அந்த 44 நாட்கள் - இறுதிப் பகுதி

'அவர்கள் கம்யூனிஸ்டுகள். அவர்கள் தீவீரவாதிகள். எப்போதும் போராட்டத்திற்குத்தான் ஊழியர்களை தள்ளுவார்கள், அவர்கள் இருக்குற இடம் விளங்காது' என்றெல்லாம் பரமசிவம் அவர் பாட்டுக்கு போகிற வருகிற இடங்களிலெல்லாம் கடுமையாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். பெருமாள் கோவிலில் தோழர்கள் அவரைத் தாக்கச் சென்றது, எங்களது ஏற்பாடுதான் என்றும், எங்களை ஒழித்துக்கட்டினால்தான் வங்கியும், சங்கமும் உருப்படும் என முரட்டுத்தனமாக பேசினார். நிர்வாகம் இந்தக் காட்சிகளை ரசித்தது. மேலும் இடைவெளிகளை அதிகமாக்க திட்டமிட்டது. பரமசிவத்திற்கு எப்போதும் நிர்வாகத்தின் கதவுகள் திறந்து வைக்கப்பட்டன. அவர் சொல்லும் மாறுதல்கள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன.

இந்த முக்கிய சமயத்தில்தான் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கழுத்து எலும்பு தேய்ந்து அவதிப்பட்டு, கிருஷ்ணகுமார் சாத்தூருக்கு வரவில்லை.  காரைக்குடியிலிருந்து சோலைமாணிக்கம் போனில் சாத்தூர் வரச் சொல்லும் சமயங்களில் நானும் செல்வேன்.  சங்க அலுவலத்திற்கு தோழர்களிடமிருந்து முன்பைப் போல கடிதங்கள் நிறைய வருவதில்லை. சோர்வும், வெறுமையும் எங்களை ஆக்கிரமிக்கத் துவங்கின.

சங்கக் கணக்கை முடக்கி வைக்க பரமசிவமும், கணேசனும் கடிதம் கொடுத்து விட்டார்கள் என அறிந்தபிறகு, விபரீதம் அறிந்து  கிருஷ்ணகுமார் சாத்தூர் வந்தார். சங்க விரோத நடவடிக்கை என குற்றம் சாட்டப்பட்டு இருவருக்கும் விளக்கம் கேட்கப்பட்டது. செயற்குழுவிற்கு இருவரும் வரவில்லை.  தீர்மானம் முன்மொழியப்பட்டு இருவரும் பொறுப்புகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ‘பரமசிவத்தோடும், கணேசனோடும் நிர்வாகம் பேசக்கூடாது. நாங்கள்தான் சங்கம்’ என கடிதம் கொடுத்தோம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒற்றுமையும், புத்தெழுச்சியுமாய் வளர்ந்த அமைப்புக்கு பழுது ஏற்பட்டு விட்டது. இணக்கங்களை ஏற்படுத்த முடியாமல், அல்லது சரியான புரிதலுக்கு தக்க சமயத்தில் வரமுடியாமல் போனதன் விளைவு ஒரு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது. ஒரு சிறிய அமைப்புக்குள், அது தாங்க முடியாத அளவுக்கு தவறான புரிதல்களும், உள்நோக்கங்களும் பரவி விடுகிற போது இதுதான் நேரும் போலும். தொழிற்சங்கம் குறித்த புரிதலற்றவர்கள் தலைவர்களாவதும், அவர்களை அர்ப்பணிப்பும் பொதுநலனும் கொண்டவர்களாக வளர்த்தெடுக்க முடியாமல் போனதுமே இப்படியான பின்னடைவுகளுக்கு காரணமாகி விடுகிறது. ஊழியர்கள், ஊழியர்களது நலன் மட்டுமே முன்னுக்கு வராத அரசியல், நாற்காலிகளாக தலைவர்களின் மூளைக்குள் ஊடுருவி விடுவதன் விளைவும் இது. அனைவரின் கருத்தைக் காட்டிலும், தன் கருத்து உயர்வானது என்னும் சமூக விஞ்ஞானத்திற்குப் புறம்பான கருத்துக்களில் ஊறிய தலைவர்களை பக்குவப்படுத்தத் தவறிய சங்கம் இந்த பின்னடைவுகளை சந்திக்க நேருகிறது. இதையெல்லாம் அப்போது கனரா வங்கி ஊழியர்களின் தலைவர்களில் ஒருவராயிருந்த தோழர்.சுந்தரம் ஒருநாள் பேசிக்கொண்டு இருக்கும்போது புரிய வைத்தார். இதுவும் ஒரு பாடம், இதைக் கடந்துதான் முன்னேறியாக வேண்டும் என அவர் வழிகாட்டவும் செய்தார்.

44 நாட்கள்  வேலைநிறுத்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட கடைநிலை ஊழியர்களுக்கு பதவி உயர்வு கோரிக்கை நிறைவேற்றப்படாமல் போனது. தலைமைக்குள் உருவாகிய பிரிவால் நிர்வாகம் உற்சாகம் பெற்று அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. மீண்டும் தோழர்கள் போராட்டத்துக்கு வருவார்களா என்ற தயக்கம் சங்கத்தலைமைக்கே  இருந்தது. கீழே ஊழியர்களிடமோ பெரும் மௌனம். அவர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.செயற்குழுத் தோழர்கள் மட்டும் பங்கேற்கும் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டு,. தினந்தோறும் இரண்டு தோழர்களாக ஒரு வாரம் தலைமையலுவலகம் முன்பு உண்ணாவிரதம் நடத்தினோம். சின்னச் சின்ன அசைவுகளை ஏற்படுத்தி மீண்டும் இயக்கத்தை நகர்த்த ஆரம்பித்தோம்.

க்ணேசன், பரமசிவம் முயற்சியில் இங்கிருந்து பல தோழர்களை  சேர்த்துக் கொண்டு, ஐ.என்.டி.யூ.சிக்காரர்களோடு இணைந்து புதிய சங்கம் ஆரம்பித்து விட்டார்கள் என செய்திகள் அடிபட்டன. அதன் தலைவர் கணேசன் என்றும், பொதுச்செயலாளர் சிதம்பரம் என்றும் சொன்னார்கள். நிர்வாகம் அவர்களை அங்கீகரித்து அவர்களோடு
பேச்ச்சுவார்த்தையெல்லாம் நடத்தியது.

தோழர்களை ஒருமுகப்படுத்தி நிலைமைகளை புரியவைக்கவும், தோழர்களோடு சங்கத்தின் உறவை உறுதி செய்துகொள்ளவும் பொதுக்குழுவைக் கூட்டலாம் என நினைத்தோம். அதை முடிவு செய்ய ஒரு செயற்குழு அறிவிக்கப்பட்டது.. சங்க அலுவலகத்திற்கு எங்களுக்கு முன்பே நிறைய தோழர்கள் வந்திருந்தார்கள். "வாங்க...வாங்க..." என்று கிருஷ்ணகுமார் கம்பீரமாக வரவேற்றார். டீக்கடைத் தம்பியிடம் 'இன்னும் இரண்டு டீ கொண்டு வாப்பா" என்று வரதராஜப் பெருமாள் சொன்னான். 'அப்புறம் செய்தி தெரியுமா' என்று உற்சாகமாக  கிருஷ்ணகுமார் "அதியமான், வள்லாலார்னு இரண்டு கிராம வங்கிகள் புதிதாய் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கு. நமது எல்லைகள் விரிவடைகின்றன" என்று சொன்ன போது, காமராஜ் 'ஆஹா' என்றான். நானும் சோமுவும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தோம். ரொம்ப நாளக்குப் பிறகு சங்க அலுவலகம் பழைய  கலகலப்பை கண்டிருந்தது.

பொதுக்குழுவிற்கு தோழர்கள் வருவார்களா என்பதுதான் எல்லோருடைய கவலையாக இருந்தது. நிதிநிலையும் மோசமாக இருந்தது. சங்க அலுவலகத்திற்கு வாடகை பாக்கியே மூன்று மாதங்கள் இருந்தது. செயற்குழு உறுப்பினர்கள் அருகிலுள்ள கிளைகளுக்குச் சென்று தோழர்களைச் சந்தித்துப் பேசுவது என முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரம் ஒரே அலைச்சலாக இருந்தது. சோலை மாணிக்கம் காரைக்குடிப் பகுதியில் ஸ்கூட்டரில் அலைந்து கொண்டிருக்க நானும் வரதராஜப் பெருமாளும் சின்னச் சின்ன ஊர்களில் பஸ்ஸுக்காக காத்திருந்தோம். சோமு, சங்கரலிங்கம், காமராஜ், கிருஷ்ணகுமார், என எல்லோரும் ஆளுக்கொரு திசையில் ஓடிக்கொண்டு இருந்தார்கள்.

கிளைகளின் உள்ளே அடியெடுத்து வைத்ததும், முகம் பார்த்து மலர்கிற தோழர்கள் இருக்கிறார்களா எனத் தேடினோம். 'வாங்க...வாங்க...' என அவர்கள் உற்சாகமாக குரல் கொடுத்ததும், தொலைந்தது கிடைத்து விட்டது போல சந்தோஷம் வந்தது. சிலர், எங்களைக் கவனிக்காமல் வாடிக்கையாளர்களோடு மிகத் தீவீரமாகப் பேச ஆரம்பித்தார்கள். காத்திருந்து அவர்களிடம் பேசி, பொதுக்குழுவிற்கு வாருங்கள் என அழைத்தோம். சிலர், 'உங்களுக்குள்ளேயே நீங்கள் சண்டை போட்டுக் கொண்டால் நாங்கள் யாரை நம்பி நிற்பது' என கேள்வி கேட்டார்கள். "இனும ஸ்டிரைக்கிற்கே போக மாட்டோம் எனச் சொல்லுங்கள். வர்றோம்' என்றார்கள். அந்தக் கிளையில் இருக்கும் இன்னொரு தோழர் "ஆமா நாம என்ன சன்மார்க்க சங்கமா நடத்திக் கொண்டு இருக்கிறோம்.. போப்பா.... சங்கம்னா போராடத்தான் வேண்டி இருக்கும். ஒனக்கு இன்னிக்கு ஊதிய உயர்வு களையப்பட்டு சம்பளம் கூடியிருக்கே...அதை வேண்டாம்னு சொல்லிருவியா..' என எதிர்க்கேள்வி கேட்டார். அங்கங்கு உரையாடல்களை ஏற்படுத்தி விட்டு நாங்கள் பயணம் செய்து கொண்டு இருந்தோம்.

பொதுக்குழுவிற்கு தோழர்கள் செல்ல வேண்டாம் என பரமசிவமும், கணேசனும், ஐ.என்.டி.யூ.சிக்காரர்களும் கடுமையான பிரச்சாரம் செய்தார்கள். ”அவர்களோடு சேர்ந்தால் பணி மாறுதல் கிடைக்காது, பதவி உயர்வும் கிடைக்காது” என நிர்வாகமும்  உயரதிகாரிகளை வைத்து ஊழியர்களை மிரட்டியது. பொதுக்குழுவிற்கு சில தினங்களுக்கு முன்னர் சங்க அலுவலகத்தில் மலம் கரைத்து திறந்திருந்த ஜன்னல்கள் வழியே ஊற்றப்பட்டு இருந்தது. சி.ஐ.டி.யூத் தோழர்கள் அரணாய் எங்களோடு வந்து நின்றனர்.

பொதுக்குழு அன்று காலை ஒன்பது மணி வரை பத்து இருபது தோழர்களே வந்திருந்தனர். உள்ளுக்குள் விரக்தி தலை தூக்கியது. இதற்கு முன்பெல்லாம், பொதுக்குழுவிற்கு முந்தின நாள் இரவே ஐம்பது பேருக்கு மேல் வந்து சாத்தூரில் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டு இருப்பார்கள். காலை ஒன்பதரை மணிக்கு மேல் காரைக்குடியிலிருந்து மொத்தமாய் இருபது தோழர்கள் போல வந்தனர். மதுரை, நெல்லை, தூத்துக்குடியிலிருந்து என அடுத்தடுத்து தோழர்கள் வர ஆரம்பித்தார்கள். பதினோரு மணிக்கு இருநூற்றுக்கும் மேல் தோழர்கள் வந்து மண்டபத்தை நிறைத்து விட்டார்கள். மேலும் வந்துகொண்டும் இருந்தார்கள்.

ஒருவரோடொருவர் கை கொடுக்கவும், நலம் விசாரிக்கவும் என நேரம் மலர ஆரம்பித்தது. ஒரே பேச்சுச் சத்தம். எல்லோரும் புதிதாய் பிறந்தவர்கள் போலத் தெரிந்தார்கள். மண்டபத்தின் வெளியே கூடினோம். சாத்தூர் வெயிலும் நட்பாகத்தான் தெரிந்தது. "தொழிலாளர் ஒற்றுமை ஒங்குக... தொழிற்சங்க ஒற்றுமை ஒங்குக.." என ஈரக்குலையிலிருந்து சோலைமாணிக்கத்தின் கோஷம் கிளம்பியது. தொடர்ந்து தோழர்களின் குரலும் வெடிக்க, தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் நின்று திரும்பிப் பார்க்க ஆரம்பித்தார்கள். மேலும் மேலும் என குரல்களில் வேகம் பிடிக்க, அந்த செந்நிறக் கொடி மெல்ல மெல்ல பூக்களை சிந்தியபடி உயரே செல்ல ஆரம்பித்தது.

"நூறாயிரம் தடவை தடுமாறி இருக்கிறது.
தலை குப்புற விழுந்திருக்கிறது.
சிராய்த்துக் கொண்டிருக்கிறது.
மீண்டும் எழுந்திருக்கிறது தொழிலாளர் இயக்கம்"
என்னும் அந்த ஆப்பிரிக்க கவிதை வரிகளை  கொடி அசைந்து அசைந்து சொல்லிக் கொண்டிருந்தது.

*

முதல் பகுதி

இரண்டாம் பகுதி

மூன்றாம் பகுதி

நான்காம் பகுதி

கருத்துகள்

7 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. அந்த 44 நாட்களை மொத்தமாக வாசித்த பிரமிப்பில் இருக்கிறேன். மறக்க முடியாத நாட்களின் நினைவுகளை பகிர்ந்த விதம் மிக அருமை மாதவ் அண்ணா.

    //பொதுக்குழுவிற்கு சில தினங்களுக்கு முன்னர் சங்க அலுவலகத்தில் மலம் கரைத்து திறந்திருந்த ஜன்னல்கள் வழியே ஊற்றப்பட்டு இருந்தது.//

    அதிர்ச்சியாக இருந்தது. என்ன கொடுமை அண்ணா இது. மனித மனங்களின் வக்கிரம் இந்த அளவிற்கா இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. //அந்த செந்நிறக் கொடி மெல்ல மெல்ல பூக்களை சிந்தியபடி உயரே செல்ல ஆரம்பித்தது.

    "நூறாயிரம் தடவை தடுமாறி இருக்கிறது.
    தலை குப்புற விழுந்திருக்கிறது.
    சிராய்த்துக் கொண்டிருக்கிறது.
    மீண்டும் எழுந்திருக்கிறது தொழிலாளர் இயக்கம்" //
    அந்த 44 நாட்களை மொத்தமாக வாசித்த பிரமிப்பில் இருக்கிறேன்.

    மறக்க முடியாத நினைவுகளை மிக அருமை மாதவ் அண்ணா.

    பதிலளிநீக்கு
  3. கம்யுனிசம் குறித்து மாறபட்ட கருத்துக்கள் கொண்டிருப்பவருக்கும் தொழிற்சங்கங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது ...

    மாதவ்,அண்மையில் கவிதை ஒன்று எழுத முயன்றேன் ...
    வந்து பின்னூட்டினால் மகிழ்வேன் .,
    http://neo-periyarist.blogspot.com/2010/07/blog-post_759.html

    பதிலளிநீக்கு
  4. \\"நூறாயிரம் தடவை தடுமாறி இருக்கிறது.
    தலை குப்புற விழுந்திருக்கிறது.
    சிராய்த்துக் கொண்டிருக்கிறது.
    மீண்டும் எழுந்திருக்கிறது தொழிலாளர் இயக்கம்"
    என்னும் அந்த ஆப்பிரிக்க கவிதை வரிகளை கொடி அசைந்து அசைந்து சொல்லிக் கொண்டிருந்தது.\\
    அருமையான பகிர்வு.

    *

    பதிலளிநீக்கு
  5. Dear madhu,Vanakkam.The finishing lines are so great.U-This is our madhu.R.Rengasamy

    பதிலளிநீக்கு
  6. நூறாயிரம் தடவை வீழ்ந்திருக்கின்றது... ஆனாலும் மீண்டும் மீண்டும் எழுதிருக்கவே செய்கின்றது... தொளிலாளிவர்க்கத்திற்கும் முதலாளித்துவத்துக்கும் ஆன போராட்டத்தின் மையத்தில்தான் இதற்கான ஆயிரம் ஆண்டு கால காரணம் பொதிந்து கிடக்கின்றது. பாராட்டுக்கள் மாதவ். தொழிற்சங்க இயக்கத்தில் பொறுப்பில் இருந்தவன் என்ற முறையில் உணர்ச்சிவசப் பட்டே அதனை பின் தொடர்ந்தேன், என்னைப் போன்ற பலரும் அந்த 44 நாட்களில் தங்கள் முகம் பார்த்துக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகின்றேன். வீழ்வோமாயினும் வெல்வோம்.
    இக்பால்

    பதிலளிநீக்கு
  7. துரோகங்களை, அடக்குமுறைகளை, சமரசங்களை, கோழைத்தனங்களை எல்லாம் மீறித்தான் ஒரு
    உண்மையான தொழிற்சங்க இயக்கம் போராடும், வெற்றி பெறும். ஒரு வேலை நிறுத்தம் என்பது
    அவ்வளவு சுலபமானதல்ல என்பது தொழிற்சங்க இயக்கத்தில் முன்னணியில் உள்ளவர்களுக்குத்தான்
    தெரியும். எவ்வளவு உழைப்பும் தயாரிப்பும் பிரச்சாரமும் தெளிவுபடுத்தலும் தேவை என்பதெல்லாம் " இவர்களுக்கு வேறு வேலை இல்லை " என்று
    போகிற போக்கில் பேசி விட்டு செல்பவர்களுக்கு புரியாது. மற்ற அனைத்து வழிகளும் அடைக்கப்பட்ட
    பின்பே வேலை நிறுத்த ஆயுதத்தை கையிலேந்துகின்றனர் என்பதும் தெரியாது.


    அந்த வலியை இப்பதிவை படிப்பவர்கள் உணர்வார்கள்.

    நூறாண்டுகள் ஆனாலும் என்றும் எழுச்சி தரும் அக்கவிதையின் இறுதி வரிகள் கீழே.



    "இததனையும் மீறி இவ்வளவும் தாண்டி

    இந்தப புவிக்கோளம் இதுநாள் வரை
    அறிந்தவற்றுள் எல்லாம்
    ஜீவனும் திறனுமுள்ள சக்தியாய்
    காலங்களின் அடிமைத்தளையிலிருந்து
    பாட்டாளி வர்க்கத்தை விடுவிப்பதான - தனது
    சரித்திரக் கடமையை நிறைவேற்றும்!
    சூரியன் உதிக்கும் என்பது போல நிச்சயமாய்"

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!