ஜெயலலிதாவுக்கு நன்றி!

CPM VNR 01

உற்சாகமான நாள் இது.

சி.பி.எம் கட்சியின் விருதுநகர் வேட்பாளரை அறிமுகப்படுத்தி, ஊழியர் கூட்டம் இன்று விருதுநகரில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அருமைத் தோழர்.சாமுவேல்ராஜ் தான் வேட்பாளர். அறிவொளி இயக்கக் காலத்தில் களப்பணியாற்றியதிலிருந்து,  இன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளராய் மகத்தான காரியங்கள் ஆற்றிக்கொண்டு இருப்பது வரை  தோழர்.சாமுவேல்ராஜை இருபத்தாறு, இருபத்தேழு வருடங்களாகத் தெரியும். பத்து மணிக்கு என சொல்லியிருந்தார்கள். சாவகாசமாய் பத்தரை மணிக்கு மேல்தான் சாத்தூரிலிருந்து நானும் தோழர்களும்  சென்றோம். வி.வி.எஸ் திருமண மண்டபத்திற்குள் நுழையமுடியவில்லை. அப்படியொரு கூட்டம். சந்தோஷத்தோடும், ஆர்வத்தோடும் சுவரையொட்டி ஒரு ஒரமாய் போய் நின்றேன்.

CPM VNR 02

மேடையில் சி.பி.எம் மற்றும் சி.பி.ஐ கட்சியின் மாவட்டத் தலைவர்களும், மாநிலத் தலைவர்களும் அமர்ந்திருந்தனர்.  தோழர்கள் எஸ்.ஏ.பெருமாள், எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன், வேட்பாளர் சாமுவேல்ராஜ் அங்கேயிருந்து பார்த்து புன்னகைத்து கையசைத்தனர்.  விருதுநகர்த் தோழர் ஒருவர், “ஆயிரம் சேருக்குத்தான் சொல்லியிருந்தோம். இங்கே பார்த்தால் இரண்டாயிரம் பேருக்கும் மேல்  வந்து இருக்கிறார்கள்” என பெருமிதம் கொண்டிருந்தார். ஒருவித வேகத்தோடும், அளப்பரிய நம்பிக்கையோடும் பொங்கி நின்ற அந்தக் கூட்டத்தையேச் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தலைவர்கள் பேசிய அரசியல் நிலைமைகளின் ஊடே ”இது குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும் வந்த கூட்டமல்ல, அவரவர் கைக்காசு போட்டு வந்த கூட்டம்”, “இடதுசாரிகள் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம்”,  “எந்த அழுக்கும், கறையும் நம்மை ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை”,  “நம்மிடம் பணம் இல்லை. ஆனால் நேர்மையையும், உண்மையும், தியாகமும் இருக்கின்றன”, “நம்மைவிட மக்களை சந்தித்து ஒட்டுக் கேட்க இங்கே யாருக்கு உரிமையும், தகுதியும் இருக்கிறது?”, “மதவெறி, ஜாதிவெறி, அதிகாரவெறி அனைத்தும் எதிராக நாம் போராடுகிறோம், வெற்றி பெறுவோம்” என்னும் வார்த்தைகள் ஒலித்தபோதெல்லாம்  அதிர்ந்து போகும்படி ஆரவாரங்கள் எழுந்தன. “இப்படியொரு எழுச்சிக்கு காரணமாயிருந்த ஜெயலலிதாவுக்கு முதலில் நாம் நன்றி சொல்வோம்” என ஒரு தலைவர் சொன்னபோது கைதட்டல்கள் அடங்க வெகு நேரமானது!

“இன்னார்  ஜெயிக்க வேண்டும் என்று மக்கள் ஒட்டுப் போடுவதில்லை. அவர் தோற்க வேண்டும் என்றுதான் ஒட்டுப் போடுகிறார்கள். அப்படிப் பார்த்தால் இங்கு நம்மைத் தவிர அனைவரும் தோற்க வேண்டியவர்கள். மக்களை ஏமாற்றியவர்கள்” என தோழர். எஸ்.ஏ.பெருமாள் பேசியதும், “விருதுநகர் மாவட்டத்தில் அறிவொளி இயக்க காலத்திலிருந்து நாம் மக்களை புத்தகங்களோடுதான் அணுகி இருக்கிறோம். ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் இந்த மாவட்டத்தில் வீடு வீடாய் சென்று இப்போதும் நாம் புத்தகங்கள் விற்றிருக்கிறோம். ஒரு அறிவார்ந்த சமூகத்தை கட்டி எழுப்ப நாம் முனைந்திருக்கிறோம். நாம் தோற்க மாட்டோம்” என எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசியதும் கவனத்துக்குரியவையாய் இருந்தன.

CPM VNR 03

எண்பதுகளில் நம்பிக்கையோடு அலைந்த காலங்களில் பார்த்த முகங்களையெல்லாம் இன்று  அந்தக் கூட்டத்தில் பார்த்தேன்.  அவர்கள் எங்கே போயிருந்தார்கள்?, இவ்வளவு நாளும் என்ன செய்துகொண்டு இருந்தார்கள்?,  இன்று எப்படி இங்கே வந்தார்கள்? என்னும் கேள்விகள் எழுந்துகொண்டு இருந்தன . ஒரு தோழர் என்னைப் பார்த்து, “பார்த்து நாளாச்சு” என்றார்.  அந்த முகம் புதுசாய் இருந்தது.  காய்ந்த பூமியில் ஒரு மழைக்குத்  துளிர்த்த பசுமையாய் தென்பட்டது. 

கூட்டம் முடியவும் அருமைத் தோழர் தாமஸ் பெருங்குரலெடுத்து கோஷம் எழுப்பினார்.

“வெல்லட்டும் வெல்லட்டும்
நமது ஒற்றுமை வெல்லட்டும்
செல்லட்டும் செல்லட்டும்
இடதுசாரிப் பாதையில்
இந்திய தேசம் செல்லட்டும்”

மொத்தக் கூட்டமும் அந்தப் பிரதேசமே அதிரும்படியாய் திருப்பிச் சொன்னது. சிலிர்த்தது.

கருத்துகள்

6 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
 1. ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். பொதுவுடமைவாதிகள் வேற வழியே இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். முதுகெழும்பு இல்லாமல் இருந்தவர்கள் இப்போ கொஞ்சம் இருக்குன்னு காட்ட வேண்டிய சூழலுக்கு மற்றவர்களால் தள்ளப்பட்டுள்ளார்கள்.

  பதிலளிநீக்கு
 2. “தோழர்களே! தோழர்களே! தூக்கம் நமக்கிலை வாருங்கள்
  தோளை நிமிர்த்தி வாளைச் சுழற்றி தொய்வில்லா நடை போடுங்கள்!
  பாடுபடும் திருக்கரங்களை பாழும் விலங்கா பிணைத்திடும்?
  பற்றி எரித்திடும் பார்வைகளை பனியின் திரையா மறைத்திடும்?
  அச்சமில்லாத நெஞ்சங்கள் ஆடிப்புனலுக்கு அஞ்சிடுமா?
  துச்சம் உயிரெனும் கொள்கையிலே தூக்கிய கரங்கள் கீழ்வருமா?” - கிருஷ்ணசாமியின் கம்பீரக் குரலில் கேட்டு நாளாச்சு மாது... இப்ப கேக்குது!

  பதிலளிநீக்கு
 3. நீண்ட நாட்களாக வலைத்தளம் பக்கமே வராமலிருந்த மாதவராஜை மீண்டும் எழுத வைத்த ஜெயலலிதாவுக்கு நன்றி !!

  பதிலளிநீக்கு
 4. வெல்லட்டும் வெல்லட்டும்
  இடதுசாரிப் பாதையில்
  இந்திய தேசம் செல்லட்டும்”

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!