போங்கய்யா...நீங்களும் உங்க பத்திரிகை தர்மமும்!

wikilleaks solidarity விக்கிலீக்ஸ் வெளியிட்ட அந்த வீடியோக்களை கோடிக்கணக்கில் மக்கள் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். அமெரிக்காவுக்கு எதிரான ஆத்திரமும், அபிப்பிராயங்களும் பரவிக்கொண்டு இருக்கின்றன.

உலகமே துடிதுடித்துப் பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கிற அமெரிக்காவின் அந்த அராஜகங்கள் எதுவும் நமது அருமையான பத்திரிகைகளுக்கு முக்கியமாகத் தெரியவில்லை போலும். எதுவுமே நடக்காதது போல மலை விழுங்கி மகாதேவன்களாக, வேறு செய்திகளை வாசித்துக்கொண்டு இருக்கின்றன.

“ஆத்தூரில் மான் வேட்டை : 2 பேர் கைது”, “வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை தப்பியோடியது” போன்றவை கூட தினமலரின் முக்கியச் செய்திகள். இளவரசர் சார்லஸின் கார் விபத்து உலகச் செய்தியாகிறது. விஜயகுமார், அவரது மகள் விவாகரங்கள் உள்ளூர் செய்திகளாகின்றன. அதே வேலையில், “ஐரோப்பிய யூனியனுடன் பொருளாதார ஒத்துழைப்பு: மன்மோகன் சிங்” மற்றும் “நோபல் அமைதிப் பரிசு வழங்கும் விழா: இந்தியா உள்பட 46 நாடுகள் பங்கேற்பு” போன்ற செய்திகளைப் போட்டு தங்கள் பிறவிப்பயனை அடைந்து இருக்கின்றனர்.

தேடிப்பார்த்தால் விக்கிலீக்ஸ் பற்றிய செய்தியொன்றை தினகரன் கடைசிப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. "பேச்சு சுதந்திரம் பற்றி அந்த மனிதர் பேசிய பேச்சில் மயங்கினார் அந்த 27 வயதுப் பெண்” என்று ஆரம்பித்து விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச்சை ஒரு பெண் பித்தராக சித்தரித்து இருக்கிறது. இதுதான் அவர்களின் தரமும், தர்மமும் போலும்.

அமெரிக்காவின் மீது இந்த பத்திரிகை முதலாளிகளுக்குத்தான் எத்தனை விசுவாசமும், அடிமை மோகமும். ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா? ஊடக அரசியலின் சூட்சுமங்களும், சூழ்ச்சிகளும் பிடிபடுகிற இடம் இது.

ஆறுதலும், ஆதரவும் இணையவெளிதான். கருத்துரிமைக்காகவும், மனித உரிமைக்காகவும் அவர்களே குரல் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். மாற்று ஊடகமாகவும், மக்களின் ஊடகமாகவும் இந்த வலைப்பக்கங்கள் பரிணமிக்கட்டும்.

இன்று மகாகவி பாரதியின் பிறந்த நாள். அவரது எழுத்தில் இந்த வெகுஜனப் பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி.

மாறுபட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய்   போ போ போ!
சேறுபட்ட நாற்றமும் - தூறுஞ் சேர்
சிறியவீடு கட்டுவாய்   போ போ போ!

உண்மைகளைத் தயங்காமல், உலகுக்கு எடுத்து வைக்கும் இணையவெளிக்கும் ஒரு செய்தி மகாகவியிடம் இருக்கிறது.

தெளிவுபெற்ற மதியினாய்
சிறுமை கண்டு பொங்குவாய்  வா வா வா!
எளிமைகண்டு இரங்குவாய்
ஏறுபோல் நடையினாய் வா வா வா!

கருத்துகள்

16 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. சிறுமை கண்டு பொங்கினால் ஆட்டோவில் ஆட்கள் அனுப்பி கட்சி சார்ந்தவர்களையே முடிக்கும் ஆட்சிகள்.

    பதிலளிநீக்கு
  2. அந்தக் காணொளிகள் ஏற்கெனவே வெளிநாடுகளில் வெளியாகிவிட்டன.8 மாதங்களுக்கு முன்பே அதை பதிவர் கலையரசன் வெளியிட்டிருந்தார்.
    http://kalaiy.blogspot.com/2010/04/blog-post_06.html
    மற்றபடி சன், தினகரன் போன்றவை ஊடகங்கள் என்று யார் சொன்னது. அவை திமுக குடும்பத்தாரின் ஊதுகுழலகள்தான்.

    //ஆறுதலும், ஆதரவும் இணையவெளிதான்//
    மிகவும் சரி

    பதிலளிநீக்கு
  3. அன்பு மாதவராஜ்,


    விக்கிலீக்ஸ் பற்றிய செய்திகள்... அல் ஜசிராவில் வந்து கொண்டிருக்கிறது... தொடர்ந்து அடிக்கடி விவாதிக்கிறார்கள்...

    எது செய்தி... எது மக்களுக்கு போய்ச் சேர வேண்டும்... எது மாற்றங்களை கொண்டு வரும் என்ற படிப்பு அல்லது பாடங்கள், நெறிமுறைகள் நமது பாடத்திட்டங்களில் இல்லை...

    எத்தோஸ் என்கிற எந்த தர்மங்களும் இங்கு இல்லை... யாருக்கும் மாற்றங்கள் வேண்டாம்... மாதவராஜ்...

    இருப்பதை குறை சொல்லிக் கொண்டு இருப்பது தான் எல்லோருக்கும் பிடித்தமான வேலையாய், சேவையாய் கூட இருக்கிறது... அபத்தத்தின் உச்சம்... அமைதிக்கான நோபல் பரிசு... இதற்கு முந்தைய ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அமைதி பரிசுக்ளையும் அது கேலிக்குள்ளாக்கியிருக்கிறது...

    பாரதியாரின் பிறந்த நாள்... இன்று... எனக்கு பிடித்த பாரதியார் பாடல்களை இன்று முழுக்க பாடுவேன்... பிறர் வாட பலசெய்கை செய்து... என்ற பிரக்ஞை இல்லாதவர்கள், மாற்றங்கள் பற்றிய அச்சம் உள்ளவர்கள், அதன் நிகழ்வை முடிந்தவரை தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பார்கள்... இதில் பத்திரிக்கைகளும்... பெரும் பங்கு வகிக்கின்றன...

    அன்புடன்
    ராகவன்

    பதிலளிநீக்கு
  4. அன்பு மாதவ்

    நம்மூர் பத்திரிகைகளின் வெகுளித்தனம் அநீதிக்கு சாதகமான அவர்களது தருமம். சொல்ல வேண்டியத்தைச் சொல்லாததும், சொல்லத் தேவையற்றத்தைச் சொல்வதும் உள் நோக்கம் கொண்டது இல்லாமல் வேறென்ன. புதிய தாராளமயம் ஓசைப்படாமல் ஆற்றிவரும் நுட்பமான வேலைகளில் இதுவும் ஒன்று....

    அசாங்கே கைது குறித்து, ஹிந்து நாளேடு அற்புதமான தலையங்கம் ஒன்றை, 10 12 2010 தேதியன்று எழுதியிருக்கிறது. அதன் மீது எனது எதிர்வினையை இப்படி எழுதி அனுப்பி இருக்கிறேன்......
    (எனது கடிதத்தின் தமிழாக்கம்):

    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

    தகவல் சொல்லியை வீழ்த்துவது
    என்ற தலைப்பிலான உங்கள்
    தலையங்கம் விக்கிலிக்ஸ் நிறுவனர்
    ஜூலியன் அசாங்கே அவர்கள் கைது
    செய்யப்பட்டிருப்பது உள்
    நோக்கமுடையது, பழிவாங்கல்
    நடவடிக்கை அது,
    கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியது
    என்று நெற்றியடியாகச்
    சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

    சமூக, அரசியல், பொருளாதார
    மற்றும் இராணுவ சதி வேலைகள்
    பலவற்றை அம்பலப்படுத்தும்
    விக்கிலிக்ஸ் வெளிப்பாடுகளால்
    நெறியற்ற சக்திகள் நடுக்கம்
    கண்டிருப்பதை நம்மால் புரிந்து
    கொள்ள முடிகிறது. அசாங்கேயை
    பாலியல் விஷயங்கள் தொடர்பான
    போலியான புகார்களைச் சொல்லி
    சிறைப்படுத்தியிருக்கும் அவர்களது
    அருவருக்கத் தக்க அரசியல்
    அதிகாரத்தையும் தான்!

    ஏகாதிபத்திய புதிய தாராளமய
    சீமான்கள் எந்தக் கீழ்மையான
    செயல் செய்யவும் துணிவார்கள்
    என்பது வெட்ட வெளிச்சத்திற்கு
    வந்திருக்கிறது. உண்மைகளை
    சகித்துக் கொள்ள எந்தப்
    பொறுமையும் இன்றி கருத்துச்
    சுதந்திரத்தை இப்போது இத்தனை
    குரூரமாகக் காலில் போட்டு
    மிதிக்கும் இந்த சக்திகள் தான்
    எல்லாவகையிலும் சுதந்திரம்
    வேண்டும் என்று தங்களை
    சுதந்திரத்தின் காவலர்களாகச்
    சித்தரித்துக் கொண்டிருந்தன.


    ஜான் பெர்கின்சின் "ஒரு
    பொருளாதார அடியாளின் ஒப்புதல்
    வாக்குமூலம்" நூல் பன்னாட்டு
    மூலதனம் எப்படி வளரும்
    நாடுகளை புதிய காலனியாதிக்கத்தின்
    கீழ் கொண்டுவருகிறது என்பதை
    வெளிப்படுத்தியிருந்ததென்றால்,
    அசாங்கே
    அம்பலப்படுத்தியிருப்பவை இன்னும்
    கூடுதலான, ஆழமான,
    அபாயகரமான செய்திகளைச்
    சொல்கின்றன. ஆபத்தில்
    இருப்பவை, தேசங்களின்
    இறையாண்மையும், அவற்றின்
    அப்பாவிக் குடிமக்களும். உலகு
    தழுவிய அளவில், அசாங்கேயின்
    விடுதலைக்கான மக்கள் குரல்
    முழங்க வேண்டும்.

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  5. வருத்தமா இருக்கு.. ஊடகங்கள் தங்களுடைய பொறுப்புணர்ந்து செயல்படலைன்னா என்ன பண்றது..:-((

    பதிலளிநீக்கு
  6. உண்மை, காலையில் நான் வாசித்த இரண்டு செய்தித்தாள்களிலும் இந்த செய்தி துளிகூட இல்லை...

    பதிலளிநீக்கு
  7. பாஜக அடித்த கொள்ளை 50000 கோடி என்ற விசயத்தை டாடா எடுத்து சொல்லியும் எந்த பத்திரிகையும் அதை பற்றி எழுதவில்லை.. ஏன் .. இவர்களே நீதிபதியா???
    அது அவாள் தர்மமோ??

    பதிலளிநீக்கு
  8. தினகரன் விஷயம் நல்ல காமெடியாக இருந்தது :)

    பதிலளிநீக்கு
  9. உண்மையிலேயே இந்தியாவில் பத்திரிக்கை தர்மம் இருப்பின், இலங்கையில் இதுவரை நடந்த கொடுமைகளை போரன்று தான் கொண்டுவரவில்லை; உலகமே சானல்- 4 காணொளி மூலம் மனித உரிமை மீறல்களை தோலுரித்துக் காண்பிக்க நம் ஊடகங்கள் இன்னமும் வாய் மூடியாகவே இருக்கின்றன. குறைந்தபட்சம் தற்போதாவது உண்மையினை வெளியிடலாமே! அரசாங்கத்தினரின் மறைமுக நெருக்கடி இன்னமும் இருக்கின்றதா? அல்லது பொறுப்புணர்வு என்பது ஊடகங்களுக்கு பெயரளவில் தானா? முதலாளித்துவச்சிந்தனை அரசியற்கட்சிகளுக்குமட்டுமல்ல ஊடகங்களினுள்ளும் ஊடுருவியுள்ளது வேதனையானது. இணையம் என்பது பாமர மக்களுக்கு இன்னமும் பகல் கனவே. பொருளாதார அளவில் மட்டுமல்ல, புரிதல் உணர்வினிலும் கூட. ஆகையால் இயன்ற அளவில் நமது உரையாடலில் இவ்விஷயங்களில் மற்றவர்களிடம் பகிர்வதன் மூலம் அனைத்துத் தரப்பினர்க்கும் பரப்ப இயலும்.

    பதிலளிநீக்கு
  10. //ஓபாமாவின் வருகையை முன்பக்கத்தில் பிரசுரிக்க முடிந்த இந்த பூதகணங்களுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்ட வீடியோக்களையும், செய்திகளையும் பற்றி, எதாவது ஒரு மூலையிலாவது எழுதிவைக்க தெம்பு இருக்கிறதா?//

    நல்லா கேட்டீங்க சகோ. இனியாவது அந்த தெம்பு வரட்டும்!

    பதிலளிநீக்கு
  11. மேலே கூறிய இரண்டு பத்திரிகைகளையும் இன்னுமா நீங்கள் படிக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  12. நல்லா கேட்டீங்க... இனியாவது அந்த தெம்பு வரட்டும்!

    பதிலளிநீக்கு
  13. cs!
    :-))))


    உத்தம்!
    தெருவில் மக்கள் ஒன்றாக இறங்கினால் எல்லாம் சரியாகும்!

    தமிழ்வினை!
    //அந்தக் காணொளிகள் ஏற்கெனவே வெளிநாடுகளில் வெளியாகிவிட்டன//
    நேற்றுதான் பத்திரிகை நண்பர் ஒருவர் எனக்கு இந்தச் சுட்டியை அனுப்பி வைத்திருந்தார்.


    ராகவன்!
    பாரதி பிறந்தநாளை பாட்டு பாடிக் கொண்டாடினீர்களா? சந்தோஷம். இங்கு நமது தொலைக் காட்சிகள் வாயேத் திறக்கவில்லை. நேற்று ரஜினி பிறந்தாநாள். மாற்றி மாற்றி அவரது படங்கள்தாம். அவர் பற்றிய நிகழ்ச்சிகள்தாம். இதுதான் நம் தேசம். நாம்!

    கதிர்!
    வாங்க. மிக்க நன்றி.


    எஸ்.வி.வி!
    இதற்கு மேல் என்ன சொல்ல என் அருமைத் தோழா!


    கார்த்திகைப் பாண்டியன்!
    இப்படி அம்பலப்படுத்திக்கொண்டெ இருக்க வேண்டியதுதான்... :-)))


    க.பாலாசி!
    விக்கிலீக்ஸ் விஷயங்கள் எதுவுமே இவர்களுக்குத தெரியாது. அசாங்கே பெண்பித்தனென்பது மட்டும் தெரிகிறது. என்ன பார்வை இது!

    ssk!
    ஆமாங்க..... இங்கே ஊழல்கள் மாற்றி மாற்றி நடந்துகொண்டு இருக்கிறது. சுதந்திரதினத்தன்று இவைகளையும் அணிவகுப்பாய் காண்பிக்கலாமே!

    அசோக்!
    சீயஸாய் விஷய்ங்களில் காமெடி செய்வதும், diversion தானே!

    நெல்லி மூர்த்தி!
    சரியாகச் சொன்னீர்கள். செய்வோம் நண்பரே!


    மதி.சுதா!
    ஆனால் அவர்களுக்கு வலிக்காது.


    அஸ்மா!
    அவர்களுக்கு வராது. நாம்தான் வரவ்ழைக்க வேண்டும்.


    சித்திரக்குள்ளன்!
    இப்படி எழுதவாது படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே!

    சே.குமார்!
    வரவைப்போம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!