‘மிருக விதூஷகம்’ ஒத்திகை!

drama 3

 

சென்ற வாரத்தில் ஒருநாள் கோவில்பட்டியிலிருந்து முருகபூபதி போன் செய்து, “வர்ற சனிக்கிழம திருநெல்வேலில மிருகவிதூஷகம் நாடகம் போடுறோம். பார்க்க வந்துருங்க.” என்றார். சனிக்கிழமையன்று முக்கியமான தொழிற்சங்க கருத்தரங்கம் விருதுநகரில் இருந்தது. வரமுடியாத நிலைமையை தெரிவித்தேன். அடுத்த நாள், வியாழக்கிழமை என்று நினைக்கிறேன், காலையில் போன் செய்தார். “கோவில்பட்டில எங்க வீட்டுல வச்சு ஒத்திகை நடத்துறோம். சாயங்காலம் வரலாமா. நாடகத்தை முழுசாப் பார்க்கலாம்”  என்றார்.  சரியென்று, பிரியா கார்த்தியிடம் பேசினேன். இருவரும் செல்வது என்றானது.

 

தமிழ்ச்செல்வன், கோணங்கி, முருகபூபதி, அவர்கள் தந்தை சண்முகம் என எழுத்தாளர்களும் கலைஞர்களும் வளர்ந்த  அந்த வீட்டை அடைந்தபோது, அங்குமிங்குமாய் முற்றத்தில் நிறைய பேர் இருந்தார்கள். முறம், கயிறுகள், மிருக முகமூடிகள், இசைக்கருவிகள், மிருகத்தலைகள் பொருத்திய முண்டு முண்டாய் திருகிய கழிகள் ஒவ்வொரு மூலையிலும் ஒழுங்கற்றுக் கிடந்தன. எதோ காட்சியை விளக்கிக்கொண்டு இருந்த முருகபூபதி, ஆரவாரமற்ற, ஆனால் முகமே மலர்கிற சிரிப்போடு வரவேற்றார். சில வார்த்தைகள் பேசிவிட்டு நானும் கார்த்தியும் ஒதுங்கி நின்றோம். பார்வையாளர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.

drama 6

நாடகத்தின் ஒரு காட்சியில் திருத்தங்களைப் பேசிவிட்டு, முருகபூபதி வந்தமர்ந்தார். முறத்தின் இடுக்குகளில் ரிப்பன்கள் வண்ண வண்ணமாய்த் தொங்க, தலையில் கவிழ்த்து ஒன்று போல பின்னிருந்து நடந்து வர, தொம் தொம்மென்று ஒசையெழ சட்டென்று வேறொரு உலகம் அங்கே உருவானது. முறங்களிலிருந்து தொங்கிய ரிப்பன்கள் தொன்மையின் அசைவுகளை காட்சிப்படுத்தியது. முன்வந்து உட்கார்ந்து கொண்டு, பார்வையற்றவர்களாய் பாவனை செய்ய, ஓசையடங்கி, மெல்லிய விசும்பலும் பெரும் கரைதலுமாய் ஒரு குரலை முருகபூபதி முகமெல்லாம் சுருக்கி, கண்கள் மூடி இசைக்கிறார். வசமிழந்து நமக்குள்ளிருந்தும் விசும்பல்கள் எழுவது போல இருக்கிறது. ஒவ்வொரு முகத்திலும் வெவ்வெறான குறிப்புகள். உடலின் மொழியும் தேம்புவதாய் இருக்கிறது. வெறுமை அடர்ந்தது எங்கும்.

drama 12

முருகபூபதி

 

காட்சி சரியானதும், முதலிலிருந்து நாடகம் போட ஆரம்பித்தார்கள். அருகில் வந்து அமரச் சொன்னார் முருகபூபதி. இருக்கட்டும் என்று சைகையில் சொல்லி கொஞ்சம் தள்ளி ஒரு மரத்தடியில் நின்று கொண்டோம். சாயங்காலத்திற்கென்ற ஒரு மெல்லிய சோகம் கவிய, காட்சிகளில் ஒன்றிப்போனோம். இழந்தவைகளை நினைவுகளில் மீட்டியபடி விதூஷகர்கள் அங்கே நடமாட ஆரம்பித்தார்கள். தானியத்தைத் தேடினான் ஒருவன். பறவைகளைத் தேடினான் ஒருவன். மரங்களைத் தேடினான் ஒருவன். நிலங்களைத் தேடினான் ஒருவன். அடிவயிறுகளிலிருந்து வெப்பமான கவிதைகளாய் காலங்கள் வெளிப்பட, அனாதரவான வெளி அங்கே காட்சிகளாயின.

 

0011

drama 4

drama 11

drama 9

 

முன்னும், பின்னுமாய் நகரும் நிகழ்வுகளில், நவீனம் எவ்வளவு எவ்வளவு அழித்து வந்திருக்கிறது என்பதை தசைகளும், குரல்களும் முறுக்கேறி விதூஷகர்கள் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். பனைமரங்களைத் தேடிய கணத்தில் ஈழத்தின் சோகம் நம்மையறியாமல் நமக்குள் ஊடுருவுகிறது. காடுகளைப் பற்றிய குறிப்புகளில் பழங்குடி மக்களின் வதையை உணர முடிகிறது. செய்திகளைத் தின்றும், செல்போன்களில் பேச்சை இழந்தும் வருகிற நவீன மனிதர்களைப் பார்த்ததும் பெருஞ்சிரிப்பு நமக்குள் எழுகிறது. விதூஷகர்களைப் பார்த்தால் துயரம் படிகிறது. இந்த முரணுக்குள் இருந்து நாடகம் பேசுபவை ஏராளம். பக்கத்தில் எங்கேயோ ஒரு வீட்டில் எதோ விசேஷம் போலிருக்கிறது. பெரும் சத்தமாய் ஸ்பீக்கரில் பாட்டுகள் ஒலிக்க, எங்கள் கவனங்கள் குலைக்கப்பட்டன. விதூஷகர்களை எதுவும் செய்ய முடியவில்லை. அவர்கள் பாட்டுக்கு மண்ணின் துகள்களில் இருந்து வந்துகொண்டே இருந்தார்கள். தெலுங்கு மகாகவி நக்னமுனியின் கவிதைகள் எனக்குள் நிழலாடின.

 

படிமங்களாய், உடலின் மொழியில் சொல்லப்படுபவைகளை இன்னும் ஊன்றிக் கவனிக்க வேண்டியிருந்தது. நாடகம் முடிந்த பிறகு, எல்லவற்றையும் அவர்கள் ஒதுங்க வைத்துக்கொண்டு இருந்தார்கள். முருகபூபதி என்னைப் பார்த்தார். சரியாக ஒன்றிப்போக விடாமல் சூழல் இருந்தாலும், பெரும் துயரத்தை உணர்ந்ததைச் சொன்னேன். வடிவமைக்கப்பட்ட வெளியில், ஓளியின் வண்ணத்தில் நாடகம் இன்னும் அடர்த்தியாகத் தெரியும் என்றார். அடுத்த மாதத்தில் நாகர்கோவில் அருகே தோவாளை என்னும் இடத்தில் நாடகம் நடத்த இருப்பதாகவும், அதற்கு கண்டிப்பாக வாருங்கள் எனவும் சொன்னார். விடைபெறும்போது கோணங்கி  மாடியில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். பார்த்ததும் உற்சாகமாய் வந்து கட்டிப் பிடித்துக்கொண்டார். கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் நேசமித்ரன் அவரோடு பேசியதாகச் சொன்னார். விடைபெறவும், விடைகொடுக்கவும் மனதில்லாமல் அங்கிருந்து திரும்பினோம். கார்த்தியின் பைக்கில் உட்கார்ந்தபோது, விதூஷகர்களைப் பார்த்தேன். சிரித்துக்கொண்டு  இருந்தார்கள்.

 

இரண்டுநாட்கள் கழித்து கார்த்தி போன் செய்தான். “அண்ணா, திருநெல்வேலி போய் நாடகம் முழுவதையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன்” என்றான். அதை இன்னும் பார்க்கவில்லை. பொங்கல் விடுமுறையில் பார்க்க வேண்டும். முருகபூபதி அனுமதித்தால், வலையேற்றலாம். பார்ப்போம்.

 

(இந்த நாடகத்தில் அற்புதமாக ஒரு பெண் நடித்திருந்தார். ஒத்திகை நடந்துகொண்டு இருக்கும்போது எல்லோருக்கும் காபி கொடுத்துக்கொண்டும் இருந்தார். அவர்தான் லிவிங்ஸ்மைல் வித்யா என அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.)

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. நல்ல அனுபவம் வாய்த்திருக்கிறது.. அப்படியே அந்த நாடகத்தையும் முடிந்தால் வலையேற்றுங்கள்.. இதுபோன்ற நாடகங்களை பார்க்க ஆவலாய் இருக்கிறேன். நன்றி..

    பதிலளிநீக்கு
  2. பகிர்விற்கு நன்றி மாது சார் ,
    முருக பூபதியோட "செம்மூதாய் " வாங்கி வச்சு பல மாசம் ஆகுது இன்னமும் என்னால் உள்ள நுழைய முடில :(

    பதிலளிநீக்கு
  3. உணர்ச்சி மிக்க தருணங்களை அழகுறப் பதிவு செய்திருக்கிறீர்கள் மாது அண்ணா. திரு. முருக பூபதி அவர்களிடம் அனுமதி பெற்று எங்களுக்காக அதை தயவுசெய்து வலையேற்றவும்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு மாதவராஜ்,

    இது தான் மாதவராஜாய் இருப்பதற்கான சந்தோஷங்கள். எவ்வளவு அற்புதமான தருணம் அது...

    முருகபூபதியின் நாடகங்கள் படித்திருக்கிறேன்... பார்க்க வாய்ப்பு கிட்டியதில்லை... நவீன நாடகங்கள் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கல்லூரி காலத்தோடு முடிந்து விட்டது. மதுரையில் நிஜ நாடக இயக்கத்தில் இருந்தவர்களோடு கொஞ்சம் இருந்த பழக்கத்தில் கிடைத்த வாய்ப்புகள் மாத்திரமே...

    நாடகத்திற்கான முன்னான ஒத்திகையும், மெனக்கெடலும் சரியாய் இருந்தால்... அது நம்மை பாடாய் படுத்திவிடும் இல்லையா மாதவராஜ்?

    இதுதான் மாதவராஜ் கொடுப்பினை... எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு வந்துடலாமான்னு தோனுது...

    ஆனாலும் பேசிக்கொண்டே இருக்க வாய்த்த எனக்கு... செயல்படுத்த வாய்க்காது என்பது உண்மை.

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  5. நல்ல கலைஞர்களை படைத்த அந்த வீட்டைப் பார்க்கணும் போலிருக்கு.

    youtube ல் ஏற்றினால் பலருக்கு பார்க்க வாய்ப்பு கிடைக்கும். நல்ல DVD யாக வெளியிட்டால் வாங்கிக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  6. ungaladhu karuthukkalukkum, aadharavirkum mariyaadhai vannam nandriym vanakkamum...

    "mirugavidhushagam" naadagathai valayil yetra solli vandhulla korikkai varaverkathakkadhu...
    eninum, naadagathai neril kandu adhan saarathai utkondu, adhodu vaalndhu rasippadhe unnadhamaai irukkum enbadhu engal kuluvin aasayum vendugolum...

    Varum march-8, trichy Bishop Heber kallooriyil nadai pera ulladhu- "mirugavidhushagam"... ungal aadharavin peril chennayilum nadatha muyarchipen...

    melum un karuthukkal, vimarsanangal, kelvigal, ivattrai ellam ennidam pesa neengal ennai thodarbu kollalaam..
    en tholai pesi en: 9994122398
    ssboopathy@gmail.com

    (kurippi: mel kaanum pagudhiyai eludhugayil, tamil vaarthaigalil type seiyya vaaipu illadhadhaal, englishile type seidhullen... nandri)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!