன்னாலும் ஏற்பட வேண்டாம் என நினைத்து இருப்பாளோ? யோசிக்க யோசிக்க எழுந்த கேள்விகள் எல்லாம் தெளிவுக்குப் பதிலாக குழப்பங்களையேத் தந்தன. 

வாட்ஸ்அப்பில், தான் அனுப்பிய படத்தைப் பூங்குழலி பார்த்து விட்டாளா என்று ஆராய்ந்தார். நீலக்கலரில் இரண்டு டிக் இருந்தது. ஆன்லைனில்தான் இருந்தாள். சரியாக அதே நேரத்தில் பூங்குழலியிடம் இருந்து மெஸேஜும் வந்தது.“குயின் இஸ் ரைட், கிங் இஸ் லெஃப்ட்” என்று ஸ்மைலி போட்டிருந்தாள். போட்டோவில் வலது பக்கம் அவள் இருப்பதையும், இடது பக்கம் நரேன் இருப்பதையும் சொல்கிறாள். தான் அனுப்பியது குறித்து எதுவும் சொல்லவில்லை. கிண்டல் செய்கிறாளா அல்லது அவள் தொனியே இதுதானா என்று புரியவில்லை.  நரேனுக்கு போன் செய்து சொன்னார். 

“லெப்ட்டுன்னா போய்ட்டேன்னு அர்த்தம். உங்களுக்குப் புரியலையா. போங்கம்மா” என எரிச்சலில் வைத்து விட்டான். 

சரியில்லை எனத் தோன்றியது. மேலும் வளரவிடக் கூடாது என்று பூங்குழலிக்கு போன் செய்தார். முழு ரிங் டோன் போனது. எடுக்கவில்லை. திரும்பவும் அடித்தார். எடுக்கவில்லை. என்ன பெண் இவள் என்று எரிச்சல் வந்தது. போனை படுக்கையில் வீசிவிட்டு எழுந்து ஹாலுக்கு வந்தார். போன் அடித்தது. வேகமாய்ப் போய் எடுத்தார். பூங்குழலிதான். 

“சொல்லுங்க ஆண்ட்டி, ஒரு டிஸ்கஷனில் இருந்தேன்.” எதுவும் நடக்காத மாதிரி மிக இயல்பாக மெல்லிய குரலில் கேட்டாள். ஃபேஸ்புக், குயின், ரைட், ராங், ரைட், லெஃப்ட் என ஒவ்வொன்றாய்  சொல்லி, “நரேன் வருத்தப்படுறான்.” என்றார். 

ஒன்றுமே நடக்காதது போல சிரித்தாள். “ஆன்ட்டி, நீங்க அந்தப் படம் பாத்துட்டீங்களா?” 

“இல்லம்மா..” 

“ம்ம்...இதை நரேன் ஏங்கிட்டயே கேட்டிருக்கலாமே” 

“எதுன்னாலும் அம்மாட்ட ஃப்ரியா பேசிருவான். பெண்கள்ட்ட பேசணும்னா கொஞ்சம் கூச்சப்படுவான். அதுதான்...” சிரித்தார். 

“ஏங்கிட்ட பேசுறதுக்கு என்ன கூச்சம் ஆண்ட்டி. மோதிரம் மாத்தியாச்சு. கல்யாணம் ஆகப்போது.” 

“அது ஒரு கதைம்மா. அவன் ரெண்டாம் கிளாஸ் படிக்கும்போது ஸ்கூல்ல ஒரு நாள்  அவசரத்துல கேர்ள்ஸ் டாய்லெட்டுக்குள்ள போய்ட்டான். அவன ஸ்கூல் முழுசும் கிண்டல் பண்ணி பாடாய் படுத்திட்டாங்க... அதுலயிருந்து கேர்ள்ஸ்ன்னாலே ஒரு மாதிரியாயிடுவான். நீதான் சரி பண்ணனும்.” சிரித்தார். 

“ம்..ம்” என சிரித்தாள். “ஓ.கே ஆண்ட்டி, நரேன்ட்ட நைட்ல பேசுறேன். சொல்லிருங்க.” 

“பேசிட்டு ஒரு வார்த்த ஸாரி சொல்லிரும்மா.” 

“நா எதுக்கு ஸாரி சொல்லணும் ?” 

“அவன் வருத்தப்படுறான்ல. ஸாரி கேட்டா சரியாயிருவான்” 

“தப்பா அர்த்தம் பண்ணியது நான் இல்லைய. நியாயமா ஸாரி கேக்க வேண்டியது நரேன் தான். விடுங்க ஆன்ட்டி. நா பேசிக்கிறேன். ஒரு பிரச்சினையுமில்ல. ஓ.கேவா?  பை!” வைத்துவிட்டாள். 

சந்திரா அப்படியே உட்கார்ந்திருந்தார். தான் என்ன பேசினோம், அவள் என்ன பேசினாள் என நினைத்துப் பார்த்து மேலும் குழப்பமானார். கடைசி வரை அவள் எழுதியதற்கு அர்த்தம் சொல்லவில்லை. 

பூங்குழலிக்கு வேறுவிதமான நினைப்பு எதுவும் இல்லை என்பதையும், மொத்தத்தையும் ஒரு சாதாரண விஷயமாக  அவள் கருதியதையும் புரிந்து கொண்டார். அந்த வகையில் நிம்மதிதான். ஆனால் தனக்கும் நரேனுக்கும் இடையில் நீங்கள் யார் என கேட்காமல் கேட்டு விட்டாளே என்றிருந்தது. அவள் மீது அன்பாகவும் அவளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசையாகவும் இருக்கும்  தன்னை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன்கிறாள் என்று வருத்தம் மேலோங்கியது. ஒரு வார்த்தை ஸாரி கேட்டால்தான் என்னவாம்? என்று ஆதங்கப்பட்டார். 

மதியம் சாப்பாட்டுக்கு அரிசியை குக்கரில் வைக்க வேண்டியிருந்தது. எழுந்தார். மொபைல் அழைத்தது. எடுத்துப்  பார்த்தார். பூங்குழலியின் அம்மா சித்ரா.  

(தொடரும்) 

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. இது தலைமுறைகளின் புரிதல் பற்றி நகர்வது போன்று தெரிகிறது. நன்றாக செல்கிறது. வரும் நாட்களில் விறுவிறுப்பிற்கு குறைவிருக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே! சமகால சமூகத்தில் தலைமுறை இடைவெளிகளையும், ஆண் - பெண் உறவுகளின் நெருக்கடிகளையும் கதையாய் சொல்லும் ஒரு முயற்சிதான். புரிதலுக்கு நன்றி.

   நீக்கு
 2. பெண்ணிற்கான கல்வியும் வேலைவாய்ப்பும் ஆணின் சமூக அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது !
  அடுத்தது என்ன ? என்று ஆவலைத்துண்டுகிறது !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா, மாரிக்கனி தோழர்! தங்கள் வருகையும், கருத்தும் உற்சாகம் தருகின்றன. மகிழ்ச்சி தோழர்!

   நீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!