தர்மபுரி பஸ் எரிப்பு தீர்ப்பும், அரசியல் சதுரங்க ஆட்டமும்

chess game தர்மபுரியில், ஒரு பஸ்ஸில் உயிரோடு மூன்று மாணவிகளை வைத்துக் கொளுத்தியவர்களில் மூன்று பேருக்கு இப்போது மரணதண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு சொல்லப்பட்டதைத் தாங்கமுடியாத அ.தி.மு.கவினர் காட்டிய வன்முறைக்கு பத்து வருடங்கள் கழித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இப்படியொரு நீதி சரியானதும், அவசியமானதும் என்பதில் பெரிய அளவுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கப் போவதில்லை. யாரையோ திருப்திபடுத்த யாரையும் கொல்வதற்கு மன்னிப்பு ஒருபோதும் இருக்க முடியாது.

தீர்ப்பு அறிந்தவுடன், குற்றவாளிகளின் உறவினர்களும் அழுது துடித்திருக்கின்றனர். மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின்  முழு வாழ்க்கையையும், நல்ல முகங்களையும் அவர்களே அறிந்திருக்க முடியும். உயிரோடு மூன்று மாணவிகளைக் கொன்ற அவர்களின் ஒரு முகத்தை மட்டுமே உலகம் அறிந்து வைத்திருக்கிறது. அவர்களின் இத்தனை வருட வாழ்க்கையை அந்த சில நிமிடங்களே தீர்மானித்திருக்கின்றன. ‘அந்தக் கடைசி நேரத்தில் என் மகள் எப்படி துடித்திருப்பாள்’ என இறந்த மாணவியின் தந்தை கதறியதை சமூகம் கேட்டு கொதிப்படைகிறது. முரண்பட்ட இந்த காட்சிகளுக்கிடையே ஒரு குற்றம், அதற்கான தீர்ப்பு என முக்கிய அசைவுகளும், பகடைக்காய்களென வெட்டப்பட்ட மனிதர்களுமாய் அரசியல் சதுரங்கத்தின் கட்டங்கள் நெளிகின்றன.

மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்த மூன்று பேருக்குள்ளும் எந்நேரமும் கொலைவெறியா ஓடிக்கொண்டு இருந்திருக்கும்?. ‘அம்மா’ மீதான எல்லையற்ற விசுவாசமே சிந்தனையிலும், செயல்களில் நிறைந்திருக்க வேண்டும். அதிகாரத்தின் பசியே அரசியலாகிப் போன இந்த சமூகத்தில் தங்கள் விசுவாத்தை நிருபீக்க எதையும் செய்யத் தயாராக இருந்த அதிபயங்கர அடிமைகளே அவர்கள். இதே மண்ணில், தலைவர்களுக்காக  எத்தனையோ பேர் மண்ணென்ணெய் ஊற்றி தங்களை தீக்கிரையாக்கி இருக்கின்றனர். இந்த ‘விசுவாசக் கொலைகளை அல்லது தற்கொலைகளை’ செய்ய அவர்களை யார் அல்லது எது நிர்ப்பந்தித்தது என்பது குறித்த விவாதங்கள் முக்கியமற்றவையாய்ப் போக முடியாது.

தலைவர்களின் வருகைகளுக்காக கூட்டம் சேர்ப்பது, தலைவர்களின் படங்களை பெரும் கட் அவுட்டுகளாக வைப்பது என்று ஆரம்பிக்கும் இந்த விசுவாசமயம், தலைவர்களை நாற்காலிகளில் உட்கார வைப்பதில்தான் தங்கள் வாழ்க்கையின் அர்த்தம் இருக்கிறது என பகுத்தறிவற்று தங்களை அர்ப்பணித்துக் கொள்வதில் முற்றிப் போகிறது. மதம், ஜாதி, இனத்தில் பொதிந்திருக்கும் பாசிசத்தின் சில கூறுகளோடு இந்த விசுவாசமும் உருப்பெறுகிறது. இவைகளை கட்டமைப்பதில் நமது ஊடகங்களுக்கும் பெரும் பங்கு இருக்கவேச் செய்கின்றன. கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத இப்படிப்பட்ட லும்பன்களைத் தூண்களாகக் கொண்டு, அமைக்கப்பெற்ற அரசவையில் இருந்துகொண்டு ‘மக்களாட்சி’ அருள்வதாக தலைவர்கள் கையசைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் மீது நமது நீதியின் சுட்டுவிரல்கள் நீள்வதில்லை.

இந்த கொடுமையிலிருந்து காப்பாற்ற சக மாணவர்களும், ஆசிரியர்களும் முயன்றதால் மாணவர்கள் கொஞ்சம் பேர் உயிர்பிழைக்க முடிந்ததைச் சுட்டிக்காட்டி, பொதுமக்களும், போலீஸ்காரர்களும் வேடிக்கைப் பார்த்ததையும் விமர்சனம் செய்திருக்கிறது தீர்ப்பின் வரிகள். இதற்கு காரணமான மேலிடங்களின் மீது தார்மீக குற்றத்தையோ பொறுப்பையோ நீதிமன்றங்கள் சுமத்துவதில்லை. இந்த ‘ஜனநாயகத்தில்’ தலைவர்கள் மீது தலைவர்களே குற்றம் சுமத்த முடியும். அரசியல் சதுரங்கத்தில் தலைவர்களின் சாணக்கியத்தனமான ‘மூவ்’களுக்கு உதவும் காரியங்களைத்தான் இந்த நீதிமன்றங்கள் செய்து வருகின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்து, மக்களின் ஞாபகங்களைக் கிளறிவிடுகிறது.

மக்களின் பொதுப்புத்திக்கு சில விஷயங்கள் காட்டப்படுகின்றன. சில மறைக்கப்படுகின்றன. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் போல பேச ஆரம்பிக்கிறார்கள். ‘காலதாமதமானாலும், சரியான தீர்ப்பு’என்கிறார்கள். இந்தக் காலதாமதம் தற்செயல் என்று மக்களை மிக எளிதாக கருத வைக்க முடிகிறது. ‘மத்தியிலோ, மாநிலத்திலோ வேறு கட்சி அல்லது ஆட்சி இருந்திருந்தால் இப்படியொரு தீர்ப்பு இன்னேரம் வந்திருக்க முடியுமா?’, ‘அடுத்து வேறு ஆட்சி வந்தால் இந்த குற்றவாளிகள் தப்பி விடுவார்கள்’என மேலும் மக்கள் பேசுகிறார்கள். இந்த உரையாடல்கள்தான் ஒரு தலைவர் இன்னொரு தலைவருக்கு இந்தத் தீர்ப்பு மூலம் வைத்திருக்கும் ‘செக்’.

அந்தந்த நேரத்துக் காட்சிகளே எல்லாவற்றையும் விட முக்கியமானதென்றும், அடிப்படையானதென்றும் நாம் புரிந்து வருகிறோம். அதற்கு முந்தையதோடும், பிந்தையதோடும் சேர்ந்து பார்க்கத் தவறுகிறோம். இல்லையென்றால், இந்திராகாந்தி என்னும் அரசியல் தலைவர் இறந்தவுடன் சீக்கியர்களை நர வேட்டையாடிய காங்கிரஸ் குண்டர்களும், தலைவர்களும்  என்னவானார்கள் என யோசித்திருப்போம். மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தை தீக்கிரையாக்கப்பட்டதில் வாட்ச்மேன் உட்பட மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு என்னவானது எனவும் யோசித்திருப்போம். அப்படி இல்லாமல் ‘இனிமேல் இதுபோன்ற கொடுமை யாருக்கும் நிகழக் கூடாது’ என்று சொல்வதெல்லாம் அந்த நேரத்துக் காட்சியாகவோ, சொல்லாகவோ போகக்கூடும்.

ஏனெனில் ‘இந்த’ தலைவர்களே மக்களையும், நீதியையும் விட இந்த ‘ஜனநாயகத்தில்’ மிக முக்கியமானவர்கள். காப்பாற்றப்பட வேண்டியவர்கள். அவர்களுக்காக யாரும், எப்போதும் தீக்கிரையாக்கப்படலாம். தூக்கிலிடப்படலாம்.

கருத்துகள்

19 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. //‘இந்த’ தலைவர்களே மக்களையும், நீதியையும் விட இந்த ‘ஜனநாயகத்தில்’ மிக முக்கியமானவர்கள். காப்பாற்றப்பட வேண்டியவர்கள். அவர்களுக்காக யாரும், எப்போதும் பலியிடப்படலாம். தூக்கிலிடப்படலாம்.//

    unmai nilai ithuthaan anna.
    nalla pakirvu.

    பதிலளிநீக்கு
  2. இந்த ‘ஜனநாயகத்தில்’ தலைவர்கள் மீது தலைவர்களே குற்றம் சுமத்த முடியும்.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் இடுகை உண்மைகளை எடுத்துச்சொல்லி, போலிகளை எரிக்கிறது. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. The burning issue happened in Tamil Nadu.The Judgment must be welcomed by the left parties in particular and be condemned openly the barbaric actions of murderers without considering the PRESENT political alliances.. Mere publishing news NOT sufficient.All forums should express their condemnation in the burning matter again because 10 years have passed over.Majority forgotten the incidents..

    பதிலளிநீக்கு
  5. // 'மத்தியிலோ, மாநிலத்திலோ வேறு கட்சி அல்லது ஆட்சி இருந்திருந்தால் இப்படியொரு தீர்ப்பு இன்னேரம் வந்திருக்க முடியுமா?’, ‘அடுத்து வேறு ஆட்சி வந்தால் இந்த குற்றவாளிகள் தப்பி விடுவார்கள்' //

    அரசியல் சதுரங்க ஆட்டத்தில் 3 உயிர்கள் பலியானது தான் மிச்சம். அரசியல்வாதிகளும் மாறப் போவதில்லை, அவர்களின் தொண்டர்களும் இல்லையில்லை அதிபயங்கர அடிமைகளும் மாறப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. I don't think it is prudent to blame either the ruling party or the democracy for the timing of the SC judgment. It is a horrific crime and needs to be punished.

    I like the way of your writing. Very nice.

    Other horrific crimes you have listed need to be looked into.

    People dent at our democracy all the time, but not realizing the openness in it, even to express our feeling openly like this. Those who live in other countries may realize to an extent what democracy is.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் தலைவர்களுக்காகப் பொதுமக்களைப் பலிகடாஆக்கும் அரசியல் கட்சித் தலைவர்களையும் நீதி மன்றங்கள் கூட்டுப் பொறுப்புடைய குற்றவாளிகளாக தண்டிக்க வேண்டும் இல்லையெனில் அப்பாவிதொண்டர்களும்,பொதுமக்களுமே தண்டிக்கப் படுவார்கள்.அதிலும் இதுபோன்ற மாபாதகச் செயல்களுக்கான பல அடுக்கு விசாரணைகள் கூடாது.நேரடியாக உச்ச நீதி மன்றமோ விசாரித்து வழங்கும் தீர்ப்பே யுத்தியாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. நேற்று இரவு ஜெயா தொலைக்காட்சியில் விவாதப்புலில் ரஃபி பெர்ணார்ட் அவர்கள் யாரோ ஒரு ரத்தத்தத்தின் ரத்தத்துடன் இத்தீர்ப்பு குறித்து சித்தாந்த ரீதியாக ஆராய்ந்து கொண்டிருந்தார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற அவ்விவாதம் எதற்காக நடத்தப்பட்டது என்று கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பார்வையாளர்களைக் குழப்பி ஒருவழியாக அந்நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

    ஜெயலலிதாவிடம் அல்லது அ.தி.மு.க.விடம் பெற்ற கூலிக்கு போதுமான அளவிற்கு அவ்விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும். அதுதான் அவ்விவாதத்தின் தரத்திற்கான அளவுகோல்.

    அண்ணன் மாதவராஜ் அவர்களுடைய பதிவை ரபிபெர்ணார்டின் விவாதத்துடன் ஒப்பிடவிரும்பவில்லை. ஆனால் இதில் ரபிபெர்னார்டை ஒத்த வடிவம் வெளிப்படுவதாக நான் கருதுகிறேன்.

    ஓட்டுக்கட்சி அரசியலின் மிகச் சீரழிந்த வடிவம்தான் இத்தகைய வன்முறைகள். இத்தகைய வன்முறையை நிறைவேற்றுவதில் எந்த ஒரு கட்சியும் விதிவிலக்காக இருந்ததில்லை. அந்தந்த கட்சிகள் தங்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் இதைப்போலவோ அல்லது இதைவிட கேவலமான செயல்களிலோ ஈடுபட்டிருக்கின்றன.

    குஜராத்தின் இந்துபயங்கரவாத முதல்வரான மோடியின் கொலைக்கரங்களால் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் கொன்று புதைக்கப்படவில்லையா?


    நந்திகிராமின் விவசாயிகள் போபால் விஷவாயுக் கொலைகளைப் புரிந்த யூனியன் கார்பைடு (டௌ கெமிக்கல்ஸ்) நிறுவனத்தின் நிலப்பறிப்புக்காக, மே.வங்க மாநில அரசால் கொன்று குவிக்கப்படவில்லையா?

    ஒரிசாவின் டோங்கிரியா கோண்டு இன பழங்குடி மக்கள் பிரிட்டனின் வேதாந்தா (ஸ்டெர்லைட்) நிறுவனத்திற்காக காடுகளை விட்டும் உலகத்தை விட்டும் இந்த நிமிடம் வரை விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    இருப்பினும் இவை அரசியல் கொலைகளாகப் பார்க்கப்படுவதில்லை. இதுதான் உண்மையான வர்க்கப்போராட்டம். இதுதான் மக்களுடன் தொடர்புடைய அரசியல்.

    ஆனால் இங்கே ஓட்டுப்பொறுக்கி அரசியல்தான் மையமான அரசியல். பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தையும் ஒரிசா முதல் பீகார் வரையிலான (மேற்குவங்கம் உள்ளிட்ட) மாநில அரசுகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ‘காட்டுவேட்டை’ என்கிற நரவேட்டை குறித்து அண்ணன் மாதவராஜ் மூச்சு கூட விடமாட்டார். ஏனெனில் அவை அரசியல் கொலைகள் அல்ல. தேசத்தின் பாதுகாப்புக்காக நடத்தப்படுகின்ற அவசியக் கொலைகள்.

    ப.சிதம்பரமும், புத்ததேவும், நிதிஷ்குமாரும் தேசத்தின் காவலர்கள். இவர்கள் ஒருவரை ஒருவர் அவ்வப்போது விமர்சித்துக் கொள்கிறார்களே அதன் பொருள் என்ன? அதுதான் அரசியல். இங்கே நான் பதிந்திருப்பதற்குப் பெயர் அரசியல் அல்ல. இது மார்க்சிஸ்டு கட்சியின் மீதான் காழ்ப்புணர்ச்சி!

    அ.தி.மு.க. ரவுடிகளால் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட இந்த மாணவிகளின் கொலைக்கு அண்ணன் மாதவராஜ் சூட்டியிருக்கும் பெயர் விசுவாசக்கொலை. அதாவது அம்மாவின் மீது பிள்ளைகள் வைத்திருந்த அளவுகடந்த விசுவத்தினால் விளைந்தவையே இக்கொலைகள். இதுமட்டுமா?!

    அழகிரியின் ஆட்கள் மதுரை தினகரன் அலுவலகத்தில் நடத்திய கொலை! அதுவும் விசுவாசக்கொலைதான். இந்திரா செத்தபிறகு 5000 சீக்கியர்கள் கொலைசெய்யப்பட்டதுவும் விசுவாசக்கொலை! இதுதான் இப்பதிவினூடாக அண்ணன் மாதவராஜ் நிறுவ முயலுகின்ற ‘அரசியல்’.

    இக்கொலைகளுக்கான காரணம் விசுவாசமே. அதுவன்றி வேறில்லை என்பதுதான் அண்ணைன் கூற்று. ஆனால் தீர்ப்பு?! அது அரசியல்!

    அண்ணன் மாதவராஜின் உண்மையான அரசியலை நாம் விவரமாக கவனிக்க வேண்டிய இடமே இதுதான். எந்நேரமும் கொலைவெறியுடன் இல்லாத இவர்கள் விசுவாசத்திற்கு அடிமையாகி இக்கொலைகளை நடத்துகிறார்கள். எனவே, அப்பாவி மக்களைக் கொலை செய்துபோட்டாலும் இவர்களை பயங்கரவாதி லிஸ்டில் சேர்க்க முடியாது.

    ஆனால், ”மாவோயிஸ்டுகள் பஞ்சமா பாதகம் செய்யும் பயங்கரவாதிகள்” என்று அண்ணன் சத்தியம் செய்வார். ஏனெனில் அப்பாவி பொதுமக்களை அவர்கள் கொலை செய்கிறார்களாம். அதுசரி மாவோயிஸ்டுகளுக்குப் பொருத்தும் அந்த அளவுகோலை ஏன் அண்ணன் அழகிரிக்கு பொருத்தமறுக்கிறார்? அழகிரியையோ, அம்மாவின் கொலைபாதக தம்பிகளையோ, மோடியையோ இவர் பயங்கரவாதிகள் என்று எங்காவது சுட்டிக்காட்டியிருக்கிறாரா?

    அதற்குக் காரணம் மாவோயிஸ்டுகளின் ஆயுதம் வர்க்கப் போரின் வடிவம். அது மக்களுக்கு கேடயமாகவும் மக்களின் எதிரிக்கு எதிராகவும் நிறுத்தப்பட்டிருப்பதனால்தான், அரசு சொல்லும் கணக்கின் படியே மாவோயிஸ்டுகள் பழங்குடியின உழைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தமுடிகிறது.

    அழகிரிகளின் கொலைகள் விசுவாசக்கொலைகளாகவும், முதலாளிகளின் நிலப்பறிப்பை எதிர்த்து களத்தில் நிற்கும் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகள் என்றும் இவர்கள் உருவகப்படுத்துவதன் அரசியல் இதுதான்.

    பதிலளிநீக்கு
  10. கண் முன்னே சாகக் கிடந்த ஒரு அரசு அதிகாரியைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்காத அமைச்சர்களும் இந்த ஜனநாயகத்தின் அங்கம்தானே அண்ணே..:-(((

    பதிலளிநீக்கு
  11. இப்பதிவு குறித்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி.

    தம்பி விவாதகளம் அவர்களுக்கு!

    நிங்கள் உங்கள் பின்னூட்டத்தின் மூலம் எதை நிறுவ விரும்புகிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மாவோயிஸ்டுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உங்களின் பதற்றத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

    இங்கு நான் எவர் பக்கமும் இருக்கவில்லை. மக்களின் பக்கமிருந்தே என் குரல் வருகிறது. அது உங்களை ஏன் கலவரமடையச் செய்ய வேண்டும். மாவோயிஸ்டுகள் மக்களின் பக்கம் இல்லையா?

    மக்களுக்கு எதிராக யார் இருந்தாலும்- அது சி.பி.எம்மாக இருந்தாலும்- என் குரல் மக்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்தும். என் அரசியல் இதுதான்.

    தங்கள் அரசியல், தங்கள் அதிகாரம், தங்கள் பதவி இதற்காகவே உயிர் வாழும் தலைவர்களைத்தான் நான் சாடியிருக்கிறேன். தங்களது அரசியல் இலக்கு எவ்வளவு அழுக்காகவும் அல்லது புனிதமாகவும் இருந்தாலும் அதற்காக மக்களைப் புழுவாக மதிக்கிறவர்களை நான் எதிர்க்கிறேன். அதற்கு துணை போகும் ‘இந்த’ ஜனநாயகத்தை’ நான் மதிக்க விரும்பவில்லை.

    இங்கே மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிற உங்களுக்கு எந்த இடத்தில் முரண்பாடு தம்பி?

    பதிலளிநீக்கு
  12. //அழகிரியின் ஆட்கள் மதுரை தினகரன் அலுவலகத்தில் நடத்திய கொலை! அதுவும் விசுவாசக்கொலைதான். இந்திரா செத்தபிறகு 5000 சீக்கியர்கள் கொலைசெய்யப்பட்டதுவும் விசுவாசக்கொலை! இதுதான் இப்பதிவினூடாக அண்ணன் மாதவராஜ் நிறுவ முயலுகின்ற ‘அரசியல்’.

    இக்கொலைகளுக்கான காரணம் விசுவாசமே. அதுவன்றி வேறில்லை என்பதுதான் அண்ணைன் கூற்று. ஆனால் தீர்ப்பு?! அது அரசியல்!//

    இந்த வார்த்தைகளை நான் முட்டாள்தனமாக நான் கருதவில்லை, விவாத களம்.

    இந்த விசுவாசத்தை நான் முதலாளித்துவ அரசியலின் கோர முகமாகவே பார்க்கிறேன். அதன் விளைவுகள் இப்படியான லும்பன்களை கட்ட்டமைக்கிறது எனச் சொல்கிறேன். அவர்கள் மீது எனக்கு இரக்கமும் இல்லை. அவர்களைக் காப்பாற்றும் நோக்கமும் இல்லை.

    இந்த அமைப்பு, அது பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், அதன் லட்சணம் இதைத்தான் அம்பலப்படுத்தி இருக்கிறேன்.

    இதில், உங்களுக்கு என்ன மாற்றுப் பார்வை?

    பதிலளிநீக்கு
  13. காட்டில் விளையும் புளியம் பழங்களை பொறுக்கி காட்டுவாசி விற்கிறான். கந்து வட்டிக்காரன் கிலோ 30காசுக்கு வாங்கிவியாபாரிக்கு விற்கிறான்.அவன் கப்பலைப் பராமரிக்கும் வெளிநாட்டு துறைமுகங்களுக்கு அனுப்புகிறான்.அவனிடம் கையூட்டு வாங்குகிறவர்கள் அரசு அதிகாரிகள் மட்டுமல்ல. இந்தப் புரட்சியாளைகளும்தான்.
    பீடி சுற்ற கொண்டு இலை வேண்டும். காட்டுவாசி இலையைப் பொருக்கி விற்கிறான்.ஏழு இலை ஒரு சிறுகட்டு.பத்து சிறு கட்டு ஒரு பெரியகட்டு.நுறு பெரியகட்டு விற்கப்படுகிறது. கொண்டு இலை ஒப்பந்தக்காரர்கள் லஞ்சத்தை அதிகாரிகளுளுக்கு மட்டும் கொடுப்பதில்லை.இந்த அப்பாவிமக்களைக் கப்பாற்ற.ஆயுதம் வேண்டும். அதற்குப் பணம் வேண்டும்.அந்தப் பணத்தை அவர்களே தருகிறார்கள் என்று விளக்கம் வேறு .இவர்கள் மடாதிபதி களாகி விட்டர்கள்.
    காட்டுப் பகுதிகளில் வங்கி இன்சூரன்சு அலுவலக்ங்களூக்குச் சென்று கப்பம் (பாதுகாப்புபணம்) வசூலிக்கிறார்கள்.ஊழியர்கள் தங்களுக்குள் பிரிப்பது தவிர அலுவலகமும் ஒரு தொகையை பெரியவர்களுக்குத் தெரிந்தே கொடுக்கிறது.
    மாவோ வின் நீண்டபயணம்.வேறு- இவர்களின் பிழைப்பு வேறு---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  14. //ஏனெனில் ‘இந்த’ தலைவர்களே மக்களையும், நீதியையும் விட இந்த ‘ஜனநாயகத்தில்’ மிக முக்கியமானவர்கள். காப்பாற்றப்பட வேண்டியவர்கள். அவர்களுக்காக யாரும், எப்போதும் தீக்கிரையாக்கப்படலாம். தூக்கிலிடப்படலாம்.//
    தர்மபுரியை பொருத்தவரை தலைவர்கள் யாரும் நேரடியாக மாணவிகளை எரித்து கொல்ல சொல்லவில்லை. ஆனால் நீங்கள் கூறிய படி "விசுவாச மிகுதியால்" அல்லது பிற்காலத்தில் பதவி கிடைக்கும் என்ற ஆசையால் தான் அவர்கள் திட்டமிட்டு செய்தார்கள்( உணர்ச்சி வச பட்டு செய்யவில்லை. திட்டமிட்டு செய்தார்கள். முன் கதவின் வழியே யாரும் தப்பி சென்றுவிட கூடாது என்று கதவு முழுதும் மண்ணெண்ணெய் ஊற்றினார்கள். பின் பகுதி முழுது பெட்டி இருந்ததால் அதை திறக்க வழியே இல்லை). நீங்கள் சொல்லியபடி பார்த்தால் பிறகு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொலை செய்து விட்டு பிறகு அவர் மாற்றுகட்சியை சேர்ந்தவர், என் தலைவரை பற்றி தவறாக பேசினார். எனவே அவரை "என் தலைவர் மீது உள்ள விசுவாசத்தால் " கொலை செய்தேன். எனவே என் தலைவரை தண்டியுங்கள் என்று கூறி விட்டு செல்லலாம். யார் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்.

    எனவே தான் "சுய லாபத்துக்கு செய்தாலும்", "விசுவாசத்துக்கு செய்தாலும்", "உணர்ச்சி வச பட்டு" செய்தாலும் கொலை செய்பவர்களை தண்டிக்கிறார்கள். அது போல் தண்டனை தருவதன் மூலம் வேறொருவர் "சுய லாபத்துக்கு " அல்லது
    "விசுவாசத்துக்கு " அல்லது "உணர்ச்சி வச பட்டு" சிறுமிகளையும் , அப்பவிகளையும் கொலை செய்யுமுன் சிறிது யோசிப்பார்கள்.
    பயம் இருக்கும்.

    நிச்சயமாக மதவெறிக்காக கொலை செய்ய தூண்டிய மோடி போன்ற மத வெறியர்களையும், முதலாளிகள் போடும் எலும்பு துண்டுக்காக வாலை ஆட்டி கொண்டு சென்று, அப்பவி மக்களை கொன்று குவித்து, மக்கள் முன் கூட்டு கற்பழிப்பை நடத்த தூண்டிய மேற்கு வங்க பாஸிஸ்டுகளையும் கட்டாயம் தண்டிக்க வெண்டும்.

    அவர்களும் தண்டிக்க பட வேண்டியவர்கள். இவர்களும் தண்டிக்க பட வேண்டியவர்களே

    பதிலளிநீக்கு
  15. ///////இங்கே மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிற உங்களுக்கு எந்த இடத்தில் முரண்பாடு தம்பி?...//////////
    ////////மாவோயிஸ்டுகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் உங்களின் .../////////

    இது மாவோயிஸ்டுகளின் ஆதரவாளன் என்று என்மீது முத்திரை குத்துகின்ற முயற்சி; மகிழ்ச்சி!
    எனது கருத்தைப் பதிந்தமைக்கும் பதிலளித்தமைக்கும் கோடானுகோடி நன்றிகளை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன், அண்ணா.

    தேர்தலுக்குத் தேர்தல் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மாற்றி மாற்றி ஆதரிக்கும் போலிகம்யூனிச கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நீங்கள், அழகிரி முதல் மோடி வரை பல்வேறு வடிவங்களில் திரியும் பயங்கரவாதிகளை அரசியல்வாதிகள் என்று மதிப்பிட்டுகின்ற உங்களின் பொற்கரங்களால் நான் மாவோயிச ஆதரவாளன் என்று சுட்டிக்காட்டப்படுவதை மிகச் சரியான அங்கீகாரமாகக் கருதுகிறேன்.

    மாவோயிச அரசியல் மீது எனக்கும் பல்வேறு விமர்சனங்கள் உண்டு. தேவை ஏற்படும் போது யாருடனும் அதுகுறித்து விவாதிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதேவேளையில் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதி என்றும் தீவிரவாதி என்றும் அவதூறு செய்யும் முதலாளித்துவக் கூட்டத்துடன் ஐக்கியப்பட்டுக் கொண்டு மக்களுடன் இருந்து மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக கூசாமல் புளுகுகிறீர்களே, இது நியாயமா அண்ணா?

    ////////மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்த மூன்று பேருக்குள்ளும் எந்நேரமும் கொலைவெறியா ஓடிக்கொண்டு இருந்திருக்கும்?. ‘அம்மா’ மீதான எல்லையற்ற விசுவாசமே சிந்தனையிலும், செயல்களில் நிறைந்திருக்க வேண்டும். அதிகாரத்தின் பசியே அரசியலாகிப் போன இந்த சமூகத்தில் தங்கள் விசுவாத்தை நிருபீக்க எதையும் செய்யத் தயாராக இருந்த அதிபயங்கர அடிமைகளே அவர்கள். இதே மண்ணில், தலைவர்களுக்காக எத்தனையோ பேர் மண்ணென்ணெய் ஊற்றி தங்களை தீக்கிரையாக்கி இருக்கின்றனர். இந்த ‘விசுவாசக் கொலைகளை அல்லது தற்கொலைகளை’ செய்ய அவர்களை யார் அல்லது எது நிர்ப்பந்தித்தது என்பது குறித்த விவாதங்கள் முக்கியமற்றவையாய்ப் போக முடியாது. //////////

    மேற்கண்ட உமது வரிகள் இக்கொலையை ‘விசுவாசக் கொலை’ என்று அடையாளப்படுத்துகிறது. தருமபுரி கொலையாளிகளையும் மதுரை தினகரன் அலுவலகத்தில் கொலைவெறியாட்டம் போட்டவர்களையும், சீக்கியர்களைக் கொன்ற காங்கிரசு கொலைவெறியர்களையும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள், வழக்கு விசாரனைகள் ஆகியவற்றை நீங்கள் ஒப்பிட்டு கருத்து பதிந்திருப்பது மிகச் சரியான ஒப்பீடுதான். அதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அதேவேளையில் அக்கொலைபாதகர்கள் செய்த அயோக்கியத்தனங்களை உணர்ச்சிபொங்க விவரித்துவிட்டு அத்தனையையும் ‘விசுவாசம்’ என்ற சொல்லுக்குள் பத்திரமாக அடக்கம் செய்துவிட முயலும் உங்களது அரசியல் கட்டாயம் விமர்சிக்கப்படவேண்டியது என்று கருதினேன் அதனால்தான் அக்கருத்தைப் பதிவுசெய்திருக்கிறேன்.

    /////////இங்கு நான் எவர் பக்கமும் இருக்கவில்லை. மக்களின் பக்கமிருந்தே என் குரல் வருகிறது. அது உங்களை ஏன் கலவரமடையச் செய்ய வேண்டும். மாவோயிஸ்டுகள் மக்களின் பக்கம் இல்லையா?

    மக்களுக்கு எதிராக யார் இருந்தாலும்- அது சி.பி.எம்மாக இருந்தாலும்- என் குரல் மக்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்தும். என் அரசியல் இதுதான்./////////

    என்னுடைய மேற்கண்ட பின்னூட்டம், மேற்படி சுயவிளக்கம் தருகின்ற அளவுக்கு உங்களைப் பதற்றப்படுத்தியிருக்கிறது. அழகிரியாலும் ஜெயலலிதாவாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டிருக்கும் நீங்கள், சிங்கூர், நந்திகிராம், லால்கார் என்று வரும்போது என்ன பேசுவீர்கள்?! ப.சிதம்பரம் நடத்திக் கொண்டிருக்கும் நரவேட்டைப் போரில் ஒரிசா முதல் பீகார் வரை கோடிக்கணக்கான பழங்குடியின மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அந்த மக்களை நீங்கள் என்றைக்காவது பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறீர்களா?

    மக்களுக்கு எதிராக சி.பி.எம். நடந்துகொண்டால் நான் மக்களைத்தான் பிரதிநிதித்துவப் படுத்துகிறேன், என்று சரியான நிலைப்பாடுகளைத் தாங்கள் கொண்டிருப்பதாக நான் கருதமுடியவில்லை. உங்களது வலைதளங்களையும் வங்கி ஊழியர் சங்க ஏட்டிலும் வருகின்ற உங்களது எழுத்துகளை கடந்த சில ஆண்டுகளாக நான் வாசித்து வந்திருக்கிறேன். சி.பி.எம். முதல்வர் புத்ததேவ் நந்திகிராம போலீசு வெறியாட்டத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோரியபிறகும், நந்திகிராம சம்பவம் குறித்து பேசுபவர்கள் அவதூறு வாதிகள் என்று நீங்கள் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். சி.பி.எம். கட்சியின் மக்கள் விரோத செயல்களை கண்மூடித்தனமாக நீங்கள் ஆதரித்தே வந்திருக்கிறீர்கள். இந்த நிமிடம் வரை நீங்கள் அக்கட்சியை பலவடிவங்களில் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்.

    மன்னிக்க வேண்டும், நீங்கள் வருதப்பட்டாலும் கோபப்பட்டாலும் இவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. தோழர் விவாத களம் அவர்களின் ஒரே நோக்கம் எப்படியாவது மார்க்சிஸ்டுகளை குறை கூற வேண்டும் இல்லையென்றால் போபால் படுகொலையையும் நந்திக்ராம்,சிங்குரில் மாவோயிஸ்டுகளும் மம்தாவும் மார்க்சிஸ்டுகள் மீதும் பொது மக்கள் மீதும் நிகழ்த்திய வன்முறையைப் புரட்டிப் பேசுவாரா?

    பதிலளிநீக்கு
  17. எவன் தவறு செய்தாலும் சட்டம் எப்போது தண்டிக்கிறதோ
    அப்போதுதான் நாடு உருப்புடும்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!