அப்துல்லா ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்?



கவிஞர் நா.வே.அருள் அவர்கள் எழுதிய கவிதை இது. கவிதைக்குரிய உருவம், மொழி அடர்த்தி இதில் இல்லை. அதையெல்லாம் கடந்து, நமக்குள் சட்டென்று ஊடுருவி வெளிச்சம் தரும் உண்மை இருக்கிறது. இந்த நிலத்தின் முகமும், ஆன்மாவும் துலங்குகிறது. தீக்கதிர் தீபாவளி மலரில் வந்த கவிதையை உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்.....

பட்டாசு கொளுத்தப் போவதில்லை
பட்சணம் சுவைக்கப் போவதில்லை
இந்த வருடம்
தீபாவளி கொண்டாடப் போவதில்லை
என் சபதத்தைக் கேட்டு
வீட்டிலிருப்பவர்கள் சிரித்து விட்டார்கள்
பைத்தியம் கியித்தியம் பிடிச்சிருக்கா?
பாம்புப்புற்றுக்கும் பால்வார்க்கும்
பரிதாப ஜீவன்களே...
பங்கேற்காமல் பழியேற்கும்
பாவப்பட்டவர்களே...
என் நீண்ட நேர நெருப்பின் மேல்
நீ தெளித்தார்கள்
திகைப்பூண்டு மிதிச்சிட்டாங்களா?
நரகாசூரன் நல்லவனா? கெட்டவனா?
நரகாசூரனுக்கும் நாக்குக்கும் என்ன சம்பந்தம்?
உங்களுக்கு எது பிடிக்கும் ஊமை ஜனங்களே?
தீனித்தினவா?
சடங்கா? சம்பிரதாயமா?
ஆச்சாரமா? அனுஷ்டானமா?
திதியா? தின்பண்டமா?
என் எல்லாக் கேள்விகளுக்கும் 
ஒரே எதிர்க் கேள்வி
என்ன ஆச்சு இந்த ஆளுக்கு?


ஒன்றுமே ஆகலையா?
ஒரு குளிர்கால டிசம்பரில் 
குற்றங்களின் யாத்திரை 
மனித உறவுகளைக் கிழித்து 
குருதி கொட்டலையா? 
பிளந்த பூமிக்குள்ளே 
கடவுள்கள் எல்லாம் 
கால் இடறி விழவில்லையா?
மத நல்லிணக்க மார்பகத்தை 
திருகி எறியலையா?
வீடு மௌனத்தில் விறைத்துப் போக 
விருந்தினர் ஒருவர் உள்ளே நுழைய 
வீட்டில் ஒருவர் கிசுகிசுத்தார் 
இன்னொரு கிறுக்கு வந்திருக்கு


அப்துல்லாதான் வந்திருந்தார்
கொண்டுவந்த பைகளை
என் கைகளில் திணித்தார்
ஒன்றில் பட்டாசுகள் 
இன்னொன்றில் இனிப்புகள் 
உங்களில் யாருக்கேனும் 
விடைதெரிந்தால் சொல்லுங்கள்
அப்துல்லா ஏன் தீபாவளி கொண்டாடுகிறார்? 




கருத்துகள்

18 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..! சார்.

    பதிலளிநீக்கு
  2. தோழர் மாதவராஜ்,
    நான் மிக மோசமான சோம்பேறி. திட்டமிடாமல் சுற்றிக்கொண்டிருக்கும் விளையாட்டு மனதுடன் போராடவே சரியாக இருப்பதால் நட்பு வட்டத்தையும் இலக்கிய நட்பையும் பேணிவளர்க்க இயலாதவன். வலைத்தளம் பார்க்கவும் நேரம் வாய்க்காமல் இருப்பவன். எஸ்.வி.வி அனுப்பிய குறுஞ்செய்தி பார்த்துத்தான் அறிந்துகொண்டேன்.
    எனது கவிதையைத் தங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டதற்கு என் இதயபூர்வமான நன்றி. எனது கவிதை குறித்த்த் தங்கள் விமர்சனம் மிகச்சரியாகவே இருப்பதாய்க் கருதுகிறேன்.
    உண்மைதான் கவிதை என்பது என் தர்க்கம். ஆனால் வெறும் உண்மை அல்லது மனிதம் மட்டுமே கவிதையின் அம்சமாக இருக்க முடியுமா? என் சிரத்தையின்மையை உணர்த்தியிருக்கிறீர்கள்.
    நன்றி தோழர் மா.
    தோழமையுடன்
    நா.வே.அருள்

    பதிலளிநீக்கு
  3. மாது எப்போது, எங்கே கவிதைக்கான ஐ.எஸ்.ஐ. முத்திரையை வாங்கினீர்கள்? ஒரு கவிதையை அறிமுகம் செய்யும் போதே இலையில் சோறு வைத்துக் கொஞ்சம் நரகலையும் வைப்பது போல, ஏன் இத்தனை இலக்கியக் கொலை வெறி. அண்ணாவி வேஷம் ஏன் போட வேண்டும்? இதே போல உங்கள் படைப்புக்கள், நீங்கள் எடுத்த செய்திப் படங்களையும் இலக்கணங்களின் அளவுகோலால் அளக்கத் தயாரா? மேலும் இது கவிதையின் நோக்கத்தைத் திசை திருப்புவதாகவும் உள்ளது.அதற்கு அருள் வேறு, ஒப்புதல் வாக்கு முலம் வேறு. நல்லாயில்லை. சொற்களையும் மீறி ஏதோ ஒன்று தைக்கிறதல்லவா? அது உண்மையா? கவிதையா? அல்லது கவிதை உண்மையா? கால காலமாய்த் தொடருகிற கவியுலக அமானுஷ்யங்கள் இவை...

    பதிலளிநீக்கு
  4. ஸ்ரீரசா!

    உங்கள் மீது பரிதாபம் ஏற்படுகிறது. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  5. விவரங்களால் வாசக மூளைக்கு வந்த குழப்பம். அவ்வளவுதான். இலக்கணதை இழுத்து என்னத்துக்குச் சண்டை?

    பணப் பிரச்சனை. அதை வெளிப்படையா ஒப்புக்க முடியாத ஒரு சப்பைக்கட்டு. அது வெளுத்துப்போகும் (அப்துல்லா நுழையும்) இடம்.

    இப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். கவிதைதான் இது.

    சப்பைக்கட்டுக் கட்டுகிறவனுடைய பேச்சு என்பதற்கு இணங்க விவரங்களில் காரண வினாக்கள் அடுக்கடுக்காய் வருவதும், நாம் கொள்கை பேச நேரும் இக்கட்டான சூழ்நிலைகளைப் பற்றிய எள்ளலும் அருமை. கவிஞர் வாழ்க!

    விவரங்களால் அடர்ந்த கவிதைக்கு, யாத்ரா எழுதிய 'எப்படியிருக்கீங்க' ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

    http://yathrigan-yathra.blogspot.com/2010/07/blog-post.html

    பதிலளிநீக்கு
  6. ராஜசுந்தரராஜன் அண்ணா!

    //கவிஞர் நா.வே.அருள் அவர்கள் எழுதிய கவிதை இது. // என்று குறிப்பிட்டுவிட்டுத்தான் //கவிதைக்குரிய உருவம், மொழி அடர்த்தி இதில் இல்லை.// என என் கருத்தைச் சொல்லியிருந்தேன். கவிதையின் தாக்கத்தையும், உள்ளடக்கத்தையும் சொல்லவும் தவறவில்லை என் நினைக்கிறேன்.

    ஸ்ரீரசாவும் அவர் கருத்தை தெளிவாகச் சொல்லலாம், உங்களைப் போல.

    அதற்கு நரகல், உங்கள் படைப்புகள் போன்ற வன்மமிக்க வாதங்கள் வந்திருக்க வேண்டாம். அதனால்தான் அவர் மீது பரிதாபம் கொண்டேன். தவிர சண்டையில்லை இது.

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

    நல்லாயிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  7. ஹமீது!

    வருகைக்கும், பகிர்வுகளுக்கும் நன்றி.

    பிரவீன்குமார்!
    நன்றி.


    சே.குமார்!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  8. நா.வே.அருள்!

    எப்படியிருக்கீங்க. செம்மலரில் படித்ததும் சந்தோஷமாய் இருந்தது. நிறைய எழுதுங்கள்.

    //உண்மைதான் கவிதை என்பது என் தர்க்கம். ஆனால் வெறும் உண்மை அல்லது மனிதம் மட்டுமே கவிதையின் அம்சமாக இருக்க முடியுமா?//

    பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
  9. கவிதை நல்ல இருந்தது சார்!!

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும், எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. உங்களின் வார்த்தைகள் எல்லாம் மென்மையில் குழைத்தெடுத்தவை, உங்களால் விரும்பப்படாதவை வன்மத்தில் தோய்க்கப்பட்டவையா? நன்றாயிருக்கிறது மாது உங்கள் நயத்தக்க நாகரிக மென்மை...

    பதிலளிநீக்கு
  11. ஸ்ரீரசா!
    மேலும் பரிதாபம்தான் வருகிறது....

    பதிலளிநீக்கு
  12. உள்ளார்த்தம் நிரம்பிய கவிதை.

    பதிலளிநீக்கு
  13. தங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
    இன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.

    நமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!