க்ளிக் - 2 (தொடர்கதை)
நேற்றிலிருந்து நரேனும் பேஸ்புக்கில் இவளது நண்பனாகி இருந்தான்.. படிப்பு, வேலை தவிர அவனைப் பற்றி தெரிந்து கொள்ள விபரங்கள் எதுவுமில்லை.  சென்ற மாதம் அவனுக்கு நான்கைந்து நண்பர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லியிருந்தார்கள். எட்டு மாதங்களுக்கு முன்பு புது பைக் வாங்கியவுடன் அதில் உட்கார்ந்து ஒரு ஸ்டேட்டஸ் போட்டு இருந்தான்.  அவ்வளவுதான். 

நேரில் பார்க்கும்போது இருந்ததைவிட புரோபைல் படத்தில் சுமாராகத்தான் இருந்தான். இரண்டு வாரத்துக்கு முன்பு திருவேற்காடு கோவிலில் வைத்து நரேனை பார்த்திருந்தாள். ஊரிலிருந்து தாத்தா, பாட்டி அம்மா எல்லோரும் சென்னை வந்து இவளை  அழைத்துச் சென்றார்கள். நரேனின் அம்மா சந்திராவும் அப்பா மூர்த்தியும் வந்திருந்தார்கள். நரேன் அவர்களுக்கு ஒரே பையன். தன்னை விட கொஞ்சம் உயரமிருப்பான் எனத் தோன்றியது. தனியாக பேச வேண்டும் என  அழைத்து கோவிலில் அமைதியாக இருந்த ஒரு இடத்தில் போய் நின்றான் அவன். தமிழ்ச்சினிமா காட்சி போல இருந்தது இவளுக்கு. சிரிப்பு வந்தது. அடக்கிப் பார்த்தாள். கவனித்து விட்டான். 

"என்ன..?"  என்றான். அவன் கண்களை உற்றுப் பார்த்து நெற்றியில் சிறு சுருக்கங்கள் விழ புன்னகைத்துக் கொண்டே ஒன்றுமில்லை என்பதாய் தலையசைத்தாள். அவனால் அவள் கண்களை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. இலக்கு இல்லாமல் தூரத்தில் பார்த்துவிட்டு, மீண்டும் அவளை நோக்கினான். அதுவும் கூட சினிமா போலவே இருந்தது. என்ன கேட்கப் போகிறான் என்பது தெரிந்தது. அதைக் கேட்டு விடாமல் வேறெதாவது பேச மாட்டானா என்றிருந்தது. 

அதையேத்தான் கேட்டான். "என்னைப் பிடிச்சிருக்கா?". 

'ஐயோ!' என உள்ளுக்குள் அரற்றிக்கொண்டு பொதுவாய் புன்னகைத்தாள். 

விடவில்லை. "என்னைப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன்" 

"இன்னைக்குத்தான் உங்களைப் பாக்குறேன். உடனேப் பிடிச்சிருக்குன்னு சொல்ல முடியுமா?. போக போகத்தான் பிடிக்குது, பிடிக்கலைன்னு சொல்ல முடியும்?"  மனதில் பட்டதை சொல்லிவிட்டாள். 

அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. "ஆமாம், இல்ல...?" எனக் குளறினான். அசட்டுத்தனமாய் புன்னகைத்துக் கொண்டான். அமைதியானான். மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு  இவளும் நின்று பார்த்தாள். அவன் வேறெதுவும் பேசுவதாய்த் தெரியவில்லை. 

அவனை இயல்புக்கு கொண்டு வரத் தோன்றியது. "நரேன் நமக்குள் பார்மாலிட்டிஸ் தேவையில்லைன்னு நினைக்கிறேன். அட்டேச்மெண்ட் வரணும். அதுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது முக்கியம். ஒருத்தர ஒருத்தர் மதிக்கிறது ரொம்ப முக்கியம். நம்ம ரெண்டு பேராலும் அது முடியும்னு நம்புறேன்." 

"நிச்சயமா..." என்றான். திரும்பவும் சிறிது நேரம் இருவரும் யோசித்துக்கொண்டு இருந்தார்கள். லேசாய் கனைத்துக்கொண்டு இவள் பக்கம் திரும்பி "எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு" என்று சிரித்தான். இவளும் சிரித்தாள். அப்போது அவனது பார்வை சில கணங்கள் இவளது மார்பில் நிலைத்து நகன்றதை  பார்த்தாள். 

கவனித்து விட்டாள் என்பதை அவனும் உணர்ந்தான். ஒரு மாதிரியிருந்தது. “உன்னுடைய விரல்கள் அழகாய் இருக்கு”  சம்பந்தமில்லாமல் சொன்னான். 

“அப்படியா! தாங்க்ஸ்..” சிரித்து வைத்தாள். 

இருவரும் பேசிக்கொண்டது அவ்வளவுதான். மற்றதையெல்லாம் அம்மா, பாட்டி, தாத்தா, நரேனின் அம்மா, அப்பா பேசினார்கள். நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்தார்கள். "என்னம்மா", "வாம்மா" என நரேனின் அப்பா மூர்த்தி இவளைக் கனிவோடு அழைத்துக்கொண்டு இருந்தார். நரேனின் அம்மா சந்திராவோ இவளது கைகளை அடிக்கடி பற்றிக்கொண்டார். பாட்டி பத்மாவதிக்கும், தாத்தா பூசப்பழத்துக்கும் அதில் சந்தோஷம். சித்ராவை மனநிறைவோடு பார்த்தார்கள். ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரு குடும்பத்தாரும் அவரவர் கார்களில் புறப்பட்டார்கள். 

வழியில், மாப்பிள்ளையோட அப்பாவும் அம்மாவும் பெருந்தன்மையானவங்க” என்றார் பூசைப்பழம்.  கலைச்செல்வனைப் பற்றி தெரிந்திருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றார். பணம் எதுவும் வேண்டாம், ஒங்க பொண்ணுக்கு எவ்வளவு நகை போட முடியுமோ அதை மட்டும் போடுங்கள், நாங்கள் ஒண்ணும் கேட்க மாட்டோம் என மூர்த்தி சொன்னதாகவும்,  நாங்களும் ஒரு குறையில்லாமச் செய்வோம் என்று பதிலுக்குச் சொன்னதாகவும் பேசிக்கொண்டு வந்தார். இவள் அமைதியாக இருந்தாள் 

"ஏண்டி பூவு, உனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கா?" பத்மாவதி கேட்டார். இவள் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் 

"வாயத் தெறந்து பேசவே மாட்டா. மனசுக்குள்ள என்ன இருக்குன்னே தெரியாது" எரிந்து விழுந்தார்.  

பேத்தி அப்படி இருப்பது பிடிக்கவில்லையென்றாலும், " ஏம்மா, அவளச் சத்தம் போடுற. சின்னப் புள்ளை. வாயைத் தெறந்து இதையெல்லாம் சொல்லுவாளாக்கும்" பூசைப்பழம் சிரித்துக் கொண்டார்.  

ஹாஸ்டலில் இறங்கிக்கொண்டதும், "யம்மா பூவு! ஒங்கப்பா இறந்த பிறகு நம்ம குடும்பத்துல நடக்குற மொத நல்ல காரியம் இது. சித்ராவுக்கு உன்னாலாவது சந்தோஷம் கிடைக்கணும். இப்படியொரு மாப்பிள்ளையும், சம்பந்தியும் கிடைக்க நாம கொடுத்து வச்சிருக்கணும்." என்றார் பூசப்பழம் 

"தாத்தா! ஒங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா எனக்கும் பிடிக்கும். போதுமா?" சொல்லிக்கொண்டே அம்மாவின் கன்னத்தில் ஜன்னல் வழியே எட்டி முத்தம் கொடுத்தாள். "பாத்துப் போங்க.” என்றாள்.  

“மேடவாக்கத்திலிருந்து அமுதா சித்தி, சித்தப்பா எல்லோரும் வியாழக்கிழமையே வர்றாங்களாம். ரெயிலில் புக் பண்ணிரலாம்னு சொன்னாங்க. நீயும் அவங்கக் கூட வாயேன்” பத்மாவதி சொன்னார்.  

“இல்ல பாட்டி. முன்கூட்டி வர்றதுக்கு லீவு கெடைக்குமான்னு தெரியல. எப்படியும் நிச்சயதார்த்தம் அன்னைக்கு வெள்ளிக்கிழமை காலைல வந்துருவேன். சனி ஞாயிறும் அங்க இருப்பேன். ஒகேவா? பை!" என கையசைத்தாள். அம்மாவின் கண்கள் தளும்புவதைப் பார்க்க முடியாமல் திரும்பி நடந்தாள் 

அன்று இரவு அம்மாவுக்கு போன் செய்து, “அண்ணனும், அண்ணியும் கண்டிப்பா நிச்சயதார்த்ததுக்கு வருவாங்க. அதை மட்டும் வேண்டாம்னு சொல்லிராதீங்க”  என்று கேட்டுகொண்டாள்.  

“நாங்க யாரும் கூப்பிட மாட்டோம், நீ வேண்ணா உன் அண்ணனிடம் சொல்லிக்க.” சித்ரா சொன்னார். கலைச்செல்வனையும் அவன் குழந்தையையும் பார்க்க வேண்டும் என்று அம்மாவுக்கும் ஆசை இருப்பது தெரியும். தாத்தாவிடமும், பாட்டியிடமும்தான் பிடிவாதம் இன்னும் இருந்தது.  

கலைச்செல்வன் இவளுக்கு ஆறு வயது மூத்தவன். எஞ்சினியரிங் கல்லூரியில் இரண்டாவது வருஷம்  படித்துக்கொண்டிருக்கும்போது  ரவிச்சந்திரன் இறந்து விட்டார். கருணை அடிப்படையில் அப்பாவின் வங்கி வேலை கிடைத்தது. துக்கம் சுமந்த அந்தக் குடும்பத்திற்கு ஒரு ஆறுதலாய் இருந்தது. மதுரையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த கலைச்செல்வன் வாரா வாரம் வந்து போய்க்கொண்டு இருந்தான். ஒவ்வொருமுறை வரும்போதும் இவளுக்கு எதாவது வாங்கி வருவான். படிப்புச் செலவுக்கு தன்னால் ஆனதைக் கொடுத்துக்கொண்டு இருந்தான். இரண்டாவது வருட கல்லூரி லீவில் இவள் வீட்டிற்கு வந்திருந்த சமயம், கலைச்செல்வனும் வழக்கம்போல் சனிக்கிழமை வந்திருந்தான்.  ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கிளம்புகிற நேரத்தில்,  தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் சொன்னான். யார் என்ன என்றெல்லாம் விசாரித்துவிட்டு பத்மாவதியும், பூசைப்பழமும் கத்தினார்கள். சித்ரா சுவற்றில் முட்டிக்கொண்டு அழுதார். இவள் மாடிக்குப் போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள். மாறி மாறி சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. எல்லாம் அடங்கிய பிறகு, முழுக்க இருட்டிய பிறகு கீழே வந்தாள். வெளிக்கதவு உள்ளே பூட்டியிருந்தது. கலைசெல்வன் இல்லை. பூசைப்பழம் கட்டிலில் படுத்து மேலே பார்த்துக்கொண்டு இருந்தார்.  

பத்மாவதி  இவளருகில் வந்து, “உனக்கு இனும அண்ணனே கிடையாது.” முகத்துக்கு நேரே விரலை ஆட்டி எச்சரித்தார். சித்ரா சத்தம் போட்டு அழுதார். திரும்பிப் பார்த்து “உன்னை எந்த நேரத்துல பெத்தேனோ.” பாட்டி தன் வயிற்றில் ஓங்கி அடித்துக்கொண்டார். இவள் என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவின் அருகில் உட்கார்ந்து அப்படியே மடியில் படுத்துக்கொண்டாள்.  

சில மாதங்களில் கலைச்செல்வன் திருப்பரங்குன்றம் கோவிலில் வைத்து சரண்யாவை மணந்து கொண்டான். பெரியப்பா உதயச்சந்திரனுக்கு அதன்பிறகுதான் விஷயம் தெரிந்தது. தங்கள் ஊரிலிருந்து சித்ராவைப் போய்ப் பார்த்து,“இவ்வளவு நடந்திருக்கு, ஏன் எங்ககிட்ட மொதல்லயே சொல்லல. நாங்க தடுத்து நிறுத்தியிருப்போம்ல” என சத்தம் போட்டிருக்கிறார். அவர்களும் அவனை முழுவதுமாய் ஒதுக்கி விட்டார்கள். கல்லூரிக்கு இரண்டு மூன்று தடவை வந்து கலைச்செல்வன் இவளை பார்த்தான். அவனுக்கு யாழினி பிறந்தபோது இவள் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். சில மாதங்கள் கழித்து அம்மாவிடம் சொல்லாமல் மதுரையில் அண்ணன் வீட்டிற்கு சென்று இரண்டு நாள் இருந்துவிட்டு வந்தாள். மொபைலில் அவ்வப்போது பேசிக்கொள்வார்கள்.  சித்ராவுக்கும் லேசாய்த் தெரியும். கேட்டுக் கொள்வதில்லை.

பஸ்ஸின் வேகம் சட்டென்று குறைந்தது.  மூச்சு விட்டு  நின்றது. எட்டிப் பார்த்தாள். ரெயில்வே கேட் அடைத்திருந்தது. முன்னால் மினரல் வாட்டர் வண்டி நின்றிருந்தது. கூடவே சில பைக்குகளில், சைக்கிள்களில் மனிதர்கள். கேட்டைத் தாண்டினால் ஊர் ஆரம்பித்துவிடும். பள்ளிக்கு செல்லும்போதும் வரும்போதும் எத்தனையோ முறை சைக்கிளில் இங்கு நின்றிருக்கிறாள். இடதுபக்கம் தூரத்தில் ஸ்டேஷன் தெரிந்தது. பரவத்தொடங்கிய வெளிச்சம் பட்டு தண்டவாளம் மின்னியபடி நீண்டிருந்தன. அதனை ஒட்டிச் சென்ற மண் பாதையில் மாடுகள் சில மெல்ல அசைந்து சென்று கொண்டிருந்தன. பின்னால் ஒருவர் போய்க்கொண்டு இருந்தார். காக்ரஸ் மரத்தில் மைனாக்களின் சத்தம். ஊர் அப்படியே இருந்தது அங்கு. ஓரத்தில் வரிசையாய் இருந்த கடைகளில் டீக்கடையும் சைக்கிள் கடையும் வாசல் தெளிக்கப்பட்டு திறந்திருந்தன. தங்கமணி அண்ணன் எம்பி எம்பி காற்று அடைத்துக்கொண்டு இருந்தார். பார்த்ததும் சிரிப்பு வந்தது.  

ஹாஸ்டலில் தன் படுக்கையில் கவிழ்ந்து படுத்து லேப்டாப் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா, “பூங்ஸ், தூங்கிட்டியா. இங்க வாயேன்... இந்த நீக்ரோ எவ்வளவு நேரமா காத்தடிச்சுக்கிட்டு இருக்கான் பாரு. எனக்கே மூச்சு முட்டுது” என்றாள்.  

“ச்சீ! போடி. பேசாமப் படு” சிரித்தபடி போர்வையை மூடிக்கொண்டு திரும்பிப் படுத்தாள் இவள்.  

லேப்டாப்பை மூடி தள்ளி வைத்து இவளது படுக்கையில் வந்து உட்கார்ந்து “உனக்கு ஒண்ணு தெரியுமா. அன்னைக்கு தியேட்டர்ல  ஐஸ் கிரீம் சாப்பிடும்போது மகேஷ்ட்ட இதப் பத்தி சொன்னேன். டென்ஷனாயிட்டான். இதெல்லாம் சும்மாவாம். ஒரே ஷாட்டை மாத்தி  மாத்தி ரொம்ப நேரம் காம்பிக்கிறாங்களாம். கேமிரா டெக்னிக்காம். என்னென்னமோ சொன்னான்.” வாய்விட்டு சிரித்தாள்.  

இவளாலும் அடக்க முடியவில்லை. போர்வையை உதறி எழுந்து உட்கார்ந்து சிரித்தாள். தலையணையை ஸ்ரீஜா மீது எறிந்தாள்.  

“மொத்தத்துல அவன சாவடிச்சிட்டே..” என்றாள் பூங்கி. இருவரும் கிடந்து சத்தம் போட்டு சிரித்தார்கள்.  

“இதுக்கு அப்புறமும் உன்னை அவன் கல்யாணம் பண்ணுவான்னு நினைக்குற?”  

தலையணையை தூக்கிக்கொண்டு வந்தவள்“போகட்டும்.” என நெருங்கி இவளது காதருகே முகர்ந்து மூச்சு விட்டாள்.  

சட்டென பற்றிக்கொண்டு உடலின் சகலமும் விழித்தது.  “ஏய்..” செல்லமாய் அவளைத் தள்ளினாள்.  

“என்ன..”  ரகசியம் போல் கேட்டாள்.  

“உனக்கென்ன. யு.கே பிராஜக்ட். பதினோரு மணிக்கு மேல ஆபிஸ் போனாப் போதும். எனக்கு ஆஸ்திரேலியா பிராஜக்ட். காலைல ஆறு மணிக்கு சிஸ்டம் முன்னால் உட்கார்ந்தாகணும்.” திரும்பிக் கொண்டாள்.  

ஸ்ரீஜா இதமாய் இவளின் தோளைத் தட்டிக் கொடுத்து “குட்நைட்” சொல்லி எழுந்தாள்.  ஃபேன் சத்தம் மட்டும் கேட்க அமைதியானது. சிகரெட் வாசம் வந்தது. திரும்பிப் பார்த்தாள். ஜன்னல் திரையை விலக்கி வைத்து வெளியே பார்த்தபடி நின்றிருந்தாள் ஸ்ரீஜா.  

தட தடவென யாவும் அதிர குட்ஸ் வண்டி  பெட்டி பெட்டியாய் எதிரே மறித்து ஓடியது. இரண்டு பக்கமும் இருந்த மரங்கள் தலைவிரி கோலமாய் வெட்டிக் குலுங்கின. கடைசிப் பெட்டியில் இருந்து தலை எட்டிப் பார்த்து அழுக்கான வெள்ளை உடையில் கார்டு ஒருவர் பச்சைக்கொடி காட்டிக்கொண்டு இருந்தார். சடக் சடக்கென்று மெல்ல மெல்ல அதிர்வு குறைய கார்டு சிறு புள்ளியாகிக்கொண்டு இருந்தார்.  

மரங்கள் தத்தம் இயல்பு நிலைக்கு வர, பஸ் புறப்பட்டது. ஸ்ரீஜா மீண்டும் நினைவுக்கு வந்தாள். ஊரில் அவள் வீடு ரெயில்வே லைனுக்கு பக்கத்தில் இருக்கிறதாம். இரவில் இதுபோன்று குட்ஸ் வண்டி போகும்போது பார்த்திருக்கிறாளாம். கடைசி பெட்டியில் மங்கலான வெளிச்சத்தில் கார்டு தனியே உட்கார்ந்திருப்பாராம். மனித சஞ்சாரமற்ற வெளிகளில், தனிமையில் அந்த கார்டின் பயணம் எப்படி இருக்கும் என கேட்பாள். தனியாகவோ அல்லது அதுபோன்ற மனிதரோடோ ஒரு இரவில் பயணம் செய்து பார்க்க வேண்டும் என்பாள்.  

அபூர்வமான பெண். பி.பி.ஓ ஆபிஸொன்றில் பணிபுரிகிறாள். நிறைய புத்தகங்கள் படிப்பாள். கவிதை எழுதுவாள். புரிவதற்கே கஷ்டமாயிருக்கும். இவளையும், மகேஷையும் தவிர வேறு எவரிடமும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டாள். எளிதில் நெருங்க முடியாத கண்ணியமும் ஒரு கம்பீரமும் காட்டுவாள்.  ஒரு வேலையில் ஈடுபட்டுவிட்டால், எந்தக் கவனமும் சிதறாமல் பைத்தியம் போல மூழ்கிப் போவாள்.  

ஆண்களின் சொல்லிலும் செயலிலும் வெளிப்படாத அர்த்தங்கள் அவளுக்கு பிடிபட்டுவிடும். `கொழந்த`, `கொழந்த` என பழகி வந்த பக்கத்து வீட்டு மாமா, பாசத்தோடு அரவணைப்பது போல பத்து வயதில் இவளை விஷமமாய் தொட்டதிலிருந்து, சென்ற வாரம் பஸ்ஸில் பின்சீட்டில் தூங்குவது போல பாவனை செய்துகொண்டே முன்பின் அறிந்தேயிராத பதினெட்டு வயசு போல இருந்த பையன் அவளைத் தடவியது வரை எத்தனையோ ஆண்களைப் பற்றி எரிச்சலோடும் கோபத்தோடும் பகிர்ந்திருக்கிறாள். “தொட்டவுடன் தொடைய விரிச்சு காட்டிருவா பொம்பளன்னு நினைக்கிறானுங்க, ராஸ்கல்ஸ்!”  கொதித்திருக்கிறாள். அந்தப் பையனை “வர்றியாடா, மடியில உக்கார வச்சு பால் கொடுக்குறேன்” எனக் கேட்டு பஸ்ஸையே அதிர வைத்திருக்கிறாள்.  

அப்படிப்பட்டவள் எப்படி மகேஷை விரும்புகிறாள் என்பது  ஒரு புதிர்தான். குழந்தைத்தனமும், எப்போதும் முகத்தில் புன்னகையும் கொண்டவன் மகேஷ். புத்தகம் வாசிப்பதாய் தெரியவில்லை. கவிதை குறித்து எதுவும் தெரியாது. அவர்களோடு சில சமயங்களில் இவளும் வெளியே சென்றிருக்கிறாள். இவர்கள் இருவரும்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். அவன் அவ்வப்போது லேசாய் சிரித்துக் கொள்வான். பெரும்பாலும் அமைதியாகவே இருப்பான். இருவரும் தனியாக பேசிக்கொள்ள என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.  வெளிப்படையாய் சொல்லாவிட்டாலும் ஸ்ரீஜா அவன் மேல் பைத்தியமாய் இருக்கிறாள்  என்பது இவளுக்குத் தெரியும்.  

ஹாரன் சத்தம் தொடர்ந்து கேட்கவும் கலைந்து, பஸ் பஜாருக்குள் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தாள். தியேட்டர் இருக்கும் இடம் தெரியாமல் பழையதாகி இருந்தது. துணிக்கடை, பேக்கரி, பழக்கடை என வரிசையாக வரவும்  பையைத் தூக்கிக் கொண்டு முன்னால் வந்தாள். முருகேசன் நின்றிருப்பதை பார்த்தாள். பஸ்  அவரைத் தாண்டி நிற்க, கூடவே நடந்து வந்து, இவள் இறங்கவும் “வாம்மா புதுப்பொண்ணு!” என சிரித்துக்கொண்டே பையை வாங்கினார்.  

“எப்படியிருக்கீங்க மாமா?” என  செல்லம் கொஞ்சியவாறு கேட்டாள்.  

“எனக்கென்ன... நல்லாயிருக்கேன்.” சொல்லி வண்டியின் ஸ்டாண்டை எடுத்து, உட்கார்ந்து கொண்டு பையை முன்னால் வைத்து, “ ஏறிக்க” என்றார்.  

ஒவ்வொருமுறை வரும்போதும் பஜாரில் ஒன்றிரண்டு கடைகள் புதுசாய் மாறி இருக்கின்றன. ஜெயராம் மெடிக்கல் ஷாப்பில், வயதான மனிதர் ஒருவர் தந்த மருந்துச் சீட்டை பக்கத்து வீட்டு விஜயா கடைக்குள்ளிருந்து வாங்கிக் கொண்டிருந்தாள். இவளைப் பார்க்கவில்லை. இந்த வருஷம் ப்ளஸ் டூ எழுதி இருந்தாள். அதையடுத்து எஸ்.டி.டி பூத் இருந்த இத்தில் ஒரு ஸ்டேஷனரி கடை முளைத்திருந்தது.  அதிலும் இரண்டு பெண்கள் இருந்தார்கள். மிஞ்சிப் போனால் அவர்களுக்கு சம்பளமாக அறுநூறோ எழுநூறோ இருக்கலாம்.   

தெருக்கள் குறுகலாகவும், வீடுகள் சிறியதாகவும் தென்பட்டன. ஆடுகள் அவை பாட்டுக்கு தெரு நடுவே உட்கார்ந்திருந்தன. குடம் தூக்கி நடந்து கொண்டிருந்தனர் பெண்கள். வேதக்கோயில் திரும்பும்போது மைதானத்தில் இரண்டு மூன்று சிறுவர்கள் அந்த நேரத்திலும் பட்டம் விட்டுக்கொண்டு இருந்தனர்.  

ஆவுடையம்மாள் பெட்டிக்கடை முன்னே கலைந்த வெள்ளை முடியோடு, நாள் பட்ட புடவையணிந்து பைத்தியக்காரி போல ஒருத்தி கீழே உட்கார்ந்திருந்தாள். அருகில் செல்லும்போது  கல்யாணி போல தெரிந்தது. அவரும் இவளை உற்றுப் பார்த்தார். கல்யாணிதான். ஊளையிட்ட மாதிரி முனகி எழுந்தார். அந்தத் தெரு திரும்பும் வரை அங்கேயே நின்று பார்த்துக்கொண்டு இருந்தார். பாவமாய் இருந்தது. இந்த ஊருக்கு எப்படி வந்தார் என ஆச்சரியமாய் இருந்தது.  

வீடு வந்துவிட்டது. வாசலில் சின்னதாய் பந்தல் போட்டிருந்து. ஹாரன் அடித்து பைக் நிற்கவும், மாமாவின் மூத்த மகள் அபூர்வா, அத்தை, அமுதா சித்தி, பாட்டி, எல்லோரும் வாசலில் குவிந்து விட்டனர். “என் ராசாத்தி” என பத்மாவதி உச்சி முகர்ந்தார்.  

மொபைலில் பேசிக் கொண்டிருந்த சித்ரா இவளைப் பார்த்து முகமெல்லாம் மலர்ந்தவாறே, “சரியா இப்பத்தான் உங்க மருமக வீட்டுக்குள்ள வர்றா..” என சிரித்தார். ”சரிங்க… சரிங்க….” என்று பேசியவாறே, “பூங்கி! நரேனோட அம்மா…. பேசணுமாம்..” என போனை இவளை நோக்கி நீட்டினார்.  

“அம்மா இப்பத்தான் வந்திருக்கேன். அப்புறமா பேசிக்கலாம். மொதல்ல உன்னோட மகளை நீ கொஞ்சு…” என்று போனை வாங்கி தொடர்பை துண்டித்து, அம்மாவைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாள் பூங்குழலி. 

 (தொடரும்)

மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

4 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. இது கதை அல்ல... நிஜம்.... அருமையான எழுத்து வ்டிவம்... அருமை..!!!

    பதிலளிநீக்கு
  2. அருமையான துவக்கம். விருவிருப்பான நடை.... தொடரட்டும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!