க்ளிக்- 3 (தொடர் கதை)
மூர்த்தி பள்ளிக்குச் சென்று விட்டார். வீடு அமைதியாய் இருந்தது. நேற்றிரவு அவர் கொண்டு வந்த நிச்சயதார்த்த ஆல்பத்தைத் திரும்பவும் பார்த்துக்கொண்டு இருந்தார் சந்திரா. ”மாயநதி இன்று மார்பில் வழியுதே… தூய நரையிலும் காதல் மலருதே….” தன்னையுமறியாமல் லேசாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். மாநிறம் என்றாலும் நரேன் முகத்தில் தனிக் களை தெரிந்தது. அவனும் பூங்குழலியும் வெட வெடவென இருந்தார்கள்.  கொஞ்சம் பூசினாற்போல் இருந்தால் எடுப்பாக இருக்கும் எனத் தோன்றியது. கல்யாணத்துக்குப் பிறகு ஒரு சுற்று எப்படியும் பருத்து விடுவார்கள். தானும் கல்யாணத்தின்போது இதைவிட ஒல்லியாக இருந்தவள்தானே என நினைத்துக்கொண்டார். 

ஆரம்பத்தில் மூர்த்தி “ஒல்லிப் பாச்சான்”, “ஒல்லிப் பாச்சான்” என்றுதான்  இவரை அழைத்துக் கொண்டிருந்தார்.  முதல் இரண்டு நாட்கள் அதைச்  செல்லமென நினைத்து ரசித்தாலும், தொடர்ந்து எல்லோர் முன்னாலும் அப்படி சொல்ல ஆரம்பித்தது பிடிக்காமல் போனது. இது என்ன “ஒல்லிப் பாச்சான்” என வெறுப்பு வந்தது. ஒருபோதும் மூர்த்தியிடம் சொன்னது இல்லை. முகத்தைக்கூட காட்டியதில்லை. அம்மாவிடம் வருத்தப்பட்ட போது, “அப்படித்தான் இருப்பாங்க. பொறுமையா இரு. மெல்ல மெல்லதான் வழிக்குக் கொண்டு வரணும்” என தேற்றினார். 

பூங்குழலியோ நிச்சயதார்த்தம் அன்றைக்கு இவர்கள் வாங்கிக்கொண்டு போன மோதிரத்தை பார்த்துவிட்டு, “ஒ.கேதான் ஆன்ட்டி.  இன்னும் கொஞ்சம் வேற பேட்டர்ன்ல பாத்திருக்கலாம்” என சட்டென சொன்னது முகத்தில் அடித்தது போலிருந்தது. மூர்த்திக்கும் ஒருமாதிரியாகி விட்டது. பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. கலகலவென எல்லோரிடமும் சந்தோஷம் நிரம்பி இருந்தது அப்போது. இந்த ஒரு வாரம் முழுக்க அதுவே நினைப்பாகி இருந்தது. 

எதிர்பார்த்ததை விட நிச்சயதார்த்தம் தடபுடலாக இருந்தது. மண்டபம் பிடித்து ஒரு கல்யாணம் போல பூங்குழலியின் தாத்தா பூசைப்பழம் ஏற்பாடு செய்திருந்தார். நரேனோடு இங்கிருந்து சந்திரா, மூர்த்தியின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும், பக்கத்து வீட்டுக்காரர்கள் என இரண்டு வேனில் மொத்தம் நாற்பது பேர் போல சென்றிருந்தார்கள். அங்கேயோ மொத்த ஊரையும் கூட்டி வைத்திருந்தார்கள். இவர்களை அப்படி ஒரு மரியாதையோடு  முருகேசன் கவனித்தார். 

பூங்குழலியின் அண்ணன் கலைச்செல்வன், அவன் மனைவி  சரண்யா, மகள் யாழினியோடு நேரே மண்டபத்துக்கு வந்திருந்தான். நரேனோடு ஆசையாகப் பேசிக்கொண்டு இருந்தான். பூங்குழலியின் அப்பா ரவிச்சந்திரனின் கூடப்பிறந்த அண்ணன்கள் உதயச்சந்திரன், பாலச்சந்திரன், சித்ராவின் தங்கைகள் அமுதா,  விமலா எல்லோரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டனர். அவர்கள் யாருமே கலைச்செல்வனிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்பது தெரிந்தது. 

ரவிச்சந்திரனின் தந்தை சபாபதி தாம்பூலம் மாற்றும் போது மேடையேறி குடும்பத்தின் தலைவராக வீற்றிருந்தார். எல்லோரையும் சந்திராவுக்கும், மூர்த்திக்கும்  பூசைப்பழம் அறிமுகம் செய்து வைத்தார். “எங்க பொண்ணு. நல்லா வச்சுக்குங்க” என்று மட்டும் சபாபதி சொன்னார். அவரது சாயல் அப்படியே பூங்குழலியிடம் இருந்தது. 

மயில் கழுத்து நிறத்தில் நிச்சயதார்த்தப் புடவை பிரமாதமாக இருந்தது. நரேன் கோட் சூட் போட்டிருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். ஏன் அது தோன்றாமல் போய்விட்டது என சந்திரா வருத்தப்பட்டாள். பூங்குழலியின் கைகளில் மோதிரம் அணியும் காட்சி ஜம்மென்று வந்திருந்தது. இருவரும் அழகாக சிரித்துக் கொண்டிருந்தார்கள்.  மொபைலில் அதைப் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் நரேனுக்கும், பூங்குழலிக்கும் ‘சூப்பர்’  என அனுப்பினாள்.  

தலைவிரி கோலமாய் பைத்தியம் போல இருந்த அந்தப் பெண் உள்ளே நுழைந்ததைத் தவிர எல்லாம் நன்றாக நடந்தது. வந்தவர்கள் மேடையேறி மணமக்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்படியொரு நிலையில் வந்தவரை கவனித்து,  யாரிது என யோசிப்பதற்குள் மேடையருகே நெருங்கிவிட்டிருந்தார். ஒரே சலசலப்பாகி விட்டது. முருகேசன்  விறுவிறுவென சென்று கடுங்கோபத்துடனும் அருவருப்புடனும் “ச்சீ.... போ வெளியே” என சத்தம் போட்டார். அந்தப் பெண் எதோ முனகிக்கொண்டு திரும்பவும் மேடை நோக்கியே வந்தார்.  கோபத்துடன் அவரைப் பிடித்து முருகேசன் இழுக்கவும் தடுமாறிக் கிழே விழுந்தார். “ஏ...யென் ராசா...!” என தரையில் அடித்து கதறி அழ ஆரம்பித்தார். கலைச்செல்வன்தான் ஓடிப்போய், தூக்கி கைத்தாங்கலாக வெளியே அழைத்துச் சென்றான்.  

பூசைப்பழம் முதற்கொண்டு அனைவரும் வெலவெலத்துப் போயிருந்தனர். அந்தப் பெண் போன திசையில் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் சபாபதி. நின்று கொண்டிருந்த பூங்குழலி மேடையிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். சித்ரா  அந்த இடத்தை விட்டு அகன்று மணமகள் அறைக்குள் நுழைந்து கொண்டார். சந்திராவும் மூர்த்தியும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். முருகேசன் திரும்ப வந்து எல்லோரையும் பந்திக்கு சாப்பிட அழைத்து அந்த இடத்தை வேறு மனநிலைக்குக் கொண்டு வந்தார். 

கொஞ்ச நேரம் கழித்து சித்ராவிடம் மெல்ல கேட்டபோது, “அது கெடக்கு பைத்தியம்.”  என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டார். பூங்குழலியோ, “எங்க அப்பாவைக் காதலிச்சிருக்காங்க. பேரு கல்யாணி. இன்னும் அவங்க நெனைப்பாகவே இருக்காங்க. கல்யாணாமே பண்ணிக்கல.” என்று நரேனிடம் சொல்லியிருக்கிறாள். 

‘டொக்...டொக்’ என வாட்ஸ்-அப்பில் மெசெஜ் வரும் சத்தம் கேட்டது. எடுத்துப் பார்த்தாள். “வித் ஆல் யுவர் பிளஸ்ஸிங்ஸ் அன்ட் விஷ்ஷஸ்” நரேன் அனுப்பியிருந்தான். சந்தோஷமாய் இருந்தது. அவன் எது செய்தாலும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் தெரியும். இவர்களது சொந்த பந்தங்களில், நரேனுக்கு அவன் அம்மா மீது இருக்கும் அன்பு விசேஷமாகப் பேசப்படக்கூடிய ஒன்று. 

அவனுக்கு ஒன்றரை வயது நடக்கும்போது ஒருநாள் சந்திரா தனது அக்காவின் மகனை ஆசையோடு தூக்கி வைத்திருந்தார். விளையாடிக்கொண்டிருந்த நரேன் அருகில் வந்து தேம்பித் தேம்பி அழுதான். முதலில் எதற்கு என்று தெரியவில்லை. அந்தப் பையனை இடுப்பில் இருந்து இறக்கிவிட்டு நரேனைத் தூக்கியதும் அழுகையை நிறுத்தினான். தன்னைத் தூக்குவதற்குத்தான் அழுதிருக்கிறான் என நினைத்துக் கொண்டார்கள்.  திரும்பவும் ஒருமுறை அது போல அக்காவின் மகனைத் தூக்கியதும், ஓடி அருகில் வந்து நரேன் அதேபோல் துடித்து அழுதான். தன்னைத் தவிர வேறு யாரையும் அம்மா தூக்கினால் பிடிக்காமல் அழுகிறான் என்பது அப்போதுதான் தெரிந்தது. சந்திராவின் அக்கா அதை இப்போதும் சொல்வார். 

சரியாக அந்த சமயத்தில்  சந்திரா திரும்பவும் உண்டாகியிருந்தார். அப்போது குழந்தை  வேண்டாம்  எனத் தோன்றியது. வீட்டில் இவரே ஒரு முடிவெடுத்ததும் அப்போதுதான். மூர்த்தி எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். “இல்லைங்க, நரேன் வளரட்டும். பார்த்துக் கொள்வோம்” என  அதை மறுத்ததும் அப்போதுதான். பிடிவாதமாய் கருவைக் கலைத்துக் கொண்டார். மொத்தக் குடும்பத்திற்கும் அதில்  வருத்தம் இருந்தது. சந்திராவின் அம்மா ஆஸ்பத்திரி வந்து வாய்விட்டு அழுதார். 

பிறகு சந்திரா உண்டாகவேயில்லை. மூர்த்தி சில சமயங்களில் சொல்லிக் காட்டியிருக்கிறார். வேதனையில் உள்ளுக்குள் துடித்தாலும், “பரவாயில்லை. எல்லாம் நரேனுக்காகத்தானே. அவன் போதும் எனக்கு.” என சமாளித்துக் கொள்வார். நரேனைப் பார்த்து எல்லாம் மறந்து முகம் மலர்வார். அவன் ஒருபோதும் ஏங்கிப் போய்விடக் கூடாது என பார்த்துப் பார்த்து கவனிப்பார். வெளியே சென்று விட்டால் வீடு திரும்பும் வரை அவன் நினைப்போடுதான் காத்திருப்பார். 

“ரொம்ப செல்லம் கொடுக்குற. கவலப்படுற. இது சரியில்ல.”  மூர்த்தி  எத்தனையோ தடவை எச்சரித்திருக்கிறார். 

அது பற்றிக் கவலைப் பட்ட மாதிரியேத் தெரியாது. அவன் பத்தாவது வகுப்பில் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிய போது மூர்த்தியிடம், “இவனுக்கு என்று ஒருத்தி பிறந்திருப்பாள்தானே. அவள் இப்போது எந்த வகுப்பு பாஸ் பண்ணியிருப்பாள்” கேட்டார் சந்திரா. 

“உனக்கென்ன பைத்தியமா.  உன் கற்பனையையெல்லாம் உன்னோட வச்சுக்க” மூர்த்தி கடுமையாக எரிந்து விழுவார். சந்திரா சிரித்துக் கொள்வார். 

அன்றைக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து, கல்யாணத் தேதி முடிவு செய்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பும்போது பூங்குழலி அருகில் சென்று, “எம் பையனுக்கு ஒரு தேவதையை கற்பனை செஞ்சு வச்சிருந்தேன். அந்த தேவதைக்கு இன்னிக்கு நீ முகம் கொடுத்துட்ட..” கையைப் பிடித்து நெகிழ்ந்தார். 

“அப்படியா” என ஆச்சரியத்துடன் கண்களை விரித்து, “ஸோ நைஸ் ஆன்ட்டி...” என சிரித்தாள் பூங்குழலி. 

“எம்மருமகா எவ்வளவு அழகாச் சிரிக்கிறா..” சந்தோஷமடைந்து, பூங்குழலியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அவளது மொபைல் நம்பரை வாங்கிக் கொண்டார். 

தான் அனுப்பிய படத்துக்கு வாட்ஸ்-அப்பில் எந்தப் பதிலும் அவளிடமிருந்து இன்னும் வரவில்லை என்று எண்ணிக்கொண்டார். ஆபிஸில் வேலை அதிகமோ என்னவோ என மொபைலை எடுத்துப் பார்த்தார். அந்தப் படம் பார்க்கப்பட்டு விட்டது என்பதை நீலக்கலரில் இரண்டு ‘டிக்’ காட்டியது. மரியாதைக்காவது ஒரு மெஸேஜ் அனுப்பியிருக்கலாமே எனத் தோன்றியது. 

போன் நம்பரை வாங்கி வந்த பிறகு, அடுத்தநாள் இவர்தான் பூங்குழலியை அழைத்து நிச்சயதார்த்தம் குறித்து சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார். ஞாயிற்றுக்கிழமை போன் செய்து, “எப்போது சென்னை செல்கிறாய், எப்படிச் செல்கிறாய்” கேட்டுக் கொண்டார். மூர்த்தியிடமும், நரேனிடமும் மொபைலைக் கொடுத்து பேசச் சொன்னார். சென்னை சென்ற பிறகு போன் செய்து “பயணம் எப்படியிருந்தது” விசாரித்துக் கொண்டார். அன்றிரவு வாட்ஸ்-அப்பில் ‘குட்நைட்’ சொன்னார். பூங்குழலியும்  பதிலுக்கு, ‘குட்நைட் ஆன்ட்டி’ சொல்லியிருந்தாள். ஒருதடவை கூட அவளாக அழைத்துப் பேசியதில்லை. அன்றைக்கும் அப்படித்தான்.  பூங்குழலி இப்போதான் சென்னையில இருந்து வந்திருக்கிறாள் என்று பேசிக்கொண்டிருந்த சித்ரா சொன்னதும், “அவக்கிட்ட கொடுங்க” என்று இவர் சொன்னபோது, போனை வாங்கி பூங்குழலி தொடர்பை துண்டித்து விட்டாள். 

கல்யாணம், தனக்கு வரப்போகிறவன், அவர்களது குடும்பம் பற்றியெல்லாம் எதாவது யோசிப்பாளா இந்தப் பெண் பூங்குழலி என்றிருந்தது. மூர்த்தியின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை பார்த்துக்கொண்டு எவ்வளவோ கனவுகள் கண்டிருந்தார் சந்திரா. நடிகர் மோகன் போல மூர்த்தி இருப்பதாக நினைத்து உருகியிருக்கிறார். ‘சாலையோரம் சோலையொன்று ஆடும், சங்கீதம் பாடும்’ பாடல் எங்காவது கேட்டுவிட்டால் போதும் சிலிர்த்துப் போவார். தூங்கும்போது, குளிக்கும்போது, வீட்டுக்குப் பின்னால் மாமர நிழலில் நிற்கும்  போது, அடுப்பு முன்னால் உட்கார்ந்திருக்கும் போது, அவித்த நெல்லின் வாசம் பிடித்தபடி அதை பனம்பாயில் போட்டு வெயிலில் காய வைக்கும் போது மூர்த்தி்யின் ஞாபகங்களே அசைந்தாடிக்கொண்டு இருக்கும். சொந்த பந்தங்களும், தெரிந்தவர்களும், தோழிகளும் ஊரில் சும்மாவா இருந்தார்கள். எங்கே போனாலும், நின்றாலும், “புதுப்பொண்ணு” என்று வாஞ்சையோடு அழைக்க , வெட்கம் அப்பிக்கொள்ள மயங்கித் திரிந்த  காலங்கள் அவை. 

“ஏ... சந்திரா! மாப்பிள்ளையோட அப்பா அவங்க வீட்ல அடித்த பத்திரிகையை கொண்டு வந்திருக்காங்க..” அம்மா அழைத்ததும் தோட்டத்து கிணற்றடியில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள் அவசரமாய் எழுந்து  ஓடி உரலில் இடித்துக் கொண்டார்.  முட்டியில் கடுமையாய் வலி எடுத்தாலும் மெதுவாய் நொண்டிக்கொண்டு வாசலருகே வந்து, “வாங்க மாமா!” என கும்பிட்டார். மூர்த்தியோடு சம்பந்தப்பட்டவர்களை பார்ப்பதிலும், பழகுவதிலுமே பொங்கிய ஆர்வம் அது. அந்த கல்யாணப் பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டு தன் பெயரையும், மூர்த்தியின் பேரையும் சேர்த்துப் பார்த்ததில், படித்ததில்  எவ்வளவு சந்தோஷம் இருந்தது. அப்படியெல்லாம் கொஞ்சம் கூட  உணர்வுகள் இல்லாமல் பூங்குழலி இருக்கிறாளே என்று தவித்தார். 

சித்ராவும், பத்மாவதி அம்மாளும் இந்த பத்து நாட்களில் அவர்களாகவே நான்கைந்து தடவை பேசிவிட்டார்கள். ஜவுளி எடுக்க சென்னைக்குப் போகலாம் என்றும், ஒரு சனிக்கிழமை புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை நரேனையும், பூங்குழலியையும் அழைத்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். நல்ல யோசனையாய் இருந்தது. இருவரும் சேர்ந்து வாழ சென்னையில் வீடு பார்க்க வேண்டியிருந்தது. இந்த மாதத்தில் பனிரெண்டு, அடுத்த மாதத்தில் இருபத்து நான்குமாக இன்னும் முப்பத்தாறு நாட்கள்தான் கல்யாணத்துக்கு இருக்கின்றன. பத்திரிகை அடிக்கச் சொல்லியாகிவிட்டது. வந்தவுடன் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். கல்யாணத்துக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்துதான் லீவு கிடைக்கும் என மூர்த்தி சொல்லிவிட்டார். சனி, ஞாயிறில் மூர்த்தி வருவார். சில இடங்களுக்கு இவர்தான் போக வேண்டும். 

ஹாலில் டிவி அலற ஆரம்பித்தது. மணி பதினொன்றரை என அர்த்தம். மூர்த்தியின் அப்பா நடராஜன் ஹாலில் வந்து உட்கார்ந்து வரிசையாக சீரியல்களை ஒன்றரை மணி வரைக்கும் பார்ப்பார். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஊரில் அம்மா இறந்த பிறகு தனியாய் இருந்த அப்பாவை மூர்த்தி தன்னோடு இந்த வீட்டிற்கு அழைத்துக் கொண்டார். சர்க்கரை நோயாளி நடராஜனுக்கு எல்லாம் காலம் தவறாமல் நடக்க வேண்டும். அவரோடு சேர்ந்து சந்திராவும் இடையிடையே சீரியல்களை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. தெருவுக்கே கேட்கும்படி சத்தம் வைத்து கேட்பதுதான் பிடிக்காது. மூர்த்தியிடம் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்து விட்டார். 

“விடும்மா... வயசானவரு. என்ன செய்ய?” என மூர்த்தி சமாளித்தார். ஹியரிங் எய்டு மாட்டி  விடலாம் என ஒரு நல்ல செய்தியை சொல்லவும் செய்தார். இன்று வரை நிறைவேற்றவில்லை. 

“தாத்தாவை ஒருதடவை சென்னைக்கு கூட்டிட்டு வாம்மா. அவங்களுக்கு செக்-அப் செய்து ஹியரி்ங் எய்டு மாட்டிரலாம்” நிச்சயதார்த்தத்தின் போது வந்த நரேன் சொல்லியிருந்தான். பேரனுக்கு தன் மீது எவ்வளவு பாசம் என்று நடராஜன்  பெருமை கொள்ள, சந்திராவோ தனக்காகத்தான் இதை மகன் யோசித்திருக்கிறான் என அதை ரசித்துக்கொண்டார். 

இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. டீச்சராயிருக்கும் மூர்த்தி ரிடையர் ஆவதற்கு மூன்று வருடங்கள் போல இருக்கின்றன. பிறகு நரேனோடு சென்னையில் தங்குவதற்கு சந்திராவும், மூர்த்தியும் திட்டமிட்டு இருந்தனர். நடராஜனையும் அழைத்துச் செல்வது சரியாய் வராது. இப்போது இரண்டு மணி நேரத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்று வர முடிகிற அவரும் சென்னையில் வந்து தங்குவதற்கு சம்மதிக்க மாட்டார்தான். அவரை எங்கு தங்க வைப்பது என யோசிக்க வேண்டும். 

மூர்த்திக்கு இரண்டு தங்கைகளும், ஒரு அண்ணனும் இருக்கிறார்கள். தங்கைகள் கல்யாணம் கட்டி வேறு வேறு ஊர்களில் வசிக்கிறார்கள். எதாவது விசேஷம் அல்லது பண்டிகைக்கு போய் வரலாம். அவர்கள் வீட்டிலேயே நடராஜனை இருக்க வைக்க முடியாது. அது சரியும் அல்ல. அவனது அண்ணன் விவேகானந்தன் பக்கத்து ஊரில்தான் டெபுடி தாசில்தாராய் இருந்து ரிடையர் ஆகியிருக்கிறார். அவரது மனைவி அன்னபூரணி  வாத நோயால் நடப்பதற்கே அவஸ்தைப்படுகிறார்.  

“யம்மா, சந்திரா, சூடா ஒரு டீ போட்டுத் தர்றியாம்மா?” கேட்டார் நடராஜன். 

“இதோ வர்றேன் மாமா” படுக்கையறையிலிருந்து எழுந்து சென்றார். ஹாலைக் கடக்கும்போது, “என்ன மாமா, அந்த மாப்பிள்ளைப் பையன் காணாமப் போனானே, கண்டு பிடிச்சிட்டாங்களா?” கேட்டார். 

“இல்லம்மா, ஒரு வாரமா இழுத்துட்டு இருக்கான். இன்னைக்காவது கண்டுபிடிச்சிருவான்னு நினைக்கேன்”  அலுத்துக்கொண்டார். 

“அப்புறம் ஏன் தாத்தா இந்த சீரியலை விழுந்து விழுந்து பாக்குறீங்க?” நரேன் இருந்தால் தாத்தாவை கிண்டலடித்து இருப்பான். 

“ஊர்லயிருந்தாலாவது தெரிஞ்சவங்களைப் பாத்துப் பேசிட்டு இருப்பேன். இங்க யாரைத் தெரியும். இந்த சீரியல்தாண்டா தாத்தாவுக்கு பொழுது போக்கு” சொல்லும்போது மாமாவைப் பார்த்தால் பாவம் போல இருக்கும் சந்திராவுக்கு.  

நடராஜனுக்கு டீ கொடுத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து  தானும் சீரியல் பார்க்க ஆரம்பித்தார். மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தார். நரேன். 

“என்னக் கண்ணா, இந்த நேரம்?” என எழுந்து, கதவைத் திறந்து வெளியே சென்றார். காம்பவுண்டுக்குள்ளிருந்த வேப்ப மர நிழலில் நின்று கொண்டார். 

“என்ன நினைச்சுக்கிட்டு இருக்கிறா பூங்குழலி?” கோபமாக கேட்டான். ஆபிஸில் இருக்கும்போது அவன் குரல் காதுக்குள் ரகசியம் சொல்வது போலத்தான் இருக்கும். இப்படி அதிர்ந்து பேசியதில்லை. 

“என்னப்பா, என்னாச்சு?” 

“இதுவரை பார்க்காமல் மிஸ் பண்ணி இருந்த குயின் படத்த நேத்து பாத்தாளாம். அதைச் சொல்லிட்டு  ‘குயின் இஸ் ரைட், கிங் இஸ் ராங்’ என்று ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டுருக்கா” 

“அதுக்கு ஏண்டா நீ டென்ஷன் ஆகுற?” 

“அம்மா, அது ஒரு இந்திப்படம். ரெண்டு பேருக்கு எங்கேஜ்மெண்ட் ஆகும். ஆனா பிரிஞ்சிருவாங்க. கதையை முழுசா அப்புறம் சொல்றேன். எங்க ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆகி ஒரு வாரம்தான் ஆகியிருக்கு. அதுக்குள்ள இப்படி ஒரு ஸ்டேட்டஸ் போட்டா என்ன அர்த்தம். என்னோட ஃபிரண்ட்ஸ் என்னாச்சுன்னு கேக்குறாங்க.” 

“சரிடா. அந்தப் படத்தைப் பத்தி சொல்லியிருக்கா. இதுல என்ன தப்பு. அவ கிட்டேயே அப்புறம் கேட்டுருவோம். விடு. இதெல்லாம் சின்ன விஷயம்.” 

“உங்களுக்கு புரியல. படம் வந்து மூனு வருசம் கழிச்சு, இவளுக்கு எங்கேஜ்மெண்ட் ஆன சமயம்  பாத்து ஏன் எழுதணும். எதோ ஹிண்ட் பண்ற மாதிரி இருக்கு” போனை வைத்துவிட்டான். 

(தொடரும்) 

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

0 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!