க்ளிக் - 1 (தொடர்கதை)

 தீராதபக்கங்களில்  இந்தத் தொடர்கதை ஒவ்வொரு வாரமும், புதன் & சனிக்கிழமைகளில் வெளியாகும். நண்பர்களின் கருத்துக்கள் நாவலின் போக்கையும், எழுத்தையும் மேலும் சரிசெய்யும் என நம்புகிறேன். இப்படி எதாவது தொடராக வெளிவரும் நிர்ப்பந்தம் இருந்தால்தான், நாமும் எழுதுவோம் போலிருக்கிறது. பார்ப்போம்!
-----------------கேண்டீனில் இவளும், டீம் நண்பர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். தட்டுகளையும், கிண்ணங்களையும் சுமந்தபடி சர்வர் இவர்களை நோக்கி வருகிறான். அவரவர் ஆர்டர் செய்தபடி எடுத்து வைக்கிறான். இவள் தனக்கு வைக்கப்பட்ட கிண்ணத்தின் மூடியை திறந்து பார்க்கிறாள். அவித்த முட்டையின் மஞ்சள் கருக்களாய் இருந்தன.

"என்ன இது!" என அருவருப்படைந்து, "இதை நான் கேட்கலையே" என்கிறாள்.

சர்வர் அமைதியாக "இல்லை, மேடம், இதைத்தான் கேட்டீர்கள்." என்கிறான்.

"நான் சாப்பிட மாட்டேன். பிடிக்காது. வ்வே.." என குமட்டுவதாய் சொல்லி அங்கிருந்து எழுகிறாள். டீம் நண்பர்கள் கண்டிப்பாய்ச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள். கிண்ணத்திலிருந்து ஒரு மஞ்சள் கருவை எடுத்து நிஷாந்த் இவள் வாயருகில் கொண்டு வருகிறான். எழுந்து ஓடுகிறாள். அவர்கள் துரத்துகிறார்கள். லிப்ட் அருகே செல்லவும் கதவு திறக்கவும் சரியாக இருக்கிறது. உள்ளே போய் மூடிக் கொள்கிறாள். இவளது பிராஜக்ட் லீடர் அங்கே இருந்தான். அவன் கைகளிலும் மஞ்சள் கரு இருக்கிறது. முகத்தை மூடுகிறாள்.

"இதை மறுப்பது உன் கேரியருக்கு நல்லதல்ல." அருகில் வருகிறான். கூச்சல் போட்டு மறுக்கவும் விழித்துக்கொண்டாள் பூங்குழலி. பஸ்ஸில் போய்க்கொண்டு இருக்கிறோம் என்னும் பிரக்ஞை வந்தது. கனவுதான் என நிம்மதி அடைந்தாலும், சத்தம் போட்டு விட்டோமோ, யாரும் பார்த்து விட்டார்களோ என சுற்றிலும் பார்த்தாள். பக்கத்தில் இருந்த அந்த வயதான அம்மாள் வாயைத் திறந்து ஆழ்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்.

கனவினைத் திரும்ப ஒருமுறை யோசித்துப் பார்த்தாள். ஆபிஸ் கேண்டினாக அறிந்தது இப்போது ஹாஸ்டல் டைனிங் ரூம் போலத் தோன்றியது. மஞ்சள் கரு பிடிக்காது என்பது உண்மைதான். நிஷாந்த் என்று ஒருவன் டீமில் எப்போதும் இருந்ததில்லை. தூக்கத்தில் தெளிவாகத் தெரிந்தவை இப்போது மங்கலாகவும் கோர்வையற்றும் வந்தன. விழித்த கொஞ்ச நேரத்துக்கு மட்டும் இந்த கனவுகள் குறித்த யோசனைகள் இருக்கின்றன. பின் அவையும் மறைந்து விடுகின்றன. இதுவரை எவ்வளவோ கனவுகள் வந்து சென்றிருக்கின்றன. ஒன்றுகூட நினைவில் இருக்கவில்லை. யாராவது துரத்துவதாகவும், தான் ஓடுவதாகவுமே கனவுகள் பெரும்பாலும் இருப்பதாக உணர்ந்தாள்.

கழற்றியிருந்த செருப்புகளை கால்களால் தேடினாள். அகப்படவில்லை. இருக்கையை நிமிர்த்தி, குனிந்து பார்த்தாள். முன் சீட்டு இருக்கையின் அடியில் கிடந்தன. கால்களை நீட்டி அவைகளை இழுத்து மாட்டிக் கொண்டாள். நிம்மதியாயிருந்தது. மீண்டும் சாய்ந்து கொண்டு திறந்திருந்த பஸ்ஸின் ஜன்னல் வழியாக பார்க்க ஆரம்பித்தாள். தூக்கம் கலைந்து அசையாமல் அப்படி உட்கார்ந்து இருப்பதும், அலுங்காத அந்த ஏர்-பஸ்ஸின் வேகத்தில் வீசும் இளம் காற்றும் பிடித்திருந்தது.

அருகில் இருப்பவைகள் சட் சட்டென தோன்றி மறைந்து கொண்டிருந்தன. தொலைவில் இருப்பவை மெல்ல தொடர்ந்து கொண்டிருந்தன. அந்தக் குளத்தின் நடுவில் இருந்த சின்னத் திரடும், அதிலிருந்த ஆலமரமும், வெள்ளையும் சிகப்புக் கோடுகளுமாய்த் தெரிந்த கோயிலும் அப்படியே இருந்தன. நினைவு தெரிந்த நாளில் இருந்து இந்த இடத்திற்கு வந்ததும் கவனம் கொள்ளும் சித்திரமாக இருக்கிறது. இதனைத் திறந்து ஊருக்குள் செல்வதும், பின் வெளியேறுவதுமாய் பயணங்கள் இருக்கின்றன. இருபத்து நான்கு வயதில் இதுவரை ஒருமுறை கூட அதன் அருகே சென்று பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வாள்.

இன்னும் அரை மணி நேரத்தில் ஊர் வந்துவிடும். இங்குதான் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பட்டது. சென்னையை இழுத்துப் பிடித்து நினைவுக்கு கொண்டு வரவேண்டும். இரைச்சலும், நெரிசலும் நிறைந்த, சோடியம் வெளிச்சச் சாலைகளில் ஆட்டோவில் தடதடத்து, இந்தப் பையை சுமந்து ஓடிவந்து பஸ்ஸைப் பிடித்து நிம்மதியுடன் தண்ணீர் குடித்த நேற்றைய இரவின் கணங்கள் இப்போது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. அடர்ந்த அமைதியும், ஏசியின் பதமும், கம்ப்யூட்டரின் வெளிச்சத் திரைகளுமான ஆபிஸ் எங்கோ போய்விட்டிருந்தது. அரட்டைகளும், படுக்கைகளுமான ஹாஸ்டல் அறைகள் விலகி விட்டன. நேற்றைய நாள் வரையிலான தினசரி வாழ்வு கரைந்து போக, பழகிய ஊரின் வழியெல்லாம் நெருக்கமாகித் தெரிந்தன.

மொபைல் அழைக்கும் சத்தம் கேட்டது. ஹேண்ட் பேக்கிலிருந்து எடுத்துப் பார்த்தாள். முருகேசன் மாமா. "எங்க வந்துட்டிருக்கே..." கேட்டார். சொன்னாள். பஸ் நிலையத்தில் காத்திருப்பதாகச் சொல்லி முடித்துக்கொண்டார். வளவளவென்று போனில் அவர் பேசுவதில்லை.

வீட்டில் எல்லோரையும் பார்க்கப் போகிறோம் என்னும் ஆவல் மேலோங்கியது. கலைச்செல்வன் வருகிறான் என்பது முக்கியமாகப் பட்டது. அண்ணியையும், யாழினியையும் அழைத்து வருவதாகச் சொல்லியிருந்தான். நான்கைந்து வருஷங்களுக்குப் பிறகு அண்ணன் இந்த ஊருக்கு வரப் போகிறான். மற்றபடி இன்று இரவு இவளுக்கும் நரேனுக்கும் நடக்க இருக்கும் நிச்சயதார்த்தம் குறித்து சந்தோஷமோ, படபடப்போ பெரிதாய் இல்லை.

சென்ற வாரம் விஷயத்தைச் சொன்னபோது “வாவ்… “ என்று பூங்குழலியை கட்டிப் பிடித்து உற்சாகமானாள் சோபியா. ”கேமுக்குள்ள எண்டர் ஆகுற…” என்று சுவாரசியம் காட்டினாள்.

”அப்ப கல்யாணம் பண்ணிக்கலாமா, குழந்தை பெத்துக்கலாமா?” கண்ணடித்தாள் பூங்குழலி.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என சோபியாவுக்கு புரிந்தது. சிரித்தாள். “ஆல் இன் த கேம்..” என்று சொல்லி விட்டு இவளது கண்களை சிறிது உற்றுப் பார்த்தாள். செல்லமாய் இவளது கன்னங்களை தட்டி விட்டு அங்கிருந்து அகன்றாள்.

சோபியாவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததையொட்டி அவளது வீட்டிற்கு ஆபிஸ் முடிந்து ஒருநாள் சாயங்காலம் பூங்குழலி சென்றிருந்தாள்.

“வாங்க, வாங்க” உற்சாகமாக வரவேற்றாலும் அந்த வீட்டில் ஒரு இறுக்கம் இருந்ததை, பேசிக்கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் உணர முடிந்தது. இவளிடம் காட்டிய முகங்களுக்கும், சோபியாவும் விக்னேஷும் ஒருவருக்கொருவர் காட்டிக்கொண்ட முகங்களுக்கும் வித்தியாசம் அப்பட்டமய் தெரிந்தது. அழுத சோபை கலையாமல் இருந்த மூத்த பையனைத் தூக்கி வைத்து முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். முக்கிய எம்.என்.சியில் பிராஜக்ட் லீடராயிருந்தான். இருவரும் அவ்வளவு பொருத்தமாய் தோன்றுவார்கள். வேளச்சேரியில் ஒரு வில்லா வாங்கி சகல வசதிகளோடு இருந்தார்கள்.

இரண்டாவது குழந்தையும் ஆண் குழந்தைதான். படுக்கையில் கை காலை ஆட்டிக்கொண்டிருந்தது. “துருதுருன்னு இருக்கு” அருகில் சென்று சொல்லி முடிப்பதற்குள், “ஆமா ரொம்பத் துருதுருன்னுதான் இருக்கு” சோபியா அங்கலாய்த்துக் கொண்டு காபி கொண்டு வந்தாள்.

“குழந்தை அப்படி இருக்குறது நல்லதுதான்” சூழ்நிலையை இயல்பாக்க முயன்றாள் பூங்குழலி. பெரும் கேவலுடன் சோபியா சமையலறைக்குள் விரைந்தாள் . விக்னேஷ் அவன் மனைவி போன திசையை கடுப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான். என்ன பேசுவது என்று தெரியாமல் பூங்குழலி உட்கார்ந்திருந்தாள். சமையலறைப் பக்கம் செல்வதற்கு மெல்ல எழுந்தாள்.

விக்னேஷ் உடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான். “வேற ஒண்ணும் இல்ல, மூத்தவன் சஞ்சய் கொஞ்ச நேரமா அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்திருக்கான். அவனோடு மல்லுக்கட்டிட்டு இருந்திருக்கா அவ. உள்ளே இந்த குழந்தை அழ ஆரம்பிச்சிருக்கு. சஞ்சய விட்டுட்டு குழந்தைக்கு பால் கொடுக்கப் போயிருக்கா. ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தவன் அதுக்குள்ள அந்த நாற்காலில ஏறிக் கீழே விழுந்து கூப்பாடு போட்டிருக்கான். அழுத கைக்குழந்தைய அப்படியே பெட்ல போட்டுட்டுப் போய் கீழே விழுந்தவனத் தூக்கி சமாதானம் பண்ணியிருக்கா. கரெக்டா அப்பத்தான் நா ஆபிஸ்ல இருந்து வந்தேன். மொத்த எரிச்சலையும் ஏங்கிட்ட காட்டுறா”

“பாவம் அவ என்ன செய்வா. அப்படித்தாம் இருப்பாங்க. நீங்கதான் ஒத்தாசையும், நம்பிக்கையாவும் இருக்கணும்” என்றாள் பூங்குழலி.

“எம்மேல கோபப்படட்டும். பெறந்த குழந்தை என்ன செய்யும். சனியன் அது இதுன்னு வார்த்தைகளைக் கொட்டுறா..”

“அந்தச் சனியனுக்கு என்ன அர்த்தம் விக்னேஷ். குழந்த மேல வெறுப்புன்னா நினைக்கிறீங்க? அவங்க கஷ்டம், இயலாமையை காட்டுறாங்க. அதுக்குப் போய் அப்படியேவா அர்த்தம் பார்ப்பீங்க”

சமையலறைக்குள்ளிருந்து பாய்ந்து வந்த சோபியா, “இதுக்குத்தான் நா முன்னமே சொன்னேன், இன்னொரு குழந்த வேணாம்னு. கேட்டாரா இவர். நாந்தான கஷ்டப்படுறேன்.” பொரிந்தவள் “இந்த ரெண்டு பேரையும் வளத்து ஆளாக்குறதுக்குள்ள இன்னும் என்ன பாடுல்லாம் படப் போறேனோ” அழ ஆரம்பித்தாள்.

“இவ மட்டுந்தா உலகத்துல குழந்தையப் பெத்து வளக்குறாளாக்கும். ஊர்ல நாட்டுல யாருமே பெத்துக்கலயா. எங்க அம்மாவுக்கு நாங்க நாலு பேரு. இப்படித்தான் அழுதாங்களா?” விக்னேஷ் இரைந்தான்.

“என்ன விக்னேஷ் இது..!” என்று கோபப்பட்டாள் பூங்குழலி. “ஒரு குழந்தைன்னா சும்மாயில்ல. அதக் கவனிக்குறதும் சாதாரணம் இல்ல. புரிஞ்சுக்குங்க” வேகமாகவேச் சொன்னாள். எதோ சொல்ல வந்தவனை நிறுத்தி, “அப்புறமா பேசலாம். மொதல்ல சோபியாவை சமாதானப்படுத்துங்க. தைரியம் கொடுங்க” என்றாள். அமைதியாக இருந்தான் அவன்.

அதற்கு மேல் இருக்க முடியாமல் விடைபெற்ற போது, “பூங்கி! நீ கல்யாணமே பண்ணிக்காத. பண்ணிக்கிட்டாலும் குழந்தயேப் பெத்துக்காத” என்றாள் சோபியா.

இப்போது “ஆல் இன் த கேம்” என்கிறாள். அதைச் சொல்லும்போது சோபியா சிரித்த மாதிரியும் இருந்தது. எதையோ இழந்த மாதிரியும் தெரிந்தது.

அவளும் அலையரசனும்தான் ஆபிஸில் பூங்குழலியிடம் நல்ல நட்போடு இருந்தார்கள். அவர்கள் வேறு டீமில் இருந்தாலும் இவள் நம்பிக்கையோடு பேசுவது அவர்களிடம் மட்டும்தான். ஆபிஸில் மற்றவர்களிடம் திருமணம் குறித்து உடனடியாக எதுவும் சொல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்கள்.

“இப்பத்தான் அசிஸ்டெண்ட் பிராஜக்ட் எஞ்சீனியராகியிருக்கே. அந்த கடுவாப் பயல் மேனேஜருக்கும் உன் மேல் நல்ல ஒபினியன் இருக்கு. போன வாரம் அனுப்பிய அப்ரைசலில் நல்லா எழுதியிருக்கான்னு சொன்னாங்க. கல்யாணம்னா வேற மாதிரி பார்ப்பான். கல்யாணத்துக்கு லீவு, அப்புறம் மெட்டர்னிட்டி லீவு எல்லாம் கொடுக்கணும்னு கத்துவான். சீக்கிரமே வீட்டுக்குப் போகணும்னு நினைப்பு வரும்னு எரிச்சலடைவான்.” அலையரசன் அக்கறையோடு சொன்னான்.

“பயப்பட வேண்டாம். மெல்லச் சொல்லிக் கொள்ளலாம். அவங்களால தவிர்க்க முடியாதபடி டேலண்ட் உன்னிடம் இருக்கிறது. இம்ப்ரஸ் செய்யும் ஒரு பர்சனாலிட்டியாக இருக்கே. வீட்டிலயிருந்து பிராஜக்ட் ஒர்க்கை முடிப்பதற்கு ஏத்த மாதிரி பிராஸஸை கேட்டுக் கொள்ளலாம். இப்ப அனுமதிக்கிறாங்க.” நம்பிக்கை தந்தாள் சோபியா.

அலையரசனுக்கும் இவளது ஊர்தான். ஹைஸ்கூலில் இவளுக்கு இரண்டு வருஷம் சீனியர். அப்போது எல்லாம் பழக்கமில்லை. தெரியும். அவ்வளவுதான். டிரெய்னியாக இங்கு சேர்ந்த மூன்று மாதம் கழித்து கொடுக்கப்பட்ட பிராஸஸில் உதவி செய்ய வந்தான். அப்போதுதான் இங்கு வேலை பார்க்கிறான் என்பதே தெரிந்தது. ஊர், ஸ்கூல் குறித்து பேச ஆரம்பித்து நெருக்கமானார்கள். கிண்டல் செய்வான். உரிமையெடுத்து அவனாகவே முன்வந்து உதவிகள் செய்வான். லீவில் ஊருக்கு சேர்ந்தே சென்றிருக்கிறார்கள். வந்திருக்கிறார்கள்.

சென்ற வருடம் வீட்டுக்குப் போயிருக்கும் போது, இவளுக்கு பேன் பார்த்துக்கொண்டே, அலையரசனின் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டதாகவும், விசாரித்துவிட்டு அவனோடு பிறந்தது நான்கு பேர், பெரிய குடும்பம், அதனால் வேண்டாம் என பாட்டி சொல்லிவிட்டதாகவும் அம்மா சொன்னாள். “அப்படியா, ஏங்கிட்ட அலை சொல்லவேயில்லயே...” என்று மொபைலில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள் இவள். தலைமுடிக்குள் சிறிது நேரம் அம்மாவின் விரல்கள் அலையாமல் இருந்தன.

அந்தமுறை சென்னைக்குத் திரும்பும் போது அலையரசன் அவளோடு சகஜமாக பேசவில்லை. இவளாக எதாவது சொல்வாள் என எதிர்பார்த்தது போலிருந்தது. இவள் எப்போதும் போல புன்னகையுடன் பழகினாள். எதையும் காட்டிக் கொள்ளவில்லை. தொடர்ந்து சில நாட்கள் அவஸ்தைக்குப் பிறகு அவனும் பழையபடி ஆனான்.

"மேடையில் அவனோடு ஒன்றாக நிற்கும்போது ஒருவருக்கொருவர் அர்த்தமில்லாமல் எதாவது சில வார்த்தைகள் பேசுவீர்கள். லேசாய் சிரித்து கைக்குட்டையால் முகம் துடைப்பீர்கள். அதை நாங்கள் பார்க்க முடியவில்லை என்பதுதான் வருத்தம். இருக்கட்டும். எல்லாவற்றையும் கல்யாணத்தின் போது சேர்த்து வைத்து தாளிக்கிறோம்" என்றான் நேற்று ஆபிஸ் விட்டுப் புறப்படும்போது அலையரசன்.

"போ, சுமார் மூஞ்சி குமாரு" கலாய்த்தாள். நரேனும் தானும் மேடையில் நிற்கும்போது அப்படி என்ன பேசிக்கொள்வோம் என நினைத்துப் பார்த்தாள். ஒன்றும் தோன்றவில்லை.

மொத்தக் குடும்பத்திற்கும் இந்தக் கல்யாணம் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. கல்லூரி முடித்து சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிய ஆரம்பித்ததிலிருந்து, இவளது அம்மா சித்ராவுக்கும், பாட்டி பத்மாவதிக்கும் புத்தியெல்லாம் இவளது கல்யாணம் பற்றித்தான். சித்ராவின் அப்பா பூசைப்பழம் மளிகைக்கடையில் உட்கார்ந்து ஊர் உலகத்தில் விசாரிக்க ஆரம்பித்து விட்டார். தாய் மாமன் முருகேசன் மட்டும் இந்த விஷயத்தில் அவ்வளவாய் பட்டும் படாமல் இருந்தார்.

"வேலைக்குச் சேந்து ஒரு வருஷங்கூட ஆகல. கொஞ்சம் ஸ்டெடியாகிக் கிடறனே.  இரண்டு வருஷம் கழிச்சுப் பாக்கலாமே." எனச் சொல்லிப் பார்த்தாள்.

"இப்போதே பார்க்க ஆரம்பித்தால்தான் சரியாய் இருக்கும்" என நிலையாய் அம்மா, பாட்டி, தாத்தா மூவரும் நின்றார்கள். ஜாதகங்களின் நகல்களை கொடுத்துக்கொண்டும், வாங்கிக் கொண்டும், பொருத்தம் பார்த்துக்கொண்டும் இருந்தார்கள். அண்ணன், தம்பி, தங்கைகள் என நிறைந்திருக்கும் பெரிய குடும்பங்களை நிராகரித்து, 'இவள் குணத்துக்கு சரிப்பட்டு வராது. அனுசரித்துப் போக மாட்டாள். ஒருத்தர் ரெண்டு பேராய் இருக்கும் சின்னக் குடும்பம்தான் லாயக்கு' என ஒரு கணக்குச் சொன்னார்கள். புத்திசாலி, திறமைசாலி, பிரியமான பொண்ணு என வாய் நிறையச் சொன்னாலும், திமிர் பிடித்தவள் என்றும், அடங்கிப் போக மாட்டாள் என்றும் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

இவள் அப்பா ரவிச்சந்திரன் உயிரோடு இருந்திருந்தால், தங்களுக்கு ஏன் இவ்வளவு சிரமம் என தனிமையில் புலம்பிக்கொண்டார்கள். இந்தக் குடும்பத்திற்கும் ஜாதிக்கும் சம்பந்தமில்லாமல் சரண்யாவை கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டதாய் அண்ணன் கலைச்செல்வனை சபித்தார்கள்.

ஒவ்வொரு தடவை ஊருக்கு வரும்போதும், போகும்போதும் சொல்லப்படும் ஜாதகக் கதைகளும், சம்பந்தமில்லாத குடும்பங்களின் விபரங்களும் வெறுப்பேற்றுவதாய் இருக்கும். அதைக் காட்டிக் கொள்ளாமல் பூசைப்பழத்திடம், "தாத்தா, இன்னும் நயம் மாப்பிள்ளை கிடைக்கலயா?" சொல்லி சிரிப்பாள்.

'இந்தப் பொண்ணு மனசுல என்ன இருக்கு' யோசனை வந்தாலும் அவர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி இப்படி என்று மூன்று வருடங்களுக்கு மேல் ஓடிவிட்டன. கடைசியில் நரேன் அமைந்திருக்கிறான். 

பிளஸ் டூ வரை படித்த மெட்ரிகுலேஷன் பள்ளி வந்து கடந்தது. ஆசையோடும், ஏக்கத்தோடும் பார்த்தாள். விபத்தில் அப்பா இறந்த பிறகு, அம்மாவோடு ஊருக்கு வந்து ஒன்பதாம் வகுப்பிலிருந்து படித்த நான்கு வருடங்களும் இங்குதான். இளமையின் ஆரம்பத்து ரகசியங்கள் ஏற்படுத்திய குறுகுறுப்போடும், "உன் படிப்புத்தான் உனக்குத் துணை" என சதா நேரமும் ஒலிக்கும் அம்மாவின் எச்சரிக்கையோடும் வாழ்ந்த நாட்கள். வரிசையாய் நின்ற அசோகா மரங்கள், கொஞ்சம் தள்ளி வேப்ப மரங்களுக்கும் சரக்கொன்றை மரங்களுக்கும் நடுவில் விரிந்திருந்த மைதானம், அதற்கு அப்பால் இருந்த கட்டிடம் எல்லாம் நினைவுகளால் நிறைந்திருந்தன. சைக்கிளை நிறுத்தும் இடம், ப்ளஸ் டூவில் அவள் படித்த வகுப்பறையின் ஜன்னல், உட்கார்ந்து சாப்பிடுகிற மரத்தடி, எப்போதும் உதிரப் போக்கு வாடையடிக்கும் கழிப்பறை எல்லாம் பின் சென்று கொண்டு இருந்தன. எந்த இடத்தைப் பார்த்தாலும் அதிலிருந்து காலம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது.

பள்ளியின் கடைசி நாளில் பிரகாஷ் தவிப்போடும், பதற்றத்தோடும் கம்பி வேலிக்கருகில் செல்லும் ஒற்றையடிப் பாதையில் இந்த இடத்தில் வைத்துத்தான் 'ஐ லவ் யூ' என பெரிதாக எழுதிய காகிதத்தைக் கொடுத்து வேகமாக சைக்கிளில் சென்றுவிட்டான். அவன் தந்த காகிதத்தை படபடப்போடும், ஆசையோடும் எத்தனை முறை வீட்டில் யாருக்கும் தெரியாமல் இவள் படித்திருப்பாள் என்பதைச் சொல்ல முடியாது. கண்ணாடியில் தன்னைப் பார்த்து பார்த்து சிலிர்த்துக்கொண்டாள். அதே நேரம் தன்னைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். மார்க்‌ஷீட் வாங்குவதற்கு வந்தபோது அவனைப் பார்த்தாள். எதையோ இழந்தவனைப் போல இவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

அவன் கோயம்புத்தூரில் பி.இ படித்துக்கொண்டு இருக்கிறான் என கேள்விப்பட்டாள். நான்காமாண்டு படிக்கிறபோது ப்ளேஸ்மெண்ட் ஆகி, சென்னையில் இவள் வேலைக்குச் சேர்ந்த பிறகு ஒருநாள் ஃபேஸ்புக் மெஸேஜில் வந்து “மேடம் பி.ஜி, ஹவ் ஆர் யூ” கேட்டிருந்தான். சந்தோஷமாக இருந்தது. மீசை, டிரிம் செய்த லேசான தாடியோடு ஆளே மாறியிருந்தான். கண்கள் ஊடுருவிப் பார்த்தன.

அவ்வப்போது சாட் செய்து கொள்வார்கள். படித்து முடித்தும் அவனுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை , சென்னையில் தாம்பரம் அருகே வீடு எடுத்து நான்கைந்து நண்பர்களோடு தங்கியிருக்கிறான், தேவைப்படும் கோர்ஸ்களை படித்துக்கொண்டு வேலை தேடுகிறான் என்பதையெல்லாம் தெரிந்து கொண்டாள். ஒரு சனிக்கிழமை மாலையில் இவளும் ஹாஸ்டல் ரூம் மேட் ஸ்ரீஜாவும் டி.நகரில் ஷாப்பிங் முடித்து விட்டுத் திரும்பும்போது எதிரே பாதையில் பிரகாஷையும் அவனது இரண்டு நண்பர்களையும் பார்த்தார்கள். ஆச்சரியமடைந்து டீ குடிக்க அழைத்தான். ஜாலியாய் இருந்தான். அவனது நண்பர்களை கலாய்த்துக்கொண்டு, ஸ்ரீஜாவிடம் கவிதைகளை பரிமாறிக்கொண்டு, இவளிடம் பள்ளியின் ஞாபகங்களை வரவழைத்துக்கொண்டு இருந்தான். இன்னொரு டீ குடிக்க வைத்தான். இரண்டு மணி நேரம் போனது தெரியவில்லை.

விடை பெற்றுக் கிளம்பும் போது, “என்ன இருந்தாலும், படிக்கும்போது பி.ஜியிடம் இருந்த சார்மிங் இப்போ மிஸ்ஸிங்” சொல்லி சிரித்தான். இரவில் சாட்டிங்கில் வந்தவன், அன்றைய மாலை மிகுந்த சந்தோஷமாக இருந்தது என்றான். இவளும் ஆமாம் என்றாள். தொடர்ந்து அரட்டையடித்தவன், “அந்தக் காகிதத்தை எப்போது கிழித்துப் போட்டாய்?” என்று கேட்டு இரண்டு ஸ்மைலி போட்டிருந்தான். பதில் சொல்லாமல் இவளும் இரண்டு ஸ்மைலியோடு நிறுத்தி கொண்டாள்.

பிரகாஷின் ஞாபகம் ஏன் இப்போது வருகிறது எனத் தோன்றியது.

(தொடரும்) 
மற்ற அத்தியாயங்களைப் படிக்க க்ளிக்குங்கள்!

கருத்துகள்

2 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!